புதன், 30 மே, 2012

இரவு வணக்கத்தை அனைவரும் சுவைக்க முயற்சி செய்வோம்.









இரவு வணக்கமென்பது நாம் அனைவரும் சுவைக்க வேண்டிய ஒன்றாகும். அதற்கான ஆசை எம்மனைவரிலும் இன்னும் இன்னுமின்னும் வளர வேண்டும். நாம் எமது முன்னைய சமுதாயத் தவர்களோடு நன்மைகளால் போட்டுபோடுவதற்கான மிகப் பெரும் சந்தர்ப்பம் இந்த இரவு வணக்கமாகும்.

எம் உடம்பு சோம்பல் பட்டாலும் கூட நாம் முனைப்போடு செய்யவேண்டிய ஒரு அமலாக இது காணப்படுகிறது. கல்வி கற்கும் மாணவனுக்கு கல்வியில் தேற இது ஒரு கட்டுச்சாதம். கற்பிக்கும் ஆசான் கற்பித்தலில் தேற இது ஒரு கட்டுச்சாதம். வாழ்வை ருசிக்க வேண்டுமென விரும்பும் இளைஞனுக்கான ஒரு கட்டுச் சாதம். இல்லர வாழ்வில் சந்தோசம் விளைய வேண்டுமென விரும்பும் தம்பதியினருக்கான ஒரு கட்டுச்சாதம்.

கியாமுல் லைல் வீட்டின் சிறந்த தலைவனாக இருக்க விரும்புபவருக்கான ஒரு கட்டுச்சாதம். வீட்டின் சிறந்த தலைவியாக இருக்க வேண்டுமே என விரும்பும் பெண்ணுக்கான ஒரு கட்டுச் சாதம். தனது தொழிலை திறன் பட செய்ய வேண்டும் என விரும்பும் தொழிலாளியின் கட்டுச் சாதம். வியாபாரத்தில் இலாபம் கிடைக்க வேண்டுமென பாடுபடும் வியாபாரிக்கான கட்டுச் சாதம். இஸ்லாமிய அழைப்பாளனுக்கான மிகப்பெரும் கட்டுச் சாதம். எனவேதான், மிகப்பெரும் தாஈயான நபி (ஸல்) அவர்களுக்கு இரவில் நின்று வணக்குவது பர்ளாக காணப்பட்டது.

போர்வை போர்த்திக் கொண் டிருப்பவரே! இரவில் -சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் அல் குர்ஆனைத் தெளிவாக தஜ்வீத் முறைப்படி ஓதுவீராக. நிச்சயமாக, நாம் விரைவில் கனதியான ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.” (73:1-5)

நாம் இரவு வணக்கத்தின் பயன்களை அறிந்து கொள்வது எமக்கு இன்னும் ஒரு உத்வேகத்தை தருவதாக இருக்கும் என்ற வகையில் அதன் சில பயன்களை இங்கு நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.

கியாமுல் லைலின் பயன்கள்:
01. அல்லாஹ்வின் திருப்தி கிட்டும்.
ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை (யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக. இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது மறைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக. இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக இதனால் (நன்மை களடைந்து) நீர் திருப்தி பெறலாம்.” (20:130)

02. இரவு வணக்கம் அல்லாஹ்வைப் பற்றிய தெளிவைத் தரும்.
நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு) வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்தக் கூடியது.” (73:6)

03. நல்லடியார் களின் பழக்க மாகும்.
நீங்கள் கியாமுல் லைல்லை பேணிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு முன்னிருந்த நல்லடியார்களின் பழக்கமாகும்.” (ஹதீஸ்)


04. பொடுபோக்கை நீக்கும்.
யார் அல்குர்ஆனின் 10 வசனங்களை ஓதி நின்று வணங்குகிறாரோ அவர் பொடுபோக்கானவர்களின் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார். யார் அல்குர்ஆனின் 100 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களில் சேர்க்கப்படுவார். யார் அல்குர்ஆனின் 1000 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் பலமடங்கு நன்மைகள் செய்தவர்களில் சேர்க்கப்படுவார்.” (ஹதீஸ்)


05. கியாமுல் லைல் அல்லாஹ் வுடனான உறவையும் நெருக்கத் தையும் தரும்.
நீங்கள் இரவு நேர வணக்கத்தைப் பேணிக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு முன்னிருந்தோரின் பழக்கமாகும். மட்டுமன்றி, அது அல்லாஹ்வுடனான நெருக்கத்தையும் தரும்.” (ஹதீஸ்)
இமாம் ஹஸனுல் பஸ்ரி கூறுவார்: இரவின் நடுப்பகுதியில் எழுந்து, தொழுவதை விட அல்லாஹ்வை ஒரு அடியான் நெருங்குவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாக வேறொன்றையும் நான் அறியவில்லை.


06. கியாமுல் லைல் பாவத்தை விட்டும் தூரமாக்கும், பாவமன் னிப்பைக்கொண்டு தரும், உடம் பிலுள்ள நோயை அகற்றும்.
இரவு நேர வணக்கம் அது அல்லாஹ்வுடனான நெருக்கத்தை தருவதோடு, பாவங்களை விட்டும் தடுக்கும், பாவமன்னிப்பைத் தரும், உடம்பிலுள்ள நோயையும் நீக்கிவிடும்.” (ஹதீஸ்)


07. கியாமுல் லைல் தொழுபவர் களுக்கு அல்லாஹ் மறுமையில் ஒளி வழங்குவான்.
அந்நாளில் சில முகங்கள் ஒளியினால் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80: 38,39) இந்தப் பிரகாசம் கியா முல் லைலின் காரணமாகவே ஏற்படுகிறது என இப்னு அப்பாஸ் (றழி) இவ்வசனத்திற்கு விளக்க மளிக்கிறார்.

இரவு நேரத்திலே நின்று வணங்கும் மனிதர்களின் முகங்கள் மிக அழகாக இருப்பதற்கான காரணமென்ன?” என இமாம் ஹஸனுல் பஸ்ரியிடம் வினவப்பட்ட போது, அவர்: ஏனெனில், அவர்கள் தம்மை இறைவனுக்காக அர்ப்பணித்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு பிரகாசத்தை வழங்கினான்என பதிலளித்தார்.


08. துஆ ஏற்றுக்கொள்ளப்படும்.
நாம் சில மனிதர்களிடம் எமக்காக துஆக்கேட்குமாறு வேண்டியிருப்போம். அவர்களும் எமக்காக அல்லாஹ்விடம் துஆக் கேட்டிருப்பார்கள். அது எமது வாழ்விலும் தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கும். நாம் அதற்கான காரணத்தைத் தேடிப் பார்த்திருக்க மாட்டோம். அவர்கள் இரவுநேர வணக்கவாளிகளாக இருப்பதே அதன் காரணமாகும்.
யார் இரவு நேரத்தில் எழுந்து,
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், அல்ஹம்து லில்லாஹி வ ஸுப்ஹானல்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்
எனக் கூறி, யா அல்லாஹ் எனது பாவங்களை மன்னித்தருள்வாயாக என பிராத்திக்கிறாரோ அல்லது துஆக் கேட்கிறாரோ அவரின் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.” (புஹாரி)


09. கியாமுல் லைல் ரஹ்மத் தைப் பெற்றுத்தரும்.
எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (39:9)
யார் இரவு நேரத்தில் எழுந்து தொழுது, தனது மனைவியையும் எழும்பி தொழச்செய்து, அவள் எழும்ப மறுத்தால் அவளின் முகத்தில் நீரைத் தெளிப்பவருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும். அதுபோல ஒரு பெண் இரவு நேரத்தில் எழுந்து தொழுது, தனது கணவனையும் எழும்பி தொழச் செய்து, அவன் எழும்ப மறுத்தால் முகத்தில் நீரைத் தெளிப் பவளுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும்.” (ஹதீஸ்)


10. சுவனத்தில் உயர் அந்தஸ்து களைத் தரும்
மற்ற மனிதர்கள் தூங்கும் நேரத்தில் எமது படுக்கையிலிருந்து எழுந்து வணக்கம் செய்வது என்பது மிகப் பெறுமதியான ஒன்றாகும். அதற்கு அல்லாஹ் அதிக கூலிகளைத் தருவான் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் இதனைப் பின்வருமாறு தெளிவு படுத்துகிறார்கள்:
சுவனத்திலே சில அறைகள் காணப்படுகின்றன. அவற்றின் உட்புறமிருந்து பார்த்தால் வெளிப்புறம் தென்படும். வெளிப்புற மிருந்து பார்த்தால் உட்புறம் வெளிப்படும். யார் உணவளித்து, ஸலாத்தைப் பரப்பி, மனிதர்கள் தூங்கும் வேளையில் நின்று வணங்குகிறாரோ அவருக்காக அல்லாஹ் அவ் அறைகளைத் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.” (ஹதீஸ்)


11. எதிரிகளோடு வெற்றிகிடைப்பதற்கான வழி கியாமுல் லைல்.
வரலாற்றில் முஸ்லிகளுக்கு கிடைத்த வெற்றிகளை எடுத்து நோக்கினால் கூட அவை கியாமுல் லைலுடன் சம்பந்தப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
எனவே, சகோதர சகோதரிகளே இவ்வாறான பல பலன்களைச் சுமந்திருக்கும் கியாமுல் லைலை பேணித்தொழுபவர்களாக அல்லாஹ் எம்மையும் உங்களையும் மாற்றியருள்வானாக. ஆமீன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக