வியாழன், 23 ஜூலை, 2026

நான்கு பறவைகள். நான்கு படிப்பினைகள் .

 


நான்கு பறவைகள் 

நான்கு படிப்பினைகள் 



الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى حَبِيبِ اللَّهِ.

وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى قَالَ اَوَلَمْ تُؤْمِنْ‌ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ‌ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏


لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ

இன்றைய தினம் விஞ்ஞானமும் அறிவியலும் மருத்துவமும் உச்சத்தில் இருந்தாலும் ….


பலரின் உள்ளத்தில் எழும் கேள்வி தான் இது…. நாளை நம் நிலை என்ன?


மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் மனதிலும் ஏதேனும் ஒரு தருணத்தில் அந்த கேள்வி எழும்:


"நாளை மரணித்து, மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் நாம் எப்படி மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோம்? 


கடலில் மூழ்கி மீன்களுக்கு உணவாகிப் போன மனிதன் எவ்வாறு மீண்டும் இறைவனுக்கு முன் வந்து நிற்பான்?"


எரிந்து சாம்பலாகி போன மனிதன் எப்படி மீண்டு வர முடியும்?


விலங்குகள் உண்டு செரித்த மனிதன் மீண்டும் எழ வாய்ப்பு உண்டா?


இந்தக் கேள்வி இன்றைக்கு மட்டுமல்ல... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இறைத்தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனதிலும், நபிகளாரின் தோழர்களான ஸஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் மனதிலும் எழுந்திருக்கிறது.


இதற்கு இறைவனும், அவனது தூதரும் அளித்த பதில்கள் வெறும் விளக்கங்கள் அல்ல; அவை நமது மறுமை நம்பிக்கையின் அஸ்திவாரம்!


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கேள்வி


நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடற்கரை ஓரமாகச் சென்று கொண்டிருந்த போது, இறந்த ஒரு மிருகத்தின் உடலை நிலத்தில் வாழும் விலங்குகள், பறவைகள் மற்றும் கடலில் வாழும் உயிரினங்கள் பிய்த்துச் சாப்பிடுவதைக் கண்டார்கள் 


கடற்கரையில் இறந்த அந்த மிருகத்தின் உடலை:

காட்டு விலங்குகள் (நரி, நாய் போன்றவை) சாப்பிட்டன.

ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் கொத்தித் தின்றன.

கடலின் அலைகளோடு வந்த மீன்கள் கடித்துச் சாப்பிட்டன.


இதைப் பார்த்த நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனதில் ஒரு சிந்தனை எழுந்தது:


"இந்த மிருகத்தின் உடல் பல துண்டுகளாகப் பிரிந்து, நிலத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் வயிறுகளுக்குள் சென்றுவிட்டதே! 


நாளை மறுமை நாளில் இறைவன் இவற்றை எவ்வாறு ஒன்றுதிரட்டி மீண்டும் உயிர்ப்பிப்பான்?"

அவர்கள் இறைவனின் ஆற்றலை சந்தேகிக்கவில்லை; மாறாக, உயிர்ப்பிக்கும் செயல்முறை (Process) எவ்வாறு நடக்கிறது என்பதை நேரில் கண்டு தன் மனதிற்கு முழுமையான அமைதியைத் தேட விரும்பினார்கள்.


கலீலுல்லாஹ் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்திலே ஒரு பிரார்த்தனை செய்கிறார்கள்:

رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى

"என் இறைவா! நீ மரணித்தவர்களை எப்படி உயிர்ப்பிப்பாய்? அதை எனக்குக் காட்டு" என்று கேட்கிறார்கள்.


மவ்த்தானவர்களை உயிர்ப்பிப்பது என்பது சாதாரண ஒரு விஷயம் அல்ல. 


"அல்லாஹ்வே, நீ எப்படி மவ்த்தானவர்களை ஹயாத் ஆக்குவாய்? அதை எனக்குக் காட்டு" என்று கேட்கிறார்கள்.


அப்போது அல்லாஹ் கேட்டான்:

 اَوَلَمْ تُؤْمِنْ‌ قَالَ بَلٰى وَلٰـكِنْ 

"உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?" என்று கேட்கிறான்.


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்: "அப்படியெல்லாம் இல்லை; நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன் தான், சக்தி உடையவன் தான். ஆனால் 

لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌

'வலாகின் லியத்மைன்ன கல்பி என்னுடைய கல்பு சாந்தி அடைவதற்காக..."


وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى قَالَ اَوَلَمْ تُؤْمِنْ‌ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ‌ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏

இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான். (அல்குர்ஆன் : 2:260)


ஒரு செய்தியை நாம் கேட்பதற்கும், அந்த நிகழ்வை நாம் கண்ணால் பார்ப்பதற்கும் ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கின்றது.


ஒரு நண்பர் வந்து ஒரு செய்தியைச் சொல்கிறார், "இப்படி நடந்தது" என்று சொல்வதற்கும், அந்த நிகழ்வை நாமே நேரடியாகப் பார்த்ததற்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றது அல்லவா? 


அது போல கண்ணால் கண்டு அதை உறுதிப்படுத்துவது என்பது மிக மேலானது. எனவே அந்த அடிப்படையில் தான் கேட்கிறேன் ரப்பே என்று இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்.


மலக்குல் மௌத் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வந்து சந்திக்கிறார்கள். சந்தித்து, "உங்களுக்கு 'ஹலீலுல்லாஹ்' (இறைவனின் நேசர்) என்ற பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது" என்று கூறுகிறார்கள்.


அப்படியானால், "என்னுடைய நிலை என்ன?" என்று இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டபொழுது, "நீங்கள் கேட்கக்கூடிய துஆக்கள் அங்கீகரிக்கப்படும். நீங்கள் கேட்பதை அல்லாஹ் தருவான்" என்று மலக்குல் மௌத் கூறினார்கள்.


அதற்குப் பிறகுதான் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனிடம், "ரப்பி அரினீ கைஃப துஹ்யில் மௌத்தா" — "இறைவா! மரணித்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய் என்பதை எனக்குக் காட்டு" என்று துஆ கேட்டார்கள்.


ஆனால் அதற்கு முன்பாக, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குல் மௌத்திடம் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள்: "யா மலக்கல் மௌத்! நீங்கள் ஒரு மனிதனுடைய உயிரைக் கைப்பற்றும்போது எவ்வாறு கைப்பற்றுவீர்கள்? முஸ்லிம் அல்லாதவர்களின் உயிரைக் கைப்பற்றுவதற்கும், மூஃமின்களான முஸ்லிம்களின் உயிரைக் கைப்பற்றுவதற்கும் உங்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும்?"


அதற்கு மலக்குல் மௌத் கூறினார்கள்: "நான் காஃபிர்களின் உயிரைக் கைப்பற்றும்போது என்னுடைய தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். என் தலை வானத்தின் அடியிலும், என் இரண்டு பாதங்களும் பூமியிலும் இருக்கும். 


அதுமட்டுமல்லாமல், என் உடலிலே முடிகள் எதுவும் இருக்காது; என் காதுகள் இரண்டிலிருந்தும் வாயிலிருந்தும் நெருப்பு ஜுவாலைகள் வெளியே வந்துகொண்டிருக்கும்."


"அதே நேரத்தில், ஒரு மூஃமின் அல்லது முஸ்லிமின் உயிரைக் கைப்பற்றும்போது, அழகிய வாலிபனின் தோற்றத்தில் வருவேன்; வெள்ளை ஆடை அணிந்திருப்பேன்; என் உடலிலிருந்து நறுமணம் கமழ்ந்துகொண்டிருக்கும். அப்படித்தான் நல்லடியார்களின் உயிரைக் கைப்பற்றுவேன்."


அல்லாஹ் அந்த அழகிய தோற்றத்தில் வந்து நமது உயிரைக் கைப்பற்றுவதற்கு அருள் பாலிப்பானாக!


அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலைக் கூறி, அதைச் செய்து பார்க்குமாறு பணித்தான்:


நான்கு பறவைகள்: 

நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை உம்மோடு நெருங்கிப் பழகச் செய்து (பழக்கப்படுத்திக்) கொள்வீராக.


பின்னர், அவற்றை அறுத்து துண்டு துண்டாக்கி, அவற்றின் பாகங்களை ஒன்றுடன் ஒன்று கலப்பீராக.


கலந்துபோன இறைச்சித் துண்டுகளைச் சுற்றியுள்ள பல மலைகளின் மீது தனித்தனியாக வைத்து விடுவீராக.


பிறகு, அந்தப் பறவைகளை உம்மிடம் வருமாறு அழைப்பீராக!


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவன் கூறியபடியே பறவைகளை அறுத்து, துண்டுகளாக்கி, கலந்து, வெவ்வேறு மலைகளில் வைத்த பின் அவற்றை அழைத்தார்கள்.


வெவ்வேறு மலைகளில் வைக்கப்பட்டிருந்த அந்த உடற்பாகங்கள், எலும்புகள், இறகுகள் அனைத்தும் காற்றில் பறந்து வந்து, அதனதன் சொந்த பாகங்களோடு ஒன்று சேர்ந்தன. 


அந்த நான்கு பறவைகளும் கணப்பொழுதில் மீண்டும் உயிர் பெற்று, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் பறந்து (வேகமாக நடந்து) வந்தன. 


 இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறுத்த நான்கு பறவைகள் 


1)தாவூஸ் (மயில்): அது அதைவிட கொஞ்சம் கூடுதலாகப் பறக்கும்.


2)தீக் (சேவல்): அது பெரிதாகப் பறக்காது, ஒரு 10 அடி பறக்கும்.


3)ஹுராப் (காக்கை): அது அதைவிட கூடுதலாக மேலே பறக்கும்.


4(ஹமாமா (புறா): அது அதைவிடவும் மேலே போகும்.


ஒவ்வொரு பறவையும் அறுத்ததற்கு சில படிப்பினைகள் உண்டு 


1. மயில் — பெருமையை அறுத்தல்

அந்த நான்கு பறவைகளில் முதலாவது பறவை — மயில் (தாவூஸ்).


ஏன் மயிலை அவர்கள் அறுத்தார்கள்? மயிலைப் பொறுத்தவரை அது மிகவும் அழகானது; ஆனால் அதனிடம் பெருமை இருக்கிறது. தன்னுடைய அழகைக் கொண்டு அது பெருமை கொள்கிறது. "நான் எவ்வளவு அழகு பார்த்தாயா!" என்று மற்ற பறவைகளை இழிவாகப் பார்க்கிறது.


பெருமையைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். 


لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ

"யாருடைய உள்ளத்தில் அணுவளவாவது பெருமை இருக்கிறதோ, அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்" என்கிறார்கள். 


பெருமை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது; அடியார்களுக்கு உரியது அல்ல.


அல்லாஹ் நமக்கு அழகையோ, பொருளையோ, வசதியையோ தந்தால் அது அவன் தந்த கொடை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதை வைத்துக்கொண்டு "என்னை விட பெரிய ஆள் யாரும் இல்லை" என்று பெருமை பேசுபவன் சுவனம் நுழைய முடியாது.


قَالَ رَجُلٌ: إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً، قَالَ:

إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ

இந்த ஹதீஸைக் கேட்டவுடன் தோழர்களுக்கு (சஹாபாக்களுக்கு) எவ்வளவு அச்சம் வந்தது பாருங்கள்! ஒரு தோழர் நபிகளாரிடம் வந்து கேட்கிறார்: "யா ரசூலல்லாஹ்! நான் நல்ல ஆடை அணிய விரும்புகிறேன், தலையை அழகாக வாரிக்கொள்ள விரும்புகிறேன், புதிய செருப்பு அணிய விரும்புகிறேன். இதெல்லாம் பெருமையில் சேருமா? நான் சுவனம் நுழைய முடியாமல் போய்விடுமா?"


நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "இல்லை, அல்லாஹ் அழகான்; அவன் அழகையே விரும்புகிறான். நல்ல ஆடை அணிவதும், அழகாக இருப்பதும் பெருமையல்ல. பெருமை என்பது என்னவென்றால் — உண்மையை மறுப்பதும், மக்களை இழிவுபடுத்துவதும் தான்!"


நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் 


ஈஸா அலைஹிஸ்ஸலாம் காலத்தில் ஒரு நல்லடியார் இருந்தார். அவருடைய வழிபாட்டின் (இபாதத்தின்) காரணமாக அவர் வெயிலில் செல்லும்போது ஒரு மேகத்துண்டு அவருக்கு நிழல் கொடுத்துக்கொண்டே செல்லும். அதே ஊரில் ஒரு முரட்டு மனிதன் இருந்தான்.


ஒருநாள் அந்த நல்லடியார் வருவதைப் பார்த்த அந்த மனிதன், தன் மனதுள் வருந்தினான்: "நாம் இவ்வளவு காலம் பாவம் செய்துவிட்டோமே! இந்த நல்லடியாருக்கு அல்லாஹ் மேகத்தைக் கூட நிழலாகத் தருகிறானே. நாம் இவரோடு சேர்ந்து நடப்போம்; நல்லவர்களோடு சேர்ந்தால் அல்லாஹ் நம் பாவத்தையும் மன்னிப்பான்" என்று எண்ணி அவருடன் நடந்தான்.


ஆனால் அந்த நல்லடியார், தன் மனதுள் பெருமை கொண்டு, "இந்த பாவி ஏன் நம்மோடு வருகிறான்? ஊரார் பார்த்தால் கேவலமாக நினைப்பார்கள்" என்று எண்ணி அவனை விரட்டிவிட்டார்.

அவன் விலகிச் சென்றபோது, அந்த நல்லடியாரின் தலையில் இருந்த மேகம், பாவமன்னிப்பு தேடி வந்த அந்த நபரின் தலைக்கு மேலே சென்றுவிட்டது! 


பெருமை வந்ததால் அந்த நல்லடியாரின் அந்தஸ்து போய்விட்டது. எனவே, மனிதன் தன் மனதிலிருக்கும் பெருமையை அறுத்து எறிய வேண்டும் என்பதைக் காட்டவே மயில் அறுக்கப்பட்டது.


2. சேவல் காம இச்சையை அடக்குதல்


இரண்டாவதாக, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சேவலை அறுத்தார்கள்.


சேவலிடம் அதிகாலைத் தொழுகைக்கு அழைப்பது போன்ற நல்ல குணங்கள் இருந்தாலும், அதனிடம் காம இச்சை (அதிகமான இச்சை) உள்ளது. அது எளிதில் அடங்காது.


ஒரு மனிதன் தன் மனோ இச்சையையும், காமத்தையும் அடக்கி இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே சேவல் அறுக்கப்பட்டது.


يَا مَعْشَر الشَّبَابِ مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ... وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ

இளைஞர்களே! உங்களில் திருமணம் செய்ய சக்தி பெற்றவர் திருமணம் செய்து கொள்ளட்டும்; ஏனெனில் அது பார்வையைத் தாழ்த்தும், கற்பைப் பேண உதவும். அதற்கு சக்தி பெறாதவர் நோன்பு நோற்கட்டும்; ஏனெனில் நோன்பு அவனது இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயமாகும்.


அபு பக்கர் அல்-மிஸ்கீ ரஹ்மதுல்லாஹி அலைஹி 


எகிப்து நாட்டில் வாழ்ந்த அபு பக்கர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மிகவும் அழகான தோற்றமும், சிறந்த ஒழுக்கமும் கொண்ட ஒரு வாலிபராக இருந்தார். இவர் வியாபார நிமித்தமாகத் துணிகளை விற்பனை செய்து வந்தார்கள்.


ஒருநாள், அந்த ஊரில் வாழ்ந்த ஒரு செல்வந்த, அழகிய பெண்மணி அபு பக்கர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அழகில் மயங்கினாள். அவரை எப்படியாவது தவறான வழியில் அடைய வேண்டும் என்று திட்டம் தீட்டினாள்.


ஒருநாள் அபு பக்கர் அவர்கள் துணி மூட்டையுடன் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பெண்மணி தனது வேலைக்காரியை அனுப்பி, "நிறைய துணிகள் வாங்க வேண்டும், வீட்டிற்குள் வாருங்கள்" என்று அபு பக்கரை அழைத்தாள்.


அபு பக்கர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் துணிகளுடன் வீட்டிற்குள் சென்றதும், அந்தப் பெண்மணி கதவுகள் அனைத்தையும் பூட்டினாள். பின்னர் அபு பக்கரிடம், "நான் உன்னை விரும்புகிறேன். நீ என் விருப்பத்திற்கு இணங்க வேண்டும், இல்லையெனில் நீ என்னகடம் தவறாக நடக்க முயன்றாய் என்று ஊரைக் கூட்டி உன்னைச் சிறையில் அடைக்கச் செய்வேன்" என்று மிரட்டினாள்.


அபு பக்கர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் திடுக்கிட்டார்கள். கதவுகள் பூட்டப்பட்டிருந்தன; தப்பியோட வழியில்லை. அந்தப் பெண்ணின் மிரட்டலுக்குப் பயந்து தவறு செய்தால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று நடுங்கினார். மனோ இச்சைக்குப் பலியாகாமல் இருக்க அவர்கள் ஒரு தந்திரத்தைச் செய்தார்கள்.


அப் பெண்ணிடம், "சரி, நான் கழிப்பறைக்குச் சென்று என்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வருகிறேன்" என்று கூறி கழிப்பறைக்குச் சென்றார்.

அங்கே சொற்ப நேர சிந்தனைக்குப் பின், கழிப்பறையிலிருந்த மலத்தையும் அசுத்தங்களையும் அள்ளித் தன் உடலிலும் ஆடைகளிலும் முகம் முழுவதும் பூசிக் கொண்டார். தன் உடலை அருவருப்பானதாக மாற்றிக் கொண்டு வெளியே வந்தார்கள்.


அவரது இந்தத் தோற்றத்தையும், அருவருப்பான துர்நாற்றத்தையும் பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தாள்!

"சீ! பிசாசு பிடித்தவனே! என் வீட்டை விட்டு உடனே வெளியே போ!" என்று கூச்சலிட்டு கதவைத் திறந்து அவரை வீட்டை விட்டு விரட்டினாள்.

அபு பக்கர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தன் மானத்தையும், கற்பையும், இறை அச்சத்தையும் காப்பாற்றிக் கொண்ட நிம்மதியுடன் வீட்டிற்கு ஓடினார்கள். உடனடியாகக் குளித்துத் தம்மைச் சுத்தப்படுத்திக் கொண்டார்கள்.


இறைவனின் கோபத்திற்குப் பயந்து, தற்காலிகமாகத் தன் உடலில் அசுத்தத்தைப் பூசிக் கொண்ட அந்த வாலிபருக்கு அல்லாஹ் மறுமைக்கு முன்பாகவே இந்த உலகத்திலேயே ஒரு அற்புதப் பிரதிபலனை வழங்கினான்.

அன்று இரவு அவர் தூங்கும்போது கனவில் ஒரு அசரீரி கேட்டது: "நீ எனக்காக அருவருப்பான அசுத்தத்தைச் சகித்துக் கொண்டு உன்னைக் காப்பாற்றினாய். உனது உடலை நான் உலகத்தின் சிறந்த நறுமணத்தால் நிரப்புவேன்."


அவர் காலையில் எழுந்தபோது, அவரது உடலிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் கஸ்தூரியை (மிஸ்க்) விடச் சிறந்த நறுமணம் வீசிக்கொண்டிருந்தது.

அவர் இறக்கும் வரை (பல ஆண்டுகள் வரை) நறுமணப் பொருட்கள் எதுவுமே பூசாமலேயே, அவரது உடலிலிருந்து அந்த நறுமணம் வீசிக்கொண்டே இருந்தது. இதன் காரணத்தினாலேயே மக்கள் அவரை "அபு பக்கர் அல்-மிஸ்கீ" (கஸ்தூரி அபு பக்கர்) என்று அழைக்கத் தொடங்கினர்கள்.


ஒரு சில நிமிடப் பாவ இன்பத்திற்காக, வாழ்நாள் முழுவதையும் மறுமையையும் பாழாக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

எனவே மனோ இச்சையை கட்டுப்படுத்தினால் இம்மையிலும் மறுமையிலும் வெல்லலாம்.


3. காகம் பேராசையை அறுத்தல்


மூன்றாவதாக, காகம். காகத்தினுடைய முக்கியக் குணம் — பேராசை.

வயிற்றுக்கு உணவிருந்தாலும், எங்கு எதைப் பார்த்தாலும் கொத்திக்கொண்டே இருக்கும். கிடைத்ததைக் கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி (அல்ஹம்துலில்லாஹ் என்று) திருப்தியடையும் குணம் அதனிடம் இல்லை.


நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கப்பலிலிருந்து நிலத்தைக் காண காகத்தை அனுப்பியபோது, வழியில் செத்துக் கிடந்தவற்றை உண்பதிலேயே அது மூழ்கிவிட்டது.


 كَانَ لِابْنِ آدَمَ وَادٍ مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ، وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ»

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "மனிதனுக்கு ஒரு தங்க ஓடை கொடுக்கப்பட்டாலும், இரண்டாவது ஓடை வேண்டும் என்று ஆசைப்படுவான். மண்ணறையின் (கபூரின்) மண் அவனுடைய வாயில் விழும் வரை அவனது பேராசை அடங்காது."


அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: 


اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏

செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-(அல்குர்ஆன் : 102:1)


حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَ‏

நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.(அல்குர்ஆன் : 102:2)


பள்ளிவாசல் புறாவாக இருந்தவர்

ஸஃலபா இப்னு ஹாதிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொடக்கத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பள்ளிவாசலிலேயே வாழக்கூடிய வறுமையான, ஆனால் மிகுந்த இறைவழிபாடு கொண்ட ஒரு சுஃப்ஃபா தோழராக இருந்தார்.


ஸஃலபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரே ஒரு ஆடை மட்டுமே இருந்தது. தொழுகை முடிந்தவுடன், அந்த ஆடையைத் தன் மனைவி அணிந்து தொழுவதற்காக வேகமாக வீட்டிற்கு ஓடிவிடுவார். இதனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது முடித்துத் திரும்பும் முன்பே ஸஃலபா சென்றுவிடுவார்.


ஒருநாள் ஸஃலபா, நபிகளாரிடம் வந்து:

"அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அதிகச் செல்வத்தை வழங்குமாறு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்" என்று வேண்டினார்.

அதற்கு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்போடு அறிவுரை கூறினார்கள்:

"ஸஃலபாவே! நீ நன்றி செலுத்தக்கூடிய குறைந்த செல்வமே, உன்னால் தாங்க முடியாத அதிகச் செல்வத்தை விடச் சிறந்தது!"


ஆனால் ஸஃலபா விடவில்லை. மீண்டும் மீண்டும் வந்து, "உங்களைச் சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய இறைவன் மீது ஆணையாக! எனக்குச் செல்வம் கிடைத்தால், அதன் மூலம் ஒவ்வொரு உரிமையாளருக்கும் உரிய உரிமையை வழங்கி, தர்மங்கள் செய்வேன்" என்று உறுதியளித்து துஆ கேட்டார்.


அவரது விடாப்பிடியான வேண்டுதலால் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

"இறைவா! ஸஃலபாவிற்குச் செல்வத்தை வழங்குவாயாக!" என்று துஆ செய்தார்கள்.


நபிகளாரின் துஆவிற்குப் பின், ஸஃலபா ஒரு ஆட்டைக் வாங்கினார். அல்லாஹ் அதில் அளப்பரிய பரக்கத்தை (அபிவிருத்தியை) அளித்தான். ஆடுகள் புழுக்களைப் போலப் பெருகத் தொடங்கின.


ஆடுகளின் எண்ணிக்கை அதிகமானதால், மதினாவிற்குள் வளர்க்க இடமின்றி நகரின் எல்லைக்குச் சென்றார். இதனால் லுஹர், அஸர் தொழுகைகளுக்கு மட்டும் பள்ளிவாசலுக்கு வந்தார்.

ஆடுகள் இன்னும் பல மடங்காகப் பெருகவே, வெகு தொலைவில் உள்ள பள்ளத்தாக்கிற்குச் செல்ல வேண்டியதாயிற்று. இதனால் ஜும்ஆ தொழுகைக்கு மட்டும் வரத் தொடங்கினார்.


இறுதியில், ஆடுகளை மேய்ப்பதிலேயே முழு நேரமும் சென்றதால், ஜும்ஆ தொழுகைக்கும் வருவதை நிறுத்திவிட்டார்.


நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஸஃலபா எங்கே?" என்று கேட்டபோது, தோழர்கள் அவரது செல்வப் பெருக்கையும், அவர் ஊரை விட்டுத் தொலைவில் இருப்பதையும் கூறினர். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலையோடு, "அந்தோ பரிதாபம்! ஸஃலபாவிற்கு அழிவு தான்!" என்று மூன்று முறை கூறினார்கள்.


செல்வத்தின் மீதான பேராசை ஸஃலபாவின் உள்ளத்தை அடைத்துவிட்டது. திருக்குர்ஆனில் ஜகாத் (ஏழை வரி) கடமையாக்கப்பட்ட வசனங்கள் இறங்கியபோது, நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜகாத் வசூலிப்பவர்களைத் ஸஃலபாவிடம் அனுப்பினார்கள்.

ஜகாத் கணக்கிடப்பட்ட தொகையைப் பார்த்த ஸஃலபா:


"இது என்ன வரியா? அல்லது வரியைப் போன்ற தண்டனையா? இப்போது செல்லுங்கள், நான் யோசித்துச் சொல்கிறேன்" என்று கூறி, ஜகாத் கொடுக்க மறுத்துத் திருப்பியனுப்பினார்.


அப்போது அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வரும் கடுமையான வசனங்களை இறக்கினான்:


وَمِنْهُم مَّنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِن فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ ۝ فَلَمَّا آتَاهُم مِّن فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوا وَّهُم مُّعْرِضُونَ

"அவர்களில் சிலர், 'அல்லாஹ் தன் அருளிலிருந்து நமக்கு வழங்கினால், நிச்சயமாக நாம் தர்மம் செய்து நல்லவர்களாக இருப்போம்' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தனர். ஆனால், அவன் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியபோது, அதில் கஞ்சத்தனம் செய்து, புறக்கணித்துத் திரும்பிவிட்டனர்." (திருக்குர்ஆன் 9:75-76)


இந்த வசனம் இறங்கிய செய்தி அறிந்த ஸஃலபா, தான் செய்த மாபெரும் தவறை உணர்ந்து நடுக்கமுற்றார். உடனே தனது ஜகாத் தொகையை எடுத்துக்கொண்டு நபிகளாரிடம் ஓடிவந்து அழுதார்.


ஆனால் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

"ஸஃலபாவே! உன்னிடமிருந்து ஜகாத்தைப் பெறக் கூடாது என்று அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுவிட்டான்!" என்று கூறி வாங்குவதற்கு மறுத்துவிட்டார்கள்.

ஸஃலபா தலைமீது மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டு கதறி அழுதார். நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பிறகும், அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, உமர் ரலியல்லாஹு அன்ஹு, உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய ஆட்சியாளர்களிடமும் சென்று தன் ஜகாத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கெஞ்சினார். ஆனால் நபிகளார் ஏற்காத ஒன்றை அவர்களும் ஏற்க மறுத்துவிட்டனர்.


இறுதியில் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில், மனவேதனையுடனும் கைசேதத்துடனும் ஸஃலபா மரணித்தார்.


பேராசை ஆன்மீகத்தை அழிக்கும்:

ஆரம்பத்தில் இபாதத்தில் சிறந்தவராக இருந்த ஸஃலபாவை, செல்வத்தின் மீதான பேராசையும் "இன்னும் வேண்டும்" என்ற எண்ணமும் தொழுகையையும் ஜகாத்தையும் கைவிடச் செய்து, இறைவனின் கோபத்திற்கு ஆளாக்கியது.


மனிதன் தன் உள்ளத்தில் உள்ள பேராசையை அறுக்க வேண்டும் என்பதை உணர்த்தவே காகம் அறுக்கப்பட்டது.


4. புறா — அவசரத்தை அறுத்தல்


நான்காவதாக, புறா. பறவைகளிலேயே சாதுவான, அழகிய பறவை புறா. ஆனால் அதனிடம் உள்ள ஒரே குறை — அவசரம்.


நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 

الأَنَاةُ مِنَ اللَّهِ، وَالْعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ

"நிதானம் என்பது அல்லாஹ்வின் பக்கத்திலிருந்து உள்ளது; அவசரம் என்பது ஷைத்தானின் பக்கத்திலிருந்து உள்ளது."


உஹுத் யுத்தத்தில் அவசரமும் அதன் விளைவும்

ஹிஜ்ரி 3-ஆம் ஆண்டு உஹுத் மலையடிவாரத்தில் முஸ்லிம்களுக்கும் மக்கா குரைஷிகளுக்கும் இடையே யுத்தம் நடைபெற்றது.


போர் தொடங்குவதற்கு முன், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகள் பின்புறமாக வந்து தாக்காதவாறு பாதுகாப்பதற்காக ஐம்பது அம்பு எய்யும் வீரர்களை உஹுத் மலையின் மீதிருந்த ஒரு கணவாயில் (ஜபலுர் ருமாதாத்) நிறுத்தினார்கள்.


அவர்களின் தலைவராக அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். 


நபிகளார் அவர்களிடம் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தார்கள்:

"நாங்கள் போரில் வெற்றி பெற்று எதிரிகளின் பொருட்களைச் சேகரிப்பதைப் பார்த்தாலும் சரி, அல்லது பறவைகள் எங்களைக் கொத்தித் தின்பதைப் பார்த்தாலும் சரி... நான் உங்களை அழைக்கும் வரை நீங்கள் இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது!"

(நூல்: புகாரி)


போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. எதிரிகள் தம் ஆயுதங்களையும் பொருட்களையும் விட்டுவிட்டுத் தப்பியோடினர்.


மலையின் மேல் இருந்த அம்பு எய்யும் வீரர்கள், கீழே முஸ்லிம்கள் போர்க் கனீமத் (வெற்றிப்) பொருட்களைச் சேகரிப்பதைப் பார்த்தனர். உடனே அவர்களில் பெரும்பாலோர், "போர் முடிந்துவிட்டது, வெற்றி கிடைத்துவிட்டது! வாருங்கள் நாமும் கீழே சென்று பொருட்களைச் சேகரிப்போம்" என்று கூறி அவசரப்பட்டனர்.


அவர்களின் தலைவர் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு எவ்வளவோ தடுத்தார்கள்:


"நபிகளார் சொன்ன கட்டளையை மறந்துவிட்டீர்களா? அவசரப்படாதீர்கள், நிதானமாக இருங்கள்!" என்று எச்சரித்தார்கள்.


ஆனால், பத்து வீரர்களைத் தவிர மற்ற அனைவரும் அவசரப்பட்டு, நிதானமின்றித் தம் இடத்தை விட்டு கீழே இறங்கினர்.


அப்பொழுது எதிரிகளின் படையில் இருந்த (பின்னர் இஸ்லாத்தைத் தழுவிய) மாவீரர் ஹாலித் இப்னு வலீத், கணவாய் காலியாக இருப்பதைப் பார்த்தார். உடனே தன் குதிரைப் படையுடன் மலையைச் சுற்றி வந்து, அங்கிருந்த பத்து வீரர்களையும் தியாகிகளாக்கி (ஷஹீதாக்கி), பின்புறமாக முஸ்லிம்களைத் திடீரெனத் தாக்கினார்.


வெற்றியின் விளிம்பில் இருந்த முஸ்லிம்கள், இந்த அவசரமான முடிவினால் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்:

ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு உட்பட 70 சிறந்த சஹாபாக்கள் தியாகிகளானார்கள்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பற்கள் காயமடைந்து, அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

போரில் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டது.


வெற்றி உறுதியாகிவிட்டது போன்ற தோற்றம் வந்தவுடன், நபிகளாரின் கட்டளையை மீறி வீரர்கள் அவசரப்பட்டதே அந்தப் பின்னடைவுக்குக் காரணம்.


"சூழல் சாதகமாக இருக்கிறது, உடனே செய்" என்று மனதை அவசரப்படுத்தி, ஆபத்தில் தள்ளுவது ஷைத்தானின் வழிகாட்டலாகும்.


சுறுசுறுப்பு வேறு, அவசரம் வேறு. புறாவிடமிருந்த அந்த அவசரப் பண்பைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே அது அறுக்கப்பட்டது.


நான்கு பறவைகளின் வித்தியாசம் மற்றும் நம்பிக்கையின் நிலைகள்

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரே மாதிரியான நான்கு பறவைகளை அறுக்காமல், வடிவம், நிறம், குணம் என முற்றிலும் வேறுபட்ட நான்கு பறவைகளைத் தேர்ந்தெடுத்தார்கள். அவ்வாறு கலந்து வைக்கப்பட்ட பாகங்களை அல்லாஹ் மிக எளிதாக மீண்டும் உயிர்ப்பித்து ஒன்றிணைத்துக் காட்டினான்.


ஞானிகளும் சூஃபிகளும் நம்பிக்கையின் (ஈமானின்) உறுதியை மூன்றாகப் பிரிப்பார்கள்:


இல்முல் யகீன் — அறிவால் கேட்டுத் தெரிந்துகொள்வது.


ஐனுல் யகீன் — கண்ணால் நேரடியாகப் பார்த்து உறுதிசெய்வது.


ஹக்குல் யகீன் — உண்மையை முழுமையாக அனுபவித்து உணரக்கூடிய நிலை.


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் அந்த நம்பிக்கை முழுமை பெற்றது. 


இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான்கு பறவைகளை அறுத்த நிகழ்வின் மூலம் ரப்புல் ஆலமீன் மனித குலத்திற்கு மிக உயர்ந்த ஆத்மீகப் படிப்பினைகளை உணர்த்துகிறான்:


மயிலைப் போன்று நமது உள்ளத்தில் தோன்றும் பெருமை மற்றும் அகந்தையை அறுத்து எறிய வேண்டும்.


சேவலைப் போன்று கட்டுப்பாடின்றி ஓடும் மனோ இச்சையையும் காமத்தையும் இறையச்சத்தின் மூலம் அடக்க வேண்டும்.


காகத்தைப் போன்று மனிதனை அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லும் பேராசையை நீக்கி, போதுமென்ற மனதைப் பெற வேண்டும்.


புறாவைப் போன்று ஷைத்தானின் தூண்டுதலால் வரும் அவசரத்தைக் கைவிட்டு, இறைவனுக்கு விருப்பமான நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.


இத்தகைய தீய குணங்களை நம் அகத்திலிருந்து முழுமையாக அறுத்து எறிந்து, தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வை நெருங்குவதற்கும், அவனது நேசத்தைப் பெறுவதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக!


யா ரஹ்மான்! எங்கள் உள்ளங்களில் பெருமை, அகந்தை, சுயநலம் ஆகிய தீய குணங்கள் அணுவளவும் நுழையாமல் எங்களைக் காத்தருள்வாயாக!


யா ரஹீம்! மனோ இச்சை மற்றும் காமத்தின் தூண்டுதல்களிலிருந்து எங்களைப் பாதுகாத்து, ஹழ்ரத் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கியதைப் போன்ற தூய்மையான கற்பையும் இறையச்சத்தையும் எங்களுக்குத் தந்தருள்வாயாக!


யா ரஸ்ஸாக்! பேராசையிலிருந்து எங்களை விடுவித்து, நீ தந்த நஃமத்துகளைக் கொண்டு திருப்தியடையும் "கனாஅத்" எனும் போதுமென்ற மனதை எங்கள் உள்ளங்களில் விதைப்பாயாக!


யா முஃமின்! அவசரப்பட்டு முடிவெடுக்கும் ஷைத்தானியப் பண்பிலிருந்து எங்களைக் காத்து, உனக்குப் பிரியமான நிதானத்தையும் சகிப்புத் தன்மையையும் எங்கள் வாழ்க்கையில் தந்தருள்வாயாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


தொகுத்தவர்.




மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.


ஜும்மா பயான்கள்.




1 கருத்து:

  1. மாஷாஅல்லாஹ் ரொம்ப அருமையான பயான்
    நான்கு பறவைகளுக்கும்
    நான்கு சம்பவங்கள்

    பதிலளிநீக்கு