மாப்புள : அஸ்ஸலாமு
அலைக்கும் மச்சான்!
மச்சான் : அலைக்குமுஸ்
ஸலாம் மாப்புள!
மாப்புள : மச்சான்? மாசமா இருக்கீங்களா? இல்ல... வவுத்துல தலைவாணி எதுவும் வச்சு கட்டி இருக்கீங்களா? வவுறு இம்மாம் பெரிசா இருக்கு!
மச்சான் : மாப்புள! என்ன
கிண்டல் பண்றீயா, மச்சானோட
வவுத்தப் பாத்து?
மாப்புள : வாய்லே கொழுப்பு
இருந்தாலும் பரவாயில்ல
மச்சான்! எப்படியாவது ஒரு வழியா சமாளிச்சுறலாம்! ஆனா... வயித்துலே மட்டும் கொழுப்பு இருக்கவே கூடாது. அப்படி இருந்தா அதை அலட்சியமாவும் விட்டுறக்கூடாது!
மச்சான் : அப்படியா மாப்புள?
மாப்புள : ஆமா மச்சான்!
இவ்வளவு பெரிய வவுத்த வளத்து வச்சிருக்கீங்களே! வவுத்தப் பத்தி உங்களுக்கு ஏதாவது
தெரியுமா மச்சான்?
மச்சான் : இல்லையே தெரியாதே
மாப்புள! சொல்லு! சொல்லு!
மாப்புள : உடலில் எலும்புப்
பகுதியே இல்லாத ஒரு உறுப்புதான் வவுறு. மிகவும் முக்கியமான உறுப்புக்கள எல்லாம்
உள்ளே அடக்கி வச்சு பாதுகாக்குற பெரும் பொறுப்ப வவுத்துக்கு அல்லாஹ்
கொடுத்துருக்கான்.
உள்ளே உள்ள உறுப்புகள் இடம்
பெயராம,
தொல்லை இல்லாம தங்களோட பணிகள தொடர வைக்குறதுல வவுத்துக்குப்
பெரும் பங்கு உண்டு மச்சான்.
மச்சான் : அதனால என்ன சொல்ல
வர்ற மாப்புள?
மாப்புள : தொந்தி எல்லா
வியாதிக்கும் தந்தி ன்னு ஒரு சொலவடை சொல்வாங்க. அதனால தொந்திய கொஞ்சம் கொறைக்கணும்
மச்சான்!
மச்சான் : மாப்புள! தொந்தி
இன்னக்கி கையில அதிகமா பணங் காசு உள்ளவங்களுக்கு கவுரவமான ஒரு தனி அடையாளம்
தெரியுமா உனக்கு?
மாப்புள : மச்சான்...!
நல்லாவே தெரியும் எனக்கு. அதே சமயம் தொந்தியில் பல வெரைட்டீஸ் இருக்குறது
உங்களுக்குத் தெரியுமா மச்சான்?
மச்சான் : என்ன? தொந்தியில பல வெரைட்டீஸா?
அது என்னென்ன மாப்புள?
மாப்புள : முதல்ல லேசா
பூசுனாப்புல ஆரம்பத்துல முகம் காட்டுற தொந்திக்கு, பணக்காரத் தொந்தின்னு பேரு. கொஞ்சம் புசு புசுன்னு வளந்து
வர்ற தொந்திக்கு, பஞ்சுச்
தொந்தின்னு பேரு.
ஆனா...இனிமே இத கரைக்கவோ
குறைக்கவோ முடியாது என்கிற அளவுக்கு அண்டா மாதிரி நல்லா உப்பிப் போயிருக்குற
தொந்திக்கு இரும்புத் தொந்தின்னு பேரு! உங்க தொந்தி மூனாவது வகை மச்சான்! இது
கவுரவ தொந்தி இல்ல. அசந்தா ஆளையே கவுக்குற தொந்தி!
மச்சான் : தொந்தி
இருக்குறதுனால சில சவுகரிய மெல்லாம் இருக்கு தெரியுமா உனக்கு மாப்புள?
மாப்புள : என்ன சவுகரியம் மச்சான்?
மச்சான் : சாப்டுறப்ப
டைனிங் டேபிள் தேவை இல்ல. இந்த தொந்தி மேலயே சாப்பாட்டு தட்ட வச்சு சும்மா சூப்பரா
சாப்புடலாம் தெரியுமா? ஆனா, நீ என்னடான்னா தொந்தியில பெரிய பெரிய பிரச்சினை எல்லாம் இருக்குங்குற! அப்படி என்னதான் பிரச்சினை
இருக்கு மாப்புள?
மாப்புள : மச்சான் 'தொந்தி' யப்
பாத்தா 'சந்தி' சிரிக்கும்!
தொந்தி இருந்தா விந்தி
விந்தித்தான் நடக்கணும்!
ஓட்டப் பந்தயத்துல 'முந்தி'ச்
செல்லமுடியாது!
'குந்தி'ய பிறகு டக்குனு 'எந்தி'ரிக்கவும்
முடியாது!
குறிப்பா எங்கேயாவது அவசரமா
போய்க்கிட்டு இருக்கிறப்ப நாயி கீயி துரத்துச்சுன்னு வைய்யி, மவளே! வேகமா ஓடவும் முடியாது!
மச்சான் : ஆமாமா! உண்மைதான்
மாப்புள! ஆளு சோப்ளாங்கி மாதிரி இருந்தாலும் நெறையா மேட்டர்ஸ் எல்லாம் தெரிஞ்சு
வச்சிருக்குற! தொந்தியினால வேற என்ன தொந்தரவு இருக்கு மாப்புள?
மாப்புள : வயித்தோட அளவு
விரிய விரிய, உள்ளே கொழுப்பு
பெருகப் பெருக, வேண்டாத வெயிட்டு
வயித்துல ஏற்படும். தொந்தி அளவிலும் உருவத்திலும் பெரிசாயிட்டா, முன்னாடி உள்ள பெரும் பாரத்தால, முதுகு பின்புறமா வளைய ஆரம்பிக்கும். அதனால முதுகு வலி
எல்லாம் ஏற்படும் மச்சான்.
மச்சான் : ஆமா மாப்புள. கரெக்டா
சொன்ன! சரி, சரி. தொந்தியினால வேற
என்ன தொந்தரவெல்லாம் இருக்கு மாப்புள?
மாப்புள : நீ போடுற
பேண்ட்டு உன்னோட இடுப்புக்குப் பொருந்தாம, அடி வயித்துக்கு கீழே அனாதையா தொங்கும். கட்டியிருக்கும்
வேட்டியோ,
நழுவிக்கிட்டே இருக்கும்.
இதல்லாம... பொண்ணு மாப்புள்ள
பாக்குற போதும், எனக்கு 'தொந்தி மாப்புள' வேணாம், 'குந்தானி
பொண்ணு'
வேணாம்னு அது வேற ஒரு பெரிய சிக்கலு.
கல்யாணம் பண்ணிட்டு உடலுறவு
பண்றப்ப நந்தியாகி தொந்தி வழிமறிக்குற நிலைய நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை.
அனுபவிச்சவங்க அந்த அவதிய நிச்சயம் உணர்வாங்க.
இப்படி உடலால உண்டாகுற
நோவு,
உள்ளத்தில ஏற்படுற கவலை, அக்கம்பக்கத்தார் அலைக்கழிக்கிற அவதி எல்லாம் சேர்ந்து, நம்ம ஆத்மாவையே அலறச் செய்துடும் இந்த தொந்தி மச்சான்.
மச்சான் : மனுசங்களுக்கு
தொந்திங்குறது இயற்கை தானே மாப்புள?
மாப்புள : யாரு சொன்னது
இயற்கைன்னு? நீங்க பொறக்கும்போது, குழந்தையா இருந்தப்ப உங்களுக்கு தொந்தி இருந்துச்சா மச்சான்? இடையில வந்ததுதானே தொந்தி. அப்புறம் எப்படி அத இயற்கைன்னு
சொல்றீங்க மச்சான்?
மச்சான் : அட.. ஆமால்ல!
இருந்தாலும் எனக்கு தொந்தி எல்லாம் கிடையாது மாப்புள! வேணும்னா என்னோட வயத்தை
அழுத்திப் பாரு.
மாப்புள : நான் அழுத்தி
எல்லாம் பாக்க வேணாம். அதுக்கு ஒரு சிம்பிளான வழி இருக்கு மச்சான்!
மச்சான் : என்ன வழி மாப்புள?
மாப்புள : முதல்லே நீங்க
நேரா ஸ்ட்ரெயிட்டா நிமிந்து நில்லுங்க! உங்க பார்வைய மட்டும் கிழே தாழ்த்தி கால்
விரல கவனிங்க. கால் விரலு உங்களுக்குத் தெரிஞ்சா, உங்க வயிறு நார்மல்தான்! கால்விரலு உங்க கண்ணுக்கு
தெரியலையா? அப்படின்னா உங்களுக்கு
வயிறு 'படா'தான்
மச்சான்!
மச்சான் : சரி மாப்புள.
தொந்தியை குறைக்க என்ன செய்யணும், அதுக்கு
ஒரு வழி சொல்லு மாப்புள?
மாப்புள : கல்யாண 'பந்தி'ய
குறைச்சாலே 'தொந்தி' தானா குறஞ்சுரும் மச்சான்.
மச்சான் : தொந்தி வராம
தடுக்க நபி (ஸல்) அவுங்க எது வும் வழி சொல்லி இருக்காங்களா மாப்புள?
மாப்புள : ஆமா மச்சான்.
சூப்பரான... ஒரு சிம்பிளான வழி சொல்லி இருக்காங்க.
மச்சான் : என்ன வழி மாப்புள?
மாப்புள : தொந்தி வராம
இருக்க,
நாம சாப்பாட்டுல ஒரு ஒழுக்கத்த கடைபிடிக்கணும்.
பசிக்கும்போது பசியறிஞ்சு சாப்பிடணும். அரைவயிறு சோறு, கால்வயிறு தண்ணீ, கால் வயிறு காத்து செல்ல இடம் விட்டுறணும்.கடைசியா ஒரு
முக்கியமான செய்தி மச்சான்?
மச்சான் : என்ன செய்தி
மாப்புள?
மாப்புள : நபி (ஸல்) அவுங்க
சொல்லியிருக்காங்க : என்னோட சமுகத்துல சிறந்தவங்க என்னோட தலைமுறைதான். பிறகு
சிறந்தவங்க அவுங்களை அடுத்துவரும் தலைமுறை. அதற்கு அடுத்து சிறந்தவங்க அவுங்களை
அடுத்து வரும் தலைமுறை.
பிறகு, உங்களுக்குப் பின்னால ஒரு தலைமுறை வர இருக்குறாங்க. அவுங்க, தங்கள்ட்ட சாட்சி சொல்லும்படி கேட்கப்படாமலேயே
(முந்திரிக்கொட்டை மாதிரி) தானா வந்து சாட்சி சொல்வாங்க.
நம்பிக்கை மோசடி செய்வாங்க.
மக்களோட நம்பிக்கைக் குரியவங்களா இருக்கமாட்டாங்க. அவுங்க நேர்ச்சை செய்வாங்க. ஆனா, அதை நிறைவேத்த மாட்டாங்க. (குறிப்பா கண்ட்ரோல் இல்லாம சாப்புட்டு சாப்புட்டு) அவர்களிடையே தொந்தி
விழும் நிலை தோன்றும்.
மச்சான் : மாப்புள்ள!
ரசூலுல்லாஹ் சொன்ன அந்த காலத்துலதான் நாம் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்! சாப்புட்டு
சாப்புட்டு தொந்தி போடுற கூட்டத்தில இருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் உன்னையும்
என்னையும் ஊருலக மக்களை எல்லாம் காப்பாற்றுவானாக! ஆமீன், ஆமீன், யா
றப்பல் ஆலமீன்!
----------------------------------------
▪︎கே.
ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ
தங்களுடைய இது போன்ற உரையாடல்கள் பயனுள்ளதாக இருக்கிறது
பதிலளிநீக்கு