ஞாயிறு, 30 ஜூன், 2024

கிரகணத் தொழுகை முறை.

 

*கிரகணமும் கிரகணத் தொழுகையும்*

######################₹₹₹₹₹₹₹₹#

*சந்திர, சூரிய கிரகணம் என்றால் என்ன?*
-----------------------------------------------------------

சந்திரனும் பூமியம் தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனைச் சுற்றுகின்றன.

 அவ்வாறு சுற்றும்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரன்மீது படும்.

டியூப் லைட்டுக்குக் கீழே நாம் அமர்ந்து படிக்கும்போது வெளிச்சம் நம் தலையில் பட்டு தலையின் நிழல் புத்தகத்தில் படுவதை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

அதாவது சந்திரன், பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது பூமியானது சூரியனின் கதிர்களைச் சந்திரன்மீது படுவதிலிருந்து மறைத்துவிடும்.

அதுவே சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு (Lunar Eclipse) எனப்படுகிறது.

அதே வேளையில், பூமியானது சூரியனை மறைக்கும்போது அது சூரிய கிரகணம் (Solar Eclipse) எனப்படும்.

சூரியன், பூமி, சந்திரன், ஆகிய மூன்றும் சுற்றுப் பாதையில் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் சமமாக வரும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

*கிரகணம் உள்ளிட்ட இயற்கை மாற்றங்கள் ஏன்?*
------------------------------------------------------

பொதுவாக அமாவாசை அல்லாத நாட்களில் நிலவின் வெளிச்சம் அதன் அளவிற்கேற்ப பூமியில் தெரியும். ஆனால், சந்திர கிரகணத்தின்போது அந்த வெளிச்சம் மறைக்கப்படுகிறது.

இது இயற்கைக்கு மாற்றமானதொரு நிகழ்வாகும்.

அவ்வாறு இயற்கைக்கு மாற்றமான சூழலை உருவாக்குவதற்கான சக்தி தனக்கு உண்டு என்பதைக் காட்டுவதே இதன் மூலம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நோக்கமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நாம் சான்றுகளை அனுப்புவது அச்சமூட்டும் நோக்கத்திற்காகத் தவிர வேறெதற்குமில்லை. (17:59)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். அவை யாரின் பிறப்புக்காகவோ இறப்புக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனினும், அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கின்றான்.

கிரகணம் பிடிப்பதை நீங்கள் கண்டால், அல்லாஹ்வை நினைவுகூர்தல், அவனிடம் பிரார்த்தித்தல், பாவமன்னிப்புக் கோரல் ஆகிய வழிபாடுகளின்பால் விரைந்து செல்லுங்கள்.

(காண்க: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 1044)

இதனால்தான், சூரிய, சந்திர கிரகணங்களின்போது இறைவனின் வல்லமையைப் போற்றும் விதமாகவும் இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாப்புக் கோரும் விதமாகவும் சிறப்புத் தொழுகை ஒன்றை இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

அதுவே கிரகணத் தொழுகை (ஸலாத்துல் குசூஃப்) எனப்படுகிறது.

*கிரகணத் தொழுகையின் சட்டமும் நேரமும்*
-------------------------------------------------------------

கிரகணத் தொழுகை சுன்னத் முஅக்கதா ஆகும். இதன் நேரம் கிரகணம் தொடங்கியதிலிருந்து ஆரம்பமாகும்.

*கிரகணத் தொழுகை முறை*
---------------------------------------------------

கிரகணத் தொழுகை இரண்டு ரக்அத்கள் ஆகும். கிரகணம் பகலில் ஏற்பட்டாலும் இரவில் ஏற்பட்டாலும் இந்தத் தொழுகையில் பெருநாள் தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகை போன்று அல்ஹம்து சூராவையும் துணை சூராவையும் உரத்த குரலிலேயே ஓத வேண்டும்.

வழமையான தொழுகை அம்சங்களுடன்கூடிய இத்தொழுகையில் சிற்சில வேறுபாடுகள் உண்டு. அல்ஹம்து சூரா ஓதிமுடித்த பின்னர் நீண்ட சூரா ஒன்றை ஓத வேண்டும்.

பின்னர் நீண்ட நேரம் ருகூஉ செய்ய வேண்டும். பின்னர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொல்லி இஃதிதால் இருப்புக்கு வர வேண்டும். அதில் ரப்பனா லக்கல் ஹம்த்… துதியைச் சொல்ல வேண்டும்.

பின்னர் சஜ்தா செய்யாமல் மறுபடியும் கியாம் நிலைக்கு வந்து கையைக் கட்டிக்கொள்ள வேண்டும். அப்போது மறுபடியும் அல்ஹம்து சூரா ஓதி பின்னர் ஒரு துணை சூரா ஓத வேண்டும். அது முதலில் ஓதியதைவிடச் சற்று குறைந்ததாக இருக்க வேண்டும்.

பின்னர் ருகூஉ செய்ய வேண்டும். அது முந்தையதைவிடச் சற்று குறைவாக இருக்க வேண்டும். பின்னர் இஃதிதாலுக்கு வர வேண்டும். பின்னர் இரு சஜ்தாக்கள் செய்ய வேண்டும். அவை நீளமாக இருக்க வேண்டும்.

பின்னர் இரண்டாவது ரக்அத் தொழ வேண்டும். அதை முதல் ரக்அத்தைப் போன்றே தொழ வேண்டும். ஆனால், அதில் ஓதப்படும் சூராக்கள், ருகூஉகள், சஜ்தாக்கள் ஆகியவை முதல் ரக்அத்தில் இருந்த அளவைவிடக் குறைவாக இருக்க வேண்டும்.

பின்னர் அத்தஹிய்யாத் அமர்வில் எப்போதும்போல் ஓத வேண்டியவற்றை ஓதிய பின்னர் சலாம் கொடுத்து தொழுகையை நிறைவு வேண்டும்.

தொழுகை முடிந்த பின்னர் இமாம் மக்களுக்கு அறிவுரை கூற வேண்டும். அதில் மக்களின் அலட்சியம், உலக மோகம் போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஊட்டுவதுடன் துஆ, பாவமன்னிப்பு, திக்ர் போன்றவை குறித்து நினைவூட்ட வேண்டும்.


*சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக