எவர் நற்செயலை முறையாகச் உங்களில் செய்தார் என்று சோதிப்பதற்காக அவன்
மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்தான்
(அல் குர்ஆன் 67: 2
இந்த திருவசனத்தில் மரணத்தைப் பற்றிய மூனறு உண்மைகள்
தெளிவாக்கப்படுகின்றன. 1. மரணம் என்பது இழப்பு அல்ல உயிரின் இடமாற்றம்
அது இறைவனின் மிகப்பெரும் அருட்கொடை. 3. அது இறைவன் ஏற்படுத்தும்
சோதனைக்களம்
மரணம் என்பது இழப்பு அல்ல
தாயின் கரு அறையில் தஞ்சம் புகுந்து விட்ட விந்துவின் அணு 40 நாட்கள் ஒட்டும் ஜவ்வா கவும், அதையடுத்த 40 நாட்கள் எலும்பின் திரட்சியாகவும், அதையடுத்த 40 நாட்கள் தசை பொருந்திய குழந்தையாகவும் பரிணாமம் பெற்று வளர்ந்து வருவதாக, திருக் குர்ஆன் குறிப்பிடுகிறது (ஆதாரம் அல்குர் ஆன் 23 : 14)
மூன்று நாற்பது நாட்கள் என்ற காலக்கட்டம் கடந்து முழுமை பெற்றுவிட்ட உருவில் உயிர் செலுத்தப்படுகிறது.
அந்த உயிர், அந்த உடலில் செலுத்தப்படுவதற்கு பல காலங்களுக்கு முன்பே படைக்கப்பெற்றதாகும்.
எல்லா உயிர்களும் பெரும்பட்டாளங்களாக கூடியிருந்தன. அப்போது
பரிச்சயமானவை இப்போதும் அறிமுகமாகி வாழுகின்றன. அப்போது
அறிமுகமில்லாதிருந்தவை, இப்போதும் சம்பந்தமில்லாமலேயே வாழுகின்றன'
என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்று, உயிர்களின் சூட்சமத்தை
விளக்குகிறார்கள்அறிவிப்பவர் : ஹளரத் ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது.
மனித உடலுக்குள் செலுத்தப் படுவதற்கு முன்னர் உயிர்கள் சூட்சம உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தன. மனித உடலில் செலுத்தப்பட்ட பின்னர் அவை சரீரத்தோடு இணைந்து வாழுகின்றன.
மனிதன் மரணமடைந்த உடன் அந்த உயிர் சரீரத்தை விட்டும் பிரிந்து வேறொரு வகையான சூட்சம உலகிற்கு சென்றுவிடுகின்றது. மொத்தத்தில் உயிர் மூன்று நிலையில் வாழுகிறது. உலகம் அழியும் காலகட்டம் வரை அதற்கு
நீண்ட ஆயுள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தழுவியே ஒரு மனிதன் மரணமடைந்ததைக் குறிப்பிடும் போது
உயிர் பிரிந்துவிட்டது என்று கூறுகிறோம்! அரபிமொழியில் வபாத்தாகிவிட்டார்
என்று கூறுவார்கள். அதற்கு கணக்கை முடித்துக் கொண்டார் என்று பொருள்
கூறப்படும். உருது மொழியில் இன்திகால்-ஹோ-கயாஹே! என்று குறிப்பிடுவர்
அது இடம் பெயர்ந்துவிட்டார் என்று பெருள்படும்.
மரணம் என்பது இழப்பு அல்ல திருவசனத்தில் இறைவன் மரணத்தைப் படைத்தான் என்று கூறுகிறான். அந்த வசனத்தில் வாழ்வைப் படைத்ததை இரண்டாவதாகக் கூறுவது கவனிக்கத் தக்கதாகும். முதலில் வாழ்வைப் பற்றிக் குறிப்பிட்டு, பின்னர் மரணத்தைக் கூறியிருந்தால் வாழ்க்கையின் இழப்பே மரணம் என்று தப்பர்த்தம்
கொள்ளப்பட்டுவிடும், மரணத்தைப் படைத்தல் என்பதற்கு தனித்தன்மை
இல்லாமற் போய்விடும். எனவேதான் மேற் காணும்
உயிர் உயிராக இருக்கிறது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.
திருக்குர்ஆன் தரும் ஆதாரங்கள்.
1.)ஹளரத் ஈஸா நபி (அலை) அவர்கள் அன்தாகிய்யா என்ற
நகரவாசிகளுக்கு நல்லுபதேசம் செய்ய ஸாதிக், மஸ்தூக், ஷம்ஊன் ஆகிய
மூன்று தூதர்களை அனுப்புகிறார்கள். அந்நகரவாசிகள் அவர்களின் தூதை
ஏற்றுக் கொள்ளாமல் அவர்களுக்கு தொல்லைகள் பல தருகிறார்கள்
அந்நகரத்தைச் சார்ந்த ஹபீபுன்னஜ்ஜார் என்பவர் அத்தூதர்களுக்கு பரிந்து
வருகிறார். உடனே அந்நகரவாசிகளின் கோபம் ஹபீபுன் நஜ்ஜாரின் மீது
திரும்புகிறது அவர்கள் அவரின் வயிற்றில் தாக்கி குடலை
வெளியாக்கிவிடுகிறார்கள். இதனால் அவர் இறந்துவிடுகிறார். இந்த
சம்பவத்தை திருக்குர் ஆன் யாசீன் சூராவில் இடம் பெறச் செய்துள்ளது. அவர்
இறந்த பிறகு அவரிடம் நீ சுவனத்துக்கு செல் என்று கூறப்பட்டது. அப்போது
அவர் பேசுகிறார்
எனது ஊரைச் சார்ந்தோர் எனது நிலையை அறிய வேண்டுமே! எனது
இறைவன் எனக்கு மன்னிப்பு அளித்துவிட்டான். கண்ணியப்படுத்தப்பட்டவர்களில் என்னையும் ஆக்கிவிட்டான் என்று அவர் கூறினார்
(அல் குர்ஆன் 36 : 26)
மனிதன் இறப்பதோடு அவன் உயிரும் அழிந்து விடுமென்றால் அந்தஉயிர் எப்படி பேச முடியும்..?
2.) ஹளரத் மூஸா நபி (அலை) அவர்களின் காலத்தில் ஒரு செல்வந்தனின் மகனை, அந்த செல்வந்தரின் சகோதரர்களின் மக்கள் கொலை செய்து விடுகிறார்கள். அந்த மகன் இருந்தால் தங்களுக்கு வாரிசு உரிமை கிடைக்காது என்ற தீய எண்ணமே கொலைக்கு காரணமாக இருந்து. ஆனால் கொலை செய்த அவர்களே தங்களை நல்லவர்களாக காட்டிக் கொண்டு கொலைகாரனைக் கண்டு பிடிக்க வேண்டுமென்று ஆர்வம் காட்டுகிறார்கள் ஒரு குறிப்பிட்ட மாட்டை அறுத்து அதன் வால் பகுதியால் இறந்தவரை அடித்தால், அவர் உயிர் பெற்றெழுந்து தன்னைக் கொலை செய்தவரைக் காட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் உயிர்பிரிந்துவிடுவார் என ஹளரத் மூஸா நபி (அலைஅவர்கள் கூறுகிறார்கள்
ஹளரத் மூஸா நபி (அலை) அவர்களின் கூற்றுக் கிணங்க செய்யப்பட்டது. இறந்தவர் உயிர் பெற்றெழுந்து தன்னைக் கொன்றவர்களைஇனம் காட்டிவிட்டு பின்னர் உயிர் துறந்தார்.
இந்த சம்பவத்தை திருக்குர் ஆன் (2:73) விளக்குகிறது. அறுபட்டமாட்டின் வால் கொண்டு அடித்த போது விலகியிருந்த உயிர் திரும்ப அந்த உடலில் புகுந்து கொண்டது என்றே இச்சம்பத்திற்கு விளக்கம் தரப்படுகிறது.
3.) ஹளரத் ஈஸா நபி - (அலை) அவர்கள் இறந்த சிலரை உயிர்ப்பித்த
வரலாற்றை திருக்குர்ஆன் (3:49) விளக்குகிறது. அவர்கள் அல்லாஹ்வின்
உத்தரவின் பேரில் உயிரிழந்த சரீரத்தில், அந்த உடலைவிட்டும் விலகியிருந்த
உயிரைச் செலுத்தியே இத்தகைய அற்புதத்தைச் செய்தார்கள் என்று
அத்திருவசனத்திற்கு விளக்கம் தரப்படுகிறது.
மனித உயிர்கள் மட்டுமல்ல, பிற உயிரினங்களின் உயிரும் சூட உயிரோடிருக்கின்றன என்ற விபரத்தை ஹளரத் இப்றாஹீம் (அலை) அவர்கள்
நான்கு பறவைகளை அறுத்து பின் உயிர்ப்பித்த வரலாற்றின் மூலம் திருக்குர் ஆன் (3:260) கோடிட்டுக் காட்டுகிறது.
நபி மொழி வழங்கும் ஆதாரங்கள்.
ஒரு :முஃமினுக்கு மரண வேளை நெருங்கிவிட்டால் ரஹ்மத்துடைய மலக்கு வெண் பட்டுத் துணியைக் கொண்டு வருவார் “உயிரே! நீ இந்த சரீரத்திலிருந்து வெளியாகு! திருப்தியளிக்கும் நிலையிலும், திருப்தி அடைந்த நிலையிலும் கோபம் கொள்ளாத அருள் மிக்க அல்லாஹ்வின் சன்னிதானத்தின் பால் நீ வா” என்று அந்த மலக்கு கூறுவார். அந்த உயிர் கஸ்தூரி மணம் கமழ் வெளியாகும். ஒவ்வொரு மலக்காக அந்த உயிரை கைமாற்றி வானத்தின் பால் கொண்டு செல்வார்கள்.
பூமியிலிருந்து உயர்தரமான நறுமணம் வருகிறதே! என்ன அது? என்று
அங்குள்ளவர்கள் பேசிக் கொள்ளுவார்கள் பின்னர் அந்த உயிரை
மூஃமின் களின் உயிர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும்
வெளிநாட்டிற்குச் சென்றவர் வந்து விட்டால் ஒரு குடும்பத்திலுள்ளவர்கள்
எவ்வளவு குதூகலம் அடைவார்களோ அந்த அளவு அந்த உயிரைக் கண்டதும்
பிற முஃமின்களின் உயிர்கள் குதூகலமடையும். அவர் என்ன ஆனார்? இவர்
என்ன ஆனார் என்று அந்த உயிர்கள் விசாரிக்க ஆரம்பிக்கும். அப்போது
சிரமமான உலகத்திலிருந்து இப்போது தான் இந்த உயிர் வந்திருக்கிறது
அதற்குள் அதையும் இதையும் கேட்டு தொல்லைப்படுத்தாதீர்கள் என்று
கூறப்படும்.
விசாரிக்கப்பட்டவர்களில் சிலரைப்பற்றி அவர்கள் இறந்து விட்டார்களே
இங்கு வரவில்லையா? என வந்த உயிர் கூறும். அவர்கள் இங்கே வரவில்லை
அப்படியானால் அவர்கள் ஹாவியா என்ற நரகத்திற்கு சென்றிருக்கக் கூடும்
என்று பிற உயிர்கள் பதிலளிக்கும்
ஒரு காபிரானவனுக்கு மரண வேளை நெருங்கிவிட்டால் வேதனையின்
மல்க்கு ஒரு முரட்டுத் துணி கொண்டு வருவார். கோபமுண்டாக்கும்
நிலையிலும் கோபமுற்ற உயிரே வெளியாகு! அல்லாஹ்வின் வேதனையின்பால்
வார் என்று அந்த மலக்கு கூறுவார். அது பிணவாடை வீச வெளியேறும். அந்த
மலக்கு அந்த உயிரை எடுத்துக் கொண்டு வானத்திற்குச் செல்லுவார்
அங்குள்ளோர் இது என்ன நாற்றம்? என்று கூறி முகம் சுளிப்பார்கள், பின்னர்
அந்த உயிரை பிற காபிர்களின் உயிர்கள் இருக்குமிடத்தில் விடப்படும்
அறிவிப்பவர் : ஹளரத் அபூஹுரைரா (ரலி) நூல் : அஹ்மது, நஸயி
நாயகத் தோழர்களில் ஒருவரான ஹளரத் முஹம்மது இப்னுல் முகன்திர்
(ரலிஎன்பவர் அறிவிக்கிறார்கள்ஜாபிர் பின் அப்துல்லாஹ்-ரலி என்பவர் வபாத்தாகும் தருணத்தில் நான்அவரிடம் சென்று நாயகம் (ஸல்) அவர்களுக்கு என் ஸலாம் கூறுங்கள் என்று கூறினேன் நூல் : இப்னுமாஜா.
ஹளரத் கஃபு - (ரலி) என்ற நாயகத் தேழர் வபாத்தாகும் தருணத்தில்
அவர்களை உம்மு பிஷ்ரு (ரலி) என்ற பெண்மணி சந்தித்து, இறந்து போன ஒரு
குறிப்பிட்ட நபருக்கு ஸலாம் கூறுமாறு வேண்டிக் கொண்டார். அதைச்
செவியுற்ற ஹளரத் கஃபு (ரலி) அவர்கள் நாங்கள் அங்கு சென்றால் எங்கள்
அமல்களுக்கு கணக்குக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருப்போம். தாங்கள்
குறிப்பிட்ட நபரையெல்லாம் சந்திக்க முடியுமோ? என்னவோ
கூறினார்கள். மூமின்களின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் உடலில் புகுந்து
சுவனத்து மரங்களில் மேய்ந்து கொண்டிருக்குமென நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறியதை தாங்கள் செவியேற்கவில்லையா? வென அம்மாது கேட்க
ஆம்! செவியுற்றிருக்கிறேன் என அவர்கள் பதில் கூறினார்கள். அப்படி யொரு
நிலை தங்களுக்கு ஏற்படும்போது ஸலாம் சொல்ல ஏன் சந்தர்ப்பம் கிடைக்காது
என அப்பெண் கூறினார் என்று நூல் : இப்னுமாஜா, பைஹக்.
உயிர் துறந்த உடலை மண்ணறை நோக்கித் தூக்கிச் செல்லும் போது
அந்த உடலின் உயிர் நன்னடத்தை உள்ளதாக இருந்தால் “என்னை விரைவில்
கொண்டு சேருங்கள்” என்று கூறும். தீய நடத்தை உள்ளதாக இருந்தால்
அய்யஹோ! எங்கே கொண்டு செல்லுகிறீர்கள் " என்று கூறும். அந்த சப்தத்தை
மனிதன் தவிர அனைத்து உயிரினங்களும் செவியேற்கும். அந்த சப்தத்தை
மனிதன் மட்டும் செவியேற்றால் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துவிடுவான்
அறிவிப்பவர் : ஹளரத் அபூஸயீத் -( ரலி) நூல் புகாரி.
உயிர் கைப்பற்றப்பட்டபின் நல்ல உயிர் நல்லோர்களுடனும், தீய உயிர்
தீயோர்களுடனும் விடப்படுகின்றன. பின்னர் அந்த உயிரை கேள்விக் கணக்கு
கேட்பதற்காக திரும்பவும் அந்த உடலில் பொறுத்தப்படுகிறது. உனது இறைவன்
யார்? உனது மார்க்கம் என்ன? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டபின்
நல்ல ஆத்மாவிடம் “புதுமாப்பிள்ளை தூங்குவது போன்று தூங்கு
கூறப்படுகிறது. தீய ஆத்மாவை வேதனைப்படுத்தப்படுகிறது. இந்த விபரம்
ஆதாரப் பூர்வமான நபிமொழிகளில் காணப்படுகின்றன. அப்படியானால்
மண்ணறையின் கேள்வி களுக்குப் பின் உயிர் எங்கே இருக்கிறது? என்றொரு
சந்தேகம் எழலாம்.
மண்ணறையின் கேள்விகள் முடிவுற்றபின் நல்ல உயிர் கள் இருக்குமிடத்திற்கு நல்ல உயிரும், தீய உயிர்கள் இருக்குமிடத்திற்கு தீய உயிரும்
சென்றுவிடுகின்றன. உயிரோடிருக்கும் மனிதன் தூங்கும் போது, அவனடைய
ரூஹ் அவனிடம் இருப்பதில்லை. இந்த விபரம் திருக்குர்ஆனின் (39:42)
வசனத்தில் அறியப் பெறலாம். ஆனாலும் அந்த ரூஹுக்கும், உடலுக்கும் ஒரு
வகையான தொடர்பு இருக்கும், அது போன்று மண்ணறையின் கேள்வி
கணக்கிற்குப் பிறகு உயிர் தன் இருப்பிடம் சென்று விடும். அந்த உயிருக்கும்
மண்ணறையிலிருக்கும் உடலுக்கும் ஒருவகை தொடர்பு இருக்கும் இக்கருத்தை
புது மாப்பிள்ளை தூங்குவதைப் போன்று தூங்கு என்ற நபிமொழி
உறுதிப்படுத்துகிறது. அத்தகைய தொடர்பின் மூலமே தீய ஆத்மாவுக்கும்
வேதனை தொடருகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த உயிர்கள்.
ஹளரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாங்கள் மக்காவிற்கும், மதினாவிற்குமிடையே பிரயாணமாகிக்
கொண்டிருக்கும் போது ஒரு ஓடையின் அருகில் சென்றோம். அந்த ஒடையின்
பெயர் என்ன? என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நண்பர்களிடம்
கேட்டார்கள், "வாதி அஸ்ரக்” என்று பதிலளிக்கப்பட்டது. இதோ ஹளரத் மூஸா
(அலை)அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என பெருமானார் கூறிவிட்டு
மூஸா(அலை) அவர்களின் அங்க அடையாளங்களை வர்ணித்தார்கள்
அவர்கள் இரு காதுகளிலும் விரல்களை வைத்துக் கொண்டு உரத்த குரலில்
தல்பியா சொல்லிக் கொண்டு செல்வதாகவும் பெருமானார் (ஸல்) அவர்கள்
விளக்கினார்கள். பின்னர் நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் சென்றபோது இந்த
பள்ளத்தாக்கின் பெயர் என்னவென்று பெருமானார் (ஸல்) வினவினார்கள்.
ஹர்ஷா என்று பதிலளிக்கப்பட்டது. இதோ ஹளரத் யூனுஸ் (அலை)
அவர்களை நான் காணுகிறேன். அவர்கள் கம்பளி ஆடை அணிந்து கொண்டு
செந்நிற ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்த ஒட்டகத்தின்
முக்கணாங்கயிறு “குல்பா” என்ற வகையைச் சார்ந்ததாகும் எனவும்
பெருமானார் (ஸல்) தெரிவித்தார்கள் நூல் : முஸ்லிம்
இதே கருத்து புகாரி முதல் வால்யும் 210-ம் பக்கத்தில் முஹம்மது பின்
அல் முதன்னா என்பவரின் அறிவிப்பில் காணப்படுகிறது
நபிகள் நாயகம் - (ஸல்) அவர்கள் மேற்கொண்ட மிஃராஜ் பயணம் பற்றி
அறிவிக்கும் நபி மொழிகளில் வானங்களில் வரிசைக் கிரமமாக பல
ரஸூல்மார்களை சந்தித்த செய்தி தெளிவு படுத்தப்படுகிறது. ஹளரத் இப்றாஹீம்
நபி (அலை) அவர்கள் என்னைப் போன்றிருந்தார்கள் எனவும், ஹளரத் ஈஸா
நபி (அலை) அவர்கள் உர்வத் பின் தகபீ என்ற தோழரைப் போன்றிருந்ததாகவும்
பெருமானார் (ஸல்) அடையாளங்களையும் கூறுகிறார்கள்
மேலும் பைத்துல் மக்தஸில் பெருமானார் (ஸல்) தொழுகை நடத்தியதும்
அவர்களைப் பின் தொடர்ந்து ரஸூல்மார்கள், நபிமார்கள் தொழுததும்
நபிமொழிக் குறிப்புக்களில் காணப்படுகின்றன
மேற்காணும் ஆதாரப் பூர்வமான நபிமொழிகளில் உயிர் பற்றிய பல
விபரங்கள் அறியத் தரப்பட்டிருக்கின்றன. இறந்த உயிர்கள் தொழுகை, ஹஜ்
போன்ற அமல்களையும் செய்கின்றன. பைத்துல் மக்தஸில் பெருமானார் (ஸல்)
அவர்கள் பின்னால் நின்று தொழுத நபிமார்கள், பெருமானார் (ஸல்) அவர்களை
வரவேற்பதற்காக குறிப்பிட்ட வானங்களுக்கு வேகமாகச் சென்று விட்டார்கள்
அதிலிருந்து உயிர்கள் வெகு வேகமாகச் செல்லுபவை என்றும் அறிய முடிகிறது
50 வக்துத் தொழுகையை ஐந்து வக்தாக மாற்றத் தூண்டிய ஹளரத்
மூஸா (அலை) அவர்களின் செயல்பாட்டிலிருந்து இறந்தவர்களால் மற்றவர்கள்
பயனடைய முடியும் என்பதையும் உணர முடிகிறது
மரணமும் இறைவனின் அருட்கொடையே
வாழப் பிறந்து விட்ட மனிதர்கள், அந்த வாழ்க்கையை பல நிலைகளில்
வாழுகின்றனர். மன நிறைவு அடைந்தோர் சிலர், வியாதியினால் வாழ்வை
வெறுத்தோர் சிலர், துன்பம் சூழ்ந்ததால் விரக்தியடைந்தோர் பலர்
எந்த நிலையில் வாழ்ந்தாலும் அவர்கள் ஒரு காலகட்டத்தைத் தாண்டும்
போது மரணத்தை வரவேற்கவே செய்கின்றனர். அவர் களின் வெளி
வார்த்தைகளை உற்று நோக்காமல், அவர்களின் அந்தரங்க ஆத்மாவின்
குரலைக் கேட்டால் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
விறகு வெட்டிப் பிழைக்கும் ஒருவன் தன்னுடைய தலையை பாரம் அழுத்த
மன பாரத்துடன் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான். சே! இது ஒரு
வாழ்க்கையா? விடிவதற்கு முன் வீட்டை விட்டு வெளியாகி நடந்து, கல்
முள்களைக் கடந்து காட்டுக்குச் சென்று மரத்தை வெட்டி சாய்த்து இலைகளை
நீக்கி விறகைச் சேர்ப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது. பின்னர்
ஒட்டிய வயிற்றுடன் அதை சுமந்து வந்து விற்றாலும் அறை வயிற்றுக்கும்
காணுவதில்லை. இவ்வாறு சிந்தித்துக் கொண்டு வந்த அவனுக்கு
தலைச்சுமையை சற்று இறக்கி ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் போல்
தோன்றியது. எனக்குச் சாவுவராதா இந்த பிழைப்பில் இருந்து விடுதலை
கிடைக்காதா? என்று அவன் நாவு கூறிக்கொண்டது. தலைச் சுமையும்
இறங்கியது. அப்போது அவன் முன்னால் ஒருவர் தோன்றினார். எதிர்பாராத
அந்த மனிதனைக் கண்ட விறகு வெட்டி நீ யார்? என்று கேட்டான். நீ தானே
என்னைக் கூப்பிட்டாய், நீ அழைத்த சாவைத் தருபவர் நான்தான் என்று வந்த
மனிதர் கேலியாகக் கூறினார். உடனே விறகு வெட்டி சுதாரித்துக்
கொண்டான். உன்னை அழைத்தது உண்மைதான். ஆனால் எனக்கு சாவைத்
தருவதற்காக உன்னை நான் அழைக்கவில்லை. இந்த விறகுக்கட்டை என்
தலையில் தூக்கி வைப்பதற்காகக் கூப்பிட்டேன் என்றான்.
இந்த உருவகத்தில் காணப்படும் விறகு வெட்டியின் வாய் வார்த்தை
வேறாக இருந்தாலும், அவன் மனம் விரக்தியையே அடைந்திருக்கிறது. அந்த
விறகு வெட்டியைப் போன்று பலரை நாம் நிஜ வாழ்க்கையிலும் சந்திக்கலாம்.
தீரா வியாதி.
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு, அந்த நோயும் குணம் ஆகும்
நிலையில் இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்து விட்டவர்கள் மரணத்தை
விரும்பி வரவேற்கவே செய்வார்கள். இத்தகைய நிலையில் உள்ள சிலர்
தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்குத் தள்ளப்படுவதையும் நாம்
காணுகிறோம்.
கைபர் யுத்தத்தின் போது இஸ்லாமிய அணியைச் சார்ந்த ஒருவர்
மூர்க்கமாகப் போரிட்டார். அவரின் வீரத்தை ஸஹாபாக்கள் பாராட்டினார்கள்
அதனைச் செவியுற்ற பெருமானார் (ஸல்) அவர்கள், அவர் நரகவாதி என்று
கூறினார்கள். பெருமானார் (எஸல்) அவர்களின் அறிவிப்பு ஸஹாபாக்களுக்கு
ஆச்சரியத்தைத் தந்தது, பெருமானாரின் அறிவிப்புக்கான காரணத்தை
கண்டறிய ஒரு ஸ்ஹாபி குறிப்பிட்ட நபரைப் பின் தொடர்ந்து அவரின்
செயல்களை உற்றுக் கவனிக்கலானார். இறுதியில் அந்த நபர் ஒரு எதிரியால்
கோரமாகத் தாக்கப்பட்டார். அந்தக் காயத்தின் வேதனை தாளாத அந்த மனிதர்
வாளைப் பூமியில் நட்டி வைத்து, அதன் மீது பாய்ந்து தற்கொலை செய்து
கொண்டார். அவரைபின் தொடர்ந்த ஸஹாபி நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் வந்து யாரஸுலுல்லாஹ் தாங்கள் கூறியது உண்மையாகி விட்டது
என்று கூறினார்
நூல் : புஹாரி அறிவிப்பவர் : ஹளரத் ஸஹ்லு பின்ஸஹ்லு (ரலி)
தாங்க முடியாத நோயால் தாக்குண்ட மனிதன் மரணத்தை விரும்பி
வரவேற்கத் தயாராகிவிடுகின்றான் என்பதனால் அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் அத்தகைய எண்ணம் கொள்வதைத் தடைசெய்தார்கள்.
தனக்கு ஏற்பட்ட துன்பத்தினால் எவரும் மரணத்தை விரும்பி வரவேற்க
வேண்டாம். அவசிய மேற்படின் “யா அல்லாஹ்! நான் இவ்வுலகில் இருப்பது
நல்லதாக இருக்கும் காலம் வரை என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான்
மரணமடைவது நல்லதாக இருந்தால் எனக்கு மரணத்தை தருவாயாக! என்று
பிரார்த்தனை புரியலாம்” "என்றார்கள்
நூல் : புஹாரி, முஸ்லிம் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நோயின் கடுந்தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு எதார்த்த மரணம்
என்பது பெரும் அருட்கொடையல்லவா...?
கூடா மக்கள்.
ஒரு மனிதன் வயோதிகத்தை அடையும் போது அவனுக்கு ஆறுதல்
அதிகம் தேவைப்படுகிறது. அவன் பொெற்ற மக்களோ, அவனது வாழ்க்கைத்
துணையினரோ அவனுக்கு ஆறுதல் அளிக்கவில்லையானால் அவனுக்கு
வாழ்க்கை கசந்து விடுகிறது. அவ்வாறு ஆறுதல் அளிக்காமல் போவதற்குப்
பல காரணங்கள் இருக்கலாம்.
தான் வருமானம் இல்லாதவனாக இருக்க, தனது மக்கள் வருமானத்தைத்
தேடி தருவதாக இருக்கலாம். அல்லது தனது வீட்டிற்கு வந்த மருமகளால்
தனக்கு கண்ணியக் குறைவு எற்படுவதாக இருக்கலாம். அல்லது தன்னுடைய
இளமைக் காலத்து தழும்புகளை நினைத்து தனது மக்களின் நடவடிக்கைகள்
ஒவ்வொன்றிலும் குறை காணுவதால் மக்கள் வெறுத்து ஒதுக்கலாம். இப்படி
எத்தனையோ அனுபவங்கள்
ஒரு வயோதிகன் மரணப் படுக்கையில் இருக்கும் போது தனது மகளை
அழைத்து “மகளே! இன்னார் எனக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும். இன்னார்
எனக்கு மூவாயிரம் தர வேண்டும்" என்று கூறிவந்தார். அவைகள்
அனைத்தையும் அந்த மகள் குறித்து வைத்துக் கொண்டே வந்தாள். "வாப்பா
வேறு எதுவும் இருக்கின்றதா? நன்கு ஞாபகப்படுத்திக் கூறுங்கள்" என்று அவள்
கேட்டாள். அப்போது அவர் "நான் இன்னாருக்கு ஒரு இலட்சம் ரூபாய் கடன்
கொடுக்க வேண்டியுள்ளது. அதையும் குறித்து வைத்துக் கொள்ளம்மா! என்று
கூறினார். அதைச் செவியுற்ற அந்த மகள் 'வாப்பா! இது வரை நல்லாத்தானே
இருந்தீர்கள்? இப்போது நினைவிழந்து என்னவெல்லா பேசுகிறீர்களே! என்று
கேட்டு விட்டு, அக்கம் பக்கத்திலுள்ளவர்களை அழைத்து "இங்கே வந்து
பாருங்களேன்...இங்கே வந்து பாருங்களேன் என் வாப்பா
என்னென்னவெல்லாம் உளருகிறார்" என்று கூறினாளாம்
இந்தக் கதையில் காணப்படும் மையக் கருத்தைப் போன்று வயோதிக
பருவத்தில் உள்ளவர்களிடம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கவே செய்வர்.
அந்த தருணத்தில் அவர் வருமானக் குறைவுள்ளவராக இருந்து விட்டால்
உறவினர்களின் உதாசீனத்துக்குள்ளாவதில் வியப்பேதுமில்லை.
திருக்குர் ஆன் கூறுகிறது.
ஒருவருக்கு போரித்தம், திராட்சைப் பழத் தோட்டம் ஒன்று இருந்தது
அதில் நீரோடைகளும் ஓடுகின்றன. அதில் அவருக்குத் தேவையான எல்லா
வகையான கனிகளும் இருந்தன. ஒரு நாள் அவருக்கு முதுமை வந்தடைந்தது
உழைக்க முடியாத) சின்னஞ்சிறு குழந்தைகளும் இருக்கின்றனர். அப்போது
அந்த தோப்பில் நெருப்புக் காற்று வீசி அனைத்தையும் எரித்து சாம்பலாக்கி
விடுகின்றது. உங்களில் எவரும் இந்நிலையை விரும்புவாரா"
இளமையில் நன்கு சம்பாதித்து சொகுசாக வாழ்ந்த ஒருவர், வாழ்க்கைச்
செலவு அதிகமான நேரத்தில் செயலற்றுப் போய் விட்டால் அவரால் என்ன
செய்ய இயலும்.
தளர்ந்த நேரத்தில் ஆறுதலான சூழ்நிலை, ஆறுதலான மக்களைப்
பெற்றிருப்பதே பெரும் பாக்கியம், அத்தகைய பாக்கியம் கிடைக்க பெருந்தவம்
(பிராத்தனை) புரிய வேண்டுமென்று திருக்குர் ஆன் கூறுகிறது.
எங்களின் இரட்சகா! எங்களின் துணைவியர்களிலும், எங்களின்
மக்களிலும் கண் குளிர்ச்சியைத் தந்தருள் புரிவாயாக. இறையச்சம்
உள்ளவர்களுக்கு எங்களை முன் மாதிரியாக ஆக்குவாயாக!
(அல்குர்ஆன்
- 26-27)
ஏனோ சலிப்பு.
குழந்தைப் பருவத்தில் மனம் நண்பனை நாடுகிறது. வாலிபப் பருவக்கி
வாழ்க்கைத் துணையைத் தேடுகிறது. தம்பதியான பின் மழலைச் செல்வத்தை
மனம் எதிர்பார்க்கிறது. அதன் பின் பேரனைத் தேடுகிறது. அதன் பின்
எதிர் பார்ப்பும் இல்லாமல் மனம் வெறுமையடைகிறது வாழ்க்கை. எல்லா வசதிகளைப் பெற்றிருந்தாலும் தனிமைப் படுத்தப்படும் போது
அலுத் துவிடுகிறது படுத்தப்படும்போது, இத்தகைய சலிப்பு மிகைக்கிறது. வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்று பாவனை செய்தாலும் அந்தரங்கத்தில் மனம் ஆத்மசுகத்தைத் தேடுகிறது. அந்த நிலையை அடைந்தோர்க்கு மரணம் ஒரு வரப் பிரசாதமாகும்.
ஹளரத் யூசுப் நபி (அலை) அவர்கள் தாழ்வு, உயர்வு, போட்டி, பொறாமை
அன்பு, காதல் போன்ற வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் சந்திக்கிறார்கள்
இறுதியில் அவர்களுக்கு செல்வமும், செல்வாக்கும் பெறுகுகிறது. அப்போது
அவர்கள் செய்த பிராத்தனையை திருக்குர்ஆன் எடுத்துக் கூறுகிறது.
இரட்சகா! நீ எனக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்தாய். கனவைக்
கண்டறியும் உயர் ஞானத்தையும் தந்தாய், வானங்களையும், பூமியையும்
உருவாக்கியவனே! இம்மையிலும், மறுமையிலும் நீயே எனக்கு நேசனாக
வேண்டும். என்னை முஸ்லிமாக மரணிக்கக் செய்வாயாக! நல்லவர்களுடன்
என்னை இணைத்தருள் புரிவாயாக
(அல்குர் ஆன் : 12 : 101).
அனைத்தும் இருந்தும் ஹளரத் யூசுப் (அலை) மனது ஆத்ம சுகத்தை
தேடுவதை இந்த பிரார்த்தனை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது.
மன நிறைவு.
மரணம் ஈமான் கொண்டோர்க்கு ஒரு அன்பளிப்பாகும்"
அல்ஹதீஸ், நூல் :பைஹகீ அறிவிப்பவர் : ஹளரத் அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி).
இறைவனை நம்பிய மூஃமின்கள் இறைவனை சந்திக்க ஆவல் மிக்
கொள்ளுவர். நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் ஆவல் கட்டுக் கடங்காது
பெருகிக் கொண்டிருக்கும். "இறைவா எவ்வளவு நாள் தான் நீ கண்ணாமூச்சி
விளையாடிக் கொண்டிருப்பாய்? உன்னனைக்காண எனது புறக்கண்களுக்கு
சக்தியளிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் எப்போது என் அகக்
கண்களைத் திறந்து உன் திருக்காட்சியைக் காண எனக்கு சக்தியளிப்பாயோ..?
அதற்கு இந்த உடல் ஒரு தடையாக இருந்தால் நான் உயிரிழப்பதையும்
பொருட்படுத்தமாட்டேன். 'அமைதி பெற்ற ஆத்மாவே! திருப்தியைப் பெற்று
மனநிறைவோடு உனது இறைவனின் சந்நிதானத்துக்கு வா எனது
அடியார்களுடன் இணைந்து வா! எனது சுவனத்துக்கு நுழைந்து வா
(அல்குர் ஆன் 90 : 3))என்று நீ என்னை அழைக்கும் நாளே எனக்கு
பொன்னானநாளாகும் என்று அவர்கள் மனம் பேசும். இந்த நிலையை
எய்தியோர்க்கு “இறப்பு ஒரு இறை அன்பளிப்பு” என்பதை மறுக்க முடியுமா..?
ஹளரத் இப்றாஹீம் நபி (அலை) அவர்களுக்கு மரண வேளை
நெருங்கியபோது ஹளரத் இஸ்ராயில் (அலை) அவர்கள் உயிரைக் கைப்பற்ற
அனுமதி கோரி நிற்கிறார்கள்.
ஒரு நேசன் தனது நேசனை மரணிக்கச் செய்ய விரும்புவானா” என
ஹளரத் இப்றாஹீம் (அலை) கேட்கிறார்கள். அப்போது அல்லாஹ் “ஒரு
நேசனுக்கு தனது நேசனைச் சந்ததிக்க விருப்பமில்லையா என்று
கேட்கிறான். அதைச் செவியுற்ற ஹளரத் இப்றாஹீம் (அலை) அவர்கள்
அப்படியானால் இதோ! நான் தயார். இந் நிலையைத்தானே நான் எதிர்
நோக்கியிருந்தேன்” என்று கூறி மரணமாக ஆவல் கொண்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதிகாலத்தில் “அர் ரபீக் குல் அஃலா (உயர்ந்த
நண்பன் உயர்ந்த நண்பன் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள், இறைவன் என்ற அந்த நண்பன சந்திக்க எவ்வளவு அவாக் கொண்டிருந்தார்கள் என்பதை அக்கூற்றிலிருந்து அறியமுடிகிறது
இறப்பு இறைவன் ஏற்படுத்தும் சோதனைக்களம்.
உங்களில் எவர் நற்செயலை முறையாகச் செய்தார் என்று
சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்க்கையும் படைத்தான்'
மேற்காணும் திருவசனத்திலிருந்து 'இறப்பு என்பது இறைவன்
ஏற்படுத்தும் சோதனைக் களம் என்று தெரிய வருகிறது. அப்படியானால்
இறப்பின் நிலையை நாமே தெரிவு செய்கிறோம் என்று பொருள்படுகின்றது
மரணத்தை நிர்ணயிக்கும் உரிமை நம் கையில் இருந்தால்தான் அதை அல்லாஹ்
சோதனைக்களமாகக் கொள்ள முடியும். அஃதின்றி அது நிர்பந்த நிலையாக
இருப்பின் அதில் சோதிப்பதற்கு என்ன இருக்கிறது.
இறைவன் நமக்கு பொருளைத் தந்து நாம் அதை எவ்வாறு
பயன்படுத்துகிறோம் என்றும், மக்களைத் தந்து நாம் அவர்களை எவ்வாறு
பண்படுத்துகிறோம் என்றும் சோதிக்கிறான். “உங்களின் மக்கட் செல்வங்களும், பொருட்செல்வங்களும் சோதனைப் பெருள்களே!(அல்குர் ஆன் 64:15) என்
திருவசனம் அதைக் குறிக்கிறது.
அதுபோன்றே, மரண நிலையை நிர்ணயிக்கும் உரிமையை இறைவன் நம்
கையில் தந்து, அதை நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோம் என்றும்
சோதிக்கிறான். நமது வாழ்க்கையின் செயல்பாட்டை பொறுத்தே அந்த நிலை
அமைகிறது. நாம் வாழ்க்கையில் பயன்பாடாக நடந்து மரணத்தை மணமாக்கிக்
கொள்ள இயலும்.
நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடவேண்டாம் (அல்குர் ஆன் 2: 132)
என்ற வசனமும் மரணமாகும் விதம் நம் விருப்பத்தில்
இருப்பதை உணர்த்துகிறது.
இழுபறி நிலை..?
சிலர் தங்கள் வாழ்க்கை முழுவதையும் பொருளைத் தேடுவதிலும், அதை
செலவிடுவதிலும் மக்களைப் பெறுவதிலும், அவர்களைப் பரிபாலிப்பதிலேயுபோ
செலவழித்து அவைகளே தங்களின் லட்சியம் என்று அலைவார்கள், அவர்கள்
தங்கள் மரணத்தை இழுபறி நிலையாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் லட்சியத்தை நிறைவு செய்வதற்காக இன்னும்
வாழத்துடிக்கிறார்கள். எனவே அவர்கள் மரண தூதரின் அழைப்பை ஏற்காமல்
போராடுகிறார்கள், இழுபறி நிலை எற்படுகிறது. இந்த நிலையில் உயிரைக்
கைப்பற்றும் மலக்கு பற்றி திருக்குர்ஆன் ( "தோலை உறிப்பது போன்று
கடினமாகப் பற்றி இழுப்பவர்கள்" (79:1) என்று குறிப்பிடுகிறது.
இத்தகையோர் குறித்து திருக்குர் ஆன் குறைப்படுகிறது அதிகப்படுத்தும் முயற்சி, நீங்கள் மண்ணறையைச் சந்திக்கும் வரை உங்களின் கவனத்தை ஈர்த்து விட்டது'
கடுகவெளி சித்தர் என்பார் பாடுகிறார்;.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடியே
போட்டுடைத்தாண்டி"
நந்தவனம் என்ற சுவனத்தில் பரமானந்தமாய் உலவி வந்த ஒரு (ஆண்டி) நாலாறு (பத்து) மாதங்களாக கருவில் இருந்து கொண்டு இறைவன் என்ற குயவனிடம் யாசித்து ஒரு தோண்டியை (உடலை)ப் பெற்று அதில் புகுந்து கொண்டது.
உடலில் புகுந்தபின் அந்த உயிர் நேர்மையாக வாழாததால் அந்த
உடலிலிருந்து முறையாக வெளியேற முடியவில்லை. கூத்தாடிக் கூத்தாடியே
வாழ்க்கையை விளையாட்டாக் கழித்ததால் அந்த உயிர் உடைத்துக் கொண்டு
வெளியேற நேரிட்டது.
விரக்தியடைந்த வேறு சிலர்.
மக்கட் செல்வம், பொருட் செல்வம் என்ற லட்சியத்தில் வாழ்ந்து
வந்தவர்களில் சிலர் இறதியில் மக்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள். அதனால்
வாழ்க்கையில் விரக்தி யடைந்து மக்களைப் பிரிய மனம் ஒப்புகிறார்கள்
ஆனாலும் இறுதி மூச்சின் போது மரணத்தையும், அதன் பின்னால் ஏற்படும்
நிகழ்வுகளையும் நேராகக் காணும்போது அதைவிட்டு மீட்சிபெறத்
துடிக்கிறார்கள். மீட்சி பெற வழியில்லாத போது திரும்பவும் கொஞ்சகாலம் வாழ
அவகாசத்தை வேண்டுகிறார்கள். அப்படி அவகாசம் கிடைத்தால் பாதையை
மாற்றி வாழ்ந்து காட்டலாம், இழந்த நிலையை ஈடுசெய்யலாம். என்று கற்பனை
செய்கிறார்கள் அவர்களின் நிலையும் ஒருவகையான இழுபறி நிலையே.
அவர்கள் பற்றித் திருக்குர்ஆன் கூறுகிறது.
உங்களில் ஒருவருக்கு மரண வேளை நெருங்கும். அப்போது அவர்
எனது இரட்சகா! எனது உயிரைக் கைப்பற்றுவதை சிறிது காலத்துக்கு தள்ளிப்
போடலாகாதா? நான் ஜக்காத்தை முறையாகச் செலுத்தி நல்லோர்களில்
ஒருவனாக ஆகி வருவேனே! என்று அங்கலாய்ப்பார்
அல்குர்ஆன் : (63 : 10)
அமைதியான நிலை.
சிலர் தங்கள் வாழ்க்கையில் பொன்னைத் தேடினாலும், அதை
செலவிட்டாலும் , மக்களைப் பெற்றாலும், அவர்களைப் பரிபாலித்தாலும் அதில்
அவர்கள் முழுமையாக லயித்துவிட மாட்டார்கள். இறைவனுக்குச் செய்ய
வேண்டிய கடமைகளை செவ்வனே செய்து வருவார்கள். அவர்கள்தான்
வாழ்க்கையை வென்றவர்கள்.
தன்னால் ஆவது எதுவுமில்லை, எல்லாம் இறைவன் செயலே! என்ற
எண்ணத் தாக்கத்தை அவர்கள் பெற்றிருந்ததால் மக்களைப் பிரியும் போது
அவர்கள் மனம் பேதலிப்பதில்லை. சொத்தைப் பிரியும்போது அவர்கள் சுகத்தை
இழப்பதில்லை. எனவே அவர்கள் மரண தூதரின் அழைப்புக்குச் செவி சாய்க்கிறார்கள் உயிர் உடலைப் பிரிவது எளிதாகிறது, இந்த நிலையிலுள்ளவர்களின் உயிரைக்கப்பற்றும் மலக்கு பற்றித் திருக்குர் ஆன்
(வெண்ணெய்யிலிருந்து உரோமத்தை நீக்குவது போன்று) இலேசாக
கழற்றுபவர்கள்” (72:2) என்று குறிப்பிடுகிறது. அவர்கள் பற்றித் திருக்குர் ஆன்
கூறுகிறது
அமைதி கண்ட ஆத்மாவே! திருப்தி பெற்ற நிலையிலும், திருப்தி அளித்த
நிலையிலும் உனது இறைவனின் சந்நிதானத்துக்குச் செல், எனது
அடியார்களில் நீயும் சேர்ந்துகொள். எனது சுவனத்துக்குள் நுழைந்து கொள்
அல்குர்ஆன் : (89 : 27, 28)
சந்தேக நிவர்த்தி.
இறப்பின் தன்மையை நிர்ணயிக்கும் உரிமை நமது கரத்தில் இருப்பது
உண்மைதான். ஆனால் இறப்பின் நேரத்தை நிர்ணயிப்பது நம் கையில் இல்லை
அது பற்றித் திருக்குர்ஆன் கூறுகிறது.
எந்த ஆத்மாவும் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட தவணையை அடைந்து
விட்டால் அல்லாஹ் பிற்படுத்த மாட்டான்"
அல்குர் ஆன் : (63 : 11)
மரண வேளையை இனிதாக்க எளிய பயிற்சிகள்.
மரணமடைவதற்கு முன் மரணமாக்கிக் கொள்ளுங்கள் என்று ஞானிகள்
கூறுவார்கள்.
மத்னவீ என்ற நூலில் மவ்லானா ரூமி (ரஹ்) அவர்கள் ஒரு உருவகக்
கதையை அதற்கு உவமானமாகக் கூறுகிறார்கள்.
ஒரு செல்வன் வெளிநாடு செல்ல முற்பட்ட போது; தனது
குடும்பத்திலுள்ள, ஒவ்வொருவரிடமும் அவரவர்களுக்கு விருப்பமான
பொருள்பற்றிக் கேட்கிறான் அவைகளை தான் வாங்கி வருவதாக
வாக்களிக்கிறான். அந்த முறையில் தான் அன்பாக வளர்த்துவரும் கிளியிடமும்
கேட்கிறான். தனது இனத்தவரைச் சந்தித்தால் இங்கே தங்கக் கூண்டில்
வளர்ந்து வரும் நான் ஸலாம் கூறியதாகச் சொல்லுங்கள் என்று அக்கிளி
பதிலளித்தது
வெளிநாடு சென்ற அந்த வியாபாரி காட்டு வழியாகச் செல்ல நேரிட்ட
போது ஒரு மரத்தின் கிளையில் கிளிகள் வட்டமடிப்பதை கண்ணுற்றான்
அப்போது அவனுக்கு தனது வீட்டிலுள்ள கிளியின் நினைவு வந்தது. அது சொல்லியனுப்பிய செய்தியை அந்த மரத்துக் கிளிகளிடம் தெரிவித்தான்.
அதைச் செவியுற்றதும் ஒரு கிளி படபடவென்று இறக்கைகளை அடித்துக்
கொண்டு கீழே விழுந்து மாண்டுவிட்டது.
பின்னர் அவன் ஊர் திரும்பியதும் தனது கிளியிடம் நிகழ்வைக்
கூறினான். அதைச் செவியுற்ற உடன் அந்தக் கிளியும் தனது இறக்கைகளை
படபடவென்று அடித்து கூண்டினுள் வீழ்ந்து இறந்து விட்டது. வியாபாரி
அதிர்ச்சியடைந்தான். இரண்டு கிளிகளும் இணைபிரியா நண்பிகள் போலும்
ஒன்றின் பிரிவை மற்றது தாளாமல் இறந்து விட்டனவே! இந்தக் கிளியின்
செய்தியை நான் அங்கு சொல்லாமலிருந்திருக்க வேண்டும். அல்லது
அந்தக்கிளி இறந்த செய்தியையாவது இங்கு வந்து கூறாதிருந்திருக்க
வேண்டும் என்று சிந்தித்த அந்த வியாபாரி தனது மடத்தனத்தை நினைத்து
மிகவும் வருந்தினான்.
செத்து விட்ட கிளியை அப்புறப்படுத்துவதைத் தவிர வேறு வழியொன்றும்
அவனுக்குத் தோன்றவில்லை. செத்த கிளியை அவன் தூக்கி எறிந்தான்
அவன் அதைத் தூக்கியெறிந்ததும் அந்தக்கிளி திடீரென்று உயிர் பெற்று
சிறகடித்துப் பறந்தது. உயரப் பறந்து ஒரு மரக்கிளையில் அமர்ந்தது. இறந்த
கிளி உயிர் பெற்ற அதிசயத்தைக் கண்ணுற்ற வியாபாரி அதிர்ச்சியடைந்தான்
எனது அன்புக் கிளியே! நீ உயிர் பெற்று விட்டாயா? வா! வா! உனது தங்கக்
கூண்டுக்குத் திரும்பி வா” என்று அவன் கூவியழைத்தான்.
மடையனே! நான் இறந்ததாக எண்ணி ஏமாந்தாயா? இல்லை! நான்
இறக்கவில்லை. வெளி நாட்டில் நீ சந்தித்த என் கூட்டாளியும் இறக்கவில்லை
எல்லாம் நடிப்பு.
தங்கக் கூண்டில் வளர்ந்து வரும் நான் ஸலாம் கூறியதாக நான்
சொல்லிவிட்ட செய்தியின் உட்பொருளை நீ புரிந்து கொள்ளவில்லை. தங்கக்
கூண்டில் நான் ஆசையாக வளர்க்கப்பட்டாலும் நான் ஆனந்தமடையவில்லை
சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல்
தவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏதாவது ஆலோசனை சொல்லுங்கள்
என்பதுதான் நான் உன் மூலம் சொல்லியனுப்பிய செய்தியின் சாரம்.
எனது சகோதரக் கிளி அதைப் புரிந்து கொண்டது. சாவதற்கு முன்பே
நீ செத்துவிடு! அப்போதுதான் சிறையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று
அக்கிளி தனது செயல்பட்டால் எனக்கு விளக்கியது. அதன் உபதேசத்தை நான்
செயல்படுத்தினே ன். எனக்கு விடுதலை கிடைத்தது. இதோ! நான்
சுதந்திரமாகப் பறந்து செல்கிறேன்" என்று கூறி, குதூகலத்துடன் விண்
நோக்கிச் சென்றது
இந்த உருவகத்தின் கருப்பொருள் உணர்த்துவதைப் போன்று, இறப்பின்
வாது இன்பமடைய வேண்டுமானால் முதலிலேயே நமது சுற்றுச் சூழலைவிட்டு
நாம் பாந்து பழக வேண்டும். நமது குடும்பப் பொறுப்பை, தொழில் துறையை
நாம் சார்ந்துள்ள நிர்வாகத்தை நமது மக்கள், அல்லது நம்பிக்கையுள்ளோரிடம்
சிற்சில நாட்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
நாம் மரணமடைந்து விட்டதைப் போன்று முற்றிலும் தொடர்பில்லாமல்
ஆகிவிட வேண்டும். இவ்வாறு இடையிடையே செய்து வந்தால் நமக்கு கீழ்
உள்ளவர்களும் நிர்வாகத்தைப் பழகிக் கொள்ளுவார்கள். நாம் இல்லாவிட்டாலும்
நிர்வாகம் நடக்குமென்ற நிம்மதியையும் நாம் பெறலாம்.
புனித ஹஜ்ஜுப் பயணம் இந்த அடிப்படையை வலியுறுத்துவதாகவே
அமைகிறது. முற்காலத்தில் ஹஜ்ஜுக்குச் செல்லுபவர்கள் தங்களின் அனைத்து
தொடர்புகளையும் துண்டித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கற்றுத் தரும் பாடம்.
ஒவ்வொரு நாளும் இரவு நாம் தூங்கச் செல்லும்போது இறக்கப்
போவதாக முடிவுசெய்து கொள்ள வேண்டும். இறப்பு நிச்சயமாகத் தெரிந்தால்
நாம் செய்து வைக்கும் ஆவணங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்
இவ்வாறு நீண்ட நாள் பயிற்சி செய்தால் மனம் மரணத்துக்குத் தயாராகிவிடும்.
துஆ சிறந்த வழியாகும்.
அனைத்து பாக்கியங்களையும் இறைவனிடம் கேட்டுப் பெறுவதைப்
போன்றே மரண நிலை இனிதாக அமையவும் இறைவனிடம் யாசிக்க வேண்டும்
இறைவனிடம் வேண்டிப்பெற்ற இனிய மரணங்கள், பல சரித்திரத்தில்
நிகழ்ந்துள்ளன
ஹளரத் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் உஹது களத்தில்
தனது நண்பர் ஹளரத் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை அழைத்து
நாம் இருவரும் இறைவனிடம் துஆச் செய்வோம்!! ஒவ்வொருவரும் அவரவர்
விருப்பத்தை வேண்டும்போது, மற்றவர் ஆமீன் கூற வேண்டும் என்று கூறினார்
ஹளரத் ஸஃது - (ரலி) அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்து இறைவனிடம்
துஆக் கேட்கிறார்.
இறைவா! நாளை நடைபெறும் போரில் எனக்கு எதிராக ஒரு மாபெரும்
வீரனை நீ நிறுத்தவேண்டும். அவன் என்னை ஆவேசமாகத் தாக்கி நானும்
அவனுக்கு சற்றும் குறையாமல் சமர்புரிய வேண்டும். இறுதியில் அவனை நான்
வெற்றி கொண்டு, அவனை வெட்டி விீழ்த்த வேண்டும் என ஹளரத் ஸஃது (ரலி)
அவர்கள் து.ஆவை நிறைவு செய்தார்கள். ஹளரத் அப்துல்லாஹ் (ரலி) ஆமீன்
கூறினார்கள். பின்னர் அவர்கள் து.ஆக் கேட்டார்கள்.
யா அல்லாஹ்! எம்பெரும! நாளைய தினம் எனக்கு எதிராக ஒரு சுத்த
வீரனை நீ நிறுத்து, அவனும், நானும் சளைக்காது ஒருவரை ஒருவர் தாக்க
வேண்டும். இறுதியில் அவன் என்னை வெட்டி வீழ்த்த வேண்டும். நான் கீழே
விழுந்ததும் அவன் என் மூக்கையும், காதையும் அறுத்து என் உடலை சின்னா
பின்னப்படுத்த வேண்டும். மறுமையில் நான் காதும், மூக்கும் அறுபட்டவனாகவே
உன்னை சந்திக்க வேண்டும். அப்போது என்னிடம் அப்துல்லாஹ்வே! உனது
மூக்கை எங்கே? காதை எங்கே! எனக்கேட்கும் போது எனது இறைவா? உனது
பாதையில் நான் மூக்கறுபட்டேன், காதறுபட்டேன் என்று நான் பதிலளிக்க
வேண்டும். நீயும் அதை மெய்யென்று கூற வேண்டும்.
ஹளரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் துஆவை நிறைவு செய்ய ஹளரத்
ஸஃது (ரலி) ஆமீன் கூறினார்கள்.
அவ்விருவரின் பிரார்த்தனை அங்கீகேரிக்கப்பட்டதை மறுநாள் யுத்த
நிகழ்ச்சியில் மக்கள் கண் கூடாகக் கண்டார்கள். தான் பிரார்த்தனை
புரிந்தததைப் போன்றே எதிரியை வென்ற ஹளரத் ஸஃது - (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள்.
“அப்துல்லாஹ்வின் மரணம் அவர் விரும்பியபடியே நிகழ்ந்தது. அவரை
வெட்டி வீழ்த்திய எதிரி அவர்களின், மூக்கையும் காதையும் அறுத்து ஒரு
கயிற்றில் கோர்த்து எடுத்துச் சென்றதை என் இரு கண்களாலும் நான்
கண்டேன். அதைப் பார்த்ததும் நானும் ஏன் அவரைப் போன்று பிரார்த்தனை
செய்யாது இருந்து விட்டேன்? என்ற ஆதங்கம் என்னிடம் எழுந்தது"
இறப்பை ஒரு இழப்பாக கருதாமல் அதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு
மரணத்தை வென்ற வீர வரலாறுகள் அனந்தம் அனந்தம் உள்ளன.
வாழுங்காலமெல்லாம் லாஇலாஹா
இல்லல்லாஹா
முஹம்மதுற்றஸுலுல்லாஹ் என்ற திருக்கலிமாவின் அடிப்படையில் வாழ்ந்து
இவ்வுலகத்தைப் பிரியும் தருணத்தில் அத்திருக்கலிமாவை கூறிய வண்ணமே
நமது உயிர் பிரிய வல்ல ரஹ்மான் அருள் பாலிப்பானாக! ஆமீன்
இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுளள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.
ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.
ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் நிறைவாக தந்தருள்வானாக.
BY. A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக