இளைஞர்களின் ஆற்றல்
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى اَشْرَفِ الْاَنْبِيَاءِ وَالْمُرْسَلِيْنَ ، سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ ، اَمَّا بَعْدُ
اللَّهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً
إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى
قال رسول الله صلى الله عليه وسلم
سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ... وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ
تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ ، وَعَنْ عِلْمِهِ فِيمَا فَعَلَ ، وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَا كَتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ ، وَعَنْ جِسْمِهِ فِيمَا أَبْلاَهُ
இளமைப் பருவம் என்பது மனித வாழ்க்கையின் பொற்காலம். அது ஆற்றல், வேகம், லட்சியம், எழுச்சி ஆகியவை நிறைந்த ஒரு விசேஷமான பருவமாகும். சமூகம், சமுதாயம் மற்றும் தேசத்தின் தூண்களாக விளங்குபவர்கள் இளைஞர்களே.
அல்லாஹ் மனித வாழ்க்கையை மூன்று கட்டங்களாகப் பிரிக்கிறான்:
பலவீனமான குழந்தைப்பருவம்.
பலமிக்க இளமைப்பருவம்.
மீண்டும் பலவீனமடையும் முதியோர்பருவம்.
குழந்தைப் பருவத்தில் ஆற்றல் இருக்கும், ஆனால் அறிவும் சுதந்திரமும் இருக்காது. முதியோர்பருவத்தில் அனுபவமும் அறிவும் இருக்கும், ஆனால் செயல்பட உடல் வலிமை இருக்காது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட இளமைப் பருவத்தில்தான் ஆற்றலும், அறிவும், செயல்படும் திறனும் ஒன்றாக இணைகின்றன.
மறுமை நாளில் ஐந்து கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வரை. எந்த ஒரு மனிதனும் தன் பாதங்களை நகர்த்த முடியாது; அதில் மிக முக்கியமானது:
"உன்னுடைய இளமைப் பருவத்தை எதில் கழித்தாய்?"
நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ்விடம் கணக்குக் காட்ட வேண்டும்.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தைக் கவனியுங்கள்! அநீதிக்கும் அநியாயத்திற்கும் எதிராக நாட்டின் இளைஞர்கள் ஓரணியில் திரண்டபோது, மாபெரும் அதிகாரம் படைத்த மத்திய அமைச்சரே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானது.
ஆட்சியதிகாரம், பணபலம், அரசு இயந்திரம் என அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், இளைஞர்களின் தூய்மையான லட்சியமும், ஒன்றுபட்ட வீரியமும் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த டெல்லி சம்பவம் ஒரு வரலாற்றுச் சான்றாகும்!
இறைவன் குர்ஆனில் இளைஞர்களின் ஆற்றலைப் பற்றிக் குறிப்பிடும்போது:
إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى
"நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை ஈமான் கொண்ட (நம்பிக்கை கொண்ட) இளைஞர்கள்; மேலும் அவர்களுக்கு வழிகாட்டலை நாம் அதிகப்படுத்தினோம்."
(சூரா அல்-கஹ்ப்: 13)
குகைவாசி இளைஞர்கள் அநியாயக்கார மன்னனின் ஆட்சியை எதிர்த்துத் துணிச்சலாக நின்றதைப் போல, இன்றைய இளைஞர்களும் நீதியின் பக்கம் நிற்கும்போது இறைவனின் உதவியும் சமுதாயத்தின் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும்.
نحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَاَهُمْ بِالْحَـقِّ اِنَّهُمْ فِتْيَةٌ اٰمَنُوْا بِرَبِّهِمْ وَزِدْنٰهُمْ هُدًى
(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.(அல்குர்ஆன் : 18:13)
இந்த திருக்குர்ஆன் வசனம் 'அஸ்ஹாபுல் கஹ்ப்' (குகைவாசி இளைஞர்கள்) பற்றிய வரலாற்றின் மிக முக்கியத் திருப்பத்தைத் தெளிவுபடுத்துகிறது. சமுதாய மாற்றத்திற்கும் இறைநம்பிக்கைக்கும் இளைஞர்களின் ஆற்றல் எவ்வாறு அடிப்படையாக அமைகிறது என்பதை இந்த வசனம் விரிவாகப் பறைசாற்றுகிறது.
"நாம் உமக்கு உண்மையை அறிவிக்கிறோம்" (نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُم بِالْحَقِّ)
இந்த வசனத்தின் தொடக்கத்தில் அல்லாஹ், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "நாம் உமக்கு அவர்களின் செய்தியை உண்மையைக் கொண்டு கூறுகிறோம்" என்கிறான்.
யூதர்களும் மக்கா முஷ்ரிக்குகளும் இளைஞர்களின் இந்த வரலாற்றைப் பற்றிப் பல புனைவுகளையும் கட்டுக்கதைகளையும் நம்பிக் கொண்டிருந்தனர்.
அல்லாஹ் அனைத்துப் புனைவுகளையும் களைந்து, எது உண்மையோ அதைத் தனது வஹி (இறைச்செய்தி) மூலமாகத் தெளிவாக எடுத்துரைக்கிறான்.
அல்லாஹ் இந்த வசனத்தில் குகைவாசிகளைக் குறிப்பிடும்போது 'ஃபித்யத்' (فِتْيَةٌ - இளைஞர்கள்) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறான்.
சத்தியத்தை ஏற்பதிலும், கொள்கைக்காக உறுதியோடு நிற்பதிலும் முதியவர்களை விடவும், சமுதாயக் கட்டுப்பாடுகளுக்குப் பயப்படாத இளைஞர்களே முன்நிற்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
"தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்" (آمَنُوا بِرَبِّهِمْ)
அந்த இளைஞர்கள் வாழ்ந்த நாட்டில் அரசனும், மக்களும் விக்கிரக ஆராதனையிலும், வழிகேட்டிலும் மூழ்கியிருந்தனர்.
முழுச் சமுதாயமும் அநியாயத்தின் பக்கம் நின்றபோதும், அந்த இளைஞர்கள் கூட்டத்தோடு கூட்டமாக அடித்துச் செல்லப்படாமல், தங்கள் சுய சிந்தனையால் இறைவனின் ஏகத்துவத்தை (தவ்ஹீத்) உணர்ந்து நம்பினார்கள்.
அதிகார பலமும், அரச தண்டனையும் தங்களுக்கு எதிராக இருக்கும் என்று தெரிந்தே சத்திய ஈமானை நெஞ்சில் ஏந்தினார்கள்.
இங்கு அல்லாஹ் அவர்களை 'இளைஞர்கள்' என்று தனித்துவமாகக் குறிப்பிடுகிறான். தஃப்ஸீர் அறிஞர்கள் (இப்னு கஸீர் போன்றோர்) இதற்குக் கொடுக்கும் விளக்கம் என்னவெனில்:
இளைஞர்கள் எப்போதுமே உண்மையை (ஹக்கை) மிக எளிதாகவும், விரைவாகவும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவர்கள்.
அன்றைய சமூகத்தில் பெரியவர்கள், முதியவர்கள் தங்களின் பாரம்பரியச் சடங்குகளில் மூழ்கியிருந்தபோது, இந்த இளைஞர்கள் மார்க்கத்தின் தூய்மையைப் புரிந்துகொண்டனர்.
இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்றுக்கொண்டவர்களில் பெரும்பாலோர் இளைஞர்களாகவே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகால இஸ்லாமியர்களின் வயதுப் பட்டியல் (தோராயமாக)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 40 வயதில் நுபுவ்வத் (தூதுத்துவம்) கிடைத்தது. அப்போது குரைஷிகளின் மூத்த தலைவர்கள் பலர் நபியவர்களை எதிர்த்தபோது, தங்களின் 10, 20 மற்றும் 30-களின் ஆரம்பத்தில் இருந்த இளைஞர்களே இஸ்லாத்தின் தூண்களாக வந்து நின்றனர்.
ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஏற்ற வயது (தோராயமாக) 15 முதல் 30 வரை
அலி இப்னு அபீ தாலிப் (ரலி)8 முதல் 10 வயது
ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி)15 முதல் 16 வயது
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி)13 முதல் 16 வயது
அர்கம் இப்னு அபில் அர்கம் (ரலி)16 வயது
ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி)17 வயது
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)16 முதல் 18 வயது
ஜஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி)18 முதல் 20 வயது
முஸ்அப் இப்னு உமைர் (ரலி)24 வயது
உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி)30 முதல் 34 வயது
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)30 வயது
அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் போது சுமார் 38 வயதாக இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஆரம்பகால ஸஹாபாக்களின் சராசரி வயது 15 முதல் 30-க்குள் தான் இருந்தது.
தாருல் அர்கம்
இஸ்லாத்தின் முதல் பயிற்சி மையம் (First Academy of Islam):
மக்காவில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கடுமையான சித்திரவதைகளும் அச்சுறுத்தல்களும் நிலவிய காலத்தில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்கத் தேர்ந்தெடுத்த முதல் ரகசிய தளம் ஒரு 16 வயது இளைஞனின் இல்லம் ஆகும்.
அரபுக் கோத்திரங்களுக்கு இடையே கடுமையான பகை நிலவிய சூழலில், அதுவும் குரைஷிகளின் கண்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில், தன் வீட்டை நபிகளாருக்கு அர்ப்பணிப்பது என்பது மரணத்தைத் தன் கையிலெடுப்பதற்குச் சமம். அந்த மாபெரும் ஆபத்தையும் பொருட்படுத்தாத ஈமானியத் துணிச்சல் அந்த இளைஞர் அர்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இருந்தது.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுபவம் வாய்ந்த மூத்தவர்களின் இல்லங்களைத் தேர்ந்தெடுக்காமல், ஒரு இளம் சஹாபியின் இல்லத்தைத் தேர்ந்தெடுத்தது, மார்க்கப் பணிகளில் இளைஞர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. நூல்:அல்-பிதாயா வந்-நிஹாயா (Al-Bidayah wan-Nihayah)
சமுதாயக் கட்டமைப்பில் இளைஞர்கள்:
இன்று நமது சமுதாயத்திலும் பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நற்பணிகளில் இளைஞர்களுக்கு முன்னுரிமையும் பொறுப்புகளும் வழங்கப்பட வேண்டும். இளைஞர்கள் வெறும் தொண்டர்கள் அல்ல; அவர்கள் சமுதாயத்தின் தூண்கள் என்பதை தாருல் அர்கம் சம்பவம் உணர்த்துகிறது.
தியாக உள்ளம்:
அர்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது சொத்தையும் இல்லத்தையும் சத்திய மார்க்கத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தது போல, இன்றைய இளைஞர்களும் தங்கள் அறிவையும், நேரத்தையும், பொருளாதாரத்தையும் சமுதாய நலனுக்காகச் செலவிட முன்வர வேண்டும்.
சுமார் 20 வயதே நிரம்பிய ஒரு வாலிபர்,
எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அந்நிய தேசத்து மன்னரின் அவையிலும் அஞ்சாது நின்று, அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடனும் விவேகத்துடனும் பேசியது இளைஞர்களின் தலைமைப் பண்பிற்கு மாபெரும் சான்றாகும்.
மக்காவின் கொடுமைகள் தாங்க முடியாமல் முஸ்லிம்கள் அபிசீனியாவிற்குச் சென்றபோது, குரைஷிகள் அம்ர் இப்னு அல்-ஆஸ் தலைமையில் பெருமளவு பரிசுகளுடன் தூதுக்குழு ஒன்றை நஜ்ஜாஷி மன்னனிடம் அனுப்பி அகதிகளைத் திரும்ப ஒப்படைக்குமாறு கோரினர்.
அப்போது மன்னரின் அரசவையில் ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆற்றிய உரை:- "மன்னரே! நாங்கள் அறியாமையில் மூழ்கியிருந்தோம். சிலைகளை வணங்கினோம், செத்ததை உண்டோம், மானக்கேடான செயல்களைச் செய்தோம், உறவுகளைத் துண்டித்தோம், வலிமைமிக்கவர் பலவீனமானவரைச் சுரண்டினார். இந்த நிலையில் தான் இறைவன் எங்களுக்கு இடையே ஒரு தூதரை அனுப்பினான். அவரது வம்சாவளி, உண்மைத்தன்மை, நாணயம் மற்றும் கற்பொழுக்கத்தை நாங்கள் அறிவோம்..."
இஸ்லாம் தங்களை எவ்வாறு மனிதப்பண்புள்ளவர்களாக மாற்றியது என்பதையும், ஓரிறை வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் விளக்கி, குரைஷிகள் தங்களை ஏன் சித்திரவதை செய்கிறார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார்.
மன்னரும் அவரது மதகுருமார்களும் கிறிஸ்தவர்களாக இருந்ததால், நஜ்ஜாஷி மன்னர் குர்ஆனிலிருந்து ஏதாவது ஓதிக்காட்டக் கோரிய போது, ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸூரா மர்யமின் ஆரம்ப வசனங்களை இனிமையாக ஓதிக்காட்டினார்.
இதைக் கேட்ட நஜ்ஜாஷி மன்னரும் அவையிலிருந்த சான்றோர்களும் கண்கலங்கினர். "நிச்சயமாக இதுவும், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொண்டு வந்த மார்க்கமும் ஒரே ஒளியிலிருந்தே வந்திருக்கின்றன" என்று கூறி, முஸ்லிம்களைத் திருப்பித் தர மறுத்துத் தன் நாட்டில் பாதுகாப்பு அளித்தார். நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம் (Sirat Ibn Hisham)
மக்காவின் செல்லப் பிள்ளை (ஆடம்பர வாழ்வு):
இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் முஸ்அப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்காவிலேயே மிகவும் அழகான, விலை உயர்ந்த ஆடைகளை அணியக்கூடிய, அரிய வாசனைத் திரவியங்களைப் பூசக்கூடிய பெரும் செல்வந்தக் குடும்பத்து இளைஞராக இருந்தார். மக்கா வீதிகளில் அவர் நடந்து சென்றால், அவர் பூசிய வாசனை திரவியத்தின் நறுமணத்தைக் வைத்தே "முஸ்அப் போகிறார்" என்று மக்கள் அறிந்துகொள்வார்கள்.
இஸ்லாத்தை ஏற்ற செய்தி அறிந்ததும் அவரது தாயார் அவரது அனைத்துச் சொத்துக்களையும் பறித்து, வீட்டிலிருந்தும் வெளியேற்றினார். ஆடம்பர வாழ்வை இழந்து, எளிய ஆடையை அணிந்து, பசியாலும் வறுமையாலும் தோலின் நிறம் மாறும் அளவுக்கு மார்க்கத்திற்காக அத்தனை தியாகங்களையும் தாங்கிக் கொண்டார்.
முதல் அகபா உடன்படிக்கைக்குப் பிறகு, மதீனா மக்களுக்குக் குர்ஆனைக் கற்றுத்தரவும், மார்க்கப் பிரச்சாரம் செய்யவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தேர்ந்தெடுத்தது இந்த 24 வயது இளைஞரைத்தான்.
அவரது மென்மையான அணுகுமுறை, நாவன்மை, மற்றும் ஆழமான ஈமானிய ஈர்ப்பு ஆகியவற்றால் மதீனாவின் பெரும் தலைவர்களான ஸஃது இப்னு முஆத் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் உஸைத் இப்னு ஹுளைர் ரலியல்லாஹு அன்ஹு போன்றோர் இஸ்லாத்தைத் தழுவினர். குறுகிய காலத்தில் மதீனாவின் ஒவ்வொரு வீட்டிலும் இஸ்லாம் நுழைவதற்குக் காரணமாகத் திகழ்ந்தார்.
உஹத் போரில் இஸ்லாமியப் படையின் கொடியை ஏந்தி வீரப்போர் புரிந்தார். எதிரிகள் அவரது வலது கரத்தை வெட்டியபோது இடது கரத்தால் கொடியைப் பிடித்தார்; இடது கரமும் வெட்டப்பட்டபோது அதைத் தன் நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு ஷஹீதானார்.
அவர் மரணித்தபோது உடலைப் போர்த்துவதற்கு முழுமையான ஒரு துணிகூட இருக்கவில்லை. தலையை மூடினால் கால்கள் தெரிந்தன; கால்களை மூடினால் தலை தெரிந்தது. இறுதியில் தலையைத் துணியால் மூடி, கால்களை 'இத்கிர்' என்ற புற்களால் மூடி அடக்கம் செய்தனர். இதைக் கண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்ணீர் வடித்தார்கள்.நூல் புகாரி மற்றும் அல்இஸாபா
இளைஞர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கான சமூகக் காரணம்
அன்றைய அரபுக் குலங்களின் மூத்த தலைவர்கள் (உதாரணமாக: அபூஜஹ்ல், அபூ லஹப், உக்பா போன்றோர்) தங்களின் பாரம்பரியப் பழக்கவழக்கங்கள், அதிகாரம், சமூக அந்தஸ்து மற்றும் அகந்தை காரணமாக நபியவர்களின் போதனைகளை ஏற்க மறுத்தனர்.
ஆனால், இளைஞர்களிடம் அந்த 'ஈகோ' (Ego) இருக்கவில்லை. அவர்களிடம் உண்மையை ஏற்கும் பக்குவமும், புதிய மற்றும் நேர்மையான சித்தாந்தங்களை நோக்கிச் செல்லும் துணிச்சலும் இருந்தது.
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்றுக் கொண்டவர்களில் பெரும்பாலோர் இளைஞர்களாகவே இருந்தனர். முதியவர்கள் தங்களின் பழைய மதத்திலேயே நீடித்தனர்; அவர்களில் சிலரைத் தவிர வேறு யாரும் இஸ்லாத்திற்கு வரவில்லை" என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்கச் சட்டங்களில் முதன்மையானவர்:
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிக் கூறும்போது:
"என் சமுதாயத்தில் ஹலால் (அனுமதிக்கப்பட்டது) மற்றும் ஹராம் (தடுக்கப்பட்டது) பற்றிய ஆழமான அறிவைப் பெற்றவர் முஆத் இப்னு ஜபல் ஆவார்." (நூல்: திர்மிதி, இப்னு மாஜா)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் வாழ்நாளின் இறுதியில், யெமன் தேசத்திற்கு மார்க்கத்தைப் போதிக்கும் ஆசிரியராகவும், நீதிபதியாகவும் (காழி), ஆளுநராகவும் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்பியபோது அவர்களின் வயது 21 அல்லது 22 மட்டுமே!
நபிகளார்: "உன்னிடம் ஒரு பிரச்சனை வந்தால் எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?"
முஆத்: "அல்லாஹ்வின் திருக்குர்ஆனைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்."
நபிகளார்: "அல்லாஹ்வின் புத்தகத்தில் அது கிடைக்கவில்லை என்றால்?"
முஆத்: "அல்லாஹ்வின் தூதரின் சுன்னா (ஹதீஸ்) மூலம் தீர்ப்பளிப்பேன்."
நபிகளார்: "அங்கேயும் அது கிடைக்கவில்லையெனில்?"
முஆத்: "எனது சொந்த அறிவைக் கொண்டு (குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில்) சுயாதீனமாக ஆய்வு (இஜ்திஹாத்) செய்து தீர்ப்பளிப்பேன்."
இதைக் கேட்ட நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மார்பில் கைவைத்து, "அல்லாஹ்வின் தூதரின் தூதருக்குத் தகுந்த வழியைக் காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!" என்று மகிழ்ச்சியோடு கூறினார்கள்.நூல்:ஸஹீஹ் அல்-புகாரி
குர்ஆன் சித்தரிக்கும் வாலிபர் புரட்சி
சூரா அல்-அன்பியா (21:60) வசனத்தின் தொடர்ச்சியாக திருக்குர்ஆன் இந்த நிகழ்வை விவரிக்கிறது:
قَالُوا سَمِعْنَا فَتًى يَذْكُرُهُمْ يُقَالُ لَهُ إِبْرَاهِيمُ
"இளைஞர் ஒருவர் அவற்றைப் பற்றி பேசுவதை நாங்கள் கேட்டிருக்கிறோம்; அவருக்கு 'இப்ராஹீம்' என்று பெயர் சொல்லப்படுகிறது எனக் கூறினர்."(சூரா அல்-அன்பியா: 60)
சிலைகளை உடைத்துவிட்டு, அதில் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டி வைத்த இளம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் "இந்த பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்களேன்" என்றபோது மக்கள் தலைகுனிந்தனர்.
நம்ரூத் என்ற அன்றைய நாட்டின் மாபெரும் சர்வாதிகாரி மற்றும் அவனது அரசவையை எதிர்த்து, "என் இறைவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான், உன்னால் முடிந்தால் மேற்கில் உதிக்கச் செய்!" என்று நேருக்கு நேர் வாதிட்ட ஈமானிய தைரியம் அந்த வாலிபருக்கு இருந்தது. நூல்: தஃப்சீர் இப்னு கதீர் (Tafsir Ibn Kathir):
நபிமார்களின் தோழர்களும் இளைஞர்களே!
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மார்க்க அறிஞரான ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்திப்பதற்காக நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டபோது, அவர்களுடன் இருந்த இந்த வாலிபரைப் பற்றித் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது:
وَإِذْ قَالَ مُوسَىٰ لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّىٰ أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا
"மூஸா தம் வாலிபரிடம்: 'நான் இரு கடல்களும் சந்திக்கும் இடத்தை அடையும் வரை, அல்லது பல ஆண்டுகள் தொடர்ந்து பயணிக்கும் வரை (என் பயணத்தை) நிறுத்த மாட்டேன்' என்று கூறியதை (நபியே!) நினைவூட்டுவீராக!" (சூரா அல்-கஹ்ப்: 60)
'ஃபத்தாஹு' (فَتَاهُ) எனும் சொல்லாடல்:
அரபு மொழியில் 'ஃபதா' (فَتَى) என்றால் வீரியமும், நற்பண்பும், சேவை மனப்பான்மையும் கொண்ட வாலிபர் என்று பொருள். மூஸா அலைஹிஸ்ஸலாம் போன்ற மாபெரும் இறைத்தூதருக்கு ஒரு வாலிபர் துணையாகவும் பணிவிடை செய்பவராகவும் சென்றது, இளைஞர்கள் சான்றோர்களின் சகவாசத்தில் இருப்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
அறிவைத் தேடும் பயணத்தில் வாலிபரின் பங்கு:
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் உணவிற்காக வறுத்த மீனை எடுத்துச் செல்லும் பொறுப்பு யூஷா இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் என்ற இந்த வாலிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பயணம் மிகக் கடினமாக இருந்தபோதிலும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குத் துணையாக அவர்கள் சளைக்காமல் பயணித்தார்கள்.
பாறையின் அருகில் ஓய்வெடுத்தபோது அந்த மீன் உயிர்மீண்டு கடலில் நீந்திச் சென்றதை வாலிபர் கவனித்தார். பின்னர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அதைச் சொல்ல மறந்துவிட்டதை நினைவுகூர்ந்து, தன் தவறை உடனடியாக ஒப்புக் கொண்டு உண்மையைக் கூறினார் (சூரா அல்-கஹ்ப்: 63).
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மறைவுக்குப் பிறகு, அல்லாஹ் யூஷா இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நபித்துவத்தை (Prophethood) வழங்கிப் பனூ இஸ்ராயீல்களின் தலைவராக நியமித்தான்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களால் கைப்பற்ற முடியாத 'பைத்துல் முகத்தஸ்' (ஜெருசலேம்) நகரத்தை அல்லாஹ் யூஷா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தலைமையின் கீழ்தான் வெற்றி கொள்ளச் செய்தான்.
பைத்துல் முகத்தஸை வெற்றி கொள்ளும் போரின் போது, வெள்ளிக்கிழமை சூரியன் மறையும் தருவாயில், "அல்லாஹ்வின் கட்டளையால் சூரியனே நில்!" என்று யூஷா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கட்டளையிட்டபோது, சூரியன் வானத்தில் அப்படியே ஸ்தம்பித்து நின்றது எனும் மாபெரும் அற்புதமும் நிகழ்ந்தது.
'ஹவாரிய்யூன்கள்’
யூத சதிகாரர்களும் அன்றைய ரோமானிய அதிகாரிகளும் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படுகொலை செய்வதற்காகத் தேடி அலைந்தபோது, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது 12 'ஹவாரிய்யூன்' (சீடர்கள்) அடங்கிய குழுவுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள்.
அப்போது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சீடர்களை நோக்கி:
"உங்களில் யார் என் சாயலைப் பெற்று, எனக்காகக் கொல்லப்பட்டு, சுவர்க்கத்தில் என் அந்தஸ்தைப் பெற முன்வருகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அங்கிருந்த மூத்த சீடர்கள் அமைதியாக இருந்த நிலையில், அக்குழுவிலேயே மிகக் குறைந்த வயதுடைய ஒரு இளம் வாலிபர் எழுந்து, "நான் தயார்!" என்று கூறினார்.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், "நீ அமர்!" என்று கூறிவிட்டு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்கள். இரண்டாவது முறையும், மூன்றாவது முறையும் அந்த இளம் வாலிபரே எழுந்து நின்று தன் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்தார்.
இறுதியில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், "ஆம், நீரே அவர்!" என்று கூறி அவருக்கு வாழ்த்தளித்தார்கள். உடனடியாக அல்லாஹ் அந்த இளம் வாலிபருக்கு நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உருவ அமைப்பைக் கொடுத்தான். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீட்டின் மேல்கூரை வழியாக விண்ணகத்திற்கு உயர்த்தப்பட்டார்கள்.
பகைவர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது, ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சாயலிலிருந்த அந்த இளம் வாலிபரையே பிடித்துச் சென்று சிலுவையில் அறைந்து கொன்றனர்.
ஒரு இறைத்தூதரைக் காப்பதற்காகத் தன் இளமையையும் உயிரையும் ஈந்த மாபெரும் தியாகியாக அந்த வாலிபர் வரலாற்றில் நிலைபெற்றார்.
திருக்குர்ஆன் சான்று:
مَنْ أَنصَارِي إِلَى اللَّهِ ۖ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ
'அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவியாளர்கள் யார்?' என்று கேட்டார். அதற்கு 'ஹவாரிய்யூன்' (சீடர்கள்): 'நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள்; நாங்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்டோம்; நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்' என்று கூறினர்." (சூரா ஆலு இம்ரான்: 52) நூல்: தஃப்ஸீர் தபரி
நபிகளாரின் முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய ஒரு ஹதீஸ்:
"நிச்சயமாகக் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்படும்! அதைக் கைப்பற்றும் படைத்தளபதி எத்துணை சிறந்த தளபதி! அந்தப் படை எத்துணை சிறந்த படை!"
(நூல்: அஹ்மத்)
இந்த முன்னறிவிப்பை நனவாக்கப் பல மாபெரும் ஆட்சியாளர்களும் படைத்தளபதிகளும் பல நூற்றாண்டுகளாக முயன்று தோற்றுப்போயினர். ஆனால், அதைத் தனது 21-ஆம் வயதில் சாதித்துக் காட்டியவர் சுல்தான் முஹம்மத் அல்-ஃபாதிக்
அன்றைய பைஸாந்தினியப் பேரரசின் தலைநகரான கான்ஸ்டாண்டிநோபிள் (இன்றைய இஸ்தான்புல்) உலகிலேயே மிக வலுவான மூன்று அடுக்குக் கோட்டைச் சுவர்களாலும், இயற்கைச் சீற்றங்களாலும் பாதுகாக்கப்பட்டிருந்தது. கடல் வழியே கப்பல்கள் நுழையாதவாறு தங்கக் கொம்பால் (Golden Horn) மாபெரும் இரும்புச் சங்கிலி போடப்பட்டிருந்தது.
நிலவழியாகவும் கடல்வழியாகவும் தாக்குதல் நடத்த முடியாது என்ற சூழலில், சுல்தான் முஹம்மத் ஒரு விசித்திரமான, கற்பனைக்கும் எட்டாத திட்டத்தைத் தீட்டினார்:
ஒட்டோமான் படைகள் ஒரே இரவில் 70-க்கும் மேற்பட்ட மாபெரும் போர்க்கப்பல்களை மரக்கட்டைகள் மற்றும் கொழுப்புகளில் உருட்டி, மலைப் பாதையின் வழியாகத் தரைவழியாகச் செலுத்திப் பகைவரின் கடல் பகுதியில் இறக்கினர்.
மறுநாள் காலையில் தங்கள் கடற்பகுதியில் எதிரியின் கப்பல்களைக் கண்ட பைஸாந்தினியப் படை அதிர்ச்சியில் உறைந்து போனது.
மாபெரும் பீரங்கி அன்றைய காலத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பெரிய பீரங்கிகளைப் பிரத்யேகமாக வடிவமைத்து கோட்டைச் சுவர்களைத் தகர்த்தார்.
ஏன் வாலிபர்களுக்கு முக்கியத்துவம்?
முன் சமுதாய வரலாறுகள் நமக்கு உணர்த்தும் உண்மை என்னவெனில்:
பழைய சமுதாயத்தின் தவறான மூடநம்பிக்கைகளை உடைத்தெறிய முதியவர்களை விட, வாலிபர்களின் ஈமானையே அல்லாஹ் முதன்மைக் கருவியாக்கினான்.
உலக அதிகாரங்களுக்கும், அரசர்களுக்கும் அஞ்சாத தைரியம் வாலிபப் பருவத்து ஈமானில்தான் அதிகம் வெளிப்பட்டது.
குடும்பம், சொத்து, அந்தஸ்து என்ற தடைகளுக்குள் சிக்காமல், கொள்கைக்காக அனைத்தையும் துறக்கும் பக்குவம் முன் சமுதாயத்து வாலிப முஃமின்களிடம் நிறைவாக இருந்தது.
உஸாமா இப்னு ஸைத் (ரலி)
18 வயதில் மாபெரும் படைத்தளபதி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வாழ்நாளின் இறுதியில், அன்றைய உலகின் மாபெரும் வல்லரசாகத் திகழ்ந்த ரோமானியப் பேரரசை எதிர்த்துப் போரிட ஒரு மாபெரும் இஸ்லாமியப் படையைத் தயார் செய்தார்கள். அந்தப் படைக்குத் தளபதியாக நபிகளார் நியமித்த நபர் 18 வயதே நிரம்பிய இளைஞர் உஸாமா இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவார்.
அப்படையில் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு, அபூ உபைதா ரலியல்லாஹு அன்ஹு போன்ற மூத்த, அனுபவம் வாய்ந்த மாபெரும் சஹாபாக்களும் அங்கம் வகித்தனர். நபிகளாரின் மறைவுக்குப் பின் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு ஆட்சிப் பொறுப்பேற்றபோதும், உஸாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையிலேயே படையை அனுப்பி வைத்தார்கள். 18 வயது இளைஞரான உஸாமா ரலியல்லாஹு அன்ஹு, மாபெரும் ரோமானியப் படையை வீழ்த்தி வெற்றி முழக்கத்துடன் மதீனா திரும்பினார்கள்.
அனுபவம் வாய்ந்த மூத்தவர்கள் இருக்கும்போதும், லட்சியமும் தகுதியும் இருந்தால் ஒரு 18 வயது இளைஞனால் ஒரு பேரரசையே வீழ்த்த முடியும்.
ஆதார நூல்: ஸஹீஹ் அல்-புகாரி (ஹதீஸ்: 4252, 4469), அர்-ரஹீக் அல்-மக்தூம்.
அப்துர் ரஹ்மான் அல்-காஃபிகி – ஸ்பெயின் (அண்டலூசியா) புரட்சி
இஸ்லாமிய வரலாற்றில் ஐரோப்பாவில் (ஸ்பெயின்/அண்டலூசியா) இஸ்லாமிய நாகரிகம் மலர்வதற்குக் காரணமானவர்களில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் அப்துர் ரஹ்மான் அல்-காஃபிகி (Abdul Rahman Al-Ghafiqi) எனும் இளம் படைத்தளபதி.
தமது இளமைப் பருவத்திலேயே வீரத்திலும், நீதியிலும், நிர்வாகத் திறமையிலும் சிறந்து விளங்கிய இவர், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் எல்லைப் பகுதிகளில் அநியாயமான முறையில் நடந்த ஆட்சிகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டார். இவரது தலைமையில் தான் அன்றைய ஐரோப்பாவில் அறிவியல், கல்வி, மற்றும் மறுமலர்ச்சிக்கு வித்திடப்பட்டது.
இளைஞர்கள் நினைத்தால் ஒரு கண்டத்தின் (Europe) வரலாற்றையே மாற்றி எழுத முடியும்.
ஆதார நூல்: அல்-பிதாயா வந்-நிஹாயா (இப்னு கதீர்),
முஹம்மத் இப்னு காசிம் (ரஹ்) – 17 வயதில் சிந்து வெற்றி
இந்தியத் துணைக்கண்டத்திற்கு (சிந்து மாகாணம் - இன்றைய பாகிஸ்தான்/இந்தியா எல்லை) முதன்முதலில் இஸ்லாத்தைக் கொண்டு வந்த மாபெரும் வீரர் முஹம்மத் இப்னு காசிம். இவர் சிந்து பகுதியை வெற்றி கொள்ள அனுப்பப்பட்டபோது இவரது வயது வெறும் 17 மட்டுமே!
கடல் கொள்ளையர்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக அனுப்பப்பட்ட இந்த 17 வயது இளைஞர், அன்றைய சிந்து நாட்டின் மாபெரும் அரசரான ராஜா தாகிரின் அநியாய ஆட்சியை வீழ்த்தி, சிந்து நதிக்கரையில் நீதியையும் மார்க்கத்தையும் நிலைநாட்டினார்.
17 வயது என்பது விளையாடித் திரியும் வயது அல்ல; அநியாயத்திற்கு எதிராக ஒரு தேசத்தையே வெல்லக்கூடிய வயது என்பதை நிரூபித்தவர்.
ஆதார நூல்: ஃபுதூஹுல் புல்தான் (அல்-பலாதுரி), காரிகே சிந்து வரலாற்று நூல்கள்.
உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) – 30-களின் துவக்கத்தில் உமைய்யா பேரரசின் மறுமலர்ச்சி
'ஐந்தாவது நேர்வழி நின்ற கலீஃபா' என்று போற்றப்படும் உமர் இப்னு அப்தில் அஸீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது அவருக்கு வயது 36 மட்டுமே.
அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது உமைய்யா பேரரசில் ஊழல், அநீதி, ஆடம்பரம் தலைவிரித்தாடியது. ஆனால், தனது இளம் வயதிலேயே அஞ்சாத நெஞ்சத்தோடும் ஈமானிய உறுதியோடும் செயல்பட்டு, வெறும் 2½ ஆண்டுகளில் பேரரசில் இருந்த அத்தனை ஊழல்களையும் ஒழித்தார். அவரது ஆட்சியில் ஜகாத் (ஏழை வரி) வாங்குவதற்குக் கூட ஒரு ஏழை இல்லாத அளவுக்குச் சமுதாயத்தைச் செழிப்படையச் செய்தார்கள்.
அரசியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை இளைஞர்கள் நினைத்தால் மிகக் குறுகிய காலத்தில் மாற்றி அமைத்து நீதியை நிலைநாட்ட முடியும்.
ஆதார நூல்: ஸீரத் உமர் இப்னு அப்தில் அஸீஸ் (இப்னு அப்தில் ஹகம்), அல்-பிதாயா வந்-நிஹாயா.
தாரிக் இப்னு ஸியாத் – 30 வயதில் ஜிப்ரால்டர் (ஸ்பெயின்) வெற்றி
ஸ்பெயின் நாட்டின் கொடுங்கோல் மன்னன் ரோடெரிக் (Roderick) என்பவனின் அநியாய ஆட்சியை வீழ்த்த, ஆப்பிரிக்காவிலிருந்து கடல் வழியாகச் சென்ற படைக்குத் தலைமை தாங்கியவர் தாரிக் இப்னு ஸியாத் என்ற 30 வயது இளைஞர்.
ஸ்பெயின் கரையில் இறங்கியதும், "இனி நமக்குத் திரும்பச் செல்ல வழியில்லை" என்று கூறி, தான் வந்த போர்க்கப்பல்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தச் சொன்னார். "முன்னால் வெற்றி அல்லது ஷஹாதத் (வீரமரணம்); பின்னால் கடல்!" என்று அவர் ஆற்றிய உரை படைகளிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அசைக்க முடியாத அந்தத் துணிச்சலால் ஸ்பெயினைக் கைப்பற்றி வெற்றி பெற்றார். (இன்று அவர் அடியெடுத்து வைத்த மலைப்பகுதி 'ஜபல் தாரிக்' - Gibraltar என்று அழைக்கப்படுகிறது).
பின்வாங்குவதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துவிட்டு லட்சியத்திற்காக மட்டும் போராடும் இளைஞனை எந்த சக்தியாலும் தோற்கடிக்க முடியாது.
ஆதார நூல்: அல்-பயான் அல்-முக்ரிப் (இப்னு இதாரி), அண்டலூசிய வரலாற்று நூல்கள்.
"இளமை ஒரு வாய்ப்பு; அது திரும்ப வராது!"
குழந்தைப் பருவமும் முதுமைப் பருவமும் பலவீனமானவை. இடைப்பட்ட இந்த இளமையின் ஆற்றலே இறைவன் தந்த மாபெரும் 'அமானிதம்' (பொறுப்பு).
காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது; கடந்துபோகும் ஒவ்வொரு வினாடியும் நமது இளமையின் ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக்கிறது.
"இளைஞர்கள் வெறும் எதிர்காலம் அல்ல; அவர்கள் நிகழ்காலம்!"
சமுதாயம் மாற்றம் பெற மூத்தவர்களின் ஆலோசனையும், இளைஞர்களின் களப் போராட்டமும் செயலாக்கமும் உடனடியாகத் தேவை.
"நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்று தள்ளிப்போடாமல், இன்றே சமுதாய நற்பணிகளிலும் மார்க்கப் பாதையிலும் அடியெடுத்து வைக்க வேண்டும்.
"இன்று இளைஞர்களின் ஆற்றல் போதை, சமூக வலைதள அடிமைத்தனம், பயனில்லாத பொழுதுபோக்குகள் மற்றும் தேவையற்ற மோதல்களில் வீணடிக்கப்படுகிறது.
அரசுகளையே ஆட்டங்காண வைக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கிறது; அதைச் சமுதாயத்தின் வறுமை, அறியாமை, கல்வியின்மை மற்றும் அநீதியை ஒழிக்கப் பயன்படுத்துங்கள்.
எந்த நிழலும் இல்லாத மறுமை நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் பெறப்போகும் முதல் நபர் — 'இறை வழிபாட்டில் வளர்ந்த இளைஞர்'.
"உன் இளமையை எதில் கழித்தாய்?" என்ற கேள்விக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லும் விதமாக நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
"இளைஞர்களே! நீங்கள் விழித்துக்கொண்டால் சமுதாயம் விழித்துக் கொள்ளும்! நீங்கள் மாறினால் தேசமே மாறும்! உங்கள் ஆற்றல் ஒரு ஆயுதம்; அதை அழிவுக்குப் பயன்படுத்தாமல், நீதிக்காகவும் மார்க்கத்தின் மறுமலர்ச்சிக்காகவும் பயன்படுத்துங்கள்!”
அல்லாஹ் நம் அனைவரது இளமையையும் நல்வழியில் அமைத்து, மறுமையில் அவனது அர்ஷின் நிழலில் இடம் பெறும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக!
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக