வியாழன், 27 ஆகஸ்ட், 2026

மன்னிப்பின் மாண்பாளர் மாநபிﷺ


மன்னிப்பின் மாண்பாளர் மாநபிﷺ  

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا وَنَبِيِّنَا مُحَمَّدٍ خَاتَمِ الأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ، وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ وَمَنْ تَبِعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ.

قال رسول الله صلى الله عليه وسلم عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ» 

மனித சமுதாயம் அமைதியோடும் நிம்மதியோடும் இயங்குவதற்குத் தேவையான தலையாய நற்குணம் 'மன்னித்தல்' ஆகும். நாம் வாழும் இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் குடும்பத்திலோ, தொழிலிலோ, சமூகத்திலோ பிற மனிதர்களின் நாவடங்காத பேச்சுகளாலும், அநீதிகளாலும், துரோகங்களாலும் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத வாழ்வியல் நியதியாகும். அத்தகைய தருணங்களில் மனித இயல்பு கோபத்தால் கொதித்தெழுந்து, "அவனைப் பழிவாங்காமல் விடமாட்டேன்" என்று பதிலடி கொடுக்கவே துடிக்கிறது.

பொதுவாக இந்த உலகம் பழிவாங்குவதையும், கொடூரமாக பதிலடி கொடுப்பதையுமே "வீரம்" என்று வர்ணிக்கிறது; மன்னித்து ஒதுங்குவதை "கோழைத்தனம்", "பலவீனம்" என்று ஏளனம் செய்கிறது. ஆனால் இஸ்லாம் இந்த உலகியல் பார்வையை அடியோடு மாற்றியமைக்கிறது. பழிவாங்கும் முழு அதிகாரமும் ஆற்றலும் கையில் இருக்கும் போது, இறைவனின் திருப்திக்காக அநீதியை சகித்துக் கொண்டு, குற்றவாளியை மனப்பூர்வமாக மன்னித்து அவனுக்கு நன்மையும் செய்வதே ஆகச்சிறந்த வீரமும், ஈமானின் உச்சக்கட்ட சிகரமுமாகும் என இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

அகிலங்களின் அருட்கொடையாகத் திகழும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித வாழ்க்கை இதற்கு உலக வரலாற்றிலேயே இணையற்ற முன்மாதிரியாகத் திகழ்கிறது. எதிரிகள் அவர்களைப் பைத்தியக்காரர் என்றார்கள்; கவிஞன் என்றார்கள்; சூனியக்காரர் என்றார்கள்; கல்லெறிந்தார்கள்; சொந்த நாட்டை விட்டு விரட்டினார்கள்; அவர்களின் அருமைத் தோழர்களைக் கொன்று குவித்தார்கள். ஆனால் அத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில் நபிகளார் காட்டியது வன்மத்தையோ பழிவாங்கலையோ அல்ல; மாறாக மனிதகுலம் அதுவரை கண்டிராத எல்லைகளற்ற பெருங்கருணையையும் மன்னிப்பையுமே ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனித வாழ்வு, அகிலத்திற்கே மன்னிப்பின் தலைசிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.  

பழிவாங்கும் முழு அதிகாரமும் ஆற்றலும் கையில் இருந்தபோதும், தமக்கு அநீதி இழைத்தவர்களை மனதார மன்னித்த தனிப்பெரும் தலைவர் அவர்கள்.  

தாயிஃப் நகரில் கல்லெறிந்து காயப்படுத்தியவர்களுக்காக, "இறைவா! இவர்கள் அறியாதவர்கள்; இவர்களை மன்னித்துவிடு" என்று ரத்தம் சிந்திய நிலையிலும் நலம் நாடிப் பிரார்த்தித்தார்கள்.  

21 ஆண்டுகள் தம்மைத் துன்புறுத்தி ஊரை விட்டு விரட்டிய மக்கத்துக் குறைஷிகளை, "இன்று உங்கள் மீது எந்தப் பழியும் இல்லை; நீங்கள் சுதந்திரமானவர்கள்" என ஒரே பிரகடனத்தில் மன்னித்தார்கள்.  

பெரிய தந்தை ஹம்ஸா (ரழி) அவர்களின் உடலைச் சிதைத்தவர்களையும், தம்மைக் கொல்ல உணவில் விஷம் வைத்த யூதப் பெண்ணையும் தனிப்பட்ட விரோதமின்றி மன்னித்தார்கள்.  

மன்னிப்பதன் வாயிலாக ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகரிக்கிறான்" என உலகிற்குப் போதித்து வாழ்ந்து காட்டினார்கள்.  

கோபத்தை அடக்கி பிறரை மன்னிப்பதே ஈமானின் உச்சக்கட்ட வீரம் என்பதைத் தம் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்தினார்கள்.  

.خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ

"(நபியே!) நீர் மன்னிப்பைக் கையாளுங்கள்; நன்மையை ஏவுங்கள்; மேலும் அறிவீனர்களைப் புறக்கணியுங்கள்." (அல்குர்ஆன்)

இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: இவ்வசனம் அருளப்பட்ட போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம், "இதன் விளக்கம் என்ன?" எனக் கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் "உம்முடன் உறவை முறித்தவருடன் நீர் உறவை இணையுங்கள்; உமக்குத் தர மறுத்தவருக்கு நீர் வழங்குங்கள்; உமக்கு அநீதி இழைத்தவரை நீர் மனதார மன்னியுங்கள் என்று அல்லாஹ் உமக்குக் கட்டளையிடுகிறான்" என்று விளக்கமளித்தார்கள்.

கோபத்தை அடக்கி மனிதர்களை மன்னிக்கும் முஹ்சின்கள்:

الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ 

"(இறையச்சமுடையோர் யாரெனில்) அவர்கள் செல்வச் செழிப்பிலும் வறுமையிலும் தானம் செய்வார்கள்; கோபத்தை விழுங்கி அடக்கிக் கொள்வார்கள்; மனிதர்களை மன்னிப்பார்கள். அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான்." (அல்குர்ஆன்)

 இவ்வசனத்தில் இறையச்சமுடையோரின் 3 உன்னத குணங்கள் 

1. கோபம் வரும் போது அதை வெளியேற்றாமல் அடக்குதல் (கழ்முல் கைழ்), 

2. நெஞ்சில் வன்மம் வைக்காமல் தவறை முழுமையாக மன்னித்து விடுதல் (அஃப்வு),

3. தீங்கிழைத்தவருக்கும் நன்மையே செய்தல் (இஹ்ஸான்). இந்த உயர்ந்த நிலையை அடைந்தோரையே அல்லாஹ் 'முஹ்சின்கள்' என்று அழைக்கிறான்.

 இறைவனின் மன்னிப்பைப் பெற மனிதர்களை மன்னியுங்கள்:

وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا ۗ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّهُ لَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ 

"அவர்கள் மன்னிக்கட்டும்; பிழைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் பெருங்கருணையாளனுமாவான்."

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட அவதூறில் (இஃப்க் சம்பவம்) ஈடுபட்டவர்களில் மிஸ்தஹ் பின் உஸாஸாவும் ஒருவர். மிஸ்தஹ் ஏழையாக இருந்ததால் அபூபக்கர் (ரழி) அவருக்குத் தொடர்ச்சியாக பொருளாதார உதவி செய்து வந்தார். தன் அருமை மகளின் கற்பின் மீது வீண்பழி சுமத்தியதால் மனம் நொந்த அபூபக்கர் (ரழி), "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இனி மிஸ்தஹுக்கு ஒருபோதும் உதவ மாட்டேன்" எனச் சத்தியம் செய்தார். அப்போது அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கி, "அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற நீங்கள் பிறரை மன்னியுங்கள்" எனக் கட்டளையிட்டான். உடனே அபூபக்கர் (ரழி) அவர்கள் கண்ணீர் மல்க, "ஆம் இறைவா! நீ எனக்கு மன்னிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்" என்று கூறி, மிஸ்தஹுக்கு தாம் செய்து வந்த உதவியை இரட்டிப்பாக்கினார்கள்.

மன்னிப்பால் கண்ணியம் உயரும்:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ» 

 "தர்மம் செய்வதால் செல்வம் ஒருபோதும் குறைந்துவிடுவதில்லை. மன்னிப்பதன் வாயிலாக ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகரிக்கிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவை மேற்கொண்டால் அவரை அல்லாஹ் உயர்த்தியே தீருவான்."நூல்:ஸஹீஹ் முஸ்லிம்

பொதுவாக மக்கள் "நாம் மன்னித்துவிட்டால் எதிரி நம்மை ஏளனமாகப் பார்ப்பான், நமது கௌரவம் குலைந்துவிடும்" என்று அஞ்சுகிறார்கள். ஆனால் நபிகளார் உறுதியளிக்கிறார்கள்: நீங்கள் அல்லாஹ்விற்காக மன்னித்தால் உங்களின் அந்தஸ்தையும் கண்ணியத்தையும் அல்லாஹ் உலகிலும் மறுமையிலும் உயர்த்தியே தீருவான்.

கோபத்தை அடக்குபவனே உண்மையான வீரன்:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ» 

"மல்யுத்தக் களத்தில் எதிராளியைத் தூக்கி அடிக்கும் பலசாலி உண்மையான வீரன் அல்லன்; மாறாக, கோபம் பொங்கி எழும் வேளையில் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆளும் மனிதனே உண்மையான பலசாலி ஆவான்."நூல்:ஸஹீஹ் புகாரி:

பிறரை மன்னித்தால் உங்கள் பாவம் மன்னிக்கப்படும்:

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْحَمُوا تُرْحَمُوا، وَاغْفِرُوا يُغْفَرْ لَكُمْ» 

 "பூமியிலுள்ள மனிதர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டுங்கள்; உங்களுக்கு இரக்கம் காட்டப்படும். நீங்கள் பிறரின் பிழைகளை மன்னியுங்கள்; உங்கள் பாவங்கள் அல்லாஹ்வால் மன்னிக்கப்படும்."நூல்:முஸ்னத் அஹ்மத்

அநீதி இழைத்தவரை மன்னிக்கும் உன்னத சுன்னத்:

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: لَقِيتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي: «يَا عُقْبَةُ، صِلْ مَنْ قَطَعَكَ، وَأَعْطِ مَنْ حَرَمَكَ، وَاعْفُ عَمَّنْ ظَلَمَكَ,

 "உக்பா பின் ஆமிர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: நான் நபிகளாரைச் சந்தித்த போது அவர்கள் கூறினார்கள்: 'உக்பாவே! உம்முடன் உறவை முறித்துக் கொண்டவருடன் நீர் சேர்ந்து வாழுங்கள்; உமக்குத் தர மறுத்தவருக்கு நீர் வழங்குங்கள்; உமக்கு அநீதி இழைத்தவரை நீர் மனதார மன்னித்துவிடுங்கள்!'"நூல்:முஸ்னத் அஹ்மத்:

 மக்கா வெற்றி மாபெரும் பொதுமன்னிப்பு

21 ஆண்டுகால கொடுமைகளுக்கு ஒரே பிரகடனத்தில் தீர்வு: 

ஹிஜ்ரி 8-ஆம் ஆண்டு ரமழான் மாதம். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 10,000 நபித்தோழர்களுடன் மக்காவை வெற்றி கொண்டார்கள். உலக வரலாற்றில் மாமன்னர்கள் அல்லது தளபதிகள் ஒரு நகரத்தை வெற்றி கொள்ளும்போது அங்கே பழிவாங்கலும், ரத்த ஆறுகளும் ஓடும்; எதிரிகள் கொல்லப்படுவார்கள்; பெண்கள் சிறைபிடிக்கப்படுவார்கள்; சொத்துக்கள் சூறையாடப்படும். ஆனால் நபிகளார் மக்காவினுள் நுழைந்த போது, வெற்றிப் பெருமிதத்தோடு நுழையவில்லை; மாறாக தன் தாடி ஒட்டகத்தின் சேணத்தில் படும் அளவிற்கு பணிந்து தலைகுனிந்து, இறைவனைப் போற்றித் துதித்தவாறு நுழைந்தார்கள்.

கஅபாவின் வாயிலில் நின்ற நபிகளார் முன்னிலையில் மக்கத்துக் குறைஷிகள் அனைவரும் நடுநடுங்கி நின்றனர். அவர்கள் யார்? நபிகளாரின் முதுகில் தொழுகையின் போது ஒட்டகத்தின் அழுகிய குடலைத் தூக்கிப் போட்டவர்கள்; நபிகளாரின் கழுத்தில் துணியை நெரித்துக் கொல்ல முயன்றவர்கள்; சுமையா ரலியல்லாஹு அன்ஹா யாசிர் ரலியல்லாஹு அன்ஹு பிலால் ரலியல்லாஹு அன்ஹு கப்பாப் ரலியல்லாஹு அன்ஹு போன்ற அப்பாவிகளை சித்திரவதை செய்தவர்கள்.; முஸ்லிம்களை சொந்த ஊரை விட்டு விரட்டி அவர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் அபகரித்தவர்கள்; பத்ரு, உஹது, அஹ்ஸாப் போர்களைத் தொடுத்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தவர்கள்.

நபிகளார் அவர்களைப் பார்த்து வினவினார்கள்: "மக்கத்து குறைஷியரே! இன்று உங்களிடம் நான் என்ன செய்வேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?" அவர்கள் நடுங்கியபடி, "நீங்கள் கண்ணியமிக்க சகோதரர்; கண்ணியமிக்க சகோதரரின் மகன்; உங்களிடமிருந்து நன்மையையும் கருணையையுமே எதிர்பார்க்கிறோம்" என்றனர்.அப்போது அண்ணலார் விடுத்த பிரகடனம் தான் 

«لَا تَثْرِيبَ عَلَيْكُمُ الْيَوْمَ يَغْفِرُ اللَّهُ لَكُمْ وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ، اذْهَبُوا فَأَنْتُمُ الطُّلَقَاءُ» 

"யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் சகோதரர்களுக்குக் கூறியது போல நானும் கூறுகிறேன்: இன்று உங்கள் மீது எந்தப் பழியும் இல்லை; பழிவாங்கலும் இல்லை. அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் பெருங்கருணையாளன். நீங்கள் அனைவரும் சுதந்திரமாகச் செல்லுங்கள், நீங்கள் மன்னிக்கப்பட்டவர்கள்!"நூல்:அஸ்-ஸீரத்துன் நபவிய்யா (இப்னு ஹிஷாம்), அஸ்-ஸுனனுல் குப்ரா (பைஹகீ: 

யூத அறிஞர் ஸைத் பின் ஸஃனாவிடம் காட்டிய நளினம்

 மதீனாவின் பெரும் யூத அறிஞர்களில் ஒருவரான ஸைத் பின் ஸஃனா, தவ்ராத் வேதத்தை நன்கு கற்றவர். நபிகளாரின் தோற்றம், பேச்சு ஆகியவற்றை வைத்து அவர் இறுதி நபி என்பதை உணர்ந்த போதிலும், வேதத்தில் கூறப்பட்ட இரு தனித்துவமான பண்புகளை நேரில் சோதிக்க விரும்பினார்: "அவரது பொறுமை அவரது கோபத்தை மிகைத்து நிற்கும்; அவரிடம் அறியாமையாகவும் முரட்டுத்தனமாகவும் நடக்கும் போது அவரது நளினமும் மன்னிப்பும் மேலும் கூடும்."

ஒருமுறை ஒரு கிராமத்து ஏழை மக்களுக்கு உதவுவதற்காக நபிகளார் ஸைத் பின் ஸஃனாவிடம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பேரீச்சம்பழங்களைக் கடனாக வாங்கினார்கள். ஆனால் தவணை முடிவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே, நபித்தோழர்கள் சூழ நபிகளார் இருந்த சபைக்கு சைத் வந்தார். நபிகளாரின் சட்டையையும் போர்வையையும் பிடித்துக் கொடூரமாக இழுத்து, கண்களை உருட்டி, "முஹம்மதே! என் கடனைத் தாரும்! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே கடனைத் தாமதப்படுத்துவதில் பேர்போனவர்களாயிற்றே!" என்று அவமரியாதையாகப் பேசினார்.

அங்கிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கண்கள் கோபத்தால் சிவந்தன. "அல்லாஹ்வின் எதிரியே! அல்லாஹ்வின் தூதரிடமா இப்படிப் பேசுகிறாய்? என் வாளுக்கு மட்டும் அனுமதியிருந்தால் உன் தலையைத் துண்டித்திருப்பேன்!" என கர்ஜித்தார்கள். 

நபிகளார் புன்னகை பூத்த முகத்தோடு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து அமைதியாகக் கூறினார்கள்: "உமரே! நானும் இவரும் உம்மிடமிருந்து வேறு விதமான நடத்தையை எதிர்பார்த்தோம். என்னை அழகிய முறையில் கடனை நிறைவேற்றும்படி நீர் கூறியிருக்க வேண்டும்; இவரிடம் நளினமான முறையில் கடனைக் கேட்கும்படி அறிவுறுத்தியிருக்க வேண்டும். உமரே! இவரை அழைத்துச் சென்று இவருக்குரிய பேரீச்சம்பழங்களைக் கொடுத்துவிடும்; மேலும் நீர் இவரை மிரட்டிப் பயமுறுத்தியதற்காக நஷ்டஈடாக இருபது 'ஸாஃ' பேரீச்சம்பழங்களைக் கூடுதலாகக் கொடுப்பீராக!"

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்வாறே கூடுதல் பழங்களைக் கொடுத்த போது, ஸைத் இப்னு ஸஃனா வியந்து கூறினார்: "உமரே! நான் நபிகளாரின் பொறுமையைச் சோதிப்பதற்காகவே அப்படிச் செய்தேன். தவ்ராத்தில் கூறப்பட்ட அனைத்து அடையாளங்களையும் நான் நபிகளாரிடம் கண்டுவிட்டேன். இப்போது நான் சாட்சி கூறுகிறேன்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர்!" உடனே அவர் இஸ்லாத்தை ஏற்று தன் செல்வத்தின் பெரும்பகுதியை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினார்.நூல்: அல்-முஸ்தத்ரக் ஸஹீஹ் இப்னு ஹிப்பான் , அல்பைஹகீ - தலாயிலுன் நுபுவ்வா.

உறங்கும் போது வாளுருவிய கவ்ரஸை விடுவித்தல்

நஜ்து பகுதியை நோக்கி நடைபெற்ற 'தாத்துர் ரிகாஃ' போரின் போது, கடுமையான வெயில் நேரத்தில் நபிகளாரும் தோழர்களும் ஒரு மரத்தடிகள் நிறைந்த பள்ளத்தாக்கில் தங்கினார்கள். தோழர்கள் நபிகளாருக்காக நிழல் அடர்ந்த ஒரு பெரிய மரத்தை ஒதுக்கிவிட்டு, தாங்கள் ஆங்காங்கே மரத்தடிகளில் தூங்கச் சென்றனர். நபிகளார் தன் வாளை மரத்தின் கிளையில் மாட்டிவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

அச்சமயத்தில் 'கவ்ரஸ் இப்னுல் ஹாரிஸ்' என்ற கிராமவாசி எதிரி பதுங்கி வந்து, மரத்தில் தொங்கிய நபிகளாரின் வாளை உருவி, நபிகளாரின் தலைக்கு மேல் வாளை ஓங்கினான். நபிகளார் கண்விழித்துப் பார்த்த போது அவன் வஞ்சகச் சிரிப்புடன் கர்ஜித்தான்: "முஹம்மதே! இப்போது என்னை விட்டும் உம்மைக் காப்பாற்றுவது யார்?"

நபிகளார் சிறிதும் பதற்றமின்றி, மலையளவு ஈமானுடன் «اللَّهُ» (அல்லாஹ்!) என்று கூறினார்கள். அந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் எதிரியின் உடலில் நடுக்கம் ஏற்பட்டு, அவனது கைகளிலிருந்து வாள் நழுவி தரையில் விழுந்தது.

உடனே நபிகளார் வாளைக் கையில் எடுத்து அவன் மீது உயர்த்தி, "இப்போது உன்னை என்னிடமிருந்து காப்பாற்றுவது யார்?" என்று கேட்டார்கள். அவன் நடுநடுங்கி, "நீர் சிறந்த முறையில் தண்டிப்பவராக (என்னை மன்னிப்பவராக) இருங்கள்!" என்று கெஞ்சினான். நபிகளார் அவனை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காமல், எவ்வித தண்டனையுமின்றி விடுதலை செய்தார்கள். அவன் தன் சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று, "மக்களே! மனிதகுலத்திலேயே மிகச் சிறந்த உன்னத மனிதரிடமிருந்து நான் உங்களிடம் வந்துள்ளேன்!" என்று உரக்கக் கூறி இஸ்லாத்தின் பெருமையைப் பரப்பினான்.நூல்: ஸஹீஹ் புகாரி

கொலையாளிகளான வஹ்ஷி & ஹிந்தாவை மன்னிப்பு

 உஹதுப் போர்க்களத்தில் நபிகளாரின் ஆருயிர் பெரிய தந்தையும், "அல்லாஹ்வின் சிங்கம்" என்று போற்றப்பட்டவருமான ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். ஜூபைர் பின் முத்இமின் அடிமையான வஹ்ஷி பின் ஹர்ப் என்பவர் விடுதலை பெறுவதற்காக தூரத்திலிருந்து குறிவைத்து ஈட்டியெறிந்து ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஷஹீதாக்கினார். போர்க்களத்தில் அபூசுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா, ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடலைச் சிதைத்து, மூக்கு, காதுகளை அறுத்து மாலையாக அணிந்து, நெஞ்சைப் பிளந்து ஈரலை எடுத்துக் கடித்துத் துப்பினாள்.

பெரிய தந்தை ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிதைக்கப்பட்ட உடலைக் கண்ட நபிகளார் அன்று கதறி அழுதார்கள்; தங்கள் வாழ்நாளில் அத்தகைய பெரும் துக்கத்தை அடைந்ததே இல்லை.

ஆனால் மக்கா வெற்றியின் போது, அதே ஹிந்தா வந்து மன்னிப்புக் கோரி இஸ்லாத்தை ஏற்ற போது நபிகளார் அவளை மனதார மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் தாயிஃப் வெற்றியின் போது வஹ்ஷி அவர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்த போது, அவரையும் நபிகளார் மன்னித்து முஸ்லிமாக அங்கீகரித்தார்கள். ஆயினும் மனித இயல்பின் காரணமாக, "வஹ்ஷியே! உன்னைக் காணும் போதெல்லாம் என் பெரிய தந்தை நினைவுக்கு வருகிறார்; எனவே முடிந்தால் என் எதிரே வராமல் இருக்க முடியுமா?" என்று மட்டுமே கூறினார்கள் தவிர, எந்தவிதமான பழிவாங்கலையோ பகையையோ காட்டவில்லை.நூல்:ஸஹீஹ் புகாரி 

விஷம் கலந்த ஆட்டிறைச்சியைத் தந்த பெண்மணிக்கு மன்னிப்பு

ஹிஜ்ரி 7-ல் கைபர் கோட்டை வெற்றி கொள்ளப்பட்ட பின், கைபரின் தலைவர்களில் ஒருவனான ஸல்லாம் பின் மிஷ்கமின் மனைவி 'ஜைனப் பின்த் அல்-ஹாரிஸ்' என்பவள் நபிகளாருக்கு விருந்தளிக்க விரும்புவதாகக் கூறினாள். நபிகளாருக்கு ஆட்டின் முன்னந்தொடை இறைச்சி பிடிக்கும் என்பதை அறிந்து கொண்டு, அந்த இறைச்சியில் மிகக் கொடிய விஷத்தைத் தடவி நபிகளாருக்கும் நபித்தோழர்களுக்கும் பரிமாறினாள்.

நபிகளார் ஒரு துண்டு இறைச்சியை வாயில் வைத்த உடனே, இறைவனின் அருளால் அந்த இறைச்சி விஷம் கலந்திருப்பதை உணர்ந்து உடனே துப்பினார்கள். ஆனால் உடன் அமர்ந்து உண்ட தோழர் 'பிஷ்ர் பின் அல்-பராஃ' (ரழி) அவர்கள் அந்த விஷத்தின் தாக்கத்தால் மரணமடைந்தார்.

அந்தப் பெண் கைது செய்யப்பட்டு நபிகளாரிடம் நிறுத்தப்பட்டாள். "நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என நபிகளார் கேட்டார்கள். அவள், "நீங்கள் பொய்யான அரசராக இருந்தால் இந்த விஷத்தால் மடிந்து விடுவீர்கள்; உண்மையான இறைத்தூதராக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு அறிவித்து காப்பாற்றி விடுவான் என்று சோதிக்கவே செய்தேன்" என்றாள். நபித்தோழர்கள் அப்பெண்ணைக் கொல்ல அனுமதி கேட்ட போதிலும், நபிகளார் தன் தனிப்பட்ட விரோதத்திற்காக அவளைத் தண்டிக்காமல் மன்னித்து விட்டார்கள்.நூல்:ஸஹீஹ் புகாரி 

ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசிக்கு வாரி வழங்கல்

அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அவர்கள் நஜ்ரான் தேசத்து தடித்த விளிம்புகளைக் கொண்ட ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தார்கள். திடீரென ஒரு கிராமவாசி பின்னால் வேகமாக ஓடிவந்து, நபிகளாரின் சால்வையின் முனையைப் பிடித்து மிகக் கொடூரமாக இழுத்தார். அந்த இழுப்பின் வேகத்தில் சால்வையின் தடித்த விளிம்பு பட்டு நபிகளாரின் மென்மையான பிடரி மற்றும் கழுத்துப் பகுதியில் சிவந்த தழும்பு ஏற்பட்டது.

பின்னர் அவன் முரட்டுத்தனமான குரலில், "முஹம்மதே! உம்மிடமிருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குத் தருமாறு உத்தரவிடும்!" என்று கத்தினார். நபிகளார் கோபப்படாமல் அமைதியாக அவர்பக்கம் திரும்பிப் பார்த்து புன்னகைத்தார்கள். பின்னர் தோழர்களை அழைத்து, அவருக்குத் தேவையான தானியங்களையும் ஒட்டகச் சுமைகளையும் வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.நூல்:ஸஹீஹ் புகாரி 

சுமாமா பின் உஸால் உள்ளத்தை வென்ற கருணை

யமாமா தேசத்தின் பனூ ஹனீஃபா கூட்டத்தின் தலைவரான 'சுமாமா பின் உஸால்' இஸ்லாத்தின் கொடிய எதிரியாக இருந்தார். பல முஸ்லிம்களைக் கொலை செய்திருந்தார். ஒருமுறை மதீனாவின் குதிரைப்படையினர் ரோந்து சென்ற போது அவரை அடையாளம் தெரியாமல் கைது செய்து மதீனா பள்ளிவாசலின் ஒரு தூணில் கட்டி வைத்தனர்.

நபிகளார் பள்ளிவாசலுக்கு வந்து அவரைப் பார்த்து, "சுமாமாவே! உமது நிலை என்ன?" எனக் கேட்டார்கள். சுமாமா, "முஹம்மதே! என்னிடம் நன்மையானதே உள்ளது. நீர் என்னைக் கொன்றால் ஒரு கொலையாளியைக் கொன்றவராவீர்; நீர் என்னை மன்னித்தால் நன்றிமிக்க ஒருவனை மன்னித்தவராவீர்; உமக்குச் செல்வம் தேவையென்றால் கேளுங்கள், நீர் விரும்பியதை தருகிறேன்" என்றார். நபிகளார் அவரை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் நபிகளார் அவரிடம் சென்று நலம் விசாரித்தார்கள். அவருக்குப் பள்ளிவாசலில் வைத்து சிறந்த உணவும் பாலும் வழங்கப்பட்டது. மூன்றாம் நாள் நபிகளார் தோழர்களை நோக்கி, «أَطْلِقُوا ثُمَامَةَ» "சுமாமாவை அவிழ்த்து விடுதலை செய்யுங்கள்!" என்று பணித்தார்கள்.

எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட்ட துமாமா, பள்ளிவாசலை விட்டு வெளியேறி அருகில் உள்ள பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு நேராக நபிகளாரிடம் வந்து நின்றார். அவர் கூறினார்: "முஹம்மதே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நேற்றைய தினம் வரை பூமியிலேயே எனக்கு மிகவும் வெறுப்பான முகமாக உமது முகம் இருந்தது; ஆனால் இன்றோ உமது முகம் எனக்கு உலகிலேயே மிகவும் பிரியமான முகமாக மாறிவிட்டது! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்!நூல்: ஸஹீஹ் புகாரி

அவதூறு விவகாரத்தில் அண்ணலாரின் பெருந்தன்மை

பனூ முஸ்தலக் போரிலிருந்து திரும்பும் வழியில் நயவஞ்சகர்களின் தலைவனான அப்துல்லாஹ் பின் உபை இப்னு சலூல், அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது மிகக் கேவலமான அவதூறைப் பரப்பினான் ஒரு மாத காலம் வஹீ வராமல் நபிகளாரின் குடும்பமும் ஒட்டுமொத்த மதீனாவும் பெரும் மனவேதனையில் மூழ்கியது.

இறுதியில் சூரா அந்-நூரின் 11-20 வரையிலான வசனங்கள் இறங்கி அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் பரிசுத்தத்தை அல்லாஹ்வே சான்றளித்தான். வதந்தியைப் பரப்பிய நயவஞ்சகர்களுக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்பிருந்தும், நபிகளார் அமைதியையும் நல்லிணக்கத்தையுமே முன்னிறுத்தினார்கள். 

நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை மரணித்த போது கூட, அவனது மகன் (நல்ல முஸ்லிமான அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு கேட்டுக்கொண்டதற்காக நபிகளார் தன் சொந்த சட்டையைக் கஃபன் துணியாகக் கொடுத்து அவனுக்காக ஜனாஸா தொழுகை நடத்தவும் முன்வந்தார்கள்.நூல்:ஸஹீஹ் புகாரி 

மன்னிப்பின் உச்சம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த பிறகு, அவர்களின் மூத்த அருமை மகளார் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மக்காவிலேயே தங்கியிருந்தார்கள்.

பின்னர் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கர்ப்பிணியாக இருந்த நிலையில், மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்வதற்காக ஒட்டகச் சிவிகையில் மக்காவை விட்டுப் புறப்பட்டார்கள்.

அப்போது குறைஷிகளின் கொடிய எதிரிகளில் ஒருவனான ஹப்பார் இப்னுல் அஸ்வத் என்பவன் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி, தனது ஈட்டியால் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் ஒட்டகத்தைக் குத்தினான்.

ஒட்டகம் மிரண்டு துள்ளியதால் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பாறை மீது தூக்கி வீசப்பட்டார்கள்; இதன் காரணமாக அவர்களுக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, வயிற்றில் இருந்த குழந்தையும் கலைந்து (கருச்சிதைவு ஏற்பட்டு) போனது.

பெரும் வேதனையுடன் மக்காவுக்கே திரும்பிச் சென்ற ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், அந்தப் பாதிப்பிலிருந்தே பல காலம் மீள முடியாமல் நீண்ட நாள் நோயுற்று இறுதியில் மரணமடைந்தார்கள்.

தன் பாசமிகு மகளுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடூரத்தைக் கேள்விப்பட்டு நபிகளார் மிகுந்த மனவேதனை அடைந்தார்கள்.

மக்கா வெற்றியின் போது, இத்தகைய கொடிய குற்றங்களைச் செய்த சில குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது; அதில் ஹப்பார் இப்னுல் அஸ்வத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

நபிகளாரின் படையைக் கண்டு அஞ்சிய ஹப்பார், மக்காவை விட்டும் தப்பியோடி பாரசீக நாட்டுக்குத் தஞ்சம் புகத் திட்டமிட்டான்.

பாரசீகத்துக்குத் தப்பிச் செல்லும் வழியில் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது: "முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களிலேயே மிக அதிக மன்னிக்கும் நற்குணமும் இரக்கமும் கொண்டவர்; நாம் ஏன் அவரிடமே நேரடியாகச் சென்று சரணடைந்து மன்னிப்புக் கேட்கக் கூடாது?"

அவன் மதீனாவை நோக்கிப் பயணித்து, நபிகளார் நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்த மதீனா பள்ளிவாசலுக்குள் திடீரெனப் பிரவேசித்தான்.

அவனை அடையாளம் கண்ட நபித்தோழர்கள் கொதித்தெழுந்து வாளை உருவத் தயாரானார்கள்.

ஆனால் ஹப்பார் நபிகளாரின் முன்னிலையில் நின்று, நடுக்கத்துடன் கூறினான்:

"அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களை விட்டும் வேற்று நாடுகளுக்குத் தப்பி ஓட எண்ணினேன். ஆனால் தங்களின் அளப்பரிய மன்னிக்கும் குணமும் பெருந்தன்மையும் என்னை உங்களிடமே கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. அறியாமையாலும் இணைவைப்பாலும் நான் செய்த பெருங்குற்றங்களை ஒப்புக்கொள்கிறேன்; என்னை நீங்கள் மன்னியுங்கள்! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்!"

தன் கண்முன்னே, தன் அருமை மகளின் மரணத்திற்குக் காரணமான கொடியவன் நிற்கிறான்; அவனை உடனடியாகத் தண்டிக்கும் முழு அதிகாரமும் ஆற்றலும் கையில் இருக்கிறது.

ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்விதக் கோபமுமின்றி, பெருந்தன்மையுடன் கூறினார்கள்:

«قَدْ عَفَوْتُ عَنْكَ، إِنَّ الْإِسْلَامَ يَجُبُّ مَا كَانَ قَبْلَهُ»

"நான் உன்னை மனதார மன்னித்துவிட்டேன்! நிச்சயமாக இஸ்லாத்தைத் தழுவுவது அதற்கு முந்தைய அனைத்துப் பாவங்களையும் அழித்துவிடும்!"

நபித்தோழர்களைப் பார்த்து, "அவருக்கு எவ்விதத் தீங்கும் செய்யாதீர்கள்" என்று கட்டளையிட்டு, அவரை முழுமையான முஸ்லிமாக ஏற்று விடுதலை செய்தார்கள். நூல் அல்-இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபதில் அஸ்ஹாப்

தன் சொந்த மகளின் உயிரைப் பறித்த ஒரு கொடிய எதிரியையும், அவன் தவறை உணர்ந்து வந்த ஒரே காரணத்திற்காக மனதார மன்னித்த நபிகளாரின் இந்தப் பெருந்தன்மை உலக வரலாற்றிலேயே இணையற்ற மன்னிப்பின் உச்சக்கட்ட சான்றாகும்.

ஹிஜ்ரத்தும் 100 ஒட்டகப் பரிசும்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி 'ஹிஜ்ரத்' பயணத்தைத் தொடங்கினார்கள்.

நபிகளார் தப்பித்துச் சென்றதை அறிந்த மக்கத்துக் குறைஷிகள் கொதித்தெழுந்து, "முஹம்மதையோ அல்லது அவரது தோழரையோ கொன்று அல்லது உயிருடன் பிடித்து வருபவருக்கு 100 உயர்தர ஒட்டகங்கள் பரிசாக வழங்கப்படும்" என்று பெரும் அறிவிப்பை வெளியிட்டனர்.

பாலைவன வழிகளை நன்கு அறிந்த, சிறந்த குதிரை வீரனும் தடம் பார்த்துச் செல்வதில் வல்லவனுமான சுராக்கா பின் மாலிக், அந்த 100 ஒட்டகப் பரிசைத் தானே அடைய வேண்டும் என்ற பேராசையுடன் ஆயுதங்களைத் தரித்துத் தனது அதிவேகக் குதிரையில் அவர்களைத் தேடிப் புறப்பட்டான்‌.

அதிவேகமாகப் பயணித்த சுராக்கா, ஒரு கட்டத்தில் நபிகளாரையும் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் மிக நெருங்கிவிட்டான்.

அவன் நெருங்கி வருவதைக் கண்ட அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதற்றமடைந்து, "அல்லாஹ்வின் தூதரே! எதிரி நம்மை நெருங்கிவிட்டான்; நாம் பிடிபட்டு விடுவோம்!" என்று அஞ்சினார்கள்.

ஆனால் நபிகளார் அமைதியாக, «لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا» (கவலைப்படாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்!) என்று கூறித் தன் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.

சுராக்கா தன் ஈட்டியை வீசும் தூரத்திற்கு வந்தபோது, நபிகளார் அல்லாஹ்விடம் சுராக்காவின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடிப் பிரார்த்தித்தார்கள்.

அடுத்த கணமே, சுராக்காவின் குதிரையின் கால்கள் திடீரென இறுகிய கெட்டியான மணல் நிலத்திற்குள் முழங்கால் வரை புதைந்து போயின. சுராக்கா குதிரையிலிருந்து தூக்கி எறியப்பட்டான்.

அவன் மீண்டும் குதிரையை எழுப்பித் தாக்க முயன்றபோது, குதிரையின் கால்கள் மீண்டும் மணலுக்குள் ஆழமாகப் புதைந்து, அதிலிருந்து கரும்புகை போன்ற புழுதி கிளம்பியது.

இந்த அதிசய நிகழ்வைக் கண்ட சுராக்கா, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் ஒரு தெய்வீகப் பாதுகாப்பு இருப்பதை உணர்ந்து நடுநடுங்கினான்.

அவன் தூரத்திலிருந்தே உரத்த குரலில், "முஹம்மதே! இது உங்களின் பிரார்த்தனையால் தான் நேர்ந்தது என்பதை நான் அறிந்து கொண்டேன். என் மீது இரக்கம் காட்டி எனக்காகப் பிரார்த்தியுங்கள்; நான் உங்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்ய மாட்டேன், உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் திசைதிருப்பி அனுப்பிவிடுகிறேன். எனக்கு ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை (அபயக் கடிதத்தை) எழுதித் தாருங்கள்!" என்று கதறி வேண்டினான்.

தம்மைக் கொல்ல வந்த ஒருவன் முற்றிலும் சக்தியிழந்து, மணலில் சிக்கித் தவிக்கும் போது அவனை அழித்துவிட நபிகளார் எண்ணவில்லை.

உடனே நபிகளார் அவனுக்காகப் பிரார்த்தித்தார்கள்; குதிரையின் கால்கள் மணலிலிருந்து விடுபட்டன.

நபிகளாரின் கட்டளைப்படி ஆமிர் பின் ஃபுஹைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு தோல் துண்டில் சுராக்காவிற்குரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை எழுதிக் கொடுத்தார்கள்.

அப்போது நபிகளார் சுராக்காவை நோக்கி ஓர் ஆச்சரியமான தீர்க்கதரிசனத்தைக் கூறினார்கள்:

«كَيْفَ بِكَ يَا سُرَاقَةُ إِذَا لَبِسْتَ سِوَارَيْ كِسْرَى وَمِنْطَقَتَهُ وَتَاجَهُ؟»

"சுராக்காவே! உலகின் மாபெரும் வல்லரசான பாரசீகப் பேரரசன் கிஸ்ராவின் தங்க வளையல்களையும், அவனது மணிமுடியையும், இடைக்கச்சையையும் நீர் அணியும் நாள் வரும் போது உமது நிலை எப்படியிருக்கும்?"

தம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாடற்றவராகப் பாலைவனத்தில் தப்பிச் செல்லும் ஒரு மனிதர், வல்லரசு வீழும் என்றும் அதன் கிரீடமும் வளையல்களும் தனக்குக் கிடைக்கும் என்றும் கூறியதைக் கேட்டு சுராக்கா வியப்படைந்து, ஒப்பந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிச் சென்றான். வழியில் நபிகளாரைத் தேடி வந்த பிற குறைஷிகளை, "நான் இந்த வழியை முழுமையாகத் தேடிவிட்டேன், இங்கு யாருமில்லை" என்று கூறித் திருப்பி அனுப்பினான்.

ஹிஜ்ரி 16 - உமர் ரழி காலம்மக்கா வெற்றிக்குப் பிறகு சுராக்கா ரலியல்லாஹு அன்ஹு இஸ்லாத்தைத் தழுவினார்.

நபிகளாரின் மறைவுக்குப் பின், கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் படைகள் பாரசீகப் பேரரசை (சசானிய சாம்ராஜ்யம்) வெற்றி கொண்டன.

பாரசீக மன்னன் கிஸ்ராவின் தங்க நகைகள், நவரத்தினங்கள் பதித்த மணிமுடி மற்றும் தங்க வளையல்கள் மதீனாவிற்கு கொண்டுவரப்பட்டன.

கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முதியவராக இருந்த சுராக்கா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து, அந்தப் பேரரசனின் தங்க வளையல்களையும் கிரீடத்தையும் அணிவித்து, "அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! 'நானே கடவுள்' என்று ஆணவத்தோடு திரிந்த கிஸ்ராவின் வளையல்களை, பனூ முத்லஜ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு கிராமவாசியான சுராக்காவின் கைகளில் அல்லாஹ் அணிவித்துவிட்டான்! நபிகளாரின் வாக்கு உண்மையாகிவிட்டது!" என்று முழங்கினார்கள். நூல் :ஸஹீஹ் புகாரி

தம்மைப் பணத்திற்காகக் கொல்லத் துரத்தி வந்த ஒருவனை, அவன் நிராயுதபாணியாக நின்ற தருணத்தில் தண்டிப்பதற்குப் பதிலாக மன்னித்து, எதிர்காலத்தில் அவனுக்கு வல்லரசின் கிரீடம் கிடைக்கும் என்று பெருந்தன்மையோடு நற்செய்தி கூறிய நபிகளாரின் குணம் இணையற்ற மன்னிப்பின் திருவுருவமாகும்.

தற்கால சமுதாயத்தின் அவல நிலைகள் 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த இந்த மாபெரும் மன்னிக்கும் மாண்பை இன்று நாம் எந்த அளவிற்குப் பின்பற்றுகிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சமகால முஸ்லிம் சமுதாயத்தில் மன்னிக்கும் பண்பு குறைந்து போனதால் ஏற்பட்டுள்ள பேராபத்துகள்:

சிறிய வாய்வார்த்தை தவறுகள், ஈகோ, மாமியார்-மருமகள் சச்சரவுகள் ஆகியவற்றை மன்னித்து விட்டுக்கொடுக்காததால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நீதிமன்றப் படிகளில் ஏறி நிற்கின்றன.

சொத்துப் பிரச்சனை அல்லது கருத்து வேறுபாடுகளுக்காக உடன்பிறந்த சகோதர சகோதரிகளும், பங்காளிகளும் 10, 20 ஆண்டுகளாகப் பேசாமல், முகத்தைத் திருப்பிக் கொண்டு வாழும் அவலம் மலிந்துள்ளது. நபிகளார் எச்சரித்தார்கள்: "ஒரு முஸ்லிம் தன் சகோதரனை ஒரு வருடம் பேசாமல் விட்டிருப்பது அவனது ரத்தத்தை ஓட்டுவதற்குச் சமமாகும்." (அபூதாவூத்: 4915).

இணையத்தில் ஒருவரின் பழைய தவறையோ, நழுவலையோ மன்னித்து மறைப்பதற்குப் பதிலாக, அதை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து 'ட்ரோல்' செய்து அவரின் மானத்தை உலகறியச் சீரழிக்கும் கலாச்சாரம் பெருகியுள்ளது.

"என்னை அவன் அசிங்கப்படுத்திவிட்டான்; நான் அவனை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்" என்று பழிவாங்கும் எண்ணத்தை நெஞ்சில் சுமந்து திரிவதால் மனிதன் மன அமைதியை இழந்து, தூக்கமின்மை, இரத்த அழுத்தம் போன்ற உளவியல்-உடல் நோய்களுக்கு ஆளாகிறான்.

நாம் செய்ய வேண்டிய 10 நடைமுறை அமல்களும் துஆவும்

நபிகளாரின் மன்னிக்கும் நற்குணத்தை நமது அன்றாட வாழ்க்கையில் கொண்டுவர நாம் கடைப்பிடிக்க வேண்டிய 10 முக்கிய சுன்னத்தான அமல்கள்:

கோபம் வரும் போது «أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ» ஓதுதல்; நின்றால் அமர்தல்; குளிர்ந்த நீரால் உளூச் செய்தல்.

பிணக்கு ஏற்பட்ட நபரிடம் ஈகோவை உடைத்து முந்திச் சென்று ஸலாம் கூறி முஸாபஹா செய்தல்.

படுக்கைக்குச் செல்லும் முன், "இறைவா! இன்று என் மனதைப் புண்படுத்திய அனைவரையும் உன் முகத்திற்காக மன்னித்துவிட்டேன்" என்று சங்கல்பம் செய்தல்.

ஒரு முஸ்லிமின் குறையை இவ்வுலகில் மறைப்பவருக்கு மறுமையில் அல்லாஹ் அவரது குறைகளை மறைப்பான்.

நமக்கு அநீதி இழைத்தவருக்கும் தேடிச் சென்று உதவி செய்தல்.

மன்னிப்பால் இறைவனிடம் அந்தஸ்தும் கண்ணியமும் கூடும் என்ற உறுதியான நம்பிக்கை கொள்ளல்.

கணவன்-மனைவி தங்களுக்குள் ஏற்படும் தவறுகளை உடனுக்குடன் மன்னித்து மறத்தல்.

ஆதாரமற்ற வதந்திகளையும் பிறரின் பிழைகளையும் பரப்பாமல் தவிர்த்தல்.

நாம் மனிதர்களை மன்னித்தால் மட்டுமே மறுமையில் அல்லாஹ் நம் பெருங்குற்றங்களை மன்னிப்பான் என்ற உணர்வுடன் இருத்தல்.

அடிக்கடி மன்னிப்புக்கான துஆக்களை ஓதுதல்.

யா அல்லாஹ்! எங்கள் பாவங்கள், குற்றங்கள், தவறுகள் அனைத்தையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களிலிருந்து பகைமை, வன்மம், காழ்ப்புணர்ச்சி, பெருமை ஆகியவற்றை நீக்கி தூய்மைப்படுத்துவாயாக! அண்ணல் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த உன்னதமான மன்னிக்கும் பண்பையும் பெருந்தன்மையையும் எங்கள் வாழ்க்கையிலும், குடும்பத்திலும், சமூகத்திலும் கடைப்பிடிக்கும் தவ்ஃபீக்கைத் தந்தருள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக