குர்பானியின் சிறப்பு
الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ الْقُرْبَانَ شِعَارًا لِلْمُتَّقِينَ، وَطَهَّرَ بِهِ قُلُوبَ الْمُؤْمِنِينَ. نَحْمَدُهُ سُبْحَانَهُ وَتَعَالَى عَلَى نِعَمِهِ الْعَظِيمَةِ، وَنَشْكُرُهُ عَلَى هِدَايَتِهِ الْقَوِيمَةِ
.
وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمَلِكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، الَّذِي ضَحَّى بِكَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ.
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ، وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَالتَّابِعِينَ لَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ. أَمَّا بَعْدُ، فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْكَرِيمِ
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2) إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3
قال رسول الله صلى الله عليه وسلم : من وجد سعة فلم يضح فلا يقربن مصلانا
இஸ்லாமிய மாதங்களின் இறுதி மாதம் துல்ஹஜ் மாதம் சிறந்த மாதம் அதிலும் குறிப்பாக ஆரம்ப பத்து நாட்கள் மிக முக்கியமான நாட்களாகும். அல்லாஹ் இந்த நாட்களில் உடல் ஆபியத்தோடும் ஆரோக்கியத்தோடும் அவனை வணங்கி வழிபடக்கூடிய தவ்ஃபீகை நம் எல்லோருக்கும் தந்தருள் புரிவானாக. ஆமீன்
துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்கள் சிறந்ததா? அல்லது ரமலான் மாதத்தின் இறுதி10 நாட்கள் சிறந்ததா.?
துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களானது "பகல் பொழுதுகளின்" அடிப்படையில் உலக நாட்களிலேயே மிகச் சிறந்த நாட்களாகும்.
"உலக நாட்களிலேயே மிகச் சிறந்த நாட்கள் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களாகும்" என்று நபியவர்கள் பொதுப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த நாட்களில் மட்டும்தான் இஸ்லாத்தின் ஐந்து தூண்களும் (தொழுகை, நோன்பு, ஜகாத்/தர்மம், ஹஜ், குர்பானி) ஒன்றாக இணைகின்றன. ஹஜ் மற்றும் அரஃபா நாளின் பகல் பொழுது இந்த பத்து நாட்களுக்குள் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
எனவே, பகலில் செய்யக்கூடிய நல்அமல்களுக்கு துல்ஹஜ்ஜின் முதல் 10 நாட்களே மிக உன்னதமானவை.
ரமலான் மாதத்தின் இறுதி 10 நாட்களானது "இரவுப் பொழுதுகளின்" அடிப்படையில் மிக மிக மகத்தானவையாகும்.
இந்த பத்து இரவுகளுக்குள் தான் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த "லைலத்துல் கத்ர்" (கண்ணியமிக்க இரவு) மறைந்துள்ளது. குர்ஆன் அருளப்பட்ட இரவும் இதுவேயாகும்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"أَفْضَلُ أَيَّامِ الدُّنْيَا أَيَّامُ الْعَشْرِ”
"உலகத்தின் நாட்களிலேயே மிகச் சிறந்த நாட்கள் துல் ஹஜ்ஜின் (முதல்) பத்து நாட்களாகும்." (நூல்: பஸ்ஸார், )
அல்லாஹ் இந்த பத்து நாட்களின் மீது குர்ஆனில் சத்தியம் செய்திருக்கிறான்.
وَالْفَجْرِ ﴿١﴾ وَلَيَالٍ عَشْرٍ ﴿٢﴾
"அதிகாலை மீதும், பத்து இரவுகள் மீதும் சத்தியமாக..." (அல்குர்ஆன் 89:1-2) என்று அல்லாஹ் கூறுவது இந்த துல் ஹஜ் முதல் பத்து இரவுகளை/நாட்களையே குறிக்கிறது என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு உள்ளிட்ட பல சான்றோர்கள் விளக்கியுள்ளனர்.
நற்செயல்களுக்கு பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் செய்யப்படும் நன்மைகள் அல்லாஹ்விற்கு மிக மிக உகப்பானவை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ”
"இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயல்களை விட, அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நற்செயல்கள் வேறு எந்த நாட்களிலும் இல்லை."
அப்போது தோழர்கள், "அல்லாஹ்வின் பாதையில் ஜிகாத் (அறப்போர்) செய்வதை விடவா?" என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள், "ஆம், அல்லாஹ்வின் பாதையில் ஜிகாத் செய்வதை விடவும் சிறந்ததுதான். ஆனால், ஒரு மனிதன் தனது உயிரையும், பொருளையும் தியாகம் செய்யப் புறப்பட்டு, அதில் எதையுமே திரும்பக் கொண்டுவராமல் (அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்து ஷஹீதானவனைத்) தவிர" என்று கூறினார்கள். நூல்: புகாரி
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளும் இணையும் நாட்கள்
அல்-ஹாஃபிழ் இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறும்போது: "துல் ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பிற்கு மிக முக்கியமான காரணம், இதில் இஸ்லாத்தின் அடிப்படை வணக்கங்கள் அனைத்தும் ஒன்றாக இணைகின்றன. தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ், குர்பானி (உள்ஹிய்யா) ஆகிய அனைத்தும் இந்த நாட்களைத் தவிர வேறு எந்த நாட்களிலும் ஒன்றாக அமைவதில்லை" என்று குறிப்பிடுகிறார்கள்.
இப்னு ஹஜர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் இந்த தினங்களுக்கு சிறப்பு ஏன்?
இரு காரணங்கள்:-
1)மார்க்கத்தின் 5 கடமைகளும் ஒன்றாக செய்ய முடியும்.
தக்பீர்,தொழுகை ,அரஃபா நோன்பு , தர்மம் ஜகாத்,ஹஜ்ஜின் அமல்
2.அல்லாஹ்விடம் மக்கள் தங்களின் அடிமைத்தனம் முழுவதும் வெளிப்படும் தினங்கள் ஆகும்.
ஹஜ் மற்றும் குர்பானி இரண்டு அமலுமே அறிவிற்கு அப்பாற்பட்டது ஆகும்.
ஒரு ஹாஜி ஏன் இந்த அமல் செய்யனும்? எந்த காரணமும் இல்லை
ஏனென்றால் அல்லாஹ் சொன்னது. ஒன்று மட்டுமே.
இஹ்ராம் கட்டுதல் மினாவில் தங்குவது. முஸ்தலிஃபாவில் தங்குதல், அரஃபாவில் துஆ செய்தல், கல்லெறியுதல், முடி இறக்குதல் இஹ்ராம் களைதல் ஆடு, மாடு ஒட்டகம் குர்பானி கொடுத்தல் .
ஹஜ்ஜும் குர்பானியும் அறிவிற்கு அப்பாற்பட்டது.
இரண்டிலும் பணம் காசு செலவுகள் இருக்கின்றது.
உலகம் முழுவதும் செய்யும் அமல்
மார்க்க கடமை.
முழுமையாக அடிமை தனம். அல்லாஹ்வுக்கு அடிபனிதல்.
அறிவிற்கு விளங்கினால் தான் செய்வேன். என்று சொல்ல முடியாது. அல்லாஹ் செய் என்றால் செய்யனும் குனி என்றால் குனியனும். ஸஹாபாக்கள் அப்படி தான் செய்தார்கள்.
ஹாஜிகள் இஹ்ராம் கட்டியிருப்பதால் நகம் முடி வெட்டக்கூடாது அது போல குர்பானி கொடுப்பவர்களும் பிறை பிறந்ததில் இருந்து நகம் முடி வெட்டாமல் குர்பானி கொடுத்த பிறகு தான் நகம் முடி வெட்ட வேண்டும்.
இன்றைய தினத்தில் செய்யும் அமல்களில் குர்பானி தான் சிறந்த அமல் வேறு சிறந்த அமல் இல்லை.
துல்ஹஜ் முதல் 10 நாட்களில் நாம் செய்ய வேண்டிய முக்கிய அமல்கள்:
இந்த நாட்களில் அல்லாஹ்வை அதிகமாகப் பெருமைப்படுத்த வேண்டும். தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்), தஹ்மீது (அல்ஹம்துலில்லாஹ்), தஹ்லீல் (லாயிலாஹ இல்லல்லாஹ்), மற்றும் தக்பீர் (அல்லாஹு அக்பர்) போன்ற திக்ருகளை அதிகமாக ஓத வேண்டும்.
துல்ஹஜ் முதல் 9 நாட்களும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். குறிப்பாக 9-ஆவது நாளான அரஃபா நாள் நோன்பு மிக முக்கியமானது. அன்றைய தினம் நோன்பு நோற்பது, கடந்த ஒரு வருடத்தின் பாவங்களையும், வரக்கூடிய ஒரு வருடத்தின் பாவங்களையும் மன்னிக்கச் செய்யும் என நபியவர்கள் கூறியுள்ளார்கள் (முஸ்லிம்).
தகுதியுடையவர்கள் 10-ஆம் நாள் பெருநாள் தொழுகைக்குப் பிறகு அல்லாஹ்வின் பெயரால் பலிப்பிராணிகளை அறுத்து தியாகத்தை வெளிப்படுத்துவது மிகச் சிறந்த அமலாகும்.
முதல் குர்பானியின் வரலாறு
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில், அவர்களின் மனைவி நம் தாய் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறப்பது வழக்கம். அக்காலத்துச் சட்டப்படி, ஒரு பிரசவத்தில் பிறக்கும் ஆணுக்கும், அடுத்த பிரசவத்தில் பிறக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கப்படும் (ஒரே பிரசவத்தில் பிறந்த அண்ணன்- தங்கை திருமணம் செய்யக் கூடாது.
காபிலுடன் பிறந்த சகோதரி மிகுந்த அழகுடன் இருந்தாள். ஹாபிலுடன் பிறந்த சகோதரி சாதாரணத் தோற்றம் கொண்டவளாக இருந்தாள்.
முறைப்படி காபிலுடன் பிறந்தவளை ஹாபிலும், ஹாபிலுடன் பிறந்தவளை காபிலும் திருமணம் செய்ய வேண்டும். ஆனால், காபில் தனக்குத்தானே பிறந்த அழகுள்ள பெண்ணையே திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்தார்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காபிலுக்குப் புரிய வைக்க முயன்றும் அவர்
கேட்கவில்லை. இறுதியாக, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், "நீங்கள் இருவருமே அல்லாஹ்விற்காக ஒரு குர்பானியை (காணிக்கையை) சமர்ப்பியுங்கள். யாருடைய குர்பானி ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ, அவருக்கே அந்தப் பெண்" என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
அக்காலத்தில் குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடையாளம் என்னவென்றால், வானத்திலிருந்து ஒரு நெருப்பு வந்து அந்தப் பொருளைப் பொசுக்கி (எடுத்துக்) கொண்டு போய்விடும்.
ஹாபில் ஆடு மாடுகளை மேய்க்கும் தொழிலைச் செய்து வந்தார். அவர் அல்லாஹ்விற்காகத் தன் மந்தையிலேயே மிகவும் கொழுத்த, சிறந்த, அழகான ஓர் ஆட்டை உளப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்து குாரபானியாகக் கொடுத்தார்.
காபில் விவசாயம் செய்து வந்தார். அவர் தன்னிடம் இருந்த தானியங்களில் மிகவும் மட்டமான, கெட்டுப்போன, தரம் குறைந்த தானியங்களை அலட்சிய மனப்பான்மையுடன் குர்பானியாகக் கொண்டு வந்து வைத்தார்.
வானத்திலிருந்து வந்த நெருப்பு ஹாபிலின் சிறந்த ஆட்டை மட்டும் எடுத்துக்கொண்டது (கபூல் ஆனது). காபிலின் தானியங்கள் அப்படியே இருந்தன (நிராகரிக்கப்பட்டது).
இதனால் கோபமடைந்த காபில், ஹாபிலைப் பார்த்து, "நான் உன்னைக் கொலை செய்துவிடுவேன்" என்று கூறினான். அதற்கு ஹாபில் அமைதியாக ஒரு பதிலைச் சொன்னார். அந்தப் பதில்தான் குர்பானியின் மிக முக்கிய தத்துவமாகும்:
"நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களிடமிருந்துதான் (குர்பானியை) ஏற்றுக் கொள்கிறான்." (அல்குர்ஆன் 5:27)
இந்த வரலாற்று நிகழ்வு நமக்கு உணர்த்துவது என்னவென்றால், அல்லாஹ்விடம் நம்முடைய குர்பானியின் அளவுக்கோ, அதன் விலைக்கோ முக்கியத்துவம் இல்லை; அதை நாம் எவ்வளவு தூய்மையான எண்ணத்தோடும், பயபக்தியோடும் (தக்வாவோடும்) கொடுக்கிறோம் என்பதே முக்கியம். நாம் கொடுக்கும் பிராணி சிறந்ததாகவும், நம் நோக்கம் தூய்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த முதல் குர்பானியே ஆகச்சிறந்த சான்றாகும்.
பனு இஸ்ராயீல் மாட்டை அறுத்த…
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً ۖ
"நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஒரு மாட்டை அறுக்குமாறுகட்டளையிடுகிறான் என்று மூஸா தன் சமூகத்தாரிடம் கூறியபோது..." (அல்குர்ஆன் 2:67)
பனு இஸ்ராயீல் சமூகத்தில் பெரும் செல்வந்தர் ஒருவருக்கு வாரிசுகள் யாரும் இல்லை. அவருடைய ஒரே அண்ணன்/தம்பி மகன் (அண்ணன் மகன்) அந்த சொத்துக்களை உடனடியாக அடைய வேண்டும் என்ற பேராசையில், தன் பெரியப்பாவை (செல்வந்தரை) ரகசியமாகக் கொலை செய்து, சடலத்தை வேறு ஒரு ஊரின் எல்லையில் கொண்டு போய் போட்டுவிட்டான்.
மறுநாள் காலையில், அவனே ஒன்றும் தெரியாதவன் போல வந்து, "என் பெரியப்பாவைக் கொன்றது யார்?" என்று சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு, பழிவாங்கத் துடித்தான். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கலவரம் வெடிக்கும் சூழல் உருவானது. உண்மைக் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில், மக்கள் அனைவரும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து நியாயம் கேட்டனர்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் பிராத்தித்தபோது, அல்லாஹ் "அவர்களை ஒரு மாட்டை அறுக்கச் சொல்" என்று கட்டளையிட்டான். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களிடம், "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஒரு மாட்டை அறுக்குமாறு கட்டளையிடுகிறான்" என்று கூறியபோது, அவர்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தினர்.
"மூஸாவே! நாங்கள் கொலைகாரனைத் தேடி வந்தால், நீங்கள் எங்களை மாட்டை அறுக்கச் சொல்லி எங்களிடம் கேலி செய்கிறீர்களா?" என்று கேட்டனர். அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம், "அறியாதவர்களில் ஒருவனாக நான் ஆகிவிடுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறி, இது அல்லாஹ்வின் நேரடிக் கட்டளை என்பதை தெளிவுபடுத்தினார்.
அல்லாஹ் சாதாரணமாக "ஏதாவது ஒரு மாட்டை அறுங்கள்" என்றுதான் கட்டளையிட்டான். அவர்கள் உடனே ஏதேனும் ஒரு மாட்டை அறுத்து இருந்தால் கடமை முடிந்திருக்கும். ஆனால், அவர்கள் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு அந்தப் பணியைக் கடினமாக்கிக் கொண்டனர்:
கேள்வி 1 (வயது என்ன?): "அந்த மாடு எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுடைய இறைவனிடம் கேளுங்கள்" என்றனர். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், "அது மிக வயதானதாகவும் இருக்கக் கூடாது, இளம் கன்றாகவும் இருக்கக் கூடாது; இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுத்தர வயதுடையதாக இருக்க வேண்டும்" என்ற அல்லாஹ்வின் பதிலைச் சொன்னார்.
கேள்வி 2 (நிறம் என்ன?): "அதன் நிறம் என்னவென்று இறைவனிடம் கேளுங்கள்" என்றனர். மூஸா அலைஹிஸ்ஸலாம் "அது பார்ப்பவர்களின் உள்ளத்தைக் கவரக்கூடிய, அடர்ந்த தூய மஞ்சள் நிறமுடைய மாடாக இருக்க வேண்டும்" என்றார்.
கேள்வி 3 (அதன் தன்மை என்ன?): மீண்டும் அவர்கள், "மாடுகள் அனைத்தும் எங்களுக்கு ஒரே மாதிரியாகத் தெரிகின்றன; இன்னும் தெளிவாகக் கேளுங்கள்" என்றனர். மூஸா அலைஹிஸ்ஸலாம் "அது நிலத்தை உழுவதற்கோ, வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்கோ பயன்படுத்தப்படாத, எந்த வடுவோ, புள்ளியோ இல்லாத முழுமையான மாடாக இருக்க வேண்டும்" என்று விவரித்தார்கள்.
இத்தனை நிபந்தனைகளும் பொருந்திய ஒரு மாடு, அந்தச் சமூகத்தில் உள்ள ஏழைப் பிள்ளை ஒருவனிடம் மட்டும்தான் இருந்தது (அவன் தன் தந்தைக்கு மிகச் சிறந்த முறையில் பணிவிடை செய்ததற்காக அந்த மாடு அவனுக்குக் கிடைத்திருந்தது). வேறு வழியின்றி பனு இஸ்ராயீலர்கள் அந்த மாட்டை அதன் எடைக்கு நிகரான தங்கத்தைக் கொடுத்து மிக அதிக விலைக்கு வாங்க வேண்டியதாயிற்று.
விருப்பமில்லாமலும், பெரும் சிரமத்திற்கு மத்தியிலும் அந்த மாட்டை அவர்கள் அறுத்தார்கள். பின்னர் அல்லாஹ் கட்டளையிட்டபடி:
"அதன் (அறுக்கப்பட்ட மாட்டின்) ஒரு துண்டால், கொலை செய்யப்பட்ட அந்த சடலத்தின் மீது அடியுங்கள்" என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:73)
அறுக்கப்பட்ட மாட்டின் ஒரு பகுதியைக் கொண்டு இறந்தவர் மீது அடித்தவுடன், அல்லாஹ் தன் பேராற்றலால் அந்த இறந்த மனிதனை உயிர்த்தெழச் செய்தான். அவன் உயிரோடு எழுந்து, "என்னை என் அண்ணன் மகன்தான் சொத்துக்காகக் கொன்றான்" என்று உண்மைக் குற்றவாளியைச் சுட்டிக்காட்டிவிட்டு மீண்டும் மரணித்தான்.
தக்வா தான் அல்லாஹ் விடம் சேரும்
لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ.
"அவற்றின் இறைச்சிகளோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை; மாறாக, உங்களிடமிருந்தான பயபக்தி (தக்வா) தான் அவனைச் சென்றடையும்." (அல்குர்ஆன் 22:37)
இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா காலத்தில்), அரப மக்கள் தங்களின் தெய்வங்களுக்குப் பிராணிகளைக் குர்பானி கொடுக்கும்போது ஒரு வழமையைக் கொண்டிருந்தனர். பிராணியை அறுத்த பின்பு, அதன் இறைச்சிகளில் ஒரு பகுதியைத் தங்களின் சிலைகளின் மீது வைப்பார்கள்; அதன் இரத்தத்தைச் சிலைகளின் மீது பூசுவார்கள். அப்படிச் செய்தால்தான் தங்களின் பலி காப்பற்றப்படும், தெய்வங்கள் திருப்தியடையும் என்று நம்பினார்கள்.
முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பு, "நாங்களும் ஏன் இப்படிச் செய்யக் கூடாது? இறைச்சியையும் இரத்தத்தையும் கஃபாவின் சுவர்களில் பூசினால் என்ன?" என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்டார்கள். அந்த அறியாமைப் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், குர்பானியின் தூய நோக்கத்தை விவரிப்பதற்காகவும் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்.
அல்லாஹ் மனிதர்களுடைய எந்தத் தேவைக்கும் அப்பாற்பட்டவன் (அல்-கனிய்யு — தேவையற்றவன்). அவனுக்கு நாம் கொடுக்கும் ஆடோ, மாடோ அல்லது அதன் இரத்தமோ தேவையில்லை.
குர்பானி கொடுக்கப்படும் பிராணியின் இறைச்சியை நீங்களே சமைத்துச் சாப்பிடுகிறீர்கள், உங்களின் உறவினர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கிறீர்கள். அதன் மூலம் மனிதர்களின் பசிதான் தீருகிறதே தவிர, அல்லாஹ்விற்கு அங்கிருந்து எதுவும் செல்வதில்லை.
அல்லாஹ் உங்கள் கைகளில் இருக்கும் கத்தியையோ, நீங்கள் அறுக்கும் பிராணியின் அளவையோ பார்ப்பதில்லை; மாறாக, "என் அடியான் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து, எனக்காக இந்தத் தியாகத்தைச் செய்கிறானே" என்ற உங்களின் தூய்மையான எண்ணத்தையும் (இஹ்லாஸ்), அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியும் பயபக்தியையும் (தக்வா) மட்டும்தான் பார்க்கிறான்.
அல்லாஹ் தக்வாவை மட்டும்தான் ஏற்றுக் கொள்கிறான் என்பதால், நம்முடைய குர்பானியில் பின்வரும் விஷயங்கள் கலந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்:
"நான் இத்தனை ஆயிரம் ரூபாய்க்கு ஆடு வாங்கியிருக்கிறேன்", "ஊரிலேயே என் ஆடுதான் பெரியது" என்று பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகக் குர்பானி அமையக் கூடாது. அப்படி இருந்தால் அங்கு தக்வா அழிந்து, நன்மைகள் வீணாகிவிடும்.
பிராணியை அறுக்கும்போது, இரத்தம் ஓடும்போது செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் பதிவிட்டு விளம்பரப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது அல்லாஹ்விற்கும் நமக்குமான இபாதத். அதில் உலக விளம்பரம் கலந்தால் தக்வாவின் தன்மை குறைந்துவிடும்.
நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
إِنَّ اللَّهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ”
"நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய தோற்றங்களையோ, உங்களுடைய செல்வங்களையோ பார்ப்பதில்லை; மாறாக, அவன் உங்களுடைய உள்ளங்களையும், உங்களுடைய செயல்களையும் தான் பார்க்கிறான்." (நூல்: முஸ்லிம்)
குர்பானி யார் மீது கடமை ?
ஜகாத் கடமையானவர்கள் மீது குர்பானி கடமை.
பெருநாள் தினத்திலும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களிலும் (துல் ஹஜ் 10, 11, 12 ஆகிய நாட்களில்), ஒருவருடைய அத்தியாவசியத் தேவைகள் மற்றும் கடன்கள் போக, அவரிடம் 612 கிராம் வெள்ளி அல்லது அதற்கு இணையான பணமோ, நகையோ, சொத்தோ இருந்தால் அவர் மீது குர்பானி கடமையாகும்.
ஜகாத்திற்கும் குர்பானிக்கும் உள்ள வித்தியாசம்: ஜகாத் கடமையாவதற்கு அந்தப் பணம் ஒரு வருடம் முழுவதும் அவரிடம் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. ஆனால், குர்பானிக்கு அந்த மூன்று பெருநாள் நாட்களில் மட்டும் குறிப்பிட்ட வசதி இருந்தால் போதும், ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் செய்யம் அமலில் மிகச் சிறந்த அமல் குர்பானி ஆகும்.
பெருநாள் தினத்தன்று ஒரு மனிதன் செய்யக்கூடிய மற்ற எல்லா அமல்களை விடவும், இந்த குர்பானிதான் மிக உயர்ந்த, மிகச் சிறந்த வணக்கமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
مَا عَمِلَ آدَمِيٌّ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ، إِنَّهُ لَتَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلَافِهَا، وَأَنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الْأَرْضِ، فَطِيبُوا بِهَا نَفْسًا”
"குர்பானி கொடுக்கக்கூடிய அந்த நாளன்று, ஒரு மனிதன் செய்யக்கூடிய அமல்களிலெல்லாம் மிக ஏற்றமானது எதுவென்றால், உதிரத்தைச் சிந்துவதுதான் (அதாவது பலிப்பிராணியை அறுப்பதுதான்). மறுமை நாளிலே இந்தப் பலிப்பிராணி அதனுடைய கொம்புகளோடும், அதனுடைய அடர்த்தியான ரோமங்களோடும், குளம்புகளோடும் வரும். அதனுடைய முதல் சொட்டு ரத்தம் தரையிலே விழுவதற்கு முன்னால், அல்லாஹ்விடத்தில் அந்தத் தியாகம் அங்கீகரிக்கப்பட்டு விடுகிறது. எனவே இந்த நாளில் குர்பானி கொடுப்பதே மிக ஏற்றமானது; அதை அழகிய முறையில் நீங்கள் நிறைவேற்றுங்கள்".
குர்பானி கொடுக்கக்கூடிய நாட்கள்:
பிறை 10, 11, 12 ஆகிய இந்த மூன்று நாட்களில் எப்போது வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம். பெருநாள் அன்று தொழுகை முடிந்ததற்குப் பின்னர் இதனுடைய நேரம் ஆரம்பமாகிறது.
குர்பானி கொடுப்பதற்காக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றைத்தான் நாம் வாங்க முடியும்; கால்நடையாக அவை இருக்க வேண்டும். கோழி போன்ற மற்ற பொருட்களைக் குர்பானியாகக் கொடுக்க முடியாது; அவ்வாறு கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது.
நாம் பிராணியை வாங்கிவிட்டோம், ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் பிறை 12 மாலை சூரியன் மறையும் வரை அதைக் குர்பானி கொடுக்க இயலவில்லை என்பது உறுதியானால், அந்த ஆட்டுக்குட்டியை அப்படியே உயிரோடு யாருக்காவது தர்மமாகக் கொடுத்துவிட வேண்டும்.
நாம் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நினைத்தும், பிறை 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களிலும் மார்க்கெட்டில் ஆடு, மாடு, ஒட்டகம் எதுவுமே கிடைக்கவில்லை என்றால், அந்தப் பணத்தைத் தர்மமாகக் கொடுத்துவிடலாம். குர்பானிக்கு மாற்று என்று வேறு எதுவும் கிடையாது; தர்மமாகக் கொடுக்கலாம், அவ்வளவுதான்.
பிராணியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:
மறுமை நாளில் கொம்புகளோடும், ரோமங்களோடும் வரும் என்று சொல்வதன் மூலம், நாம் அறுக்கக்கூடிய பலிப்பிராணிகள் எந்தவிதமான குறைகளும் இல்லாதவையாக இருக்க வேண்டும்.
காது கிழிந்தது, கொம்பு ஒடிந்தது, கொம்பிலோ காதிலோ ஓட்டை போடப்பட்டது, நடக்கும்போது நொண்டியாக நடப்பது போன்ற ஊனங்கள் இருக்கக் கூடாது.
பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கக்கூடிய பிராணியாக அது இருக்க வேண்டும்.
"என் ஆடுதான் உன்னுடைய ஆட்டை விடப் பெருசு" என்று பெருமைக்காகக் குர்பானி அமையக் கூடாது. அல்லாஹ்விடத்தில் நம்முடைய தியாகத்தைக் காட்டுவதே அதன் அடையாளமாக இருக்க வேண்டும். (இயல்பாகவே சில ஆடுகளுக்குக் கொம்பு வளர்வதில்லை, ஒரு வருடம் பூர்த்தியாகியும் கொம்பு வரவில்லை என்றாலும் அதை அறுக்கலாம், அதில் தவறில்லை).
நிய்யத் வைத்தல்
ஷாஃபியீ : சுன்னத்தான குர்பானியை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன்.
ஹனஃபீ : வாஜிபான குர்பானியை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன்.
பிராணியை அறுக்கும் முறை மற்றும் துஆக்கள்
குர்பானி கொடுக்கக்கூடியவர்கள் அவர்களே பிராணியை அறுப்பது மிகவும் ஏற்றமானது. அறுப்பவர் "பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்" என்று சொல்லி அறுக்க வேண்டும். மேலும், அறுப்பதற்கு முன்னால் ஓத வேண்டிய துஆ:
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ. إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ. لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ. اللَّهُمَّ مِنْكَ وَلَكَ.
பிஸ்மில்லாஹ் சொல்லி தக்பீர் கூற வேண்டும். மேலும் வஜ்ஜஹ்த்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்தும் சொல்வது சுன்னத்தாகும். பின்
بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ
என்று கூறி அறுக்க வேண்டும்.
அறுத்த பின்பு…
(அல்லாஹும்ம ஹாதா மின்க இலைக்க ஃபதகப்பல் மின்னீ) என்று ஓத வேண்டும்.
யார் அறுப்பது சிறப்பு ?
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا يُسَمِّي وَيُكَبِّرُ، فَذَبَحَهُمَا بِيَدِهِ.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கருப்பு வெள்ளை நிறமுடைய இரண்டு ஆட்டுக்கடாக்களை (ஈதுல் அழ்ஹாவுக்காக) அறுத்தார்கள். நான் அவர்கள் அவற்றின் கழுத்தின் பக்கவாட்டில் தங்கள் பாதத்தை வைத்து, (பிஸ்மில்லாஹ் கூறி) அல்லாஹ்வின் திருப்பெயரையும் தக்பீரையும் (அல்லாஹு அக்பர்) கூறுவதையும் கண்டேன். பின்னர் அவர்கள் அவற்றை தங்கள் கரங்களாலேயே அறுத்தார்கள்.நூல் புகாரி
குர்பானி கொடுப்பவரே அறுப்பது தான் சிறப்பு ஆனால் இரத்தம் கண்டால் பயம் போன்ற காரணங்களால் அவர்களால் அறுக்க இயலவில்லை என்றால், வேறு ஆட்களைக் கொண்டு அறுக்கச் சொல்லலாம். ஆனால், அப்படி அறுக்கும்போது அவர்கள் அந்த இடத்தில் நேரில் ஆஜராகி இருப்பது நல்லது, ஏற்றமானது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மகள் அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூறினார்கள்:
ஃபாத்திமா, எழுந்து போ! உன்னுடைய உளஹிய்யா அறுக்கப்படுகிற இடத்திற்கு அருகில் நீ செல். ஏனெனில், அதனுடைய இரத்தத்தின் முதல் சொட்டு கீழே விழும்போது நீ செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். எனவே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமான ஒரு அமல் நடக்கும் இடத்திற்கு நீ போ". மேலும், அங்கிருந்தபடி வஜ்ஜஹ்த்து… "இன்ன ஸலாத்தி..." என்ற துஆவை ஓதச் சொன்னார்கள்.
அறுக்கும் முறை
முதலில் நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும்.
குர்பானிக்கு தகுதியான உயிர் பிராணிகள்
அறுப்பவர் கிப்லாவை முன்னோக்கியவாறு நிற்க வேண்டும்.
பிராணியை கிப்லாவை முன்னோக்கிவாறு படுக்க வைக்க வேண்டும்.
அறுக்கும் முன்பு பிராணிக்கு நீர் புகட்ட வேண்டும்.
நல்ல கூரான கத்தியால் அறுக்க வேண்டும்.
பிராணியின் முன்பு கத்தியை தீட்ட கூடாது.
ஒரு பிராணியின் முன்னால் இன்னொரு பிராணியை அறுப்பது கூடாது.
இரண்டு இரத்தக்குழாய் மற்றும் குறிப்பாக மூச்சுக்குழாய், உணவு குழாய் ஆகியவை துண்டிக்கப்பட வேண்டும்.
குர்பானி பிராணியை அறுத்து முழு உயிரும் அடங்கி ஓயும் முன்பே அதன் தோலை உரிப்பதோ உறுப்புகளை வெட்டுவதோ கூடாது.
ஏதாவது ஒரு காரணத்தால் குர்பானி கொடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டால், எந்த இடத்தில் தடை இல்லையோ அந்த இடத்திற்கு நம்முடைய பிராணியை அனுப்பியோ அல்லது பணத்தைக் கொடுத்தோ நமக்காக அறுக்கச் சொல்லி ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
இறைச்சியைப் பங்கிடுதல்:
குர்பானி இறைச்சியைக் கண்டிப்பாக மூன்று பங்காக (நமக்கு ஒரு பங்கு, ஏழைகளுக்கு ஒரு பங்கு, சொந்தக்காரர்களுக்கு ஒரு பங்கு) வைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
மூன்று பங்குகள்
குர்பானி இறைச்சியை மூன்று பங்காகப் பிரிப்பது என்பது இஸ்லாத்தில் கட்டாயக் கடமை (வாஜிப்) அல்ல என்றாலும், அது மிகச் சிறந்த, வலியுறுத்தப்பட்ட வழிமுறையாகும் (முஸ்தஹப்).ஆகும்.
திருக்குர்ஆனின் ஸுரா அல்-ஹஜ்ஜில் …
لِّيَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِىْۤ اَ يَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيْمَةِ الْاَنْعَامِ فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآٮِٕسَ الْفَقِيْـرَ
தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.(அல்குர்ஆன் : 22:28)
என்று குறிப்பிடுகிறான். இந்த வசனங்களின் அடிப்படையிலேயே குர்பானி இறைச்சியை மூன்று பங்காகப் பிரிக்கும் வழமை உருவானது.
இறைச்சியை எவ்வாறு பிரிக்க வேண்டும்.
முதல் பங்கு (சொந்தத் தேவைக்கு): ஒரு பங்கு குர்பானி கொடுத்தவருடைய குடும்பத்தினரின் சொந்த உபயோகத்திற்காக. அவர்கள் அதைச் சமைத்து உண்ணலாம்; அல்லது பிற்காலத் தேவைக்காகச் சேமித்தும் வைக்கலாம்.
இரண்டாவது பங்கு (உறவினர்களுக்கு): ஒரு பங்கு தன் உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அண்டை வீட்டாருக்காக. அவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அன்பளிப்பாக (ஹதியா) இதனை வழங்கலாம். இது உறவுகளுக்குள் பாசத்தை அதிகரிக்கும்.
மூன்றாவது பங்கு (ஏழை எளியோருக்கு): ஒரு பங்கு வறியவர்கள், ஏழைகள், மற்றும் பசியால் வாடும் ஆதரவற்ற மக்களுக்காக (சதக்கா). குர்பானியின் முக்கிய நோக்கமே ஏழைகளின் பசியைத் தீர்ப்பதுதான்.
குர்பானி இறைச்சியை விற்கக் கூடாது:
குர்பானி பிராணியின் தோல், தலை அல்லது எந்தப் பொருளையுமே விற்கக் கூடாது. எல்லாவற்றையுமே இலவசமாக, தர்மமாக அல்லது உபகாரமாகத்தான் பிறருக்குக் கொடுக்க வேண்டும். அதுதான் குர்பானியின் அடையாளம்.
குர்பானியின் போது தவிர்க்க வேண்டியவை (செல்ஃபி மோகம்)
குர்பானியின் போது மிக முக்கியமான ஒழுங்கு என்னவென்றால், பிராணியை அறுத்துவிட்டு அதை அப்படியே படம் (Photo) எடுத்து, இரத்தம் வடிந்து போவது, கத்தியோடு நிற்பது போன்றவற்றை உடனடியாக Facebook அல்லது WhatsApp-ல் பதிவிடுவதைத் தயவுசெய்து தவிர்ந்துகொள்ளுங்கள். இது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள அமல்.
இப்போது இந்தச் செல்ஃபி மோகம் என்பது மிகக் கீழ்த்தரமாகப் போய்விட்டது. குர்பானி கொடுப்பது போல, இரத்தம் ஓடுவது போல செல்ஃபி எடுப்பது அநாவசியமானது. (கடந்த ஆண்டு ஹஜ்ஜில் கூட சைத்தானுக்குக் கல்லடிப்பது போல முதியவர் ஒருவர் செல்ஃபி எடுத்த புகைப்படம் வைரலானது நாம் அறிவோம். இதெல்லாம் நல்ல பழக்கமே கிடையாது, அல்லாஹ்விற்கு இதெல்லாம் பிடிப்பதில்லை).
இபாதத்துகள் நம்முடைய வேடிக்கையான விளையாட்டுச் சிந்தனைகளால் நமக்குக் கிடைக்கவிருக்கும் நன்மைகளைப் பறித்துவிடக் கூடாது. மறுமை நாளில் அல்லாஹ்வைச் சந்திக்கும்போது வெறுங்கையோடு சந்திக்கக்கூடிய அவல நிலையை நம்முடைய வேடிக்கையான பேச்சுக்களும், விளையாட்டான செயல்களும் நமக்குத் தந்துவிடக் கூடாது என்ற ஆபத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் மறுமைக்காக உழைக்கக் கூடியவர்கள், சொர்க்கமே நம் இலக்கு.
எனவே, வரக்கூடிய பெருநாளை மிக்க கண்ணியத்துடன் கடைப்பிடிப்போம். துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் கூடுதலாக நற்செயல்களைச் செய்ய முயற்சிப்போம். அல்லாஹ்விடத்திலே நாம் உளப்பூர்வமாக துஆ செய்வோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்படியாக செய்த அமல் நபியின் ஸுன்னத் தே முஅக்கதா ஆகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளும் தொடர்ந்து குர்பானி கொடுத்து வந்தார்கள் என்பதை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டில் பல மாதங்கள் அடுப்பு எரியாமல் இருந்திருக்கிறது என்பதை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கண் கலங்கியபடி பல ஹதீஸ்களில் விவரித்துள்ளார்கள்:
"முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் மதீனா வந்ததிலிருந்து அவர்கள் மரணிக்கும் வரை, தொடர்ந்து மூன்று நாட்கள் (வயிறு நிரம்பக்) கோதுமை உணவை உண்டதே இல்லை." (நூல்: புகாரி)
பல நாட்கள் வெறும் பேரீச்சம்பழமும் தண்ணீரும் மட்டும்தான் அவர்களின் உணவாக இருந்திருக்கிறது. போர்க்களங்களில் பசியின் கொடுமையால் தங்களின் வயிற்றில் கற்களைக் கட்டிக்கொண்டு வேலை செய்திருக்கிறார்கள்.
தன் சொந்த வாழ்க்கையில் இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடிகளும், பசி பட்டினியும் இருந்தபோதிலும், நபியவர்கள் மதீனாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளும் ஒரு வருடம் கூடத் தவறவிடாமல் தொடர்ந்து தங்களின் சொந்தக் கரங்களால் குர்பானி கொடுத்து வந்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
قال رسول الله صلى الله عليه وسلم : من وجد سعة فلم يضح فلا يقربن مصلانا
"யார் குர்பானி கொடுப்பதற்கான வசதியைப் பெற்றிருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ, அவர் நம்முடைய ஈத்காவிற்கு (பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்கு) அருகில் கூட வர வேண்டாம்.” நூல்.முஸ்னத் அஹ்மத்
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் நேரடியாக வர்ணனை.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِكَبْشٍ أَقْرَنَ يَطَأُ فِي سَوَادٍ، وَيَبْرُكُ فِي سَوَادٍ، وَيَنْظُرُ فِي سَوَادٍ، فَأُتِيَ بِهِ لِيُضَحِّيَ بِهِ، فَقَالَ لَهَا: "يَا عَائِشَةُ، هَلُمِّي الْمُدْيَةَ"، ثُمَّ قَالَ: "اشْحَذِيهَا بِحَجَرٍ"، فَفَعَلَتْ، ثُمَّ أَخَذَهَا، وَأَخَذَ الْكَبْشَ فَأَضْجَعَهُ، ثُمَّ ذَبَحَهُ، ثُمَّ قَالَ: "بِاسْمِ اللَّهِ، اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ، وَآلِ مُحَمَّدٍ، وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ" ثُمَّ ضَحَّى بِهِ.
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கருப்பு நிறத்தில் நடந்து, கருப்பு நிறத்தில் படுத்து, கருப்பு நிறத்தில் பார்க்கும் கொம்புள்ள ஓர் ஆட்டைக் கொண்டுவரக் கட்டளையிட்டார்கள். அது கொண்டுவரப்பட்டதும், "ஆயிஷா! கத்தியைக் கொண்டு வா" என்றார்கள். பிறகு "அதை ஒரு கல்லில் தீட்டு" என்றார்கள். நான் அவ்வாறு செய்தேன். பிறகு கத்தியைப் பெற்று, ஆட்டைச் சாய்த்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். அப்போது ""பிஸ்மில்லாஹ்! அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின், வ ஆலி முஹம்மதின், வ மின் உம்மதி முஹம்மதின்" (அல்லாஹ்வின் பெயரால்! இறைவா, முஹம்மதிடமிருந்தும், முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும், முஹம்மதின் உம்மத்தினரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக! என்று கூறி குர்பானி கொடுத்தார்கள்.
ஒரு நபர் தனிப்பட்ட முறையில் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுப்பது என்பது மிகச் சிறந்த, ஏற்றமான ஒரு செயலாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆடுகளையே குர்பானி கொடுத்தார்கள் .
வசதி வாய்ப்பு தாராளமாக உள்ளவர்கள், தங்களின் பெயரிலோ அல்லது குடும்பத்தின் பெயரிலோ ஒரு முழு ஆட்டைத் தேர்ந்தெடுத்து, அது எந்தக் குறையும் இல்லாத கம்பீரமான பிராணியாக இருக்குமாறு பார்த்து அறுப்பது மிகச் சிறந்த சுன்னத்தாகும்.
பொருளாதார ரீதியாகச் சற்று வசதி குறைவாக உள்ளவர்கள் அல்லது ஆடு வாங்குவதற்குப் போதுமான தொகை இல்லாதவர்கள் கூட்டுக் குர்பானியில் (மாடு அல்லது ஒட்டகத்தில் ஒரு பங்காக) தாராளமாக இணைந்து கொள்ளலாம்.
இஸ்மாயீல் அலை அவர்கள் அறுக்க முற்பட்ட போது அல்லாஹ் சொர்க்கத்தில் இருந்து ஆட்டைத்தான் கொடுத்து அறுக்க சொன்னான்.
குர்பானி கொடுப்போர் கவனத்திற்கு...
குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் பிறை பார்த்தது முதல் குர்பானி கொடுத்து முடியும் வரை தமது முடிகளையோ நகங்களையோ களைய வேண்டாம் நூல்- முஸ்லிம்.
தகுதியற்ற உயிர் பிராணிகள்
மறுமை நாளில் நாம் கொடுக்கும் பலிப்பிராணி அதன் கொம்புகளோடும், குளம்புகளோடும், அடர்ந்த ரோமங்களோடும் அப்படியே அல்லாஹ்விடம் வரும் என்பதால், ஊனமுள்ள பிராணிகளைத் தவிர்ப்பது கடமையாகும்.
நடக்கும்போது மிகக் கடுமையான நொண்டியாக இருந்து, அதனால் மற்ற பிராணிகளோடு சேர்ந்து நடக்க முடியாமல் பின் தங்கும் பிராணி.
முற்றிலும் குருடாக இருக்கும் பிராணி, அல்லது ஒரு கண் முற்றிலும் தெரியாத (ஒற்றைக் கண்) பிராணி.
பார்த்தவுடனேயே அது நோயுற்று மெலிந்திருக்கிறது என்று தெரியும் அளவுக்கு பலவீனமாக இருக்கும் பிராணி.
எலும்புகளில் மஜ்ஜை வற்றிப்போகும் அளவுக்கு மிகக் கொடூரமான முறையில் சதைப்பற்றின்றி மெலிந்துபோன பிராணி.
காது அல்லது வால் பாதியளவுக்கும் மேலாகக் துண்டிக்கப்பட்ட பிராணி.
கொம்பு அடிவேரோடு உடைந்தோ அல்லது கொம்பில் பெரிய ஓட்டை விழுந்தோ இருக்கும் பிராணி.
குறிப்பு: இயல்பாகவே பிறவியிலிருந்தே சில ஆடுகளுக்குக் கொம்பு வளர்வதில்லை; அப்படிப்பட்ட ஒரு வருடம் பூர்த்தியான ஆடுகளை அறுப்பதில் தவறில்லை).
குர்பானி தோல்
குர்பானி பிராணியின் தோலை ஏழை எளியோருக்கு தர்மமாக கொடுக்க வேண்டும். விற்கவும் கூடாது; அறுத்து உரித்தவருக்கு கூலியாக கொடுக்கவும் கூடாது.
உண்ணத்தகாத ஏழு உறுப்புகள்
1) ஆண்குறி 4) நீர்ப்பை 2) பெண்குறி 5) இரத்தம் 3) இரண்டு விதைகள் 6) கழலை 7) பித்தப்பை
அல்லாஹ்வின் சின்னங்களை மதிக்க வேண்டும்.
சில இடங்களில் ஆடுகளை வைத்து மோதவிட்டு விளையாட்டுக்கள் நடைபெறுகிறது அது கூடாது.
நபி ஸல்லஸ்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாயில்லாப் பிராணிகளுக்கு இடையே மோத விடுவதை தடை விதித்தார்கள். (திர்மிதி)
குர்பானி என்பது வெறுமனே ஒரு பிராணியை வாங்கி, அதை அறுத்து, அதன் இறைச்சியை சமைத்து உண்பதோடு முடிந்துவிடக்கூடிய ஒரு பழக்கவழக்கம் அல்ல. அது நம் தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மாபெரும் தியாக வரலாறு, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் ஹாபிலின் தூய்மையான உள்ளம் மற்றும் நம் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த உன்னதமான வழிமுறை ஆகியவற்றை நமக்கு நினைவூட்டும் ஓர் உன்னத வழிபாடு ஆகும்.
அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது மாட்டின் எடையையோ, ஆட்டின் விலையையோ அல்ல; மாறாக, நம் உள்ளத்தில் இருக்கும் தூய்மையான பயபக்தியை (தக்வாவை) மட்டும்தான்.
நம்முடைய இபாதத்துகளில் முகஸ்துதியோ, பெருமையோ, சமூக ஊடக விளம்பரங்களோ (செல்ஃபி மோகம்) கலந்துவிடாமல், அல்லாஹ்விற்காக மட்டும் தூய்மையான எண்ணத்துடன் நிறைவேற்றுவோம்.
குர்பானி இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கும், நம் உறவினர்களுக்கும் அன்போடு வழங்கி, சமுதாயத்தில் பசியையும், பகைமையையும் போக்க பாடுபடுவோம்.
நபியவர்களின் சுன்னத் முறைப்படி கத்திகளை நன்றாகக் கூர்மையாக்கி, பிராணிகளுக்கு வீண் வேதன தராமல் மென்மையான முறையில் குர்பானியை நிறைவேற்றுவோம்.
இந்தத் துல் ஹஜ் மாதத்தின் புனிதமான நாட்களை அல்லாஹ் நம் அனைவருக்கும் பரக்கத் உள்ளதாக ஆக்கி அருள் புரிவானாக. நாம் செய்யக்கூடிய ஹஜ்ஜின் கடமைகளையும், நம்முடைய தூய்மையான தக்வாவோடு கூடிய குர்பானித் தியாகங்களையும் அல்லாஹ் தன் பேரருளால் முழுமையாக ஏற்றுக் கொள்வானாக (கபூல் செய்வானாக)!
"இறைவா! எங்களிடமிருந்து (எங்களின் நல்அமல்களை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (அனைத்தையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்.” ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக