திங்கள், 13 ஜூன், 2022

நல்லதையே பேசுவோம்

                                             

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத்.

ஃபகத் காலல்லாஹு தஆலா ஃபில் குர்ஆனில் அழீம் வல் ­ஃபுர்கானில் மஜீத் அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا (70)

يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا (71)

கால நபினா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

அல் முஸ்லிமு மன் ஸலிமல் முஸ்லிமூன மில் லிஸானிஹி வயதிஹி.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக.

நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மனி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் அனைவர் மீதும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் இங்கு கூடியிருக்கும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் அல்லாஹ்வின் அருள் நின்று நிலவட்டுமாக.

எனக்கு இங்கு பேச வாய்பளித்த எனது ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களும் ஸலாத்தை கூறி எனது சிறிய உரையை துவங்குகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

 

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

ஒரு ஊரில் அறிஞர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு அழகான மகள் இருந்தாள் அந்த மகளுக்கு திருமண வயது வந்த பொழுது அந்த பெண்ணை திருமணம் முடிக்க பலரும் பெண் கேட்டு வந்தார்கள்.

தன்னுடைய மகளை புத்திசாலியான ஒருவருக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணிய அந்த அறிஞர் தன் மகளை பெண் கேட்டு வந்த இளைஞர்களை மொத்தமாக அமர வைத்து அவர்களிடம் கூறினார்.

நான் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்பேன் அதற்கு யார் சரியான பதிலைச் சொல்கிறார்களோ அவருக்குத்தான் எனது மகளை திருமணம் செய்து கொடுப்பேன் என்று கூறினார்.

பெண் கேட்டு வந்த இளைகளுக்கு இது சற்று வித்தியாசமாக இருந்தாலும் அந்த பேரழகான பெண்ணை எப்படியாவது திருமணம் செய்துவிட வேண்டும் என்று போட்டிக்கு சம்மதித்தார்கள்.

அந்த அறிஞர் தன் முதலாவது கேள்வியை கேட்டார்.

இந்த உலகத்தில் இனிமையான ஒன்றை எனக்கு கொடுங்கள் என்றார்.

இதை கேட்ட இளைஞர்களில் சிலர் தேனை கொண்டு வந்து கொடுத்தார்கள். சிலர் கரும்பை கொண்டு வந்து கொடுத்தார்கள். சர்கரையை கொண்டு வந்து கொடுத்தார்கள். பெண் கேட்டு வந்த்தவர்களில் ஒரு ஏழை இளைஞனும் இருந்தான் அந்த இளைஞர் ஒரு பேப்பரில் மனிதனின் நாவை படமாக வரைந்து அதை ஒரு பெட்டியில் வைத்து மூடி அந்த அறிஞரிடம் கொடுத்தான்.

பெட்டியை திறந்து பார்த்த அந்த அறிஞர் என்ன இது…? எதற்காக மனிதனின் நாவை படமாக வரைந்து கொண்டு வந்துள்ளாய்…? என்று கேட்ட போது அந்த இளைஞன் கூறினான்

அறிஞர் அவர்களே நீங்கள் தானே இந்த உலகில் இனிமையான ஒன்றை கேட்டீர்கள். நாவை விட ஒரு இனிமையான ஒன்று எது என பதிலளித்தார்.

அந்த பதிலைக் கேட்ட அறிஞர் மிகவும் மகிழ்ச்சியடைந்து அந்த இளைஞரிடம் முதல் கேள்வியில் நீ மட்டுமே சரியான பதிலளித்தாய் என்று கூறிவிட்டு தன்னுடைய இரண்டாவது கேள்வியை கேட்டார்.

இந்த உலகிலேயே கசப்பான பொருள் எது என்று கேட்டார்.

சிலர் பாகற்காய் என்றார்கள். சிலர் வேப்பங்காய் என்றார்கள். இன்னும் சிலர் எட்டிக்காய் என்றார்கள். அப்போதும் அந்த ஏழை இளைஞன் மனித நாவை படமாக வரைந்து அதை ஒரு பெட்டியில் வைத்து மூடி அந்த அறிஞரிடம் கொடுத்தான்.

பெட்டியை திறந்து பார்த்த அந்த அறிஞர் என்ன விளையாடுகிறாயா...  இதற்கும் மனிதனின் நாவை படமாக வரைந்து கொண்டு வந்துள்ளாய் இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்ட போது அந்த இளைஞன் கூறினான்

ஒரு மனிதன் தீய சொற்கள் பேசும் போது நாவைப் போல கசப்பான பொருள் உலகத்தில் இருக்கிறதா..

தீய சொற்களை ஒரு மனிதன் பேசும் போது மகிழ்ச்சியாக இருப்பவனும் கவலையாகி விடுகிறான்.

நட்பாக இருப்பவனும் எதிரியாக மாறிவிடுகிறான் என்று கூறினான்.

 

இந்த விளக்கத்தை கேட்ட அறிஞர் அந்த இளைஞரின் அறிவைக் கண்டு வியந்து போய் தனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

 

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

நாவு என்பது ஒரு அற்புதமான உறுப்பு.

சொர்கத்தின் திறவுகோலும் அதுதான். நரகத்தின் வாசலும் அதுதான்.

 

ஒருவன் தனது நாவைப் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அவனது குணங்களை மதிப்பிட முடியும். நல்ல மனிதன்என்ற மரியாதையை மக்களிடமிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும் பெற்றுக் கொடுப்பதில் நாவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. நாவினாற் பிறரைத் துன்புறுத்தாதவனுக்குச் சிறந்த முஸ்லிம் என்ற பட்டத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே வழங்கியுள்ளனர்.

 

அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி) என்ற நபித் தோழர் கூறுகின்றார், “‘அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்என்று நான் கேட்டேன். அப்போது நபியவர்கள்

அல் முஸ்லிமு மன் ஸலிமல் முஸ்லிமூன மில் லிசானிஹி வயதிஹி

 யாருடைய நாவை விட்டும், கையை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவர்தான் உண்மை முஸ்லிம்’” என நபியவர்கள் கூறினார்கள் [நூற்கள்: புகாரி, முஸ்லிம்].

 

நாம் மொழிகின்ற நன்மை, தீமைகள் அனைத்தையும் முறையே கண்காணிக்கக்கூடிய வானவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதோ அல்லாஹ் கூறுகின்றான்,

முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுடைய செயல்களை உங்களுக்கு அவன் சீராக்கி வைத்து, உங்களுடைய பாவங்களையும் உங்களுக்கு மன்னிப்பான்” [அல்-அஹ்ஸாப்: 70, 71].

  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا (70)

يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا (71)


இதுமட்டுமல்ல மேலும், அல்லாஹ் கூறுகின்றான்,

 

¨ இறையச்சமுள்ள அடியான் நல்லதையே பேச வேண்டும்.

 

நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:¨ கூறும்போது அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கின்றவர் நல்லதைப் பேசட்டும். அன்றேல், மௌனமாக இருக்கட்டும். என்று கூறினார்கள்.

 

¨ யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்மஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று கூறினார்கள்..

 

நாம சில நேரத்துல நல்லதா கெட்டதா எனச் சிந்திக்காமலேயே சில வார்த்தைகளைப் பேசிவிடுகிறோம். அவை நல்லதாயின் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். மாறாக அவை கெட்டதாயின் அந்த வார்த்தைகளே நம்மை நரகத்தில் தள்ளிவிடும்.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”. என்று கூறினார்கள். [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி]

 

அல்லாஹ்வின் நல்லடியார்களே...

 

இன்று நமது நடைமுறை வாழ்க்கைல நாவினால் செய்யப்படும் தீமைகள் என்ன என்ன என்று பார்த்தால்

 

வீண் வார்த்தைகளை பேசுகிறோம், பொய் பேசுகின்றோம், புறம் பேசுகிறோம், கோள் சொல்கிறோம், பிறரைப் கேலி கிண்டல் செய்கிறோம், அவதூறு கூறுதல், சாபமிடுதல், குறை கூறுதல், காரணமின்றி ஏசுதல், இட்டுக்கட்டிப் பேசுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், ஆபாசப் பாடல்களைப் பாடுதல், பட்டப் பெயர் சொல்லுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல்  இப்படி நாவினால் ஏற்படும் பாவச் செயல்களை. இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. இவை தீயோரின் அடையாளங்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. எனவே, இவற்றை விட்டும் நம் நாவைக் காத்துக் கொள்ள வேண்டும்

 

இஸ்லாம் சுட்டிக் காட்டும் பண்புகளான நல்லவற்றைப் பேசுதல், உண்மை உரைத்தல், மென்மையாகப் பேசுதல், ஸலாமைப் பரப்புதல், இறைவனைத் துதித்தல், ஸலவாத்துச் சொல்லுதல், நேர்மையானவற்றைப் பேசுதல், நேரடியாகவும் தெளிவாகவும் பேசுதல், சத்தியத்தைப் போதித்தல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் போன்ற அனைத்தும் நல்லோரின் பண்புகளாகும் திருவள்ளுவர் கூட கூறும்போது இப்படி கூறினார். நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு குரள். இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

 

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .

  

எனவே, இப்படிப்பட்ட பண்புகளை நம்மில் வளர்த்தி சொர்கத்தின் சொந்தக்காரர்களாக நாமும் மாறி நம்மைச் சார்ந்தோரையும் சொர்க்கவாசிகளாக ஆக்க நாம் அனைவரும் முயற்சி செய்து அல்லாஹ்வின் அன்பை பெறுவோமாக.

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக