வியாழன், 7 மே, 2026

ஹஜ் உம்ராவின் ரகசியங்கள்

 


ஹஜ் உம்ராவின் ரகசியங்கள் 


إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ.

وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.

وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى أَشْرَفِ الْمُرْسَلِينَ، سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ اما بعد. بسم الله الرحمن الرحيم

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ

منْ حجَّ فَلَم يرْفُثْ، وَلَم يفْسُقْ، رجَع كَيَومِ ولَدتْهُ أُمُّهُ. متفقٌ عَلَيْهِ


துல்கஅதா (Dhul-Qadah) மாதம் இஸ்லாமிய மாதங்களில் மிகுந்த கண்ணியமும், ஆன்மீக முக்கியத்துவமும் வாய்ந்த ஒரு மாதமாகும்.


அல்லாஹ் புனிதமாக்கியிருக்கிற நான்கு மாதங்களில் ஒன்றாகும். 


ஹஜ்ஜுடைய அமல்களுக்கான நாட்களும் அங்கிருந்து தான் ஆரம்பமாகும்.


உலகம் முழுவதும் இருந்து புனிதமான ஹஜ் பயணத்திற்கு கிளம்பி கொண்டிருக்கிறார்கள் அல்லாஹ் அவர்களுடைய ஹஜ் பயணத்தை இலகுவாக்கி, ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்குவானாக. அல்லாஹ் நம் எல்லோருக்கும் ஹஜ் உம்ரா செய்யும் பாக்கியத்தை தந்தருள் புரிவானாக. 


புனிதமான கஃபாவை நோக்கிச் செல்லும் இந்தப் பயணம் வெறும் உடல் சார்ந்த பயணம் மட்டுமல்ல; இது ஆன்மாவை அதன் படைப்பாளனிடம் அழைத்துச் செல்லும் ஒரு உன்னதப் பயணமாகும்.


உலகில் நாம் தொழும்போதெல்லாம் ஒரு திசையை (கிப்லா) நோக்கித் தொழுகிறோம். ஆனால் கஃபாவின் முன்னால் நிற்கும் போது, அந்தத் திசையின் மையப்புள்ளியில் நிற்கிறோம். "இறைவா, இதுவரை உன்னைப் பார்க்காமல் வணங்கினேன், இப்போது உன் இல்லத்தின் முன்னால் நிற்கிறேன்" என்ற அந்த உணர்வு ஆன்மாவை உருகச் செய்யும் உன்னத தருணம்.


"லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்..." (இதோ நான் வந்துவிட்டேன் இறைவா!) இந்த முழக்கம் வெறும் வார்த்தையல்ல. ஒரு எஜமானன் அழைக்கும் போது, எல்லா வேலையையும் உலகத்தையும் அப்படியே போட்டுவிட்டு ஓடிவரும் ஓர் அடிமையின் பணிவு அது. தன் இருப்பையே இறைவனிடம் ஒப்படைக்கும் ஒரு சரணாகதி.


உலகில் நாம் அணியும் உடைகள் நம்முடைய அந்தஸ்தையும், சாதியையும், பொருளாதாரத்தையும் காட்டுகின்றன. ஆனால் ஹஜ்ஜில் அணிந்திருக்கும் அந்த வெள்ளை ஆடை (இஹ்ராம்), ஆன்மாவை எல்லா வேஷங்களிலிருந்தும் விடுவிக்கிறது. "நீ யார்?" என்ற கேள்விக்கு "நான் உன்னுடைய அடியான்" என்பதைத் தவிர வேறு பதில் அங்கு இல்லை.


மக்காவில் அல்லாஹ்வின் முதல் ஆலயத்தின் கம்பீரத்தைக் கண்டு ஆன்மா அஞ்சி நடுங்கித் தூய்மை பெறுகிறது.


மதீனாவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரன்பையும் மென்மையையும் கண்டு ஆன்மா அமைதி பெற்று ஆறுதலடைகிறது.


இந்த ஆன்மீகப் பயணம் ஒரு ஹாஜியை முழுமையாக மாற்றிவிடுகிறது. அவர் அங்கிருந்து திரும்பும் போது ஒரு புதிய மனிதராக, புதிய பார்வையோடு திரும்புகிறார்.


ஹஜ்ஜின் உயிர்நாடி அரஃபா மைதானம். அங்குதான் ஒரு மனிதன் தன் படைப்பாளனிடம் மிக நெருக்கமாக வருகிறான். அங்குதான் ஷைத்தான் மிகவும் சிறுமையுற்று, கேவலப்பட்டுத் தலைகுனிந்து நிற்கிறான். ஏன் தெரியுமா? அவன் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு ஒரு மனிதனைச் செய்ய வைத்த பாவங்களை, அல்லாஹ் அந்த ஒரு நொடியில் "மன்னித்துவிட்டேன்" என்று சொல்லித் துடைத்தெறிவதைப் பார்த்து ஷைத்தான் கதறுகிறான்.


அறிஞர்கள் ஒரு முக்கியமான வாசகத்தைக் குறிப்பிடுவார்கள்:

"அரஃபா மைதானத்தில் நின்று துஆ செய்துவிட்டு, 'அல்லாஹ் என் பாவங்களை மன்னிக்க மாட்டான்' என்று எவன் ஒருவன் நினைக்கிறானோ, அவனே உலகின் பெரும் பாவி ஆவான்.”


அல்லாஹ் தன் ரஹ்மத்தை (கருணையை) நூறு பங்காகப் பிரித்து, அதில் ஒரு பங்கை மட்டுமே இந்த உலகிற்கு வழங்கியுள்ளான். மீதமுள்ள 99 பங்குகளையும் மறுமைக்காகவும், தன் அடியார்களுக்காகவும் வைத்துள்ளான். இவ்வளவு பெரிய கருணையாளனை "மன்னிக்க மாட்டான்" என்று நினைப்பது அவனை இழிவுபடுத்துவதற்குச் சமம்.

الْحَجُّ عَرَفَةُ

إِنَّ اللَّهَ يُبَاهِي بِأَهْلِ عَرَفَةَ مَلَائِكَةَ السَّمَاءِ، فَيَقُولُ: انْظُرُوا إِلَى عِبَادِي هَؤُلَاءِ، جَاءُونِي شُعْثًا غُبْرًا مسند أحمد

"அல்-ஹஜ்ஜு அரஃபா" (அரஃபாவே ஹஜ்) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "நிச்சயமாக அல்லாஹ் அரஃபா மைதானத்தில் இருப்பவர்களைக் குறித்து வானவர்களிடம் பெருமை பாராட்டிச் சொல்கிறான்: 'என்னுடைய இந்த அடியார்களைப் பாருங்கள்! அவர்கள் கலைந்த தலைகளோடும், புழுதி படிந்த உடலோடும் (என்னையே நோக்கமாகக் கொண்டு) என்னிடம் வந்திருக்கிறார்கள்'.”


அல்லாஹ்விடம் நாம் வைக்கும் மிகச்சிறந்த இபாதத் (வணக்கம்) என்ன தெரியுமா? "நிச்சயமாக என் ரப்பு என்னை ஏமாற்ற மாட்டான், அவன் என் பாவங்களை மன்னித்துவிடுவான்" என்று அவன் மீது வைக்கும் அந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான்.


يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَحُجُّ أَغْنِيَاءُ النَّاسِ لِلنُّزْهَةِ، وَأَوْسَاطُهُمْ لِلتِّجَارَةِ، وَقُرَّاؤُهُمْ لِلرِّيَاءِ وَالسُّمْعَةِ، وَفُقَرَاؤُهُمْ لِلْمَسْأَلَةِ

இறுதிக்காலத்தில் ஹஜ்ஜின் நிலை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"மக்களுக்கு ஒரு காலம் வரும், அப்போது நான்கு நோக்கங்களுக்காக மக்கள் ஹஜ் செய்வார்கள்..."

1. ஆட்சியாளர்கள் (மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள்) - அலங்காரம்

(للنزهة والفرجة - சுற்றுலாவிற்காகவும், அந்தஸ்திற்காகவும்)

ஆட்சியாளர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும் ஹஜ்ஜைப் புனிதமான ஒரு வணக்கமாகப் பார்ப்பதை விட, ஒரு சுற்றுலாவாகவோ (Tourism) அல்லது ஒரு கவுரவமான பயணமாகவோ கருதுவார்கள்.


ஆடம்பரமான தங்குமிடங்கள், விஐபி வசதிகள் மற்றும் "நான் ஹஜ் செய்துவிட்டேன்" என்ற அரசியல் அந்தஸ்தைப் பெறுவதே இவர்களின் நோக்கமாக இருக்கும். இறைவணக்கத்தை விட இவர்களின் பயணத்தில் அலங்காரமே மேலோங்கி நிற்கும்.


2. செல்வந்தர்கள் - வியாபாரம்(للتجارة - லாப நோக்கத்திற்காக)

வசதி படைத்தவர்கள் ஹஜ்ஜிற்குச் செல்லும்போது, அந்தப் பயணத்தைப் பொருளாதார லாபத்திற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவார்கள்.


ஆன்மீகத் தேடலை விட, "மக்காவிலிருந்து எதை வாங்கி வந்து விற்கலாம்?" அல்லது "அங்கே என்ன தொழில் வாய்ப்புகள் உள்ளன?" என்ற சிந்தனை மேலோங்கி இருக்கும். இபாதத்தை விட வியாபாரமே இவர்களின் முதன்மை நோக்கமாக மாறும்.


3. ஏழைகள் - யாசகம்(للمسألة - உதவி பெறுவதற்காக)

வறுமையில் உள்ளவர்கள் இறைவனைத் தேடிச் செல்வதற்குப் பதிலாக, அங்கிருக்கும் செல்வந்தர்களிடம் உதவி பெறுவதையே நோக்கமாகக் கொண்டு ஹஜ்ஜிற்குச் செல்வார்கள்.


ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்றுவதை விட, பிறரிடம் கையேந்தித் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலேயே இவர்களின் கவனம் இருக்கும்.


4. உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) - முகஸ்துதி (புகழ்)

(للسمعة والرياء - முகஸ்துதிக்காகவும், விளம்பரத்திற்காகவும்)

மார்க்கத்தைக் கற்றறிந்தவர்கள் தங்களின் கல்வியை இறைவனுக்காகப் பயன்படுத்துவதை விடுத்து, மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக ஹஜ் செய்வார்கள்.


தான் ஒரு "ஹாஜி" என்று அழைக்கப்படுவதையும், தனது பயணத்தைப் பற்றி ஊடகங்களில் அல்லது மேடைகளில் விளம்பரப்படுத்திப் பெருமை தேடுவதையும் இவர்கள் விரும்புவார்கள். இவர்களின் அமல்களில் 'ரியா' எனும் முகஸ்துதி கலந்துவிடும்.


பலமுறை ஹஜ் செய்தவர்கள் நம்மிடையே இருக்கலாம். ஆனால், ஹஜ்ஜின் வெற்றி என்பது எத்தனை முறை சென்றோம் என்பதில் இல்லை; எத்தனை முறை நம் உள்ளம் இறைவனுக்காக உருகியது என்பதில்தான் இருக்கிறது.


அறிஞர்கள் கூறுகிறார்கள்:

"ஆயிரம் மைல்கள் கடந்து கஃபாவிற்குச் செல்வதை விட, உனது அகந்தையை விட்டு ஒரு அடி வெளியே வருவது மேலானது."


ஹஜ் கபூல் செய்யப்பட்டதன் அடையாளங்கள் 


ஹஜ்ஜுக்கு முன்னால் இருந்த மனிதராக அவர் இருக்கக்கூடாது. பாவமான காரியங்களிலிருந்து அவர் முழுமையாக விலகியிருக்க வேண்டும்.


ஹஜ்ஜுக்குப் பின் உலகத்தின் மீதான ஆசை குறைந்து, மறுமையின் மீதான ஆர்வம் அதிகரிக்க வேண்டும்.


பிறரிடம் கனிவாக நடப்பது, கோபத்தைக் குறைப்பது, புறம் பேசுவதைத் தவிப்பது போன்ற நற்குணங்கள் அவரிடம் குடியேற வேண்டும்.


ஹஜ்ஜுக்குப் பின் தொழுகையிலும், திக்ரிலும் அவருக்கு ஈடுபாடு அதிகமாக வேண்டும்.


மௌலானா ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்:-

ஒருவர் பலமுறை ஹஜ் செய்துவிட்டு வந்து, "நான் ஏழு முறை கஃபாவைச் சுற்றி வந்தேன்" என்று பெருமையாகச் சொன்னார். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: "நீ கஃபாவைச் சுற்றி வந்தாய் சரி, ஆனால் உனது இதயத்திற்குள் அல்லாஹ்வை அமர வைத்தாயா? கஃபாவை விட ஒரு முஃமினுடைய இதயம் மேலானது. அந்த இதயத்தில் இன்னும் பொறாமையும், பகையும் இருந்தால் நீ செய்த ஹஜ்ஜினால் என்ன பயன்?"

நாம் எத்தனை ஹஜ் செய்தோம் என்ற பட்டியலோடு அல்லாஹ்விடம் செல்லப் போவதில்லை. "யா அல்லாஹ்! நான் பாவியாக வந்தேன், நீ என்னை ஏற்றுக்கொண்டாயா?" என்ற பணிவோடுதான் செல்ல வேண்டும்.

ஒரு ஹஜ் செய்தாலும் அது 'மப்ரூராக' (ஒப்புக்கொள்ளப்பட்டதாக) இருக்க வேண்டும்.


அந்த ஒரு ஹஜ் நம்மைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

எனவே, எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதை விட, நம்முடைய நிய்யத் எண்ணத்தில் கவனம் செலுத்தி அமல் செய்வோம்.


லப்பைக் சொல்ல அஞ்சிய இமாம்

இமாம் ஜைனுல் ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து, தல்பியா (லப்பைக்) சொல்ல வேண்டிய இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தபோது, அவர்களின் முகம் மஞ்சள் நிறமாக மாறி, உடல் நடுங்கத் தொடங்கியது. அவர்களால் தல்பியா சொல்ல முடியவில்லை.

அவர்களுடன் இருந்தவர்கள் கேட்டார்கள்:

"ஏன் நீங்கள் இன்னும் தல்பியா சொல்லவில்லை? அனைவரும் சொல்கிறார்களே!"

அதற்கு அந்த இமாம் அவர்கள் சொன்ன பதில்

" 'லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்' (இதோ வந்துவிட்டேன் இறைவா) என்று நான் சொல்லும்போது, அதற்குப் பதிலாக அல்லாஹ் 'லா லப்பைக் வலா ஸஃதைக்' (உன் வருகையை நான் ஏற்கவில்லை, உனக்கு நற்பேறு இல்லை) என்று சொல்லிவிடுவானோ என்று நான் அஞ்சுகிறேன்!"


அவர்கள் பயத்துடன் தல்பியா சொல்ல முயன்றபோது, அவர்களின் நாவிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. அவர்கள் மயக்கமுற்று விழுந்துவிடும் நிலைக்குச் சென்றார்கள்.


"நான் உதட்டளவில் 'வந்துவிட்டேன்' என்று சொல்கிறேன். ஆனால் என் உள்ளம் அந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறதா? என் ரப்பு என்னைப் பார்த்து 'நீ வரவில்லை, உன் வருகையை நான் அங்கீகரிக்கவில்லை' என்று சொல்லிவிட்டால் என் கதி என்னவாகும்?" என்ற அந்தப் பேரச்சமே அவர்களை நடுங்க வைத்தது.

இறுதியில் அவர்கள் மிகுந்த சிரமத்துடன் "லப்பைக்..." என்று முழங்கியபோது, அந்த இடமே அவர்களின் அழுகுரலால் நிறைந்திருந்தது. அந்தப் பயணம் முழுவதும் அவர்கள் இறைவனின் அச்சத்திலும், அவனது கருணையை எதிர்பார்த்துமே கழித்தார்கள்.


தல்பியா என்பது வெறும் சத்தம் அல்ல; அது நம் உள்ளத்தின் ஓசை. "யா அல்லாஹ்! உலகத்தை விட்டுவிட்டு உன்னிடம் வந்துவிட்டேன்" என்று சொல்லும் நாம், உண்மையிலேயே உலக ஆசைகளை விட்டுவிட்டுத் தான் சொல்கிறோமா?


இமாம் ஜைனுல் ஆபிதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மிகச்சிறந்த வணக்கசாலி (அதனால்தான் அவருக்கு 'ஜைனுல் ஆபிதீன்' - வணக்கசாலிகளின் ஆபரணம் என்று பெயர்). அவ்வளவு பெரிய வணக்கசாலியே இப்படி நடுங்கினால், பாவிகளாகிய நமது நிலை என்ன?


இஹ்ராம் ஆடை அணிவதை விட, நம் உள்ளத்திற்கு 'தக்வா' எனும் ஆடையை அணிவிப்பதே முக்கியம்.


இஹ்ராம். 

இதுவரை ஹலால் ஆனது இனி ஹராம்."


ஒரு ஹாஜி மீக்காத்தில் குளித்து, தனது சாதாரண உடைகளைக் களைந்துவிட்டு, வெள்ளை ஆடையை (இஹ்ராம்) அணியும் அந்த நிமிடம் முதல் அவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல; அவர் அல்லாஹ்வின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்ட ஒரு போர்க்களத்தில் இருக்கிறார்.


இதன் ரகசியம் என்னவென்றால்:

"யா அல்லாஹ்! இதுவரை என் வாழ்க்கையில் எதுவெல்லாம் அனுமதிக்கப்பட்ட (ஹலால்) ஒன்றாக இருந்ததோ, நீ சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக அவை அனைத்தையும் எனக்கே நான் ஹராம் (தடுக்கப்பட்டதாக) ஆக்கிக்கொள்கிறேன்."


தலை சீவுதல் மற்றும் முடி களைதல் பொதுவாக இது அனுமதிக்கப்பட்டது. ஆனால் இஹ்ராமில் இது கூடாது. 

அத்தர் பூசுவது சுன்னத்தான காரியம். ஆனால் இஹ்ராம் அணிந்த பின் அது தடுக்கப்பட்டது.

வேட்டையாடுதல் அல்லது செடி கொடிகளைச் சிதைத்தல்: இதுவும் ஹராம் ஆக்கப்படுகிறது.

ஹலாலான பந்தம் கூட இஹ்ராமின் போது தடுக்கப்படுகிறது.


இதன் மூலம் கிடைக்கும் பாடம் என்ன?

இதன் மூலம் அல்லாஹ் நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்:

"அடியனே! உனக்கு ஹலாலான விஷயங்களையே நான் சொன்னதற்காக உன்னால் தியாகம் செய்ய முடிகிறது என்றால், நான் தடுத்த (ஹராமான) வட்டி, பொய், புறம், அநியாயம் போன்றவற்றை உன்னால் ஏன் விட முடியாது?"

இது ஒரு பயிற்சி. சில நாட்களுக்கு ஹலாலானவற்றையே தியாகம் செய்யும் ஹாஜி, ஊர் திரும்பிய பின் ஹராமான பக்கமே போகக் கூடாது என்ற உறுதியை எடுக்க வேண்டும்.


இஹ்ராம் என்பது வெறும் துணி அல்ல; அது நம் இச்சைகளை (நப்ஸ்) அடக்கும் ஒரு கயிறு. "என் விருப்பப்படி நான் வாழமாட்டேன்; என் ரப்பு சொன்னபடிதான் வாழ்வேன்" என்ற பிரகடனம்.


ஜுனைதுல் பக்தாதி (ரஹ்) - ஹஜ்ஜின் உண்மையை உணர்த்தியது


ஒருவர் ஹஜ் முடித்துவிட்டு இமாம் ஜுனைதுல் பக்தாதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைச் சந்திக்க வந்தார். அப்போது இமாம் அவர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள்:


இமாம்: "நீ ஹஜ்ஜிற்காகப் புறப்பட்டுச் சென்றாயே, உன் கடந்த கால பாவங்களை அங்கேயே விட்டுவிட்டு வந்ததை உணர்ந்தாயா?"

அவர்: "இல்லை."

இமாம்: "அப்படியானால் நீ ஹஜ்ஜிற்காகப் பயணமே செய்யவில்லை."


இமாம்: "நீ இஹ்ராம் ஆடை அணிந்தாயே, அப்போது உன் உடலில் இருந்த அழுக்குகள் (பாவங்கள்) நீங்கி, உன் உள்ளம் தூய்மையானதை உணர்ந்தாயா?"

அவர்: "இல்லை."

இமாம்: "அப்படியானால் நீ ஆடையை மாற்றினாயே தவிர, இஹ்ராம் அணியவில்லை."


இமாம்: "நீ 'லப்பைக்' சொன்னாயே, அதற்கு உன் இறைவனிடமிருந்து பதில் வருவதை உணர்ந்தாயா?"

அவர்: "இல்லை."

இமாம்: "அப்படியானால் நீ தல்பியாவே சொல்லவில்லை."


இமாம்: "அரஃபா மைதானத்தில் நின்றாயே, 'அரஃபா' என்றால் 'அறிதல்' என்று பொருள். அங்கே நீ உன் அல்லாஹ்வை அறிந்தாயா? அவனது பேரொளியைக் கண்டாயா?"

அவர்: "இல்லை."

இமாம்: "அப்படியானால் நீ அரஃபா மைதானத்திற்கே செல்லவில்லை."


இமாம்: "நீ ஷைத்தானுக்குக் கல் எறிந்தாயே, அப்போது உனக்குள் இருந்த தீய குணங்களையும், சைத்தானின் ஊசலாட்டங்களையும் கல்லெறிந்து விரட்டியதை உணர்ந்தாயா?"

அவர்: "இல்லை."

இமாம்: "அப்படியானால் நீ வெறும் கற்களைத்தான் எறிந்தாய்; ஷைத்தானுக்குக் கல் எறியவில்லை."


இமாம்: "நீ ஆடு/மாடு பலியிட்டாயே, அப்போது உன்னுடைய 'நப்ஸ்' எனும் இச்சையை இறைவனுக்காகப் பலியிட்டாயா?"

அவர்: "இல்லை."

இமாம்: "அப்படியானால் நீ குர்பானி கொடுக்கவே இல்லை."


இறுதியில் இமாம் அவர்கள் வருத்தத்துடன் சொன்னார்கள்:

"சகோதரரே! நீர் மக்காவிற்குச் சென்றாய், கஃபாவைச் சுற்றினாய், ஓடினாய், திரும்பினாய். ஆனால் நீ ஹஜ் செய்யவில்லை. மீண்டும் ஒருமுறை செல்; இப்போது நான் சொன்ன இந்த ஆன்மீக உணர்வுகளோடு ஹஜ் செய். அதுவே உண்மையான ஹஜ்!”


கஃபாவைச் சுற்றும்போது நம் இதயம் இறைவனைச் சுற்ற வேண்டும்.

ஸஃபா-மர்வா ஓடும்போது நம் தேடல் இறைவனை நோக்கியே இருக்க வேண்டும்.

கல் எறியும்போது நமக்குள் இருக்கும் கோபம், பொறாமை, பேராசை ஆகியவற்றின் மீது கல் எறிய வேண்டும்.


ஹஜருல் அஸ்வத்: சுவனத்தின் பேரொளி

ஹஜருல் அஸ்வத் என்பது வெறும் கல் அல்ல; அது மண்ணுலகில் இருக்கும் ஒரு விண்ணுலகப் பொருள். 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"ஹஜருல் அஸ்வத் சுவனத்திலிருந்து இறக்கப்பட்டதாகும். அது பாலை விட வெண்மையாக இருந்தது. ஆனால் ஆதமின் சந்ததியினரின் பாவங்கள் அதனை கருப்பாக மாற்றிவிட்டன." (திர்மிதி)


இது நமக்குச் சொல்லும் பாடம் என்னவென்றால், ஒரு கல்லின் நிறத்தையே மாற்றும் வலிமை பாவங்களுக்ககு உண்டு என்றால், நம்முடைய மென்மையான இதயங்களை பாவங்கள் எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.


இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் 

ஹஜருல் அஸ்வத்திற்கும் ஒரு முஃமினுக்கும் இடையிலான ஆன்மீக உடன்படிக்கையை விளக்குகிறது:

«الحَجَرُ الأَسْوَدُ يَمِينُ اللهِ فِي الأَرْضِ، يُصَافِحُ بِهَا خَلْقَهُ، كَمَا يُصَافِحُ الرَّجُلُ أَخَاهُ»


"ஹஜருல் அஸ்வத் என்பது பூமியில் அல்லாஹ்வின் (வலக்கையைப் போன்றது) பிரதிநிதியாகும். ஒரு மனிதன் தனது சகோதரனுக்குக் கைகொடுப்பது போல, அல்லாஹ் அதன் மூலம் தனது படைப்புகளைச் சந்திக்கிறான் (அவர்களது உடன்படிக்கையை ஏற்றுக்கொள்கிறான்)."

இதன் பொருள் அல்லாஹ்விற்கு உருவம் இருக்கிறது என்பதல்ல; மாறாக ஒரு மன்னனிடம் விசுவாசப் பிரமாணம் எடுக்கும்போது அவனது கையைப் பிடித்து உறுதிமொழி எடுப்பது போல, ஒரு ஹாஜி அந்தக் கல்லைத் தொடும்போது "யா அல்லாஹ்! நான் உனக்கே அடிமை" என்ற ஒப்பந்தத்தை இறைவனிடம் புதுப்பிக்கிறார் என்பது அர்த்தம்.


நாம் ஏன் அந்தக் கல்லை முத்தமிட வேண்டும்? அதற்கு உமர் (ரலி) அவர்கள் கொடுத்த விளக்கம் மிக அழகானது. அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை நோக்கிச் சொன்னார்கள்:

"நீ ஒரு கல் என்பது எனக்குத் தெரியும். உன்னால் நன்மையோ தீமையோ செய்ய முடியாது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால், நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்."

எனவே, ஒரு ஹாஜி அந்தக் கல்லை முத்தமிடும்போது அல்லது அதை நோக்கி சைகை (இஸ்திலாம்) செய்யும் போது, அவர் தனது ஆசைக்காக அதைச் செய்யவில்லை; மாறாக தனது நேசர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றுவதற்காகச் செய்கிறார். அங்கே கல்லை விட நபியின் மீதான காதலே மேலோங்கி நிற்கிறது.


இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் 


وَاللَّهِ لَيَبْعَثَنَّهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، لَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا، وَلِسَانٌ يَنْطِقُ بِهِ، يَشْهَدُ عَلَى مَنْ اسْتَلَمَهُ بِحَقٍّ سنن الترمذي

"மறுமை நாளில் இந்தக் கல்லுக்கு இரு கண்கள் வழங்கப்படும்; பேசும் நாவுகள் கொடுக்கப்படும். யார் இதனை உண்மையான ஈமானோடு தொட்டார்களோ, அவர்களுக்கு ஆதரவாக இது சாட்சி சொல்லும்.”


தவாஃப்


மாபெரும் ஞானி மஃரூஃப் அல்-கர்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒருமுறை கஃபாவில் தவாஃப் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் மிக வேகமாக, அவசர அவசரமாக தவாஃப் செய்துகொண்டிருப்பதைக் கண்டார்கள். தவாஃபை முடித்த அந்த மனிதரை அழைத்து இமாம் அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.


இமாம்: "சகோதரரே! இப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?"

அவர்: "அல்லாஹ்வின் இல்லத்தை தவாஃப் செய்தேன்."


அப்போது இமாம் அவர்கள் ஒரு உதாரணத்தைச் சொன்னார்கள்:

இமாம்: "சகோதரரே! உமது நாட்டின் பல்க் (Balkh) நகரத்து மன்னர் உமது முன்னால் நின்றால் அல்லது அவர் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால், நீ இவ்வளவு வேகமாக ஓடுவாயா? அல்லது அவசரப்படுவாயா?"

அவர்: "இல்லை இமாம் அவர்களே! மன்னர் முன்னால் நான் நின்றால் மிகவும் கண்ணியத்தோடும், நிதானத்தோடும், அசைவற்று நின்றிருப்பேன்."


"சுபஹானல்லாஹ்! ஒரு சாதாரண மண்ணுலக மன்னனுக்காக நீ காட்டும் அந்த நிதானத்தையும், கண்ணியத்தையும் அகில உலகங்களையும் படைத்து ஆளும் அல்லாஹ்வுக்காகக் காட்ட மாட்டாயா? நீ யாருடைய இல்லத்தைச் சுற்றுகிறாயோ, அந்த ரப்பு உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்துவிட்டாயா? நிதானமாகச் செல்! நீ எதைச் செய்கிறாய் என்பதை உணர்ந்து (விளங்கி) செய்தால், உன்னால் ஒரு நாளைக்கு ஒரு தவாஃப் கூடச் செய்ய முடியாது!"


தவாஃப் என்பது தொழுகையைப் போன்றது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "கஃபாவைத் தவாஃப் செய்வது தொழுகையைப் போன்றது. ஆனால் அதில் நீங்கள் பேச அனுமதிக்கப்படுகிறீர்கள்." தொழுகையில் நாம் காட்டும் அந்த 'குஷூஉ' (உள்ளச்சம்) தவாஃபிலும் இருக்க வேண்டும்.


எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணமே முக்கியம்


மகாமு இப்ராஹீம் 

மகாமு இப்ராஹீம் என்பது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கஃபாவைக் கட்டும்போது ஏறி நின்று வேலை செய்த ஒரு கல்லாகும்.

கஃபாவின் சுவர் உயரமாக உயரமாக, இந்தக் கல்லும் தானாகவே உயர்ந்து சென்றது.

ஒரு மென்மையான மெழுகில் பாதம் பதிவது போல, அந்தக் கல்லில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதச் சுவடுகள் பதிந்தன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும், இன்றும் அந்தப் பாதச் சுவடுகளை நாம் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் இருப்பதைக் காணலாம்.


தவாஃப் முடித்த பிறகு மகாமு இப்ராஹீமிற்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத் தொழுவது واجب (வாஜிப் - கட்டாயம்) அல்லது சுன்னத் ஆகும்.


அல்லாஹ் குர்ஆனில் நேரடியாகவே கட்டளையிடுகிறான்:

وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى

"மகாமு இப்ராஹீமைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்." (அல்-பகரா: 125)

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தை நாம் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ளக் கூடாதா?" என்று கேட்டார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அந்த எண்ணத்தையே அல்லாஹ் குர்ஆன் வசனமாக இறக்கிவைத்துப் புனிதப்படுத்தினான்.


"இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலடித் தடம் பாதுகாக்கப்பட்டது போல, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலடித் தடம் ஏன் மக்காவில் பாதுகாக்கப்படவில்லை?" என்று பலர் கேட்கலாம். இதற்கு மார்க்க அறிஞர்கள் சில உன்னதமான காரணங்களைக் கூறுகிறார்கள்:


முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்து (The Level of Love): இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடையாளம் ஒரு கல்லில் பதிந்தது. ஆனால், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடையாளம் ஒரு கல்லிலோ அல்லது ஒரு இடத்திலோ மட்டும் பதியவில்லை; அது கோடிக்கணக்கான முஃமின்களின் இதயங்களில் பதிந்துள்ளது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்துவிட்ட பின், மக்கள் அவர்களின் காலடித் தடத்தையே கடவுளாக வணங்கத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் அல்லாஹ் மிகவும் கவனமாக இருந்தான். முந்தைய நபிமார்களின் அடையாளங்களை மக்கள் காலப்போக்கில் தவறாகப் பயன்படுத்திய வரலாறு உண்டு.


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தடம் ஓரிடத்தில் மட்டுமே இருக்கிறது. ஆனால், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொல்லப்படும் இடமெல்லாம் அவர்களின் ஆன்மீகப் பிரசன்னம் இருக்கிறது. ஒரு ஹாஜி மகாமு இப்ராஹீமிற்குச் சென்றால் தான் அந்தத் தடத்தைப் பார்க்க முடியும். ஆனால், ஒரு முஃமின் உலகின் எந்த மூலையில் அமர்ந்து தொழுதாலும், அவர் தனது அத்தஹிய்யாத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தனது இதயக்கண்ணால் தரிசிக்க முடியும்.


இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:"நீ 'அஸ்ஸலாமு அலைக்க' என்று சொல்லும் போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உனது முன்னால் நேரில் இருப்பதைப் போன்ற உணர்வோடு சொல். ஏனெனில், அவர்களுக்குச் சொல்லப்படும் ஸலாமிற்கு அவர்கள் பதில் சொல்கிறார்கள்."

அதாவது, ஒரு கல்லில் காலடித் தடத்தைப் பார்ப்பதை விட, அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமது ஸலாமிற்குப் பதில் சொல்வது என்பது அல்லாஹ் நம் நபிக்குக் கொடுத்த மிக உயரிய அந்தஸ்தாகும்.


கௌஸுல் அஃழம் (ரஹ்) அவர்களின் மாணவரும் ஹஜ் பயணமும்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவர் ஒருவர் ஹஜ்ஜிற்குப் புறப்படத் தயாரானார். அவர் தனது ஆசிரியரிடம் வந்து விடைபெறும்போது ஒரு வேண்டுகோள் வைத்தார்.


"என் கண்ணியமிக்க குருநாதரே! நான் புனித ஹஜ் பயணத்திற்காகப் புறப்படுகிறேன். எனக்காகத் துஆ செய்யுங்கள். நான் அங்கு சென்று கேட்கும் துஆக்கள் அனைத்தும் கபூல் (அங்கீகரிக்கப்பட) வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்ளுங்கள்."


அப்போது கௌஸுல் அஃழம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அந்த மாணவரின் ஆன்மீக முதிர்வைச் சோதிக்கவும், அவருக்கு ஒரு பேருண்மையை உணர்த்தவும் விரும்பினார்கள்.


கௌஸுல் அஃழம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி: "மகனே! உனது துஆக்கள் அனைத்தும் கபூல் ஆகிவிட்டால் என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியுமா?"

மாணவர்: (ஆச்சரியத்துடன்) "குருநாதரே! துஆ கபூல் ஆனால் கேட்டதெல்லாம் கிடைக்குமே! அதைவிட வேறு என்ன வேண்டும்?"


குருநாதரின் பதில்: "மகனே! ஒரு அடியானின் துஆக்கள் அனைத்தும் கபூல் ஆகிவிட்டால், பிறகு அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இருக்காது. அவனது ஒவ்வொரு சொல்லும் இபாதத்தாக (வணக்கமாக) மாறிவிடும். ஆனால், அதன் பிறகு உன்னால் உனது சுய விருப்பத்திற்காக எதையும் கேட்கத் தோன்றாது. ஏனென்றால், உனது விருப்பம் என்பது அல்லாஹ்வின் விருப்பத்தோடு கரைந்துவிடும்."


அந்த மாணவர் மீண்டும் கேட்டார்: "அப்படியானால் நான் கஃபாவின் முன்னால் நின்று என்ன கேட்க வேண்டும்? எனக்கு ஒரு துஆவைக் கற்றுத் தாருங்கள்."

அப்போது கௌஸுல் அஃழம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அந்தப் புகழ்பெற்ற வாசகத்தைச் சொன்னார்கள்:

"மகனே! நீ அங்கே சென்று எதையும் பட்டியலிடாதே. நீ எதைக் கேட்டாலும் உனது சிற்றறிவுக்கு எட்டியதைத்தான் கேட்பாய். எனவே, 'யா அல்லாஹ்! என்னை நீ ஏற்றுக்கொள் (Accept me)' என்று மட்டும் கேள்."


ஒரு அடியானை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுவிட்டால் (கபூலியத்), பிறகு அந்த அடியானுக்குத் தேவையான அனைத்தையும் அந்த ரஹ்மானே பார்த்துக் கொள்வான். ஒரு எஜமான் தனது அடிமையை ஏற்றுக்கொண்ட பிறகு, அந்த அடிமை தனது உணவிற்காகவும், உடைக்காகவும் கவலைப்படத் தேவையில்லை.


குர்பானி

மாபெரும் ஞானி மாலிக் இப்னு தீனார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒருமுறை ஹஜ்ஜிற்குச் சென்றார்கள். அப்போது ஒரு இளைஞரைச் சந்தித்தார்கள். அந்த இளைஞன் இஹ்ராம் அணிந்து மினாவிற்கு வந்திருந்தார். ஆனால், மற்றவர்கள் உரக்கத் தல்பியா (லப்பைக்) சொல்லும்போது, அந்த இளைஞன் மட்டும் மௌனமாக இருந்தார்.


மாலிக் இப்னு தீனார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி"மகனே! நீ ஏன் மற்றவர்களைப் போல லப்பைக் சொல்லவில்லை?"

அந்த இளைஞனின் பதில்: "பெரியவரே! நான் 'லப்பைக்' (இதோ வந்துவிட்டேன்) என்று சொல்லும்போது, என் ரப்பிடமிருந்து 'லா லப்பைக் வலா ஸஃதைக்' (உன் வருகையை நான் ஏற்கவில்லை) என்று பதில் வந்துவிட்டால் என் கதி என்னவாகும்? அந்த அச்சம் தான் என்னை மௌனமாக்கி வைத்திருக்கிறது" என்றார். நாட்கள் கடந்தன. துல் ஹஜ் பிறை 13 அன்று கல் எறியும் (ஜம்ராத்) இடத்தில் மாலிக் இப்னு தீனார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அந்த இளைஞரை மீண்டும் சந்தித்தார்கள். கல் எறிந்து முடித்த அந்த இளைஞன் வானத்தை நோக்கித் தனது கைகளை உயர்த்தி உருக்கமாக துஆ செய்தான்.


இளைஞன்: நான் இப்போது ஒரு துஆ செய்யப் போகிறேன். நீங்கள் அதற்கு 'ஆமீன்' சொல்வீர்களா?"

மாலிக் இப்னு தீனார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி "நிச்சயமாக மகனே! சொல்."

அந்த இளைஞன் கேட்ட துஆ இதுதான்:

"யா அல்லாஹ்! மக்கள் எல்லாரும் ஆடு மாடுகளை உனக்காக அறுத்துப் பலியிடுவதற்காகக் கொண்டு வந்தார்கள், பலியிட்டும் விட்டார்கள். ஆனால் உனது இந்த ஏழை அடியானிடம் பலியிடுவதற்கு ஆடோ மாடோ இல்லை. எனவே, என்னை உனக்காக நான் தருகிறேன். 'யா அல்லாஹ்! என்னை நீ உனக்காகப் பலியாக ஏற்றுக் கொள்!'"


இந்தத் துஆவைக் கேட்ட மாலிக் இப்னு தீனார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அதிர்ந்து போனார்கள். அவர்களால் 'ஆமீன்' சொல்ல முடியவில்லை. "இப்படியா துஆ கேட்பது?" என்று அவர்கள் திகைத்து நின்றார்கள்.

ஆனால் அந்த இளைஞன் மீண்டும் மீண்டும் அதே துஆவை அழுது அழுது கேட்டான். "யா அல்லாஹ்! என்னை உனக்காகப் பலியாக ஏற்றுக் கொள்!" என்று சொல்லி முடித்த அடுத்த நிமிடம், அந்த இளைஞன் அப்படியே மயங்கிச் சரிந்தான். மாலிக் இப்னு தீனார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஓடிச் சென்று பார்த்தபோது, அந்த இளைஞனின் உயிர் பிரிந்துவிட்டது!

அவன் கேட்டபடியே அல்லாஹ் அவனைத் தனக்காக ஏற்றுக்கொண்டான். அந்த இளைஞன் ஒரு ஆட்டைப் பலியிடுவதற்குப் பதிலாக, தன்னையே இறைவனுக்காகப் பலியாக்கிவிட்டான்.


நாம் ஆடு மாடுகளை அறுப்பது ஒரு சடங்கு அல்ல. "இறைவா! இந்த ஆட்டின் கழுத்தில் கத்தி வைப்பது போல, என் உள்ளத்தில் இருக்கும் தீய இச்சைகளின் (நப்ஸ்) கழுத்தில் நான் கத்தி வைக்கிறேன்" என்ற தியாகம் நமக்குள் வர வேண்டும்.

தக்வா ஹஜ்ஜின் உயிர்நாடி 


குர்ஆன் ஹஜ்ஜைப் பற்றிப் பேசும்போது மிகத் தெளிவாகக் கூறுகிறது:

وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَىٰ

"இன்னும், (ஹஜ்ஜுக்குத் தேவையானவற்றைச்) சேகரித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாகச் சேகரிக்கப்படுபவற்றில் மிக மேலானது 'தக்வா' (இறையச்சம்) ஆகும்." (அல்-பகரா: 197)

இன்று ஹஜ் பயணம் என்பது வசதிகள் நிறைந்ததாக மாறிவிட்டது. ஆனால், வசதிகள் கூடக்கூட தக்வா குறைந்து வருவதை நாம் காண்கிறோம். 


இபாதத்தை விட 'செல்ஃபி' (Selfie) கலாச்சாரம்

முன்பெல்லாம் கஃபாவைப் பார்த்தவுடன் கண்கள் கசியும், கைகள் நடுங்கும். ஆனால் இன்று, கஃபாவைப் பார்த்தவுடன் பலரது கைகள் முதலில் செல்போனைத்தான் தேடுகின்றன.


தவாஃப் செய்யும்போதும், ஸயீ செய்யும்போதும், ஏன்... அரஃபா மைதானத்தில் துஆச் செய்யும்போதும் கூட 'செல்ஃபி' எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதிலேயே ஆர்வம் அதிகமாகிறது.


இது 'இஹ்லாஸ்' (தூய்மையான எண்ணம்) சிதைவதற்குக் காரணமாகிறது. பிறர் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் (ரியா) வந்துவிட்டால், அந்த அமலின் கூலி அழிந்துவிடும்.


தக்வாவின் ஒரு முக்கியப் பகுதி பொறுமை. இன்று ஏசி (AC) வசதி, சொகுசுப் பேருந்துகள், உயர்ந்த ரக உணவுகள் என அனைத்தும் கிடைத்தும், சிறு தாமதம் ஏற்பட்டால் கூட ஹாஜிகள் கோபப்படுகிறார்கள்.


ஹஜ் கமிட்டி மீதோ அல்லது தன்னார்வலர்கள் மீதோ சத்தமிடுவது, சக ஹாஜிகளுடன் வாக்குவாதம் செய்வது இன்று சாதாரணமாகிவிட்டது.


ஹஜ்ஜின் போது சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது என்பது குர்ஆன் கட்டளை. அந்தப் பொறுமையே தக்வா.


பலர் ஹஜ்ஜின் சட்டதிட்டங்களை (Mas'ala) மட்டும் இயந்திரத்தனமாகச் செய்கிறார்கள்.


தாயின் வயிற்றிலிருந்து பிறந்த பாலகனைப் போல

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"யார் இந்த இல்லத்திற்கு (கஃபாவிற்கு) வந்து, கெட்ட வார்த்தைகள் பேசாமலும், பாவமான காரியங்கள் செய்யாமலும் ஹஜ் செய்கிறாரோ, அவர் தனது தாய் அவரைப் பெற்றெடுத்த அன்று இருந்த (பாவமற்ற) நிலையைப் போலத் திரும்புவார்." (நூல்: புகாரி)


ஒரு குழந்தைக்கு எப்படி வஞ்சகம், பொறாமை, குரோதம் தெரியாதோ, அதுபோல ஹஜ் முடித்து வரும் ஹாஜியின் இதயம் பழைய பகைகளை மறந்து, சுத்தமாக இருக்க வேண்டும். யாருடைய நிலத்தையும் அபகரிக்க வேண்டும் என்றோ, யாரையும் ஏமாற்ற வேண்டும் என்றோ அந்தச் சிறு குழந்தைக்குத் தெரியாது; அதே தூய்மை ஹாஜியிடம் இருக்க வேண்டும்.


ஒரு குழந்தைக்குத் தான் ஒரு ஜமீன்தார் மகனா அல்லது ஏழையின் மகனா என்ற அந்தஸ்து தெரியாது. அது அனைவரிடமும் சிரிக்கும். அதுபோல, ஹஜ் முடித்தவர் "நான் பெரிய ஹாஜி" என்ற தற்பெருமை இல்லாமல், ஒரு குழந்தையைப் போல எளிமையானவராக மாற வேண்டும்.


ஒரு குழந்தைக்கு வைரம் எது, கல் எது என்று பிரித்துப் பார்க்கத் தெரியாது; அதற்குத் தேவை எல்லாம் அதன் தாயின் அரவணைப்பு மட்டுமே. அதுபோல, ஒரு ஹாஜிக்கு உலகத்தின் ஆடம்பரங்கள் முக்கியமாகத் தெரியக்கூடாது; அவருக்குத் தேவை எல்லாம் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' (அருள்) மட்டுமே.


நமது தாயின் வயிற்றிலிருந்து நாம் பிறந்தபோது நமக்குப் பாவம் செய்யத் தெரியாது; யாருடைய மனதையும் புண்படுத்தத் தெரியாது. அன்று நாம் எப்படி ஒரு வெண்மையான காகிதம் போல இருந்தோமோ, அதே நிலையை இந்த ஹஜ் நமக்குத் தருகிறது.

அல்லாஹ் உங்கள் கடந்த காலப் பாவங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, உங்கள் கையில் ஒரு புதிய வெண்மையான காகிதத்தைக் கொடுத்திருக்கிறான்.

இனிமேல் அந்தக் காகிதத்தில் நீங்கள் எதனை எழுதப் போகிறீர்கள்?

மீண்டும் வட்டி, பொய், புறம் எனும் கறைகளை அதில் பூசப் போகிறீர்களா?

அல்லது ஒரு குழந்தையைப் போன்ற அதே தூய்மையோடு உங்கள் வாழ்நாளைக் கழிக்கப் போகிறீர்களா?


"ஹஜ்ஜுக்குப் பின் ஹாஜி என்பவர் ஒரு நடமாடும் பாலகன்." அவர் பேசும் வார்த்தைகளில் இனிமை இருக்க வேண்டும். அவர் நடக்கும் பாதையில் அமைதி இருக்க வேண்டும். அவர் ஊருக்குத் திரும்பியதும், ஊர் மக்கள் சொல்ல வேண்டும்: "இதோ அல்லாஹ்வை அறிந்து வந்த ஒரு புனிதமான மனிதர் வருகிறார்" என்று.

அல்லாஹ் நம் அனைவரின் ஹஜ்ஜையும் ஒரு உண்மையான மறுபிறப்பாக ஆக்கித் தருவானாக!

நாம் இங்கிருந்து புறப்படும்போது வெறும் பயணிகளாகப் புறப்படுகிறோம்; ஆனால் அங்கிருந்து திரும்பும்போது அல்லாஹ்வின் அங்கீகாரம் பெற்ற "ஹாஜிகளாக" திரும்ப வேண்டும். ஹஜ்ஜுக்கு முன்னால் இருந்த "நான்" என்ற அகந்தை, ஹஜ்ஜுக்குப் பின் "நாமெல்லாம் அல்லாஹ்வின் அடியார்கள்" என்ற பணிவாக மாற வேண்டும்.


புனிதக் கஃபாவைப் பார்க்கும்போதும், அரஃபாவில் கையேந்தும்போதும், ரவ்ழா முபாரக்கில் ஸலாம் சொல்லும்போதும் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் மட்டும் துஆ செய்யாதீர்கள். மாறாக, இந்த உம்மத்தின் ஒற்றுமைக்காகவும், அமைதிக்காகவும், கஷ்டப்படும் ஏழை எளியோருக்காகவும் கண்ணீர் வடியுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் விருந்தினர்கள்; அந்தப் புனித மண்ணில் நீங்கள் கேட்கும் ஒவ்வொரு துஆவும் அங்கீகரிக்கப்படக் கூடியவை.


அல்லாஹ் உங்கள் அனைவருடைய ஹஜ்ஜையும் ஒரு 'மப்ரூரான' ஹஜ்ஜாக ஏற்றுக்கொள்வானாக!


யா ரஹ்மானே! இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஹாஜிகளின் பயணத்தை எளிதாக்கி வைப்பாயாக. அவர்களுக்கு எவ்வித நோய் நொடிகள், சிரமங்கள் வராதவாறு உன் பாதுகாப்பில் அவர்களை வைப்பாயாக!


யா ரஹீமே! அவர்கள் இங்கிருந்து புறப்படுவது முதல், அங்கே கடமைகளை முடித்து ஊர் திரும்புவது வரை உனது விசேஷமான அருளையும் (ஸகீனத்தையும்) அவர்களுக்கு இறக்கி வைப்பாயாக!


யா மாலிக்கே! ஹஜருல் அஸ்வத்தைத் தொடும் பாக்கியத்தையும், தவாஃபின் இனிமையையும், அரஃபாவின் மன்னிப்பையும், மதீனாவின் அமைதியையும் அவர்களுக்குப் பரிசாக வழங்குவாயாக!


யா அல்லாஹ்! யாருடைய ஹஜ்ஜையும் நீ அங்கீகரிக்காமல் திருப்பி அனுப்பிவிடாதே. அவர்கள் அழுது கேட்கும் ஒவ்வொரு துஆவிற்கும் "லப்பைக்" என்று பதில் கூறி அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக!


யா கஃபூரே! ஹஜ் முடித்து வரும்போது, இன்று பிறந்த பாலகனைப் போல எவ்விதப் பாவக் கறைகளும் இல்லாத புனிதர்களாக அவர்களைத் தாய்நாடு திரும்பச் செய்வாயாக!


யா ரப்புல் ஆலமீன்! இதுவரை ஹஜ் செல்லாத எம்மில் உள்ளவர்களுக்கும், இனி வரும் காலங்களில் பலமுறை உனது இல்லத்திற்கு வந்து செல்லும் பாக்கியத்தை நசீபாக்குவாயாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.



தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.


ஜும்மா பயான்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக