அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே...
அல்லாஹ்வையும் ரசூலையும் ஈமான் கொண்டு நமது உயிரினும் மேலான மன்னர் பெருமான் நபி ஸல் அவர்கள் காட்டிய வழியில் வாழ வேண்டிய நாம் தற்போது எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
முன்மாதிரியாக வாழ வேண்டிய நம் இஸ்லாமிய சமுதாயம் தற்போது எப்படிப்பட்ட சமுதாயமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்ற எனது மன வேதனையை இங்கு பதிவு செய்ய வந்திருக்கிறேன்.
காலையில் ஏழு மணிக்கு மதரஸா சென்ற சமுதாயம் இன்று ஸ்கூல் வாகனத்திற்காக காத்து நிற்கிறது.
அன்பார்ந்தவர்களே.....குர்ஆன் ஓத மதரஸா செல்லாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
மாலையில் வீட்டில் குர்ஆன் ஓதிய எமது சமூகம் - இன்று ட்யூஷன் சென்று கொண்டிருக்கிறது.
பன்பானவர்களே......குர்ஆன் ஓதத் தெரியாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
பள்ளிக்கூடம் விட்டதும் நம் சமூகம் - இன்று தெரு முனைகளில் பலர் சூழ அரட்டையில் மூழ்குகிறோம்.
கண்ணியமானவர்களே....! இஸ்லாம் தெரியாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
அத்தா ஆசையாய் வாங்கிக் கொடுத்த ஆன்ட்ராய்டு ஃபோனில் பருவம் வரா சிறுவனிடம் கூட இன்று பல பாலியல் படங்கள் உள்ளது.
ஆம் தீனோர்களே.....! இறை தெரியாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
அத்தா அயல்நாட்டில், அம்மா டீவி நாடகத்தில், பிள்ளை தெரு முனைகளில்
நபி மீது நேசம் கொண்டோர்களே...! மார்க்கம் தெரியாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
கைப்பந்து, கால்பந்து என மும்முரமாய் என் சமூகம் தவறில்லை - பள்ளிக்கு (மஸ்ஜிதுக்கு) தொழுக அழைத்தால் மட்டும் நேரமில்லை என்று பதில் சொல்கிறார்கள்.
ஈமான் கொண்டவர்களே....! தொழத் தெரியாத ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
மகனைத் திருத்த முடியா தந்தை....
மனைவியை கண்டிக்க இயலா கணவன்....
கண்ட்ரோல் இல்லா குடும்பம்.....
முஃமின்களே.... இன்றைய காலகட்டத்தில் ஒழுக்கம் இல்லாத ஒரு சமூகமாக நமது இஸ்லாமிய சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்ற எனது மனவேதனையை இங்கு உங்களிடையே நான் பகிர்ந்து விட்டேன்.
அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே... நாம் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழ கூடாது என்பதை வல்லோன் அல்லாஹ் மன்னர் பெருமானார் ஸல் அவர்கள் மூலமாக தெளிவாக கூறிவிட்டான். அதன்படி அவர்களும் வாழ்ந்து சென்றார்கள். எனவே நாம் நபியை நேசித்து அவர்கள் காட்டிய வழியை சுவாசித்து வாழக்கூடிய நல்லோர்களாக நம் சமுதாயத்தில் உள்ள அனைவரையும் வல்லோன் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக