திங்கள், 20 பிப்ரவரி, 2023

கோபம்.

 


கண்ணியத்திற்குரிய...ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முபாரக் பள்ளிவாசல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக பெருமக்களே.. ஜமாஅத்தார்களே.. இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம்களே.. சமூக சேவையாளர்களே.. இவ்விழாவிற்க்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்த செல்வந்தர்களே.. மற்றும் பெற்றோர்களே..என் உடன் பயிலும் மாணவ மாணவிகளே.. அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கோபமாகவே இருப்பார்கள். பேச ஆரம்பித்தால் அவர்களின் வாயில் இருந்து சுடுசொல் தான் வெளிவரும். இது அவர்களுக்கு சாதகத்தை ஏற்படுத்துவதை விட பாதகத்தையே ஏற்படுத்தும். இது குறைந்த பட்சம் சிடுமூஞ்சி என்ற கெட்ட பெயரையாவது அவருக்குப் பெற்றுத் தரும். அதனால் கோபத்தை விட்டொழிக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது.




ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மல்யுத்தம் செய்பவர் உண்மையான வீரர் அல்ல. கோபத்தின் போது தன்னை அடக்கிக் கொள்பவரே உண்மையான வீரர்என்றார்கள்

. (
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி–6114)

ஒரு மனிதருக்கு கோபம் வந்தால் அதைத் தணித்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு அழகிய வழி சொல்கிறார்கள். ‘‘கோபம் ஷைத்தானின் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். எனவே உங்களில் ஒருவருக்கு கோபம் வந்து விட்டால், அவர் ஒளு’ (தொழுகையின்போது செய்யப்படும் அங்கசுத்தி) செய்து கொள்ளட்டும்’’ என்று நபிகளார் நவின்றார்கள். மேலும் நபிகளார், ‘‘உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்து விட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்’’ என்று ஆலோசனை கூறினார்கள்.

ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக யூனுஸ் என்ற இறைத்தூதரை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அந்த மக்கள் யூனுஸ் நபி பிரசாரம் செய்த ஒற்றைக் கொள்கையை ஏற்கவில்லை. அவர்களுக்கு எதிராக யூனுஸ் நபி சபித்து விட்டு வெளியேறி விட்டார். அவர்கள் மீது இறைவனின் வேதனை இறங்க ஆரம்பித்தபோது அவர்கள் திருந்தி விட்டனர். இறைவன் அவர்களை காப்பாற்றி விட்டான். இப்படி அவருக்கே தெரியாமல் அவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இறைவனிடம் கோபித்துக் கொண்டு யூனுஸ் சென்றார். அப்படிச் சென்ற அவரை மீன் விழுங்கியது. இது குறித்து திருக்குர்ஆனில், ‘இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கி விட்டது. அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்வரை அவற்றின் வயிற்றிலேயே தங்கி இருப்பார்’ (37:142) இறைவன் கூறுகின்றான். யூனுஸ் நபி, இறைவன் மீது கொண்ட கோபம், அவரை மீன் வயிற்றில் சிக்க வைத்தது என்பதை எண்ணிப் பார்த்து நாம் கோபத்தை விட்டு தவிர்க்க வேண்டும். இறைத்தூதர் களின் வாழ்வு நமக்கு ஒரு முன்மாதிரியாகும். இதை மக்கள் உணர்ந்து பின்பற்றும்போது சுவனபதியை அடையலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சமயம் மக்சூமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டாள். இது குரைஷி குல மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. (மக்சூமி குலம் என்பது குரைஷி கோத்திரத்தின் ஒரு கிளையாகும்) ஆகவே அவர்கள் ஒன்று கூடி, களவாடிய பெண் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பரிந்து செய்ய உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்களை அனுப்புகிறார்கள். இதைத் தொடர்ந்து நபிகளாரிடம் அந்தப் பெண்ணுக்காக உஸாமா பரிந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் குற்றவியல் சட்டங்களில் ஒன்றில் நீ பரிந்துரை செய் கிறாயா?’ எனக் கோபமாகக் கேட்டு விட்டு, ‘உங்களுக்கு முன் இருந்தோர் அழிந்து போனதற்கு காரணம் அவர் களில் வசதியானவர் திருடினால் அவரை அவர்கள் விட்டு விடுவார்கள். ஏழை திருடினால் அவரை தண்டிக்க முயலுவார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மதின் மகள் பாத்திமா திருடி இருந்தாலும் அவளுடைய கையையும் நான் துண்டிப்பேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி: 6788)

அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் ஒருவர் பரிந்துரை செய்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு கோபம் வந்ததை மேற்காணும் நபிமொழி அறிவிக்கிறது. இதன் மூலம் நீதிக்கு புறம்பான செயல்களை காணும்போது அமைதியாக இருக்கக் கூடாது என்பது புலனாகிறது.

தேவையற்ற கோபத்தை நீக்கி, நீதியை நிலை நாட்டுவதற்காக கோபப்படும் மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருள்வானாக!

இத் தகவலை நமக்கு தொகுத்து தந்தவர் : 

மதிப்பிற்குரிய மவ்லானா மவ்லவி B. முஹம்மது ராஃபி ரஷீதி 

ஹழ்ரத் அவர்கள்.  

ஆசிரியர் ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா. அரக்கோணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக