“தீமைகளை விட்டும் ஹிஜ்ரத் செய்வோம்!”
الـحَمْدُ للهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ۔
وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُـحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا۔
أَمَّا بَعْدُ: فَأَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ
وَمَن يُهَاجِرْ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةً
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! மேலும், ஒவ்வொரு ஆத்மாவும் நாளைக்காக (மறுமைக்காக) தான் என்ன தயாரித்து அனுப்பி இருக்கிறது என்பதைப் பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன்."ஸூரத்துல் ஹஷ்ர்: 18)
அல்லாஹ்வின் பேரருளால் நாம் ஒரு மகத்தான திருப்புமுனையான காலகட்டத்தில் அமர்ந்திருக்கிறோம். ஆம், அல்லாஹ்வின் கட்டளைப்படி நம் வாழ்நாளில் கடந்த 1447 ஹிஜ்ரி ஆண்டு முழுமையாக நிறைவடைந்து, இன்று நாம் ஒரு புதிய வழிகாட்டுதலோடு 1448-ம் ஹிஜ்ரி புத்தாண்டின் முதல் ஜும்ஆவில் காலடி எடுத்து வைத்திருக்கிறோம்.
காலம் என்பது ஓடிக் கொண்டே இருக்கும். நாட்காட்டியின் தாள்கள் கிழிந்து கொண்டே இருக்கும். ஆனால், ஒரு புதிய ஆண்டு பிறக்கும் போது ஒரு மூஃமின் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. இந்த நன்னாள் நமக்குக் காட்டும் வாழ்வியல் பாடம் என்ன? அன்று சஹாபாக்கள் செய்த தியாக 'ஹிஜ்ரத்' பயணத்திற்கும், இன்று நாம் வாழும் இந்த 1448-ம் ஆண்டிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது
ஹிஜ்ரி நாட்காட்டி உருவான வரலாறு
நபியவர்களின் காலத்திலோ அல்லது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்திலோ 'ஹிஜ்ரி' என்ற தனித்துவமான இஸ்லாமிய நாட்காட்டி நடைமுறையில் இருக்கவில்லை.
காரணம்: அரபுகள் வழக்கமாக அந்தந்த ஆண்டுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை வைத்தே ஆண்டுகளை அழைத்தனர். (உதாரணமாக: யானை ஆண்டு - ஆமுல் ஃபீல், துக்க ஆண்டு - ஆமுல் ஹுஸ்ன்).
அமீருல் மூமினீன் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில், ஈராக் மற்றும் பஸராவின் ஆளுநராக இருந்த அபூமூஸா அல்-அஷ்அரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு ரலி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்:
"அமீருல் மூமினீன் அவர்களே! உங்களிடமிருந்து எங்களுக்கு வரும் கடிதங்களில் 'ஷஃபான் மாதம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அது கடந்த வருடத்தின் ஷஃபானா அல்லது இந்த வருடத்தின் ஷஃபானா என்று எங்களால் கணிக்க முடியவில்லை. எனவே, நமக்கென ஒரு நாட்காட்டி தேவை." என்று கடிதம் எழுதினார்கள்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனடியாக சஹாபாக்களின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்கள்.
ஆலோசனைக் கூட்டத்தில் சஹாபாக்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்தார்கள்:
சிலர் நபியவர்களின் பிறந்த வருடத்தை (Milad) தொடக்கமாக வைக்கலாம் என்றனர்.
சிலர் நபியவர்களுக்கு நுபுவ்வத் (நபித்தனம்) கிடைத்த ஆண்டை வைக்கலாம் என்றனர்.
வேறு சிலர் நபியவர்களின் மறைந்த ஆண்டை வைக்கலாம் என்றனர்.
ஆனால், அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலோசனையை வழங்கினார்கள்:
"நபியவர்கள் மக்காவை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த ஆண்டையே நாம் தொடக்கமாக வைக்க வேண்டும். ஏனெனில், அதுதான் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே பெரிய பிரிவினையை (வெற்றியை) ஏற்படுத்திய திருப்புமுனை."
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த யோசனையை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், ஒட்டுமொத்த சஹாபாக்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
முஹர்ரம் மாதம் ஏன் முதல் மாதமாக வைக்கப்பட்டது?
ஹிஜ்ரத் பயணம் உண்மையில் நடைபெற்றது ரபியுல் அவ்வல் மாதத்தில்தான். அப்படியிருக்க, ஏன் முஹர்ரம் மாதத்தை ஆண்டின் முதல் மாதமாகத் தேர்ந்தெடுத்தார்கள்?
இதற்கும் ஒரு தார்மீகக் காரணம் இருந்தது. உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் அலி ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் முஹர்ரமைப் பரிந்துரைத்தனர்.
காரணம் அரபு மக்கள் துல்ஹஜ் மாதத்தில் ஹஜ் கடமைகளை முடித்துவிட்டு, தங்களின் அனைத்துப் பாவங்களிலிருந்தும் தூய்மையாகி, ஒரு புதிய வாழ்வைத் தொடங்கும் மாதமாக முஹர்ரம் இருந்தது.
மேலும், நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய வேண்டும் என்ற அதிகாரப்பூர்வமான முடிவும், அன்ஸாரிகளின் 'அகபா உடன்படிக்கையும்' துல்ஹஜ் மாத இறுதியில் முடிந்து, முஹர்ரம் மாதத்தில்தான் ஹிஜ்ரத்திற்கான ஆரம்பக்கட்ட தியாகப் பணிகள் தொடங்கின. எனவே, முஹர்ரம் முதல் மாதமாக அறிவிக்கப்பட்டது.
மக்காவை விட்டு நபியவர்கள் புறப்பட்ட அந்தப் பயணத்தில்
வரலாற்றுப் பயணத்தின் சில முக்கிய தியாகத் துளிகள்
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் படுக்கை தியாகம்: நபியவர்களைக் கொலை செய்ய காஃபிர்கள் வீட்டைச் சூழ்ந்திருந்த போது, மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் நபியவர்களின் படுக்கையில் படுத்துக்கொண்டார்கள் வாலிபர் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். (இன்றைய இளைஞர்களுக்கு இது ஒரு பெரிய பாடம்).
அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நட்பு
ஸவ்ர் குகையில் தங்கியிருந்த போது, நபியவர்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகக் குகையின் பொந்துகளைத் தன் ஆடைகளைக் கிழித்து அடைத்தார்கள். ஒரு பொந்தில் துணி பற்றாத போது தன் கட்டைவிரலை வைத்து அடைத்தார்கள். அப்போது பாம்பு கடித்தும், நபியவர்களின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக வழியைப் பொறுத்துக் கண்ணீர் வடித்தார்கள். அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தியாகத்தை நினைவு கூற வேண்டும்.
சுராகா பின் மாலிக் நிகழ்வு
நபியவர்களைப் பிடித்துக் கொடுத்தால் 100 ஒட்டகங்கள் பரிசு என்று அறிவிக்கப்பட்ட போது, அவர்களைத் துரத்தி வந்த சுராகா என்பவரின் குதிரை கால்கள் தரையில் புதைந்தன. பின்னாளில் அவர் இஸ்லாத்தை ஏற்றார்.
மதீனாவில் நிகழ்ந்த வரலாற்றுப் புரட்சி
ஹிஜ்ரத் ஏற்படுத்திய மிக முக்கியமான சமூக மாற்றம் "முஆகாத்" (சகோதரத்துவ ஒப்பந்தம்) ஆகும். சொந்த ஊர், சொத்து, பந்தங்களை இழந்து மதீனாவிற்கு அகதிகளாக வந்த முஹாஜிர்களை, மதீனாவின் அன்சாரிகள் கையேந்த விடவில்லை.
தங்களின் வீடுகளில் பாதியைத் தந்தார்கள்; நிலங்களில் பாதியைத் தந்தார்கள்; தங்களின் வியாபாரத்தில் சரிபாதியைத் தந்து "நாம் இருவரும் உடன்பிறவாச் சகோதரர்கள்" என்று கட்டி அணைத்துக் கொண்டார்கள். உலக வரலாற்றில் இப்படி ஒரு தியாகச் சமுதாயத்தை எந்த ஒரு நாடும் கண்டதில்லை.
மன்னர்களின் ஆடம்பர வாழ்வையோ, போர்களின் ரத்தக் கறைகளையோ அடிப்படையாகக் கொண்டு நம் நாட்காட்டி உருவாக்கப்படவில்லை; மாறாக, இறைவனுக்காகத் அனைத்தையும் அர்ப்பணித்த சஹாபாக்களின் வியர்வையினாலும், ரத்தத்தினாலும், கண்ணீரினாலும் எழுதப்பட்ட வரலாறுதான் இந்த ஹிஜ்ரி புத்தாண்டு! இந்த வரலாற்றை நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இந்த ஹிஜ்ரத்தின் வரலாற்றில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினை என்ன…!
நாம் செய்ய வேண்டிய "ஹிஜ்ரத்" எது?
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குச் சென்ற அந்தப் பயணம் வெறும் ஊர் மாற்றமோ அல்லது நில மாற்றமோ அல்ல. அது ஒரு சித்தாந்த மாற்றம்; ஒரு புதிய நேர்வழிப் பயணம்.
மக்கமாநகரம் வெற்றியடைந்து, இஸ்லாமிய அரசு நிலைபெற்ற பிறகு நபியவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உண்மையைச் சொன்னார்கள்:
"عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ، وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا رواه البخاري
"மக்கா வெற்றிக்குப் பிறகு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்வது என்பது இல்லை. ஆனால், நல்நோக்கமும் (ஜிஹாத்) நற்செயல்களுமே உள்ளன. மேலும், நீங்கள் போருக்குப் புறப்படுமாறு அழைக்கப்பட்டால், புறப்பட்டுச் செல்லுங்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி).
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ
"எவருடைய நாவு மற்றும் கையின் தீங்கிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களோ அவரே உண்மையான முஸ்லிமாவார். மேலும், அல்லாஹ் எதைத் தடுத்தானோ, அதை விட்டும் விலகிக் கொள்பவரே உண்மையான முஹாஜிர் (ஹிஜ்ரத் செய்தவர்) ஆவார்."(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு நூல்: புகாரி
அதாவது, அன்று சஹாபாக்கள் அல்லாஹ்வுக்காகத் தங்கள் வீடுகளையும், சொத்துக்களையும், ஊரையும் துறந்தார்கள். இன்று அல்லாஹ் நம்மை ஊரை விட்டுப் போகச் சொல்லவில்லை; மாறாக, நம்மிடம் இருக்கும் தீமைகளை விட்டு வெளியேறச் சொல்கிறான். இதுதான் "உளவியல் ரீதியான ஹிஜ்ரத்" (Spiritual Hijrah).
தொழுகையின் அலட்சியம் இன்றைய எதார்த்த நிலை (சுயபரிசோதனை)
இரவெல்லாம் ஸ்மார்ட்போனில் மூழ்கிக் கிடந்துவிட்டு, ஃபஜ்ர் பாங்கு சத்தம் கேட்கும் போது தூங்குவது என்ன நியாயம்? "தொழுகை தூக்கத்தை விடச் சிறந்தது" (அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்) என்று முஅத்தின் அழைக்கும் போது, நமக்குத் தூக்கம்தானே சிறந்ததாகத் தெரிகிறது?
அஸர் மற்றும் இஷா நேரப் பரபரப்பு: பகல் நேரத்தில் வியாபாரக் கல்லாவிலும், கடைகளிலும் மூழ்கி அஸரை விடுகிறோம். இரவு நேரத்தில் கடைகளை அடைப்பதிலும், கணக்கு பார்ப்பதிலும் இஷாவை விடுகிறோம்.
மாற்றத்திற்கான சிந்தனை: கடந்த 1447-ம் ஆண்டில் நாம் தவறவிட்ட தொழுகைகளுக்காக இந்த 1448-ன் துவக்கத்தில் நாம் கண்ணீர் சிந்தித் தவ்பா செய்ய வேண்டும். "நேரம் கிடைக்கும் போது தொழுவோம்" என்பது முனாஃபிக்கீன்களின் (நயவஞ்சகர்களின்) குணம். மூமின்களின் குணம், "தொழுகைக்காகவே தங்களின் நேரத்தை அமைத்துக் கொள்வது" ஆகும்.
தொழுகையை அலட்சியப்படுத்துபவர்களுக்குக் கேடுதான் விளையும் என்று அல்லாஹ் குர்ஆனில் மிகக் கடுமையான வார்த்தையைப் பயன்படுத்துகிறான்:
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
"தொழுகையாளிகளுக்குக் கேடுதான்! அவர்கள் எத்தகையோரென்றால், தம் தொழுகையில் பராமுகமாக (அலட்சியமாக) இருப்பவர்கள்."(அல்குர்ஆன்:107 4-5)
நாளை மறுமையில் முதன்முதலில் கேட்கப்படும் கேள்வி தொழுகையைப் பற்றித்தான்.
إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ العَبْدُ يَوْمَ القِيَامَةِ مِنْ عَمَلِهِ صَلَاتُهُ، فَإِنْ صَلُحَتْ فَقَدْ أَفْلَحَ وَأَنْجَحَ، وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் அடியானின் செயல்களில் முதன்முதலில் கணக்குக் கேட்கப்படுவது அவனுடைய தொழுகையைப் பற்றித்தான். அது சரியாக அமைந்துவிட்டால் அவன் வெற்றியடைந்துவிட்டான், ஈடேற்றம் பெற்றுவிட்டான். அது சீர்கெட்டுவிட்டால் அவன் தோல்வியடைந்து நஷ்டமடைந்துவிட்டான்."
(நூல்: திர்மிதி)
சயீத் இப்னுல் முஸய்யப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தியாகம்:
தாபியீன்களின் தலை சிறந்த அறிஞராக வாழ்ந்தவர் சயீத் இப்னுல் முஸய்யப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள். மதீனாவில் வாழ்ந்த இவரைப் பற்றி வரலாற்றில் ஒரு ஆச்சரியமான பதிவு இருக்கிறது.
مَا أَذَّنَ الْمُؤَذِّنُ مُنْذُ أَرْبَعِينَ سَنَةً إِلَّا وَأَنَا فِي الْمَسْجِدِ، وَمَا فَاتَتْنِي التَّكْبِيرَةُ الْأُولَى مُنْذُ أَرْبَعِينَ سَنَةً، وَمَا نَظَرْتُ فِي قَفَا رَجُلٍ فِي الصَّلَاةِ مُنْذُ أَرْبَعِينَ سَنَةً
"கடந்த 40 வருடங்களாக, முஅத்தின் பாங்கு சொல்வதற்கு முன்பாகவே நான் பள்ளிவாசலுக்குள் நுழையாமல் இருந்ததில்லை. கடந்த 40 வருடங்களாக ஜமாஅத் தொழுகையின் முதல் தக்பீரை (தக்பீரே தஹ்ரீமா) நான் தவறவிட்டதே இல்லை. அதேபோல், கடந்த 40 வருடங்களாகத் தொழுகையில் எனக்கு முன்னால் இருக்கும் மனிதரின் முதுகை (அதாவது இரண்டாம் ஸஃப்பை) நான் பார்த்ததே இல்லை (எப்போதும் முதல் ஸஃப்பிலேயே தொழுதேன்)."
ஆட்சி அதிகாரம் இல்லை, பெரிய வசதிகள் இல்லை. ஆனால், அல்லாஹ்வுடனான தொடர்பை அவர்கள் எப்படிப் பேணினார்கள்? 40 வருடங்கள் என்றால் தோராயமாக 14,600 நாட்கள்! ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல... இத்தனை ஆண்டுகாலம் ஒரு நபர் கூட முதல் ஸஃப்பைத் தவறவிடவில்லை என்றால், ஜமாஅத் தொழுகையின் மீது அவர்களுக்கு இருந்த காதல் எத்தகையது!
இன்று நம் நிலை என்ன? இமாம் ருகூவிற்குச் செல்லும் போது ஓடி வருகிறோம். அல்லது அத்தஹியாத் அமர்வில் வந்து இணைகிறோம். இன்னும் சிலரோ ஜமாஅத் முடிந்த பிறகு வந்து தனியாகத் தொழுகிறோம். இந்த அலட்சியத்தை விட்டும் நாம் 1448-ல் ஹிஜ்ரத் செய்ய வேண்டாமா?
'தாத்துர் ரிகாஃ' என்ற போரின் போது,
முஸ்லிம்கள் ஒரு பள்ளத்தாக்கில் தங்கியிருந்தனர். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இன்றிரவு நம்மைப் பாதுகாக்கும் காவல் பணிக்கு யார் தயாராக இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். உடனே அம்மார் பின் யாசிர் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் அப்பாத பின் பிஷ்ர் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இரு சஹாபாக்கள் முன்வந்தனர்.
இரவு நேரத்தில், அப்பாத் பின் பிஷ்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காவலில் நிற்க, அம்மார் பின் யாசிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தூங்கச் சென்றார்கள். அப்போது அமைதியான அந்த இரவில், தனியாகக் காவல் காத்துக் கொண்டிருந்த அப்பாத ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இந்த நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்று நினைத்துத் தொழுகையில் நின்றார்கள்.
அவர்கள் தொழுகையில் நின்று குர்ஆன் வசனங்களை ஓதிக் கொண்டிருந்த போது, முஸ்லிம்களைத் தேடி வந்த எதிரி ஒருவன், இருட்டில் நின்று கொண்டிருந்த அப்பாத ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கவனித்துவிட்டான். உடனே அவன் தன் வில்லிலிருந்து ஒரு அம்பை எய்தான். அந்த அம்பு அப்பாத ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உடம்பில் பலமாகப் பாய்ந்து, ரத்தம் கொட்டியது.
ஆனால், தொழுகையின் சுவையில் மூழ்கியிருந்த அந்த உத்தம சஹாபி தொழுகையை முறிக்கவில்லை! உடம்பில் பாய்ந்த அம்பை இடது கையால் பிடுங்கி எறிந்துவிட்டுத் தொடர்ந்து தொழுதார்கள்.
எதிரி இரண்டாவது அம்பை எய்தான்; அதுவும் உடம்பில் பாய்ந்தது, அதையும் பிடுங்கி எறிந்துவிட்டுத் தொழுதார்கள். மூன்றாவதாக ஒரு அம்பையும் எய்தான், அதையும் பிடுங்கி எறிந்துவிட்டு, தங்களின் ருகூஃ, ஸஜ்தாக்களைச் செய்து தொழுகையை முடித்தார்கள்.
அதன் பிறகு அருகில் தூங்கிக் கொண்டிருந்த அம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எழுப்பினார்கள். ரத்தம் வழியும் நிலையைக் கண்டு அம்மார் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதறிப்போய், "சுப்ஹானல்லாஹ்! முதல் அம்பு பாய்ந்த போதே என்னை எழுப்பியிருக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பாத பின் பிஷ்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியது
"சகோதரரே! நான் தொழுகையில் ஸூரத்துல் கஹ்ஃபை ஓதிக் கொண்டிருந்தேன். அதன் சுவையில் மூழ்கியிருந்த நான், அதை பாதியில் நிறுத்த விரும்பவில்லை. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் ஒப்படைத்த இந்தக் காவல் பணிக்குத் தொய்வு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் மட்டும் எனக்கு இல்லையென்றால், என் உயிர் பிரியும் வரை நான் அந்தத் தொழுகையை முறித்திருக்க மாட்டேன்!"(நூல்: அபூதாவூத்
மரணப் படுக்கையிலும் தொழுகையை விடாத உமர் (ரலி)
இஸ்லாமியப் பேரரசின் ஜனாதிபதியாக, அமீருல் மூமினீனாக இருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ஃபைய்ரூஸ் (அபூலுஃலுஆ) என்ற நயவஞ்சகனால் ஃபஜர் தொழுகையின் போது கத்தியால் குத்தப்பட்டு கடுமையான கத்திக் குத்துக் காயங்களுடன், ரத்தம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மயக்கமுற்றுக் கிடந்தார்கள். மரணம் நெருங்கிக் கொண்டிருந்த அந்த வினாடிகளில், சஹாபாக்கள் அவர்களை எழுப்பப் பல வழிகளில் முயன்றும் அவர்களால் மயக்கத்திலிருந்து மீள முடியவில்லை.
அப்போது ஒரு சஹாபி கூறினார: "அமீருல் மூமினீன் அவர்களே! தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது" என்று கூறினார்.
'தொழுகை' என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே, மரணப் படுக்கையில் மயங்கிக் கிடந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சட்டென்று கண்ணைத் திறந்தார்கள்! தன் காயங்களிலிருந்து ரத்தம் வழிய வழிய, எழுந்து உட்கார்ந்து அவர்கள் சொன்ன வார்த்தை இஸ்லாமிய வரலாற்றின் மிக முக்கியமான பிரகடனம்:
نَعَمْ، وَلَا حَظَّ فِي الْإِسْلَامِ لِمَنْ تَرَك الصَّلَاةَ
"ஆம்! (தொழுகையை விடுவதா?) தொழுகையை எவன் விடுகிறானோ, அவனுக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்கும் இல்லை!" என்று கூறிவிட்டு, அந்த மரணப் போராட்டத்திலும் அவர்கள் தொழுதார்கள்.நூல்: முவத்தா இமாம் மாலிக்)
போர்க்களத்தில் உடம்பில் அம்புகள் பாய்ந்து ரத்தம் சொட்டச் சொட்ட சஹாபாக்கள் தொழுதிருக்கிறார்கள். மரணப் படுக்கையில், குடல் சரிந்து ரத்தம் கொட்டும் நிலையிலும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுதிருக்கிறார்கள்.
ஆனால் இன்று நமக்கோ கை கால்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன. ஏசி (AC) வசதியுடன் பள்ளிவாசல்கள் இருக்கின்றன. எந்தப் போரோ, அச்சுறுத்தலோ இல்லை. அப்படி இருந்தும், நம்மிடம் இருக்கும் ஒரே சோம்பேறித்தனம் என்ற நோய்க்காக ஃபஜ்ரையும், அஸரையும் நாம் தியாகம் செய்து கொண்டிருக்கிறோம்.
"அன்பான பெரியோர்களே, வாலிப நெஞ்சங்களே! இந்த 1448-ம் ஹிஜ்ரி ஆண்டின் முதல் ஜும்ஆவில் நாம் ஒரு பலமான சபதம் எடுப்போம். நம்முடைய கால்கள் தியேட்டர்களுக்கும், விளையாட்டு மைதானங்களுக்கும், டீக்கடைகளுக்கும் வேகமாக நடக்கின்றனவே... நம்மைப் படைத்த ரப்பைக் வணங்க, அவனது இல்லமாகிய பள்ளிவாசலுக்கு ஏன் வர மறுக்கின்றன?
இந்த நொடியில் இருந்து நாம் 'அலட்சியப் போக்கை' விட்டும் ஹிஜ்ரத் செய்வோம். இனி நம் மரணம் வரை ஐந்து நேரத் தொழுகையையும் ஜமாஅத்தோடு பள்ளிவாசலில் தொழுவோம் என்ற உறுதியான நிய்யத்தை உள்ளத்தில் வைப்போம். அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து, ஜமாஅத் தொழுகையைப் பேணக்கூடிய நல்லடியாராக நம்மை ஏற்றுக்கொள்வானாக!
நாவுகளின் தீமைகள் இன்றைய எதார்த்த நிலை
டீக்கடை மற்றும் திண்ணைப் பேச்சுக்கள்: தொழுகை முடிந்து வெளியில் வந்தவுடனேயே, டீக்கடைகளிலும், ஊர் முக்குகளிலும் அமர்ந்து கொண்டு அடுத்த குடும்பத்தைப் பற்றி, அடுத்த ஊர்க்காரரைப் பற்றிப் புறம் (கீபத்) பேசுவது நம்மில் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது.
டிஜிட்டல் தீமைகள் (வாட்ஸ்அப், பேஸ்புக்): அன்று புறம் பேசுவது என்பது நேரில் மட்டுமே இருந்தது. இன்று நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் மூலம் அது 'டிஜிட்டல் புறமாக' மாறிவிட்டது. வாட்ஸ்அப் குரூப்களில் அடுத்தவர்களைக் கேலி செய்வது, முகநூலில் (Facebook) ஒருவரைப் பற்றி ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவது, கமெண்ட்களில் கெட்ட வார்த்தைகளால் சண்டை போடுவது என நம் பாவக் கணக்கை நாமே மொபைல் மூலம் அதிகமாக்குகிறோம்.
மாற்றத்திற்கான சிந்தனை: கடந்த 1447-ம் ஆண்டில் நம் விரல்களாலும், நாவினாலும் செய்த பாவங்களுக்கு இந்த 1448-ன் துவக்கத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேவையற்ற விவாதங்களை விட்டும், சண்டைகளை விட்டும் நம் நாவையும் விரல்களையும் மௌனத்தை நோக்கி ஹிஜ்ரத் செய்ய வைக்க வேண்டும்.
நாவைக் காப்பது குறித்த திருக்குர்ஆன் எச்சரிக்கை
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கண்காணித்து எழுதிக் கொண்டிருக்கும் வானவர்களைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கிறான்:
مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
"மனிதன் எந்த ஒரு வார்த்தையைப் பேசினாலும், அதனை எழுதுவதற்குக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு வானவர் அவனிடம் தயாராக இல்லாமல் இருப்பதில்லை."(ஸூரத்துல் காஃப்: 18)
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الجَنَّةَ» (رواه البخار
ஸஹ்ல் பின் ஸஃத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "யார் எனக்குத் தனது இரு தாடைகளுக்கு இடைப்பட்டதற்கும், தனது இரு கால்களுக்கு இடைப்பட்டதற்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்கு நான் சுவனத்திற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரி
அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் செயல்
ஒருமுறை அஸ்லம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ற தாபியீ, அவர்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறைக்குள் நுழைந்தார்கள். அப்போது ஒரு ஆச்சரியமான, பயங்கரமான காட்சியைக் கண்டார். அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் கைகளால் தன் நாவை (நாக்கை) வெளியே இழுத்து, அதைத் தன் கைகளாலேயே அடித்துக் கொண்டிருந்தார்கள்!
அதிர்ச்சியடைந்த அஸ்லம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், "அல்லாஹ்வின் தூதரின் தோழரே! என்ன செய்கிறீர்கள்? உங்களை நீங்களே ஏன் வருத்திக் கொள்கிறீர்கள்? நிறுத்துங்கள்!" என்று பதறினார்கள்.
அதற்கு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்ணீர் மல்கக் கூறினார்கள்: "அஸ்லமே! இந்த நாக்குதான் என்னை அழிவின் பாதைகளுக்கு இட்டுச் செல்கிறது. நபியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன், 'மனித உடம்பில் உள்ள உறுப்புகளில் நாவைத் தவிர மற்ற அனைத்தும் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நாவைப் பற்றிப் புகார் செய்யும் (நாக்கினால் தனக்கு வந்த சோதனைகளைச் சொல்லும்)' எனவேதான் இந்த நாக்கை நான் தண்டிக்கிறேன்."
சுவனவாசி என்று சான்றிதழ் பெற்ற உத்தம நபித்தோழரே தன் நாவைப் பற்றி இவ்வளவு பயந்து, அதை இழுத்துத் தண்டித்தார் என்றால்... காலையும் மாலையும் புறமும், பொய்யும், அவதூறும் பேசிக் கொண்டிருக்கும் நம் நாவுகளின் நிலை என்ன? நாம் மறுமையில் என்ன பதில் சொல்லப் போகிறோம்? இந்த 1448-ம் ஹிஜ்ரி ஆண்டிலாவது இந்த நாக்கைக் கட்டிப்போட நாம் பழக வேண்டாமா?
பெரும்பாலான தவறுகள் அவனது நாவில்தான் இருக்கின்றன.
ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஃபா மலையின் மீது நின்று, தல்பியா (லப்பைக்கல்லாஹும்ம லப்பைக்...) சொல்லிக் கொண்டிருந்தார்கள். திடீரென அவர்கள் தங்களின் நாவை நோக்கிப் பேசத் தொடங்கினார்கள்:
"நாக்கே! நீ நல்லவற்றைப் பேசு, நீ லாபமடைவாய்! தீயவற்றைப் பேசுவதிலிருந்து மௌனமாக இரு, நீ பாதுகாப்படைவாய்! உன்னால் பிற்காலத்தில் கவலைப்படுவதற்கோ அல்லது வெட்கப்படுவதற்கோ முன்னால் நீயே அடங்கிக் கொள்!"
அங்கிருந்தவர்கள், "இப்னு மஸ்ஊத் அவர்களே! இது நீங்களாகச் சொல்லும் வார்த்தையா அல்லது நபியவர்களிடம் கேட்டதா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். அதற்கு அவர்கள் கூறினார்கள்:
"இல்லை, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்ல நான் நேரடியாகக் கேட்டுள்ளேன்: 'ஆதமுடைய மகனின் (மனிதனின்) பெரும்பாலான தவறுகள் அவனது நாவில்தான் இருக்கின்றன.' அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்! பூமியின் மீது மிக நீண்ட காலத்திற்குச் சிறை வைக்கப்படுவதற்குத் தகுதியானது ஒன்று உண்டு என்றால், அது எனது இந்த நாக்கு மட்டும்தான்!" நூல் :அல்-முஃஜமுல் கபீர் (தபரானி)
முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு…
مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قُلْتُ يَا رَسُولَ اللَّهِ... وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ فَقَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ، وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ أَوْ عَلَى مَنَاخِرِهِمْ إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟
முஆத் பின் ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நாம் பேசும் வார்த்தைகளுக்காகவுமா நாம் தண்டிக்கப்படுவோம்?" என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், "முஆதே! உன்னைப் பெற்ற தாய் உன்னை இழக்கட்டும்! மனிதர்களை அவர்களின் முகங்குப்புற நரக நெருப்பில் தள்ளுவது, அவர்களின் நாவுகள் அறுவடை செய்த (தீய) வார்த்தைகளைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?" என்று கூறினார்கள்.நூல்: திர்மிதி
ஒரு வார்த்தையை வெளியிடும் முன், "இதனால் எனக்கு நன்மையா? தீமையா?" என்று ஒரு நொடி யோசிக்க வேண்டும். தீமை என்றால் மௌனமாகி விட வேண்டும்.
ஊர் விவாதங்கள், அரசியல் சண்டைகள் நடக்கும் போது, நமக்குத் தெரியாத விஷயங்களில் தலையிடாமல் "அல்லாஹ் அறிவான்" என்று விலகி விட வேண்டும்.
அடுத்தவர்களைப் பற்றிப் புறம் பேசப்படும் வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் (Left ஆக வேண்டும்). தீமையான பதிவுகளுக்கு 'லைக்' போடுவதையோ, 'ஷேர்' செய்வதையோ நிறுத்த வேண்டும்.
கடந்த ஆண்டில் நம் நாவால் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், இன்றே அவரிடம் போய் மன்னிப்புக் கேட்போம். இனி என் நாவிலிருந்து வீண் வார்த்தைகளோ, புறமோ, அவதூறுகளோ வராது; மாறாக, அல்லாஹ்வை நினைவுகூரும் திக்ருகளும், குர்ஆன் ஓதுதலும், பிறருக்குப் பயனுள்ள நல்வார்த்தைகளுமே வெளிவரும் என்று இந்த ஜும்ஆவில் சபதம் ஏற்போம்.
அல்லாஹ் நம் நாவுகளையும், உறுப்புகளையும் தீமைகளிலிருந்து பாதுகாத்து, ஈடேற்றம் பெற்ற நல்லடியாராக நம்மை ஏற்றுக்கொள்வானாக!
ஹராம் ஆன பொருட்கள் தவிர்ப்போம்
வியாபாரப் பொய்களும் ஏமாற்றுகளும்: "இது அசல் அஹ்மதாபாத் துணி", "நான் வாங்கின விலையே இவ்வளவுதான்" என்று வியாபார லாபத்திற்காகப் பொய் சத்தியம் செய்வது, பொருட்களின் குறைகளை மறைத்து விற்பது, அளவை எடைகளில் மோசடி செய்வது போன்ற நிலைகள் நம்மிடம் இருக்கிறதா?
அவசரத் தேவை என்ற பெயரில் வட்டிக்கு வாங்குவது, அல்லது "வியாபார முன்னேற்றம்" என்ற பெயரில் வட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது, அரசு மற்றும் தனியார் வேலைகளில் காரியம் சாதிப்பதற்காக லஞ்சம் கொடுப்பது/வாங்குவது போன்ற தீமைகள் கடந்த 1447-ல் நம்மிடம் இருந்ததா?
வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, கஞ்சி குடித்தாலும் கௌரவமாக வாழ வேண்டும். அல்லாஹ்விடம் பரகத் (அருள்வளம்) இருப்பது ஹலாலில்தான். எனவே, இந்த 1448-ம் ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தில் அனைத்து விதமான ஹராமான வருமான வழிகளையும் அறுத்தெறிந்துவிட்டு, தூய்மையான ஹலால் வாழ்வை நோக்கி ஹிஜ்ரத் செய்ய வேண்டும்.
திருக்குர்ஆன் எச்சரிக்கை (அளவையில் மோசடி செய்வோர்):
வியாபாரத்தில் ஏமாற்றுவோருக்கு அல்லாஹ் நரகத்தின் "வைல்" என்ற ஓடையை எச்சரிக்கிறான்:
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
"அளவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு அளந்தோ அல்லது தூக்கியோ கொடுக்கும் போது குறைத்து விடுகிறார்கள்."(ஸூரத்துல் முதஃப்பிஃபீன்: 1-3)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்: "அவன் நீண்ட தூரம் பயணம் செய்கிறான். அவனது தலைமுடி கலைந்து, உடலெல்லாம் தூசியாக இருக்கிறது. அவன் வானத்தை நோக்கித் தன் கைகளை ஏந்தி, 'என் ரப்பே! என் ரப்பே!' என்று துஆச் செய்கிறான். ஆனால், அவன் உண்ணும் உணவு ஹராம், அவன் பருகும் பானம் ஹராம், அவன் உடுத்தும் உடை ஹராம், அவன் ஹராமிலேயே வளர்க்கப்பட்டிருக்கிறான். அவனுடைய துஆ எவ்வாறு அங்கீகரிக்கப்படும்?"(நூல்: முஸ்லிம் - 1015)
நீதிநெறி வழுவாமல் வாழ்ந்த கலீஃபா உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்)
அவர் இஸ்லாமியப் பேரரசின் ஜனாதிபதியாக இருந்த நேரம். ஒருமுறை பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக அரசுப் பொது நிதியிலிருந்து (பைத்துல் மால்) முஆஃபிரீ என்ற நறுமணக் கஸ்தூரி கொண்டு வரப்பட்டு எடை போடப்பட்டது.
அப்போது அங்கே நின்றிருந்த கலீஃபாவின் சிறிய மகள், எதேச்சையாக அதிலிருந்து ஒரு சிறிய துண்டு கஸ்தூரியை எடுத்துத் நுகர்ந்து பார்த்தாள் இதைப் பார்த்த உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பதறிப்போனார்கள்.
உடனே தன் மகளின் அருகே சென்று,, அந்த நறுமணப் பொருளைத் தன் விரலால் வெளியில் எடுத்தார்கள், மிகவும் கவலையோடு கூறினார்கள்:
"மகளே! இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கும் சொந்தமான பொதுச் சொத்து. இதிலிருந்து ஒரு சிறு நறுமணத்தை நீ நுகர்வதைக் கூட உன்னுடைய தந்தை மறுமையில் தாங்கிக் கொள்ள மாட்டான். என் சமுதாயத்தின் சொத்தில் ஒரு அணுவளவும் என் குடும்பத்திற்குள் ஹராமாக நுழைவதை நான் அனுமதிக்க மாட்டேன்."
பொதுச் சொத்தில் இருந்த ஒரு சிறிய வாசனை திரவியத்தைக் கூடத் தன் மகள் பயன்படுத்துவதை ஹராம் என்று பயந்தார்கள் அந்த நல்லாட்சியாளர். இன்று நம் நிலை என்ன?
அடுத்தவன் நிலத்தை அபகரிப்பது, வியாபாரத்தில் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது, வட்டிப் பணத்தில் சொகுசு கார் வாங்குவது எனப் பணத்தைச் சேர்த்துவிட்டு, அந்த ஹராமான பணத்தில் நம் பிள்ளைகளுக்குப் பிரியாணி வாங்கிக் கொடுக்கிறோம். அந்த ஹராமான தசையில் வளரும் நம் பிள்ளைகள் நாளை நமக்கு எப்படி கட்டுப்படுவார்கள்? நம் துஆக்கள் எப்படி கபூலாகும்?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரக்குழந்தையான ஹஸன் பின் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறு குழந்தையாக இருந்த போது, ஒருமுறை பொதுமக்களின் தர்மப் பொருட்கள் (ஸதகா பேரீச்சம்பழங்கள்) குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
விளையாட்டின் போக்கில், அறியாத பருவத்தில் இருந்த சிறுவன் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்துத் தன் வாய்க்குள் போட்டுக் கொண்டார்கள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உடனடியாக ஓடிவந்து, அக்குழந்தையின் வாயைத் திறந்து, தங்களின் விரலால் அந்தப் பேரீச்சம்பழத்தை வெளியில் எடுத்தார்கள். மேலும் அக்குழந்தையை நோக்கி:
كِخْ كِخْ، أَمَا عَلِمْتَ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ؟
"(அதைத் துப்பிவிடு). நிச்சயமாக நாம் (நபியின் குடும்பத்தினர்) தர்மப் பொருட்களை (ஸதகாவை) உண்ண மாட்டோம் என்பது உனக்குத் தெரியாதா?" என்று கண்டித்தார்கள்.
(குறிப்பு: நபியவர்களின் குடும்பத்திற்கு ஸதகாப் பொருட்கள் ஹராம் ஆகும். ஒரு சிறு குழந்தை, அதுவும் அறியாப் பருவத்தில் சாப்பிடுவதை மார்க்கம் குற்றமாக்கவில்லை என்றாலும், சிறு வயதிலிருந்தே ஹராமான/அனுமதிக்கப்படாத பொருட்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னதப் பாடத்தை நபியவர்கள் தன் செய்கை மூலம் காட்டினார்கள்).நூல்:ஸஹீஹுல் புகாரி
மாபெரும் ஆன்மீக அறிஞரான ஷாஹ் இப்னு ஷுஜாஃ அல்-கிர்மானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர் தன் இல்லத்தில் உள்ளவர்கள் மற்றும் தன் குழந்தைகளுக்கு அணுவளவும் ஹராமான உணவு சென்றுவிடக் கூடாது என்பதில் மிகக் கடுமையான ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார்கள்.
ஒருமுறை அவரது குழந்தை தொட்டிலில் அழுது கொண்டிருந்த போது, அண்டை வீட்டுப் பெண்மணி ஒருவர் இரக்கப்பட்டு, அக்குழந்தைக்குத் தன் முலைப்பாலை ஊட்டினார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய தந்தை கிர்மானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், தன் குழந்தை அண்டை வீட்டுப் பெண்ணிடம் பால் குடித்த விபரத்தை அறிந்தார்கள்.
உடனடியாக அந்தப் பெண்ணின் பின்னணியைப் பற்றி விசாரித்த போது, அந்தப் பெண்ணின் கணவர் அரசாங்கத்தில் ஒரு தவறான (லஞ்சம் அல்லது அநியாயமான வரி வசூலிக்கும்) பதவியில் இருப்பதும், அவர்களது வீட்டு வருமானம் தூய்மையற்றதாக இருப்பதும் தெரியவந்தது.
கடுமையான அதிர்ச்சியடைந்த அந்தத் தந்தை, உடனடியாகக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய், அக்குழந்தையின் வாயில் விரலை வைத்து, அது குடித்த பால் முழுவதும் வெளியாகும் வரை வாந்தியெடுக்கச் செய்தார்.
அங்கிருந்தவர்கள், "அவர்தான் அறியாமல் குடித்துவிட்டாரே, ஒரு சிறு குழந்தைக்கு ஏன் இந்த வேதனை?" என்று கேட்டதற்கு அவர் சொன்னார்:
"இந்தக் குழந்தையின் உடலில் ஹராமான பாலின் மூலம் ஒரு சொட்டு ரத்தம் உருவானாலும், அது பிற்காலத்தில் இவனை இபாதத்துகள் (வணக்க வழிபாடுகள்) செய்வதிலிருந்து தடுத்துவிடும்; இவனது நற்குணங்களை அழித்துவிடும். என் பிள்ளை தூய்மையான ஹலாலான சதையோடுதான் வளர வேண்டும்!"
இன்று நம் பிள்ளைகள் தொழுகைக்கு வர மறுப்பதற்கும், பெற்றோர்களை எதிர்த்துப் பேசுவதற்கும், தவறான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதற்கும் மிக முக்கியக் காரணம் — நாம் அவர்களுக்கு ஊட்டும் ஹராமான வருமானத்தின் உணவுதான் என்பதை இந்தச் சமுதாயம் விளங்க வேண்டும்.
நூல் : இமாம் அபூ நுஜைம் அல்-அஸ்பஹானீ அவர்களின் ஹில்யத்துல் அவ்லியா வ தபகாதுல் அஸ்ஃபியா.
இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் புகழ்பெற்ற 'இஹ்யா உலூமித்தீன்' (إحياء علوم الدين) என்ற நூலில், முற்கால நல்லோர்கள் தங்களின் பொருளாதாரத்தைத் தூய்மையாகப் பேணுவதற்காகக் கையாண்ட வழிமுறைகளைப் பற்றி எழுதும்போது இந்த வழக்கத்தைக் குறிப்பிடுகிறார்கள்.
அக்காலத்தில் வாழ்ந்த தக்வா (இறையச்சம்) நிறைந்த பெண்கள், தங்கள் கணவர்மார்கள் வீட்டை விட்டுப் புறப்படும்போது ஏதோ சாதாரணமாக வாழ்த்தி அனுப்பவில்லை. மாறாக, மார்க்கத்தின் எல்லையைத் தாண்டிவிடக் கூடாது என்ற மாபெரும் தார்மீகப் பொறுப்பை அவர்களின் தோள்களில் ஏற்றி அனுப்பினார்கள்.
அவர்கள் கணவரின் ஆடையைப் பிடித்து நிறுத்தி, அரபியில் இவ்வாறு கூறுவார்கள்:
«إِيَّاكَ وَكَسْبَ الحَرَامِ، فَإِنَّا نَصْبِرُ عَلَى الجُوعِ وَالضُّرِّ، وَلَا نَصْبِرُ عَلَى النَّارِ»
"ஹராமான வருமானத்தை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன்! நிச்சயமாக எங்களால் பசியையும் வறுமையையும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் எங்களால் நரக நெருப்பை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது!”
இன்று பல வீடுகளில் ஆண்கள் லஞ்சம் வாங்குவதற்கும், வட்டிக்கு வாங்குவதற்கும், ஏமாற்றிச் சம்பாதிப்பதற்கும் அவர்களின் குடும்பச் சூழலே காரணமாக அமைந்துவிடுகிறது. "பக்கத்து வீட்டுக்காரர் பெரிய கார் வாங்கிவிட்டார்", "அவர்கள் இத்தனை சவரன் நகை வைத்துள்ளார்கள்", "நமக்கும் அது வேண்டும்" என்று பெண்கள் கொடுக்கும் தொடர் அழுத்தத்தால், கணவன்மார்கள் வேறு வழியின்றித் தவறான பொருளாதார வழிகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.
ஆனால், அன்று வாழ்ந்த தக்வா நிறைந்த பெண்கள் உலக ஆடம்பரத்தை விடத் தன் கணவனின் மறுமை வாழ்வையே பெரிதாகக் கருதினார்கள்.
ஹராமானதை தவிர்க்க…
அல்லாஹ் எனக்கு எழுதிய ரிஸ்க் (உணவு) என்னை வந்தடையாமல் நான் மரணிக்க மாட்டேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வியாபாரத்திலோ அல்லது முதலீட்டிலோ சந்தேகம் இருந்தால் (இது வட்டியோ, ஏமாற்றோ என்ற சந்தேகம் வந்தால்), நபியவர்களின் அறிவுரைப்படி அதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
வியாபாரத்தில் அறியாமல் ஏற்படும் தவறுகளுக்குப் பரிகாரமாக, நம் ஹலாலான வருமானத்திலிருந்து ஏழை எளியவர்களுக்கு அதிகமாகத் தர்மம் (ஸதகா) செய்ய வேண்டும்.
ஹராமான முறையில் கோடீஸ்வரனாக வாழ்வதை விட, ஹலாலான முறையில் ஏழையாக வாழ்ந்து மரணிப்பது எவ்வளவோ மேலானது.
கடந்த ஆண்டில் நம் வருமானத்தில் ஏதேனும் கறைகள் படிந்திருந்தால், இன்றுடன் அதை அறுத்தெறிந்துவிட்டு 'பொருளாதார ஹிஜ்ரத்' செய்வோம். 'யா அல்லாஹ்! கஷ்டங்கள் வந்தாலும் சரி, நஷ்டங்கள் வந்தாலும் சரி, என் மரணம் வரை என் வாய்க்குள் ஒரு சொட்டு ஹராமான உணவும் செல்லாமல் என்னைப் பாதுகாத்தருள்வாயாக!' என்று துஆச் செய்வோம். அல்லாஹ் நம்முடைய வருமானத்தில் பரகத் செய்து, தூய்மையான ஹலால் வாழ்வைத் தந்து அருள்வானாக!
உள்ளத்தின் நோய்கள்
நம் கண் முன்னால் ஒரு சகோதரர் ஒரு புதிய வாகனம் வாங்கினாலோ, நல்ல வீடு கட்டினாலோ அல்லது வியாபாரத்தில் முன்னேறினாலோ நம் உள்ளம் ஏன் வலிக்கிறது? "அவருக்குக் கிடைத்தது போல் நமக்கும் கிடைக்க வேண்டும்" என்று ஆசைப்படுவது தப்பில்லை. ஆனால், "அவருக்குக் கிடைத்தது ஏன் அழிய வேண்டும்?" என்று நினைப்பதுதான் நரக நெருப்பைப் போன்ற பொறாமை.
"என் ஜாதி உயர்ந்தது", "என் குடும்ப அந்தஸ்து பெரியது", "நான் இத்தனை லட்சம் சம்பாதிக்கிறேன்" என்ற அகம்பாவமும், அடுத்தவர்களைத் தரம் தாழ்த்திப் பார்க்கும் குணமும் கடந்த நாட்களில் நம்மிடம் இருந்ததா?
பள்ளிவாசலின் முதல் ஸஃப்பில் நின்று தொழுவதும், லட்சக்கணக்கில் தர்மம் செய்வதும் அல்லாஹ்வுக்காகவா? அல்லது "ஊரே நம்மைப் பாராட்ட வேண்டும்" என்ற விளம்பர நோக்கத்திற்கா?
இந்த ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தில், நம் உள்ளத்தில் படிந்திருக்கும் இந்த ஆன்மீக அழுக்குகளைக் கழுவி எறிய வேண்டும். வன்மம், பொறாமை, பெருமை ஆகிய இருண்ட குணங்களை விட்டும் விலகி, மன்னிக்கும் குணமும் சகிப்புத்தன்மையும் நிறைந்த தூய்மையான உள்ளத்தை (கல்பன் ஸலீம்) நோக்கி நம் மனதை ஹிஜ்ரத் செய்ய வைக்க வேண்டும்.
மறுமை நாளில் செல்வமோ, பிள்ளைகளோ உதவாது; தூய்மையான உள்ளம் மட்டும்தான் காரியம் அய்யும் என்று அல்லாஹ் பிரகடனப்படுத்துகிறான்:
يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
"(அது எத்தகைய) நாளென்றால், அன்று செல்வமும், பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளிக்காது. அல்லாஹ்விடம் தூய்மையான உள்ளத்தோடு (கல்பன் ஸலீம்) வந்தவரைத் தவிர." (ஸூரத்துஷ் ஷுஅரா: 88-89)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய உடல்களையோ, உங்களுடைய தோற்றங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, அவன் உங்களுடைய உள்ளங்களைத்தான் பார்க்கிறான்." (நூல்: முஸ்லிம் - 2564)
சொர்க்கவாசியைப் பார்க்க வேண்டுமா..?
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஹாபாக்களோடு பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். அப்போது திடீரென, "இப்போது இந்த வாசல் வழியாக நுழைபவர் சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் ஆவார்" என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரித் தோழர் ஒருவர் தன் தாடியில் வுளூவின் தண்ணீர் சொட்டச் சொட்ட, தன் காலணிகளை இடது கையில் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்.
மறுநாளும் நபியவர்கள் அதேபோல் கூற, அதே மனிதர் அதே கோலத்தில் உள்ளே வந்தார். மூன்றாம் நாளும் அப்படியே நடந்தது.
நபியவர்களின் இந்த அறிவிப்பைக் கேட்டு வியந்த அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு என்ற இளம் சஹாபி, அந்த மனிதருக்குள் இருக்கும் ரகசியம் என்ன என்பதை அறிய விரும்பினார். அவரிடம் சென்று, "என் தந்தையோடு எனக்கு ஒரு சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. மூன்று நாட்கள் நான் உங்கள் வீட்டில் தங்கலாமா?" என்று அனுமதி கேட்டு, அவரது வீட்டிற்குச் சென்றார்.
மூன்று இரவுகள் அவரோடு தங்கிய அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உன்னிப்பாகக் கவனித்தார்கள். அந்த மனிதர் இரவெல்லாம் விழித்துத் தொழவில்லை; பெரிய அளவில் தர்மங்கள் செய்யவில்லை. சாதாரண மனிதரைப் போலவே இருந்தார்.
மூன்றாம் நாள் அவரிடம், "சகோதரரே! என் தந்தையோடு எனக்கு எந்தச் சண்டையும் இல்லை. நபியவர்கள் உங்களை மூன்று முறை 'சொர்க்கவாசி' என்று சொன்னார்கள். உங்களிடம் அப்படி என்ன விசேஷமான அமல் இருக்கிறது என்பதைப் பார்க்கவே வந்தேன். ஆனால் நீங்கள் சாதாரண அமல்களையே செய்கிறீர்கள். நீங்கள் எப்படி இந்த அந்தஸ்தைப் பெற்றீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அந்த அன்சாரித் தோழர் புன்னகையுடன் கூறினார்:
"அப்துல்லாஹ்வே! நீங்கள் பார்த்ததைத் தவிர என்னிடம் அதிகப்படியான அமல்கள் ஏதுமில்லை. ஆனால் ஒன்று... நான் இரவில் தூங்கச் செல்லும் போது, எந்த ஒரு முஸ்லிமுக்கு எதிராகவும் என் உள்ளத்தில் எள்ளளவும் வஞ்சகத்தையோ, பொறாமையையோ, கோபத்தையோ வைத்துக் கொண்டு தூங்குவதில்லை. அல்லாஹ் யாருக்காவது ஒரு அருளைக் கொடுத்திருந்தால், அதைக் கண்டு நான் ஒருபோதும் பொறாமைப்பட்டதே இல்லை. என் உள்ளத்தில் மனிதர்கள் மீது தூய்மையான அன்பைத் தவிர வேறொன்றும் இல்லை."
இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வியந்துபோய், "இந்தத் தூய்மையான உள்ளம்தான் உங்களை அந்த உன்னத இடத்திற்கு உயர்த்தியிருக்கிறது. இதைச் செய்வதுதான் எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது" என்று கூறினார்கள்.(நூல்: முஸ்னத் அஹ்மத் - 12691)
இரவெல்லாம் விழித்துத் தொழும் நஃபில் தொழுகைகளை விட, பகலெல்லாம் வைக்கும் நஃபில் நோன்புகளை விட, "பிறர் மீது வஞ்சகம் இல்லாத உள்ளம்" எவ்வளவு பெரியது என்பதை இந்தச் சமுதாயம் விளங்க வேண்டும்.
இன்று நம்மிடம் இபாதத்துகள் இருக்கின்றன, தஸ்பீஹ்கள் இருக்கின்றன, நெற்றியில் தழும்பு இருக்கிறது. ஆனால், பக்கத்து வீட்டுக்காரன் மீது வஞ்சகம் இருக்கிறது; உடன் பிறந்த தம்பியைப் பழிவாங்கத் துடிக்கும் குரோதம் இருக்கிறது. இந்த நோய்களை விட்டும் நம் உள்ளங்கள் எப்போது ஹிஜ்ரத் செய்யப் போகின்றன?
நமக்கு அநியாயம் செய்தவர்களை, துரோகம் செய்தவர்களை "அல்லாஹ்வுக்காக நான் மன்னித்துவிட்டேன்" என்று இரவில் தூங்கும் முன் உள்ளாரச் சொல்லிவிட்டுத் தூங்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும்.
நம் உள்ளத்தில் யார் மீது பொறாமை ஏற்படுகிறதோ, அவருக்கு இன்னும் அதிகமான அருட்கொடைகளைத் தருமாறு அவர் இல்லாத நேரத்தில் அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். அது பொறாமையைக் கொல்லும் அருமருந்து.
நபியவர்கள் கூறினார்கள்: "உங்களுக்குள் ஸலாத்தைப் பரப்புங்கள்; அது உங்களுக்கிடையே அன்பை வளர்க்கும்." முகம் சுளிக்காமல் அனைவருக்கும் இன்முகத்தோடு ஸலாம் கூற பழக வேண்டும்.
காலத்தின் அருமையும், ஐந்து வாய்ப்புகளும்
புதிய ஆண்டில் நேரத்தை வீணடிக்காமல் வாழ வழிகாட்டும் ஹதீஸ்:
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ»
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "ஐந்து நிலைகள் வருவதற்கு முன் ஐந்து நிலைகளை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்:
உனக்கு முதுமை வருவதற்கு முன் உனது இளமையை,
நோய் வருவதற்கு முன் உனது ஆரோக்கியத்தை,
வறுமை வருவதற்கு முன் உனது செல்வத்தை,
பிஸியாக இருப்பதற்கு முன் உனது ஓய்வு நேரத்தை,
மரணம் வருவதற்கு முன் உனது வாழ்நாளை."
(நூல்: முஸ்தத்ரக் அல்-ஹாகிம், )
மனிதன் தன் நிலையை மாற்றாதவரை அல்லாஹ் அவனுக்கு அருள் செய்ய மாட்டான் என்பதை உணர்த்தும் வசனம்:
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ
"நிச்சயமாக அல்லாஹ் எந்த ஒரு சமுதாயத்தின் நிலையையும், அவர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளாதவரை மாற்றுவதில்லை." ஸூரத்துர் ரஃது: 11)
ரமளானுக்குப் பின் சிறந்த நோன்பு (முஹர்ரம் மாதச் சிறப்பு)
புதிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் பற்றி:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ شَهْرُ اللَّهِ الْمُحَرَّمُ»
"ரமளான் மாதத்திற்குப் பிறகு நோற்பதற்கு மிகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமாகிய 'முஹர்ரம்' மாதத்தின் நோன்பாகும்."நூல்: முஸ்லிம்
"ஆஷூரா நாளின் நோன்பைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'அது கடந்த ஓராண்டின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும் என நான் அல்லாஹ்வை நம்புகிறேன்' எனக் கூறினார்கள்."நூல்: முஸ்லிம்
இந்த வருடம் முஹர்ரம் மாதம் நோன்பு 25/06/2026 & 26/06/2026 வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அல்லது 26/06/2026 & 27/06/2026 வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டும்.
கடந்த ஆண்டில் நம்மோடு அமர்ந்து தொழுத, வியாபாரம் செய்த எத்தனையோ சகோதரர்கள் இன்று மண்ணறைக்குள் (கப்ரில்) உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு இந்த புதிய 1448-ம் ஆண்டை அல்லாஹ் தந்திருக்கிறான் என்றால், நாம் திருந்துவதற்காகக் கொடுக்கப்பட்ட இன்னும் ஒரு வாய்ப்பு மட்டுமே! எனவே, இந்த ஜும்ஆவின் புனித நன்னாளில் நம்முடைய பழைய தீய பழக்க வழக்கங்களை மரணிக்கச் செய்துவிட்டு, ஒரு புதிய மனிதராக, உண்மையான முஹாஜிராக வாழ நாம் அனைவரும் சபதம் ஏற்போம்."
யா அல்லாஹ்! கடந்த ஆண்டில் நாங்கள் தெரிந்தும் தெரியாமலும், இரவிலும் பகலிலும் செய்த அத்தனை பாவங்களையும் உன்னுடைய மகா பெருங் கருணையைக் கொண்டு மன்னித்து அருள்வாயாக! கடந்த ஆண்டில் எங்களிடமிருந்து விடைபெற்ற நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, எங்களுக்கு மறுமையில் அதற்கான நற்கூலியைத் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! இந்தத் துவங்கியிருக்கும் ஹிஜ்ரி ஆண்டை எங்களுக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும், ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மத்திற்கும் பரகத் நிறைந்ததாக, அமைதி நிறைந்ததாக, நிம்மதி மற்றும் வெற்றியின் ஆண்டாக மாற்றி அருள்வாயாக!
யா அல்லாஹ்! 'அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் விலகுபவரே உண்மையான முஹாஜிர்' என்ற உன்னுடைய தூதரின் வாக்கிற்கேற்ப, எங்களிடம் இருக்கும் தீய குணங்கள், தொழுகையின் அலட்சியங்கள், நாவின் தீமைகள் மற்றும் ஹராமான பொருளாதார வழிகளை விட்டும் முற்றிலும் விலகி, தூய்மையான நேர்வழியை நோக்கி முழுமையாக 'ஹிஜ்ரத்' செய்யக்கூடிய நல்பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! எங்கள் நாவுகளை திக்ரைக் கொண்டும், எங்கள் உள்ளங்களை இறையச்சத்தைக் கொண்டும், எங்களின் கைகளைப் பிறருக்கு உதவும் நற்கரங்களாகவும் மாற்றி அருள்வாயாக! எங்கள் வீடுகளில் வறுமையையும், நோய்களையும் நீக்கி, தூய்மையான ஹலாலான பரகத் நிறைந்த வாழ்வாதாரத்தை வழங்கி அருள்வாயாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.
அல்லாஹ் பரக்கத் செய்வானாக ஆமீன்
பதிலளிநீக்கு