பக்கங்கள்

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

பிரச்சனைகள்.

 


ஈராக் ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்திருந்தார். அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், அவரிடம் வந்து, “ எனக்குப் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. வீட்டில் பல பிரச்னைகள், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் எல்லா இடத்திலும் எனக்குப் பிரச்னைகள்தான். படுத்தால் என்னால் தூங்கவே முடியவில்லை. எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள்" என்றான்.

அதைக் கேட்ட அந்த ஞானி, “மாலையில் வா...என்றார்.



அவனும் மீண்டும் மாலையில் வந்து ஞானியின் முன்பு நின்றான்.
அவனைக் கண்ட ஞானி , "அதோ அந்தத் தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நூறு ஒட்டகங்கள் என்ன செய்கின்றன என பார்த்து விட்டு வா" என்றார்.

தோட்டத்துக்குச் சென்றவன் திரும்பி வந்து, “நூறு ஒட்டகங்களும் நின்று கொண்டு இருக்கின்றன" என்றான்.

"சரி... நல்லது. அனைத்து ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கி விட்டு காலையில் மீண்டும் வாஎன்றார்.


சரி என்று தோட்டத்திற்குப் போனவன், மறுநாள் காலையில் தூக்கம் இன்றி மிகவும் களைப்புடன் ஞானியிடம் வந்தான்.


வந்தவன், '‘பெரியவரே.! இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லைஎன்றான்.

"ஏன்? என்னாச்சு?” என்றார் ஞானி .


"நீங்கள்தானே அனைத்து ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கு என்றீர்கள்".


"ஆமாம். அனைத்து ஒட்டகங்களும் படுத்து தூங்கியதா ?"


இல்லை . சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்தன. சில ஒட்டகங்களை நான் கஷ்டப்பட்டு படுக்க வைத்தேன். ஆனால், நூறு ஒட்டகங்களையும் என்னால் படுக்க வைக்கவே முடியவில்லை. அதனால் நான் இரவு முழுவதும் தூங்கவே இல்லைஎன்றான்.

ஞானியவர் சிரித்தபடியே, “இதுதான் வாழ்க்கை... வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது நூறு ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது. சில பிரச்னைகள் தானாக முடிந்து விடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்து விடலாம்.

ஆனால், சில பிரச்னைகள் முடிந்தால் வேறு சில பிரச்னைகள் புதிதாக வந்து கொண்டுதான் இருக்கும். அனைத்து பிரச்னைகள் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகில் யாராலும் தூங்கவே முடியாது.

பிரச்னைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுகொண்டே இருக்காதே. தீர்க்க முடிந்தவற்றை தீர்த்து விட்டு மற்றவற்றை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருந்தால் தூக்கம் தானாக வரும்என்றார்.

வாழ்வில் பிரச்னைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது. அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவு! ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது.

அதுபோல், நமக்கான பிரச்னைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது. ஆகவே சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்து விட்டு வாழ்வை அமைதியாக அனுபவியுங்கள்.

இறைவனின் தீர்ப்புப்படி எது நடந்தாலும் நடக்கட்டும் என்னும் உறுதி உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நாம் கூறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதற்காரணம் : உங்கள் வாழ்வில் தோன்றுகிற ஏற்றத் தாழ்வுகளை உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்றால், இந்தப் பிரச்சினையில் உங்களுக்கு அமைதி ஏற்பட வழியே கிடையாது. உங்கள் உள்ளத்தைக் கவலையும் அச்சமும் அலைக்கழித்துக் கொண்டிருக்கும்.

கடந்த கால அனுபவம் நிகழ்கால சூழலோடு கலந்து எதிர்காலத்தில் நடக்கப்போகும் காரியத்தைக் குழப்பம் கொண்டதாகக் காட்டும். அது ஏன் அப்படி நடந்தது?’ ‘இது ஏன் இப்படி நடக்கவில்லை?’, ‘இன்னது நிச்சயமாக இப்படி நடக்குமா?’ எனும் சிந்தனைகள் உங்கள் உள்ளத்தைவிட்டு என்றைக்கும் நீங்காது.

உங்கள் உள்ளத்தில் இப்படிப்பட்ட சிந்தனைகள், குழப்பங்கள் இருக்கும்போது, உங்களால் இறைவழிபாட்டில் எப்படி ஈடுபட முடியும்? இறைவன் உங்களுக்கு ஒரே ஒரு உள்ளத்தைத்தான் கொடுத்திருக்கிறான்.

நடந்த காரியத்தைப் பற்றிய கவலைகளையும் நடக்கப்போகும் காரியத்தைப் பற்றிய அச்சத்தையும் போட்டு அந்த ஒரே ஒர் இதயத்தையும் நீங்கள் நிரப்பிவிட்டீர்கள். அப்புறம், இறைவனைப் பற்றிய நினைவுக்கும் மறுமை பற்றிய சிந்தனைக்கும் உங்கள் இதயத்தில் இடம் ஏது?

ஷகீக் பல்கி அவர்கள் கூறிய கூற்று ஒன்று இக்கருத்தை நமக்குத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. நடந்துபோன காரியங்களைப் பற்றிய வருத்தமும் நடக்கப் போகும் காரியங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் இந்த நேரத்தின் பரக்கத்தைக் கொண்டு சென்றுவிட்டன!

இரண்டாம் காரணம் : வாழ்வில் தோன்றுகிற ஏற்றத் தாழ்வுகளை ஒரு மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், அவன் இறைவனின் தீர்ப்பில் திருத்தம் செய்ய முற்படுகிறான் என்பதே பொருள். இதனால் அவன் இறைவனின் சினத்துக்கு இலக்காக வேண்டியிருக்கிறது.

ஒரு மனிதன் இறைத் தீர்ப்பை திருப்தியோடு ஏற்றுக் கொள்ளும்போது இறைவனின் சினத்திலிருந்து அவனுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. இறைவனின் தீர்ப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேனல்லவா? – இப்படி நான் கூறுவதற்கு இது இரண்டாம் காரணம்.

ரஹ்மத் ராஜ குமாரன்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக