"உங்கள் துஆ கபூல் ஆக வேண்டுமா?”
الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ الدُّعَاءَ عِبَادَةً، وَوَعَدَ مَنْ دَعَاهُ بِالْإِجَابَةِ. وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِهِ الْكَرِيمِ، سَيِّدِنَا مُحَمَّدٍ الَّذِي قَالَ: "الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ"، وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ. أَمَّا بَعْدُ
قال الله تعالى في القرآن العظيم بسم الله الرحمن الرحيم
يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
قال رسول الله صلى الله عليه وسلم أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ
இன்று நம்மிடையே எழும் ஒரு மிகப் பெரிய கேள்வி: "நாம் துஆ கேட்கிறோம்; ஆனால் அது அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்படுகிறதா?
நம்முடைய தேவைகள் ஏன் இன்னும் நிறைவேறவில்லை?" என்பதுதான்.
நாம் அனைவரும் அல்லாஹ்விடம் கையேந்துகிறோம், அழுது அழுது முறையிடுகிறோம். ஆனால் பல நேரங்களில், "நான் இவ்வளவு கேட்டேனே, இன்னும் எனக்கு விடை கிடைக்கவில்லையே" என்ற ஒருவித ஏக்கம் அல்லது விரக்தி நம் மனதிற்குள் தலைதூக்குகிறது.
அல்லாஹ் குர்ஆனில் ஒரு மிகப்பெரிய வாக்குறுதியைத் தருகிறான்:
"என்னை அழையுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கிறேன்." (ஸூரா அல்-காஃபிர்: 60)
அல்லாஹ்வின் வாக்குறுதி ஒருபோதும் பொய்க்காது. அப்படியானால், தப்பு எங்கே நடக்கிறது? நாம் கேட்கும் துஆவிற்கும், அல்லாஹ் கொடுக்கும் அங்கீகாரத்திற்கும் இடையில் ஏதோ ஒரு "தடை" இருக்கிறது. அந்தத் தடை என்ன?
நம்முடைய துஆக்கள் ஏன் அர்ஷைத் தொடுவதில்லை? வானவர்கள் ஏன் நம்முடைய பிரார்த்தனைகளை மேலே கொண்டு செல்வதில்லை? இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம் நம்முடைய "வருமானம் மற்றும் வாழ்வாதாரம்" ஆகும்.
இன்று நாம் பார்க்கப்போகும் இந்தப் உரையில், துஆ கபூல் ஆவதற்கான ரகசியங்களையும், குறிப்பாக நமது வயிற்றுக்குள் செல்லும் உணவு எப்படி நம்முடைய துஆவைத் தீர்மானிக்கிறது என்பதையும் காண்போம்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:-
يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்.(அல்குர்ஆன் : 23:51)
رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
"அல்லாஹ் கூறுகிறான்: 'என்னை அழையுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கிறேன்'.”
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-
أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-
"உமது உணவைத் தூய்மையாக்கிக் கொள்ளும்; நீர் துஆ அங்கீகரிக்கப்படுபவராக ஆகிவிடுவீர்." (நூல் : தப்ரானி)
الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "துஆ (பிரார்த்தனை) என்பதே வணக்கமாகும்." (நூல்: அபூ தாவூத்)
ஸஃது இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரை
يَا سَعْدُ أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنَّ الْعَبْدَ لَيَقْذِفُ اللُّقْمَةَ الْحَرَامَ فِي جَوْفِهِ مَا يُتَقَبَّلُ مِنْهُ عَمَلٌ أَرْبَعِينَ يَوْمًا
"ஸஃதே! உமது உணவைத் தூய்மையானதாக (ஹலால்) ஆக்கிக் கொள்ளும்; நீர் துஆ அங்கீகரிக்கப்படுபவராக ஆகிவிடுவீர். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! நிச்சயமாக ஒரு அடியான் தனது வயிற்றுக்குள் ஒரு கவளம் ஹராமான உணவைச் செலுத்தினால், அவரிடமிருந்து நாற்பது நாட்கள் எந்த நற்செயலும் (அமல்களும்) அங்கீகரிக்கப்பட மாட்டாது.”
ஸஃது இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஆரம்ப காலத்தில் ஏற்றவர்களில் ஒருவர் (முன்னோடி சஹாபி).
ஒருமுறை அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும், அதை அவன் உடனே அங்கீகரிக்க வேண்டும் (முஸ்தஜாபுத் தஃவா). அதற்காக எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று வேண்டினார்கள்.
சாதாரண மனிதர்கள் செல்வம் அல்லது ஆரோக்கியத்தைக் கேட்பார்கள். ஆனால் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "அல்லாஹ்விடம் தனக்கு ஒரு நேரடித் தொடர்பு இருக்க வேண்டும்" என்று விரும்பினார்கள்.
அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு நீண்ட துஆவைச் செய்து கொடுக்கவில்லை. மாறாக, ஒரு வாழ்வியல் ரகசியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்.
أَطِبْ مَطْعَمَكَ تَكُنْ مُسْتَجَابَ الدَّعْوَةِ
"ஸஃதே! உமது உணவைத் தூய்மையானதாக (ஹலால்) ஆக்கிக் கொள்ளும்; நீர் துஆ அங்கீகரிக்கப்படுபவராக ஆகிவிடுவீர்..."
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ந்தார்கள்: "முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஒரு அடியான் தனது வயிற்றுக்குள் ஒரு கவளம் ஹராமான உணவைச் செலுத்தினால், அவரிடமிருந்து நாற்பது நாட்கள் எந்த அமலும் அங்கீகரிக்கப்படாது. எந்த உடம்பு ஹராமான உணவினால் வளர்க்கப்படுகிறதோ, அது நரகத்திற்கே தகுதியானது."
ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்
இந்த அறிவுரையைக் கேட்ட மாத்திரத்தில், ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது வாழ்வாதாரத்தில் மிகக்கடுமையான பேணுதலைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள்.
ஒரு சிறு காசு கூட ஹராமான வழியில் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். இதன் விளைவாக: அவர்கள் கையேந்தி எதைக் கேட்டாலும் அல்லாஹ் அதை மறுக்காமல் கொடுத்தான். பிற்காலத்தில் பாரசீகப் போரின்போது (காதிஸிய்யா போர்), முஸ்லிம் படைக்கு வழிகாட்டவும், அவர்கள் வெற்றி பெறவும் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் துஆவே பெரும் அரணாக இருந்தது.
(முஸ்தஜாபுத் தஃவா)
ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை…
ஒரு மனிதர் மதீனாவில் நின்று கொண்டு அலி (ரலியல்லாஹு அன்ஹு, தல்ஹா ரலியல்லாஹு அன்ஹு மற்றும் ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரைத் திட்டிப் பேசிக்கொண்டிருந்தான். ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனைத் தடுத்துப் பார்த்தார்கள். அவன் கேட்கவில்லை.
உடனே ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்கேயே கையேந்தி, "யா அல்லாஹ்! இவன் உனது நேசர்களைத் திட்டுகிறான்; இவனுக்கு ஒரு பாடத்தைப் புகட்டுவாயாக" என்று துஆ செய்தார்கள்.
அவர்கள் துஆ செய்து முடிப்பதற்குள், எங்கிருந்தோ மிரண்டு ஓடி வந்த ஓர் ஒட்டகம், மக்கள் கூட்டத்தைப் பிளந்துகொண்டு நேராக அந்த மனிதனிடம் வந்து அவனைத் தாக்கி அங்கேயே கொன்றது. இதைக் கண்ட மக்கள் "அபூ இஷாக் (ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் துஆ ஏற்கப்பட்டுவிட்டது!" என்று ஆச்சரியத்துடன் கூறினார்கள். (நூல் தப்ரானி)
இதன் காரணமாகவே அவர்கள் 'முஸ்தஜாபுத் தஃவா' (பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுபவர்) என்று அழைக்கப்பட்டார். ஸஹாபாக்கள் பலரும் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் துஆவிற்குப் பயப்படுவார்கள்.
கூஃபாவில் நடந்த அவதூறு
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில், ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூஃபா நகரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள்.
அப்போது அங்கிருந்த சிலர் ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் முன்வைத்தனர்.
"அவர்கள் சரியாகத் தொழுவிப்பதில்லை."
"மக்களிடையே நீதமாகப் பங்கீடு செய்வதில்லை."
"போர்க்களங்களுக்கு நேரில் செல்வதில்லை."
போன்ற புகார்களைக் கூறினர். இது குறித்து விசாரிக்க உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு குழுவை அனுப்பினார்கள்.
விசாரணைக் குழுவினர் கூஃபாவின் ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் சென்று மக்களிடம் விசாரித்தனர். அனைவரும் ஸஃது (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைப் புகழ்ந்து பேசினார்கள். ஆனால், 'பனூ அப்த்' கிளையைச் சேர்ந்த ஒரு பள்ளிவாசலில் உஸாமா இப்னு கதாதா (அபூ ஸஃதா) என்பவன் எழுந்து நின்று அந்த மூன்று குற்றச்சாட்டுகளையும் பகிரங்கமாகக் கூறினான்.
தன் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பொய்களைக் கேட்டு மனவேதனையடைந்த ஸஃது (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அங்கேயே அல்லாஹ்விடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்:
"யா அல்லாஹ்! உன்னுடைய இந்த அடியான் (உஸாமா) புகழ் தேடுவதற்காகவும், தற்பெருமைக்காகவும் இப்படிப் பொய் சொல்லியிருந்தால்:
அவரது ஆயுளை நீட்டிப்பாயாக! அவரது வறுமையை அதிகப்படுத்துவாயாக! அவரை சோதனைகளுக்கு (ஃபித்னாக்களுக்கு) ஆளாக்குவாயாக!"
துஆவின் வெளிப்பாடு (வரலாற்று முடிவு)
காலங்கள் உருண்டோடின. ஸஃது (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் துஆ அணுஅளவும் பிசகாமல் உஸாமாவின் வாழ்வில் பலித்தது.
அவர் மிக முதுமையான வயதை எட்டினார். முதுமையின் காரணத்தால் அவரது புருவங்கள் கண்களை மறைக்கும் அளவிற்குத் தொங்கின.
தெருக்களில் அலையும் நிலை மக்களிடம் யாசகம் கேட்கும் நிலை ஏற்பட்டது.
அந்த வயதிலும் தெருவில் செல்லும் பெண்களிடம் வம்பிழுக்கும் அளவிற்கு அவனது ஒழுக்கம் சீர்கெட்டது மக்களெல்லாம் அவரை அடிக்கும் நிலை ஏற்பட்டது.
மக்கள் அவரது நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு, "ஏன் இப்படிச் செய்கிறாய்?" என்று கேட்டபோது, அவர் அழுதபடி கூறுவார்:
"நான் சோதனையில் ஆழ்த்தப்பட்ட ஒரு முதியவன்; ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்த துஆ என்னை பிடித்துக்கொண்டது!" (நூல்: புகாரி)
அநியாயம் செய்யப்பட்டவரின் துஆவிற்கும் அல்லாஹ்விற்கும் இடையே திரை இல்லை.
ஒரு நல்லடியார் மீது பொய்க் குற்றம் சுமத்துவது இம்மையிலும் மறுமையிலும் பேரழிவைத் தரும்.
ஸஃது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனே ஆத்திரப்படாமல், விசாரணையின் முடிவில் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள்.
இந்த வரலாற்றுச் சம்பவம் இஸ்லாமிய வரலாற்றில் "அநீதி இழைக்கப்பட்டவரின் துஆ" எவ்வளவு வலிமையானது என்பதற்கு ஒரு மிகப்பெரிய சான்றாகும்.
ஸயீத் இப்னு ஸைத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட பத்து ஸஹாபாக்களில் (அஷ்ரத்துல் முபஷ்ஷரா) ஒருவர்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மைத்துனர் (சகோதரி ஃபாத்திமாவின் கணவர்). ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்று, பல தியாகங்களைச் செய்தவர்கள்.
மதீனாவின் ஆளுநராக மர்வான் இப்னு ஹகம் இருந்த காலம். அர்வா பின்த் உவைஸ் என்ற பெண், ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது நிலத்தின் ஒரு பகுதியை அநியாயமாக அபகரித்து, தனது நிலத்துடன் சேர்த்துக்கொண்டதாக மர்வானிடம் புகார் அளித்தாள்.
ஒரு மாபெரும் சஹாபி மீது சுமத்தப்பட்ட இந்தப் பொய்க் குற்றச்சாட்டு மதீனா முழுவதும் பரவியது. ஆளுநர் மர்வான் இது குறித்து விசாரிக்க ஆட்களை அனுப்பினார்.
ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது நேர்மையின் மீது சந்தேகம் கொள்ளப்பட்டதைக் கண்டு மிகுந்த வேதனையடைந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைப் பற்றிக் கூறினார்களோ அதைக் கேட்ட பிறகும் நான் அவள் நிலத்தை அபகரிப்பேனா?"
அவர்கள் கேட்டது என்ன என்று மக்கள் வினவியபோது, நபிகளார் கூறிய இந்த ஹதீஸை சுட்டிக் காட்டினார்கள்:
"مَنْ ظَلَمَ قِيدَ شِبْرٍ مِنَ الأَرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ”
"யார் ஒரு ஜாண் நிலத்தைப் பிறரிடமிருந்து அநியாயமாகப் பறிக்கிறாரோ, மறுமை நாளில் ஏழு பூமிகளின் பாரம் அவர் கழுத்தில் மாலையாக அணிவிக்கப்படும்." நூல்: புகாரி)
பிறகு அவர்கள், "யா அல்லாஹ்! அந்த நிலத்தை அவளுக்கே விட்டுவிட்டேன்" என்று கூறிவிட்டு, அநீதி இழைக்கப்பட்ட ஒரு அடியாராக அல்லாஹ்விடம் கையேந்தினார்கள்.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அந்த துஆ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்த துஆவின் வாசகங்கள் மிகத் துல்லியமானவை:
اللَّهُمَّ إِنْ كَانَتْ كَاذِبَةً فَأَعْمِ بَصَرَهَا، وَاقْتُلْهَا فِي أَرْضِهَا
"யா அல்லாஹ்! இந்தப் பெண் பொய் சொல்லியிருந்தால், அவளது பார்வையை நீ பறிப்பாயாக! அவளது நிலத்திலேயே அவளுக்கு மரணத்தை ஏற்படுத்துவாயாக!"
துஆவின் வெளிப்பாடு (விளைவு)
அல்லாஹ் அந்த துஆவை அப்படியே ஏற்றுக் கொண்டான். சில காலத்திலேயே அர்வா தனது பார்வையை இழந்தாள். அவள் மதீனாவின் தெருக்களில் சுவரோரமாகத் தடவிக்கொண்டு செல்லும்போது மக்களிடம் கூறுவாள்:
"ஸயீத் செய்த துஆ என்னை பிடித்துக்கொண்டது; நான் சோதனையில் ஆழ்த்தப்பட்டுவிட்டேன்."
ஒருநாள் அவள் தனது நிலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு கிணறு அவளுக்குத் தெரியவில்லை. அதில் அவள் தவறி விழுந்து அங்கேயே மரணமடைந்தாள். அந்தக் கிணறு அவளது கப்ராவே (மண்ணறை) மாறியது.
நூல்: முஸ்லிம், அல்-பிதாயா வந்-நிஹாயா
ஸஹாபாக்கள் ஒரு ஜாண் நிலத்திற்காகக் கூட மறுமைக்கு அஞ்சினார்கள்.
பிறர் சொத்தை அபகரிப்பவர்கள் இம்மையிலேயே அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள்.
துஆவை வானத்திற்குச் செல்ல விடாமல் தடுத்தது எது?
وَحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ' أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ { يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ} وَقَالَ { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ} ' . ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ ' .
அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"மக்களே! நிச்சயமாக அல்லாஹ் தூயவன் (எல்லா குறைகளிலிருந்தும், குறைபாடுகளிலிருந்தும் தூய்மையானவன்); அவன் தூயதைத் தவிர (அதாவது, ஹலால், நல்ல மற்றும் அனுமதிக்கப்பட்ட வழியில் பெறப்பட்டதைத் தவிர) வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் அல்லாஹ், அவன் தூதர்களுக்குக் கட்டளையிட்டதைப் போலவே நம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டான்: 'தூதர்களே! தூய பொருட்களிலிருந்து உண்ணுங்கள்; மேலும் நல்ல செயல்களைச் செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்வதை நான் நன்கறிவேன்' (திருக்குர்ஆன் 23:51) என்று கூறினான். மேலும் அவன் கூறினான்: 'நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய பொருட்களிலிருந்து உண்ணுங்கள்' (திருக்குர்ஆன் 2:172)."
பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீண்ட பயணம் செய்யும், தலைமுடி கலைந்த, புழுதி படிந்த ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவர் வானத்தை நோக்கித் தனது கைகளை உயர்த்தி: "யா ரப்பீ! யா ரப்பீ!" (என் இறைவா! என் இறைவா!) என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவரது உணவு ஹராமானது; அவரது பானம் ஹராமானது; அவரது ஆடைகள் ஹராமானவை; மேலும் அவர் ஹராமிலிருந்தே ஊட்டமளிக்கப்படுகிறார். அப்படியிருக்க, அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும்?"
"
இந்த ஹதீஸின் ஆரம்பத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முக்கியமான விதியைக் கூறுகிறார்கள்:
"நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்; அவன் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்ளமாட்டான்."
அல்லாஹ் தனது தூதர்களுக்கு எதை கட்டளையிட்டானோ, அதையே முஃமின்களுக்கும் (நம்பிக்கையாளர்களுக்கும்) கட்டளையிட்டுள்ளான் என்று கூறிவிட்டு, அந்த மனிதரின் உதாரணத்தைச் சொல்கிறார்கள்.
துஆ கபூல் ஆக வேண்டிய காரணங்கள் (சாதகமான சூழல்)
இந்த மனிதரிடம் நான்கு முக்கியமான பண்புகள் இருந்தன:
* பயணம் (Safar): பொதுவாகப் பயணியின் துஆ கபூல் ஆகும் என்று ஹதீஸ்கள் கூறுகின்றன.
* பணிவு (Simplicity): தலைமுடி கலைந்து, புழுதி படிந்த நிலையில் இருப்பது அவனது தேவையையும், இயலாமையையும், பணிவையும் காட்டுகிறது. அல்லாஹ் பணிவை விரும்புகிறான்.
* கையேந்துதல்: கைகளை உயர்த்திப் பிரார்த்திப்பவரின் கைகளை வெறுமையாகத் திருப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான்.
* இறைவனை அழைத்தல்: "யா ரப்பி, யா ரப்பி" (என் இறைவா) என்று உருக்கமாக அழைக்கிறான்.
இத்தனை தகுதிகள் இருந்தும், அவனது 'ஹராமான வாழ்வாதாரம்' என்ற ஒரே ஒரு காரணம், அவனது துஆவை வானத்திற்குச் செல்ல விடாமல் தடுத்துவிட்டது.
ஹராம் ஒரு சுவர் போன்றது: எவ்வளவு பலமாக கத்தினாலும், ஹராம் என்ற சுவர் இருக்கும் வரை அந்தச் சத்தம் அல்லாஹ்விடம் எட்டாது.
ஹராமான உணவில் வளர்க்கப்பட்ட இரத்தமும் சதையும் இபாதத்தின் சுவையை உணராது.
நாம் கேட்கும் துஆக்கள் ஏன் கபூல் ஆகவில்லை என்பதற்குப் பல நேரங்களில் நமது வருமானமே தடையாக இருக்கலாம் என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது. நூல்: முஸ்லிம்
மதீனாவின் இமாம் என்று போற்றப்படும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுக்கும், அப்பாஸியக் கலீஃபா அபூ ஜாஃபர் அல்-மன்சூர் அவர்களுக்கும் இடையே நடந்த ஒரு நிகழ்வு
இமாம் மாலிக் அவர்கள் மதீனாவில் வாழ்ந்த மாபெரும் ஃபிக்ஹ் மற்றும் ஹதீஸ் கலை அறிஞர். 'முவத்தா' என்ற புகழ்பெற்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர். ஆட்சியாளர்களுக்கு அஞ்சி உண்மையைச் சொல்லத் தயங்காதவர். ஒருமுறை தவறான தீர்ப்புக்கு ஆதரவாக இருக்க மறுத்ததற்காக அப்போதைய ஆட்சியாளர்களால் சாட்டையடி தந்து சித்திரவதை செய்யப்பட்டவர்.
அப்பாஸியப் பேரரசின் வலிமைமிக்க கலீஃபாவாக அபூ ஜாஃபர் அல்-மன்சூர் இருந்தார். அவர் ஹஜ்ஜுக்காக மதீனா வந்தபோது, இமாம் மாலிக் அவர்களின் அறிவையும் கண்ணியத்தையும் கண்டு வியந்தார். இமாம் அவர்களின் வாழ்க்கை மிகவும் எளிமையாக இருப்பதைக் கண்ட கலீஃபா, அவருக்குப் பெரும் தொகையைப் (ஆயிரக்கணக்கான தீனார்களை) பரிசாக வழங்க முன்வந்தார்.
அக்காலத்தில் ஆட்சியாளர்கள் அறிஞர்களுக்குப் பரிசு வழங்குவது வழக்கமாக இருந்தது. ஆனால் இமாம் மாலிக் அவர்கள் அந்தப் பணத்தை ஏற்க மறுத்துவிட்டார்கள்.
கலீஃபா மன்சூர் ஆச்சரியத்துடன், "ஏன் இந்தப் பரிசை மறுக்கிறீர்கள்? இது ஹலாலான முறைப்படி அரசு கஜானாவிலிருந்து (பைத்துல் மால்) வழங்கப்படுவதுதானே?" என்று கேட்டார்.
அதற்கு இமாம் மாலிக் அவர்கள் மிகத் தெளிவாகப் பதிலளித்தார்கள்:
"நிச்சயமாக இது அரசு கஜானாவிலிருந்து வருவதுதான். ஆனால், அந்த கஜானாவில் பலதரப்பட்ட மக்களின் சொத்துக்கள் கலந்துள்ளன. ஏழைகளின் உரிமைகள், அநீதியாக மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிகள் அல்லது அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் இதில் கலந்திருக்க வாய்ப்புண்டு."
தொடர்ந்து அவர்கள் ஒரு முக்கியமான கருத்தைக் கூறினார்கள்:
"சந்தேகத்திற்குரிய அல்லது ஹராம் கலந்த உணவை நான் உண்டால், என் நாவிலிருந்து வெளிப்படும் துஆக்களின் வலிமை (தஃவா) குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள மார்க்க அறிவின் ஒளி (இல்ம்) மங்கிவிடும். ஒரு அறிஞனின் அறிவு மங்குவது என்பது சமுதாயத்திற்கே ஏற்படும் இழப்பாகும்."
இமாம் அவர்கள் கலீஃபாவைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை, ஆனால் தனது 'இல்ம்' மற்றும் 'துஆ' பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். பின்னாட்களில் கலீஃபா மன்சூர் வற்புறுத்திக் கொடுத்தபோது கூட, அதைத் தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தாமல், மாணவர்களுக்கும் ஏழைகளுக்கும் அப்படியே பகிர்ந்து கொடுத்துவிட்டார்கள்.
ஹலாலான உணவுதான் ஒரு மனிதனின் அறிவையும் சிந்தனையையும் பிரகாசப்படுத்தும்.
துஆ கபூல் ஆக வேண்டுமானால், ஆட்சியாளராக இருந்தாலும் சரி, அவரிடமிருந்து வரும் சந்தேகத்திற்குரிய பொருளைத் தவிர்க்க வேண்டும்.
உண்மையான அறிஞர்கள் ஆட்சியாளர்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிய மாட்டார்கள். நூல்: ஸியர் அஃலாமுன் நுபலா -
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிக நெருக்கமான மற்றும் பேணுதலான ஸஹாபி ஆவார்கள். அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஹலாலான உணவிலும், நேர்மையான சம்பாத்தியத்திலும் காட்டிய உறுதி ஒரு வரலாற்றுப் பாடமாகும்.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புதல்வர். நபிகளாரின் ஒவ்வொரு செயலையும் அணுவணுவாகப் பின்பற்றுவதில் புகழ்பெற்றவர். "ஒரு சிறிய சந்தேகம் வந்தாலும் அந்தப் பொருளைத் தீண்டமாட்டார்கள்" என்ற அளவுக்கு அவரது பேணுதல் (வராஃ) இருந்தது.
அக்காலத்தில் மக்கள் அதிகப்படியான நஃபில் தொழுகைகளிலும், தொடர் நோன்புகளிலும் ஈடுபடுவதை ஒரு பெருமையாகக் கருதத் தொடங்கினர். ஆனால், அவர்களின் அன்றாட வியாபாரத்திலும், வருமானத்திலும் சில நேரங்களில் கவனக்குறைவாக இருந்தனர்.
இதைக் கவனித்த இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இபாதத்தை விட "அடிதளம்" (Foundation) முக்கியம் என்பதை உணர்த்த விரும்பினார். அப்போதுதான் மக்களிடையே உரையாற்றும்போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாசகத்தைக் கூறினார்கள்:
"لَوْ صَلَّيْتُمْ حَتَّى تَكُونُوا كَالْحَنَايَا، وَصُمْتُمْ حَتَّى تَكُونُوا كَالأَوْتَارِ، لَمْ يَقْبَلِ اللَّهُ مِنْكُمْ إِلا بِوَرَعٍ حَاجِزٍ”
"நீங்கள் ஒரு வில் வளையும் அளவுக்குத் தொழுதாலும், அல்லது உங்கள் முதுகு வளையும் அளவுக்கு (பசியால்) நோன்பு நோற்றாலும் சரி; ஹராமானவற்றைத் தவிர்ந்து நடக்கும் 'பேணுதல்' (வராஃ) உங்களிடம் இல்லையென்றால், அல்லாஹ் எதனையும் உங்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளமாட்டான்."
இந்த வாசகத்தில் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டு முக்கியமான ஒப்பீடுகளைச் செய்கிறார்கள்:
* வில் வளையும் அளவுக்குத் தொழுகை: ஒரு வில் எப்படி வளைந்து இருக்குமோ, அதுபோல நீண்ட நேரம் ருகூஃ மற்றும் ஸஜ்தாக்களில் நீங்கள் உங்கள் உடலை வருத்தித் தொழுதாலும் பலனில்லை.
* முதுகு வளையும் அளவுக்கு நோன்பு: பசியாலும் தாகத்தாலும் உடல் மெலிந்து, முதுகு கூன் விழும் அளவுக்கு நீங்கள் நோன்பு இருந்தாலும், ஹராமான உணவு உங்கள் வயிற்றுக்குள் இருந்தால் அந்தத் தியாகம் வீணானது.
இதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது: "வெளிப்படையான வணக்கங்களை விட, மனத்தூய்மையும் வருமானத்தின் தூய்மையுமே அல்லாஹ்வின் முன்னால் முதன்மையானது."
நூல் : ஜாமியுல் உலூம் வல் ஹிகம் - இமாம் இப்னு ரஜப் அல்-ஹன்பலி
"தொழுகை மற்றும் நோன்பு மட்டும் ஒருவரை சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லாது; நாம் ஈட்டும் ஒவ்வொரு ரூபாயும் ஹலாலாக இருக்க வேண்டும்"
ஹராம் என்பது துஆவிற்குப் போடப்படும் திரை
துஆ என்பது அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் இடையிலான ஒரு உரையாடல். ஹராமான வருமானம் என்பது அந்த உரையாடலைத் தடுக்கும் ஒரு கறுப்புத் திரையைப் போன்றது.
வட்டி (ரிபா)
லஞ்சம்
ஏமாற்றிப் பிழைத்தல்
பிறர் சொத்தை அபகரித்தல்
இவை அனைத்தும் துஆவை வானத்திற்குச் செல்லவிடாமல் தடுத்து விடுகின்றன.
இமாம் இப்னுல் கையிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:
"அல்லாஹ்விடம் செய்யும் துஆ என்பது ஒரு வலிமையான மருந்து. ஆனால், ஹராமான உணவை உண்பது என்பது அந்த மருந்தின் வீரியத்தைக் குறைக்கும் ஒரு நச்சுப் பொருளாகும்."
துன்னூன் அல்-மிஸ்ரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:
"உணவு ஹலாலாக இல்லாதவரை, துஆவின் சுவையை ஒருபோதும் உன்னால் உணர முடியாது."
நாம் எவ்வளவுதான் அழுது தொழுதாலும், நமது பாக்கெட்டில் இருக்கும் பணம் ஹராமானதாக இருந்தால் அந்த கண்ணீருக்குப் பலன் இருக்காது.
துஆ கபூல் ஆக வேண்டுமா? முதலில் உங்கள் வருமானத்தைச் சரிபாருங்கள்.
தேவைகள் நிறைவேற வேண்டுமா? ஹராமான ஒரு ரூபாய் கூட உங்கள் வயிற்றுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
துஆவின் திறவுகோல்
தாபியீன்களின் காலத்தில் வாழ்ந்த ஒரு பெரும் இறையச்சம் கொண்டவர் யூசுப் இப்னு அஸ்பாத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் சிலர் வந்து "நாங்கள் எவ்வளவு துஆ செய்தும் கபூல் ஆகவில்லையே?" என்று முறையிட்டனர்.
அதற்கு அவர்கள் ஒரு ஆழமான கருத்தைக் கூறினார்கள்: "துஆ என்பது வானத்திற்குச் செல்லும் ஒரு வாகனம் போன்றது. ஹலாலான உணவு என்பது அந்த வாகனத்தின் எரிபொருள் (Fuel). எரிபொருள் இல்லாமல் வாகனம் எப்படி இலக்கை அடையும்? உங்கள் உணவைத் தூய்மையாக்குங்கள், உங்கள் துஆக்கள் அர்ஷை எட்டும்."
நூல்: ஹில்யதுல் அவ்லியா
இமாம் ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி அவர்கள் தனது மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்போது ஹராம் குறித்து ஒரு உதாரணத்தைக் கூறுவார்கள்.
"யார் ஹராமான வருமானத்தைக் கொண்டு தர்மம் செய்கிறாரோ அல்லது நற்செயல் புரிகிறாரோ, அவர் அசுத்தமான துணியை சிறுநீரைக் கொண்டு துவைப்பவரைப் போன்றவர்.
அசுத்தம் அசுத்தத்தை நீக்காது." அதேபோல், ஹராமான உணவை உண்டுவிட்டுச் செய்யப்படும் துஆ, அஸ்திவாரம் இல்லாத கட்டிடத்தைப் போன்றது என்று அவர்கள் விளங்குவார்கள். நூல்: கிதாபுல் வராஃ
ஒருமுறை அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பணியாளர் கொண்டு வந்த உணவை அவர்கள் உண்டுவிட்டார்கள். உண்ட பிறகுதான் தெரிந்தது, அந்தப் பணியாளர் இஸ்லாத்திற்கு முன் ஜோதிடம் சொல்லி (ஜாஹிலிய்யா காலத்தில்) சம்பாதித்த காசில் வாங்கிய உணவு அது என்று. உடனே அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது தொண்டைக்குள் விரலை விட்டு, உண்ட உணவை வாந்தி எடுத்து வெளியேற்றினார்கள். "என் உயிர் போனாலும் சரி, ஒரு ஹராமான அணு கூட என் ரத்தத்தில் கலந்து என் துஆவைத் தடுத்துவிடக் கூடாது" என்று அழுதபடி கூறினார்கள். நூல்: புகாரி
ஒரு சிறிய பேரீச்சம்பழம் கூட
மாபெரும் இறைநேசரும், 'பல்க்' தேசத்தின் மன்னராக இருந்து அனைத்தையும் துறந்து ஆன்மீகப் பாதைக்கு வந்தவருமான இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவம், ஒரு சிறிய பேரீச்சம்பழம் கூட துஆவிற்கு எப்படித் தடையாகும் என்பதை விளக்கும் மிகச்சிறந்த பாடமாகும்.
இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒருமுறை மதீனாவிலிருந்து ஜெருசலத்திலுள்ள 'பைத்துல் முகத்தஸ்' (மஸ்ஜிதுல் அக்ஸா) நோக்கிப் பயணம் செய்தார்கள். அங்கு செல்வதற்கு முன்னால் ஒரு கடையில் சில பேரீச்சம்பழங்களை வாங்கினார்கள்.
அவர்கள் பழங்களை வாங்கி முடித்துவிட்டுப் பையில் வைக்கும்போது, தற்செயலாக ஒரு பேரீச்சம்பழம் கீழே விழுந்திருந்தது. அது தான் வாங்கிய பழங்களில் ஒன்றுதான் என்று நினைத்து, அதை எடுத்து உண்டு விட்டார்கள். (மற்றொரு அறிவிப்பில், அவர்கள் பழங்களை நிறுக்கும்போது தராசுக்கு அருகில் கிடந்த ஒரு பழத்தை எடுத்துச் சாப்பிட்டார்கள் என்று கூறப்படுகிறது).
அவர் பைத்துல் முகத்தஸ் சென்று அங்குள்ள ஒரு பாறைக்கு அடியில் (ஸக்ரா) அமர்ந்து இரவு முழுவதும் இபாதத்தில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள். அப்போது இரு வானவர்கள் மேலிருந்து இறங்கி வருவதையும், அவர்கள் தமக்கிடையே பேசுவதையும் கனவின் மூலமாக உணர்ந்தார்கள்.
* முதல் வானவர்: "இந்தப் பாறையின் கீழ் அமர்ந்து துஆ செய்பவர் யார் தெரியுமா?"
* இரண்டாவது வானவர்: "ஆம், இவர் பல்க் தேசத்தின் மன்னராக இருந்த இப்ராஹீம் இப்னு அத்ஹம். மிகப்பெரிய ஆபித் (வணக்கசாளி)."
* முதல் வானவர்: "ஆனால், இன்று இவரது துஆக்கள் கபூல் செய்யப்பட மாட்டாது; வானத்திற்கு உயர்த்தப்படாது."
* இரண்டாவது வானவர்: "ஏன்? என்ன காரணம்?"
* முதல் வானவர்: "இவர் மதீனாவில் ஒரு கடைக்காரரிடம் பேரீச்சம்பழம் வாங்கியபோது, அவருக்குச் சொந்தமில்லாத ஒரே ஒரு பேரீச்சம்பழத்தை அனுமதி இன்றி உண்டுவிட்டார். அந்த ஒரே ஒரு கவளம் ஹராம் இவரது ஓராண்டு கால இபாதத்தையும், இன்றைய துஆவையும் தடுத்துவிட்டது."
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அன்றே மதீனாவிற்குத் திரும்பிச் சென்றார்கள். அந்தப் பழைய கடைக்காரரைத் தேடிப் பிடித்தார்கள். நடந்ததைச் சொல்லி மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால் அந்தக் கடைக்காரர் இறந்துவிட்டிருந்தார். அவரது வாரிசுகளிடம் அனுமதி பெற்று, அந்த ஒரு பழத்திற்குப் பகரத்தையும் கொடுத்துவிட்டு மீண்டும் பைத்துல் முகத்தஸ் வந்தார்கள். அன்று மீண்டும் அதே போன்று கனவில் வானவர்கள் வந்து, "இப்போது இவரது தடை நீங்கிவிட்டது, இவரது துஆக்கள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன" என்று பேசுவதைக் கேட்டார்கள்.
இந்தச் சம்பவத்தின் மையக்கருத்தை விளக்கும் நபிகளாரின் எச்சரிக்கை இதோ:
"كُلُّ جَسَدٍ نَبَتَ مِنْ سُحْتٍ فَالنَّارُ أَوْلَى بِهِ"
"ஹராமான (தவறான) வருமானத்தின் மூலம் வளர்ந்த எந்த உடலுக்கும் நரகமே மிகவும் தகுதியானது." (நூல்: பைஹகி,).
துஆவின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறிய புகழ்பெற்ற வாசகம்:
"قُلُوبُكُمْ مَيِّتَةٌ بِعَشَرَةِ أَشْيَاءَ... فَكَيْفَ يُسْتَجَابُ لَكُمْ؟"
"பத்து காரணங்களால் உங்கள் இதயங்கள் செத்துப் போய்விட்டன...
இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பஸாராவின் கடைவீதியில் நடந்து செல்லும்போது, மக்கள் அவரிடம் சூழ்ந்து கொண்டு, "எங்கள் துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை?" என்று கேட்டனர். அதற்கு அவர்கள் வழங்கிய அந்தப் புகழ்பெற்ற விளக்கம் இதோ:
உங்கள் உள்ளங்கள் பத்து காரணங்களால் மரணித்துவிட்டன:
1.அல்லாஹ்வை அறிந்திருக்கிறீர்கள்: ஆனால் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நீங்கள் நிறைவேற்றுவதில்லை.
2.அல்லாஹ்வின் தூதரை (ஸல்) நேசிப்பதாகக் கூறுகிறீர்கள்: ஆனால் அவர்களின் சுன்னத்துகளை (வழிமுறைகளை) நீங்கள் பின்பற்றுவதில்லை.
3.குர்ஆனை ஓதுகிறீர்கள்: ஆனால் அதிலுள்ள சட்டங்களின்படி நீங்கள் அமல் செய்வதில்லை.
4.அல்லாஹ்வின் அருட்கொடைகளை அனுபவிக்கிறீர்கள்: ஆனால் அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.
5.ஷைத்தான் உங்கள் எதிரி என்று கூறுகிறீர்கள்: ஆனால் செயலில் அவனுக்கு இணங்கி நடக்கிறீர்கள்.
6.சுவனம் (சொர்க்கம்) உண்மை என்று கூறுகிறீர்கள்: ஆனால் அதைப் பெறுவதற்கான முயற்சிகளை நீங்கள் செய்வதில்லை.
7.நரகம் உண்மை என்று கூறுகிறீர்கள்: ஆனால் அதிலிருந்து தப்பிப்பதற்கான ஓட்டத்தை நீங்கள் ஓடுவதில்லை.
8.மரணம் நிச்சயம் என்று கூறுகிறீர்கள்: ஆனால் அதற்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்வதில்லை.
9.மக்களின் குறைகளைத் தேடி அலைகிறீர்கள்: ஆனால் உங்கள் சொந்தக் குறைகளை நீங்கள் கண்டுகொள்வதில்லை.
10.மரணமடைந்தவர்களை அடக்கம் செய்கிறீர்கள்: ஆனால் அவர்களிடமிருந்து நீங்கள் பாடம் கற்பதில்லை.
"நிலைமை இப்படி இருக்கும்போது, உங்கள் பிரார்த்தனைகள் (துஆக்கள்) எப்படி அங்கீகரிக்கப்படும்?" என்று அவர் கேட்டு முடித்தார்கள்.
இதில் முதலாவது காரணமாக அவர்கள் குறிப்பிடுவது: "அல்லாஹ்வை அறிந்தும் அவனது கடமைகளை நிறைவேற்றாதது " நூல்: தத்கிரதுல் அவ்லியா
இமாம் ஷாஃபி அவர்கள் மாபெரும் மேதையாகத் திகழ்ந்ததற்கு அவரது தாயின் பேணுதல் ஒரு முக்கியக் காரணம்.
இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் குழந்தையாக இருந்த போது, தெரியாமல் ஒரு பெண் அவருக்குப் பால் புகட்டிவிட்டார். இதைக் கண்ட அவரது தாய், உடனே குழந்தையைத் தலைகீழாகப் பிடித்து அந்தப் பாலை வாந்தி எடுக்கச் செய்தாராம். "சந்தேகத்திற்குரிய ஒரு சொட்டுப் பால் என் மகனின் வயிற்றுக்குள் சென்றால், அவனது இல்மும் (அறிவும்), அவனது துஆக்களும் பலனற்றுப் போய்விடும்" என்று அஞ்சினார். நூல்: தபகாத் அஷ்-ஷாஃபிய்யா.
துஆ என்பது ஒரு வணக்கமாகும்.
குர்ஆனின் வழிகாட்டல்: நம்பிக்கை மற்றும் பொறுமை
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: "என்னை அழையுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கிறேன்." (அல்குர்ஆன்)
துஆ கபூல் ஆவதற்கு குர்ஆன் கூறும் முக்கியமான நிபந்தனை நம்பிக்கை. "நிச்சயமாக அல்லாஹ் என் துஆவை ஏற்றுக்கொள்வான்" என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கேட்க வேண்டும். மேலும், அவசரப்படாமல் பொறுமையுடன் இருப்பது அவசியம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ அங்கீகரிக்கப்பட சில முக்கியமான ஒழுக்கங்களைக் கற்றுத்தந்துள்ளார்கள்:
* அல்லாஹ்வைப் புகழ்ந்து ஸலவாத் ஓதுதல்: ஒரு துஆவின் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதுவது அந்த துஆ கபூல் ஆவதற்குப் பெரும் உதவியாக இருக்கும்.
* ஹலாலான உணவு: ஒரு மனிதனின் உடையும், உணவும் ஹராமானதாக இருந்தால் அவனது துஆ அங்கீகரிக்கப்படாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். எனவே, வருமானம் தூய்மையாக இருப்பது மிக அவசியம்.
* மன ஓர்மை (Focus): கவனமில்லாமல், ஏனோ தானோ என்று கேட்கப்படும் துஆவை அல்லாஹ் ஏற்பதில்லை. உள்ளச்சத்தோடும், முழு மனதோடும் கேட்க வேண்டும்.
துஆ கபூல் ஆகும் சிறப்பு நேரங்கள்
ஹதீஸ்களில் சில குறிப்பிட்ட நேரங்களில் கேட்கப்படும் துஆக்கள் மறுக்கப்படுவதில்லை எனக் கூறப்பட்டுள்ளது:
* தஹஜ்ஜுத் நேரம்: இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி வந்து, "யார் என்னிடம் கேட்கிறார்கள்? நான் கொடுக்கிறேன்" என அழைக்கிறான்.
* பாங்கு மற்றும் இகாமத்திற்கு இடைப்பட்ட நேரம்.
* ஸஜ்தாவில் இருக்கும்போது: ஒரு அடியான் அல்லாஹ்விற்கு மிக நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தா ஆகும்.
* மழையின் போது மற்றும் நோன்பு துறக்கும் நேரம்.
*ஃபர்லானா ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும்.
துஆவின் பலன்கள் (மூன்று நிலைகள்)
ஒருவர் துஆ கேட்கும்போது அது வீணாவதில்லை அது மூன்று விதங்களில் ஒன்றாக அமையும்:
* கேட்டது அப்படியே கிடைக்கும்.
* அல்லது அந்த துஆவிற்குப் பகரமாக வரவிருந்த ஒரு ஆபத்தை அல்லாஹ் நீக்கிவிடுவான்.
* அல்லது அந்த துஆவின் நன்மையை மறுமைக்காக அல்லாஹ் சேமித்து வைப்பான்.
எனவே, அல்லாஹ்விடம் கையேந்துவதற்கு முன்னால், நம்முடைய கைகளில் இருக்கும் காசு ஹலால்தானா? நம்முடைய வயிற்றுக்குள் சென்ற உணவு நேர்மையானதுதானா? என்பதைச் சிந்திப்போம். நம்முடைய வாழ்வாதாரத்தைச் சீர்படுத்திக் கொண்டால், இன்ஷா அல்லாஹ் நாம் எதைக் கேட்டாலும் அல்லாஹ் நமக்குத் தருவான்.
அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து, நம்முடைய ஹலாலான தேவைகளை நிறைவேற்றி, நம்முடைய துஆக்களை அங்கீகரிக்கப்பட்ட துஆக்களாக ஆக்கி அருள்வானாக.
யா அல்லாஹ்! எங்களுடைய வாழ்வாதாரத்தை (ரிஸ்க்) ஹலாலானதாக ஆக்கி வைப்பாயாக! ஹராமான ஒரு சிறு காசு கூட எங்கள் கரங்களில் வந்துவிடாமல் எங்களைப் பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ்! நாங்கள் உண்ணும் உணவு, அணியும் உடை, எங்கள் குழந்தைகளின் வளர்ச்சி என அனைத்தும் உன்னால் அங்கீகரிக்கப்பட்ட ஹலாலான வழியாக அமைய அருள் புரிவாயாக!
யா அல்லாஹ்! நோயாளிகளுக்கு ஷிஃபாவைக் கொடுப்பாயாக! கடன் தொல்லையில் இருப்பவர்களுக்குக் கடனைத் தீர்க்கும் வழியைக் காட்டுவாயாக! கவலையில் இருப்பவர்களின் மன அமைதியைத் தருவாயாக!
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக