நபி நேசமே நம் சுவாசம்
الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ،
وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا وَنَبِيِّنَا مُحَمَّدٍ الَّذِي أَرْسَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ،
وَبَشِيرًا وَنَذِيرًا، وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا،
وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الَّذِينَ جَعَلُوا حُبَّهُ شِعَارَهُمْ وَسُنَّتَهُ دِثَارَهُمْ
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ - بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ
أَدِّبُوا أَوْلَادَكُمْ عَلَى ثَلَاثِ خِصَالٍ: حُبِّ نَبِيِّكُمْ، وَحُبِّ أَهْلِ بَيْتِهِ، وَقِرَاءَةِ الْقُرْآنِ
அல்லாஹ்வின் பேரருளால், நம் அனைவரின் இதயங்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் "ரபீஉல் அவ்வல்" எனும் வசந்த காலம் நம் வாசற்படியில் வந்து நின்றிருக்கிறது!
இன்ஷா அல்லாஹ் இன்று இரவு முதல் ரபீஉல் அவ்வல் பிறை 1
ரபீஉல் அவ்வல் என்றாலே அகிலத்திற்கு அருட்கொடையாக வந்த அண்ணல் நபியின் நினைவுகள் பூக்கும் காலம்!
இறைநம்பிக்கையாளர்களின் இதயங்களில் ஈமானிய உணர்வு பீறிட்டெழும் காலம்!
சுவாசம் நின்றுபோனால் இந்த உடலுக்கு மரணம்!
நபி நேசம் குறைந்துபோனால் நம் ஈமானுக்கு (இறைநம்பிக்கைக்கு) மரணம்!
காற்று இல்லாமல் இந்த உடலால் வாழ முடியாது; பெருமானாரின் சுன்னத்தும் வழிகாட்டுதலும் இல்லாமல் ஒரு மூஃமினான மனிதனால் மார்க்கத்தில் வாழ முடியாது!
மரங்களின் இலைகள் உதிர்ந்து, மீண்டும் புதிய பூக்களும் தளிர்களும் மலரும் காலத்தை வசந்த காலம் என்பார்கள். அதுபோல, பாவங்களாலும் உலக ஆசைகளாலும் வரண்டுபோன நம் இதயங்களுக்கு, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவுகளும் சுன்னத்துகளும் புது உயிரையும் ஈமானிய புத்துணர்ச்சியையும் தருகின்றன.
அல்லாஹு தஆலா திருக்குர்ஆனில் மிக அழகாகக் கூறுகிறான்:
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
(நபியே!) உம்மை அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடையாகவே அன்றி நாம் அனுப்பவில்லை. (சூரா அல்-அன்பியா: 107)
"வசந்தங்கள் பல உண்டு இந்த மண்ணில்… ஆனால், அகிலத்தையே ஒளிமயமாக்கிய உன்னத வசந்தம் இந்த ரபீஉல் அவ்வல்!"
"காற்றை நாம் சுவாசிப்பது உடலுக்கு வாழ்வு...
நபிகளாரின் வழியை நாம் சுவாசிப்பது நம் ஈமானுக்கு வாழ்வு!”
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ
நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னை பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்…”
لايُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ
"உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளைகள் மற்றும் உலக மக்கள் அனைவரையும் விட நான் மிகவும் அன்பானவராக ஆகும் வரை அவர் முழுமையான மூஃமினாக (இறைநம்பிக்கையாளராக) ஆக முடியாது. (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஸஹாபாக்கள் அந்த அளவு நேசம் வைத்து இருந்தார்கள்
உயிரை நபியை நேசித்த ஸஹாபாக்கள்
உஹுத் போரில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காப்பதற்காகச் சான்றோர்களான நபித்தோழர்கள் புரிந்த வீரமும் தியாகமும் மனித வரலாற்றில் ஈடற்ற ஒன்றாகும்.
ஹிஜ்ரி 3-ஆம் ஆண்டு உஹுத் மலையடிவாரத்தில் நடைபெற்ற இந்தப் போரில், தொடக்கத்தில் முஸ்லிம்களுக்கே வெற்றி சாத்தியமானது. ஆனால், மலையிடுக்கில் அமைக்கப்பட்டிருந்த அம்பெய்யும் படையினர் நபிகளாரின் கட்டளையை மறந்துத் தங்களின் இடங்களை விட்டு நகர்ந்ததால், எதிரிகளின் குதிரைப்படை பின்புறமாக வந்து திடீர் தாக்குதல் நடத்தியது.
முஸ்லிம் படையில் பெரும் குழப்பம் நிலவியது. "நபிகளார் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள்" என்ற வதந்தியும் பரவியது. ஆனால், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெகுசில தோழர்களுடன் களத்தில் உறுதியாக நின்று கொண்டிருந்தார்கள். இதையறிந்த எதிரிப்படை, நபிகளாரைக் குறிவைத்து அனைத்துக் கோணங்களிலிருந்தும் தங்களின் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.
உடலையே கேடயமாக்கிய அபூ துஜானா (ரலி)
எதிரிகள் எய்த அம்புகளும் வீசிய ஈட்டிகளும் நபிகளாரின் மீது பாய முற்பட்ட அந்த இக்கட்டான தருணத்தில், ஹழ்ரத் அபூ துஜானா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகளாருக்கு முன்னால் வந்து நின்றார்கள்.
* அவர் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சிறு காயமும் பட கூடாது என்பதற்காகத் தம் உடலையே ஒரு கேடயமாக வளைத்து நபிகளாரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
* எதிரிகளின் அம்புகள் அனைத்தும் அவரின் முதுகில் ஒவ்வொன்றாக வந்து தைத்தன.
* வலி தாங்க முடியாமல் உடல் துடித்தபோதிலும், தான் சிறிதேனும் நகர்ந்தால் அம்பு நபிகளாரின் மீது பட்டுவிடுமே என்ற அச்சத்தால், அவர் அசையாமல் அப்படியே நின்றார்.
பார்வைத் திறனை மீட்டுத் தந்த கத்தாதா பின் நுஃமான் (ரலி)
போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, நபிகளாரைப் பாதுகாக்கும் அரணாக நின்றவர்களில் ஹழ்ரத் கத்தாதா பின் நுஃமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர்.
* எதிரிகள் எய்த கொடூரமான அம்பு ஒன்று கத்தாதா (ரலி) அவர்களின் முகத்தைத் துளைத்தது. அதில் அவரின் ஒரு கண் பிதுங்கி, கன்னத்தின் மீது தொங்கும் நிலைக்கு வந்தது.
* கடும் வலியிலும் இரத்த வெள்ளத்திலும் இருந்த அவர், தன் கண்ணைப் கையில் தாங்கியபடி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.
* அதைப் பார்த்த நபிகளாரின் கண்கள் கலங்கின. அண்ணலார் (ஸல்) அவர்கள் தம் கரங்களால் பிதுங்கித் தொங்கிய அந்த கண்ணை எடுத்து, அதன் சரியான இடத்தில் மீண்டும் பொருத்தி, வல்ல இறைவனிடம் துஆ (பிரார்த்தனை) செய்தார்கள்.
* அதிசயம் நிகழ்ந்தது! அந்த கண் உடனடியாகக் குணமடைந்ததோடு, அவருடைய மற்றொரு இயல்பான கண்ணை விடவும் அழகாகவும், கூர்மையான பார்வைத் திறன் கொண்டதாகவும் மாறியது. பிற்காலத்தில் அவர்கள் "கண் அழகர் கத்தாதா" என்றே அழைக்கப்பட்டார்கள்.
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)-ன் கர அர்ப்பணிப்பு
நபிகளாரை நோக்கி எய்யப்பட்ட கூர்மையான அம்பை, ஹழ்ரத் தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் வெறும் கையால் தடுத்துக் கொண்டார்கள்.
* அம்பு பாய்ந்து அவர்களின் கை நரம்புகள் துண்டிக்கப்பட்டு, கை முற்றிலும் செயலற்றுப்போனது (ஊனமுற்றது).
* உடல் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களும் அம்புத் தழும்புகளும் ஏற்பட்ட நிலையிலும், நபிகளாரைத் தோளில் சுமந்து கொண்டு பாதுகாப்பான குன்றின் மீது ஏற்றினார்கள்.
* இதைப் பார்த்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "பூமியில் நடமாடும் ஒரு ஷஹீதைப் (தியாகியை) பார்க்க விரும்புபவர் தல்ஹாவைப் பார்க்கட்டும்" என்று புகழாரம் சூட்டினார்கள்.
ரஃபிஆ பின்த் கஅப் - ரலி) பெண்மணியின் வீரம்
ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் நபி நேசத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தார் நஸீபா (உம்மு உம்மாரா - ரலி) எனும் பெண்மணி.
* தோழர்கள் சிதறி ஓடிய அந்த ஆபத்தான வேளையில், வாளையும் கேடயத்தையும் ஏந்திக்கொண்டு நபிகளாருக்குப் பாதுகாப்பாகப் போரிட்டார்.
* நபிகளாரைத் தாக்க வந்த எதிரியான இப்னு கமிஆ என்பவனைத் தடுத்து நிறுத்திப் போரிட்டதில், அவரின் தோள்பட்டையில் ஆழமான காயம் ஏற்பட்டது.
* நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உஹத் போரின் போது நான் வலப்பக்கம் திரும்பினாலும், இடப்பக்கம் திரும்பினாலும் உம்மு உம்மாராஹ் என்னை நோக்கி வரும் எதிரிகளைத் தடுத்துப் போரிடுவதையே கண்டேன்!"
இரத்தமும் சதையுமாய், தங்களின் உறுப்புகளை இழந்து, உயிரைப் பணயம் வைத்து ஸஹாபாக்கள் காட்டிய அந்த ஈடு இணையற்ற அன்புதான் இன்றளவும் நமது ஈமானுக்கு உத்வேகம் தருகிறது."
என் உயிரே போனாலும் நபியின் காலில் ஒரு சிறிய முள்
தைப்பது கூட விருப்பம் இல்லை!”
ஹிஜ்ரி 4-ஆம் ஆண்டு, 'அளல்' மற்றும் 'காரா' ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்த சிலர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "எங்கள் மக்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுத் தர சில தோழர்களை அனுப்புங்கள்" என்று வேண்டினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஸிம் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையில் 10 சீர்மிகு ஸஹாபாக்களைக் கொண்ட குழுவை அனுப்பி வைத்தார்கள்.
ஆனால், 'ரஜீஃ' என்ற நீர்நிலைக்கு அருகில் சென்றபோது, அக்குழுவினரை அக்கோத்திரத்தார் வஞ்சகமாகச் சூழ்ந்துகொண்டனர். எதிர்த்துப் போரிட்டவர்களில் 7 தோழர்கள் ஷஹீதாக்கப்பட்டனர். குபைப் பின் அதீ ரலியல்லாஹு அன்ஹு மற்றும் ஸைத் பின் தஸின்னாஹ் ரலியல்லாஹு அன்ஹு உள்ளிட்ட மூவர் உயிருடன் சிறைபிடிக்கப்பட்டனர் (வழியில் ஒருவர் கொல்லப்பட்டார்).
மக்கத்து இணைவைப்பாளர்கள் (குரைஷிகள்) குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கைதியாகக் கொண்டு சென்று மக்காவில் விற்றார்கள். பத்ருப் போரில் குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கரங்களால் கொல்லப்பட்ட ஹாரித் பின் ஆமிர் என்பவனின் குடும்பத்தார், பழிவாங்கும் நோக்கத்தோடு இவரை பெரும் தொகைக் கொடுத்து விலைக்கு வாங்கினர்.
அவர்கள் குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பல மாதங்கள் சங்கிலிகளால் பிணைத்துச் சிறையில் அடைத்து வைத்தனர்.
குபைப் ரலியல்லாஹு அன்ஹு சிறைபிடிக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்த பெண் (பிற்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவியவர்) கூறுகிறார்:
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! குபைப் கைவிலங்கிடப்பட்டுச் சிறையில் இருந்தபோது, அவரின் கையில் திராட்சைக் குலைகள் இருப்பதை நான் என் கண்களால் பார்த்தேன். அக்காலத்தில் மக்காவில் திராட்சைப் பருவமே இல்லை! அல்லாஹ்வே அவருக்கு அந்த உணவை வழங்கினான். அவரை விடச் சிறந்த ஒரு கைதியை நான் பார்த்ததே இல்லை."
புனித மாதங்கள் முடிந்ததும், குரைஷிகள் குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக மக்காவின் எல்லைப் பகுதியான 'தன்யீம்' (Tan'im) என்ற இடத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை மரத்தில் கட்டி கொலை செய்யத் திட்டமிட்டனர்.
அப்போது குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எதிரிகளிடம் ஒரு கோரிக்கை வைத்தார்:
"என்னைச் சாகடிப்பதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்கு எனக்கு அனுமதி தாருங்கள்!"
எதிரிகளும் அனுமதித்தனர். குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக அமைதியாகவும், அழகாகவும் இரண்டு ரக்அத்கள் தொழுது முடித்தார். தொழுது முடித்தவுடன் குரைஷிகளைப் பார்த்து வீரத்தோடு கூறினார்:
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் மரணத்திற்குப் பயந்துதான் தொழுகையை நீட்டுகிறேன் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது என்பதால் தான் விரைவாகத் தொழுது முடித்தேன். இல்லையெனில் இன்னும் நீண்ட நேரம் தொழுதிருப்பேன்!"
(மரண தண்டனைக்கு முன்பாக இரண்டு ரக்அத்கள் தொழும் இந்த முன்மாதிரி சுன்னத்தை முதன்முதலில் தோற்றுவித்தவர் குபைப் ரலி அவர்களே!)
குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மரத்தில் ஏற்றிக் கட்டியபோது, குரைஷிகளின் தலைவர்களில் ஒருவனான அபு ஸுஃப்யான் (அப்போது அவர் முஸ்லிமாகவில்லை) முன்னால் வந்து நின்றார்.
அவர் குபைப் ரலியல்லாஹு அன்ஹு -ன் உணர்ச்சிகளைச் சோதிப்பதற்காகக் கேட்டார்: "குபைப்பே! உண்மையைக் கூறு... இப்போது உனக்குப் பதிலாக முஹம்மது இந்த இடத்திலிருந்து இந்தத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்; நீ விடுதலை செய்யப்பட்டு, உனது குடும்பத்தோடு சௌக்கியமாக, பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாயா?"
உடலெல்லாம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, சில வினாடிகளில் மரணத்தைச் சந்திக்கப்போகும் அந்த நிலையிலும், குபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முகத்தில் எள்ளளவும் பயமில்லை!
அவர் எதிரிகளின் முகத்தைப் பார்த்து உரத்தக் குரலில் ஆணித்தரமாகக் கூறினார்:
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் என் குடும்பத்தோடும் பிள்ளைகளோடும் சௌக்கியமாக வீட்டில் இருப்பவதும்... அதற்குப் பதிலாக என் அன்பிற்குரிய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலில் ஒரு சிறிய முள் தைப்பது கூட எனக்குச் விருப்பம் இல்லை!"
இந்த வார்த்தைகளைக் கேட்ட அபு ஸுஃப்யான் வியப்பின் எல்லைக்கே சென்று அதிர்ந்துபோய் நின்றார். அவர் தன் தலையிலடித்துக் கொண்டு ஒப்புக்கொண்டார்:
"முஹம்மதின் தோழர்கள் அவர் மீது காட்டும் அன்பைப் போல, உலகத்தில் வேறு எந்த ஒரு தலைவர் மீதும் அவருடைய தொண்டர்கள் அன்பு காட்டி நான் பார்த்ததே இல்லை!"
இதன் பின்னர், எதிரிகள் ஈட்டிகளால் குபைப் (ரலி) அவர்களின் உடலைத் துளைத்தெடுத்தனர். அவர் மரணிக்கும் தருவாயில் இறைவனிடம் இறுதியாகச் செய்த பிரார்த்தனை:
"யா அல்லாஹ்! இங்கு உன்னுடைய தூதருக்கு என் நிலைமையைக் கூற யாருமே இல்லை. என் ஸலாமை என் அன்ப நபியிடம் நீ சேர்த்தருள்வாய்!"
அதே நேரத்தில், மதீனாவில் அமர்ந்திருந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் வஹீ மூலம் இந்தச் செய்தியைத் தெரிவித்தான். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திடீரென "வஅலைஹிஸ் ஸலாம்" (அவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறி, "குபைப் குரைஷிகளால் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்" என்ற செய்தியைச் சோகத்துடன் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.
அவர்களை உங்களால் ஒருபோதும் வீழ்த்த முடியாது!”
ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 1,400-க்கும் மேற்பட்ட தோழர்களுடன் உம்ரா நிறைவேற்றுவதற்காக மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் எந்தவொரு போர்க் கருவிகளையும் ஏந்தி வரவில்லை; மாறாக இஹ்ராம் ஆடை அணிந்து, குர்பானி ஆடுகளை மட்டுமே அழைத்து வந்தனர்.
ஆனால், மக்கத்துப் பெருமக்கள் முஸ்லிம்களை எல்லைப் பகுதியான 'ஹுதைபிய்யா' என்ற இடத்திலேயே தடுத்து நிறுத்தினர். முஸ்லிம்களின் எண்ணம் என்ன என்பதை அறிவதற்காகவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் மக்காவிலிருந்து வரிசையாகப் பல தூதர்கள் அனுப்பப்பட்டனர்.
அப்போது மக்காவின் தாயிஃப் நகரின் தலைவராகவும், பெரும் மதிப்புமிக்க ஆளுமையாகவும் திகழ்ந்த உர்வா பின் மஸ்வூத் அஸ்-ஸகஃபீ என்பவர் குரைஷிகளிடம், "நான் சென்று முஹம்மதிடம் பேசி வருகிறேன்" என்று கூறி ஹுதைபிய்யாவிற்கு வந்தார்.
அவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரேபியர்களின் வழக்கப்படி பேசும்போது நபிகளாரின் தாடியைத் தொட்டுப் பேச முயன்றார். ஆனால், நபிகளாரைக் காவலராக நின்று கொண்டிருந்த தோழர் முகீரா பின் ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் வாளின் உறையால் உர்வாவின் கையைக் தட்டி, "உன் கையை அல்லாஹ்வின் தூதரின் தாடியிலிருந்து அப்புறப்படுத்து!" என்று கம்பீரமாகக் எச்சரித்தார்கள்.
பேச்சுவார்த்தையின் இடையே, உர்வா பின் மஸ்வூத் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், அவர்களைச் சுற்றியிருந்த ஸஹாபாக்களின் (தோழர்களின்) செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்தார்.
அங்கு அவர் கண்ட காட்சிகள் அவரைப் பிரமிப்பில் ஆழ்த்தின:
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதெல்லாம் உமிழ்நீர் துப்புகிறார்களோ, அது தரைபடுவதற்கு முன்பே ஏதேனும் ஒரு தோழரின் கையில் விழுகிறது. அதை அவர் தம் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார்!
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளுச் செய்து முடித்ததும், அவர்தம் மேனியிலிருந்து சொட்டும் அந்தப் புனிதமான தண்ணீரைத் தங்கள் கரங்களில் ஏந்துவதற்குத் தோழர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிடுகிறார்கள்!
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசத் தொடங்கினால், அவையிலிருந்த அனைவரும் தங்கள் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பது போல (சிறிதும் அசையாமல்) அத்தனை அமைதியாகக் கேட்கிறார்கள்!
நபிகளார் மீது வைத்திருந்த பேரன்பினாலும் மரியாதையினாலும், தோழர்கள் யாரும் அவர்களின் முகத்தை நிமிர்ந்து நேரடிப் பார்வையால் பார்ப்பது கூட இல்லை!
பேச்சுவார்த்தை முடிந்ததும் உர்வா பின் மஸ்வூத் மக்கா திரும்பினார். அங்கே காத்துக் கொண்டிருந்த குரைஷித் தலைவர்களிடம் அவர் கூறினார்:-
"எனது குலத்தவர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்... நான் உலகத்தின் பெரும் பேரரசர்களான பாரசீகத்தின் 'கிஸ்ரா', ரோமாபுரியின் 'கைஸர்', அபிசீனியாவின் 'நஜாஷி' ஆகியோரின் அரசவைகளுக்கெல்லாம் தூதராகச் சென்றிருக்கிறேன்!
ஆனால், முஹம்மதின் தோழர்கள் அவர் மீது காட்டும் அன்பையும் மரியாதையையும் போல எந்த ஒரு மன்னனின் தொண்டர்களும் தங்கள் மன்னர் மீது காட்டி நான் பார்த்ததே இல்லை!
அவர் உமிழ்நீர் துப்பினால் அதைத் தரை படாமல் கைகளில் ஏந்தி மேனியில் பூசிக் கொள்கிறார்கள்; அவர் உளுச் செய்தால் அந்தத் தண்ணீரைப் பெறப் போட்டியிடுகிறார்கள்; அவர் கட்டளையிட்டால் அதைச் செய்யப் பறக்கிறார்கள்; அவர் பேசினால் அமைதியாகிறார்கள். அத்தகைய ஒரு கூட்டத்தை அவர் பெற்றிருக்கிறார்! எனவே, அவர்களை உங்களால் ஒருபோதும் வீழ்த்த முடியாது!" (நூல்: ஸஹீஹ் அல்-புகாரி)
மதினாவில் கடும் வறட்சி
மதீனா நகரில் ஒருமுறை கடுமையான வறட்சி ஏற்பட்டது. மக்கள் மழையின்றிப் பெரிதும் தவித்தனர். பஞ்சம் மேலோங்கிய நிலையில், மக்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து தங்கள் துயரத்தைக் கூறி நிவாரணம் வேண்டினர்.அப்போது அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மக்களுக்கு ஒரு வழிகாட்டுதலை வழங்கினார்கள்:
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தைப் (கப்ரு ஷரீஃப்) பாருங்கள். அதற்கு மேலே உள்ள கூரையில் வானத்தை நோக்கியவாறு ஒரு துவாரத்தை (திறப்பை) ஏற்படுத்துங்கள். நபிகளாரின் கப்ருக்கும் வானத்திற்கும் இடையே எந்தவொரு கூரையோ தடுப்போ இல்லாதவாறு செய்யுங்கள்."
மக்கள் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவுரைப்படி, நபிகளாரின் வீட்டின் கூரையில் (அடக்கஸ்தலத்திற்கு நேர் மேலே) வானம் தெரியுமாறு ஒரு துவாரத்தை உண்டாக்கினார்கள்.
உடனடியாக வானில் மேகங்கள் திரண்டு பெருமழை பொழிந்தது. எவ்வளவு மழை பெய்ததென்றால், வரண்ட நிலங்கள் செழிப்படைந்தன; ஒட்டகங்கள் புற்களை மேய்ந்து கொழுத்து, அவற்றின் தோல்கள் கொழுப்பினால் வெடிக்கும் அளவுக்குப் பொலிவுற்றன. அந்த ஆண்டு "ஆமுல் ஃஃபதக்" (மிகுந்த செழிப்புமிக்க ஆண்டு) என்று மக்களால் அழைக்கப்பட்டது.
நூல்: இமாம் அத்-தாரிமீ (ரஹ்) அவர்கள் தமது நூலில் (ஹதீஸ் எண்: 92)
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஏன் அந்தத் துவாரத்தை ஏற்படுத்தச் சொன்னார்கள் என்பதை மார்க்க அறிஞர்கள் மிக அழகாக விளக்குகிறார்கள்:
அகிலத்தின் அருட்கொடையாக விளங்கும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜஸத் (முபாரக்கான உடல்) அடக்கம் செய்யப்பட்டுள்ள அந்தப் புனித இடத்தின் மீது இறைவனின் அருள் எப்போதும் இறங்கிக் கொண்டே இருக்கிறது. வானத்திற்கும் அந்த அடக்கஸ்தலத்திற்கும் இடையே உள்ள தடையை நீக்கும் போது, அண்ணலாரின் பரக்கத்தால் இறைவனின் அருள் மழை பொழியும் என்பதை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிந்திருந்தார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் மக்கள் அவர்களிடம் வந்து மழைக்காகத் துஆ செய்யக் கோருவார்கள். அண்ணலார் மறைந்த பிறகும், அவர்களின் முபாரக்கான உடலின் பரக்கத்தைக் கொண்டு (வஸீலாவாக வைத்து) அல்லாஹ்விடம் கையேந்துவது நன்மையளிக்கும் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلاَّ رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلاَمَ
"யாராவது ஒருவர் எனக்கு ஸலாம் கூறினால், அவருடைய ஸலாமுக்கு நான் பதிலளிக்கும் பொருட்டு அல்லாஹ் என் உயிரை எனக்கு மீட்டுத் தருகிறான்." (நூல்: அபூதாவுத்).
إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الأَنْبِيَاءِ
"நிச்சயமாக அல்லாஹு தஆலா இறைத்தூதர்களின் உடல்களைப் பூமி தின்பதை (சேதப்படுத்துவதை) ஹராமாக்கி (தடைசெய்து) விட்டான்." (நூல்: அபூதாவுத், நஸாயீ).
இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்)
இஸ்லாமிய மார்க்கச் சட்ட அறிஞரான இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மதீனா நகரத்திலேயே பிறந்து, வளர்ந்து, அங்கேயே வாழ்ந்து மறைந்தவர்.
இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தம் வாழ்நாளில் மதீனா எல்லைக்குள் ஒருபோதும் செருப்பு (காலணி) அணிந்தோ, குதிரை மற்றும் கழுதைகள் மீது ஏறியோ பயணித்ததில்லை.
"அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமான உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மதீனாவின் மண்ணை, செருப்பு அணிந்த கால்களால் மிதிப்பதற்கு என் மனம் ஒப்பவில்லை! இறைத்தூதர் நடந்த ஒரு மண்ணில் நான் வாகனத்தின் மீதேறி மிதிப்பதா?"
இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களை (பொன்மொழிகளை) மக்களுக்குப் போதிக்கும் போது ஹதீஸ் வகுப்பு தொடங்குவதற்கு முன் குளித்து, தூய்மையான ஆடை அணிந்து, நறுமணம் பூசிக் கொள்வார்கள்.
ஒருமுறை ஹதீஸ் வகுப்பின் போது, அவர்களை தேள் ஒன்று 16 முறை கொட்டியது. வலியால் அவர்களின் முகம் கருத்துப்போனதே தவிர, அண்ணலாரின் ஹதீஸைக் கூறிக்கொண்டிருந்ததால் தன் உரையை நிறுத்தவோ அல்லது உடலை அசைக்கவோ இல்லை!
வகுப்பு முடிந்ததும் கேட்கப்பட்டபோது: "நபிகளாரின் ஹதீஸுக்குக் கொடுக்கும் மரியாதைக் குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் அந்த வலியைப் பொறுத்துக் கொண்டேன்" என்று கூறினார்கள்.
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)
ஹதீஸ்களின் பெருந்தொகுப்பான 'முஸ்னத் அஹ்மத்' நூலைத் தொகுத்த இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், நபிகளாரின் அசல் பொருட்கள் (ஆஸாருன் நபிய்யா) மீது அளப்பரிய நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்தார்கள்.
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூன்று திருமுடிகள் (தலைமுடிகள்) இருந்தன.
அவர்கள் அந்தத் திருமுடிகளைத் தங்கள் ஆடையில் மிகச் கவனமாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள்.
அவர்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ நோய் ஏற்படும் போது, அந்தத் திருமுடியைத் தூய்மையான தண்ணீரில் நனைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்து நோய் நிவாரணம் (ஷிஃபா) பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
இமாம் அஹ்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மரணிக்கும் தருவாயில், தம் மகனிடம்: "என் மரணத்திற்குப் பின், இந்தத் திருமுடிகளில் இரண்டை என் இரு கண்களின் மீதும், ஒன்றை என் நாவின் மீதும் வைத்து என்னை அடக்கம் செய்யுங்கள்" என்று மரண சாஸனம் (வஸிய்யத்) செய்தார்கள். அவ்வாறே செய்யப்பட்டது.
அவர்களிடம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்பட்ட மரப் பாத்திரம் ஒன்றும் இருந்தது. அதை அவர்கள் தண்ணீரில் நனைத்து, அந்தத் நீரைக் குடித்துப் பரக்கத் அடைவார்கள்.
நூல்: ஸியார் அஃலாமின் நுபலா
பிரிவைத் தாங்க முடியாத பேரன்பு
ஒருநாள், ஹழ்ரத் ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திற்கு வந்தார்கள். வழக்கமாகப் பொலிவுடன் இருக்கும் அவர்களின் முகம் அன்று முற்றிலுமாக மாறியிருந்தது:முகம் வெளுத்துப்போய், மஞ்சள் நிறமாக மாறியிருந்தது.
உடல் மெலிந்து, கண்கள் சோகத்தில் மூழ்கியிருந்தன.
அவர்களின் இந்த மாற்றத்தைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலையோடு கேட்டார்கள்:
"ஸவ்பானே! உமக்கு என்ன நேர்ந்தது? உடலுக்கு ஏதேனும் சுகவீனமா? ஏன் உமது முகம் இப்படி மாறியிருக்கிறது?"
அதற்கு ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீருடன் பதில் கூறினார்கள்:"அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உடம்பில் எந்த நோயும் இல்லை; எந்த வலியும் இல்லை! ஆனால்... உங்களை என் கண்ணால் பார்க்காமல் என்னால் சிறிது நேரம் கூட இருக்க முடிவதில்லை!
நான் வீட்டில் இருக்கும் போது உங்களின் நினைவு வந்தால், உடனே ஓடிவந்து உங்களைப் பார்த்துவிட்டுத்தான் என் மனம் அமைதியடைகிறது.
நான் வீட்டில் இருக்கும் போது உங்களின் நினைவு வந்தால், உடனே ஓடிவந்து உங்களைப் பார்த்துவிட்டுத்தான் என் மனம் அமைதியடைகிறது.
ஆனால் இன்று எனக்குள் ஒரு அச்சம் வந்துவிட்டது. நான் மரணத்தைப் பற்றியும், மறுமையைப் பற்றியும் சிந்தித்தேன்... சுவர்க்கத்தில் நீங்கள் நபிமார்களோடு மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பீர்கள். நானோ சாமானியன்; நான் ஒருவேளை சுவர்க்கம் சென்றாலும் உங்கள் அளவிற்கு உயர்ந்த இடத்தைப் பெற முடியாது! ஒருவேளை நான் நரகத்திற்குச் சென்றுவிட்டால்... உங்களை வாழ்நாளில் மீண்டும் பார்க்கவே முடியாது!
மறுமையில் உங்களைப் பார்க்க முடியாது என்ற அந்தப் பிரிவின் கவலைதான் என் உடலை இப்படி உருக்கி, என் முகத்தின் நிறத்தையே மாற்றிவிட்டது யா ரஸூலல்லாஹ்!"
ஒரு சாமானியத் தோழனின் இந்த உண்மையான அன்பு, அகிலத்தின் இறைவனான அல்லாஹ்வையே நெகிழ வைத்தது! உடனடி நிவாரணமாக அல்லாஹு தஆலா திருக்குர்ஆனின் இந்த அழகிய வசனத்தை ஜிப்ரீல் (அலை) மூலம் இறக்கி வைத்தான்:
وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.(அல்குர்ஆன் : 4:69)
"இந்த வசனத்தை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காட்டியதும், ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முகத்தில் பேரானந்தம் மலர்ந்தது!
சிறுவர்கள் பாசம்
ஒருநாள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹர் தொழுகையை முடித்துவிட்டுத் தம் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சிறுவனான ஜாபிர் பின் ஸமுரா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் நபிகளாருக்குப் பின்னால் ஓடிச் சென்றார்.
வழியில் மற்ற சிறுவர்களும் நபிகளாரைச் சூழ்ந்துகொண்டனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்போடு ஒவ்வொரு சிறுவனின் கன்னத்தையும் மென்மையாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:"அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் கன்னத்தையும் தடவிக் கொடுத்தார்கள். அப்போது அவர்களின் கரம் என் கன்னத்தில் பட்டபோது, ஒரு அத்தர் (நறுமணப் பொருள்) வியாபாரியின் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டக் கையைப் போல அவ்வளவு நறுமணம் வீசியது! அதுமட்டுமல்லாமல், பனித்துளியைப் போல அவ்வளவு குளிர்ச்சியாகவும் மென்மையாகவும் இருந்தது."
ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெரியவரான பிறகும், அண்ணலாரின் அந்தக் கரத்தின் தொடுதலையும் அதன் நறுமணத்தையும் மறக்கவே இல்லை. நபிகளார் மீது அவர்கள் கொண்ட பேரன்பினால், தம் வாழ்நாளில் எப்போதெல்லாம் நபிகளாரின் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் தன் கன்னத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு அண்ணலாரின் நினைவில் மூழ்கிவிடுவார்கள்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-
مَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي ، وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ
"யார் என்னுடைய சுன்னத்தை (வழிகாட்டுதலை) உயிர்ப்பிக்கிறாரோ, அவர் என்னை நேசித்துவிட்டார். யார் என்னை நேசித்துவிட்டாரோ, அவர் மறுமையில் என்னுடன் சுவர்க்கத்தில் இருப்பார்."— (நூல்: திர்மிதி)
ரபீஉல் அவ்வல் மாதம் என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான மாதம் மட்டுமல்ல; அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துகளை (வழிகாட்டுதல்களை) நம் வாழ்க்கையில் மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு!
இந்த மாதத்தில் நாம் சிறப்பாகக் கடைப்பிடித்து, நம் அன்றாட சுவாசமாக மாற்ற வேண்டிய முக்கிய சுன்னத்துகள் இதோ:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது அன்பு செலுத்துவதன் முதல் அடையாளம் அவர்களின் மீது அதிகளவில் ஸலவாத் சொல்வதாகும்.
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.(அல்குர்ஆன் : 33:56)
தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையை இலக்காகக் கொள்ளாமல், நடக்கும் போதும், ஓய்வு நேரங்களிலும், வாகனங்களில் செல்லும்போதும் "அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத்" என்று ஓதிக்கொண்டே இருப்பது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திங்கள்கிழமைகளில் நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் திங்கள்கிழமை நோன்பு குறித்துக் கேட்கப்பட்டபோது, "அந்நாளில் தான் நான் பிறந்தேன்; அந்நாளில் தான் எனக்கு முதன்முதலில் வஹீ (இறைச்செய்தி) இறங்கியது" என்று கூறினார்கள் (நூல்: முஸ்லிம்).
இந்த ரபீஉல் அவ்வல் மாதத்திலிருந்து தொடங்கும் வகையில், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுன்னத்தான நோன்புகளை நோற்கப் பழகலாம்.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோற்றம் மட்டுமல்ல, அவர்களின் நற்குணங்களும் சுன்னத் தான்!
பிறரைப் பார்த்துப் புன்னகைப்பதைக் தர்மம் (ஸதகா) என்று கூறினார்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்: கோபம் வரும்போது அமைதி காப்பது நபிவழி.
இன்சொல் பேசுதல்: நாவினால் பிறர் மனம் புண்படாமல் பேசுவது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் தன் குடும்பத்தாரிடம் சிறந்த முறையில் நடந்துகொள்பவரே!"
மனைவியிடமும் பிள்ளைகளிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடப்பது.
வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து உணவருந்துவது (ஒரே தட்டில் அல்லது சேர்ந்து உண்பது சுன்னத்).
பிள்ளைகளுக்கு அண்ணல் நபியின் சீறா (வரலாறு) மற்றும் ஸஹாபாக்களின் தியாகங்களை சிறுகதைகளாகக் கூறி வளர்ப்பது.
கடமையான ஐந்து நேரத் தொழுகைகளுடன் சேர்த்து, நபிகளார் தவறாமல் தொழுத "ஸுனனுல் முஅக்கதா" (உறுதிளிக்கப்பட்ட சுன்னத்) தொழுகைகளைப் பேணித் தொழுவது.
முன் சுன்னத் மற்றும் பின் சுன்னத் தொழுகைகளை ஆர்வத்துடன் தொழுவது.
இரவு நேரத் தொழுகையான தஹஜ்ஜுத் தொழுகையைத் தொழ முயல்வது.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வாழ்நாள் முழுதும் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், கைம்பெண்களுக்கும் உதவி செய்பவராகவே திகழ்ந்தார்கள்.
இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் ஏழை எளியவர்களுக்கு உணவு அளிப்பது, அனாதைகளின் கல்விக்கு உதவுவது, நோயாளிகளை நலம் விசாரிப்பது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவது.
நபி நேசம் என்பது வெறும் பேச்சு அல்ல; அது நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வியல் சுவாசம்!
ஸஹாபாக்கள் தங்கள் உயிரைக் கொடுத்து நபி நேசத்தைக் காத்தார்கள்!
தாபியீன்களும் இமாம்களும் தங்கள் செயலால் நபி நேசத்தை வாழ்ந்து காட்டினார்கள்!
இன்று நம்மிடம் இரத்தம் சிந்துமாறு மார்க்கம் கேட்கவில்லை; மாறாக, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துகளை நம் வீடுகளிலும், வணிகத்திலும், அன்றாட வாழ்க்கையிலும் உயிர்ப்பிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறது.
இந்த ரபீஉல் அவ்வல் வசந்த காலத்தில் நாம் அனைவரும் ஒரு நல்முடிவு எடுப்போம்: "இன்று முதல்...நபிகளாரின் சுன்னத் என் வீட்டுக்குள் நுழையும்!
நபிகளாரின் அக்லாக் (நற்குணம்) என் பேச்சில் மிளிரும்!
நபிகளாரின் பொன்னான நெறிமுறை என் வாழ்க்கையின் சுவாசமாகும்!"
யா அல்லாஹ்! எங்கள் இதயங்களில் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது உண்மையான, ஆழமான நேசத்தை ஏற்படுத்தி அருள்வாயாக!
அவர்களின் சுன்னத்துகளைப் பேணி வாழும் தவ்ஃபீக்கை நம் அனைவருக்கும் தந்தருள்வாயாக!
பெருமானாரின் வழியில் வாழும் பாக்கியத்தையும், அவர்தம் நற்குணங்களைப் பின்பற்றும் மனப்பக்குவத்தையும் தந்தருள்வாயாக!
நாளை மறுமை நாளில், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கரங்களால் 'கவ்ஸர்' தடாகத்து நீரைப் பருகும் பாக்கியத்தையும், அவர்களின் ஷஃபாஅத்தைப் (பரிந்துரையை) பெற்று சுவர்க்கத்தில் அவரோடு ஒன்றாக இருக்கும் பாக்கியத்தையும் நம் அனைவருக்கும் தந்தருள்வாயாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக