நரக விடுதலை
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
பொருள்: "எங்கள் இறைவனே! எங்களுக்கு இம்மையிலும் நன்மையைத் தருவாயாக; மறுமையிலும் நன்மையைத் தருவாயாக; இன்னும் எங்களை நரக நெருப்பின் வேதனையிலிருந்து பாதுகாப்பாயாக!”
«أَخْرِجُوا مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ
"யாருடைய உள்ளத்தில் அணுவளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்.”
ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களில் நாம் இருக்கின்றோம். இன்னும் சில தினங்களில் ரமலான் நம்மை விட்டும் விடை பெற்றுச் செல்ல இருக்கின்றது.
நரக விடுதலை தரக்கூடிய இந்த புனிதமான இறுதி பத்து நாட்களில் அல்லாஹ் நம்மை கொடிய நரகில் இருந்து விடுதலை தருவானாக ஆமீன்.
நரக விடுதலை வேண்டுமா சில அமல்களை செய்யுங்கள்:-
அதிகமாக அல்லாஹ்விடம் நரகை விட்டு பாதுகாப்பு துஆ கேட்பது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த, மிக அதிகமாக ஓதப்பட வேண்டிய துஆ:
اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
இறைவா! நரக நெருப்பிலிருந்து என்னை பாதுகாப்பாயாக.
சுபுஹ் மற்றும் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இதை 7 முறை ஓதுமாறு நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
நரகமே நமக்காகப் பரிந்துரை செய்யும் துஆ
நீங்கள் அல்லாஹ்விடம் நரக பாதுகாப்பைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது, நரகமே உங்களுக்காகப் பரிந்துரை செய்யும்.
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَسْتَجِيرُ بِكَ مِنَ النَّارِ
இறைவா! உன்னிடம் நான் சொர்க்கத்தை வேண்டுகிறேன், நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
"யார் மூன்று முறை சொர்க்கத்தை வேண்டுகிறாரோ, அவருக்காகச் சொர்க்கம் 'இறைவா! இவரை என்னுள் நுழைய வை' என்று கேட்கும். யார் மூன்று முறை நரகிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறாரோ, அவருக்காக நரகம் 'இறைவா! இவரை என்னிடமிருந்து காப்பாற்று' என்று கேட்கும்." (நூல்: திர்மிதி).
நரகத்திலிருந்து கடைசியாக வெளியேறும் மனிதன்
மறுமை நாளில் அனைவரும் விசாரணை முடிந்து சொர்க்கம் அல்லது நரகம் சென்ற பிறகு, நரகத்தில் தண்டனை அனுபவித்த ஒரு முஃமின் கடைசியாக அங்கிருந்து வெளியேற்றப்படுவார்.
அவர் நரகத்திலிருந்து தவழ்ந்து வெளியே வருவார். வெளியே வந்ததும், நரகத்தை நோக்கித் திரும்பிப் பார்த்து, "என்னை உன்னிடமிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். முன்னோர்களுக்கும் பின்னோர்களுக்கும் தராத ஒரு பாக்கியத்தை அவன் எனக்குத் தந்துவிட்டான்" என்று மகிழ்ச்சியில் கூறுவார்.
அவருக்கு முன்னால் ஒரு மரம் தோன்றும். அவர் அல்லாஹ்விடம், "யா அல்லாஹ்! அந்த மரத்தின் நிழலில் நான் ஓய்வெடுக்கவும், அதன் கனிகளை உண்ணவும் என்னை அங்கே கொண்டு போய் சேர்த்துவிடு" என்று கேட்பார்.
அல்லாஹ் அவரிடம், "ஆதமின் மகனே! இதை நான் உனக்குக் கொடுத்தால், மீண்டும் வேறொன்றைக் கேட்கமாட்டாயே?" என்று கேட்பான். அவரும் "நிச்சயமாகக் கேட்கமாட்டேன்" என்று உறுதியளிப்பார். ஆனால், அல்லாஹ் அவனது பலவீனத்தை அறிவான். அவர் அந்த மரத்தின் நிழலுக்குச் சென்றதும், அதைவிட அழகான மற்றொரு மரம் கண்ணுக்குத் தெரியும். மனிதன் மீண்டும் அதைக் கேட்பார். இப்படியே மூன்று முறை நடக்கும்.
இறுதியில், அவர் சொர்க்கத்தின் வாசலில் உள்ள ஒரு மரத்திற்கு அருகில் கொண்டு வரப்படுவார். அப்போது சொர்க்கவாசிகளின் மகிழ்ச்சியான சத்தங்கள் அவருக்குக் கேட்கும். அவரால் பொறுக்க முடியாது. "யா அல்லாஹ்! என்னை உள்ளே அனுப்பிவிடு" என்று கெஞ்சுவார்.
அப்போது அல்லாஹ் கேட்பான்: "ஆதமின் மகனே! உனது கோரிக்கைக்கு முடிவே இல்லையா? இந்த உலகத்தைப் போல 10 மடங்கு பெரிய இடத்தை உனக்குத் தந்தால் நீ திருப்தி அடைவாயா?" அந்த மனிதன் ஆச்சரியமடைந்து, "இறைவா! நீ அகிலத்தாரின் அரசனாக இருந்து கொண்டு என்னைப் பரியாசம் செய்கிறாயா?" என்று கேட்பார். அப்போது அல்லாஹ் புன்னகைப்பான்.
இறுதியாக, அந்த மனிதன் சொர்க்கத்திற்குள் நுழைவார். நரகத்தில் கருவாடாகக் கருகியிருந்த அவர், 'ஹயாத்' (வாழ்வு) எனும் ஆற்றில் குளித்து, பேரழகனாக மாறி சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிப்பார்.
அல்லாஹ்விடம் கேட்கும் துஆ வெறும் வார்த்தைகள் அல்ல; அது நம் விதியையே மாற்றும் ஆற்றல் கொண்டது. "இறைவா! நான் பாவியாக இருந்தாலும் உனது கருணையால் என்னை நரகிலிருந்து விடுவிப்பாய் என நம்புகிறேன்" என்ற துஆவை நாம் எப்போதும் ஓத வேண்டும்.
இக்லாஸுடன் அமல் செய்தல்
«فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ»
"எவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி (இக்லாஸுடன்) 'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறுகிறாரோ, அவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கி (தடுத்து) விட்டான்."
நூல்:புகாரி
கலிமாவின் துண்டு சீட்டும் 99 பதிவேடுகளும்
மறுமை நாளில் ஒரு மனிதனின் 99 பாவப் பதிவேடுகள் கொண்டு வரப்படும். ஒவ்வொன்றும் கண் எட்டும் தூரம் வரை இருக்கும்.
அவன் நரகத்திற்குச் செல்வது உறுதி என்று நினைக்கும்போது, அவன் ஒருமுறை இக்லாஸுடன் சொன்ன "அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற வாசகம் எழுதப்பட்ட ஒரு சிறிய அட்டை தராசின் ஒரு தட்டில் வைக்கப்படும்.
அவனது மலை போன்ற பாவங்களை அந்த ஒரு சிறிய இக்லாஸான வாசகம் மிகைத்துவிடும். அந்த மனிதன் நரகத்திலிருந்து விடுதலை பெறுவான். நூல்: திர்மிதி.
போர்க்களத்தில் அலி (ரலி) காட்டிய இக்லாஸ்
ஒரு போர்க்களத்தில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு எதிரி வீரனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த வீரனை கீழே தள்ளி, அவனது மார்பின் மீது ஏறி அமர்ந்து அவனைக் கொல்லப் போனார்கள்.
தன்னால் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த அந்த எதிரி வீரன், அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் கோபப்படுத்துவதற்காக அவர்களது முகத்தில் துப்பினான்.
உடனே அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? கோபத்தில் அவனை உடனே வெட்டியிருக்க வேண்டும். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனடியாக அவனது மார்பிலிருந்து இறங்கி, அவனை விட்டு விலகிச் சென்றார்கள்.
அந்த வீரன் திகைத்துப்போய் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டான்: "அலியே! நான் உன்னை அவமானப்படுத்தினேன், உன் முகத்தில் துப்பினேன். உனக்குக் கோபம் வந்திருக்க வேண்டுமே! ஏன் என்னைக் கொல்லாமல் விட்டு விட்டீர்கள்?"
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பதிலைக் கூறினார்கள்:
"நான் உன்னுடன் சண்டையிட்டது அல்லாஹ்வுக்காகவும் அவனது மார்க்கத்திற்காகவும் மட்டுமே. நீ என் முகத்தில் துப்புவதற்கு முன் வரை என் உள்ளத்தில் உன் மீது தனிப்பட்ட கோபம் இல்லை. ஆனால், நீ என் முகத்தில் துப்பியவுடன், எனக்கு உன் மீது தனிப்பட்ட கோபம் வந்துவிட்டது.
அந்த நிலையில் நான் உன்னைக் கொன்றிருந்தால், அது அல்லாஹ்வுக்காக இல்லாமல் என் கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக செய்ததாக ஆகிவிடும். எனது இக்லாஸ் (மனத்தூய்மை) அங்கு கெட்டுவிடும். அல்லாஹ்வுக்காக அன்றி, என் சுயநலத்திற்காக ஒரு உயிரைக் கொல்ல நான் விரும்பவில்லை."
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த உயரிய பண்பையும், இக்லாஸையும் கண்ட அந்த வீரன் அங்கேயே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டான்.
ஒரு காரியத்தைச் செய்யும்போது நம் மன இச்சை அல்லது சுயநலம் உள்ளே நுழைந்துவிடாமல் தடுப்பதே உண்மையான இக்லாஸ்.
"அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்தேன்" என்ற உறுதிதான் ஒருவரை நரகத்திலிருந்து பாதுகாக்கும்.
நமது அன்றாட வாழ்வில் யாராவது நம்மைத் திட்டும்போதோ அல்லது கோபப்படுத்தும்போதோ, "அல்லாஹ்வுக்காக நான் பொறுத்துக் கொள்கிறேன்" என்று நாம் விலகி வருவது நரக விடுதலையைத் தேடித்தரும் மிகப்பெரிய அமலாகும்.
முகலாயர்கள் ஆட்சி காலத்தில் வாழ்ந்த குத்புத்தீன் பக்தியார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மரண வேளையில் தனக்கு ஜனாஸா தொழுகை நடத்துபவர்
1) வயதுக்கு வந்ததிலிருந்து தஹஜ்ஜுத் (எனும் அதிகாலை) தொழுகையை தொழும் பழக்கமுடையவராகவும்,
2) தொடர்ந்து அசர் தொழுகையுடைய முன் சுன்னத்தை பேணி வருபவராகவும்,
3) அந்நியப் பெண்களை காமப் பார்வை பார்க்காதவராகவும்,
4) ஜமாஅத் எனும் கூட்டுத் தொழுகையில் முதல் தக்பீர் தஹ்ரிமா தவறாமல் பேணி வருபவராகவும் இருக்க வேண்டும்.
ஆகிய நான்கு விதமான சிறப்பம்சங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று மரண சாசனம் செய்திருந்தார்.
பிறகு அன்னார் இறந்தவுடன் அன்னாரது புனித உடல் லுஹர் தொழுகை நேரத்தில் ஜனாஸா தொழுகை நடத்த பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் அன்னாரது மரண சாசனத்தை நினைத்து யாரும் ஜனாஸா தொழுகை நடத்த முன் வரவில்லை. அசர் தொழுகை நேரம் வந்தது மக்கள் ஒன்று கூடினர்.
ஆனால் யாரும் ஜனாஸா தொழுகை நடத்த முன் வரவில்லை. மஃரிப் தொழுகை நேரம் வந்தது மக்கள் ஒன்று கூடினர்.
ஆனால், யாரும் ஜனாஸா தொழுகை நடத்த முன் வரவில்லை. பிறகு இஷா தொழுகை நேரம் வந்தது மக்கள் ஒன்று கூடினர். ஆனால் யாரும் ஜனாஸா தொழுகை நடத்த முன் வரவில்லை.
இறுதியாக அப்பகுதியின் ஆட்சியாளராக இருந்த ஷம்சுத்தீன் இல்திமாஸீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கண்ணியமிகு குத்புத்தீன் பக்தியார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் முகத்திரையை நீக்கி விட்டு எனக்கும் அல்லாஹ்வுக்கும் இருந்த இரகசியமாக இந்த வணக்கங்களை நீர் இன்று மக்களிடையே பகிரங்கப்படுத்தி விட்டீரே! என கண் கலங்கியவாறு ஜனாஸா தொழுகையை நடத்தினார்கள். நூல்:- ஹிக்காயத்துல் அவ்லியா
பிஷ்ருல் ஹாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள். உனது தவறுகளை மக்களிடம் நீ மறைப்பது போல், நீ நற்செயல்களையும் மறைத்து செய்! அதற்கு பெயர் தான் மனத்தூய்மை ஆகும்.
இக்லாஸ் உடன் நாம் செய்யும் அமல் நமக்கு நரக விடுதலை பெற்றுத் தரும்
முதல் தொழுகையே எனக்கு சிறந்ததாகப்படுகிறது
ஒருமுறை ஜனாதிபதி அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூஃபா நகரின் பள்ளிவாசலொன்றில் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி அப்பள்ளிக்கு வந்து விரைவாக தொழுதுவிட்டுத் திரும்பினார்.
அதை கண்காணித்துக் கொண்டிருந்த அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த கிராமவாசியை அழைத்தார்கள். "நண்பரே தொழுகையை இவ்வளவு வேகமாக தொழக்கூடாது" என்று கூறி அவருக்கு தொழுகைகளின் முறைகளையும் அதில் பேணப்பட வேண்டிய நிதானத்தையும் முறையாக கற்றுக்கொடுத்தார்கள். அவரை மீண்டும் திரும்பத் தொழுமாறு பணித்தார்கள்.
அம்மனிதரும் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கற்றுத் தந்த முறைப்படியே தொழுது திரும்பினார். அப்போது அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், “நண்பரே! பாராட்டுக்கள். இப்போதுதான் நீர் முறையாக தொழுதீர்!” என்று கூறினார்கள்.
அதை செவியுற்ற அம்மனிதர், “ஜனாதிபதி அவர்களே! நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எனது கணிப்பில் நான் தொழுத முதல் தொழுகையே சிறந்ததாகப்படுகிறது. ஏனெனில், அது அல்லாஹ்வுக்காக மட்டும் தொழுகப்பட்டது.
எனது இரண்டாவது தொழுகை தாங்கள் குறைக் கண்டுவிடக்கூடாதே! என்ற எண்ணத்தில் நிறைவேற்றப்பட்டது!” என்று கூறினார். அவர் மனத்தூய்மைக்கு முதலிடம் அளித்ததை அறிந்த ஜனாதிபதி அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அமைதியானாள் கள்.
தர்மம் செய்வது
சிறிய தர்மமானாலும் அது நரகிலிருந்து காக்கும் என்பதற்கு:
اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ
பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டைக் கொடுத்தாவது நரக நெருப்பிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பேரீச்சம்பழமும் நரக விடுதலையும்
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒருமுறை ஒரு ஏழைத் தாய் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் என்னிடம் வந்து தர்மம் கேட்டார். அந்த நேரத்தில் என்னிடம் ஒரே ஒரு பேரீச்சம்பழம் மட்டுமே இருந்தது. அதை நான் அந்தத் தாயிடம் கொடுத்தேன்.
அந்தத் தாய் தான் பசியோடு இருந்தபோதும், அந்த ஒரு பழத்தை இரண்டு பாதியாகப் பிட்டு தனது இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்தார். அவர் எதையும் உண்ணவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றுவிட்டார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, நடந்த இந்தச் சம்பவத்தை நான் அவர்களிடம் கூறினேன்.
அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"யார் இதுபோன்று பெண் குழந்தைகளால் சோதனைக்குள்ளாக்கப்பட்டு (வறுமையிலும்), அவர்களுக்கு நன்முறை செய்கிறாரோ, அந்தப் பெண் குழந்தைகள் அவருக்கு நரக நெருப்பிலிருந்து ஒரு திரையாக (பாதுகாப்பாக) இருப்பார்கள்.” நூல்: புகாரி
ரூமா கிணற்றை விலைக்கு வாங்கி தர்மம் செய்தல்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த ஆரம்ப காலத்தில், மதீனாவில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. 'ரூமா' என்ற இடத்தில் ஒரு கிணறு இருந்தது, ஆனால் அதன் உரிமையாளரான ஒரு யூதர், அதன் தண்ணீரை மிக அதிக விலைக்கு விற்று வந்தார். ஏழை முஸ்லிம்களால் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியவில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அறிவிப்பைச் செய்தார்கள்:
"யார் ரூமா கிணற்றை விலைக்கு வாங்கி, முஸ்லிம்களுக்காக (தர்மமாக) அர்ப்பணிக்கிறாரோ, அவருக்குச் சொர்க்கம் உண்டு. அவர் தனது வாளியை முஸ்லிம்களின் வாளிகளோடு (சமமாக) ஆக்கிக்கொள்ளட்டும் (அவருக்கும் மற்றவர்களுக்கும் சம உரிமை)."
இந்த நற்செய்தியைக் கேட்டவுடன் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த யூதரிடம் சென்றார்கள். அவர் முதலில் கிணற்றை விற்க மறுத்தார். பிறகு உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு உடன்படிக்கை செய்தார்கள்: "கிணற்றின் ஒரு நாள் உரிமை எனக்கு, மறுநாள் உரிமை உமக்கு." இதற்காக பெருந்தொகையை வழங்கினார்கள்.
உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குரிய நாளில், அவர் மதீனா மக்கள் அனைவருக்கும் தண்ணீரை இலவசமாகத் தர்மம் செய்தார்கள். மக்கள் தங்களுக்குத் தேவையான தண்ணீரை அன்றே சேமித்துக் கொண்டனர்.
இதனால் மறுநாள் அந்த யூதரிடம் யாரும் தண்ணீர் வாங்கச் செல்லவில்லை. வியாபாரம் இழந்த அந்த யூதர், மீதிப் பாதியையும் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமே விற்றுவிட்டார். உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்தக் கிணறு முழுவதையும் அல்லாஹ்வுக்காக 'வக்ஃப்' (தர்மம்) செய்தார்கள்.
கைவிடப்பட்ட விதவையும் செல்வந்தரின் தர்மமும்
நிஷாபூர் நகரில் ஒரு பெரும் செல்வந்தர் இருந்தார். அவர் ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாதத்தில் மிகப்பாரிய அளவில் ஏழைகளுக்கு உணவளிப்பதையும் தர்மம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருமுறை அவர் தனது வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தபோது, தெருவில் ஒரு பெண்மணி குப்பைத் தொட்டியில் எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். கூர்ந்து கவனித்தபோது, அந்தப் பெண்மணி ஒரு காய்ந்த எலும்புத் துண்டைக் கண்டெடுத்து, அதில் ஒட்டியிருந்த மிகச்சிறிய இறைச்சித் துகள்களைச் சுரண்டித் தனது ஆடையின் ஒரு பகுதியில் மறைத்து வைத்துக் கொண்டார்.
அந்தச் செல்வந்தர் இதைக் கண்டு திடுக்கிட்டு, தனது பணியாளரை அனுப்பி அந்தப் பெண்மணியை அழைத்து வரச் சொன்னார். அவர் வந்ததும் மிகுந்த மரியாதையுடன், "தாயே! நீங்கள் ஏன் அந்தக் குப்பையிலிருந்து அந்த எலும்பை எடுத்தீர்கள்?" என்று கேட்டார்.
முதலில் சொல்ல மறுத்த அந்தப் பெண்மணி, பிறகு அழுதுகொண்டே கூறினார்:
நான் ஒரு விதவை. எனக்கு நான்கு சிறிய பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மூன்று நாட்களாக எங்கள் வீட்டில் அடுப்பு எரியவில்லை. என் பிள்ளைகள் பசியால் சுருண்டு கிடக்கிறார்கள். அவர்கள் பசியால் இறந்துவிடுவார்களோ என்று அஞ்சி, வேறு வழியின்றி அந்த எலும்பிலாவது ஏதாவது ஒட்டியிருக்குமா என்று தேடினேன். இதை நீரில் வேகவைத்து அந்த நீரையாவது என் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம் என்று நினைத்தேன்."
இதைக்கேட்ட அந்த செல்வந்தரின் கண்கள் குளமாயின. அவர் உடனடியாக
தனது வீட்டின் ஒரு பகுதியை அந்தப் பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் தங்குவதற்கு வழங்கினார்.
அந்தப் பெண்மணிக்கு வாழ்நாள் முழுவதும் தேவையான உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளைத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்குத் தர்மம் செய்வதை ஒரு கடமையாகக் கருதாமல், அல்லாஹ்வின் திருப்திக்காகச் செய்யும் ஒரு பெரும் பாக்கியமாகக் கருதினார்கள்.
அந்த செல்வந்தர் மரணித்த பிறகு, அவரது ஊர் மக்களில் ஒருவர் அவரை ஒரு கனவில் கண்டார்கள். அவர் மிகுந்த பிரகாசத்துடன் சொர்க்கத்தின் தோட்டங்களில் உலா வந்து கொண்டிருந்தார். அவரிடம், "அல்லாஹ் உங்களை எப்படி நடத்தினான்?" என்று கேட்கப்பட்டது.
"நான் செய்த ஹஜ், உம்ரா மற்றும் பல அமல்கள் இருந்தன. ஆனால், அல்லாஹ்விடம் அவை அனைத்தும் ஏதோ ஒரு காரணத்தினால் (புகழ் அல்லது பெருமை போன்ற சிறு குறைகளால்) தள்ளுபடி செய்யப்பட்டன. நான் நரகத்திற்குச் செல்வேன் என்று அஞ்சியபோது, அந்த விதவைப் பெண்மணிக்கும் அவரது நான்கு பெண் குழந்தைகளுக்கும் நான் செய்த அந்த மறைமுகமான தர்மத்தை அல்லாஹ் எனக்கு முன்னால் கொண்டு வந்தான். 'எனது அடியார் ஒருவரின் பசியைத் தீர்த்து, அவரை நீ கண்ணியப்படுத்தினாய்; இன்று நான் உன்னை நரகிலிருந்து விடுவித்து கண்ணியப்படுத்துகிறேன்' என்று அல்லாஹ் கூறினான்." நூல்:அல்-முன்தழம் இமாம் இப்னுல் ஜவ்ஸீ (Ibn al-Jawzi).
அல்லாஹ்விற்காக அழுத கண்கள்
لاَ يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ»
இயலாத காரியம் (Impossible Event):
மடியில் இருந்து கறந்த பால் மீண்டும் மடிக்குள் செல்வது எப்படி இயற்கைக்கு மாறானதோ மற்றும் நடக்க முடியாத ஒன்றோ, அதுபோல உண்மையாக இறைவனது அச்சத்தால் கண்ணீர் சிந்திய ஒருவன் நரகிற்குச் செல்வதும் நடக்காது. இது ஒரு மிகச்சிறந்த உவமையாகும்.
உமர் (ரலி) அவர்களின் கண்ணீர்த் தழும்புகள்
வரலாற்றில் உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகக் கண்டிப்பானவர்களாக அறியப்பட்டார்கள். ஆனால் அல்லாஹ்வின் அச்சம் என்று வரும்போது, அவர்கள் அதிகம் அழுபவர்களாக இருந்தார்கள்.
அவர்களது கன்னங்களில் கண்ணீர் வழிந்து ஓடியதால், இரண்டு கருப்புத் தழும்புகள் (கோடுகள்) நிரந்தரமாக விழுந்திருந்தன.
குர்ஆன் வசனங்களை ஓதும்போது அல்லாஹ்வின் தண்டனையை நினைத்து பயந்து, பல நாட்கள் நோயுற்றவரைப் போல படுக்கையில் கிடப்பார்கள்.
அவர்களது இந்த அழுகையும் அச்சமும்தான் அவர்களுக்கு நரக விடுதலையையும், சொர்க்கத்தின் நற்செய்தியையும் பெற்றுத் தந்தது.
மரணத் தறுவாயில் நடுங்கிய மனிதர்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: முந்தைய காலத்தில் ஒருவர் இருந்தார். அவர் தனது வாழ்நாளில் பல பாவங்களைச் செய்திருந்தார். மரணம் அவரை நெருங்கியபோது, அல்லாஹ்வின் விசாரணைக்கு முன்னால் தான் எப்படி நிற்கப் போகிறோம் என்ற அச்சம் அவர் உள்ளத்தை உலுக்கியது.
அவர் தனது பிள்ளைகளை அழைத்து, "நான் மரணித்த பிறகு என் உடலை எரித்துச் சாம்பலாக்கி விடுங்கள். பிறகு அந்தச் சாம்பலைப் பொடியாக்கி, பாதிச் சாம்பலைக் காற்றிலும், மீதிப் பாதியை கடலிலும் தூவி விடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் என்னைப் பிடித்துவிட்டால் எவருக்கும் கொடுக்காத தண்டனையை எனக்குக் கொடுப்பான்" என்று கூறினார்.
(இறைவனின் தண்டனைக்கு பயந்து அவர் இதைச் சொன்னார்).
அல்லாஹ்வின் வல்லமை: அவர் மரணித்த பின் பிள்ளைகள் அப்படியே செய்தனர். ஆனால், அல்லாஹ் நிலத்திற்கும் கடலுக்கும் கட்டளையிட்டு, அவரது சாம்பலை ஒன்று திரட்டி அவரை மீண்டும் உயிராக்கினான்.
அல்லாஹ் அந்த மனிதனிடம், "அடியாரே! நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கேட்டான்.
அவர் நடுங்கிக் கொண்டே, "இறைவா! உனது அச்சத்தால் (உன் தண்டனைக்கு பயந்து) தான் நான் இப்படிச் செய்தேன். அதை நீ நன்கு அறிவாய்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் மீது அவர் கொண்டிருந்த அந்த அளப்பரிய அச்சத்தைக் கண்டு அல்லாஹ் அவரை மன்னித்து, அவருக்கு நரக விடுதலையை வழங்கி சொர்க்கத்தில் சேர்த்தான். நூல்:புகாரி
நோன்பு நரகிற்கு கேடயம் என்பதற்கு:
الصِّيَامُ جُنَّةٌ مِنَ النَّارِ
நோன்பு நரக நெருப்பிலிருந்து (பாதுகாக்கும்) கேடயமாகும்.
"நோன்பு என்பது ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் போர்க்களத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் பயன்படுத்தும் கேடயத்தைப் போன்றே, நோன்பு நரக நெருப்பிலிருந்து உங்களைக் காக்கும் கேடயமாகும்."
(நூல்: நஸயீ
போர்க்களத்தில் ஒரு கேடயம் எப்படி எதிரியின் வாள் வீச்சிலிருந்து ஒரு வீரனைக் காப்பாற்றுகிறதோ, அதுபோல நோன்பு மறுமையில் நரகின் வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
"எவர் அல்லாஹ்வின் பாதையில் (அவனது திருப்தியை நாடி) ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அல்லாஹ் அவரது முகத்தை நரக நெருப்பை விட்டும் எழுபது ஆண்டுகால தொலைவிற்கு அப்பால் அகற்றி விடுகிறான்." (நூல்: புகாரி
சொர்க்கத்தில் பல வாசல்கள் உள்ளன. அதில் 'ரய்யான்' என்ற வாசல் நோன்பாளிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
"சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று அழைக்கப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பு நோற்றவர்கள் மட்டுமே நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அந்த வாசல் மூடப்படும்; வேறு எவரும் அதன் வழியாக நுழைய முடியாது." நூல்: புகாரி
நரகத்திலிருந்து விடுதலை பெற்றவர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம் இந்த வாசல் வழியாகச் சொர்க்கம் செல்வதாகும்.
ரமழான் மாதம் முழுவதுமே நரக விடுதலையை அள்ளித்தரும் மாதமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து பலரை விடுதலை செய்கிறான்."நூல் திர்மிதி
குறிப்பாக ரமழானின் கடைசி பத்து நாட்கள் 'நரக விடுதலை' (இத்குன் மினன் நார்) என்று சிறப்பிக்கப்படுகிறது.
எனவே, நாம் செய்யும் ஒரு சிறு தர்மமாக இருந்தாலும், அது யாருக்கும் தெரியாமல் அல்லாஹ்வுக்காக மட்டும் இருக்கட்டும். நாம் சிந்தும் ஒரு துளி கண்ணீர் நம்முடைய எல்லாப் பாவங்களையும் எரித்து சாம்பலாக்கும் ஆற்றல் கொண்டது. நரக நெருப்பிலிருந்து தப்பிக்க ஒரு பேரீச்சம்பழத் துண்டையாவது தர்மம் செய்யுங்கள் என்ற நபிகளாரின் வாக்கிற்கேற்ப, நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம். அல்லாஹ் நம் அனைவரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பானாக!”
எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்களின் சிறிய அமல்களையும் உனது இக்லாஸைக் கொண்டு ஏற்றுக்கொள்வாயாக!
எம் கண்களில் உனது அச்சத்தால் வழியும் கண்ணீருக்கு நரக நெருப்பை ஹராமாக்கி வைப்பாயாக!
நாங்கள் நோற்ற நோன்புகளையும், செய்த தர்மங்களையும் எங்களுக்கும் எங்கள் பெற்றோர்களுக்கும் நரகிலிருந்து காக்கும் திரையாக ஆக்கி வைப்பாயாக!
இறுதி மூச்சு பிரியும்போது 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற திருக்கலிமாவுடன், உனது திருப்தியைப் பெற்ற நிலையில் எம் உயிரைக் கைப்பற்றுவாயாக!
எங்களை, எங்கள் குடும்பத்தாரை, எம் உம்மத்து முஹம்மதியாவை நரக வேதனையிலிருந்து முழுமையாக விடுதலை செய்து, உனது ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் ஒன்றிணைப்பாயாக! ஆமீன்... ஆமீன்... யாரப்பல் ஆலமீன்.
தொகுத்தவர்.
மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.
தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.
Cell : +91 90949 86824.
முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக