ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நல்ல காலம் பொறக்குது......! நல்ல காலம் பொறக்குது.....!







1. நல்ல காலம் பொறக்குது......! நல்ல காலம் பொறக்குது.....!

2. யோவ்.....! யாருகுய்யா நல்ல காலம் பொறக்குது.....? ஒனக்கா...?  இல்ல எனக்கா....?  அத மொதல்ல சொல்லு...!

1. ஜோசியம் பார்க்க நீங்க பைசா தந்தா அதன் மூலம் எனக்கு நல்ல காலம் பொறக்கப்போவுது....! நல்ல காலம் பொறக்க போகுது....!

2. ஏய்யா .. ஒனக்கு நல்ல காலம் பொறக்க நாங்க ஏய்யா காசு அழுவனும். நாங்க என்ன இழிச்சவாயங்கன்னு நெனச்சியா...?

1. அப்படி நெறையபேரு நாட்ல ஈன வாயனுங்களா இருக்கப்போயிதான் எங்கள மாதிரி ஜோசியருங்க பொழப்பே ஓடுது...!

2. ஜோசியரே.... ஒரு சின்ன சந்தேகம் அத கொஞ்சம் க்ளீயர் பண்றீங்களா...?   வேறொன்னுமில்ல. கொஞ்ச நாளவே எனக்கும் எம் பொஞ்சாதிக்கும் சரியா ஒத்துவர மாட்டேன்குது. அடிக்கடி சண்டையும் அடிதடியுமா இருக்கு. சண்டை நடக்கிறப்போ எது கைல கிடைக்குதோ அத தூக்கி அவ பாட்டுக்கு எம்மேல எறிஞ்சுடுற,..
போனவாட்டி ஒரு தடவை அப்டிதான் சண்டை போட்றப்போ குண்டாச்சட்டிய தூக்கி எறிஞ்சுட்டா.... நல்லவேள பக்கத்துல கெடந்த அண்டாவ தூக்கி அண்டாச்சட்டிகுள்ள குண்டாச்சட்டிய கேட்ச் பண்ணிட்டேன். இல்லேன்னா அன்னிக்கு எம்மண்ட ஒடஞ்சிருக்கும். இது என்ன காரணத்துனால ஜோசியரே...

1. கொஞ்சம் இருங்க பார்த்து சொல்லுறேன்............! ஆஹா.... தப்பு நடந்து போச்சி... தப்பு நடந்து போச்சி.....

2. என்னய்யா சொல்லுறே....

1. ஒங்க பொஞ்சாதியோட ஜாதகத்த ஆராஞ்சி பார்த்ததில மிக மோசமான செவ்வாய் தோஷம்னு என்னோட ஜோதிட அறிவு சொல்லுது. அதனாலதான் இந்த குழப்பம் எல்லாம்....

2. என்னய்யா சொல்லுற... நீ.....?  விஞ்ஞானிக இன்னிக்கு செவ்வாய் கிரகத்துக்கே சக்கர வண்டியவுட்டு ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா செவ்வாய் தோஷம் சனி தோஷம் உட்டு அடிச்சிகிட்டு இருக்க.

1. அவன் செவ்வாய் கிரகத்துக்கு சக்கர வண்டிய விட்டா என்ன.... இல்ல மாட்டு வண்டிய விட்டாதான் என்ன..  தோஷம்னா தோஷம்தான். தோஷம் சரியா இருந்தாதான் மனுசனுக்கு சந்தோசம். அத நல்லா தெரிஞ்சிக்கோ.

2. சரி அத விடுங்க இப்ப எம்பொஞ்சாதி வாயும் வயிறுமா இருக்கா. அவ எனக்கு என்ன புள்ளய பெத்து தரவான்னு கொஞ்சம் பாத்து சொல்லுய்யா.

1. அடிதடின்னு சொல்லுற, அண்டா குண்டான்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கதைவிட்ட ஆனா இப்ப என்னடான்னா வாயும் வயிறுமா நிக்குறாங்குற. இதுல ஒன்னும் கொறச்சல் இல்ல.

2. அதெல்லாம் என்னோட குடும்ப ரகசியம். அதெல்லாம் உனக்கெதுக்கு. முதல்ல எம் பொஞ்சாதிக்கு என்ன புள்ள பொறக்கும் அதச்சொல்லு ஜோசியரே.

1. கண்டிப்பா ஆம்பளபுள்ள தான் இதுல சந்தேகம் இல்ல நீங்க கவலையே படவேண்டாம்.

2. சரிங்க ஜோசியரே... ரொம்ப சந்தோசம். ஒருவேளை ஆம்பள புள்ள பொறக்காட்டி....?

1. பொம்பளபுள்ள தான்.... இதுல என்ன சந்தேகம் வேண்டிக் கிடக்கு.

2. அப்புறம் ஜோசியரே நம்மளோட வருஙகாலத்தைப் பத்தி கொஞ்சம் கணிச்சு சொல்றீங்களா...? எப்படி ரொம்ப பிரகாசமா இருக்குதா...

1. எங்க இருட்டு கசமாவுல இருக்கு. இன்னும் நாலு வருஷத்துக்கு நாய்படாத பாடுபடுவீங்க.

2. என்ன ஜோசியரே... இப்படி பெரிய குண்டா தூக்கிப் போட்டுடீங்க... அந்த நாலு வருஷத்துக்கு பின்னாடி நிலம்...

1. அதுக்குபின்னாடி என்ன.... அதுவே ஒங்களுக்கு பழக்கமாயிப் போயிரும். நீங்க ஒன்னுக்கும் கவலைபடாதிங்க.

2. சரி போனது போகட்டும். இதுவரைக்கும் நான் கேட்ட கேள்வி. நீ சொன்ன பதில் வச்சு இதப்படிக்கும் நெரய பேருக்கு உன்னோட வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் நல்லா வெளங்கி வெளுத்து போயிருக்கும். 
இருந்தாலும் ஜோசியக்காரன் மேல அதிகப்படியான ஈமான் கொண்டுள்ள நிறையப்பேர் சமுதாயத்துல இன்னும் இருக்காங்க.  அவுங்க புத்திய இன்னும் கொஞ்சும் தெளிய வைக்கும் முகமாக இன்னும் குடுகுடுப்பையை உருட்டி கொண்டிருக்கிற உன்னய ஓட வைக்கும் முகமாக உனக்கு இப்ப நான் ஒரு சின்ன டெஸ்ட் வைக்கப்போறேன். வைக்கட்டுமா... ஜோசியரே...

1. என்னய்யா பெரிய டெஸ்ட் வைக்கப்போற நான் எவ்வளவு பெரிய ஜோசியர். எனக்கே டெஸ்டா... வை வச்சுப்பார். அந்த வானத்த வில்லா வளைக்கனுமா... பூமிய கயிறா திரிக்கனுமா... இல்ல தண்ணி மேல நடக்கனுமா... எதுவானாலும் அது ஒரு சவாலாக எடுத்துகிட்டு நான் செஞ்சு காட்டுறேன். எனக்கு அந்த ஜக்கம்மா தொண இருப்பாடா...

2. அதெல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாம் இந்தா பாரு இதுல இரண்டு ரொட்டி இருக்கு இதுல ஒன்று எனக்கு இன்னொன்று உனக்கு இந்தா வச்சிக்க.

1. என்ன மேன்- ஏதோ டெஸ்ட் வக்கிறதாச் சொல்லிட்டு ஏங்கையில ரொட்டிய கொடுக்கிற சரி பரவாயில்ல கொண்டா வச்சுக்கிறேன். அடுத்து என்ன செய்யனும். உடனே சொல்லு.

2. இப்போ என்னோட ரொட்டிய பல துண்டுகளா பிச்சு இந்த டேபிள் மேல போடுவேன். நீயும் அதுமாதிரி செய்யனும். எங்க பிச்சுப்போடு பார்க்கலாம்.

1. அட இதென்ன பெரிய மலைய தூக்குற விஷயமா... இதோ ஒரு செகண்டுல பிச்சுபோட்றேன் பார்.

2. சரி இப்ப என்னோட துண்டுகளையும் உன்னோட துண்டுகளையும் ஒன்னா போட்டுக் கொழப்பு.

1. கொழப்பிட்டேன். கொழப்பி சாம்பார் ஊத்தி சாப்பிடவா... இல்ல வெறும் ரொட்டிய மட்டும் சாப்பிடவா... என்னய்யா சாமி செய்யனும். சீக்கிரம் சொல்லித்தொல நாக்குல எச்சி ஊறுது.

2. இரு ஜோசியரே... அவசரப்படதே. இப்ப நாம பிச்சுப்போட்ட ரொட்டியில நீ பிச்சுப்போட்ட துண்டுகளை மாத்திரம் தனியா பிரிச்சு எடு பார்க்கலாம்.

1. யோவ் என்ன விளயாடுறீய்யா... இல்ல நக்கல் பண்ணுறீய்யா.. அதெப்படியா நான் பிச்சு போட்ட ரொட்டிய மட்டும் தனியா பிரிச்சு எடுக்க முடியும்.. இது முடியுற காரியமா....

2. அதெல்லாம் எனக்கு தெரியாது. இப்ப ஏங்கண்ணு முன்னாடி உன்னொட துண்டுகளை மட்டும் தனியா பிரிச்சு எடுத்துகாட்டனும். ஏன் முழிக்கிற.... ஒன்னோட ஜக்கம்மாவ கூட்டியாந்து பிரிச்சு எடு ஜோசியரே....

1. ஜக்கம்மாவுக்கு குறி சொல்லத்தான் தெரியும். இந்த ட்ரெயினிங்கெல்லாம் நான் அதுக்கு கொடுக்கலியே சாமி. இது மொதல்லயே சொல்லியிருந்தா என்னோட துண்டுகள்ல ஒரு அடையாளமாவது போட்டு வெச்சுருப்பேனே......

2. இப்ப உன்னால பிரிச்சு எடுக்க முடியுமா... முடியாதா...

1. நிச்சயமா என்னால மட்டுமல்ல யாராலயும் முடியாது.

2. ஏன் முடியாதுங்குற... ரெண்டு ரொட்டி ஒன்ன நீ பிச்சு போட்ட. இன்னொன்ன நான் பிச்சுப்போட்டேன். நீதான் ரெண்டையும் ஒன்னாப்போட்டுக் கொழப்புன. இதபிரிச்சி என்னால எடுக்க முடியாதுங்குற.... யாராலயும் எடுக்க முடியாதுங்குற... பெறவு எப்டி சாமி நாளைக்கு நடக்குறத உன்னால கணிச்சு சொல்ல முடியும்... என்னய்யா இஞ்சிதின்ன குரங்கு மாதிரி முழிக்கிற...

1. அது வந்து சார்.....

2. என்னய்யா வந்து போயின்னு இழுக்குர இந்தா பார் இந்த மாதிரி நடுஜாமத்துல குடுகுடுப்பைய கையில வச்சுக் குலுக்கிட்டு நல்லகாலம் பொறக்குது..... நல்ல காலம் பொறக்குதுன்னு எங்க தூக்கத்த கெடுத்தன்னு வச்சுக்க, மவனே ... எங்களுக்கு நல்ல காலம் பொறக்குதோ இல்லயோ... ஒனக்கு கெட்ட காலம் பொறந்துரும் ஆமா. இது மனசுல வச்சிகிட்டு எங்கேயாவது மனுச மக்க இல்லாத காட்டுபக்கம் ஓடிரு ஆமா..

1. சரிங்க சாமி.. இனிமே இந்த பக்கம் தல வச்சுக்கூட படுக்கமாட்டேன் சாமி. அடியே ஜக்கம்மா.... வா...வா... நாம வேற தெரு பக்கம் போவோம். எல்லாத்துக்கும் நல்ல நேரம் கெட்ட நேரம்னு குறி சொல்லுவியே... அதமாதிரி இன்னிக்கி நான் தொழிலுக்கு புறப்படுறப்போ அடேய்...  இன்னிக்கு உன்னோட கெரஹம் சரியில்லடான்னு லேசா எனக்கு க்ளு கொடுத்திருக்கக்  கூடாதா...

ஐய்யோ..... என்ன இப்படி தனியா பொலம்ப வச்சிட்டியே... இருடி ஒன்னய வச்சிக்கிறேன்.

2. இன்னும் என்னய்யா முணங்கிகிட்டு  இருக்க...

1. இந்தா போயிட்டேன் சாமி.                   


               தொகுப்பு கே.எஸ். ஷாகுல் ஹமீது மஸ்லஹி. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக