வியாழன், 19 நவம்பர், 2026

வெற்றியின் நான்கு விஷயம்

 


வெற்றியின் நான்கு விஷயம்


الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِهِ الْكَرِيمِ، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ، أَمَّا بَعْدُ


إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا


أَرْبَعٌ إِذَا كُنَّ فِيكَ فَلَا عَلَيْكَ مَا فَاتَكَ مِنَ الدُّنْيَا: حِفْظُ أَمَانَةٍ، وَصِدْقُ حَدِيثٍ، وَحُسْنُ خَلِيقَةٍ، وَعِفَّةٌ فِي طُعْمَةٍ


இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான் என்று பார்த்தால், "வெற்றி" (ஃபலாஹ்) என்ற ஒன்றை நோக்கித்தான். பணம், பதவி, புகழ், சொத்து, சுகம் இவையெல்லாம் கிடைத்துவிட்டால் தாம் வெற்றி பெற்றுவிட்டதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், இவை அனைத்தும் கிடைத்த பிறகும் பலரது வாழ்க்கையில் நிம்மதி இல்லை; மறுமைக்கான தயாரிப்பும் இல்லை.


அப்படியானால், இம்மையிலும் மறுமையிலும் ஒரு மனிதன் உண்மையான வெற்றியாளனாக ஆவதற்கு என்னதான் வழி? உலகத்தில் வேறு எதுவுமே கிடைக்காவிட்டாலும், எவை நம்மிடம் இருந்தால் நாம் முழுமையான வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தம்?


இதற்கான மிகத் தெளிவான, அழகான விடையை நம் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே ஒரு ஹதீஸில் சுருக்கமாகவும் ஆழமாகவும் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.  


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

أَرْبَعٌ إِذَا كُنَّ فِيكَ فَلَا عَلَيْكَ مَا فَاتَكَ مِنَ الدُّنْيَا: حِفْظُ أَمَانَةٍ، وَصِدْقُ حَدِيثٍ، وَحُسْنُ خَلِيقَةٍ، وَعِفَّةٌ فِي طُعْمَةٍ


நான்கு விஷயம் இருக்கிறது. 


முதலாவது (حفظ أمانة): அமானிதத்தைப் பேணிப் பாதுகாத்தல்.


இரண்டாவது (وصدق حديث): உண்மையைப் பேசுதல்.


மூன்றாவது (وحسن خليقة): நல்ல அழகான குணம்.


நான்காவது (وعفة في طعمة): உணவை உண்ணும் பொழுது ஹலாலான நல்ல உணவை உண்ணுவது.


இந்த நான்கு தன்மைகள் யாரிடத்திலேயாவது வந்துவிட்டால், உலகத்திலே எது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்றார்கள் ஹழ்ரத் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


ஹழ்ரத் லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயர்வின் காரணம் 


பொதுவாக நமது வழக்கத்தில் 'அலைஹிஸ்ஸலாம்' என்று நபிமார்களுக்குத்தான் கூறுவோம். 'அலைஹிஸ்ஸலாம்' என்பது நாம் செய்யும் ஒரு பிரார்த்தனையாகும் (துஆ). 'ரஹிமஹுல்லாஹ்' என்றால் 'அல்லாஹ் அருள் புரிவானாக' என்றும், 'அலைஹிஸ்ஸலாம்' என்றால் 'அவர்களுக்குச் சாந்தி உண்டாவதாக' என்றும் பொருளாகும். ஹழ்ரத் லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி அல்ல; அல்லாஹ்வால் உயர்த்தப்பட்ட மிகச் சிறந்த நல்லடியார் (சாலிஹான மனிதர்) ஆவார்கள்.


இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது 'முவத்தா மாலிக்' எனும் கிரந்தத்தில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்:


ஹழ்ரத் லுக்மானுல் ஹக்கீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், "நீங்கள் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறீர்கள்; அல்லாஹ் உங்களுக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தைக் கொடுத்து உயர்த்தி வைத்திருக்கிறான். இந்த உயர்ந்த நிலையை நீங்கள் எதன் மூலம் அடைந்தீர்கள்?" என்று கேட்கப்பட்டது.


அதற்கு அவர்கள், "கீழ்க்காணும் மூன்று பண்புகள்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தின" என்று பதிலளித்தார்கள்:


(حِفْظُ أَمَانَةٍ): என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களைப் பேணிப் பாதுகாத்து நடப்பேன்.


(وَصِدْقُ حَدِيثٍ): எந்நிலையிலும் உண்மையை மட்டுமே பேசுவேன்.


(وَتَرْكُ مَا لَا يَعْنِينِي): எனக்குத் தேவையில்லாத (அனாவசியமான) எந்தவொரு விடயத்திலும் நான் தலையிட மாட்டேன்; அவற்றில் ஈடுபடவும் மாட்டேன்.


இந்த மூன்று நற்பண்புகளுமே தம்மை உயர்ந்த அந்தஸ்திற்குக் கொண்டு சென்றதாக ஹழ்ரத் லுக்மானுல் ஹக்கீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.


முதல் விஷயம் 

'ஹிஃப்ளு அமானா' (حِفْظُ أَمَانَةٍ) 


அமானிதத்தைப் பேணிப் பாதுகாத்தல் என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும். ஒரு முஃமினின் (இறைநம்பிக்கையாளரின்) ஈமானின் அளவுகோலாக இது கருதப்படுகிறது.


'அமானிதம்' (الأمانة) என்பது 

ஒருவர் நம்மிடம் பாதுகாப்பாக வைத்திருக்கக் கொடுக்கும் பணம் அல்லது பொருளை மட்டும் 'அமானிதம்' என்று நினைக்கிறோம். ஆனால் இஸ்லாத்தில் 'அமானிதம்' என்பது மிகவும் பரந்த பொருளைக் கொண்டது:


பொருளாதார அமானிதம்: பிறர் நம்மிடம் நம்பி ஒப்படைக்கும் பணம், நகை, சொத்துப் பத்திரங்கள் மற்றும் கடனாகப் பெற்ற பொருட்களைச் சேதமில்லாமல் உரியவரிடம் திருப்பி ஒப்படைப்பது.


இறைவனின் கட்டளைகள் (வணக்க வழிபாடுகள்): அல்லாஹ் நமக்குக் கடமையாக்கியுள்ள தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்க வழிபாடுகளை முறையாக நிறைவேற்றுவதும், நமது உடல் உறுப்புகளைப் பாவங்களில் இருந்து பாதுகாப்பதும் அல்லாஹ் தந்த அமானிதமாகும்.


ரகசியங்களைப் பாதுகாத்தல்: ஒருவர் நம்மிடம் நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளும் தனிப்பட்ட விஷயங்களையோ அல்லது சபைகளில் பேசப்படும் ரகசியங்களையோ பிறரிடம் சொல்லாமல் பாதுகாப்பது மிகப்பெரிய அமானிதமாகும்.


பதவி மற்றும் பொறுப்புகள்: ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர் தனக்கு வழங்கப்பட்ட நேரத்தில் நேர்மையாக உழைப்பதும், ஆட்சியாளர்கள் அல்லது தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு நீதியுடன் நடந்து கொள்வதும் அமானிதமாகும்.


குடும்பப் பொறுப்பு: கணவன் தன் மனைவி, குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், மனைவி தன் கணவனின் வீட்டையும், கௌரவத்தையும், குழந்தைகளையும் பாதுகாப்பதும் அமானிதமாகும்.


إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا

"நிச்சயமாக அல்லாஹ் அமானிதங்களை (நம்பிக்கையோடு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவற்றை) அவற்றுக்குரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உங்களுக்குக் கட்டளையிடுகிறான்." (அல்குர்ஆன்: 4:58)


அமானிதத்திற்கு மோசடி செய்யாதிருத்தல்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَخُونُوا اللَّهَ وَالرَّسُولَ وَتَخُونُوا أَمَانَاتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ

"ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும், (அவனது) தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்; (அவ்வாறே) உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களிலும் மோசடி செய்யாதீர்கள்." (அல்குர்ஆன்: 8:27)


வெற்றியாளர்களின் அடையாளம்:

وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ

"மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும், தம் வாக்குறுதிகளையும் பேணிப் பாதுகாப்பார்கள்." (அல்குர்ஆன்: 23:8)


அமானிதம் இல்லாதவருக்கு ஈமான் இல்லை:

لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ، وَلَا دِينَ لِمَنْ لَا عَهْدَ لَهُ

"அமானிதத்தைப் பேணாதவருக்கு (முழுமையான) ஈமான் இல்லை; வாக்குறுதியை நிறைவேற்றாதவருக்கு மார்க்கம் (தீன்) இல்லை" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத்)


آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ

"நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்: பேசினால் பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அமானிதத்தில்) மோசடி செய்வான்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)


أَدِّ الْأَمَانَةَ إِلَى مَنِ ائْتَمَنَكَ، وَلَا تَخُنْ مَنْ خَانَكَ

"உன்னை நம்பி ஒப்படைத்தவரிடம் அமானிதத்தை (முறையாகத்) திருப்பி ஒப்படைத்துவிடு; உனக்கு மோசடி செய்தவருக்குக் கூட நீ மோசடி செய்யாதே" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: சுனன் அபூதாவூத், திர்மிதி)


அல்-அமீன் (நம்பிக்கையாளர்)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன்பே, மக்கத்து குறைஷிகள் அவர்களின் நேர்மையைக் கண்டு 'அல்-அமீன்' (மிகவும் நம்பிக்கைக்குரியவர்) என்ற பட்டத்தைக் கொடுத்திருந்தார்கள். தங்களை எதிர்த்த போதும் கூட, குறைஷிகள் தங்கள் விலைமதிப்பற்ற பொருட்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமே அமானிதமாக வைத்திருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் (புலம்பெயர்ந்து) சென்ற இரவிலும் கூட, மக்களின் அமானிதப் பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பொறுப்பாக நியமித்துவிட்டே சென்றார்கள்.


மறுமை எப்போது?

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "மறுமை நாள் எப்போது வரும்?" என்று கேட்கப்பட்டபோது, "அமானிதம் பாழாக்கப்படும்போது மறுமையை எதிர்பாருங்கள்" என்று பதிலளித்தார்கள். "அமானிதம் எவ்வாறு பாழாக்கப்படும்?" என்று கேட்கப்பட்டதற்கு, "தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்போது மறுமையை எதிர்பாருங்கள்" என்றார்கள். (நூல்: ஸஹீஹ் புகாரி)


ஒரு மனிதனிடம் அமானிதத்தைப் பேணும் குணம் வந்துவிட்டால், சமூகத்தில் அவனது நம்பகத்தன்மை உயரும்; இம்மையிலும் மறுமையிலும் அவன் வெற்றியாளனாகத் திகழ்வான்.


"அல்லாஹ்வே சாட்சியாகப் போதுமானவன்”

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 


முன்னர் வாழ்ந்த பனூ இஸ்ரவேலர்களில் ஒருவர், மற்றொருவரிடம் 1,000 தீனார்கள் (தங்க நாணயங்கள்) கடன் கேட்டார். கடன் கொடுப்பவர், "இதற்குச் சாட்சி யார்?" என்று கேட்டார். கடன் வாங்குபவர், "அல்லாஹ்வே சாட்சியாகப் போதுமானவன்" என்றார். "பொறுப்பாளர் (ஜாமீன்) யார்?" என்று கேட்டதற்கும், "அல்லாஹ்வே பொறுப்பாளனாகப் போதுமானவன்" என்றார். அந்த மனிதரின் இறையச்சத்தை நம்பி 1,000 தீனார்களைக் கடனாகக் கொடுத்தார்.


கடனைத் திருப்பித் தர வேண்டிய குறிப்பிட்ட தவணை நாள் வந்தது. கடன் வாங்கியவர் கடலுக்கு அக்கரையில் இருந்தார். பணத்தைத் திருப்பிக் கொடுக்கக் கப்பலுக்காகக் காத்திருந்தார்; ஆனால் அன்று எந்தக் கப்பலும் கிடைக்கவில்லை.


குறித்த நேரத்தில் அமானிதத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சிய அவர், ஒரு மரக்கட்டையை எடுத்து அதைக் குடைந்து, அதனுள் 1,000 தீனார்களையும், கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் வைத்து நன்றாக மூடினார். கடற்கரைக்குச் சென்று, "யா அல்லாஹ்! நான் உன்னையே சாட்சியாகவும் பொறுப்பாளனாகவும் வைத்து இவரிடம் கடன் வாங்கினேன். இன்று கப்பல் கிடைக்கவில்லை. எனவே, இந்த அமானிதத்தை உரியவரிடம் சேர்த்து வைப்பாயாக" என்று பிரார்த்தித்து அதைக் கடலில் வீசினார்.


மறுகரையில், கடன் கொடுத்தவர் தனது பணம் வருமா என்று கடற்கரையில் காத்திருந்தார். கப்பல் எதுவும் வராததால் திரும்பிச் செல்ல முற்பட்டபோது, கடல் அலையில் அடித்து வரப்பட்ட ஒரு மரக்கட்டையைக் கண்டார். வீட்டிற்கு விறகாகப் பயன்படும் என்று அதை எடுத்துச் சென்று பிளந்து பார்த்தபோது, உள்ளே 1,000 தீனார்களும் அந்தக் கடிதமும் இருந்ததைக் கண்டு வியந்தார். 


சில நாட்களுக்குப் பிறகு, கடன் வாங்கியவருக்குக் கப்பல் கிடைத்தது. கடலில் வீசிய மரக்கட்டை உரியவரிடம் சேர்ந்ததா இல்லையா என்பது அவருக்குத் தெரியாததால், அவர் மீண்டும் 1,000 தீனார்களை எடுத்துக் கொண்டு கடன் கொடுத்தவரிடம் நேரில் வந்தார்.


"அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது பணத்தை உமக்குத் திருப்பித் தருவதற்காக நான் தொடர்ந்து கப்பலைத் தேடிக் கொண்டே இருந்தேன்; இப்போதுதான் எனக்குக் கப்பல் கிடைத்தது. இதோ உமது 1,000 தீனார்கள்" என்று கூறி அந்தப் பணத்தை நீட்டினார்.


அப்போது கடன் கொடுத்தவர், "நீர் மரக்கட்டைக்குள் வைத்து எனக்கு ஏதேனும் அனுப்பினீரா?" என்று கேட்டார். கடன் வாங்கியவர், "ஆம், எனக்குக் கப்பல் கிடைக்காததால் அப்படி அனுப்பினேன்" என்றார்.

உடனே கடன் கொடுத்தவர் புன்னகையுடன், "அல்லாஹ்வே பொறுப்பாளனாக இருந்து நீர் மரக்கட்டைக்குள் வைத்து அனுப்பிய பணத்தை என்னிடம் சேர்த்துவிட்டான்; எனவே, நீர் இப்போது கொண்டு வந்த இந்த 1,000 தீனார்களை மகிழ்ச்சியுடன் திருப்பி எடுத்துச் செல்லுங்கள்" என்று கூறினார். நூல் புகாரி


அமானிதத்தை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற உண்மையான எண்ணமும் முயற்சியும் ஒருவரிடம் இருந்தால், அல்லாஹ்வே அதற்குப் பொறுப்பேற்று அதனை நிறைவேற்றி வைப்பான்.


புதையலில் இருந்த தங்க நாணயத்தைக் கண்டெடுத்த நேர்மையாளர் 


முன்னர் வாழ்ந்த பனூ இஸ்ரவேலர்களில் ஒருவர், மற்றொருவரிடம் ஒரு நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை வாங்கியவர், அதில் ஏர் உழுது கொண்டிருந்தபோது பூமிக்கு அடியில் தங்க நாணயங்கள் நிறைந்த ஒரு பானையைக் கண்டெடுத்தார்.


அந்தப் பானையை எடுத்துக் கொண்டு, நிலத்தை விற்றவரிடம் சென்ற அவர், "நான் உங்களிடம் நிலத்தை மட்டும்தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை. எனவே, உங்களுடைய இந்தத் தங்கத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.


 நிலத்தை விற்றவரோ, "நான் அந்த நிலத்தையும், அதற்குள் இருக்கும் அனைத்தையும் சேர்த்துத்தான் உனக்கு விற்றேன். எனவே, இது உனக்குரியது" என்று கூறி வாங்க மறுத்துவிட்டார்.


இருவருமே "அடுத்தவர் பொருள் எனக்கு வேண்டாம்" என்பதில் உறுதியாக இருந்ததால், ஒரு நீதிபதியிடம் சென்று தீர்ப்பு கேட்டார்கள். அந்த நீதிபதி இருவரிடமும் "உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா?" என்று கேட்டார். 


ஒருவர் "எனக்கு ஒரு மகன் இருக்கிறான்" என்றார்; மற்றவர் "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்" என்றார். உடனே அந்த நீதிபதி, "அந்த மகனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்து வைத்து, இந்தத் தங்கத்தை அவர்களுடைய வாழ்க்கைக்காகவும், தர்மத்திற்காகவும் செலவிடுங்கள்" என்று தீர்ப்பளித்தார். நூல்: புகாரி


யாருடைய கண்களுக்கும் தெரியாமல் பூமிக்கு அடியில் கிடைத்த புதையலைக் கூட, தனக்கு உரிமையில்லாத அமானிதம் என்று கருதி உரியவரிடம் ஒப்படைக்கத் துடித்த இறையச்சத்தின் உச்சம் இதுவாகும்.


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மற்றும் இடையனின் நேர்மை


ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை தமது நண்பர்களுடன் பயணத்தில் இருந்தபோது, ஓரிடத்தில் ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தார்கள்.

அப்போது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் (இடையன்) அந்த வழியாக வந்தான். அவனது நேர்மையைச் சோதித்துப் பார்க்க விரும்பிய இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனை அழைத்து இவ்வாறு கேட்டார்கள்:

يَا رَاعِي، بِعْنِي شَاةً مِنْ هَذِهِ الْغَنَمِ

"இடையனே! இந்த ஆடுகளில் ஒன்றை எனக்கு விற்றுவிடு (நான் பணம் தருகிறேன்)."


அதற்கு அந்தச் சிறுவன் சற்றும் தயங்காமல் இவ்வாறு பதிலளித்தான்:

إِنِّي مَمْلُوكٌ، وَلَيْسَتْ لِي، إِنَّمَا هِيَ لِسَيِّدِي

"நான் ஓர் அடிமை (பணியாளன்); இவை என்னுடைய ஆடுகள் அல்ல; இவை என் எஜமானுடையவை."


அவனது இறையச்சத்தை இன்னும் ஆழமாகச் சோதிக்க நினைத்த இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அவனிடம் இவ்வாறு கூறினார்கள்:

قُلْ لِسَيِّدِكَ: أَكَلَهَا الذِّئْبُ

"உன் எஜமானிடம் 'ஒரு ஆட்டை ஓநாய் தின்றுவிட்டது' என்று சொல்லிவிடலாமே!"


இதைக் கேட்டதும் அந்தச் சிறுவன் வானத்தை நோக்கித் தன் தலையை உயர்த்தி, விரலைச் சுட்டிக்காட்டி, வரலாற்றில் நிலைத்து நின்ற அந்த மாபெரும் வார்த்தையைக் கூறினான்:

فَأَيْنَ اللَّهُ؟

"அப்படியானால் அல்லாஹ் எங்கே இருக்கிறான்?"

அந்தச் சிறுவனின் இந்த பதில் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்கலங்க வைத்தது. "அப்படியானால் அல்லாஹ் எங்கே இருக்கிறான்?" என்ற அந்த வார்த்தையை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.


பின்னர் உடனே அந்தச் சிறுவனின் எஜமானனிடம் சென்று, அந்தச் சிறுவனையும், அந்த ஆட்டு மந்தையையும் விலைக்கு வாங்கி, அல்லாஹ்வுக்காக அந்தச் சிறுவனை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்து, அந்த ஆட்டு மந்தையையும் அவனுக்கே பரிசாக வழங்கினார்கள்.


தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பில் (அது சிறியதாக இருந்தாலும்) எஜமானனுக்குத் தெரியாமல் கூடத் தவறு செய்யாதிருப்பதும், தனிமையிலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடன் நடப்பதும் உண்மையான அமானிதப் பாதுகாப்பாகும்.


நூல்: அல்-முஃஜமுல் கபீர் லில்-தபரானி - المعجم الكبير للطبراني, ஹில்யத்துல் அவ்லியா)


இரண்டாவது விஷயம்

وَصِدْقُ حَدِيثٍ அதாவது உண்மையைப் பேசுதல் 


இஸ்லாத்தின் மிக உயர்ந்த நற்பண்புகளில் ஒன்றாகும். ஒரு மனிதனின் ஈமானையும், நற்பண்பையும் அடையாளப்படுத்தும் முதன்மைக் காரணியாக உண்மை திகழ்கிறது.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ 

 "ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் இருங்கள்." (அல்குர்ஆன்: 9:119)


 عَلَيْكُمْ بِالصِّدْقِ، فَإِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَمَا يَزَالُ الرَّجُلُ يَصْدُقُ وَيَتَحَرَّى الصِّدْقَ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ صِدِّيقًا

 

"நீங்கள் உண்மையையே கடைப்பிடியுங்கள். ஏனெனில், நிச்சயமாக உண்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும்; நன்மை சொர்க்கத்தின் பக்கம் வழிகாட்டும். ஒரு மனிதர் தொடர்ந்து உண்மை பேசிக் கொண்டும், உண்மையையே தேடிக் கொண்டும் இருந்தால், அல்லாஹ்விடத்தில் அவர் 'சித்தீக்' (மிகப்பெரிய உண்மையாளர்) எனப் பதிவு செய்யப்பட்டு விடுகிறார்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)


இஸ்லாத்தில் 'உண்மை' (சித்க்) என்பது வெறும் வார்த்தைகளோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு மனிதனின் எண்ணம், பேச்சு, செயல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்:

எவ்விதக் கலப்படமும் இன்றி, நடந்ததை நடந்தபடி பேசுவது. நகைச்சுவைக்காகக் கூடப் பொய் பேசுவதை இஸ்லாம் தடுத்துள்ளது.


ஒரு பொருளை விற்கும்போது அதில் உள்ள குறைகளை மறைக்காமல் உண்மையைச் சொல்லி வியாபாரம் செய்வது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "விற்பவரும் வாங்குபவரும் உண்மை பேசி, பொருளின் குறைகளைத் தெளிவுபடுத்தினால், அவர்களது வியாபாரத்தில் பரக்கத் (அபிவிருத்தி) செய்யப்படும்; பொய் சொல்லி குறைகளை மறைத்தால், அவர்களது வியாபாரத்தின் பரக்கத் அழிக்கப்பட்டுவிடும்." (நூல்: ஸஹீஹ் புகாரி)


நமக்கோ அல்லது நமது நெருங்கிய உறவினர்களுக்கோ எதிராக இருந்தாலும் கூட, சாட்சி சொல்லும்போது உண்மையை மட்டுமே சொல்வது.


ஒருவருக்கு வாக்களித்துவிட்டால், அந்த வார்த்தையில் உண்மையாக நடந்து அதை நிறைவேற்றுவது.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-

உண்மை பேசுவது உள்ளத்திற்கு நிம்மதியையும், பொய் பேசுவது மனதிற்குச் சந்தேகத்தையும் அமைதியின்மையையும் தரும். 


உண்மை பேசுவதால் கிடைக்கும் நன்மைகள்:

அல்லாஹ்வின் அன்பும், மறுமையில் நபிமார்கள் மற்றும் சித்தீகீன்களின் (உண்மையாளர்களின்) உயர்ந்த அந்தஸ்தும் கிடைக்கும்.


சமூகத்தில் ஒரு மனிதனின் வார்த்தைக்கு மதிப்பும் நம்பகத்தன்மையும் உருவாகும்.


இக்கட்டான சூழ்நிலைகளில் கூட உண்மை ஒரு மனிதனைக் காப்பாற்றி, நல்வழியின் பக்கம் அழைத்துச் செல்லும்.


கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் உண்மை


ஹிஜ்ரி 9-ஆம் ஆண்டு நடைபெற்ற தபூக் போருக்கு அனைவரும் புறப்பட வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அச்சமயம் அறுவடைக் காலமாக இருந்ததால், நபித்தோழர் கஅப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சற்றுத் தாமதித்துப் புறப்படலாம் என்று நினைத்து, இறுதியில் போருக்குச் செல்ல முடியாமல் தவறிவிட்டார்கள்.


போர் முடிந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா திரும்பியதும், போருக்கு வராத எண்பதுக்கும் மேற்பட்ட நயவஞ்சகர்கள் (முனாஃபிக்கீன்கள்) பொய்யான காரணங்களைக் கூறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மன்னிப்புப் பெற்றார்கள். 


ஆனால் கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தம்மால் பொய் சொல்லித் தப்பிக்க முடிந்திருந்தும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எவ்விதப் பொய்யும் கலக்காமல் உண்மையைச் சொன்னார்கள்:

    وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، لَوْ جَلَسْتُ عِنْدَ غَيْرِكَ مِنْ أَهْلِ الدُّنْيَا لَرَأَيْتُ أَنِّي سَأَخْرُجُ مِنْ سَخَطِهِ بِعُذْرٍ... وَلَكِنِّي وَاللَّهِ لَقَدْ عَلِمْتُ لَئِنْ حَدَّثْتُكَ الْيَوْمَ حَدِيثَ كَذِبٍ تَرْضَى بِهِ عَنِّي لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يُسْخِطَكَ عَلَيَّ

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதரே! உலகத்தாரில் உங்களைத் தவிர வேறு யாரிடமாவது நான் அமர்ந்திருந்தால், ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி அவர்களின் கோபத்திலிருந்து தப்பித்திருப்பேன்... ஆனால், இன்று உங்களிடம் நான் ஒரு பொய்யைச் சொல்லி உங்களைத் திருப்திப்படுத்தினாலும், நாளை அல்லாஹ் என் மீது உங்களைக் கோபப்படச் செய்துவிடுவான் என்பதை நான் நன்கறிவேன். எனக்கு எந்தக் காரணமும் இல்லை; நான் முழு ஆரோக்கியத்துடன்தான் இருந்தேன்.")

  

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இவர் உண்மை பேசிவிட்டார் (أَمَّا هَذَا فَقَدْ صَدَقَ)" என்று கூறினார்கள். இதற்காக 50 நாட்கள் சமூகப் புறக்கணிப்பு என்ற சோதனையை கஅப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சந்தித்தாலும், இறுதியில் அல்லாஹ் அவர்களின் உண்மையைப் பாராட்டி, அவர்களை மன்னித்ததாகத் திருக்குர்ஆனில் (சூரா அத்-தவ்பா: 9:118-119) வசனங்களை இறக்கியருளினான்.  

وَّعَلَى الثَّلٰثَةِ الَّذِيْنَ خُلِّفُوْا حَتّٰۤى اِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الْاَرْضُ بِمَا رَحُبَتْ وَضَاقَتْ عَلَيْهِمْ اَنْفُسُهُمْ وَظَنُّوْۤا اَنْ لَّا مَلْجَاَ مِنَ اللّٰهِ اِلَّاۤ اِلَيْهِ ثُمَّ تَابَ عَلَيْهِمْ لِيَتُوْبُوْا ‌ اِنَّ اللّٰهَ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்து) விட்டு வைக்கப்பட்டிருந்த மூவரையும், (அல்லாஹ் மன்னித்து விட்டான்;) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும், அது அவர்களுக்கு நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் கஷ்டமாகி விட்டது - அல்லாஹ்(வின் புகழ்) அன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் வேறு அவர்களுக்கு இல்லையென்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் - ஆகவே, அவர்கள் பாவத்திலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு, அவர்களை அல்லாஹ் மன்னித்தான்; நிச்சயமாக அல்லாஹ் (தவ்பாவை ஏற்று) மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன் : 9:118)

நூல்: ஸஹீஹ் புகாரி 


ஹழ்ரத் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கொள்ளையர்களிடம் பேசிய உண்மை


சிறுவயதில் ஹழ்ரத் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கல்வி கற்பதற்காக பாக்தாத் நகரத்திற்கு ஒரு வணிகக் கூட்டத்துடன் பயணம் மேற்கொண்டார்கள். 


புறப்படும்போது அவர்களின் தாயார், அவர்களின் சட்டையின் அக்குள் பகுதிக்குக் கீழே 40 தீனார்கள் (தங்க நாணயங்கள்) வைத்துத் தைத்து, "மகனே! எத்தகைய சூழ்நிலையிலும் பொய் பேசாதே" என்று உபதேசம் செய்து அனுப்பினார்கள்.


வழியில் ஹமதான் எனும் இடத்தில் கொள்ளையர்கள் அந்த வணிகக் கூட்டத்தை வழிமறித்து அனைவரையும் கொள்ளையடித்தார்கள். ஒரு கொள்ளையன் சிறுவராக இருந்த அப்துல் காதிர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் வந்து, "உன்னிடம் ஏதேனும் பணம் இருக்கிறதா?" என்று கேட்டான்.


சிறுவர் சற்றும் தயங்காமல், "ஆம், என் சட்டையின் கீழே 40 தீனார்கள் தைத்து வைக்கப்பட்டுள்ளன" என்றார்கள். கொள்ளையர்கள் அதைப் பிரித்துப் பார்த்து ஆச்சரியமடைந்து, தங்கள் தலைவனிடம் அழைத்துச் சென்றார்கள். 


அந்தத் தலைவன், "நீ மறைத்திருந்தால் எங்களுக்குத் தெரிந்திருக்காதே, ஏன் உண்மையைச் சொன்னாய்?" என்று கேட்டான்.

அதற்கு அப்துல் காதிர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், "என் தாயாரிடம் நான் எக்காரணம் கொண்டும் பொய் பேச மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளேன். எனது கல்விப் பயணத்தின் ஆரம்பத்திலேயே என் தாய்க்குக் கொடுத்த வாக்கை மீறி அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய நான் விரும்பவில்லை" என்றார்கள்.


அந்தச் சிறுவனின் உண்மையைக் கேட்ட கொள்ளையர் தலைவன், "ஒரு சிறுவன் தன் தாய்க்குக் கொடுத்த வாக்கை மீற அஞ்சுகிறான்; ஆனால் நான் இத்தனை ஆண்டுகளாக என்னைப் படைத்த இறைவனுக்கு மாறுசெய்து கொண்டிருக்கிறேனே!" என்று கதறி அழுது, அந்த இடத்திலேயே பாவமன்னிப்புக் (தவ்பா) கோரி, கொள்ளையடித்த அனைத்துப் பொருட்களையும் மக்களிடமே திருப்பிக் கொடுத்தான். 

நூல்: கலாயிதுல் ஜவாஹிர் (قلائد الجواهر) & தபகாத்துல் குப்ரா.


அபூசுஃப்யான் அவர்கள் ரோம மன்னர் ஹெராக்ளியஸிடம் பேசிய உண்மை


ஹுதைபியா உடன்படிக்கைக்குப் பிறகு, நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் அவர்கள் ரோமப் பேரரசர் ஹெராக்ளியஸுக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு அழைப்பு விடுத்துக் கடிதம் அனுப்பினார்கள். 


அச்சமயம் வியாபாரத்திற்காக சிரியா நாட்டிற்குச் சென்றிருந்த குறைஷித் தலைவர் அபூசுஃப்யான் (அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை; நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் கடுமையான எதிரியாக இருந்தார்) அவர்களை மன்னர் ஹெராக்ளியஸ் தன் அரசவைக்கு அழைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் அவர்களைப் பற்றி விசாரித்தார்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதிராகப் பொய் சொல்லி மன்னரின் மனதைக் கலைக்க அபூசுஃப்யானுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் பொய் சொல்லவில்லை. பின்னர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு அபூசுஃப்யான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதைப் பற்றிக் கூறும்போது:

    فَوَاللَّهِ لَوْلَا الْحَيَاءُ مِنْ أَنْ يَأْثِرُوا عَلَيَّ كَذِبًا لَكَذَبْتُ عَنْهُ

"அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் கூட்டத்தார் என்னைப் பற்றி 'இவன் பொய் சொன்னான்' என்று பின்னால் பேசுவார்கள் என்ற வெட்கம் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால், நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி) பொய் சொல்லியிருப்பேன்.")

  

அபூசுஃப்யான் சொன்ன உண்மைகளைக் கேட்ட ரோம மன்னர் ஹெராக்ளியஸ், "நீர் சொன்னவை அனைத்தும் உண்மையானால், விரைவில் அவர் என் பாதங்களுக்குக் கீழே உள்ள இந்த இடத்தையும் வெற்றிகொள்வார்" என்று நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்தை உறுதிப்படுத்தினார். நூல்: ஸஹீஹ் புகாரி 


மூன்றாவது விஷயம் وَحُسْنُ خَلِيقَةٍ நல்ல அழகான குணம் (நற்குணம்) 


நற்குணம் என்பது இஸ்லாத்தின் உயிர்நாடியாகும். 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டதன் முதன்மை நோக்கமே நற்குணங்களை முழுமைப்படுத்துவதுதான்.

 وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ

"(நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர்." (அல்குர்ஆன்: 68:4)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணம் எத்தகையது என்று அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்கப்பட்டபோது, "அவர்களின் குணம் திருக்குர்ஆனாக இருந்தது" எனப் பதிலளித்தார்கள்).


 مَا مِنْ شَيْءٍ يُوضَعُ فِي الْمِيزَانِ أَثْقَلُ مِنْ حُسْنِ الْخُلُقِ، وَإِنَّ صَاحِبَ حُسْنِ الْخُلُقِ لَيَبْلُغُ بِهِ دَرَجَةَ صَاحِبِ الصَّوْمِ وَالصَّلَاةِ

"மறுமை நாளில் (நன்மை தீமைகளை நிறுக்கும்) தராசில் வைக்கப்படும் பொருட்களில், நற்குணத்தை விட அதிக எடையுள்ள பொருள் வேறு எதுவுமில்லை. நிச்சயமாக நற்குணம் உடையவர், தமது நற்குணத்தின் மூலம் (உபரியான) நோன்பு நோற்பவர் மற்றும் நின்று வணங்குபவரின் அந்தஸ்தை அடைந்துவிடுகிறார்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: சுனன் அபூதாவூத், )


இஸ்லாமிய அறிஞர்கள் நற்குணத்திற்கு மிக அழகான இலக்கணத்தை வகுத்துள்ளார்கள். 


மலர்ந்த முகமும் மென்மையான பேச்சும்: பிறரைச் சந்திக்கும்போது புன்னகையுடன் முகமன் (ஸலாம்) கூறுவதும், கடுஞ்சொற்களைத் தவிர்த்து மென்மையாகவும் மரியாதையாகவும் பேசுவதும் நற்குணத்தின் அடையாளமாகும்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 

تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ

"உன் சகோதரனைப் பார்த்து நீ புன்னகைப்பதும் ஒரு தர்மமாகும்" என்றார்கள். நூல் : திர்மிதீ 


தனக்குத் தீங்கு செய்தவர்களைப் பழிவாங்கும் சக்தி இருந்தும், கோபத்தை மென்று விழுங்கி அவர்களை மன்னிப்பது உயர்ந்த நற்குணமாகும்.


நமது நாவாலோ அல்லது கைகளாலோ அண்டை வீட்டாருக்கும், சக மனிதர்களுக்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது.


செல்வம், பதவி அல்லது அறிவு இருந்தாலும் கர்வம் கொள்ளாமல், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பணிவாக நடந்து கொள்வது.


பிறர் செய்த சிறிய உதவிக்குக் கூட நன்றி செலுத்துவதும், கஷ்டப்படுபவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதும் நற்குணத்தின் வெளிப்பாடாகும்.


நற்குணத்தின் முக்கியத்துவம்:

மறுமையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கம்:

إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا

"உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவரும், மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருப்பவரும் உங்களில் அழகிய குணம் உடையவரே" என நபி (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறியுள்ளார்கள். (திர்மிதி)


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ، فَقَالَ: تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "மக்களை அதிகமாகச் சுவனத்தில் நுழைவிக்கும் செயல் எது?" என்று கேட்கப்பட்டபோது, "இறையச்சமும் (தக்வா) நற்குணமும்" என்று பதிலளித்தார்கள். (திர்மிதி)


நல்ல குணம் எதிரிகளைக் கூட நண்பர்களாக மாற்றிவிடும் வல்லமை கொண்டது.


அனஸ் ரலி அவர்களின் சாட்சியம்: 


خَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ، فَمَا قَالَ لِي: أُفٍّ قَطُّ، وَمَا قَالَ لِشَيْءٍ صَنَعْتُهُ: لِمَ صَنَعْتَهُ؟ وَلَا لِشَيْءٍ تَرَكْتُهُ: لِمَ تَرَكْتَهُ؟

"நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். (அந்தப் பத்து ஆண்டுகளில்) அவர்கள் என்னைப் பார்த்து ஒருமுறை கூட 'ச்சீ' (உஃப்) என்று சொன்னதில்லை. நான் செய்த எந்தவொரு செயலுக்காகவும் 'இதை ஏன் செய்தாய்?' என்றோ, நான் செய்யாமல் விட்ட எந்தவொரு செயலுக்காகவும் 'இதை ஏன் செய்யாமல் விட்டாய்?' என்றோ அவர்கள் கேட்டதே இல்லை." நூல்: ஸஹீஹ் புகாரி 


 மஃரூஃப் அல்-கர்க்கி (ரஹ்) அவர்களும் படகில் சப்தமிட்டவர்களும்


பாக்தாத் நகரின் மாபெரும் இறைநேசரான ஹழ்ரத் மஃரூஃப் அல்-கர்க்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒருமுறை தமது மாணவர்களுடன் டைக்ரிஸ் (திஜ்லா) நதியில் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். 


அப்போது மற்றொரு படகில் சில இளைஞர்கள் மது அருந்திக் கொண்டும், ஆபாசமாகப் பாடிக்கொண்டும், இறைநேசர்களைக் கேலி செய்து கொண்டும் சென்றார்கள்.


இதைக் கண்ட மஃரூஃப் அல்-கர்க்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவர்கள் கோபமடைந்து, "ஷேக் அவர்களே! இவர்கள் பாவம் செய்வதோடு நம்மையும் கேலி செய்கிறார்கள்; இவர்களை அழித்துவிடும்படி அல்லாஹ்விடம் சபித்துப் பிரார்த்தனை (பத்-துஆ) செய்யுங்கள்" என்று கேட்டார்கள்.


நற்குணம் நிறைந்த பிரார்த்தனை: உடனே மஃரூஃப் அல்-கர்க்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தி இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:

اللَّهُمَّ كَمَا فَرَّحْتَهُمْ فِي الدُّنْيَا فَفَرِّحْهُمْ فِي الْآخِرَةِ

"யா அல்லாஹ்! இவ்வுலகில் இவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருப்பதைப் போல, மறுமையிலும் இவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பாயாக!"


மாணவர்கள் ஆச்சரியத்துடன் "ஷேக் அவர்களே! இவர்கள் பாவிகளாக இருக்கிறார்களே, மறுமையில் இவர்களுக்கு எப்படி மகிழ்ச்சி கிடைக்கும்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "மறுமையில் மகிழ்ச்சி கிடைக்க வேண்டுமென்றால், அல்லாஹ் இவர்களுக்கு இவ்வுலகில் 'தவ்பா' (பாவமன்னிப்பு) செய்யும் பாக்கியத்தை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனையின் பொருள்" என்றார்கள்.


இதைக் கேட்ட அந்த இளைஞர்கள் தங்கள் தவறை உணர்ந்து, உடனே படகை நிறுத்தி மஃரூஃப் அல்-கர்க்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் ஓடிவந்து மன்னிப்புக் கேட்டு, மதுக் குவளைகளை நதியில் கொட்டிவிட்டுத் திருந்தினார்கள். 

நூல்: அர்-ரிஸாலத்துல் குஷைரிய்யா (الرسالة القشيرية).


ஜுனைத் அல்-பக்தாதி (ரஹ்) அவர்களின் பணிவு

இறைநேசர்களின் தலைவராகக் கருதப்படும் ஹழ்ரத் ஜுனைத் அல்-பக்தாதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், பாக்தாத் நகரில் மிக உயர்ந்த மரியாதைக்குரியவராகத் திகழ்ந்தார்கள். 


ஒருநாள் ஒரு நபர் வேண்டுமென்றே ஜுனைத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில், சபையில் அனைவரின் முன்னிலையிலும் அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினார்.


ஜுனைத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கோபப்படாமல், புன்னகையுடன் அந்த மனிதரிடம், "சகோதரரே! என்னிடம் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. உண்மையில் என்னிடம் இதைவிட அதிகமான குறைகள் உள்ளன; அவற்றை அல்லாஹ் மறைத்து வைத்திருக்கிறான். நீர் என்னைத் திருத்திக் கொள்ள உதவி செய்தீர்" என்று பணிவாகக் கூறினார்கள். அந்த மனிதர் வெட்கித் தலைகுனிந்து அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

நூல்: தாரீக் பக்தாத் (تاريخ بغداد).


நான்காவது விஷயம் 

 (وَعِفَّةٌ فِي طُعْمَةٍ) — அதாவது உணவிலும் சம்பாத்தியத்திலும் பேணுதல் 


ஹலாலான, தூய்மையான உணவை மட்டுமே உண்ணுவது என்பது ஒரு முஃமினின் இபாதத்துகளும் (வணக்கங்களும்) துஆக்களும் (பிரார்த்தனைகளும்) அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான மிக முக்கியமான நிபந்தனையாகும்.


 يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

"(நம்) தூதர்களே! தூய்மையான (ஹலாலான) பொருட்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; மேலும், நற்செயல்களையும் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கறிந்தவன்." (அல்குர்ஆன்: 23:51)


 أَيُّهَا النَّاسُ، إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا... ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ: يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟

 

"மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்; அவன் தூய்மையானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டான்..." என்று கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொடர்ந்து ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்: "அவர் நீண்ட பயணம் மேற்கொண்டு, தலைவிரி கோலத்துடன், புழுதி படிந்தவராக வானத்தை நோக்கித் தம் இரு கைகளையும் உயர்த்தி, 'யா ரப்! யா ரப்! (என் இறைவா! என் இறைவா!)' என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு ஹராம் (விலக்கப்பட்டதாக இருக்கிறது); அவர் அருந்தும் பானம் ஹராம்; அவர் அணியும் ஆடை ஹராம்; ஹராமான உணவாலேயே அவர் வளர்க்கப்பட்டுள்ளார். இவ்வாறிருக்க, இவரது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும்?" எனக் கேட்டார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம், 


இதில் உள்ள 'இஃப்பத்' (عفة) என்றால் பேணுதல், சுயகட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் என்று பொருள். 'துஃமா' (طعمة) என்றால் உணவு மற்றும் வாழ்வாதாரம் (சம்பாத்தியம்) என்று பொருள். 


உணவை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் பணம் ஹலாலான (நேர்மையான) வழியில் சம்பாதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வட்டி, லஞ்சம், சூதாட்டம், திருட்டு, ஏமாற்றுதல் மற்றும் பிறர் சொத்தை அபகரித்தல் போன்ற ஹராமான வழிகளில் வரும் வருமானம் மூலம் உண்ணப்படும் உணவு ஹராமானதாகும்.


அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதித்த (ஹலாலான) உணவுப் பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும். மது, பன்றி இறைச்சி, இறந்த பிராணிகள், அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுக்கப்பட்டவை போன்ற ஹராமான உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


ஹலாலா அல்லது ஹராமா என்ற சந்தேகம் ஏற்படும் பொருட்களையும் வருமானத்தையும் கூட இறையச்சத்திற்காக விட்டுவிடுவது 'இஃப்பத்' எனும் உயரிய பேணுதலாகும். 


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

دَعْ مَا يَرِيبُكَ إِلَىٰ مَا لَا يَرِيبُكَ

"சந்தேகத்திற்குரியவற்றை விட்டுவிடுங்கள்; சந்தேகமற்ற (தூய்மையான)வற்றின் பக்கம் செல்லுங்கள்." (திர்மிதி)


பிறரிடம் கையேந்துவதையோ, அடுத்தவர் உணவின் மீது பேராசை கொள்வதையோ தவிர்த்து, தமது உழைப்பில் கிடைக்கும் குறைந்த உணவாயினும் அதில் மனநிறைவு (கனாஅத்) கொள்வது.


ஹலாலான உணவை உண்ணுவதால் கிடைக்கும் நன்மைகள்:


நபித்தோழர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "எனது துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்பட நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

يَا سَعْدُ، أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ

 "உமது உணவை ஹலாலாக்கிக் கொள்ளுங்கள்; நீர் துஆ ஏற்றுக்கொள்ளப்படுபவராக ஆகிவிடுவீர்" என்று பதிலளித்தார்கள். (நூல்:தபரானி)


ஹலாலான உணவு மனிதனின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, இறைவணக்கங்களில் ஈடுபாட்டை அதிகரிக்கும். ஹராமான உணவு உள்ளத்தைக் கடினமாக்கி, பாவங்களின் பக்கம் இழுத்துச் செல்லும்.


لَا يَدْخُلُ الْجَنَّةَ لَحْمٌ نَبَتَ مِنْ سُحْتٍ، النَّارُ أَوْلَى بِهِ

"ஹராமான உணவால் வளர்ந்த எந்தச் சதையும் சுவர்க்கத்தில் நுழையாது; அதற்கு நரகமே மிகவும் தகுதியானது" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (நூல்:முஸ்னத் அஹ்மத்)


இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களின் பேணுதல் 


சந்தேகத்திற்குரிய உணவைக் கூடத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான மிகப்பெரிய சான்று இதுவாகும்.


கூஃபா நகரத்தில் ஒருமுறை ஆட்டு மந்தையிலிருந்து சில ஆடுகள் திருடப்பட்டு, நகரத்து இறைச்சிக் கடைகளில் விற்கப்பட்டுவிட்டன என்ற செய்தி இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு எட்டியது.


உடனே இமாம் அவர்கள் அங்கிருந்தவர்களிடம், "ஒரு ஆடு அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஏழு ஆண்டுகள்" என்று பதிலளித்தார்கள்.


அந்தத் திருடப்பட்ட ஆடுகளின் இறைச்சி தமது வயிற்றுக்குள் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் கூஃபா நகரக் கடைகளில் ஆட்டு இறைச்சி வாங்குவதையே முற்றிலும் நிறுத்திவிட்டார்கள்.


நூல்: மனாகிபுல் இமாம் அபீ ஹனீஃபா (مناقب الإمام أبي حنيفة).


இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் தந்தை 


ஹதீஸ் கலை அறிஞர் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தந்தை இஸ்மாயீல் இப்னு இப்ராஹீம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மிகுந்த இறையச்சம் கொண்ட வியாபாரியாகத் திகழ்ந்தார்கள்.


அவர்கள் மரணத் தருவாயில் இருந்தபோது, தம்மைச் சந்திக்க வந்த அறிஞர் அஹ்மத் இப்னு ஹஃப்ஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் இவ்வாறு கூறினார்கள்:

لَا أَعْلَمُ فِي جَمِيعِ مَالِي دِرْهَمًا مِنْ حَرَامٍ، وَلَا دِرْهَمًا مِنْ شُبْهَةٍ

"என்னுடைய முழுச் சொத்திலும் ஒரு திர்ஹம் (வெள்ளி நாணயம்) கூட ஹராமான வழியிலோ அல்லது சந்தேகத்திற்குரிய வழியிலோ சம்பாதிக்கப்பட்டதாக நான் அறியவில்லை."


அந்த ஹலாலான உணவால் வளர்ந்ததால்தான், அவர்களின் மகன் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்குத் திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படும் 'ஸஹீஹ் புகாரி' எனும் மாபெரும் கிரந்தத்தைத் தொகுக்கும் பாக்கியத்தை அல்லாஹ் வழங்கினான்.

நூல்: தாரீக் பக்தாத் (تاريخ بغداد), சியர் அஃலாமுன் நுபலா.


ஒரு தந்தையின் ஹலாலான சம்பாத்தியம், பிள்ளையை எவ்வளவு பெரிய இமாமாக்கும் என்பதற்கான அடையாளம்.


ஹழ்ரத் பிஷ்ர் அல்-ஹாஃபி (ரஹ்) 


மாபெரும் இறைநேசரான பிஷ்ர் அல்-ஹாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தாயார், இரவு நேரத்தில் கைராட்டையில் நூல் நூற்று, அதை விற்றுக் கிடைக்கும் ஹலாலான வருமானத்தில் தமது குடும்பத்தை நடத்தி வந்தார்கள்.


ஒருநாள் இரவு, அந்நகர ஆளுநரின் (கலீஃபாவின்) காவலர்கள் தெருவில் தீப்பந்தங்களுடன் ரோந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்தத் தீப்பந்தத்தின் வெளிச்சம் இவர்களது வீட்டிற்குள் விழுந்தபோது, அந்தத் தாயார் நூல் நூற்பதை உடனே நிறுத்திவிட்டார்கள்.


காவலர்கள் சென்ற பிறகு, தமது மகளிடம், 

يَا بُنَيَّةُ، هَذَا ضَوْءُ السُّلْطَانِ، وَلَيْسَ لَنَا فِيهِ حَقٌّ، فَإِنْ غَزَلْنَا عَلَيْهِ دَخَلَتِ الشُّبْهَةُ فِي كَسْبِنَا

"மகளே! ஆளுநரின் தீப்பந்த வெளிச்சம் நமக்குரியது அல்ல; அது அரசாங்கத்திற்குரியது. அந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி நாம் நூல் நூற்றால், நமது சம்பாத்தியத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிடும்" என்று கூறி, இருட்டில் அமர்ந்திருந்து காவலர்கள் சென்ற பின்னரே தமது வேலையைத் தொடர்ந்தார்கள். அந்தத் தாயாரின் பேணுதலால்தான் பிஷ்ர் அல்-ஹாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் உலகப் புகழ்பெற்ற இறைநேசராக உயர்ந்தார்கள்.

நூல்: ஹில்யத்துல் அவ்லியா (حلية الأولياء), தஸ்கிரத்துல் அவ்லியா.


உலகத்தில் செல்வம், பதவி, புகழ் போன்ற எதுவும் கிடைக்காவிட்டாலும், அமானிதம் பேணுதல், உண்மை பேசுதல், நற்குணம், ஹலாலான உணவு ஆகிய நான்கு பண்புகளும் ஒருவரிடம் இருந்துவிட்டால் அவரே இம்மையிலும் மறுமையிலும் உண்மையான வெற்றியாளர் ஆவார்.


பிறர் நம்மிடம் ஒப்படைக்கும் பொருட்கள், ரகசியங்கள் மற்றும் பொறுப்புகளில் எவ்வித மோசடியும் செய்யாமல் பேணிப் பாதுகாப்பதே ஒரு முஃமினின் அடிப்படை அடையாளமாகும்.


எந்தவொரு சூழ்நிலையிலும், நமக்குப் பாதகமாக இருந்தாலும் கூட உண்மையை மட்டுமே பேச வேண்டும். உண்மை ஒரு மனிதனை நன்மையின் பக்கமும், இறுதியில் சொர்க்கத்தின் பக்கமும் அழைத்துச் செல்லும்.


கல்வி, வணக்க வழிபாடுகளோடு அழகிய குணமும் இணையும்போதே ஒரு மனிதன் அல்லாஹ்விடத்திலும் மக்களிடத்திலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறான்.


நாம் உண்ணும் உணவும், ஈட்டும் வருமானமும் ஹலாலானதாக இருக்கும்போதுதான் நமது வணக்க வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் (துஆ) அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படும்.


உலக வாழ்க்கையின் ஆடம்பரங்களையும், நமக்குக் கிடைக்காத உலகப் பொருட்களையும் எண்ணி நாம் கவலைப்படத் தேவையில்லை. மாறாக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த இந்த நான்கு அடிப்படைப் பண்புகளையும் நமது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்து, ஹழ்ரத் லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று வீண் விவகாரங்களைத் தவிர்த்து வாழ்ந்தால், அல்லாஹ்வின் பொருத்தத்தையும் ஈருலக வெற்றியையும் நிச்சயமாக அடைய முடியும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த உயரிய பண்புகளை நம் அனைவரின் வாழ்விலும் கடைப்பிடித்து நடக்கும் நற்பாக்கியத்தைத் தந்தருள்வானாக. ஆமீன்.


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.

முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ஜும்மா பயான்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக