பக்கங்கள்

சனி, 20 ஜூலை, 2024

ஸியாரத் பற்றிய விளக்கம்.

 

*பெண்கள் ஜியாரத்தும் பேண வேண்டிய முறைகளும்*


 ? ஜியாரத் செய்வது பெண்களுக்கு தடுக்கப்பட்டதா?  


! ஜியாரத் செய்வது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான் தடை செய்யப்பட்டிருந்தது.


கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:


‏ ‏عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏

إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا 


கப்ருகளை ஜியாரத்

 செய்வதை உங்களுக்கு தடை செய்திருந்தேன். ஜியாரத் செய்யுங்கள்.


அறிவிப்பாளர்: புரைதா ரலியல்லாஹு அன்ஹு

ஸஹிஹ் முஸ்லிம்(2305), திர்மிதி(1054), நஸாயீ(2032), அபூதாவூத்(3237), இப்னு மாஜா (1571).


ஜியாரத் என்றால் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தான்.


கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றாடம் ஸியாரத் செய்திருக்கிறார்கள்.

 ஜியாரத் செய்யும்படி சொல்லியிருக்கிறார்கள் என்கிற ஏராளமான ஹதீஸ்கள் உண்டு. என்றாலும் இங்கே பெண்கள் ஜியாரத் செய்வது தொடர்பாக மட்டுமே பேசுவோம்


أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ زَوَّارَاتِ الْقُبُورِ ‏


ஜியாரத் செய்யும் பெண்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லஃனத் செய்தார்கள் - சாபமிட்டார்கள். 

என்ற ஹதீஸை முன் வைத்து பெண்கள், ஜியாரத் செய்யக் கூடாது என்று வாதிடுகின்றனர். 


இவ்விஷயத்தில் நமது பதில் என்னவென்றால், அவர்களுக்கு ஹதீஸ் துறையில் ஞானம் இல்லை என்பது, அல்லது இருந்தும் தங்களுடைய தவறான கொள்கைக்காக மறைத்து இருட்டடிப்பு செய்கிறார்கள். இந்த இரண்டில் அவர்கள் எதைத்தேர்வு செய்கிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது. 


ஏனென்றால் அவர்கள் முன்வைக்கும் அந்த ஹதீஸ் திர்மிதி என்ற ஹதீஸ் கிரந்தத்தில்(1056) இடம்பெற்றுள்ளது. 

அதைத் தொடர்ந்து இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள்? என்பதை அறிய கீழ்வரும் வாசகத்தைப் படியுங்கள்


وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنَّ هَذَا كَانَ قَبْلَ أَنْ يُرَخِّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي زِيَارَةِ الْقُبُورِ فَلَمَّا رَخَّصَ دَخَلَ فِي رُخْصَتِهِ الرِّجَالُ وَالنِّسَاءُ ‏.‏


இது ஜியாரத் செய்வது அனுமதிக்கப்படுவதற்கு முன் சொல்லப்பட்டதாகும். எப்போது அனுமதி வழங்கினார்களோ அந்த அனுமதியில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அடங்குவர். என்று இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது கிதாபில் பதிவு செய்துள்ளார்கள். 


(திர்மிதி 1056)


நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 


நான் கப்ருகளை ஜியாரத் செய்ய தடைவிதித்திருந்தேன். கப்ருகளை நீங்கள் ஜியாரத் செய்யுங்கள். ஏனெனில் கப்ருகளை ஜியாரத் செய்வது மறுமையை நினைவூட்டுகிறது என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கிய அனுமதி ஆண்கள் பெண்கள் என இருதரப்பினருக்குமாகும்.

எனவே தான் இமாம்கள் பெண்கள் ஜியாரத் குறித்து கூறும்போது


والاصح ان الرخصة ثابتة للرجال والنساء (مراقي الفلاح)


மிகச் சரியான கருத்தின்படி கப்ருகளை ஜியாரத் செய்ய ஆண்களுக்கும் பெண்களுக்கும் அனுமதி உள்ளது.


நூல்: மராகில் ஃபலாஹ்.


ندب زيارتها للرجال والنساء علي الاصح (نور الايضاح)


மிகச் சரியான கருத்தின் படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் கப்ருகளை ஜியாரத் செய்வது மன்தூப் - சுன்னத் ஆகும்.


நூல் :நூருல் ஈலாஹ்.


والاصح ان الرخصة ثابتة لهما (البحر الرائق)


மிகச் சரியான கருத்து கப்ருகளை ஜியாரத் செய்ய ஆண்கள் பெண்கள் இருவருக்கும் அனுமதி இருக்கிறது.


நூல் : அல்பஹ்ருர் ராயிக்.


اما علي الاصح من مذهبنا وهو قول الكرخي وغيره من ان الرخصة في زيارة القبور ثابتة للرجال والنساء جميعا فلا اشكال

(رد المحتار)


நம்முடைய மத்ஹபில் மிகச் சரியான கருத்தும் கர்ஹீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்தும் மற்றவர்களின் கருத்தும் கப்ருகளை ஜியாரத் செய்யும் விஷயத்தில் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் அனுமதி உள்ளது. எந்த சந்தேகமும் இல்லை.


நூல் ரத்துல் முஹ்தார்.


ஷாபிஈ மத்ஹபின் படி பெண்கள் பொது அடக்க ஸ்தலங்களை ஜியாரத் செய்வது மக்ரூஹ் ஆகும்.

காரணம் அவர்கள் பொறுமை குறைந்தவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் என்பதால்.


 ஆனால் நபிமார்கள் வலிமார்களின் கப்ரை ஜியாரத் செய்வது முஸ்தஹப்பாகும் - விரும்பத்தக்கதாகும். 


وَمَحَلُّ هَذِهِ الْأَقْوَالِ فِي غَيْرِ زِيَارَةِ سَيِّدِنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَمَّا هِيَ فَلَا تُكْرَهُ بَلْ تَكُونُ مِنْ أَعْظَمِ الْقُرُبَاتِ لِلذُّكُورِ وَالْإِنَاثِ ، وَيَنْبَغِي أَنْ تَكُونَ قُبُورُ سَائِرِ الْأَنْبِيَاءِ وَالْأَوْلِيَاءِ كَذَلِكَ كَمَا قَالَهُ ابْنُ الرِّفْعَةِ وَالْقَمُولِيُّ وَهُوَ الْمُعْتَمَدُ ،


نهاية


பொது அடக்க ஸ்தலங்களை ஜியாரத் செய்வது தான் 

பெண்களுக்கு மக்ரூஹ் ஆகும். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை ஜியாரத் செய்வது ஆண்கள் மற்றும் பெண்களுக்குண்டான நற்காரியங்களில் உயர்ந்ததாக இருக்கும். 


இப்னு ரிஃப்ஆ மற்றும் கமூலி போன்றோர்கள் கூறியது போன்று அனைத்து நபிமார்கள் வலிமார்கள் கப்ருகளை ஜியாரத் செய்வதும் மக்ரூஹ் அல்ல. இதுவே உறுதியான கருத்தாகும்.


நூல்: நிஹாயா


நபிமார்கள் வலிமார்களது கப்ருகளை ஜியாரத் செய்வது பெண்களுக்கு முஸ்தஹப்பு என்ற கருத்து இஆனதுத் தாலிபீன், பத்ஹுல் வஹ்ஹாப், முக்னில் முஹ்தாஜ், துஹ்பா போன்ற ஷாபிஈ மத்ஹபின் சட்ட நூல்களில் காணப்படுகின்றது.


கதீபுஷ் ஷர்மீனி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள் : 

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஜியாரத் செய்வது ஆண்களுக்கும், பெண்களுக்கும் மிகப்பெரும் வணக்கமாகும். 


தமன்ஹீரி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) என்ற அறிஞர், ஏனைய நபிமார்கள், இறைநேசர்கள், நல்லோர்கள், ஷுஹதாக்களின் கப்ருகளை ஜியாரத் செய்வது மாண்பானது என்று கூறியுள்ளார்கள். (முஃனீ 1-365)


பெண்கள் கப்ருகளை ஜியாரத் செய்ய அனுமதி உள்ளது என்று கூறுகின்ற அதே நேரத்தில் ஜியாரத்தின் ஒழுக்கங்களை பெண்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


உதாரணமாக ஜியாரத் செய்ய நாடுகின்ற பெண்கள் கணவனின் அனுமதியை பெறுதல். மஹ்ரமானவரின் துணையோடு ஜியாரத் செய்தல். இஸ்லாம் கற்பித்த முறைப்படி முழுமையாக தன்னை மறைத்து பர்தா அணிந்து ஜியாரத் செய்தல். கூட்ட நெரிசல்களை தவிர்ந்து ஜியாரத் செய்தல் போன்ற அம்சங்கள் பேணப்பட வேண்டும். 


*பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித குடும்பத்தின் பெண்கள் ஜியாரத் செய்த தகவல்களைப் பாருங்கள்.*


ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்ழா ஷரீஃப் சென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களையும், அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் ஜியாரத் செய்வார்கள். பின்னர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அங்கே அடக்கம் செய்யப்பட்டபோது பர்தா அணிந்து தன்னை இழுத்துப் போர்த்திக் கொண்டவர்களாகவே செல்வார்கள். 

(முஸ்னத் அஹ்மத் - 25701 )



அன்னை ஃபாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் உஹுத் மலைக்கு சென்று ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஜியாரத் செய்து வந்ததார்கள். 

(முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக் - 6713 , 6717), (ஹாகிம்- 4319 ) 


மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் (தனது சகோதரர்) அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அன்னவர்கள் மக்காவுக்கு சென்றிருந்தபோது ஜியாரத் செய்தார்கள்.

அதைப்பார்த்த அப்துல்லாஹ் இப்னு அபீ முலைகா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "பெண்கள் ஜியாரத் செய்வது தடைசெய்யப்பட்டதல்லவா?" என்றார்கள். அதற்கு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், "ஆம்! தடை செய்திருந்தார்கள், பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி அளித்து விட்டார்கள்" என்று கூறினார்கள். 

நூல்: (ஹாகிம் 1327) , 

  (பைஹகீ - 6999) 


فقالت عائشة: كيف أقول لهم يا رسول الله؟ قال: «قولي: السلامُ على أهل الدِّيار من المؤمنين والمسلمين، ويرحمُ اللهُ المستقدمين منا والمستأخرين، وإنَّا إن شاء الله بكم


நான் ஜியாரத்திற்கு சென்றால் என்ன ஓத வேண்டும்? என்று ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள். 


 அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் ல லாஹிகூன்'' என்று சொல்லுங்கள்'' என்றார்கள்.


பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிலிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! அல்லாஹ் நாடினால் நாம் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.( முஸ்லிம் - 2301) 

என்ற துஆவை சொல்லிக் கொடுத்தார்கள். 


பெண்கள் ஜியாரத் கூடாது என்றிருப்பின் நான் தான் ஜியாரத்தை தடுத்திருக்கிறேனே நீங்கள் ஏன் அங்கே செல்கிறீர்கள்? என்று அல்லவா கேட்டிருப்பார்கள்.



மேற்கண்ட ஆதார தகவல்களின் ஒளியில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பெண்கள் ஜியாரத் செய்வது குர்ஆன் ஹதீஸ் வழியில் அனுமதிக்கப்பட்டது ஆகுமானது. சுன்னத் ஆகும்.


பெண்கள் ஆண்களோடு கலந்து விடுகிறார்கள் எனவே பெண்கள் ஜியாரத் கூடாது என்று சொல்கிறவர்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள் ஆண்கள் ஜியாரத் செய்யக்கூடாது என்று ஏன் சொல்லவில்லை. ஆண்களுக்குக் கூடும். பெண்களுக்குக் கூடாது என்ற இந்த அளவுகோல் எதை வைத்து எடுத்தார்கள் என்று தெரியவில்லை. 


ஜியாரத்தில் 

ஆண்களும் பெண்களும் கலக்கிறார்களே, இன்னும் அங்கு பித்அத்தான செயல்கள் நடைபெறுகின்றனவே என்ற கேள்விக்கு


*இமாம் இப்னு ஹஜருல் ஹைத்தமி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் விளக்கம்*


ஜியாரத்தை நாடி புறப்படுவது சுன்னத்தாக்கப்பட்டுள்ளது.


ஆண்கள், பெண்கள் கலப்பது போன்றதினால் ஜியாரத் கூடாது என்று சொல்லக்கூடியவர்கள் தவாப் செய்வது, அரபாவில் தங்குவது முஸ்தலிபாவில் தங்குவது கல் எறிவது இது போன்ற காலங்களில் ஆணும், பெண்ணும் கலப்பது என்பதும் கூடாது என்று சொல்ல வேண்டும். 


அப்படி எந்த இமாம்களும் சொல்லவில்லை அதைப் போன்று தான் ஜியாரத்தும்.


ஜியாரத்தை மறுப்பவர்கள் ஆண்களும் பெண்களும் கலப்பதினால் அவை கூடாது என்று மார்க்கம் கூறுகிறவரைப் பார்த்து நீ ஏமாந்து விடாதே


மார்க்க சட்ட மேதைகள், தவாப் செய்யும் போது பெண்களிருந்தாலும் செய்யலாம் என்று தான் சொல்கிறார்கள். மேலும் பெண்களை விட்டும் தூரமாகியிருங்கள் என்றும் நமக்கு கட்டளையிடுகிறார்கள்.


அதைப் போன்று தான் ஜியாரத்தும். எனவே ஜியாரத் செய்வான். பெண்களை விட்டும் தூரமாகிவிடுவான் ஹராம் என்று பார்ப்பதையெல்லாம் தடுப்பான். முடிந்தால் அவற்றை நீக்கவும் செய்வான்.

பித் அத்துக்காக நல் அமல்கள் விடப்படாது. 


(ஃபத்வா அல் குப்ரா) 


தொகுப்பு: 

*மௌலவி TSA அபூதாஹிர் ஃ பஹீமீ மஹ்ழரி* ஃபாஜில் ஜமாலி M.A. M.Phil

ஆசிரியர் - அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ் 

9841567213


ஹிஜ்ரி 1446 முஹர்ரம் பிறை 12, ( 19-7-2024)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக