பக்கங்கள்

புதன், 25 டிசம்பர், 2024

பணிவு.

கண்ணியத்திற்குரிய ஹிதாயத்துல் இஸ்லாம் மதரஸா மற்றும் மஸ்ஜிதே முபாரக் பள்ளிவாசல் தலைவர் செயலாளர் மற்றும் நிர்வாக பெருமக்களே ஜமாஅத்தார்களே இவ்விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம்களே சமூக சேவையாளர்களே இவ்விழாவிற்க்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்த செல்வந்தர்களே, மற்றும் பெற்றோர்களே என் உடன் பயிலும் மாணவ மாணவிகளே அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


ஒருவரிடம் பணிவு இல்லாத போது அந்த இடத்தை தற்பெருமை ஆக்கிரமித்து விடுகிறது தற்பெருமை உள்ளவனிடம் உப்புக்குக்கூட பணிவை எதிர்பார்க்க முடியாது ஒன்று இருந்தால் மற்றொன்று விலகிபோய்விடும்


'பணிவு' என்பது நபிமார்கள், நல்லோர்கள், பெரியோர்கள் ஆகியோரின் குணமாகும். 'தற்பெருமை' என்பது சைத்தானின் தனிப்பெரும் நடவடிக்கையும், சர்வாதிகாரிகளின் போக்கும் ஆகும்.


இறைநம்பிக்கையாளர்கள் பணிவை வெளிப் படுத்துவார்கள். தற்பெருமையை தூக்கி எறிவார்கள். இறைநம்பிக்கை குடியிருக்கும் உள்ளத்தில் பணிவு இருக்கும். அது வெளிப்பட வேண்டிய விதத்தில் வெளிப்படும் அதே வேளையில் இறைநம்பிக்கையும், தற்பெருமையும் ஒன்று சேர வாய்ப்பில்லை


பணிவு என்பது அடிமையாக இருப்பதோ, சுயமரியாதையை விட்டுக்கொடுப்பதோ, காக்காய் பிடிப்பதோ, காலில் விழுவதோ, எதற்கெடுத்தாலும் 'ஆமாம்' என்று கூறுவதோ, தலையை ஆட்டிக்கொண்டிருப்பதோ, உடலை கூனிக்குறுகி வளைப்பதோ அல்ல என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்


பணிவு என்பது உடலில் வெளிப்படும் மாற்றமோ, உடல் அசைவோ, உடலில் தோன்றும் நடிப்போ கிடையாது அது உள்ளத்திலிருந்து ஏற்படும் தன்னடக்கம், நாவடக்கம், கையடக்கம் ஆகியவை ஆகும். மேலும் பிறரை புண்படுத்தாமலும், மற்றவரை புரிந்து, மதித்து நடப்பதுமே பணிவு.


பணிவு என்பது இழிவோ கோழைத்தனமோ அல்ல அது உயர்வு தரும் அரும்பெரும் குணம் இறைவனுக்காக மற்றவர்களிடம் பணிந்து நடக்கும் போது வானமே குனிந்து நமக்கு குடை பிடிக்கும் பூமியோ தாழ்ந்து விரிப்பு விரிக்கும். வானளாவிய அளவிற்கு உயர்வு கிடைக்கும் இந்த உயர்வு நிச்சயம் சாத்தியம் என்பதை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:


'தர்மம் செய்வதால் பொருளாதாரம் குறைந்து விடாது. ஒரு அடியானை இறைவன் மன்னிப்பதால் கண்ணியத்தைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டான். இறைவனுக்காக பணிந்து நடக்கும் எந்த மனிதனையும் இறைவன் உயர்த்தாமல் விட்டதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)


இறைவன் பணிவைக் கற்றுத்தர விரும்பி அனைத்து நபிமார்களையும் ஆடு மேய்ப்பாளராக பணிபுரிய வைத்துள்ளது, பணிவு எனும் குணத்திற்கு கிடைத்த மகுடம் ஆகும்.


பணிவு என்பது கனிவை உருவாக்கும் பணிவு என்பது பாசத்தை வளர்க்கும், பிளவை தவிர்க்கும். பிரிவை குறைக்கும்.


நாம் இறைவனிடம் காட்டும் பணிவு- சிரசை தாழ்த்துவது, கூனிக்குறுகி குனிந்து நிற்பது, அவனிடம் கையேந்துவது போன்றதாகும்.


பெற்றோரிடம் காட்டும் பணிவு- அவர்களிடம் அன்புடன், அடக்கத்துடன், குரலை தாழ்த்தி பேசுவது, அவர்களுக்கு பணிவிடை செய்து, பணிந்து நடப்பதில், அவர்களுக்காக பிரார்த்திப்பதில் வெளிப்படுகிறது.


وَقَضَى رَبُّكَ إِلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إما يبلغن عندك الكبر أحدهما أو كلهما فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا


உம் அதிபதி விதித்துள்ளான் "அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள் தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்துகொள்ளுங்கள் பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை சீ என்று கூடக் கூறாதீர் மேலும், அவர்களைக் கடிந்து பேசாதீர் மாறாக, அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக!


(அல்குர்ஆன் 17:23)


وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيْنِي صَغِيرًا


மேலும், பணிவுடனும், கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக! மேலும், நீர் இறைஞ்சிய வண்ணம் இருப்பீராக "என் இறைவனே! சிறுவயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக!"


(அல்குர்ஆன் 17:24)


இவ்வாறு பணிந்து நடக்கும் குழந்தைகளுக்குத்தான் பெற்றோரின் பிரார்த்தனை கிடைக்கும். அவர்களின் எதிர்கால வாழ்வும் சிறக்கும்.


பழைய குறிப்புகள் வாசிக்க 👇🏻 கிளிக் செய்யவும்.

மக்தப் மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகள்


1 கருத்து:

  1. ما نَقَصَتْ صَدَقةٌ مِن مالٍ، وما زادَ اللَّهُ عَبْدًا بعَفْوٍ إلّا عِزًّا، وما تَواضَعَ أحَدٌ للَّهِ إلّا رَفَعَهُ اللَّهُ.
    الراوي: أبو هريرة • مسلم، صحيح مسلم (٢٥٨٨) • [صحيح] • من أفراد مسلم على البخاري • شرح الحديث

    பதிலளிநீக்கு