பக்கங்கள்

புதன், 1 ஜனவரி, 2025

மகா ஞானி. (கதை)

 

கோயில் பூசாரி ஒருவர் இருந்தார்.


மிக அருமையான பேச்சுத் திறமை அவரிடம் இருந்தது.


அதை வைத்து,

அனைவரும் அவரை 

ஒரு ஞானி யாக நினைத்து போற்றி வந்தனர்.


அவரிடம் பேச்சுத் திறமை மட்டும்தான் இருந்தது‌.


மற்றபடி அவரது பேச்சின் வார்த்தைகள் எல்லாம்

புத்தகத்தை படித்து தெரிந்து கொண்டதுதான்.


ஒரு முறை அவர்

ஒரு பறவை ஒன்றை விலைக்கு வாங்கினார்.


அந்த பறவையை சமைத்து சாப்பிட்டு விட வேண்டும் '

என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்.


அதனை கேட்ட அந்த பறவை,

' அப்படியெல்லாம் செய்து விடாதே.

நீ என்னை விடுவிப்பதாக இருந்தால்,

நான் உனக்கு மூன்று உயர்ந்த அறிவுரைகளை சொல்கிறேன்.


உனது பேச்சு திறமையால்,

அதை மக்களிடம் சொல்லி

மகா ஞானி ' என்று பெயர்

வாங்கலாம். ' என்றது.


பறவை பேசியதை அதிசயித்து டன் பார்த்த அந்த பூசாரி,


' சரி.

 உன் அறிவுரைகளை சொல்.

நான் உன்னை விட்டு விடுகிறேன் ' என்றான்.


பறவை சொல்ல ஆரம்பித்தது,


' அபத்தமான பொய்களை நம்பாதே.


உன்னால் முடியாததை செய்ய முயற்சிக்காதே.


நல்ல செயல்களை செய்து விட்டு,

தர்மத்தை மீறி 

அதற்காக பின்னால் வருந்தாதே.


இதுதான் அந்த மூன்று அறிவுரைகள் ' என்று முடிந்தது பறவை‌.


பூசாரி மகிழ்ந்தான்.


' அருமையான அறிவுரை.

இது போதும்.

பேச்சுத் திறமையால்,

இந்த அறிவுரைகளை மக்களிடம் சொல்லி,

மக்களின் மனதை கவர்ந்து விடலாம். ' என்று நினைத்தான்.


பறவையிடம் சொல்லியபடி,

அதனை விட்டு விட்டான்.


அது பறந்து சென்று விட்டது.


தனியே அமர்ந்து யோசித்தான்.


அறிவுரைகள் சரியானதுதான்.

அதற்கான நல்ல உதாரணங்களை சொல்ல வேண்டுமே.' என்று நினைத்தான்.


அவன் வீட்டு முன்பாக இருந்த ஒரு மரத்தில் அந்த பறவை வந்து அமர்ந்தது


அந்த பூசாரியை பார்த்து பேசியது.


நீ என்னிடம் நன்றாக ஏமாந்து போனாய்

பெரிய வைரக்கல் ஒன்றை விழுங்கி,

அதை நான் எனது வயிற்றில் வைத்திருக்கிறேன்.


என்னை கொன்றிருந்தால்,

நீ இந்த உலகின் 

மிகப் பெரிய செல்வந்தனாகி

இருக்கலாம்.' என்றது.


அவன் கோபமடைந்தான்.


மரத்தின் மேல் இருக்கும் அந்த பறவையை பிடிக்க நினைத்தான்.


அவனுக்கு மரம் ஏறுவதற்கு தெரியாது.

இருப்பினும் முயற்சித்து ஏறினான்.


மிகப் பெரிய ' வைரம் ' ஆயிற்றே.


பறவை உச்சாணி கிளைக்கு தாவியது.


அவன் மேலும் ஏறினான்.


பழக்கமில்லாத காரணத்தால்,

மரத்திலிருந்து கை வழுக்கி கீழே விழுந்தான்.


பெரிய கட்டுகளுடன் மருத்துவ மனையில் படுத்திருந்தான்.


அந்த பறவை மீண்டும் அவனிடம் வந்தது.


' எனது மூன்று அறிவுரைகளுக்கும்

உதாரணம் தேடினாய் அல்லவா.


குறித்துக் கொள்.


ஒரு பறவையின் வயிற்றில்

வைரக்கல் இருப்பது என்பது

ஒரு அபத்தமான பொய்.


வைரம் வயிற்றை கிழித்து விடும்.


அது தெரியாமல்,

என்னுடைய வார்த்தையை 

நீ நம்பினாய்.


உனக்கு மரம் ஏறத்தெரியாது.


உன்னால் முடியாததை செய்தாய்.

மரம் ஏறினாய்.


ஒப்பந்தப்படி சம்மதித்து தான்

என்னை நீ விடுதலை செய்தாய்.


பிறகு தர்மத்தை மீறி எதற்காக என்னை மீண்டும் பிடிப்பதற்காக வந்தாய் ?


இந்த மூன்று அறிவுரைகளுக்கு நீயே நல்ல உதாரணமாகிப் போனாய்.


நீ குணமான உடன்,

இதையே உதாரணமாக உனது

பேச்சில் சேர்த்துக்கொள் '

என்றது.


                         ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக