பக்கங்கள்

திங்கள், 6 ஏப்ரல், 2020

சொல்வோம் ஸலவாத்தை...!




 إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

அல்லாஹ்வும், அவனது மலக்குகளும், நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள், ஈமான் கொண்டோரே அவர்களின் மீது நீங்கள் ஸலவாத்துச் சொல்லுங்கள்  அல்குர் ஆன் (33 56)


லாஇலாஹா இல்லல்லாஹ். முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.

இது இஸ்லாத்தின் மூல மந்திரம், இஸ்லாம் அறிமுகம் செய்யப்பட்ட காலத்திலும் இதுதான் திருக்கலிமா, உலகம் உள்ளளவும், ஏன் அதன் பின்னரும் கூட இதுதான் திருக்கலிமா

இதன் முதல் வார்த்தை அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்வதை
கட்டாயப்படுத்துவதைப் போன்று, இதன் இரண்டாம் வார்த்தை நபிகள் நாயகம் (ஸல்) கட்டாயப்படுத்துகிறது.

அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதைக் நபிகள் நாயகத்தின் மீது அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்பும் நமது
உயிர், நமது உடமைகள், நமது மனைவி மக்கள், நமது உற்றார் பெற்றோர் அனைவரையும் விட ஆழமானதாக இருக்க வேண்டும் என்று குறிக்கும் நபி மொழிகள் அக்கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைகின்றன

அவர்கள் உலகில் பவனி வரும் போதுள்ளவர்கள் மட்டுந்தான் அவர்கள் மீது ஆழமான அன்பைச் செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என்பதல்ல, அவர்கள்மறைந்த பிறகு பூமியில் வசிப்பவர்களும் அவர்கள் மீது ஆழமான அன்டைபைச் செலுத்தும் கடமை உள்ளவர்கள் தாம். நபி மொழிகளும் அப்படித்தான் கூறுகின்றன

ஒருவர் கண்பார்வையில் இல்லாத போது அவர் மீது ஆழமான அன்பு செலுத்த இயலுமாவென்று யாரும் சந்தேகிக்க வேண்டியதில்லை. அன்பு செலுத்தும் இருவர், அவர்கள் பிரிந்திருக்கும் போதுதான் தங்களின் அன்பு பெருகுவதைக் காணுவார்கள்

ஸலாவத்து ஓர் அன்புப் பிணைப்பு
அன்பு செலுத்தும் இருவர் தங்களுக்கிடையே கடிதப் பரிமாற்றங்களைக் கொண்டும், சந்தித்த போது நடந்த நிகழ்வுகளின் நினைவலைகளை புதுப்பிப்பதைக் கொண்டும் அன்பைப் பெருக்கிக் கொள்வார்கள். அது போன்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது அன்புத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறந்த உபாயம் அவர்கள் மீது நினைத்த போதெல்லாம் ஸலவாத்து சொல்லிக் கொண்டிருப்பதும், ஸலாம் சொல்லிக் கொண்டிருப்பதுமாகும்

ஸலவாத்து கடமையான பின்னணி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நண்பர்கள் அவர்களின் மீது அளவிட முடியாத அன்பு செலுத்தி வந்தார்கள் அதனால் எப்போதும் பெருமானாரைப் பார்க்க வேண்டும், அவர்களுடன் பேச வேண்டும், அவர்களுடன் அமர வேண்டும் என்று பேராவல் கொண்டார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தனிப்பட்ட வேலைகளுக்கு சிரமம் ஏற்பட்டது. பெருமானார் ஓய்வெடுப்பது குடும்பத்தாருடன் உறவாடுவது போன்றவைகள் தடைபட்டன.

ஈமான் கொண்டோரே, நீங்கள் எதிர்பார்க்காத நிலையில் உணவு
உண்ண உத்தரவு வழங்கப் பெற்றாலன்றி நபியின் இல்லத்திற்குள் நீங்கள் போகவேண்டாம். எனினும் அழைப்புத் தரப்பட்டால் செல்லுங்கள். உணவுத் தேவையை முடித்து விட்டால் வெளிச் சென்று விடுங்கள், பேசிக் கொண்டிருப்பதை எதிர்நோக்காதீர்! அது நபிக்கு தொல்லையளிக்கிறது. அவர் உங்களிடம் சொல்ல வெட்கம் கொள்கிறார். அல்லாஹ் உள்ளதைக் கூற வெட்கம் கொள்ளமாட்டான்       அல்குர் ஆன்: (33: 53)


இந்த நிலையை சரி செய்யவே அல்லாஹு ஸலவாத்தையும், ஸலாமையும்அறிமுகப் படுத்துகிறான். அதாவது, நபித்தோழர்களை நபியின் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூறுமாறு பணித்தான். அப்படி ஸலாவாத்தும், ஸலாமும் கூறுவது நபியுடன் ஒரு ஆன்மீகத் தொடர்பை உண்டாக்குகிறது; மேலும் மேலும் அந்த ஸலவாத்தைக் கூறுவது அந்த தொடர்பை வலுப்படுத்துகிறது. அவ்வாறு எந்நேரமும் ஸலவாத்துக் கூறிக் கொண்டிருப்பவர் சதாவும் நபியுடன் அளவளாவிக் கொண்டிருப்பதைப் போன்ற நிறைவைப் பெறுகிறார்

இந்த திருவசனம் அருளப் பெற்றதும் அண்ணலாரின் தோழர்கள் அதிகமான ஸலவாத்துக்களைக் கூற ஆரம்பித்து விட்டார்கள். அதனால் பெருமானாரின் சன்னிதானத்தில் இருக்காமலேயே, இருப்பதைப் போன்ற உணர்வைப் பெற்றார்கள். பெருமானாரின் தனிப்பட்ட பணிகளுக்கு தடையேற்படுவது தவிர்க்கப்பட்டது

அதன் மூலம், பெருமானார் மறைவுக்குப் பின் வாழ்பவர்களுக்கும்
பெருமானாருடன் தொடர்பு கொள்வதற்கு வழி பிறந்தது

ஸலாம் ஒரு நேரடி உரையாடல்

நபிகள் நாயகம் - (ஸல்) நவின்றுள்ளார்கள்- "எனக்கு எவர் ஸலாம்
உரைத்தாலும் அல்லாஹ் எனது உயிரை எனக்குத் திரும்பத் தருகிறான். நான் எனக்கு ஸலாம் உரைத்தவருக்கு பதில் ஸலாம் கூறுகிறேன் அறிவிப்பவர் : ஹளரத் அபூஹுரைரா (ரலி) நூல் : அபூதாவூது

பெருமானாருக்கு ஸலாம் உரைப்பவர் அவர்களுடன் நேரிலேயே
உரையாடுகிறார் என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது


இறைவனைத் தொழுகாத நேரமொன்றும் இவ்வுலகில் இல்லை என்பது எத்துணை உண்மையோ அது போன்று, நபிகளாரின் மீது ஸலாம் கூறாத நேர்மொன்றும் இல்லை என்பதும் உண்மையாகும்

சூரிய ஒட்டத்தை வைத்து தொழுகையின் நேரங்கள் கணிக்கப்படுவதால் இந்த மணித் துளியில் இங்கே பாங்கு ஒலிக்கப்பட்டால், அடுத்த மணித்துளியில் அடுத்த ஊரில் பாங்கு ஒலிக்கப்படுகிறது. இப்படியே காலமெல்லாம் பூமியின் எங்காவது ஒரு பகுதியில் பாங்கு சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஐவேளை தொழுகையும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இரண்டுரக்அத்தின் போதும் அத்த ஹிய்யாத்து ஒதும் சாக்கில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு” (நபியே உங்கள் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும், பரக்கத்தும் ஏற்றபடட்டுமாக!) என்று தொழுபவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்

அஃதின்றி நஃபிலான தொழுகையைத் தொழுபவர்கள் அனந்தம் அனந்தம். அப்போதெல்லாம் மேற்படி ஸலாம் உரைக்கப்படுகிறது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது பேரன்பு கொண்டோர்; உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருந்து கொண்டு "அஸ்ஸலாமு அலைக்க யாரஸுலல்லாஹ்! அஸ்ஸலாமு அலைக்க யாஹபீபல்லாஹ்! அஸ்ஸலாமு அலைக்க யாரஹ்மத்தன் லில் ஆலமீன்! யாஷபீஅன்லில் முத்னி பீன்" என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய நிகழ்வும் ஒயாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் துயில்கொள்ளும் மஸ்ஜிதுன் நபவிய்யின் புனித மிக்க பாபுஸ் ஸலாம் கதவு, அதிகாலை தஹஜ்ஜுத் வேளையில் நபிகள் திறக்கப்பட்டதிலிருந்து இஷா தொழுகைக்குப் பின் கதவு, அடைக்கப்பெறும்வரை ஐவேளை ஜமாஅத் நடைபெறும் நேரத்தைத் தவிர்த்து அனைத்து நேரங்களிலும் அலை அலையாக மக்கள் பெருமானார் மீது ஸலாம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஒய்வதில்லை

அப்படியானால் பெருமானாருக்கு எலாம் சொல்பவர்களுக்கு பதில் ஸலாம் சொல்ல, இறைவன் உயிரைக் கொடுத்துவிட்டு அந்த உயிரைத் திரும்ப எடுப்பது எப்போது

எவ்வளவு பெரிய பாக்கியம்? அண்ணலார் வாழ்ந்து சென்று பலநூறு ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட அவர்களுக்கு ஸலாம் கூறுவதன் மூலமாகநாம் நேரில் உரையாடுவதைப் போன்ற பாக்கியம் பெறுகின்றோமே? இது எவ்வளவு பெரிய பாக்கியம்

திகைப்பூட்டும் இன்னுமொரு நிகழ்வு

நபிகள் நாயகம் (ஸல்) அருளுகிறார்கள்: "உலக அழிவின்போது தோன்றும் தஜ்ஜாலின் சோதனை போன்று நீங்கள் உங்களின் மண்ணறைகளில் சோதிக்கப்படுவீர்கள். அப்போது இந்த மனிதர்பற்றி உங்களின் விளக்கம் என்னவென்று கேட்கப்படும். உறுதி படைத்த மனிதன், இது முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவார்கள். இவர்கள் அல்லாஹ்வின் தூதர். இவர்கள் தான் நேர் வழியையும், தெளிவான ஆதாரங்களையும் எங்களுக்கு கொண்டு வந்தார்கள் நாங்கள் அவர்களின் அழைப்பை ஏற்றோம். அவர்களைப் பின்பற்றினோம் என்று உரைப்பான்.

அப்போது அவனை நோக்கி நீ ஈமான் கொண்டவன் என்பதை நாங்கள் முன்பே அறிந்திருந்தோம். எனவே நீ நிம்மதியாகத் தூங்கு என்று கூறப்படும் நயவஞ்சகனை நோக்கி மேற் கண்ட கேள்வி எழுப்பப்படும் போது, "நான் இவர்கள் யார் என்று அறிய மாட்டேன் மக்களெல்லாம் என்னவோ சொல்லிக், கொண்டிருந்தார்கள் நானும் சொல்லிக் கொண்டிருந்தேன் என்று பதைபதைப்புடன் கூறுவான் அறிவிப்பவர் : ஹளரத் அபூஹுரைரா (ரலி). நூல் : புகாரி

மரணம் என்பது தொடர்கதை, ஒரு மணித்துளிக்குள் எத்தனையோ மரணங்கள் நிகழ்ந்து விடுகின்றன. அத்துணை பேருக்கும் மண்ணறை கேள்வி கணக்கு உண்டு. அப்போதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காட்டித்தான் இவர் பற்றி உனது விளக்கம் என்ன? என்று வினவப்படுகிறது அப்படியானால் பெருமானாரின் கண் மறைவு நிலை பற்றி நாம் என்ன முடிவு சொல்ல இயலும்

உண்மையான மூமின் கள் உயிர் வாழ்வின் போதே பெருமானாரை அறிந்து வைத்திருக்க வேண்டும். மண்ணறையில் அவர்களைப் பார்த்ததும் இனங் கண்டு கொள்ளும் அளவு அந்த அறிமுகம் தெளிவடைந்திருக்க வேண்டும். இக்கருத்தை மேற்காணும் நபிமொழி தெளிவு படுத்துகிறது

ஸலாம் உரைக்கப்படும்போது பெருமானார் (ஸல்) அவர்கள் திரும்ப உயிர் பெறுவதும், மண்ணறையில் அவர்களின் வருகை தொடர்வதும் பெருமனாருடன் நாம் தொடர்பு கொள்ளும் சாத்தியக்கூறு இருப்பதை சூசகமாக அறிவிக்கின்றன அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு ஸலவாத்தும் ஸலாமும் சிறந்த உபாயமாக இருக்கின்றன. அன்பு கொள்ள விரும்புவோரின் காதுகளில் இது தேன்பாய்ச்சும் செய்தியல்லவா

ஹளரத் உபய்யு பின் கஃபு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : "யாரஸுலல்லாஹ்! நான் தங்களின் மீது அதிகமாக ஸலவாத்துச் சொல்ல விரும்புகிறேன். நான் எனது நோரங்களில் எந்த அளவு தங்களுக்கு ஸலவாத்துச் சொல்வதில் ஒதுக்கட்டும்...? என்று நான் கேடேடேன். நீங்கள் விரும்பியவாறு செய்து கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறினார்கள். நான்கில் ஒரு பகுதியை ஒதுக்கட்டுமா? என்று நான் கேட்டதற்கு நீங்கள் விரும்பியவாறு செய்து கொள்ளுங்கள், இருப்பினும் மேலும் அதிகரித்தால் உமக்கு நல்லது என்று அவர்கள் பதிலளித்தார் அப்படியானால் மூன்றில் ஒரு பகுதியை ஒதுக்கட்டுமாவென நான் கேட்டேன். நீங்கள் விரும்பியவாறு செய்து கொள்ளுங்கள் இருப்பினும் மேலும் அதிகரித்தால் உமக்கு நல்லது என்று அவர்கள் பதிலுரைத்தார்கள். அப்படியானால் நான் இரண்டில் ஒரு பகுதியை ஒதுக்கட்டுமா வென்று வினவினேன். நீங்கள் விரும்பியவாறு செய்து கொள்ளுங்கள். இருப்பினும் மேலும் அதிகரித்தால் உமக்கு நல்லது என்றார்கள். அப்படியானால் நாள் முழுவதுமாக தங்களின் மீது ஸலாவாத்துச் சொல்வதில் ஈடுபடுவேன் என்று நான் கூறியபோது அப்படியானால் உமது கவனலைகள் நீக்கப்படும், உமது பாவங்கள் மன்னிக்கப்படும் என அவர்கள் நவின்றார்கள் .
                    நூல்: திர்மிதி

அண்ணலாரின் மீது அதிகம் அதிகம் ஸலாவாத்துச் சொல்லுவோமாக..

அன்னாரின் அன்புக்கு அல்லாஹ் நம்மை அருகதையாக்குவானாக.


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு  எல்லா வளமும் நலமும் அல்லாஹ் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக