வெள்ளி, 13 செப்டம்பர், 2024

யார் பெரியவர் (கதை)

 


அக்பர் தனது அவையில் அமர்ந்திருந்தார்.


சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, "அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா? கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. 


இந்த வினாவுக்கு தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.


அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள்.


மதிநுட்ப அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார்."உமது கருத்து என்ன? "என அக்பர் கேட்டார்.


"மன்னர் பெருமானே!இந்த விஷயத்தில் சந்தேகத்திற்கு என்ன இருக்கிறது? 


கடவுளை விட தாங்கள்தானே பெரியவர் என்று கூறினார் பீர்பால். அதை கேட்ட அக்பருக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.


"பீர்பாலே உமது கூற்றை தக்க காரணத்துடன் விளக்குங்கள்" என்றார் அக்பர்.  


"சக்கரவர்த்தி அவர்களே என்னை தங்களுக்கு பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், 


உடனே என்னை நாடு கடத்தி விட தாங்களால் முடியும் ஆனால் கடவுளுக்கு என்னை பிடிக்காவிட்டாலும் என்னை நாடு கடத்த முடியாது" எனறார் பீர்பால். 


"எப்படி என்று வினவினார் அக்பர். 


"உங்கள் ஆட்சிக்குள் இருக்கும் பகுதி ஓரளவுக்குத்தான. உங்களுக்கு பிடிக்காதவரை அடுத்த நாட்டுக்கு விரட்டி விடலாம். 


ஆனால் கடவுளுடைய ஆளுகையோ,பூமியில் மட்டுமின்றி அனைத்து உலகமும் பரவி இருக்கிறது. ஆகவே அவர் ஒருவரை எவ்வாறு நாடு கடத்த முடியும். 


ஒருவரை கடவுள் எங்கே விரட்டி அடித்தாலும் அவன் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தானே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்க முடியும்" என்று கேட்டார் பீர்பால்.


இதைக்கேட்ட அக்பர்,பீர்பால் தனக்கு சரியான பாடம் கற்பித்து விட்டார் என்பதையும்,தனது கேள்வி தவறானது என்பதையும் புரிந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக