புதன், 20 மார்ச், 2024

கலங்கிய குட்டை. (கதை)

 


புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார் ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார்.


அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து, புத்தரிடம் விவரம் சொன்னான். 


சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடம் மீண்டும் சென்று வரப் பணித்தார். அவன் சென்று பார்த்தான். நீர் சிறிது தெளிந்திருந்தாலும், இன்னும் கலங்கலாகவே இருந்தது. 


அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றது. புத்தர் மீண்டும் அவனைப் போய் வரச் சொன்னார்.


இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது. எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான்.புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துச் சொன்னார்”


அந்த நீர் தெளிவதற்காக நீ என்ன செய்தாய்? அதை அப்படியே விட்டு விட்டாய். நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது. உன் மனமும் இது போன்றதுதான். 


குழப்பம் ஏற்படும் போது அதை அப்படியே விடு. சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும். நீ அதற்காக எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. அது தானே நடக்கும்.”


ஆம், மன அமைதியைப் பெறக் கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முயற்சியின்றி தானாகவே நடக்க வேண்டிய விசயம் அது…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக