பக்கங்கள்

ஞாயிறு, 21 ஜூலை, 2024

“கையில் என்ன கட்டு?"


அரசன் ஒருவன் அமைச்சனோடு தனது நாட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தான். அங்கே ஓரிடத்தில் உழவன் ஒருவன் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்திக் கொண்டிருந்தான். அவன் அருகே பாம்பு ஒன்று படம் எடுத்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அரசன் ”உழவனே! உன் அருகே பாம்பு. ஓடு, ஓடு" என்று குரல் கொடுத்தான்.


எதுவுமே நடவாதது போல இயல்பாகத் திரும்பிப் பார்த்த உழவன் எந்தப் பரபரப்பும் காட்டாமல் அந்தப் பாம்பைக் கையால் பிடித்துத் தூக்கி எறிந்தான்.


அதிர்ச்சி அடைந்த அரசன், ”கொடிய பாம்பு அது. நீ பிடித்தபோது கொத்தி இருந்தால் உன் உயிர் போய் இருக்குமே" என்றான்.


"அரசே! இந்த நிலத்தில் வேலை செய்யும்போது இப்படி எத்தனையோ ஆபத்துகளைச் சந்திக்கிறேன். அவற்றிற்கு அஞ்சினால் நானும் என் குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டியதுதான்” என்றான் அவன்.


அந்த விவசாயிக்கு உதவி செய்ய நினைத்த அரசன் வளமான நிலங்களையும் பொற்காசுகளையும் அவனுக்கு வழங்கினான். செல்வந்தனாக ஆனான் அவன். ஆண்டுகள் பல கழிந்தன. அரசனும் அமைச்சனும் மீண்டும் அந்த வழியாக வந்தார்கள்.


அந்த உழவன் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து இருந்தான். அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்று  வணங்கினான். அவன் கையில் பெரிய கட்டுப் போட்டிருந்தது: “கையில் என்ன கட்டு?" என்று கேட்டான் அரசன்.


”அரசே! ஒரு சிறிய முள் கீறி அது பெரிய புண்ணாகி விட்டது. அதற்குக் கட்டுப் போட்ட மருத்துவர் ஒரு வாரம் ஓய்வு எடுக்கச் சொன்னார். இங்கே அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் உழவன்.


இதைக் கேட்டு வியப்படைந்த அரசன், ”அப்படியா உன் உடம்பைப் பார்த்துக்கொள்" என்று அவனிடம் சொல்லிவிட்டு அகன்றான்.


வழியில், ”அமைச்சரே! அன்று இவன் கொடிய பாம்பைத் தூக்கி எறிந்தான். இன்றோ ஒரு சிறிய முள் குத்தியதற்குக் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு ஓய்வு எடுக்கிறான். தலை கீழ் மாற்ற மாக உள்ளதே” என்று கேட்டான்.


"அரசே! அன்று அவன் ஏழை. உழைத்துப் பிழைத்தான் அதனால் அவன் எதற்கும் அஞ்சவில்லை. 

இன்றோ செல்வந்தனாகி உழைப்பே இல்லாமல் இன்பத்தை அனுபவிக்கிறான். காலமும் சூழ்நிலையும் மாறும் போது எல்லாம் மாறத்தானே செய்யும்" என்றார் அமைச்சர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக