பணிந்தால் உயரலாம்
எதிலும் முழுமை, அளவின்மை, வரையறையின்மை, கட்டுப்பாடின்மை அகிலத்தாரின் ஏக இரட்சகன் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே, ஆகவே அவன் பெருமைப்பட முழுத் தகுதியும் அருகதையுமுடையவன்.
எனவேதான் பெருமைக்குரியவன் எனும் அர்த்தம் தாங்கிய ‘முதகப்பிர்’ எனும் பண்பு அல்லாஹ் தஆலாவுக்கு உண்டு. எவரிடம் குறை இருக்குமோ அல்லது எவருக்கு கட்டுப்பாடு, மட்டுப்பாடு இருக்குமோ அவர் பெருமைப்பட அறவே தகுதியற்றவர், அருகதையற்றவர்.
மனிதப் பிறவிகளில் எவரும் குறையற்றவராக, அளவு, எல்லை, கட்டுப்பாடற்றவராக இல்லை என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற பேருண்மை. எனவே மனிதன் பெருமைப்பட முடியாது. குறைகள், பலவீனங்கள், சிறுமைகளுடன் எப்படி பெருமைப்படுவது?
இந்தப் பின்னணியிலேயே பெருமையை மனிதனுக்கு ஹராமாக்கியது இஸ்லாம். அதனைப் பாவமாகப் பார்ப்பதுடன் அதற்குத் தண்டனைகளையும் வாக்களித்துள்ளது. பெருமைக்காரரை அல்லாஹ் நேசிப்பதில்லை. ‘மேலும் உன் கன்னத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! மேலும் பூமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் பெருமையாக நடப்பவர், பெருமையடிப்பவர் ஒவ்வொருவரையும் நேசிப்பதில்லை’ என இயம்புகிறது அல்-குர்ஆன். (31 : 18)
அல்லாஹ் தஆலா அளந்து கொடுத்துள்ள கொஞ்சத்தை வைத்துக்கொண்டு தன்னிடம் ஏதேதோ இருப்பதகாவும் தானே பெரியவன் என்றும் தான்தான் ஆள் என்றும் மமதையோடு நடக்கிறான் மனிதன். அந்தோ பாவம்! பரிதாபம்! அழகுத் திமிர், அறிவுத் திமிர், சிந்தனைத் திமிர், அனுபவத் திமிர், பேச்சுத் திமிர், எழுத்துத் திமிர், வித்துவத் திமிர், பட்டத் திமிர், பதவித் திமிர், தலைமைத் திமிர், உத்தியோகத் திமிர், பணத் திமிர், செல்வத் திமிர், குடும்பத் திமிர் என பலவாறான திமிர்கள் மனிதர்களுக்குத் தலைக்கேறி தலைகீழாக நடந்து கொள்கின்றனர். உண்மையை ஏற்றுக் கொள்ளாத, அடுத்தவரைக் கிஞ்சித்தும் மதிக்காத ஆணவப் போக்கு நமக்குள்ளே குடிகொண்டுள்ளது.
பெருமை என்றால் என்ன என்பதை விளக்குகிறது இந்த ஹதீஸ்: ‘பெருமை என்பது உண்மையை மறுப்பதும் மனிதர்களை அற்பமாகப் பார்ப்பதுமாகும்.’ (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: சஹீஹ் முஸ்லிம்)
தலைக்கனத்தின் முடிவு நரகமே!
ஹதீஸ்களில் இவ்வுண்மையை அவதானிக்கலாம். ‘அல்லாஹ் கூறினான்: பெருமை எனது குப்பாயம். மேலும் பெருமை எனது மேலாடை. எவர் என்னிடத்தில் அவ்விரண்டில் ஒன்றை இழுப்பாரோ அவரை நான் நரகில் எறிவேன்.’ (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : ஸ¤னன் அபீ தாவூத்). ‘எவரின் இருதயத்தில் அணுவளவு மமதை உள்ளதோ அவர் சுவர்க்கம் புக மாட்டார்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹ் முஸ்லிம்).
‘நரகத்திலுள்ள பவ்லஸ் என அழைக்கப்படுகின்ற ஒரு சிறைக்கு அவர்கள் (பெருமையடிப்பவர்கள்) ஓட்டப்படுவர்." (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸ¤னன் அல்-திர்மிதி)
பணிவு முஃமினின் அத்தியாவசிய பண்பு. பெருமைக்குரியவன் அல்லாஹ் மாத்திரமே என்பதை உளமார நம்பி எப்பொழுதும் பணிந்து நடப்பான். செருக்கினால் இம்மையிலும் மறுமையிலும் ஏற்படுகின்ற பாதிப்புகளை, தண்டனைகளை உணர்ந்து வாழ்வான். பணிந்தால் அல்லாஹ் தன்னை உயர்த்திவிடுவான் என்ற திடமான நம்பிக்கையுடன் இருப்பான். அவன் உயர உயர அவனின் பணிவு அதிகரித்துக்கொண்டே இருக்கும். அவன் பணிய பணிய அவனின் உயர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
பணிவு திண்ணமாக மனிதனை உயர்த்தும். ஆணவம் நிச்சயமாக மனிதனைத் தாழ்த்தும். ‘எவர் அல்லாஹ்வுக்கு பணிந்தாரோ அவரை அல்லாஹ் உயர்த்துவான். மேலும் எவர் பெருமை கொண்டாரோ அவரை அல்லாஹ் தாழ்த்துவான்’ என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அல்-முஃஜம் அல்-அவ்ஸத்)
‘பணிவு கண்ணியவான்களின் குணங்களைச் சார்ந்தது. இறுமாப்பு நீசர்களின் குணங்களைச் சார்ந்தது. மனிதர்களில் அந்தஸ்தால் உயர்ந்தவர் தனது அந்தஸ்தைப் பாராதவராவார். அவர்களில் சிறப்பால் உயர்ந்தவர் தனது சிறப்பைப் பாராதவராவார்’ இவ்வாறு மாமேதை இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் செப்பியதாக சொல்லப்படுகிறது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சதா பணிவுடன் வாழ்ந்தார்கள். அல்லாஹ் அவர்களை ஈருலகிலும் உயர்த்தினான். பணிவைக் கைக்கொள்ளுமாறு சமூகத்தினருக்கு போதித்தார்கள்.
வாழும் உரிமை, மார்க்கச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவை மறுக்கப்பட்ட நிலையில், தன் உயிருக்கும் உலைவைக்க சதித் திட்டம் தீட்டப்பட்ட தறுவாயில் நிர்ப்பந்தமாக தன் பிறந்தகத்திலிருந்து வெளியேறி பின் மீண்டும் மக்காவுக்குள் வெற்றி வாகை சூடியவர்களாக பிரவேசிக்கும் போது ஒப்பனைகளின்றி மிகுந்த பணிவுடன் ஒட்டகையிலிருந்தவாறே சிரசைத் தாழ்த்தியவர்களாக நுழைந்தார்கள். இது தலை நிமிர்ந்த வீர வரலாற்றுக்குள் அமிழ்ந்து கிடக்கும் பணிந்து குனிந்த நிகழ்வாகும்.
மனிதக் கவனம் பணிவுக் கோட்டைத் தாண்டும் போதெல்லாம் இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவனத்தை பணிவின் பால் ஈர்த்துள்ளார்கள். ‘அழ்பாஃ’ எனும் பெயரில் நபியவர்களுக்கு ஓர் ஒட்டகை இருந்தது. வேறு ஒட்டகைகள் அதனுடன் போட்டி போட முடியாது. அவ்வளவு வேகமாகச் செல்லும். ஒரு தடவை நாட்டுப்புறத்து மனிதர் ஒருவரின் ஒட்டகம் அழ்பாஃவை முந்திவிட்டது.
முஸ்லிம்களுக்கு அது கஷ்டமாக இருந்தது. நபியவர்களின் ஒட்டகையை வேறொரு ஒட்டகம் எப்படி முந்துவது? அவ்வேளை ‘உலகிலுள்ள ஒன்று உயர்ந்தால் அதனைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் மீது கடமை’ என்றார்கள் ரஸ¤ல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
மண்டைக் கனம் பிடித்தோர் மண்ணைக் கவ்வியதே உலக சரித்திரம்!
சிம்மாசன அகம்பாவம் தலையில் முறுக்கேறிய ஃபிர்அவ்ன், செல்வச் செருக்கில் தன்னை விட்டால் ஆளில்லை என மார்தட்டிய காரூன் போன்றவர்கள் இறை தண்டனைக்காளாகி சிறுமைப்பட்டு மாண்டனர். ஆதலால் நமக்குள் நங்கூரமிட்டுள்ள அகங்காரத்தை விரட்டி அடிப்போம்! நாம் சிறியவர்கள். குறையுள்ளவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக