புதன், 21 பிப்ரவரி, 2024

அதிகமாக குர்ஆன் ஓதுவோம்

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாலாஹு தஆலா ஃபில் குர்ஆனில் மஜீத் வல் ஃபுர்கானில் மஜீத் அவூது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

 

நமது உயிரினும் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவரின் மீதும் குறிப்பாக இந்த மீலாது /  எங்கள் மதரஸாவின் ஆண்டு விழா நிகழ்வில் பங்கொண்டு அல்லாஹ்வையும் ரசூலையும் நினைவு கூர்ந்து நன்மையை அடைந்து கொள்ள இங்கு வந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் .................................................

நான் இங்கு அதிகமாக குர்ஆன் ஓதுவோம் என்ற தலைப்பில் பேச வந்திருக்கிறேன்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

ஒருவர் எப்போது

பார்த்தாலும் தன்னுடைய வீட்டு

வாசலில் அமர்ந்தபடி குர்ஆனை படித்துக்

கொண்டே இருப்பார். அதை ஒருஇளைஞன்

பல நாட்களாக இதனை கவனித்துக்

கொண்டே இருந்தான். ஒரு நாள் அவரிடம்

வந்து கேட்டான் , " தாத்தா! எப்பப்

பாத்தாலும் இந்த புத்தகத்தையே

படிச்சிட்டு இருக்கீங்களே. இதை எத்தனை

நாளா படிக்கிறீங்க?" என்று கேட்டான்.

 

அதற்கு அந்த பெரியவர் சொன்னார்,

" ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷமா ஒதி வருகிறேன் என்றார்".

"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு

மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன்

இன்னும் படிக்கிறிங்க ?" என்றான்.

 

அப்போது தாத்தா சிரித்தபடி கூறினார்,

" எனக்கு ஒரு உதவி செய். நீ அதை செஞ்சு

முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்". என்றார்

 

" என்ன உதவி தாத்தா? " என்ன உதவி என்று இளைஞன் கேட்டான்,

 

பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில்

இருந்த அடுப்புக் கரி நிறைந்த ஒரு மூங்கில் கூடையை

எடுத்தார்.

அதை ஒரு மூலையில்

கொட்டினார். பல நாட்களாகக் கரியை

சுமந்து சுமந்து அந்தக் கூடையின்

உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.

 

பெரியவர் அந்த இளைஞரிடம் சொன்னார்,

" தம்பி, அதோ இருக்குற பைப்புல போயி

இந்தக் கூடையில கொஞ்சம்

தண்ணி பிடியேன்" என்றார்

 

இதைக் கேட்ட இளைஞனுக்கு சிரிப்பு வந்தது.

இருந்தாலும் பெரியவர் சொல்லி

விட்டதால் காலியான கரிக் கூடையை எடுத்துச் சென்று தண்ணீர்

நிரப்பி எடுத்து வந்தான்.

 

அவன் வந்து

சேருவதற்கு முன்பே எல்லா நீரும்

தரையில் ஒழுகிப்போனது.

 

இப்போது பெரியவர்

சொன்னார்,

" இன்னும் ஒரு முறை " . தண்ணீர் பிடித்து வா என்றார்

 

 இளைஞன்

மீண்டும் முயன்றான். ஆனால் மூங்கில்

கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?

மீண்டும் சிந்திப் போனது. பெரியவர்

கேட்டார்,

" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு

முறை மட்டும் " .

 

அப்போது அந்த இளைஞன் மனதில் ஒரு

முடிவுக்கு வந்தான்.

"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி

செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல்

ஓடிவிடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப்

படித்தால் நமக்கென்ன என்று முடிவு செய்து

 

தண்ணீர் பிடித்தான். வழக்கம் போலவே

எல்லாத் தண்ணீரும் தரையில் ஒழுது போக

 

" தாத்தா, இந்தாங்க உங்க கூடை. இதில்

தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்

தெரியுமா தெரியாதா? எதுக்கு

என்னை இந்தப் பாடு படுத்திரீங்க "

என்றான்.

 

அப்போது அந்த தாத்தா புன்னகையோடு சொன்னார்,

" இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும்

தெரியும். நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்

போகும் போது இதோட உட்புறம் எப்படி

இருந்தது? " என்றார்.

இளைஞன் சொன்னான் ,

" ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா

இருந்தது "

"இப்போ பார் "என்றார்.

தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின்

உட்புறம் சுத்தமாகி இருக்கு என்றான்.

 

அந்த பெரியவர் சொன்னார்,

" தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில்

இதுதான். எத்தனை முறை தண்ணீர்

பிடிச்சாலும் மூங்கில் கூடை

நிரம்பவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு

முறையும் கூடை சுத்தமாயிடிச்சு.

 

அது போலத்தான்

எத்தனை முறை படிச்சாலும் முழு

குர்ஆன் மனப்பாடம் ஆயிடும்னு

சொல்ல முடியாது. ஆனா படிக்கிற

ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள

இருக்கும் அழுக்கும், கறையும்

சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே....

குர்ஆன் ஓதுவது எவ்வளவு சிறப்பு மிகுந்த காரியம் என்றால் நமது நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

1)
நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில்

2)
குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும் குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில்

3)
உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

4)
குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

5)
அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ

6) "
எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும் அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே...!

தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள் அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.

அல்லாஹுத் தஆலா தன் அருள்மறையாம் திருக் குர்ஆனில் கூறுகிறான்.

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24). என்று குர்ஆன் ஒதாத மக்களைப் பார்த்து கேட்கிறான்.

எனவே அப்படிப்பட்ட குர்ஆனை நம் வாழ்வில் அதிகமாக ஒதக்கூடிய அதன்படி வாழக் கூடிய நல்பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் நிறைவாக தந்தருள் புரிவானாக,

 

யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஓதுகின்ற பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! அதன் மூலம் எங்களை ஈடேற்றப் பாதையில் செலுத்துவாயாக! 

யா அல்லாஹ்! இந்தக் குர்ஆன் மூலம் எங்களது அந்தஸ்தை உயர்த்துவாயாக! மேலும் இதன் மூலம் எங்களை விட்டும் தீமைகளைப் போக்குவாயாக!

எனக்கு இங்கு பேச வாய்ப்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் உங்கள் அனைவருக்கும் ஸலாத்தைக் கூறி விடை பெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக