பக்கங்கள்

வியாழன், 12 மார்ச், 2026

இரும்பை நாமே இறக்கினோம்

 


‌தராவீஹ் பயான் பிறை – 23

தலைப்பு : “இரும்பை நாமே இறக்கினோம் ”

ஹிஜ்ரி 1447. 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد


لَـقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِيْزَانَ لِيَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ‌ وَاَنْزَلْنَا الْحَـدِيْدَ فِيْهِ بَاْسٌ شَدِيْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَـعْلَمَ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ وَ رُسُلَهٗ بِالْغَيْبِ‌ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ‏

நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். (அல்குர்ஆன் : 57:25)


இன்று தராவீஹ் தொழுகையில் ஓதப்பட்ட ஸூரத்துல் ஹதீத் அத்தியாயத்தில் முக்கியமான வசனங்களில் மேற்சொன்ன வசனங்களில் மனித சமூகத்தின் ஆன்மீக, சமூக மற்றும் பருப்பொருள் சார்ந்த வாழ்விற்குத் தேவையான மிக முக்கியமான அடித்தளங்களை விளக்குகிறது.


அல்லாஹ் சும்மா வழிகாட்டவில்லை; ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனிதர்களுக்குப் புரியும் வகையில் 'பய்யினாத்' (தெளிவான அத்தாட்சிகள்) மூலம் தூதர்களை அனுப்பினான்.


இன்று நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய அத்தாட்சி திருக்குர்ஆன். இது காலங்களைக் கடந்து உண்மையை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது.


அல்கிதாப் இது ஒரு சட்டப் புத்தகம். எது 'ஹலால்', எது 'ஹராம்' என்பதைத் தீர்மானிப்பது.


அல்மீஸான் (தராசு/நீதி) வெறும் சட்டம் மட்டும் போதாது, அதைச் சரியாக நிலைநாட்டும் 'நீதி' வேண்டும். ஒரு சமூகம் அமைதியாக வாழ வேண்டுமானால், அங்கு கொடுக்கல் வாங்கலிலும், உரிமைகளிலும் நீதி (Al-Qist) பேணப்பட வேண்டும்.


இரும்பு அறிவியல் அதிசயம் (The Miracle of Iron)


பஃஸுன் ஷதீத் (கடுமையான சக்தி) இரும்பு பாதுகாப்பிற்கும், ஆக்கபூர்வமான வலிமைக்கும் அடையாளம்.


ஊசி முதல் ஆகாய விமானம் வரை இன்று இரும்பு இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்ய முடியாது. அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை இது.


வேதம் - தராசு


இந்த இரண்டு அம்சங்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. ஒன்று கொள்கை, இன்னொன்று செயல்பாடு.


அல்கிதாப் (வேதம்) – கொள்கை வழிகாட்டி

வேதம் என்பது ஒரு சமூகத்திற்கான அரசியலமைப்பு (Constitution) போன்றது.


இருட்டில் இருப்பவனுக்கு விளக்கு எப்படித் தேவையோ, அதுபோல குழப்பத்தில் இருக்கும் சமுதாயத்திற்கு எது உண்மை, எது பொய் என்பதை வேதம் பிரித்துக் காட்டுகிறது.


மனிதன் தன் இஷ்டத்திற்கு வாழாமல், படைத்தவனின் விருப்பப்படி வாழ்வதற்கான 'ஹலால்-ஹராம்' என்ற எல்லைக்கோடுகளை இது வகுக்கிறது.


அல்மீஸான் (தராசு) – நடைமுறை நீதி

வேதம் கையில் இருந்தும், நீதி (Justice) இல்லையென்றால் அந்தச் சமூகம் அழிந்துவிடும். 'மீஸான்' என்பதற்கு குர்ஆன் விரிவுரையாளர்கள் தரும் விளக்கங்கள்:


கொடுக்கல் வாங்கலில் (Business) நேர்மை பேணுதல். ஒருவருக்குக் கொடுக்கும்போது குறைத்தும், வாங்கும்போது அதிகப்படுத்தியும் வாங்குவது மீஸானை மீறும் செயலாகும்.


ஏழை, பணக்காரன், அதிகாரம் உள்ளவன், இல்லாதவன் என அனைவருக்கும் சட்டம் சமமாக இருக்க வேண்டும்.


நடுநிலைமை: உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், குர்ஆன் காட்டிய வழியில் நடுநிலையோடு தீர்ப்பு வழங்குவது.


" அதுபோலவே, குர்ஆன் இருந்தும் நம் வாழ்வில் 'நீதி' (Justice) இல்லையென்றால் நம்முடைய சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்துவிடும்."

சமூக நீதி (Al-Qist) குறித்த முக்கிய குறிப்பு:

இந்த வசனத்தில் 'லியகூமன் நாஸு பில்கிஸ்த்' (மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக) என்று அல்லாஹ் கூறுகிறான். அதாவது, நீதி என்பது வெறும் ஆட்சியாளர்கள் மட்டும் செய்ய வேண்டியது அல்ல; ஒவ்வொரு தனிமனிதனும் தன் குடும்பத்திலும், வியாபாரத்திலும், பேச்சிலும் நீதியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே இதன் ஆழமான பொருள்.

மக்ஸூமி குலத்துப் பெண்ணும் நபிகளாரின் நீதியும்

மக்காவில் குரைஷி குலத்திலேயே மிகவும் கண்ணியமிக்கதாகக் கருதப்பட்ட 'பனூ மக்ஸூம்' கிளையைச் சேர்ந்த ஒரு பெண் திருட்டு வழக்கில் பிடிபட்டார். அந்தப் பெண்ணுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அந்தக் காலத்து மக்கள், "பெரிய குலத்தைச் சேர்ந்த பெண்ணுக்குத் தண்டனை கொடுத்தால் அது அந்தத் தாராள மனப்பான்மை கொண்ட குலத்திற்கே அவமானம்" என்று கருதினார்கள். தண்டனையைக் குறைக்க அல்லது ரத்து செய்ய நபிகளாரிடம் பரிந்துரை செய்ய யாரை அனுப்பலாம் என்று யோசித்தார்கள்.

உஸாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பரிந்துரை:

நபிகளாருக்கு மிகவும் நெருக்கமானவர், 'அல்லாஹ்வின் தூதரின் செல்லப்பிள்ளை' என்று அழைக்கப்பட்ட உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அந்தப் பெண்ணுக்காகப் பரிந்துரை செய்ய அனுப்பினார்கள்.

நபிகளாரின் அதிரடிப் பதில்:

உஸாமா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பரிந்துரை செய்தபோது, நபிகளாரின் முகம் கோபத்தால் சிவந்தது. அவர்கள் மேடையில் ஏறி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார்கள்:

"உங்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயங்கள் அழிந்து போனதற்குக் காரணமே, அவர்களில் ஒரு பெரிய மனிதர் (பணக்காரர்) திருடினால் அவரை விட்டுவிடுவார்கள்; ஒரு பலவீனமானவர் (ஏழை) திருடினால் அவருக்குத் தண்டனை வழங்குவார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கிறேன்! இந்த முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடி இருந்தாலும், அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்!" (நூல் புகாரி,)

நீதி வழங்கும் இடத்தில் உறவுமுறையோ, குலப்பெருமையோ குறுக்கே வரக்கூடாது. இதுதான் அல்குர்ஆன் சொல்லும் 'அல்-கிஸ்த்' (சமூக நீதி).


பொதுவான சட்ட விவகாரங்களில் தகுதியற்ற பரிந்துரைகளை ஏற்பது சமூகத்தைச் சீரழிக்கும் என்பதை நபிகளார் தெளிவுபடுத்தினார்கள்.


தன் சொந்த மகளாக இருந்தாலும் நீதியை நிலைநாட்டுவேன் என்று கூறியதன் மூலம், உலகிற்கே ஒரு நேர்மையான தலைவருக்கான இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தார்கள்.

முழு ராஜ்ஜியமும்…

ஒருமுறை கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் பஹ்லூல் (ரஹ்) அவர்களிடம், "மக்களுக்கு நீதி வழங்குவதில் எனக்கு ஏதேனும் அறிவுரை கூறுங்கள்" என்று கேட்டார்.

அப்போது பஹ்லூல் (ரஹ்) அவர்கள் ஒரு தராசை எடுத்து வரச் சொன்னார்கள். பிறகு கலீஃபாவைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்கள்:

"அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் ஒரு பாலைவனத்தில் தாகத்தால் தவித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. அப்போது ஒருவன் ஒரு கோப்பைத் தண்ணீருடன் வருகிறான். ஆனால், அவன் அந்தத் தண்ணீருக்குப் பதிலாக உங்கள் பாதி ராஜ்யத்தைக் கேட்கிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்?"

கலீஃபா சொன்னார், "நிச்சயமாக என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பாதி ராஜ்யத்தைக் கொடுத்துவிடுவேன்."

பஹ்லூல் (ரஹ்) தொடர்ந்தார்: "சரி, அந்தத் தண்ணீரைத் குடித்த பிறகு, அது உங்கள் உடலிலிருந்து சிறுநீராக வெளியேற முடியாமல் உங்களுக்கு கடும் உபாதை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஒரு மருத்துவர் வந்து, உங்கள் மீதி இருக்கும் பாதி ராஜ்யத்தைக் கொடுத்தால் நான் அதைச் குணப்படுத்துவேன் என்கிறார். இப்போது என்ன செய்வீர்கள்?"

கலீஃபா சொன்னார், "நிச்சயமாக மீதிப் பாதியையும் கொடுத்துவிடுவேன்."

அப்போது பஹ்லூல் (ரஹ்) சிரித்துக்கொண்டே சொன்னார்கள்:

"அமீருல் மூமினீன் அவர்களே! ஒரு கோப்பைத் தண்ணீருக்கும், ஒரு முறை சிறுநீர் கழிப்பதற்கும் ஈடாகப் போகக் கூடிய இந்த ராஜ்யத்தைக் கண்டு பெருமை கொள்ளாதீர்கள். இதில் மக்களுக்கு நீதி வழங்குவதில் அணுவளவும் தவறிவிடாதீர்கள். ஏனெனில், நாளை மறுமையில் இந்த அற்பமான ராஜ்யத்தின் ஒவ்வொரு கடுகளவு அதிகாரத்திற்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

பதவி என்பது சுகபோகங்களுக்கு அல்ல, அது ஒரு சோதனை. சமூகத்தில் பலவீனமானவர்களுக்கு நீதி வழங்குவதே ஒரு ஆட்சியாளரின் முதல் கடமை. 

உலகம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது இறைவனின் பார்வையில் மிகச் சிறியது. இந்தச் சிறிய உலகத்திற்காகப் பெரிய அநீதிகளை இழைக்கக்கூடாது.

'மீஸான்' (தராசு) என்பது உலக நீதிமன்றத்தில் மட்டுமல்ல, மறுமையிலும் உண்டு. அங்கு ஆட்சியாளரும் குடிமகனும் சமமாகவே நிறுத்தப்படுவார்கள்.




அடுத்து இந்த வசனத்தில் முக்கியமான விஷயம்…


இரும்பு எனும் கனிமமானது எங்கிருந்து பெறப்படுகிறது?


 நாம் வசிக்கும் பூமியானது பல்வேறு கனிமங்களால் நிரம்பியுள்ளது. பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 3,000 வகையான கனிமங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றை பற்றிய ஆய்வு கனிமவியல் (Mineralogy)

 என்று அழைக்கப்படுகிறது.

அனைத்து வகையான கனிமங்களும் இயற்கையாகவே கிடைக்கின்றன. அவற்றை சுரங்கங்களில் இருந்து பிரித்தெடுகின்றனர்.


அந்த கனிமங்களில் தங்கம், வெள்ளி, அலுமினியம், தாமிரம், இரும்பு ஆகிய சிலவற்றை பற்றியே நாம் அனைவரும் பொதுவாக அறிந்து வைத்துள்ளோம்.

இந்த கனிமங்கள் மூலமாகவே ஏராளமான அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.


பொதுவாகவே எல்லா வகையான கனிமங்களும் பூமியிலிருந்தே கிடைக்கக் கூடியதாக இருந்தாலும், அவற்றில் இரும்பு எனும் கனிமம் மட்டுமே மிகவும் தனித்துவமானது.

ஏனெனில், இரும்பானது மற்ற கனிமங்களை போல் பூமியில் உருவாவதில்லை. மாறாக, அது வானிலிருந்து பெறக்கூடிய கனிமமாக இருக்கிறது. இதனைக் குறித்தே கீழ்கண்ட வசனத்தில் இறைவன் குறிப்பிட்டுள்ளான்..


لَـقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِيْزَانَ لِيَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ‌ وَاَنْزَلْنَا الْحَـدِيْدَ فِيْهِ بَاْسٌ شَدِيْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَـعْلَمَ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ وَ رُسُلَهٗ بِالْغَيْبِ‌ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ‏

நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) தராசையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். (அல்குர்ஆன் : 57:25)


இந்த வசனத்தில் இறைவன் நமக்கு இறக்கியருளியுள்ள மூன்று விதமான அற்புதங்களைக் குறித்து கூறியுள்ளான்.


1) அல்லாஹ்வின் வேதம்

2)மீஸான் எனும் நீதித் தராசு

3) இரும்பு


இந்த மூன்று விதமான அற்புதங்களையும் நாம் இறக்கினோம் என்று இறைவன் கூறுவதின் மூலமாக, இரும்பு எனும் கனிமமானது இறைவனால் வானிலிருந்து இறக்கப்படக்கூடிய அற்புதம் என்பது தெளிவாகிறது.


ஆரம்ப காலம் முதலே இரும்பை குறித்து மக்கள் அறிந்திருந்தாலும், அதை உருக்கி பொருட்கள் செய்வதற்கான முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே ஆரம்ப காலங்களில் வெறும் சடங்குகளுக்காக மட்டுமே இரும்பு உலோகத்தை பயன்படுத்தியுள்ளனர்.


ஆனால் தாவூது(அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு இரும்பை இறைவன் மிருதுவாக்கி கொடுத்ததின் மூலம், அதன் பயன்பாடுகளை இறைவன் கற்றுக் கொடுத்தான். எனவே தாவூது(அலை) அவர்களே முதன் முதலில் போர்க்கவசங்களை இரும்பின் மூலம் செய்ய ஆரம்பித்தார்கள்.


அதன் பிறகே, இரும்பை உருக்கி அதன் மூலம் பல்வேறு பொருட்களை செய்ய மக்கள் கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.


இதன் மூலம் சமூக வளர்ச்சியும் முன்னேற்றமும் பெருமளவில் ஏற்பட ஆரம்பித்தது. எனவே சமூக வளர்ச்சிக்கு பெரும்காரணமாக இரும்பின் பயன்பாடு இருந்ததால், அதன் பயன்பாடு ஆரம்பமான அந்த காலகட்டமானது 'இரும்பு யுகம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.


இவ்வாறு மனித சமுதாயத்தின் முன்னேற்றமானது அடுத்தகட்டத்துக்கு செல்ல இரும்பு காரணமாக இருந்ததால்தான் அதைப் பற்றி இறைவன் தன் திருமறையில் தனித்துவமாக குறிப்பிட்டுள்ளான்...


وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا يٰجِبَالُ اَوِّبِىْ مَعَهٗ وَالطَّيْرَ وَاَلَــنَّا لَـهُ الْحَدِيْدَ ۙ‏

இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம். (அல்குர்ஆன் : 34:10)


தாவூது(அலை) அவர்கள் வாழ்ந்தது ஜெருஸ்ஸலமில்.. அந்த ஊருக்கு அண்டை நகரமான எகிப்தில்தான் மிகப் பழமையான இரும்பு மணிகளை 1911 ஆம் ஆண்டு ஒரு கல்லறையில் இருந்து ஆய்வாளர்கள் எடுத்துள்ளனர். அவை இரும்புத்தாதை உருக்கிச் செய்யப்பட்டவை அல்ல. மாறாக, விண்கற்களில் இருந்து கிடைத்த இரும்பில் செய்யப்பட்டவை என்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.


 வானிலிருந்து பூமிக்கு தினமும் விண்கற்கள் விழுந்துக் கொண்டேதான் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை கடலிலும், மற்றவை வறண்ட நிலத்திலுமே விழுகின்றன. அவ்வாறு பூமியில் விழக்கூடிய விண்கற்கள் மூலமாகவே இரும்பு எடுக்கப்படுகிறது.


விண்கற்கள் எதனால் பூமியின் மீது விழுகின்றன என்பதைப் பற்றி இறைவன் தன் திருமறையில் தெளிவாகக் கூறியிருக்கிறான்.

அதாவது, விண்கல் என்பது நட்சத்திரமாகும். 

அந்த நட்சத்திரங்கள் மூலமாகவே வான்வெளிப்பாதையை ஷைத்தான்கள் நெருங்காத வண்ணம் இறைவன் பாதுகாக்கிறான்.


وَلَـقَدْ زَيَّـنَّا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ‌ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ‏

அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம். (அல்குர்ஆன் : 67:5)


வானத்தை ஷைத்தான்கள் நெருங்காமல் இருக்க அந்த பகுதியை நெருப்பாலான தீப்பந்தங்கள் மூலம் பாதுகாப்பதாக இறைவன் கூறியுள்ளான்..


وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًا ۙ‏

“நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

(அல்குர்ஆன் : 72:8)


அந்த தீப்பந்தங்களுக்கு உதாரணமானது மனிதர்கள் பயன்படுத்தும் மின்சார வேலிகளாகும். அந்த தீப்பந்தம் எனும் மின்சார வேலியை ஷைத்தான்கள் நெருங்க முயற்சிக்கும்போது அவர்களை நட்சத்திரங்கள் எரிகற்களாக துரத்தியடிக்கும். அவ்வாறு முழு வீச்சுடன் வேகமாக வீசப்படுகின்ற நட்சத்திரங்கள் எனும் எரிகற்களே வானத்தின் எல்லையை தாண்டி பூமியை நெருங்கும்போது இறந்து விடுகின்றன.


ஏனெனில், அல்லாஹ் படைத்த அனைத்து படைப்புகளுக்கும் ரூஹ் எனும் உயிர் இருக்கிறது என்ற அடிப்படையில், நட்சத்திரங்களுக்கும் உயிர் உண்டு. அவை உயிருடன் இருப்பதால்தான் வானில் பிரகாசமாக மின்னக்கூடியவையாக இருக்கின்றன. வானத்தில் வீசுகின்ற மிதக்க வைக்கும் காற்றின் மூலமாகவே அவை உயிருடன் இருக்கின்றன. எனவே வானின் எல்லையைத் தாண்டி பூமியை அவை அடையும்போது , காற்றின் தன்மை மாறுவதால் அவை இறந்து விடுகின்றன.


எனவேதான் அவை வானில் இருக்கும் வரை எரி நட்சத்திரம் என்றும், அது பூமியில் விழுந்த பிறகு விண்கல் என்றும் சொல்லப்படுகிறது.


சிறுவர் தாவூத் அலை அவர்களின் இரும்பின் வீரியமும்


பனூ இஸ்ரேவேலர்களுக்கும், ஜாலூத் (Goliath) தலைமையிலான பெரும் படைக்கும் போர் மூண்டது. ஜாலூத் என்பவன் மலை போன்ற உருவம் கொண்டவன், இரும்பு கவசங்களால் தன்னை முழுமையாக மூடி மறைத்திருந்த ஒரு மாவீரன். அவனது வலிமையைக் கண்டு தாலூத்தின் படையில் இருந்த வீரர்கள் அஞ்சி நடுங்கினர்.


அப்போது சிறுவராக இருந்த தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முன்வந்து, "அந்த ஜாலூத்தை நான் வீழ்த்துவேன்" என்று கூறினார்கள். 


தாலூத் மன்னர் தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு கனமான இரும்பு கவசத்தையும் வாளையும் கொடுத்தார். ஆனால், அந்த பாரத்தை சுமக்கப் பழகாத தாவூத் (அலை), அவற்றை அகற்றிவிட்டு, தனது கையில் இருந்த வடிதட்டி (உண்டி கோல்) (Sling) மற்றும் சில கற்களை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள்.


ஜாலூத் தனது இரும்பு கவசத்தின் பின்னால் நின்று கொண்டு தற்பெருமை பேசினான். ஆனால், தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் எறிந்த கல், ஜாலூத்தின் கவசங்களுக்கு இடையிலிருந்த மிகச்சிறிய இடைவெளியைத் துல்லியமாகத் தாக்கியது. அல்லாஹ்வின் நாட்டப்படி அந்த ஒரு சிறு கல், இரும்பு கவசத்தை விடவும் வலிமை பெற்று ஜாலூத்தின் உயிரைப் பறித்தது.


இந்த வெற்றிக்குப் பிறகுதான் அல்லாஹ் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இரும்பை வசப்படுத்திக் கொடுத்தான். அவர்கள் பழைய காலத்து கனமான, அசைய முடியாத இரும்புத் தகடுகளை மாற்றி, இலகுவான மற்றும் நெகிழ்வான சங்கிலிக் கவசங்களை (Chainmail) உருவாக்கினார்கள்.


"இரும்பில் கடும் சக்தி இருக்கிறது" என்று அல்லாஹ் கூறினாலும், அந்தச் சக்தி அல்லாஹ்வின் அனுமதி இன்றி எதையும் செய்ய முடியாது. 


ஜாலூத்திடம் இரும்பு இருந்தது, ஆனால் ஈமான் (நம்பிக்கை) இல்லை. தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் ஈமான் இருந்தது, பிறகு இரும்பும் அவர்களுக்கு அடிபணிந்தது.


தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் போர்க்களத்தில் வெறும் வீரத்தை மட்டும் நம்பவில்லை. அவர்கள் இரும்பை உருக்கி, தற்காப்புத் துறையில் (Defence) பெரும் புரட்சியைச் செய்தார்கள். 


இது முஸ்லிம்கள் நவீன தொழில்நுட்பத்திலும் வலிமை பெற வேண்டும் என்பதற்குச் சான்று.


நீதியை நிலைநாட்ட வலிமை தேவை: "லியகூமன் நாஸு பில்கிஸ்த்" (மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக) என்று அல்லாஹ் கூறுவதால், அந்த நீதியைக் காக்க ஜாலூத் போன்ற அநீதிமான்களை வீழ்த்தும் வலிமையான இரும்பு (ஆயுதங்கள் மற்றும் ராணுவம்) அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.


வலிமார்கள் மற்றும் இரும்பு 

இறைநேசர்களின் உள்ளத்தை இரும்புடன் ஒப்பிட்டுப் இவ்வாறு கூறுவார்கள்:


"இரும்பு நெருப்பில் பழுக்கும்போது நெருப்பின் குணத்தைப் பெறுகிறது. அதுபோல ஒரு முஃமினின் உள்ளம் இறை நினைவிலும் (திக்ரு), சோதனைகளிலும் பழுக்கும்போது, அது சாதாரண மனித பலத்தைத் தாண்டி இறைவனின் பேராற்றலைப் பிரதிபலிக்கிறது."


அல்லாஹ் நமக்கு வழங்கிய இந்த 'கிதாப்' (குர்ஆன்) ஒரு வெறும் அலங்காரப் புத்தகம் அல்ல. அது நம் வாழ்வின் இருளை அகற்றும் விளக்கு. நம்முடைய ஒவ்வொரு செயலிலும் 'இது ஹலாலா? ஹராமா?' என்று வேதத்தைக் கொண்டு நாம் உரசிப் பார்க்க வேண்டும்.


நபிகளார் தன் மகளாக இருந்தாலும் நீதியை நிலைநாட்டுவேன் என்றார்கள். வலிமார்கள் அதிகாரத்தின் முன் உண்மையைச் சொன்னார்கள். நம்முடைய குடும்பத்தில், வியாபாரத்தில், கொடுக்கல் வாங்கலில் நாம் அணுவளவும் அநீதி இழைக்காத 'மீஸான்' (தராசு) உடையவர்களாக மாற வேண்டும்.


தாவூத் (அலை) அவர்களின் கையில் இரும்பு மெழுகாக மாறியது போல, நம்முடைய ஈமான் உறுதியாக இருந்தால் இந்த உலகத்தின் சோதனைகள் நமக்கு மெழுகாக மாறிவிடும். 


அல்லாஹ் இந்த வசனத்தில், 'மறைமுகமாகத் தனக்கும் தன் தூதருக்கும் உதவி செய்பவர் எவர் என்பதை அறிந்து கொள்ளவே இவற்றைத் தந்தேன்' என்கிறான். அல்லாஹ்வுக்கு நம் உதவி தேவையில்லை; ஆனால் மார்க்கத்திற்காக நாம் கொடுக்கும் ஒவ்வொரு சிறு பங்களிப்பும் நமது மறுமை வெற்றியைத் தீர்மானிக்கும்.

அல்லாஹ் நம் அனைவரையும் குர்ஆனின் வழிகாட்டுதலின்படி வாழும் நீதியுள்ளவர்களாகவும், தீமைகளை எதிர்க்கும் இரும்பு போன்ற மன உறுதி கொண்டவர்களாகவும் ஆக்கி அருள்வானாக!


யாஅல்லாஹ்! எங்கள் உள்ளங்களில் உனது வேதத்தின் (அல்கிதாப்) ஒளியை நிரப்புவாயாக! அதன் கட்டளைகளைக் கேட்டு நடக்கும் பாக்கியத்தை எமக்குத் தருவாயாக!


யா அல்லாஹ்! எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும், கொடுக்கல் வாங்கலிலும், குடும்பத்திலும் நீதியை (அல்கிஸ்த்) நிலைநாட்டும் தகுதியை எமக்குத் தருவாயாக! பிறருக்கு அநீதி இழைப்பதிலிருந்தும், அநீதிக்குத் துணை போவதிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக!


யா அல்லாஹ்!ஹழ்ரத் தாவூத் (அலை) அவர்களுக்கு இரும்பை மென்மையாக்கிக் கொடுத்தது போல, எங்களின் கடினமான சோதனைகளை மென்மையாக்கித் தருவாயாக! தீமைகளைத் தகர்க்கும் இரும்பைப் போன்ற மன உறுதியை (பஃஸுன் ஷதீத்) எங்கள் ஈமானில் தருவாயாக!


யா அல்லாஹ்! உனது தூதருக்கும் உனது தீனுக்கும் மறை

முகமாகவும், நேரிடையாகவும் எந்நேரமும் உதவி செய்யும் முஃமின்களாக எங்களை ஆக்கி வைப்பாயாக! எங்களுடைய சிறு முயற்சிகளையும் அங்கீகரித்துக் கொள்வாயாக! ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.


தொகுத்தவர்.

மவ்லவி B.முஹம்மது ராஃபி ரஷீதி.

தலைமை இமாம். மஸ்ஜிதே முபாரக் கிருஷ்ணாம்பேட்டை அரக்கோணம்.

Cell : +91 90949 86824.


முந்தைய பதிவுகள் வாசிக்க 👇 கிளிக் செய்யவும்.

ரமலான்.2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக