வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

இறைவனை காதலித்துப் பார்....


 

இறைவனை காதலித்துப் பார்....

 

உன்னைச் சுற்றி மலக்குமார் தோன்றுவர்...

வாழ்க்கை அர்த்தப்படும்..

 

சுவனத்தின் விசாலம் விளங்கும்..

 

உனக்கும் அழுகை வரும்...

 

மனது நிம்மதியடையும்..

 

அல்லாஹ் நண்பனாவான்...

 

சுஜுதில் கிடந்தே உன் நெற்றி தேயும்...

 

கண்ணிரண்டும் ஒளி கொள்ளும்...

 

இறைவனை காதலித்துப் பார்....

 

அழுதழுதே முகம் நனைப்பாய்...

 

ஐந்து முறை பள்ளி செல்வாய்..

 

சந்தோசம் வந்தால் இறைவனின் சோதனை என்பாய்..

 

துக்கம் வந்தால் இறைவனின் நேசம் என்பாய்..

 

சடவாதிகள் உன்னைக் கவனிக்க மாட்டார்கள்..

 

ஆனால்..

அகிலத்தின் அதிபதி உன்னை அவதானிப்பதாய் உணர்வாய்...

 

உடலுக்கும் உயிருக்குமிடையே

உருவமில்லா மலகுல் மௌத்

நகரக் காண்பாய்...

 

இந்த வானம்...இந்தப் பூமி

இந்த அந்தி....

இந்தப் பூக்கள் எல்லாம்

உனக்கு வசப்படுத்தித் தரப்பட்ட ஏற்பாடுகள் என்பாய்...

 

இறைவனை காதலித்துப் பார்....

 

இருதயத் துடிப்பு மரணபயம் விதைக்கும்..

 

ராத்திரியின் நிசப்த அலைவரிசைகளில்

உன் குரலில் குர்ஆன் ஒலிபரப்பாகும்...

 

உன்மனம் உனக்கு விசாரணைகள் நடாத்தும்..

 

சைத்தானின் திரைச்சீலைகளை தக்வா கிழிக்கும்..

 

இறையச்சம் நைல்நதியாய் பெருக்கெடுக்கும்..

 

உதடுகள் மட்டும் எப்போதும் இறைநாமம் உச்சரிக்கும்..

 

ஷஹவாத்கள் சமுத்திரமாகும்...

 

பிறகு

தௌபாவுக்குள் கண்ணீர்த்துளிக்குள் சமுத்திரம் அடங்கும்..

 

 

இறைவனை காதலித்துப் பார்....

 

சின்னச் சின்ன குர்ஆன் வசனங்களால்

சிலிர்க்க முடியுமே!

அதற்காகவேனும்

புலன்களை அடக்கி பாவத்தைத் தவிர்க்கலாமே...

அதற்காகவேனும்..

 

சொர்க்கம் என்ற சொல்லுக்கும்

நரகம் என்ற சொல்லுக்கும்

அகராதியில் ஏறாத அர்த்தங்கள் புரியுமே!

 

அதற்காகவேனும்

வாழும்போதே சுவனம் காண முடியுமே!

 

சாகும் போதும் கலிமா மொழிய முடியுமே!

 

அதற்காகவேனும்

இறைவனை காதலித்துப்பார்....

 

சடவாத சிந்தனைக்கு முன் தோற்றுப் போனாலும்

உறவுகள் எல்லாம் இறந்து போனாலும்..

விழித்துப் பார்க்கையில்

உன்னைத்தவிர அனைத்துமே அழிக்கப்பட்டிருந்தாலும்

 

ஒரேநாளில் பலதடவைகள் சோதிக்கப்பட்டாலும்

நீ நேசிக்கும் பொருட்கள் உன்னை விட்டுச் சென்றாலும்

நீ நேசிக்கும் மனிதர்கள் உன்னை நேசிக்க மறந்தாலும்

 

இறைவனை காதலித்துப் பார்....

 

அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தைக்குள்

அத்தனையும் அடங்கிவிடும்

 

இறைவனை காதலித்துப் பார்....

சந்தோசம் நிம்மதி சொர்க்கம் இறைதிருப்தி

அனைத்தும் உனக்கு

 

இப்போதே நிச்சயம்...

இறைவனை காதலித்துப் பார்...

❥═════════❥



அஸ்ரப் மாமாஞ்சி

1 கருத்து:

  1. மாஷா அல்லாஹ் ரொம்ப அருமையான கவிதை.
    கண்ணை திறந்தால்
    இறைவன் கல்பை திறப்பான்

    பதிலளிநீக்கு