வியாழன், 2 ஜூன், 2011

தாயிப் நகரில் தாஹா நபிகள் கவிக்கோ அப்துல் ரஹ்மான்




நபிகள் பெருமான் -

 இல்லாமல் வாடிய

 ஏழை உலகம்,

 கேட்காமலேயே

 கிடைத்த அருட்கொடை !

 தட்டாமலேயே

 திறந்த கதவு !

 தேடாமலேயே

 தெரிந்த மூலிகை !



இளமையில் பெற்றோரை

 இழந்த இவ்வனாதைதான்

 உலகுக்கே தாயாகி

 ஊட்டி வளர்த்தவர் !



படிக்கத் தெரியாத இந்தப்

 பாமர நபியிடம்தான்

 பள்ளிக் கூடங்களும்

 பாடம் பயின்றன

 இல்லை ..

 பல்கலைக் கழகங்களே

 பாடம் பயின்றன !



கந்தல் அணிந்த இந்தக்

 கருணைநபி கையால்தான்

 அம்மண உலகம்

 ஆடையைப் பெற்றது !



பாலையில் முளைத்த இந்த

 பசுமர நிழலில்தான்

 வெயிலும்கூட

 இளைப்பாற வந்தது !



இந்த ஏழையை

 ஈன்ற பின்னரே

 கிடக்காத புதையல்

 கிடைத்தது போன்று

 இந்த உலகம்

 இறுமாப் படைந்தது !



மண்ணில் இந்த

 மணிவிளக்கைக்

 கண்டபின்தான்

 விண்ணும்தன் சுடர்களுக்காய்

 வெட்கம் கொண்டது !



வல்லூறுகளும் இவர்

 வலைக்குள் குடிபுகுந்து

 வெள்ளைப் புறாக்களாய்

 விண்ணெங்கும் பறந்தன !



உயர்மறை மகுடி இவர்

 ஊதியத்கைக் கேட்டவுடன்

 நாகத்தின் பற்களிலும்

 நல்லமுதம் ஊறியது !



தனித்தனி சாதி

 அறைகளில் கிடந்த

 மனித எழுத்துக்களை

 ஒரே வாக்கியமாக

 அச்சுக் கோர்த்து

 சகோதரத்துவ

 சமுதாயம் கண்டவர் !



பாட்டால் புகழைப்

 பலர் பெறுவர் ஆனால்

 பரமனின் நபியைப்

 பாடுவதால் நமது

 பாட்டுக்கல்லவா

 பெரும்புகழ் கிடைக்கும்



அன்று அந்தத்

 தாயிப் நகரில்

 தாஹா நபிகள் !



தாயிப் வாசிகளே !

 விந்தை மனிதர் நீர்!

 கல்லின் மீதுதான்

 பூவைத் தூவுவீர்



ஆனால் அன்று

 (பூமான் நபியெனும்)

 பூவின் மீதல்லவா

 கல்லைச் சொரிந்தீர் !



வெல்வதாக நினைத்தீர் !

 ஆனால் தோற்றவர் நீங்களே !

 நீங்கள் வணங்கும்

 கற்களை அல்லவா

 கருணைநபி காலடியில்

 மண்டியிட வைத்தீர் !



உங்கள் கற்கள்

 ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !

 பொறுமைக்குக் கிடைத்த

 இரத்தினப் பதக்கங்கள் !

 இறை சோதனையின்

 குங்கும முத்தங்கள் !



பொய்மையை எதிர்த்த

 வாய்மைத் தூதருக்கு

 ரணங்கள் தானே

 ஆபரணங்கள் !



அதோ பாருங்கள் !

 நீங்கள் எறிந்த கற்கள்

 பச்சை ரத்தம்

 படிந்து கிடப்பதை !

 காயங்கள் செய்த

 பிரச்சாரத்திற்குரிய

 பெரிய வெற்றி !

 அவை கூட

 மதம் மாறி விட்டன !



தாயிப் வாசிகளே !

 கனிமரம் என்பதால்

 கல்லெறிந்தீரோ?

 கல்லடி பட்டால்

 கனி மட்டுமா உதிரும்?

 காய்கூட உதிருமே !



ஆனால்

 கல்லடிக்குக்

 கனிமட்டும் உதிர்ந்த

 கருணை மரத்தை

 வேறு எங்கேனும்

 கண்டவருண்டோ?



எங்கள் பெருமான்

 காயம்பட்டதோ

 அன்றொருநாள் !

 ஆனால் இரத்தமோ

 இன்றுமல்லவா வழிகிறது

 எங்களின்

 எழுதுகோல் வழியே !

[1978, நவம்பர் 14-ஆம் நாள் காயல்பட்டினத்தில் நிகழ்ந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் கவிக்கோ தலைமையில் நடந்த இஸ்லாமியக் கவியரங்கில் அவர் பாடிய தலைமைக் கவிதையின் ஒரு பகுதி]





ராவணனை எல்லோரும் வில்லனாகப் பார்க்கையில் கவிக்கோ அவர்களின் பார்வை சற்று வித்தியாசமாக இருந்தது.

இருகண் படைத்தவனே
 இவள் அழகில் எரிந்திடுவான்!
 இருபது கண் படைத்த நான்
 என்ன செய்வேன்?

என்று சீதையைப் பார்த்து ராவணன் சொல்வதாக புனைந்த கவிதை அவரை பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக