வியாழன், 14 மே, 2026

நான்கு விஷயம் சொர்க்கத்தின் பொக்கிஷம்

 


நான்கு விஷயம் சொர்க்கத்தின் பொக்கிஷம்


بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

 عن علي أن النبي ﷺ قال ” أربعة من كنز الجنة: إخفاء الصدقة، وكتمان المصيبة، وصلة الرحم، وقول “لا حول ولا قوة إلا بالله.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நான்கு விஷயங்கள் சொர்க்கத்தின் பொக்கிஷங்களாகும்:

தர்மத்தை மறைப்பது.

சோதனையை (துன்பத்தை) மறைப்பது.

உறவுகளைச் சேர்ந்து வாழ்வது (இரத்த உறவுகளைப் பேணுதல்).

'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்று கூறுவது.”


إخفاء الصدقة،


சதகாவை மறைப்பது. (மறைத்து கொடுப்பது.)

உதவிகளை மறைத்து செய்வது.

புகழுக்காகவோ, விளம்பரத்திற்காகவோ செய்யாமல், அல்லாஹ்வுக்காக மட்டும் அந்தரங்கமாகச் செய்யும் தர்மம் அல்லாஹ்வின் கோபத்தைத் தணிக்கும். இது ஒரு மனிதனின் 'இக்லாஸை' (தூய்மையான எண்ணத்தை) உறுதிப்படுத்துகிறது.


அபூ முஸ்லிம் அல்கவ்லானி வாழ்வில்…


அபூ முஸ்லிம் அல்கவ்லானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள். எனினும், அவர்களால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வின் இறுதிக்காலத்தில், ஏமன் நாட்டில் அஸ்வதுல் அனஸி என்பவன் தன்னை ஒரு "நபி" என்று பொய் வாதிட்டு குழப்பம் விளைவித்தான். அவன் மக்களைத் தன் வழிக்குக் கொண்டு வர பலவந்தப்படுத்தினான்.


அப்போது அந்தப் பகுதியில் வாழ்ந்த அபூ முஸ்லிம் அல்கவ்லானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை அழைத்து, அவன் கேட்டான்:

"நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி சொல்கிறாயா?"

அதற்கு அபூ முஸ்லிம் (ரஹ்) அவர்கள், "எனக்குக் காது கேட்கவில்லை" என்று மிகத் தைரியமாகப் பதிலளித்தார்கள்.


மீண்டும் அவன், "முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி சொல்கிறாயா?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஆம், நிச்சயமாக!" என்று பதிலளித்தார்கள்.


தன்னைப் பொய் நபி எனத் துணிச்சலாகக் கூறிய அபூ முஸ்லிம் அவர்களைப் பழிவாங்க அஸ்வதுல் அனஸி முடிவு செய்தான். மக்களை அச்சுறுத்த ஒரு பெரிய நெருப்புக் குண்டத்தை ஏற்படுத்தினான்.


அபூ முஸ்லிம் அல்கவ்லானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அந்தப் பெரும் நெருப்பில் தூக்கி வீசப்பட்டார்கள். ஆனால், இறைவனின் பெரும் கருணையால், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நெருப்பு குளிர்ந்தது போல, இவர்களுக்கும் அந்த நெருப்பு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.


அவர்கள் எவ்விதக் காயமுமின்றி நெருப்பிலிருந்து வெளியே வந்ததைக் கண்டு அஸ்வதுல் அனஸி அதிர்ச்சியடைந்தான்.

அவர்களுடைய ஈமானிய வலிமை மக்களிடையே பரவித் தன் ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் என்று அஞ்சிய அஸ்வதுல் அனஸி, அவரை உடனடியாக ஏமன் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டான்.


ஏமனை விட்டுப் புறப்பட்ட அபூ முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மதீனாவை வந்தடைந்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து, அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலிஃபாவாக இருந்தார்கள்.


அவர்கள் தனது ஒட்டகத்தை மஸ்ஜிதுந் நபவியின் வாசலில் கட்டிவிட்டு உள்ளே சென்று தொழுது கொண்டிருந்தார்கள்.

அங்கு வந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அந்த அந்நிய மனிதரிடம் சென்று "தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அவர்கள் "ஏமனிலிருந்து" என்றார்.


ஆவலுடன் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்ட கேள்வி: "அந்தப் பொய்யன் நபி நெருப்பில் தூக்கிப் போட்ட நபர் இப்போது என்ன ஆனார்?" என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்க, அபூ முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மிக எளிமையாக, "அவர்தான் இப்போது உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறார்" என்றார்கள்.


உடனடியாக உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, அவரைத் தழுவிக்கொண்டு அழுதுகொண்டே அவரை அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள்.


அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இருவருக்கும் இடையில் அபூ முஸ்லிம் அல்கவ்லானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை உட்கார வைத்தார்கள். அப்போது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உருக்கமாகக் கூறினார்கள்:


"இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பிறகு, இந்த உம்மத்திலும் (முஹம்மது நபியின் சமுதாயத்திலும்) ஒருவரை நெருப்பு எரிக்காமல் பாதுகாத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். நான் மரணிப்பதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு மனிதரை நேரில் காணும் வாய்ப்பை அல்லாஹ் எனக்கு அளித்ததற்காக மிக்க நன்றி!”


அபூ முஸ்லிம் அல்கவ்லானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், மதீனாவின் எல்லையில் ஒரு தோட்டத்தில் தங்கி மக்களின் தொடர்பை விட்டும் தவிர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.  


அதன்பின்னர் சுமார் 20 ஆண்டுகள் கடந்து, முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில்…


ஒருமுறை ஷாம் (சிரியா) தேசத்தில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் மழை வேண்டி முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்தனர். அப்போது முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மழை வேண்டி தொழுகைக்காக ஏற்பாடு செய்திருந்தார்கள் மக்கள் எல்லோரும் மழை வேண்டி தொழுது முடித்த பிறகு அங்கே ஒரு பகுதியில் அபூ முஸ்லிம் அல்கவ்லானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இருந்தார்கள் அவர்களின் சிறப்பை அறிந்து, அவரை அழைத்து வருமாறு கூறினார்கள்.


முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூ முஸ்லிம் அவர்களை மிம்பருக்கு அழைத்து, "மழை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று வேண்டினார்கள்.


அபூ முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நின்ற நிலையில் இறைவனிடம் கையேந்தி, 

"اللَّهُمَّ إِنِّي جِئْتُ بِذُنُوبٍ كَثِيرَةٍ فَلَا تُخَيِّبْنِي"

"யா அல்லாஹ்! நான் ஏராளமான பாவங்களோடு உன்னிடம் வந்துள்ளேன், எனவே என்னை ஏமாற்றமடையச் செய்துவிடாதே!"


அவர்கள் கையை கீழே இறக்குவதற்கு முன்பே, வானம் மேகமூட்டமாகிப் பெருமழை பெய்யத் தொடங்கியது.


மழை பெய்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்த வேளையில், 

மக்களின் பார்வை அபு முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது திரும்பியது யார் இந்த அபூ முஸ்லீம் ? என்று மக்களிடையே பேச்சு வந்தது.


அபூ முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மிகுந்த கவலையடைந்தார்கள். ஏனெனில், தான் ஒரு இறைநேசர் என்பதும், தனது துஆ ஏற்கப்படுகிறது என்பதும் ஊர் உலகிற்குத் தெரிந்துவிட்டது (மக்களிடையே புகழ் பரவுவதை அவர்கள் விரும்பவில்லை).


அப்போது வீட்டிற்கு சென்று அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.

"اللَّهُمَّ إِنَّ مَقَامِي هَذَا مَقَامُ سُمْعَةٍ، فَاقْبِضْنِي إِلَيْكَ"

“யா அல்லாஹ்! என்னுடைய இந்த நிலை மக்களிடையே புகழைப் பரப்பும் நிலையாகிவிட்டது (மக்களுக்குத் தெரிந்துவிட்டது). எனவே, என்னிடம் நற்காரியங்கள் இருந்தால் என் உயிரை உன்னிடம் எடுத்துக் கொள் (என்னைக் கைப்பற்றிக் கொள்)."


முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னை இத்தகைய தர்மசங்கடமான (புகழ் வெளிப்படும்) நிலையில் ஆக்கிவிட்டாரே என்று அவர் வருந்தினார்கள். அவர்கள் துஆ கேட்டுக் கொண்டதற்கிணங்க, சில நாட்களிலேயே அவர்கள் இறைவனிடம் சேர்ந்தார்கள் .


எனவே நாம் செய்யும் எந்த தர்மமாக இருந்தாலும் சரி உதவியாக இருந்தாலும் சரி அதை மறைத்து செய்வது சிறந்தது என்பது நமக்கு விளங்குகிறது.


وكتمان المصيبة

சோதனைகள் மறைப்பது.


தமக்கு ஏற்படும் இழப்புகள் அல்லது துன்பங்களை மக்களிடம் முறையிடாமல், பொறுமையுடன் மறைத்துக்கொள்வது. இது ஒரு முஃமின் தன் இறைவன் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. 


பஞ்ச பூதங்கள் அது அல்லாஹ்வின் படைப்பு . வெயில், குளிர், மழை, காற்று , பஞ்சம் செழிப்பு , அனைத்தும் அல்லாஹ்வின் புறத்தில் உள்ளது.

சோதனை வரும் போது பொறுமை தேவை .


கௌஸுல் அஃழம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:- 

சோதனைகள் இரு வகைப்படும்:- 

1) நம் பாவங்களைப் போக்கும் பரிகாரம்.

2) நம் தரஜாவை உயர்த்துவதற்கு .


1)ஒரு முஃமின் தவறு செய்யும்போது, அல்லாஹ் அவன் மீது கொண்ட கருணையால் அந்தத் தவறுக்கான தண்டனையை மறுமையில் வழங்காமல், இவ்வுலகிலேயே சிறு சோதனைகள் மூலம் வழங்குகிறான். இதன் மூலம் அவன் மறுமைக்குச் செல்லும்போது பாவங்கள் துடைக்கப்பட்டவனாகச் செல்கிறான்.


சோதனை வரும்போது ஒரு மனிதன் அதிகப்படியான பதற்றமடைதல், பொறுமையின்றிப் புலம்புதல் மற்றும் மக்களிடம் முறையிடுதல் போன்ற குணங்களைக் கொண்டிருந்தால், அந்தச் சோதனை அவனது பாவங்களைப் போக்குவதற்காக வந்த 'பரிகாரம்' என்று கௌஸுல் அஃழம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

அந்தச் சோதனையின் நோக்கம் அவனைத் தூய்மைப்படுத்துவதும், மீண்டும் அல்லாஹ்வை நோக்கி அவனைத் திருப்புவதுமே ஆகும்.


2)அந்தஸ்துகளை உயர்த்துதல் (தரஜா - Darajah)

இது பாவமே செய்யாத நபிமார்களுக்கும், இறைநேசர்களுக்கும் வலிமார்களுக்கும் ஸாலிஹீன்களுக்கும் நல்லோர்களுக்கும் வரக்கூடிய சோதனையாகும். இது அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக அவர்களை இறை நெருக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல அல்லாஹ் வழங்கும் ஒரு 'பயிற்சி'.

சோதனை வரும்போது ஒரு மனிதன் அமைதியாகவும், மனநிறைவோடும் (ரிழா), எவ்விதப் புகாருமின்றி அல்லாஹ்விடம் முழுமையாகச் சரணடைந்தும் இருந்தால், அது அவனது 'அந்தஸ்தை உயர்த்த' வந்த சோதனையாகும்.


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நெருப்பு சோதனையாக வந்தபோது அவர்கள் காட்டிய உறுதி, அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியது போல, இது ஒரு முஃமினை இறைவனிடம் மிக நெருக்கமான 'முகர்ரபீன்' என்ற நிலைக்கு உயர்த்தும்.


ஒருமுறை இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மிகப்பெரிய சோதனையில் சிக்கினர்கள். அக்கால ஆட்சியாளர்கள் “குர்ஆன் படைக்கப்பட்டது” என்று சொல்லும்படி அவரை வற்புறுத்தினார்கள். ஆனால் அவர்கள் உண்மையை மறைக்கவில்லை; அதே நேரத்தில் தன்னுடைய துயரங்களை மக்களிடம் புலம்பியும் காட்டவில்லை.


அவர்களை சிறையில் அடைத்தனர். அடித்தனர். பல நாட்கள் வேதனை கொடுத்தனர். அவருடைய மாணவர்கள் அழுதார்கள். சிலர்,

“உங்கள் உயிரைக் காப்பாற்ற ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள்” என்றார்கள்.

அப்போது இமாம் அஹ்மத் رحمه الله அமைதியாக கூறினார்கள்:

“எனக்கு முன் உண்மைக்காக நின்றவர்கள் எவ்வளவு பொறுமை காட்டினார்களோ, அதைவிட நான் குறைவாக இருக்க விரும்பவில்லை.”

அவர்களது உடலில் காயங்கள் இருந்தன. ஆனால் நாவில் குறை கூறுதல் இல்லை.

இதுவே உண்மையான சப்ர் (பொறுமை).


பின்னர் அல்லாஹ் அவர்களுக்கு உயர்ந்த மரியாதை அளித்தான். இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் அவர்களை நினைவு கூறுகிறார்கள்.


எல்லா சோதனைகளையும் உலகத்தாரிடம் சொல்லித் திரிவது அவசியமில்லை.

அல்லாஹ்விடம் முறையிடுவது உயர்ந்த ஈமான்.

சோதனையை மறைத்து, பொறுமையுடன் தாங்குபவர்களை அல்லாஹ் உயர்த்துவான்.

அல்லாஹ் கூறுகிறான்:


 ‌ اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ‏

“நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு கணக்கில்லா நன்மை வழங்கப்படும்.” அல்குர்ஆன் 39:10


ஒரு நாள் அலி இப்னு அபீ தாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகக் கடினமான வறுமை நிலையிலிருந்தார்கள். வீட்டில் உணவு இல்லை. குழந்தைகள் பசியில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் மக்கள் முன் சென்று தன் துயரத்தைப் புலம்பவில்லை.

அப்போது அவர்களது மனைவி பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் இருந்த ஒரு துணியை அடகு வைத்து சிறிது கோதுமை வாங்கி வந்தார்கள். அதிலிருந்து ரொட்டி செய்தார்கள்.

அந்த நேரத்தில் ஒரு ஏழை மனிதர் வாசற்கதவிற்கு வந்து:

“நான் மிகவும் பசியோடு இருக்கிறேன்” என்றார். வீட்டில் இருந்த ஒரே உணவாக இருந்தாலும், அலி இப்னு அபீ தாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த உணவை ஏழைக்கு கொடுத்துவிட்டார்கள். தாங்களோ பசியுடன் இருந்தார்கள்.

அடுத்த நாள் ஒரு அனாதை வந்தான். மறுநாள் ஒரு சிறைவாசி வந்தான். மூன்று நாட்களும் அவர்கள் தங்களது தேவையை மறைத்து, பிறருக்கே முன்னுரிமை கொடுத்தார்கள்.

இதற்காக அல்லாஹ் அல்குர்ஆனில் அவர்கள் குறித்து புகழ்ந்து வசனம் அருளினான்

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏


“அவர்கள் தமக்கே தேவையிருந்த போதிலும், ஏழைக்கும், அனாதைக்கும், சிறைவாசிக்கும் உணவளிக்கிறார்கள்.”அல்குர்ஆன் 76:8


உண்மையான பொறுமை என்பது துன்பத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருப்பது அல்ல. தன்னுடைய சோதனையையும் மறைத்து, பிறரின் துயரத்தை நினைப்பதே உயர்ந்த இதயம்.


“பசியை மறைத்தவர்கள் வரலாற்றில் உயர்ந்தார்கள்;

சோதனையை மறைத்தவர்கள் அல்லாஹ்விடம் உயர்ந்தார்கள்.”


وصلة الرحم،

3) உறவுகளுடன் சேர்ந்து வாழ்வது.


தன்னுடன் பிணக்கு வைத்திருக்கும் உறவினர்களுடனும் சேர்ந்து வாழ்வது. "உறவைச் சேர்ப்பவர் என்பவர், தன்னிடம் உறவை முறித்தவருடன் சேர்ந்து வாழ்பவரே" என்பது நபிமொழி. இது வாழ்வாதாரத்தை (ரிஸ்க்கை) அதிகப்படுத்தும் மற்றும் ஆயுளை நீட்டிக்கும் ஒரு பொக்கிஷமாகும்.

وَالَّذِيْنَ يَصِلُوْنَ مَاۤ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَ يَخَافُوْنَ سُوْۤءَ الْحِسَابِ‏

மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்துவைக்கப் படவேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.(அல்குர்ஆன் : 13:21)


“உறவுகளை இணைத்து வைத்திருப்பவர்களே அல்லாஹ் கட்டளையிட்டதை நிறைவேற்றுகிறவர்கள்.” 


நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்: 

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: "لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ”

“உறவுகளை துண்டிப்பவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்.” நூல் புகாரி


ஆயுள் மற்றும் வாழ்வாதாரத்தில் பரக்கத்

நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்:

“யார் தனது வாழ்வாதாரம் விரிவடையவும், ஆயுள் நீடிக்கவும் விரும்புகிறாரோ, அவர் உறவுகளை பேணட்டும்.”

உறவுகள் இணைந்த வீட்டில் பரக்கத் இருக்கும்.


அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கும்

குடும்பம் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் வீட்டில் அன்பும் அமைதியும் அதிகரிக்கும்.

சண்டை இருக்கும் வீட்டில் மனஅழுத்தம் அதிகம்;

ஒற்றுமை இருக்கும் வீட்டில் ரஹ்மத் அதிகம்.


குழந்தைகளுக்கு நல்ல சூழல்

அம்மா,வாப்பா ,நானா, நானி ,தாதா, தாதி, மாமா, மாமி சாச்சா ,சாச்சி போன்ற உறவுகளுடன் வளரும் குழந்தைகளுக்கு அன்பு, மரியாதை, கருணை போன்ற குணங்கள் இயல்பாக உருவாகும்.


அபூ அய்யூப் அல்-அன்சாரி ரலியல்லாஹு அவர்கள் வீட்டிற்கு முஹம்மது நபி ﷺ அவர்கள் ஹிஜ்ரத்திற்குப் பிறகு தங்கியிருந்தார்கள்.அவரது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியுடன்: “நபிகள் நாயகம் ﷺ எங்கள் வீட்டில் தங்க வேண்டும்” என்று போட்டிப்போட்டார்கள். வீட்டில் இருந்த சிறிய உணவையும் பகிர்ந்து கொண்டார்கள். ஒரே வீட்டில் அன்போடு சேவை செய்தார்கள்.

அந்த வீட்டில் இருந்த ஒற்றுமையால் இன்று வரை அவர்களின் பெயர் வரலாற்றில் உயர்ந்துள்ளது.


“உறவுகள் உடைந்த வீடு பெரியதாக இருந்தாலும் வெறுமைதான்;

உறவுகள் இணைந்த வீடு சிறியதாக இருந்தாலும் சொர்க்கம் போன்றது.”


அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு “அன்னையே! நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!


நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிகவும் அறிவேன்” என்று கூறினார்கள்.


பின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.


பின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.


பின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.”என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகளை மன்னித்தருள்வாயாக! அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக! அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக! நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்!” என்று துஆ செய்தார்கள்.


பின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.


”அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே! தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.


ஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.( நூல்: தப்ரானீ,)


உஹத் 70 ஷுஹதாக்களைத் தந்த யுத்தகளம். 


அண்ணலாரும், அருமைத் தோழர்களும் மதீனாவின் எல்கையைத் தாண்டி ஊருக்குள் பிரவேசித்த தருணம் அது. ஷஹீத்களின் குடும்பத்தார்கள் தங்களின் குடும்பத்தினர் சகிதமாக வந்து உஹதில் ஷஹீதானவர்களின் நிலை கேட்டு அழுத வண்ணம் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழ்பெற்ற பனூ அப்துல் அஷ்ஹல், ளஃபர் கோத்திரத்தாரைக் கடந்து செல்கின்றார்கள். உஹதில் அதிக உயிர்களை அல்லாஹ்விற்காகத் தந்த கோத்திரம் அது. பனூ அப்துல் அஷ்ஹல், ளஃபர் குலத்துப் பெண்கள் அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண்களில் சிலர் தங்களின் கணவன்மார்களை, சிலர் தங்களின் தந்தைமார்களை, சிலர் தங்களின் சகோதரர்களை, சிலர் தங்களின் வாரிசுகளை இழந்திருந்தனர்.


இளகிய மனம் படைத்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அழுகையை அடக்க முடியவில்லை. அண்ணலாரின் இரு கண்களும் கண்ணீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தன.


ஒரு கணம் அப்படியே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுகையை நிறுத்தி விட்டு “எம் பெரிய தந்தை ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இழப்பு எவ்வளவு பெரிய இழப்பு, அவருக்காக அழ இங்கு ஒருவரும் இல்லையே!?” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு அங்கிருந்து மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி சென்று விடுகின்றார்கள்.


பனூ அப்துல் அஷ்ஹல் குலப் பெண்கள் இந்த வார்த்தையை தங்களின் குலத்தலைவர்களில் இருவரான ஸஅத் இப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு உஸைத் இப்னு ஹுளைர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரிடம் தெரிவித்தனர்.


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படியா கூறினார்கள்? என்று கேட்ட இருவரும் தங்களின் குடும்பப் பெண்களையும், குலப்பெண்களையும் அழைத்துக் கொண்டு மாநபியின் மஸ்ஜிதுக்கு வருகை தந்து, மஸ்ஜிதின் வாயிலில் நின்று, “என் குலப் பெண்களே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக நீங்கள் அழுங்கள்!” என்று கூறினார்கள்.


மஸ்ஜிதுக்கு முன் நின்று அன்ஸாரிப் பெண்கள் அழுகின்றார்கள் என்பதைக் கேள்வி பட்ட அண்ணலார் ஓடி வருகின்றார்கள்.


“அன்ஸாரிப் பெண்களே! பனூ அப்துல் அஷ்ஹல் குலப் பெண்களே! ஏன் அழுகின்றீர்கள்? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.


”அல்லாஹ்வின் தூதரே! தங்களின் பெரிய தந்தை ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக நாங்கள் அழுகின்றோம்” என்றார்கள்.


அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நெகிழ்ந்து போனார்கள். பெண்களே! நீங்கள் உங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லுங்கள்! இந்த நபியின் குடும்ப இழப்பிற்காக அழுத உங்கள் வாழ்க்கையில் அல்லாஹ் அருள் புரிவான்!” என துஆ செய்து அனுப்பி வைத்தார்கள். ( நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு)

எனவே உறவுகளோடு சேர்ந்து வாழ்வது அது ஒரு சொர்க்கத்தினுடைய பொக்கிஷம்.

وقول “لا حول ولا قوة إلا بالله.


4) லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் கூறுதல்.


இது அல்லாஹ்வின் பேராற்றலை முழுமையாகச் சார்ந்து இருப்பதைக் குறிக்கிறது. வறுமை, கவலை, நோய் மற்றும் சிக்கலான நேரங்களில் ஒரு மனிதனைப் பாதுகாக்கும் மாபெரும் கவசமாகவும், சொர்க்கத்தின் நேரடிப் பொக்கிஷமாகவும் இது திகழ்கிறது.


பாங்கு சொல்லும் போது கூறும் லா ஹவ்ல வலா ஏன் ?

பாங்கு சொல்லப்படும் போது, மற்ற வரிகளுக்குப் பதில் சொல்லும் போது அதே வரிகளைச் சொல்லும் நாம், 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' (தொழுகைக்கு வாருங்கள்) மற்றும் 'ஹய்ய அலல் ஃபலாஹ்' (வெற்றிக்கு வாருங்கள்) என்று முஅத்தின் சொல்லும் போது மட்டும் ஏன் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்று சொல்கிறோம் என்பதற்குப் பின்னால் மிக அழகான தத்துவம் உள்ளது.


 لا حول ولا قوة إلا بالله.

லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் பொருள்…

தீமையில் இருந்து நன்மை பக்கம் திரும்புவதற்கோ  

நன்மைகள் செய்வதற்கோ அல்லாஹ் வின் நாட்டம் இன்றி ஏதும் இல்லை.


அல்லாஹ்வின் உதவியை நாடுதல் (استعانة بالله)

பாங்கு சொல்பவர் "தொழுகைக்கு வாருங்கள்" என்று நம்மை அழைக்கும்போது, அந்த அழைப்பை ஏற்று மஸ்ஜிதுக்குச் சென்று தொழுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு அல்லாஹ்வின் பெரும் கிருபையும், தவ்ஃபீக்கும் (உதவியும்) தேவை.

 "யா அல்லாஹ்! நீ அழைக்கிறாய், ஆனால் உன்னுடைய உதவி இல்லாமல் என்னால் பாவங்களிலிருந்து விலகி, நன்மையை நோக்கி (தொழுகையை நோக்கி) வர முடியாது" என்று நாம் ஒப்புக்கொள்கிறோம்.


ஒரு மனிதன் தன் அன்றாட வேலைகளில் மூழ்கி இருக்கும்போது, அந்த வேலைகளை விட்டுவிட்டு இறைவனை வணங்கச் செல்வதற்கு மன உறுதி தேவை. "என்னால் தானாக முன்வந்து விட முடியாது; நீ எனக்கு சக்தியும் ஆற்றலும் கொடுத்தால் ஒழிய என்னால் இந்த நன்மையைச் செய்ய முடியாது" என்ற நமது இயலாமையை (عجز) அல்லாஹ்விடம் சமர்ப்பிப்பதே இந்த வாசகத்தின் நோக்கம்.


'லா ஹவ்ல' - ஒரு திறவுகோல் இது சொர்க்கத்தின் பொக்கிஷம்.

மற்ற பாங்கின் வரிகள் அல்லாஹ்வின் பெருமையைப் பேசுகின்றன. ஆனால் இந்த இரண்டு வரிகள் (ஹய்ய அலஸ் ஸலாஹ்...) நம்மை ஒரு செயலைச் செய்யத் தூண்டுகின்றன.

ஒரு செயல் என்று வரும்போது, அதற்கு 'ஆற்றல்' (குவ்வத்) தேவை. அந்த ஆற்றல் அல்லாஹ்விடமே உள்ளது என்பதை உறுதிப்படுத்தவே இந்த வாசகம் சொல்லப்படுகிறது.


இமாம் நவவி رحمه الله மிகவும் எளிமையாக வாழ்ந்தார்கள்.

பல நேரங்களில் பசி, உடல் பலவீனம், தூக்கமின்மை இருந்தாலும் அவர்கள் அறிவை கற்றுத்தருவதை நிறுத்தவில்லை.அவர்களின் மாணவர்கள் கூறுகிறார்கள்: “கடினமான நேரங்களில் இமாம் நவவி தொடர்ந்து ‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ என்று ஓதுவார்கள்.”

ஏனெனில் அவர்கள் அறிந்திருந்தார்கள்:

“அல்லாஹ்வின் உதவி இல்லாமல் ஒரு பக்கம்கூட படிக்க முடியாது.”


ஒருமுறை உமர் இப்னுல் கத்தாப் அவர்கள் ஒரு நோயாளியை பார்க்க சென்றார்கள். அவர் மிகவும் துயரத்துடன்:“என் நோய் நீண்டுவிட்டது” என்று கூறினார்.அப்போது உமர் ரலி அவர்கள் கூறினார்கள்:


அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறு.‘லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ என்று சொல். ஏனெனில் மனிதனின் சக்தி முடியும் இடத்தில் அல்லாஹ்வின் உதவி தொடங்குகிறது.”


இந்த ஒரு வார்த்தையில் 3 பெரிய விஷயங்கள் உள்ளன:

1. தாழ்மை. “என்னால் முடியாது.”

2. தவக்குல். “அல்லாஹ்வால் முடியும்.”

3. ஈமான்“அவன் உதவினால் எந்த கஷ்டமும் கடக்கலாம்.”


சில இறைநேசர்கள் கூறுவார்கள்:

“யார் இந்த திக்ரை அதிகமாக சொல்கிறார்களோ,

அவர்களின் இதய சுமையை அல்லாஹ் இலகுவாக்குவான்.”


லா ஹவ்ல வலா குவ்வத இவ்வாபில்லாஹில் அலிய்யுல் அலீம் 

இதை யார் சொல்வார்களே 99 வியாதிகள் குணமாகும் அதில் குறைந்தது கவலை .


தந்தையின் மரணமும் சொத்துப் பிரிவினையும்

 ஸுரா கஹ்ஃபில். தப்ஸீர் இப்னு கஸீரில் இஸ்ரேலிய சமூகத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் அவர்களின் தந்தை மரணித்தபோது, ஒரு பெரும் தொகையைச் சொத்தாக விட்டுச் சென்றார்.


இருவரும் சொத்தைப் பாதியாகப் பிரித்துக் கொண்டனர்.

இவர்தான் இறைநம்பிக்கையாளர். இவர் தனது சொத்து முழுவதையும் அல்லாஹ்வின் பாதையில் ஏழைகளுக்கும் நற்காரியங்களுக்கும் செலவு செய்தார். "யா அல்லாஹ்! நான் இந்தச் சொத்தைச் சொர்க்கத்தில் உன்னிடம் ஒரு பொக்கிஷமாகச் சேமிக்கிறேன்" என்பதே இவரது எண்ணமாக இருந்தது.


மற்றவர் அந்தப் பணத்தை வியாபாரத்திலும் விவசாயத்திலும் முதலீடு செய்தார். காலம் செல்லச் செல்ல அவர் பெரும் செல்வந்தரானார். அவருக்கு இரு அழகான தோட்டங்கள் கிடைத்தன.


இரு தோட்டக்காரர்களின் உரையாடல்

அந்தச் செல்வந்தருக்குத் திராட்சைத் தோட்டங்களும், அதைச் சுற்றி பேரீச்சை மரங்களும், நடுவே விவசாய நிலங்களும், ஓடும் நீரோடையும் என மிகச் செழிப்பான வசதிகள் இருந்தன.

ஒருமுறை இந்த இரு சகோதரர்களும் சந்தித்துப் பேசும்போது, செல்வந்தர் கர்வத்துடன் கூறினார்:

"உன்னைவிட நான் அதிக செல்வம் உடையவன்; ஆள் பலத்திலும் உன்னைவிடச் சிறந்தவன்."அவர் தனது தோட்டத்திற்குள் நுழைந்தபோது, "இது ஒருபோதும் அழியாது என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை மறுமை என்று ஒன்று இருந்தாலும், அங்கே இதைவிடச் சிறந்த இடமே எனக்குக் கிடைக்கும்" என்று ஆணவத்துடன் கூறினார்.

"அல்லாஹ்வின் நாட்டம்" (மாஷா அல்லாஹ்) என்று சொல்லக்கூடாதா?

அதற்கு அந்த ஏழைச் சகோதரர் (தர்மம் செய்தவர்) மிக அழகாக அறிவுரை கூறினார். அந்த வசனம் இதோ:

وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

"நீ உன் தோட்டத்திற்குள் நுழைந்தபோது, 'மாஷா அல்லாஹ், லா குவ்வத இல்லா பில்லாஹ்' (அல்லாஹ் நாடியதே நடக்கும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் ஆற்றல் இல்லை) என்று சொல்லியிருக்க வேண்டாமா?" (18:39)


அதாவது, "உனக்குக் கிடைத்த இந்தச் செல்வம் உன்னுடைய திறமையால் வந்தது அல்ல, இது அல்லாஹ்வின் அருட்கொடை" என்பதை அவர் நினைவுபடுத்தினார்.


தீப்பிடித்து எரிந்த தோட்டம்

அந்தச் செல்வந்தர் தனது தம்பியின் அறிவுரையை ஏளனம் செய்தார். ஆனால், அல்லாஹ்வின் தண்டனை திடீரென வந்தது.

வானத்திலிருந்து ஒரு பெரும் பேரிடி (அல்லது நெருப்புப் பிழம்பு) அந்தத் தோட்டத்தின் மீது இறங்கியது.


மறுநாள் காலை அவர் வந்து பார்த்தபோது, செழிப்பாக இருந்த தோட்டம் அப்படியே கருகி, வெறும் தரிசு நிலமாக மாறியிருந்தது. அவர் தனது தோட்டத்திற்காகச் செலவழித்த பெரும் தொகையை நினைத்து, கைகளை பிசைந்து கொண்டு வருந்தினார். அப்போது அவர் அழுதபடி கூறினார்: "அந்தோ பரிதாபமே! என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்கக் கூடாதா?”


இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தான் வீட்டு வாசலில் முதன் முதலில் எழுதியது.

"مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ"

மாஷா அல்லாஹ் லா குவ்வத இல்லா பில்லாஹ் என்ற வாசகத்தை எழுதி வைத்திருந்தார்கள். இதற்குக் காரணம், ஒரு மனிதன் தனது வீட்டிற்குள் நுழையும்போது அல்லது தனது செல்வத்தைப் பார்க்கும்போது இந்த வாசகத்தைக் கூறினால், அதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது குர்ஆனிய வழிகாட்டுதலாகும்.


அவ்ஃப் இப்னு மாலிக் அல்-அஷ்ஜஈ (ரலி) 


நபித்தோழர் அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் சாலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு போரின் போது எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டார்கள். எதிரிகள் அவரைச் சங்கிலியால் கட்டிப் போட்டு சித்திரவதை செய்தனர்.


மகன் சிறைபிடிக்கப்பட்ட செய்தி கேட்டு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த கவலையடைந்தார்கள். தனது வறுமை காரணமாக மகனை மீட்கப் பணமும் இல்லை, பலமும் இல்லை என்ற நிலையில், அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து முறையிட்டார்கள்.


அவர்களின் கவலையைக் கேட்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கினார்கள்:

"அவ்ஃபே! நீரும் உம்முடைய மனைவியும் பொறுமையாக இருங்கள். மேலும், 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்ற திக்ரை அதிகமதிகம் ஓதிக் கொண்டே இருங்கள்."


அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டிற்குச் சென்று தனது மனைவியிடம் இதைச் சொன்னார்கள். இருவரும் நம்பிக்கையோடு இந்தத் திக்ரை இடைவிடாமல் ஓதத் தொடங்கினார்கள்.


அவர்கள் இந்தத் திக்ரை ஓதிக் கொண்டிருந்த அதே நேரத்தில், பல மைல் தொலைவில் சிறையில் இருந்த அவர்களின் மகன் சாலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.


சாலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கட்டியிருந்த இரும்புச் சங்கிலிகள் தானாகவே தளர்ந்து கீழே விழுந்தன.

பாதுகாவலர்களின் கண்களில் படாமல் இரவில் அவர்கள் மது அருந்திவிட்டு உறங்கும் போது அவர்கள் சிறையை விட்டு வெளியேறினார்கள்.


அவர்கள் வெளியே வரும்போது, எதிரிகளுக்குச் சொந்தமான ஒரு ஒட்டகத்தின் மீது ஏறிக் கொண்டார்கள். அப்போது அந்த ஒட்டகத்தைத் தொடர்ந்து எதிரிகளின் சுமார் ஆயிரக்கணக்கான ஒட்டகங்களும் ஆடுகளும் அவரைப் பின் தொடர்ந்து வர ஆரம்பித்தன (இதை அல்லாஹ் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தான்).


மறுநாள் அதிகாலை, மதீனாவில் அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டு வாசலில் யாரோ கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்து பார்த்த அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தார்கள். அங்கே அவர்களின் மகன் சாலிம் ரலியல்லாஹு அன்ஹு ஆயிரக்கணக்கான ஒட்டகங்களுடன் நின்று கொண்டிருந்தார்கள்.


இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்தவுடன், அல்லாஹ் திருக்குர்ஆனில் இந்த வசனத்தை இறக்கினான்:

 وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ‏

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.(அல்குர்ஆன் : 65:2)

وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا‏

அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.(அல்குர்ஆன் : 65:3)


ஒரு மனிதன் தான் பலவீனமானவன் என்று உணர்ந்து 'லா ஹவ்ல...' என்று ஓதும்போது, அல்லாஹ்வின் 'குவ்வத்' (பேராற்றல்) அங்கே செயல்படத் துவங்குகிறது.


இரும்புச் சங்கிலிகளை விட வலிமையானது ஈமான் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.


நெருப்பும் பஞ்ச பூதங்களும் அல்லாஹ்வின் படைப்புகளே. படைத்தவன் மீது உறுதியான நம்பிக்கை (யகீன்) வைத்தால், அந்தப் படைப்புகள் நமக்குச் சாதகமாக மாறும்.


நன்மைகளைச் செய்வதும், சோதனைகளைப் பொறுப்பதும் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அவற்றைப் பிறர் புகழுக்காக வெளிப்படுத்தாமல் அல்லாஹ்வுக்காக மறைப்பதாகும்.


'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்பது வெறும் வார்த்தையல்ல; அது நம்முடைய இயலாமையை ஒப்புக்கொண்டு அல்லாஹ்வின் பேராற்றலைத் துணைக்கு அழைக்கும் மாபெரும் திறவுகோலாகும்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த அந்த நான்கு பொக்கிஷங்கள்

இக்லாஸ் (தூய்மை): தர்மத்தை மறைப்பது என்பது நம் புகழுக்காக அல்லாமல் இறைவனுக்காக மட்டும் செயல்படுவதைக் கற்றுத் தருகிறது.

ஸப்ரு (பொறுமை): சோதனைகளையும் நோய்களையும் மறைப்பது என்பது, படைப்புகளிடம் முறையிடாமல் படைத்தவனிடமே சரணடையும் உயர் பண்பாகும்.


அன்பு (உறவு): இரத்த உறவுகளைப் பேணுவது என்பது இம்மையின் வாழ்வாதாரத்தையும் மறுமையின் உயர் பதவியையும் பெற்றுத் தரும் பாலமாகும்.


தவ்ஹீத் (ஏகத்துவம்): "லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்" என்பது நம்முடைய பலவீனத்தை ஒப்புக்கொண்டு, அண்ட சராசரங்களையும் ஆளும் அல்லாஹ்வின் பேராற்றலைத் துணைக்கு அழைப்பதாகும்.


இந்த நான்கு பண்புகளும் ஒரு முஃமினின் இதயத்தில் குடி புகுந்துவிட்டால், அவனுக்கு நெருப்பும் பூஞ்சோலையாக மாறும்; இழந்த செல்வங்களும் இறை அருளால் மீண்டும் வந்து சேரும்; அவனது வீடும் வாழ்வும் அல்லாஹ்வின் 'மாஷா அல்லாஹ்' எனும் நிழலில் பாதுகாப்பைப் பெறும்.


"யா அல்லாஹ்! உன்னிடம் அழகான பொறுமையையும், நன்றி செலுத்தும் இதயத்தையும், உன்னை எப்போதும் திக்ர் செய்யும் நாவையும் வேண்டுகிறேன்.


யா அல்லாஹ்! உனது பொருத்தத்திற்காகச் சோதனைகளையும் நோய்களையும் மறைத்து வாழும் நன்மக்களின் கூட்டத்தில் எங்களைச் சேர்த்தருள்வாயாக.


என்றும் உயிருடன் இருப்பவனே! நிலையானவனே! உன்னுடைய உதவியின்றி எங்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை. எங்களுடைய எல்லா விவகாரங்களையும் சீர்ப்படுத்தி அருள்வாயாக. ஒரு கண் இமைக்கும் நேரம்கூட எங்களை எங்களுடைய நப்ஸிடம் (சுயத்திடம்) ஒப்படைத்துவிடாதே! ஆமீன்.” யா ரப்பல் ஆலமீன்.



தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.


ஜும்மா பயான்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக