ولله
على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن
كفر فان الله غنى عن العالمين ஆகவே எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தியுடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக அங்கு சென்று அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் இதை நிராகரித்தால் அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்களை விட்டும் தேவையற்றவனாக உள்ளான்.
(அத்தியாயம்-3 வசனம்- 97.)
ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். உடல் பலமும் பண
வளமுடைய இஸ்லாமியர்கள் மீது தன் வாழ்நாளில் ஒரு தடவையேனும் புனித ஹஜ் பயணம் செய்வது
கடமையாகும். இந்த புனித பயணத்தின் மூலம் அல்லாஹ்வின் அன்பும், ஒரு புதிய அனுபவமும்
கிடைக்கிறது. மேலும் பாவங்களை போக்கும் ஒரு சாதனமாகவும் இப்புனித பயணம்
திகழ்கிறது. ஹஜ் பயணம் மேற்கொள்ளாத என்த இறைதூதரும் இம்மண்ணில் கிடையாது. அனைத்து
இறைத்தூதர்களும் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்கள் என்கிறது ஒரு நபிமொழி.
புனிதமிகு கஃபா எனும் இறை ஆலயத்தை அல்லாஹ்வின் உத்தரவுக்கிணங்க இறைதூதர்
இப்ராஹிம் அலை அவர்கள் பூர்த்தியாக கட்டி முடித்தார்கள். ஹஜ்ஜைப் பற்றி மக்களுக்கு
அறிவிப்பீராக என்று இப்ராஹிம் அலை அவர்களுக்கு அல்லாஹ் ஆணையிட்டான். அவர்கள்
ஹஜ்ஜுக்கான அழைப்பை விடுத்தார்கள். அவ்வறிவிப்பை வானம் பூமிக்கிடையில் உள்ள
சகலமும் கேட்டன. என்த மனிதர் அச்சமயம் பிறந்திருந்தாலும் சரி, அல்லது அப்பொழுது
பிறக்காமல் ஆலமே அர்வாஹில் அனுவாக இருந்தாலும் சரி, அந்த சமயத்தில் லப்பைக் நான்
ஆஜராகி விட்டேன் என்று ஒருமுறை கூறியவர் ஒருமுறையும் பலமுறை கூறியவர் பலமுறையும்
ஹஜ் என்னும் புனித கடமையை நிறைவேற்றுவார் என அண்ணல் நபி ((ஸல்))
அவர்கள்கூறினார்கள்.
( நூல் துர்ருல் மன்தூர். )
நபி இப்ராஹிம் அலை அவர்களின் சப்தம் உலக மக்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கு
வாய்ப்பு உள்ளதா..? என்ற சந்தேகம் நம்
மனதில் எழலாம். இன்று மின் அலைகளின் மூலம் ஒரு நாட்டிலிருந்து பல நாட்டிற்கு
செய்திகளை பரப்பக்கூடிய ரேடியோ, டீவி, தொலைபேசி, பேக்ஸ் கம்பியூட்டர் போன்ற
சாதனங்களை கண்டுபிடித்த மனிதனையே படைத்த அந்த அல்லாஹ்வுக்கு நபி இப்ராஹிம் அலை அவர்களின்
சப்தத்தை உலக முழுவதும் பரப்புவது கடினமான செயலாகுமா...?
121 حدثنا محمد بن المثنى العنزي وأبو معن الرقاشي وإسحق بن منصور كلهم عن أبي عاصم واللفظ لابن المثنى حدثنا الضحاك يعني أبا عاصم قال أخبرنا حيوة بن شريح قال حدثني يزيد بن أبي حبيب عن ابن شماسة المهري قال حضرنا عمرو بن العاص وهو في سياقة الموت فبكى طويلا وحول وجهه إلى الجدار فجعل ابنه يقول يا أبتاه أما بشرك رسول الله صلى الله عليه وسلم بكذا أما بشرك رسول الله صلى الله عليه وسلم بكذا قال فأقبل بوجهه فقال إن أفضل ما نعد شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله إني كنت على أطباق ثلاث لقد رأيتني وما أحد أشد بغضا لرسول الله صلى الله عليه وسلم مني ولا أحب إلي أن أكون قد استمكنت منه فقتلته فلو مت على تلك الحال لكنت من أهل النار فلما جعل الله الإسلام في قلبي أتيت النبي صلى الله عليه وسلم فقلت ابسط يمينك فلأبايعك فبسط يمينه قال فقبضت يدي قال ما لك يا عمرو قال قلت أردت أن أشترط قال تشترط بماذا قلت أن يغفر لي قال أما علمت أن الإسلام يهدم ما كان قبله وأن الهجرة تهدم ما كان قبلها وأن الحج يهدم ما كان قبله وما كان أحد أحب إلي من رسول الله صلى الله عليه وسلم ولا أجل في عيني منه وما كنت أطيق أن أملأ عيني منه إجلالا له ولو سئلت أن أصفه ما أطقت لأني لم أكن أملأ عيني منه ولو مت على تلك الحال لرجوت أن أكون من أهل الجنة ثم ولينا أشياء ما أدري ما حالي فيها فإذا أنا مت فلا تصحبني نائحة ولا نار فإذا دفنتموني فشنوا علي التراب شنا [ ص: 113 ] ثم أقيموا حول قبري قدر ما تنحر جزور ويقسم لحمها حتى أستأنس بكم وأنظر ماذا أراجع به رسل ربي
அம்ரு ப்னு ஆஸ் ((ரலி)) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ் என் உள்ளத்தில்
இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் அருமை நாயகம் ((ஸல்)) அவர்களிடம் சென்று உங்கள்
வலக்கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதி பிரமாணம் பைஅத் அளிக்கிறேன் என்று
கூறினேன். அண்ணலார் தம் வலக்கரத்தை நீட்டினார்கள். உடனே நான் என் கையை இழுத்துக்
கொண்டேன். அண்ணலார் அம்ரே உனக்கு என்ன ஆயிற்று....? என்று
கேட்டார்கள். நான் சில நிபந்தனைகள் விதிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். அண்ணல்
நபி ((ஸல்)) அவர்கள் என்ன நிபந்தனை விதிக்கப் போகிறாய்..? என வினவினார்கள். என் முந்தய பாவங்கள்
மன்னிக்கப்பட வேண்டும் என்று கூறினேன். அப்போது அண்ணலார் முந்தய பாவங்களை இஸ்லாம்
அழித்து விடும். ஹிஜ்ரத்தும்
மார்க்கத்திற்காக நாடு துறத்தல் முந்தய பாவங்களை அழித்து விடும். இன்ன ஹஜ்ஜ
யஹ்திமு மாகான கப்லஹு ஹஜ்ஜும் முந்தய
பாவங்களை அழித்துவிடும் என்று உமக்கு தெரியாதா என்றார்கள்.
( நூல் முஸ்லிம் 192.)
நபிகள் நாயகம் ((ஸல்)) அவர்கள் கூறினார்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு
சொர்கத்தை தவிர வேறு கூலியில்லை.
(அறிவிப்பாளர் அபூஹுரைரா ((ரலி)) நூல்
புகாரி-1773)
மார்க்க நெறிகளை பேணிக்கொள்ளும் ஒரு முஸ்லிம் அந்த பரிசுத்த ஆலயத்துக்கு
செல்லும் முன் ஹஜ்ஜின் சிறிய, பெரிய அனைத்து சட்டங்களையும் முழுமையாக அறிந்து இந்த
மகத்தான கட்டளையின் தத்துவமென்ன என்று விளங்கி அதன் கிரியைகளைப் பரிபூரணமாக
நிறைவேற்றினால் அம்மனிதரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இறை நம்பிக்கயோடு வாழ்ந்து
இறை நம்பிக்கையோடு மரணிப்பார். அதில் சந்தேகமில்லை, ஏனெனில் சொர்க்கம் செல்வதற்கு
இறை நம்பிக்கை தான் அடிப்படையாக இருக்கிறது.
ஆயிஷா ((ரலி)) அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் தூதரே.. அல்லாஹ்வின்
பாதையில் போர் புரிவதையே பெண்களாகிய நாங்களும் சிறந்த செயலாக கருதுகிறோம். எனவே
நாங்களும் போரில் கலந்து கொள்ளலாமா...? என்று
வினவினேன். அதற்கு நபிகள் நாயகம் ((ஸல்))
அவர்கள் அவ்வாறு இல்லை. எனினும் பெண்களுக்கு சிறந்த ஜிஹாத் எனும் போர், பாவச்
செயல் எதுவும் கலக்காத ஹஜ் தான் என்றார்கள்.
( நூல் புகாரி. 1520 )
கடமைகளில் வழிபாடுகளில் மிக வீரியமானது ஜிஹாத் என்னும் இறை வழியில் போர்
புரிவது தான். தன் குடும்பம், உறவு, பிள்ளைகள், சொத்து சுகங்கள் அனைத்தையும்
துறந்து இறைவனுக்காக தன்னையே அர்பணிக்கின்ற பெரும் பணியை ஜிஹாதின் மூலம் மனிதன்
நிகழ்த்துகிறான். புனிதப்போர் வழங்குகின்ற தியாக உணர்வை தித்திப்பான நன்மைகளை
புனித ஹஜ்ஜும் வழங்குவதாகவே மார்க்கம் கூறுகின்றது. அதனால் தான் புனிதப் போர்
செய்ய வாய்ப்பில்லாத பெண்களை அதற்கு ஈடுகட்டும் வகையில் ஹஜ் செய்யச் சொல்லி
இஸ்லாம் வலியுறுத்துகிறது.
மதினாவில் வாழ்ந்த அன்னை ஆயிஷா ((ரலி)) அவர்கள் இந்த நபிமொழியை
செவியுற்றதிலிருந்து அண்ணலாரின் மரணத்திற்கு பின்பு மரணமடையும் வரை ஒரு ஆண்டு
கூடத் தவறாமல் ஹஜ் பயணம் மேற்க் கொண்டுள்ளார்கள் என ஆதாரப்பூர்வமான வரலாறு
கூறுகிறது.
இன்று நாம் பல லட்சங்கள் செலவு செய்து ஹஜ்ஜுக்கு செல்கிறோம். ஆனால் நம்முடைய
முன்னோர்கள் ஹஜ் செய்வதற்கு பல லட்சங்கள் செலவு செய்யவில்லை என்பது
கவனிக்கத்தக்கது.
عن أبي هريرة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول:
" من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع من ذنوبه
كيوم ولدته أمه ".متفق عليه
அண்ணல் நபி ((ஸல்)) அவர்கள் கூறினார்கள். உடலுறவு மற்றும் பாவச் செயலில்
ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போல
திரும்புகிறார்
( அபூஹுரைரா ((ரலி)) நூல் புகாரி-1521 )
ஹஜ்ஜுடைய நாட்களில் உலக சுகங்களை முழுமையாக மறந்து இறையச்சத்தோடு மட்டுமே வாழ
வேண்டும். அப்பொழுது ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்ள வேண்டும். ஹஜ்ஜின்
சிரமங்களை சகித்து கொள்வது புனிதப் போரின் சிரமங்களை மேற்கொண்டதற்கு சம்மாகும்
என்று இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். சண்டை சச்சரவு, தீய வார்த்தை
இவைகளை விட்டும் தவிர்த்து கொள்ள வேண்டும்.
ஹஜ்ஜுக்கு செல்லும் போது உலக ஆதாயம், புகழ், பிற மக்கள் நம்மை ஹாஜியார் என்று
அழைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முகஸ்துதிக்காக ஹஜ் பயணம் மேற்கொள்வதில் எவ்வித பயனும் இல்லை. இதனால் அவர்கள் மேற்கொண்ட
சிரமம், செலவழித்த பணமும், கால நேரமும் வீணாகி பாவம் மட்டுமே வந்து சேரும். இறை
பொருத்தத்தை மட்டும் நாடி ஹஜ் செய்திருந்தால் பாவஹ்கள் முழுவதும் அழிக்கப்பட்டு
நன்மைகள் பரிபூரணமாக வழங்கப்பட்டு அன்று பிறந்த பாலகனை போல் திரும்பி வரலாம்.
நம்மில் பலர் முறையாக ஐவேளை தொழுகையை நிறைவேற்றுகிறோம். ஆனால் நம்முடைய
பெயருக்கு முன்னோ அல்லது பின்னோ )முஸல்லி( தொழுகையாளி என்று
எழுதுவதில்லை. அதுபோல நம்மில் பலர் நோன்பு காலங்களில் முறையாக நோன்பு நோற்கிறோம்.
ஆனால் நம்முடைய பெயருக்கு முன்னோ பின்னோ (சாயிம்) நோன்பாளி என்று எழுதுவதில்லை. மாறாக ஹஜ்
கடமையை நிறைவேற்றிய பின்பு மட்டும் நம்மில் பலர் தங்களுடைய பெயருக்கு முன்னோ
பின்னோ ஹாஜி ஹஜ்ஜை நிறைவேற்றியவர் என்று எழுதுகிறோமே இது நபி வழியா....? அல்லது அதற்கு முரண்பட்டதா...? என்று சிந்தித்தோமா....?
அண்ணல் நபி ((ஸல்)) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருமுறை ஹஜ்ஜை
நிறைவேற்றியுள்ளார்கள். நபித்தோழர்களில் பலர் பலமுறை ஹஜ்ஜை நிறைவேற்றியுள்ளனர்.
எந்த நூலிலும் ஹாஜி நபி முஹம்மத் ((ஸல்)) அவர்கள் என்று எழுதப்படவுமில்லை. எந்த
பேச்சாளரும் அண்ணலாரை ஹாஜியார் என்று பேசியதுமில்லை.
ஆனால் நாம் நமது பெயருக்கு முன் ஹாஜி என்று எழுதிக் கொள்கிறோம். ஹாஜியார்
என்று பெருமையாக பேசிக் கொள்கிறோம். அதிலும் ஒருமுறை ஹஜ் செய்தால் ஹாஜி என்றும்
பலமுறை ஹஜ் செய்தால் அல்ஹாஜ் என்று குறிப்பிட வேண்டும் என சிலர் எண்ணுகின்றனர்.
இதுவெல்லாம் தவறான சிந்தனையாகும் . இது நபி வழி அல்ல என்பதை விளங்கிக் கொள்ள
வேண்டும்.
சிபாரிசு செய்யும் தகுதி.
அபுமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அரும் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள். ஒரு ஹாஜியின் சிபாரிசு நானுறு குடும்பத்தினர்களுக்கு ஒப்புக்கொள்ளப்படும்.
அல்லது அவருடைய குடும்பத்தில் நானூறு நபர்களுக்கு ஒப்புக்கொள்ளப்படும். அறிவிப்பாளருக்கு
எந்த சொல்லை அண்ணலார் கூறினார்கள் என்பது சந்தேகமே தவிர நானூறு என்பதில் எண்ணிக்கையில்
சந்தேகமில்லை.
( நூல்
தர்கீப். )
மறுமை நாளில் இறை தூதர்கள், இறைவழியில் உயிர் நீத்த தியாகிகள், மார்க்க
அறிஞர்கள் ஆகியோர்க்குத் தான் பிற மக்களுக்கு சிபாரிசு செய்யும் தகுதி
வழங்கப்படும் என்கிறது நபிமொழி. ஆனால் ஹஜ் கடமையை சிறப்பாக நிறைவேற்றிய ஒரு சாதாரண
மனிதருக்கும் இந்த தகுதி வழங்கப்படும் என்றல்லவா... இந்த நபிமொழி கூறுகிறது. இதன்
மூலம் இறைவனிடம் ஒரு ஹாஜிக்கு இருக்கும்
மதிப்பை உணரலாம்.
குறுக்கீடுகள் ஏற்படலாம்.
இதுபோன்ற பல சிறப்புகளை உள்ளடக்கிய புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதில் காலம்
கடத்துவது முறையாகாது. இப்போ என்ன அவசரம் ஹஜ் செய்வதுக்கெல்லாம் வயது வேண்டும். தலைமுடிக்களெல்லாம்
நரைத்து வயோதிகமா வந்து விட்டது...? பிறகு பார்க்கலாம்
என்று வயதை காரணம் காட்டி வசதி வாய்ப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் இருந்தும்
காலதாமதப்படுத்துபவர்கள் உடனடியாக ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் ஆவல் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ஜை விரைவாக நிறைவேற்றுங்கள்.
ஏனெனில் ஹஜ்ஜை நிறைவேற்ற முடியாமல் போவதற்கு பொருள் இழப்பு, நோய்வாய்படுவது, மரணம்
முந்திக் கொள்வது போன்ற குறுக்கீடுகளில் அவருக்கு என்ன ஏற்படும் என்பதை உங்களில் யாரும்
அறியமாட்டார்கள்.
( நூல் முஸ்னது அஹமது. )
ஹஜ் போன்ற நற்ச்செயல்களில் நாம் ஈடுபட்டாலும் அல்லது ஈடுபடாமல் இறைவனை மறந்து
விட்டாலும் சரி, அல்லாஹ்வின் அந்தஸ்து கூடுவதுமில்லை, குறைவதுமில்லை. நாம் தான்
அல்லாஹ்வின்பால் தேவையாகுவேமே தவிர அல்லாஹ் நம்மிடம் தேவையாகுபவன் அல்ல. இதைதான்
தலைப்பில் கண்ட திருவசனமும் கீழ்காணும் வசனமும் தெளிவுபடுத்துகிறது.
۞ يَـٰٓأَيُّہَا ٱلنَّاسُ أَنتُمُ
ٱلۡفُقَرَآءُ إِلَى ٱللَّهِۖ وَٱللَّهُ هُوَ ٱلۡغَنِىُّ ٱلۡحَمِيدُ
மனிதர்களே... நீங்கள் அனைவரும் எந்தநேரத்திலும் அல்லாஹ்வினுடைய உதவி தேவைப்பட்டவர்களாக
இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ உங்களுடைய தேவையற்றவனும், புகழுக்குரியவனுமாக
இருக்கிறான்.
அத்தியாயம்.
35. வசனம். 15.
அலட்சியத்தின் விளைவு.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை இல்லம் சென்று வர உணவு வசதியும்,
வாகன வசதியும் பெற்றிருந்தும் ஹஜ் செய்யாதவர் யூதராகவோ, கிருஸ்தவராக மரணிப்பதை
பொருட்படுத்த வேண்டியதில்லை.
( அலி (ரலி) நூல்
திர்மிதி.740. )
உமர் (ரலி) கூறினார்கள். இஸ்லாம் கைப்பற்றியுள்ள இந்நகரங்களில் சில ஆட்களை
அனுப்பி ஹஜ் செய்ய சக்தியிருந்தும் ஹஜ் செய்யாமல் இருப்பவர்கள் யார்...? யார்...? என்று ஆய்வு
செய்து அவர்கள் மீது ஜிஸ்யா முஸ்லிமல்லாத குடி மக்களிடம் வசூலிக்கப்படும் வரி
விதித்திட நான் நாடியுள்ளேன். இவர்கள்
முஸ்லிம்கள் அல்ல. இவர்கள் முஸ்லிம்கள் அல்ல என இரு முறை கூறினார்கள்.
( ஹஸன் (ரலி). நூல்
தப்ஸீர் இப்னு கஸீர் அத்தியாயம் ஆல இம்ரான் வசனம் 97.)
தொகுப்பு
மு. ஹைதர் அலி இம்தாதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக