சனி, 24 செப்டம்பர், 2011

இதற்குத் தீர்வு என்ன? சொல்லுங்கள்...!





மிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 300 ஆலிம்கள் (மௌலவிகள்) பட்டம் பெற்று வெளிவருகின்றனர். தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ 125 அரபி மதரசாக்கள் (அரபிக் கல்லூரிகள்) இருக்கலாம். அவற்றில் மௌலவிபட்டம் வழங்கும் தஹ்ஸீல்மதரசாக்கள் சுமார் 30 இருக்கக்கூடும்!

இதுவெல்லாம் பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலை. இன்று சில மதரசாக்கள் ஓசையின்றி மூடப்பட்டுவிட்டன. பல மதரசாக்கள் இரு கலை (உலகக் கல்வி, மார்க்கக் கல்வி) கல்லூரிகளாக மாறிவிட்டன. எல்லா மதரசாக்களிலும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துபோய்விட்டது.

மாணவர்கள் எண்ணிக்கை - 15; ஆசிரியர் எண்ணிக்கை - 7; பட்டம் வழங்கப்படுகிறது -இந்நிலையில் உள்ள மதரசாக்களே அதிகம். 400க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்றுவந்த ஒரு பெரிய மதரசாவில் இன்று 200 மாணவர்களே உள்ளனர். அவர்களிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 40 பேர். முன்பெல்லாம் அங்கு சுமார் 150 தமிழ் மாணவர்கள் இருப்பார்கள்.

முன்பைவிட வசதியான மாணவர் விடுதி; வகுப்பறைகள்; சமையற்கூடம்; இலவச உணவு; சில இடங்களில் இலவச உடை; நிதி உதவி... இப்படி எல்லா வசதிகளும் உண்டு. ஆனால், மாணவர்கள்தான் தேவையான அளவுக்கு இல்லை.

இத்தனைக்கும், தேர்வுக்காகப் படிக்க வேண்டிய சிரமமோ தேர்வு எழுத வேண்டிய சுமையோகூட மாணவர்களுக்குக் கிடையாது. ஏனெனில், பல மதரசாக்களில் முறையான தேர்வுமுறையே இல்லை. அவ்வாறே, ஆண்டின் மத்தியில் வந்தால்கூடப் புதிய மாணவர் சேர்த்துக்கொள்ளப்படுவார். முன்பு அவர் படித்த மதரசாவின் தடையில்லா சான்றிதழோ (NOC) மாற்றுச் சான்றிதழோ (TC) எதுவும் தேவையில்லை.

இதனால், முந்தைய மதரசாவில் நான்காம் ஆண்டில் கற்ற மாணவர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டால், உடனே வேறொரு மதரசாவில் ஏழாம் ஆண்டில் சேர்ந்து பட்டம் பெற்றுவிடுவார். நான்காம் வகுப்பிலிருந்து ஒரு மாணவனை வெளியேற்றிய கல்லூரியின் முதல்வர் அதே ஆண்டு வேறொரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்குச் செல்கிறார். அங்கு தம்மால் நீக்கப்பட்ட அதே நான்காமாண்டு மாணவனுக்குத் தம் கரத்தாலேயே பட்டம் வழங்கிவிட்டு வருகிறார். இடையிலுள்ள மூன்றாண்டு பாடங்களைக் கற்காமலேயே மௌலவிபட்டம் பெறுகின்ற அவலம் இங்கே அரங்கேறுகிறது.

அவ்வாறே, மாணவர்கள் சரியாக வகுப்புகளுக்குச் செல்வது, வருகைப் பதிவேட்டைக் கையாள்வது, ஒவ்வோர் ஆண்டிலும் முடிக்க வேண்டிய பாடங்களைச் சரியாக முடிப்பது, பகலில் படிக்கும் பாடத்தை இரவில் திரும்பப் பார்ப்பது, மாதாந்திரத் தேர்வுமுறை, தேர்வு நடத்தி வெற்றி - தோல்வியை நிர்ணயிப்பது, தொழுகை போன்ற வழிபாடு மற்றும் நபிவழி ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதற்கான பயிற்சி, இஸ்லாமியப் பரப்புரைக்கான பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி... போன்ற நடைமுறைகள் எல்லாம் விரல்விட்டு எண்ணும் சில மதரசாக்களில் மட்டுமே உள்ளன. பெரும்பாலான மதரசாக்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை.

அதாவது அதிகமான மதரசாக்களில் கட்டுப்பாடுகளோ விதிமுறைகளோ இல்லாமல் மாணவர்கள் சுதந்திரமாகச் சுற்ற முடிகிறது; விருப்பப்படி நாட்களைக் கழிக்க முடிகிறது; இம்மையும் கிடைக்காமல் மறுமை கிடைக்க வழியும் காணாமல் மனம்போன போக்கில் மாணவர்கள் வாழமுடிகிறது.

காரணம் என்ன...?

இத்தனை சலுகைகளும் சுதந்திரங்களும் இருந்தும்கூட மாணவர்களின் வருகை பாதியாக, சில இடங்களில் கால்வாசியாகக் குறையக் காரணம் என்ன? சில மதரசாக்களை மூட வேண்டிய அளவுக்கு மாணவர்களின் வருகை அடியோடு நின்றுபோகக் காரணம் என்ன?

சலுகைகளை வாரி இறைத்து, பாரம்பரியப் புகழை எடுத்துரைத்து ரமளான் மாத்தில் இஸ்லாமிய பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தும் மதரசாக்களால் மாணவர்களை ஈர்க்க முடியவில்லையே! காரணம் என்ன? ஒருவரை ஆசிரியராகவோ முதல்வராகவோ சில மதரசாக்களில் சேர்க்கும்போது, இத்தனை மாணவர்களை எங்கிருந்தாவது, எப்படியாவது அழைத்துக்கொண்டுவர வேண்டும் என மதரசா நிர்வாகம் நிபந்தனை விதிக்கும் அளவுக்கு மாணவர்கள் பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன?

காரணங்கள்

ஆலிம்களை உருவாக்கும் அரபி மதரசாக்களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோனதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அவற்றில் பிரதானமாகக் கூறப்படும் காரணம், ஆலிம்களின் பொருளாதார நிலைதான். மௌலவி ஆலிம்பட்டதாரிகளில் பெரும்பாலோர் பள்ளிவாசல்களில் இமாம்களாகப் பணியாற்றுபவர்களே. மற்றவர்கள் அரபிக் கல்லூரி பேராசிரியர்களாகவோ குர்ஆன் பாடசாலை ஆசிரியர்களாகவோ பணியாற்றுகிறார்கள்.

இமாம்கள் நிலை

சென்னை போன்ற பெருநகரங்களில் பணியாற்றும் இமாம்களின் பொருளாதார நிலை சற்று மேம்பட்டுள்ளது. இங்கு இமாம்களுக்கு வழங்கப்படும் ஊதியம் சராசரியாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரமாக உள்ளது. பத்தாயிரத்திற்குமேல் ஊதியம் பெறும் இமாம்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

பெரும்பாலும், பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக வீடு அல்லது தங்கும் அறை இமாம்களுக்கு வழங்கப்படுகிறது. பிள்ளைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு போன்ற கூடுதல் உதவிகளும் சில இடங்களில் வழங்கப்படுகின்றன. இரு சக்கர வாகனங்கள் இல்லாத இமாம்களை மாநகரங்களில் காண்பது அரிது. ஆனால், புறநகர்ப் பகுதிகளில் இமாம்களின் நிலை ஊக்கமளிப்பதாக இல்லை.

மற்ற நகரங்களில் இமாம்களின் சராசரி ஊதியம் ரூ. 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம்வரை இருக்கலாம். கிராமங்களிலோ ரூ. 1500 முதல் ரூ. 4 ஆயிரம்வரை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சாதாரணமாக ஒரு கடைநிலை ஊழியனுக்கு வழங்கப்படும் ஊதியம்கூட ஏழாண்டு காலம், அல்லது ஒன்பதாண்டு காலம் கல்வி கற்ற ஓர் ஆலிமுக்கு வழங்கப்படுவதில்லை.

இந்நிலையைக் கண்கூடாகக் கண்டுவரும் முஸ்லிம் பெற்றோர்களில் யார்தான் தம் பிள்ளைகளை ஆலிம்களாக்க முன்வருவார்கள் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். அன்றாடக் குடும்பச் செலவுகளுக்கே மூச்சுத் திணறும்போது, மருத்துவச் செலவு, மகப்பேறு, பிள்ளைகளின் படிப்பு, திருமணம் போன்ற பெரிய செலவுகளுக்கு அவர் என்ன செய்வார் என்றும் வினவுகிறார்கள்.

பள்ளிவாசல் நிர்வாகம்தான் இமாமின் வாழ்க்கையோடு விளையாடுகிறது என்றால், அரசாங்கத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! கடும் போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு உலமா நல வாரியம் உருவாக்கியது. இந்த வாரியத்தில் முறைப்படி பதிவு செய்து உறுப்பினராகும் ஆலிம்களுக்கு அரசு வழங்கும் நிதி உதவியைப் பாருங்கள்!

உறுப்பினராகச் சேர்ந்து அடையாள அட்டை பெற்ற தேதியில் இருந்து விபத்து காப்பீட்டு உதவியாக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம்வரை அரசு வழங்கும். இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 15 ஆயிரம், ‘ஈமச்சடங்கு உதவிஎன்ற பெயரில் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். கல்வி உதவித் தொகை ரூ. 1000 முதல் ரூ. 6 ஆயிரம்வரை, திருமண உதவித் தொகை ரூ. 2000 அளிக்கப்படும்.

உறுப்பினர் மூக்குக் கண்ணாடி வாங்க ரூ. 500, முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ. 500 வழங்கப்படும். இத்தொகை இப்போது ரூ. 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அநேகமாக எல்லா நிர்வாகிகளும் சொல்கின்ற சமாதானம் ஒன்று உண்டு. இமாம்களுக்குப் பள்ளிவாசல் நிர்வாகம் தருகின்ற சம்பளம் குறைவுதான்; மேல் வருமானம் (?) சம்பளத்தைவிட இரு மடங்கு இருக்கும். அது என்ன மேல் வருமானம்? மஹல்லாவில் நடக்கும் திருமணம், மய்யித், குழந்தைக்குப் பெயர்சூட்டல், வருட ஃபாத்திஹா போன்ற சடங்குகளின்போது ஜமாஅத்தார்கள் இமாமுக்குத் தரும் தட்சணையைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.
இதுதான் இமாம்களின் பணியா? இதற்காகத்தான் ஏழெட்டு ஆண்டுகள் மதரசாக்களில் அவர்கள் கல்வி கற்று வந்தார்களா? அப்படியே ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், சுமாரான ஓர் ஊரில் ஒரு மாதத்திற்கு எத்தனை கல்யாணம் நடக்கும்? அதைவிட, மஹல்லாவில் யாரும் இறந்துபோகமாட்டார்களா என்று இமாம் எதிர்பார்த்திருக்க வேண்டுமா? அது மஹல்லா மக்களுக்குத்தான் நல்லதா? சமுதாயம் எப்போதுதான் சிந்திக்கப்போகிறது? இந்நிலை மாறாத வரை ஆலிம்களின் உருவாக்கத்தில் ஏற்படும் தேக்கநிலை மாறுவது எளிதன்று.
இமாம்கள், தங்களின் ஊதிய உயர்வுக்காகப் போராட்டம் நடத்த முடியுமா? வேலை நிறுத்தம்தான் செய்ய முடியுமா? ‘இமாமத்பணியை விட்டுவிட்டுத் தொழில் துறையில்தான் ஈடுபடலாமா? அப்படி எல்லாரும் தொழிலில் ஈடுபட்டுவிட்டால், சரியான நேரத்திற்கு வந்து முறையாக தொழவைப்பதும் சிறுவர்களுக்கு குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுப்பதும் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துச்சொல்வதும் மஹல்லாவில் நடக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்க அடிப்படையில் தீர்வு சொல்வதும் இதையெல்லாம் முறையான கல்வித் தகுதியோடு மேற்கொள்வதும் யார்?

தொழுகை நேரத்திற்குப் பள்ளிவாசல் வருபவர்களில் ஒருவர் தொழவைக்க வேண்டியதுதானே என்று எதிர்வாதம் பேசியவர்கள்கூட, தாங்கள் புதிது புதிதாகக் கட்டும் பள்ளிவாசல்களுக்குச் சம்பளம் கொடுத்துத்தானே இமாம்களை நியமிக்கிறார்கள்? தொழுகைக்கு வருவோரில் தொழவைப்பதற்கான தகுதி உடையோர் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? அதற்காகவென ஒருவர் தமது இதர வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு பொறுப்போடு பணியாற்றினால்தானே குறித்த நேரத்தில் தொழுகை முறையாக நடக்கும்!

மக்தப் மதரசாக்களின் நசிவு

பொருளாதாரம் முதலாவது பிரதான காரணம் என்றால், ‘மக்தப்மதரசாக்களின் நசிவும் சீரழிவும் அடுத்த காரணம் எனலாம். அரபி மதரசாக்களுக்கு மாணவர்களை உருவாக்கும் இடமே மக்தப் மதரசாதான். அது செயலிழந்துபோனது ஆலிம்கள் உருவாக்கத்தில் தேக்க நிலையை உண்டாக்கிவிட்டது.

குர்ஆன் மதரசாக்கள் எனப்படும் மக்தப்கள், குர்ஆனைப் பார்த்து ஓதவும் மார்க்கத்தின் அடிப்படைச் சட்டங்களையும் கொள்கைகளையும் கற்றுக்கொள்ளவும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஆரம்பப் பாடசாலைகளாகும். முன்பெல்லாம், ஒவ்வொரு மஹல்லாவிலும் இப்பாடசாலைகள் பள்ளிவாசல் வளாகத்தில், அல்லது அருகில் மிக விமர்சையாக நடத்தப்பட்டுவந்தன





மக்தப் ஆசிரியர்கள் (உலமாக்கள்), அங்கு வரும் மாணவர்களில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டு, பெற்றோரிடம் கலந்துபேசி, பட்டப் படிப்பு படிப்பதற்காக தயார் செய்து அனுப்பிவைப்பார்கள்.
இப்போது பல ஊர்களில் மக்தப்களே நடப்பதில்லை; நடந்தாலும் உயிரோட்டமில்லை. பிள்ளைகளின் பள்ளிப் படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாமல் சிரமப்படுகிறோம் என்பது பெற்றோர்களின் புலம்பல். இதில் குர்ஆனைக் கற்கப் பிள்ளைகளை எப்படி அனுப்ப முடியும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.
இதனால், மார்க்கப் பற்றுமிக்க பெற்றோர்கள்கூட, வீட்டில் ஆசிரியரை வரவழைத்து பிள்ளைகளுக்கு குர்ஆனைக் கற்பிக்கும் நிலையில் உள்ளனர். இந்த நெருக்கடியில், அரபி மதரசாக்களுக்கான மாணவர்களைத் தயார் செய்வது எங்கனம்?

பாடத்திட்டமும் கட்டுப்பாடுகளும்
அரபிக் கல்லூரிகளில் இன்று நடைமுறையில் இருந்துவரும் பாடத்திட்டமும் கற்பிக்கும் முறையும் புதிய தலைமுறை மாணவர்களை வெறுப்படையச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அந்த அளவுக்குப் பழங்காலத்து நடைமுறையே பின்பற்றப்படுகிறது. அதைப் பற்றி எவ்வளவோ பேசியும் எழுதியும் மாற்றத்திற்கான அறிகுறி துளிகூடத் தென்படவில்லை.


அரபி மொழி, அரபி இலக்கணம், அரபி இலக்கியம், அரபி அகராதி முதலிய மொழிப் பாடங்கள் நடத்தியாக வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அரபிமொழி தெரிந்தால்தான் இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆனையும் ஹதீஸையும் நேரடியாக அறிந்துகொள்ள முடியும். மொழிபெயர்ப்புகளை மட்டும் வைத்து மூலாதாரங்களின் உள்ளார்ந்த பொருளை அதன் ஆழம்வரை சென்று அறிதல் இயலாது.

அதே நேரத்தில், மொழிப் பாடங்களைப் போதிக்கும் முறை சிக்கல் நிறைந்தது; இன்றைய மாணவர்களுக்கு முற்றிலும் அந்நியமானது. எனவே, இலக்கண இலக்கியத்தைக் கற்பிக்கும் முறையை எளிமைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அரபி இலக்கணத்தில் இன்ன கூற்றைத்தான் இந்த இடத்தில் நாம் படிக்கிறோம் என்பதைப் புரிவதற்கே மாணவனுக்கு இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்றால், எரிச்சல் வராமல் என்ன செய்யும்?

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், ஆண்பால், பெண்பால், உயர்தினை, அஃறினை, ஒருமை, (அரபியில்) இருமை, பன்மை, படர்க்கை, முன்னிலை, தன்னிலை, எழுவாய், பயனிலை, வேற்றுமைகள்... போன்ற இலக்கணக் கூறுகளைத் தாய்மொழியில் தெளிவாகச் சொல்லிக் கொடுத்துவிட்டு, அரபிமொழி வழக்கையும் கற்பித்தால் மாணவனுக்குப் புரியும்.

அதை விட்டுவிட்டு, இஸ்மு, ஃபிஅல், ஹர்ஃப், முதக்கர், முஅன்னஸ்... என்று அரபிப் பெயர்களுக்கு அரபிச் சொற்களையே பொருளாகச் சொல்லிக்கொண்டிருந்தால் மாணவன் எப்படி புரிவான். கிளிப்பிள்ளை பாடமாக இருக்குமே தவிர, புரிதல் என்பது இராது. பிற்காலத்தில், இதைத்தான் இப்படிச் சொன்னார்களோ என்று மாணவனாக அறிவதற்குள் காலம் ஓடிவிடும்.

இறைவேதமாம் குர்ஆனை விளக்கத்தோடு முழுமையாகக் கற்பிக்க வேண்டும். நபிமொழி தொகுப்புகளை -எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும்- ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிஉத் திர்மிதீ ஆகிய நூல்களையாவது முழுமையாகக் கற்பிக்க வேண்டும். குர்ஆனிலும் ஹதீஸிலும் புதைந்துள்ள அறிவியல், அரசியல், பொருளியல், சமூகவியல், உயிரியல், இயற்பியல், மருத்துவம், வானவியல் போன்ற கருத்துகளை ஆசிரியர் ஆங்காங்கே கோடிட்டுக் காட்ட வேண்டும். அப்போதுதான், மாணவன் மேற்கொண்டு ஆராய்ச்சி செய்யவும் தேடவும் வழி பிறக்கும்.

வெறுமனே, குர்ஆன் வசனங்களிலுள்ள இலக்கணக் கூறுகளையும், நபிமொழிகளிலுள்ள சட்டப் பிரச்சினைகளில் அறிஞர்களின் கருத்து வேறுபாடுகளையும் மட்டும் விலாவாரியாக விவாதிப்பதில் முழு நேரத்தையும் செலவிடுவதுதான் திறமையா? அல்லது அதுதான் நாம் வாழும் காலத்திற்குப் பிரதான தேவையா?
கொள்கை விளக்கப் பாடத்தில், மறைந்துவிட்ட முஅதஸிலாக்கள் பற்றி விவாதித்து, அவர்களுக்கப் பதிலடி கொடுத்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், இன்று நம்முடன் வாழும் ஷியா, போரா, அஹ்மதிய்யா, பாத்தினிய்யா, ஹதீஸ் மறுப்பாளர்கள் போன்ற வேறுபட்ட கூட்டத்தார் பற்றி வாய் திறப்பதில்லையே! பயன் என்ன?
இதற்கெல்லாம் மேலாக, வழக்கொழிந்துபோன கிரேக்கத் தத்துவத்தை இன்னும் கட்டி அழுவதால் யாருக்கு என்ன இலாபம்? அணுவைப் பிளக்க முடியுமா என்று வெறும் வாதப் பிரதிவாதம் செய்யும் கிரேக்கத் தத்துவத்திற்கு, அணுவை மனிதன் பிளந்துவிட்டான் என்ற செயல்பூர்வமான உண்மை எங்கே உறைக்கப்போகிறது? அடுத்து தர்க்கவியல் (லாஜிக்) பாடத்திற்கு இவ்வளவு ஆண்டுகள் ஒதுக்க வேண்டுமா?

இப்படி எழுதிக்கொண்டே போகலாம். கட்டுப்பாடுகள்என்ற பெயரில், மாணவர்கள் மாதம் ஒருமுறை மொட்டை போட வேண்டும்; தினசரி பத்திரிகைகள் படிக்கக் கூடாது; மாத, வார இதழ்கள் (இஸ்லாமிய இதழ்கள் உள்பட) வாசிக்கக் கூடாது என்பன போன்ற விதிமுறைகள் சில மதரசாக்களில் இன்னமும் நடைமுறையில் உள்ளன.
இதையெல்லாம்விடப் பெரிய கொடுமை ஒன்று உண்டு. அரபி மதரசா மாணவர்களை ஊரில் நடக்கும் மவ்லிது, ஃபாத்திஹா, ஸலாத்துந் நாரியா, (மிகக் குறைவாக) திருமணம் போன்ற சடங்குகளுக்கு அனுப்பிவைப்பதும், அங்கு பரிமாறப்படும் உணவு, தரப்படும் தட்சணை ஆகியவற்றைப் பெறுகின்ற பழக்கத்தை ஊட்டி வளர்ப்பதும் இருக்கிறதே, இது சீரணிக்க முடியாத அவமானமாகும்.
தன்மானத்தோடு வளர வேண்டிய இளங்குருத்தை முளையிலேயே ஒடித்துப்போடும் மட்டமான செயலல்லவா இது? இதைக் காணும் மானமுள்ள பெற்றோர் எவரும் தம் பிள்ளைகளை மதரசாவுக்கு அனுப்ப யோசிப்பார்களா? இல்லையா?
இதனால்தான், தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் வாழ்கின்ற ஆலிம்களைக்கூட காலுக்கும் அரைக்கும் அலைகின்ற அற்பர்கள் என்று சாமானியர்கூட எண்ணுகின்ற நிலை காணப்படுகிறது. இது தரமான ஆலிம்களை வெகுவாகப் புண்படுத்துகிறது.

தீர்வு என்ன?

காரணம் என்னவாக இருந்தாலும், அரபி மதரசாக்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதும் ஆலிம்கள் உருவாக்கத்தில் தேக்கம் ஏற்பட்டிருப்பதும் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. இந்தச் சரிவைத் தூக்கி நிறுத்தி, மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் தரமான ஆலிம்களை உருவாக்க முயல்வதும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாகும்.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன என்று யோசித்து யோசித்து உறக்கம் கெட்டதே ஒழிய, விளக்கம் கிடைக்கவில்லை.

இமாம்களின் ஊதியத்தைக் காலத்திற்கேற்ப உயர்த்துங்கள்! நீங்கள் ஒன்றும் உங்களது சொந்த பணத்தைத் தாரை வார்க்கவில்லை! வக்ஃப் சொத்திலிருந்தே சம்பளம் அளிக்கிறீர்கள்! அல்லது பொதுமக்கள் வழங்கும் நன்கொடையைத்தான் ஊதியமாக வழங்குகிறீர்கள் என்றெல்லாம் ஒன்றுக்குப் பலமுறை சொல்லியாகிவிட்டது. நிர்வாகிகள் காதில் விழுந்தபாடில்லை. அவர்கள் நிலையில் சிறு மாற்றம்கூட ஏற்படவில்லை.

பாரம்பரிய மதரசாக்களும் தங்கள் வழிமுறையை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. இதையடுத்து மார்க்கக் கல்வியும் உலகக் கல்வியும் சேர்த்து வழங்கும் ஐந்தாண்டு பாடத்திட்ட கல்லூரிகள் சில தோன்றியுள்ளன. அங்கெல்லாம் மாணவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. பெற்றோரிடம் இத்தகைய கல்லூரிகளுக்கு நல்ல வரவேற்பும் உண்டு.

ஆனால், இக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலோர் வேறு வேலைகளில் அமர்கின்றார்களே தவிர, மார்க்க சேவைக்கு வருவதில்லை. பி.பி.ஏ. பட்டமும் ஆலிம் பட்டமும் பெற்று வெளிவரும் ஒருவர், மேற்கொண்டு எம்.பி.ஏ. தேர்வு எழுதிவிட்டு ஏதேனும் நிறுவனத்தில் பணியில் சேர்கிறார்; இமாமத் பணிக்கோ மதரசா பணிக்கோ வருவதில்லை. இவர்களால் எதிர்பார்த்த பலன் தீனுக்குக் கிடைக்கவில்லை என்பதே அனுபவம் கூறும் பாடமாகும்.
இப்போது சொல்லுங்கள்! இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நீங்களும் சமுதாயத்தின் ஓர் உறுப்பு. உங்களுக்கும் இதில் உண்டு பொறுப்பு.



 மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி






வியாழன், 4 ஆகஸ்ட், 2011

தீர விசாரிப்பதே மெய்!




بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ.
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)


யாராவது ஒருவர் தரக் கூடியத் தகவலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு யாருடைய விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்றும் நன்றாக விசாரித்தே சிறந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் தவறினால் கைசேதப்படுவீர்கள் என்று 1400 வருடங்களுக்கு முன் உலக பொதுமறை திருமறைக் குர்ஆன் மனித சமுதாயத்தை நோக்கி எச்சரிக்கை விடுத்தது.
o அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆட்சி காலத்தில் ஓர் நாள்.]
நம்புவது போன்று பேசிக் கழுத்தறுப்பதும், பார்ப்பது கேட்பது போன்று செட்டப் செய்து நாடகமாடுவதும் சிலருக்கு கை வந்த கலை என்பதால் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று முன்னோர்கள் கூறினர்.
கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் போன்ற குற்றச் செயல்களை செய்து விட்டு கண்டுப் பிடிக்க முடியாத அளவுக்கு தடயங்களையும் அழித்து விட்டு மக்களோடு மக்களாக கலந்திடும் குற்றவாளிகளை போலீஸாரின் தடியாலும், துப்பாக்கியாலும் வெளிக் கொண்டு வர முடியாததை சிபிஐ, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரனைகள் மூலம் வெளிக்கொண்டு வந்து விடுவதைப் பார்க்கிறோம்.
முறையான விசாரனையை அமைத்து செயல்படுங்கள் என்பது அல்லாஹ்வின் வாக்கு என்பதால் அல்லாஹ்வின் வாக்கை எந்த சமுதாயத்தவர் பின் பற்றினாலும் அவர்கள் தங்களுடைய காரியத்தில் வெற்றி அடைவார்கள்.
இன்று நம்மில் பலர் யாராவது ஒருவர் (நம்பிக்கைகுரியவர் என்று கருதக் கூடியவர்) தரக் கூடியத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மிகவும் நெருக்கமானவர் விஷயத்தில் முறையான விசாரனையை மேற்கொள்ளாமல் அவசர முடிவை மேற்கொண்டு அவர்களை கவிழ்த்து விடுவதையும் அல்லது தாமே கவிழ்ந்து விடுவதையும் பார்க்கிறோம்.
மாமியாரைப் பற்றி...
o என் மீது உங்கள் தாயார் நெருப்பாய் எரிந்து விழுகிறார்கள் நான் இந்த வீட்டில் இருப்பது அறவே அவர்களுக்கு பிடிக்கவில்லை உங்கனைக் கண்டால் மட்டும் சாதுவாகி விடுகிறார்கள் என்று மனைவிக் கூறுவாள்.
o உண்மையில் அந்த தாயார் கோப சுபாவம் உள்ளவராக இருக்க மாட்டார் யார் மீதும் எரிந்து விழுவது அவரது இயல்பிலேயே இல்லாத ஒன்றாக இருக்கும். என் மீது நெருப்பாய் எரிகிறார் என்பதெல்லாம் தன் தாய் வீட்டில் போய் ஹாயாக உட்கார்ந்து கொள்வதற்காக அல்லது தனிக்குடித்தனம் செல்வதற்காக இட்டுக்கட்டிக் கூறுவது.
எரிந்து விழுவது என்பது சாந்த குணமுடைய தன் தாயாரிடத்தில் கடந்த காலங்களில் காணாத ஒன்றாக இருக்கிறதே! ஒரு வேளை தான் இல்லாத நேரத்தில் அவ்வாறு நடந்து கொள்கிறாரா ? என்று விசாரிக்க வேண்டியவர்களிடம் முறையாக விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ள மறுத்து மனைவி சொல்வதை அப்டியே நம்பி பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னை தந்தையிடமிருந்து சிலர் ஒதுங்கி விடுகின்றனர் அல்லது ஒதுக்கி விடுகின்றனர்.
நான் உலகில் அழகிய முறையில் உறவைப் பேணுவதற்கு மிகவும் தகுதியானவர் யார் என்று அண்ணல் அவர்களிடம் அவர்களின் தோழர் ஒருவர் கேட்டதற்கு தொடர்ந்து மூன்று முறை தாய் என்றும் நான்காவது முறை தந்தை என்றும் சிறப்பித்துக் கூறினார்கள். (புகாரி: 5971)
அண்ணல் நபி அவர்களின் அழகிய உபதேசத்தை பின்பற்றி ஒழுக வேண்டிய சமுதாயத்தவர்களே பின்பற்றாமல் அவசர முடிவை மேற்கொண்டு அல்லல் படுவதைப் பார்க்கிறோம். இதில் அவர்கள் உலகில் வெற்றி அடைந்து விட்டதாகக கருதினாலும் மறுமையில் அல்லாஹ்வின் முன் நிருத்தப்படுபவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர்.
''...எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் 31:14.)
மருமகளைப் பற்றி...
o உன் மனைவி சரியாக எங்கள் சொல் கேட்டு கேட்பதில்லை என்று ஆரம்பிப்பார்கள், அதற்கு மகன் படியவில்லை என்றால் நடைமுறையில் மாற்றம் தெரிகிறது என்பார்கள், அதற்கும் மகன் படியவில்லை என்றால் இல்லாததை இட்டுக்கட்டத் துணிவார்கள்.
o காலம் தான் கெட்டுக் கிடக்கிறதே என்று தனக்குத் தானே சப்பை கட்டிக் கொண்டு வேறு எதாவது ஒரு குணம் அவளிடம் ஏற்கனவே பிடிக்காதிருந்தால் அதற்காக தாய்,தந்தை கூறும் (இல்லாத) குற்றச்சாட்டை இன்னும் மிகைப்படுத்தி கழட்டி விட முனைகின்றனர்.
மேற்காணும் தாய்,தந்தையரைப் பற்றி மனைவி கூறும் குற்றச்சாட்டினால் பெற்றோர்- பிள்ளை உறவு முறியாது, ஆனால் மருமகள் மீது மாமியார் சுமத்தும் பாரதூரமான குற்றச்சாட்டினால் கணவன்- மனைவி உறவு முறிந்து விடும். அவசரப் பட்டு இந்த உறவை முறித்து விட்டால் மீண்டும் இந்த உறவு இணையாது.
இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானதுஇ நல்ல மனைவியே. என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 2911)
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறப்பித்துக் கூறிய சிறந்த பொக்கிஷத்தை அவசர முடிவை மேற்கொண்டு ரத்து செய்து விட முணைகின்றனர். தீர விசாரிக்காமல் சிறந்த பொக்கிஷத்தை இழந்துவிட்டால் ? எந்த பொக்கிஷத்தை இல்லாத குற்றச்சாட்டை சுமத்தி வெளியேற்றினார்களோ அந்த குற்றச்சாட்டுக்கு உரியவளாக இரண்டாவது மனைவி அமைந்து விட்டால் இவர் உலகில் நஷ்டவாளி ஆவதுடன் அப்பாவிப் பெண்ணுக்கு துரோகம் செய்தப் பாவத்திற்காக இவரும், அப்பெண் மீது அவதூறு சுமத்திய காரணத்திற்காக அவரது தாய்-தந்தையரும் மறுமையில் நஷ்டவாளியாவர்.
நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 24:23.) அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். (அல்குர்ஆன் 24: 24)
நண்பர்களுக்கு மத்தியில்...
o உன்னை விட எல்லா வகையிலும் அவன் குறைந்தவனாக இருந்தும் அவற்றை நீ பொருட் படுத்தாமல் அவனுடன் நெருங்கிப் பழகினாய் ஆனால் அவனோ சிறியப் பிரச்சனைக்காக உன்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக என்னிடமும் இன்னாரிடமும் கூறி இருக்கிறான், இன்னும் எத்தனைப் பேரிடம் கூறினானோ, கூறுவானோ தெரியாது? அப்பொழுதே சொன்னேன் நீ கேட்க மறுத்தாய் ? இப்பொழுதாவது புத்தி படித்துக் கொள் என்று கொளுத்தி விடுவான்.
o தன்னுடன் நெருங்கிப் பழகிய காலத்தில் அவனுடைய நல்லொழுக்கத்தின் மூலம் நல்லவன் என்று முடிவு செய்திருந்தும் அற்பக் காரியத்தினால் ஏற்பட்ட சின்னப் பிரச்சனையில் ஒரு கழிசடை வைத்த நெருப்புக்கு இறையாகி நல்ல நண்பனை இழந்து வேறோரு கழிசடையை நண்பனாக்கி கொண்டு கவிழ்ந்து விடுவதைப் பார்க்கிறோம்.
இரண்டு பேர் நன்றாகப் பழகுவது சிலருக்கு அதிகம் பிடிக்காது எப்பொழுது அவர்களுக்கு மத்தியில் பிரச்சனை எழும் என்று காத்திருப்பார்கள் எழவில்லை என்றால் எழுவதற்கு ஏற்பாடும் செய்வார்கள். முறையாக விசாரித்து முடிவெடுக்கத் தவறி உண்மையாளனை புறக்கனித்து பொய்யனுடன் கூட்டு சேர்ந்து அல்லாஹ்வின் வாக்குக்கு மாறு செய்து ஏராளமான இளைஞர்கள் வழி கெட்டு விடுகின்றனர்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்! (அல்குர்ஆன் 9:119).
தீர விசாரிப்பதே மெய்.
இவ்வாறு தீர விசாரிக்காமல் அவசர முடிவெடுத்து உற்ற துணைவர்களை, சிறந்த வழிகாட்டிகளை புறக்கணித்து விடுவது என்பது தாய் - பிள்ளைக்கு மத்தியில், கணவன் - மனைவிக்கு மத்தியில், சகோதரர்களுக்கு மத்தியில், நன்பர்களுக்கு மத்தியில், முதலாளி தொழிலாளிகளுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கு மத்தியில், என்று அடுக்கிக் கொண்டேப் போகலாம்.
தவறான தகவல்களைக் கூறுபவர்கள் பெரும்பாலும் சேடிஸ்டுகளாக அல்லது சுயநலவாதிகளாக, அல்லது பொறாமைக் காரர்களாக, அல்லது பச்சோந்திகளாக தருணம் பார்த்து காலை வாரிவிடும் பழி தீர்ப்பவர்களாகவே இருப்பர். இவர்களின் சதிவலையில் வீழ்ந்து அழிவது பெரும்பாலும் நல்லவர்கள், நடுநிலையாளர்கள் என்பது தான் வேதனை தரும் விஷயமாகும்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆட்சி காலத்தில் ஓர் நாள்
பனூமுஸ்தலக் கோத்திரத்தாரிடம் வலீத் பின் உக்பா என்பவரை ஜகாத் வசூலிக்க இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஜகாத் வசூலிக்க சென்ற வலீத் பின் உக்பா அவர்கள் திரும்பி வந்து பனூமுஸ்தலக் கோத்திரத்தார் ஜகாத் தர மறுத்து விட்டனர் என்றுக்கூறினார் இதைக்கேட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டு பனூமுஸ்தலக் கோத்திரத்தாருடன் யுத்தம் செய்து ஜகாத் வசூலிக்க பெரும் படையை ஏற்பாடு செய்தார்கள். ஆனால் படை புறப்படுவதற்கு முன் பனூமுஸ்தலக் கோத்திரத்தார்களே ஜகாத்தை வசூலித்து மதீனா வந்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
வலீத் பின் உக்பா விடம் ஜகாத் கொடுக்க மறுத்ததற்கு என்னக் காரணம் என்று அவர்களிடம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க? எங்களிடம் ஜகாத் கேட்டு யாரும் வரவில்லையே என்று பனூமுஸ்தலக் கோத்திரத்தார்கள் பதிலளிக்க இதைக்கேட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
வலீதுடைய பேச்சை நம்பி யுத்தம் செய்திருந்தால் அந்த அப்பாவி மக்களின் நிலமை என்னவாகி இருக்கும்? என்பதை நினைத்து வருந்துகிறார்கள். இந்த நேரத்தில் தான் உலகம் முடியும் காலம்வரை உலக மாந்தர் அனைவரும் பின்பற்றி ஒழுக வேண்டிய திருமறையின் 49:6 வசனம் இறங்குகிறது.
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)
(மேற்கண்ட வசனம் இறக்கப்பட்டதன் பின்னணியாக இச்சம்பவத்தையே எல்லா விரிவுரையாளர்களும் குறிப்பிடுகின்றனர். (ஆதாரம்: தப்ஸீர் இப்னுகஸீர்)
வலீதிற்காகவே இவ்வசனம் இறக்கப்பட்டதாக இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் கூறுகிறார்கள். (மின்ஹாஜுஸ் ஸுன்னதிந் நபவிய்யா)
படிப்பினைகள்
தாயாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும், நன்பனாக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தாலும் இரு நாடுகளுக்கு மத்தியில் உள்ள பிரச்சனையாக இருந்தாலும் (தகவல் தரக்கூடியவர் நம்பத் தகுந்தவராக இருந்தாலும்) அல்லாஹ் கூறியவிதம் முறையான விசாரனையை மேற்கொண்டு நீதி செலுத்த வேண்டும் என்ற நற்சிந்தனை எண்ணத்தில் உதயமாக வேண்டும்.எண்ணம் தான் செயலை தீர்மாணிக்கிறது என்பதால் ஏற்கனவே எதாவது ஒன்றில் பிடிக்காதக் காரணத்தை வைத்து இதில் கவிழ்த்து விடலாம் என்று எண்ணினால் இதன் அடிப்படையில் வெற்றியும் கிடைக்கும் ஆனால் மேற்கூறிய விதம் உலகில் அல்லது மறுமையில் கவிழ்வது உறுதி.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)
- அதிரை ஃபாரூக்



ஒரு பதிவரின் கேள்வி!




சின்னதொரு வலையினிலே
சிந்தனைகள் சேர்த்துவைத்தேன்
சில்லறையாகச் சில
தொடுப்புகளும் தேக்கிவைத்தேன்!

வலைப்பதிவர் வரம் வாங்கி
வக்கணையாய் வலம் வந்தேன்
வேலைநேரம் ஓய்ந்தபின்னர்
வலையினுள்ளே நான்கிடந்தேன்!

காகிதத்தின் முகத்தினிலே
கிறுக்கிவைத்த எண்ணங்களை
காலவோட்ட சுழற்சியிலே
தொலைத்துவிட்டு நின்றவன்...

கல்வெட்டின் தரத்தினிலே
தளம் கிடைக்கப் பதிந்துவைத்தேன்
வண்ணவண்ணப் பூக்களாலும்
வலைப்பூவை அலங்கரித்தேன்!

கவிதையில் கட்டுரையில்
கருத்துகளைச் சொல்லிவைத்தேன்
இலட்சியமும் இனியவையும்
இடுகைகளாய் இயம்பிநின்றேன்!

பின்னூட்ட அன்பர்களால்
புரத ஊட்டம் உண்டேன்
பத்திரிகைப் பரவசம்
ப்ளாக்குகளில் பெற்றேன்!

இணையவலம் இல்லையெனில்
இதயபலம் குறைந்துவிடும்
ஒற்றையென உலகத்திலே
ஒதுங்கியேதான் போவேன்.

இத்தனையும் இருந்தும்
எழுகிறதொரு கேள்வி
இணைய உலகே சொல்:
"நீயி நல்லவனா கெட்டவனா?"

கேள்வி கேட்ட பதிவரை
கேலியாகப் பார்த்து
இணய உலகு இயம்பியசொல்
இதயத்திலே தைத்தது!

"நாயனின் தீர்ப்பு நாளில்
நரகமுண்டு சொர்க்கமுண்டு
நானிலத்தின் காரியத்தில்
நல்லதுண்டு தீயதுண்டு,

நல்ல எண்ணம் கொண்டோர்
நன்மை கொள்வர்; தீமை கொல்வர்
வன்மை உள்ளம் கொண்டோர்
தீதைத் தானே தேர்ந்து கொள்வர்!

நன்மை-தீமை கலந்தியங்கும்
நானிலத்தில் நான்மட்டுமென்ன
விதிவிலக்கா? சொல்லு!
நான் நல்லவனா கெட்டவனா?

தெரியாத உன் வினாவுக்கென்
தெளிவான விடையுண்டு:
தெரியலையேப்பா, எனக்குத்
தெரியலையே!"

- சபீர்

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

உலகை மிரட்டிய அமெரிக்காவின் கடன் பிரச்சனை...!-ஏ.கே.கான்



உலகையே மீண்டும் பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடும் அபாயகரமான நிலையில் இருந்து கடைசி நேரத்தில் தப்பியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் கடன் அளவு எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்து நிர்ணயிக்க அந் நாட்டு நாடாளுமன்றம் கடந்த 1971ம் ஆண்டில் ஒரு விதியை வகுத்தது. அதன்படி, இந்தக் கடன் அளவு குறித்து நாடாளுமன்றத்தில் (US congress) அந் நாட்டு அரசு ஒப்புதல் பெற வேண்டும்.

இப்போது அமெரிக்காவின் கடன் சுமை 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இது அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் (GDP) 95 சதவீதமாகும்.) நாளை (ஆகஸ்ட் 2ம் தேதி, செவ்வாய்க்கிழமை) இந்த அளவை அமெரிக்கா தொட உள்ளது.

இதனால், இந்தக் கடன் அளவை உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா அரசு தள்ளப்பட்டது. ஆனால், பிரதிநிதிகள் சபை (House of representatives) எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

கடன் அளவை உயர்த்த குடியரசுக் கட்சி ஒப்புக் கொள்ளாததால், செனட் சபையில் ஒபாமா கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும், பிரதிநிதிகள் சபையில் அது தொடர்பான தீர்மானம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், அரசு தனது பொருளாதார ஊக்குவிப்பு செலவுகளைக் குறைக்க வேண்டும் என குடியரசுக் கட்சியினர் நிபந்தனை விதி்க்க, அதை ஏற்றால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், ஒபாமா அதை ஏற்க மறுக்க, அமெரிக்கா இன்னொரு மாபெரும் நிதிச் சிக்கலை நோக்கி சென்றது.

கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் தர முடியாது, ஓய்வூதியதாரர்களுக்கு பணம் தருவது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி இருக்காது, ராணுவ காண்ட்ராக்டர்களுக்கு பணம் தர முடியாது, அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இருக்க, முதலீட்டாளர்கள் தங்களது பணத்துக்கு அதிக வட்டி கோரினால், அவர்களைச் சமாளிக்க வீட்டுக் கடன், கார் கடன், பர்சனல் லோன் உள்ளிட்டவற்றுக்கு வட்டியை வங்கிகள் அதிகரிக்கும் அபாயமும் உருவானது.

அமெரிக்கா இப்படி சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்தால், அந் நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடுகள் கூட வாபஸ் ஆகி, முழுப் பொருளாதாரமும் மூழ்கும் நிலை உருவானது.

அமெரிக்காவுக்கு சளி பிடித்தால், உலகமே தும்மியாக வேண்டுமே.. இந்த நிதி நெருக்கடி உலகம் முழுவதும் எதிரொலித்து பெரும் பொருளாதார சிக்கல் உருவாகியிருக்கும்.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக சரியாக தூங்கக் கூட நேரமில்லாமல் எதிர்க் கட்சி, தனது கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் இரவு, பகலாக இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடத்தி வந்தார் ஒபாமா.

இன்று ஒருவழியாக இந்தத் தீர்மானத்தை ஆதரி்ப்பதாக குடியரசுக் கட்சி அறிவி்த்துவிட்டதால், ஒட்டு மொத்த அமெரிக்காவே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளது.

ஆமாம், அமெரிக்காவின் கடன் அளவு ஏன் இவ்வளவு ஆனது என்கிறீர்களா.. அதற்கு முக்கிய காரணங்கள், அந்த நாடு நடத்தி வரும் போர்கள் தான். ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களுக்காக செலவிடப்பட்ட தொகை 6.1 டிரில்லியன் டாலர். பராக் ஒபாமா இதுவரை போர் செலவுக்காக ஒதுக்கிய தொகை 2.4 டிரில்லியன் டாலர்!

இப்போது அமெரிக்காவின் கடன் அளவு மேலும் 2.5 டிரில்லியன் டாலர்கள் வரை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.