பக்கங்கள்

புதன், 15 ஜூன், 2022

உயிரை விட்டுவிட்டு உடலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்.


 மார்க்கத்தின்

உயிரை விட்டுவிட்டு

உடலைக்

கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்


வீட்டுக்கு வெளியே

வெள்ளையடிப்பதிலேயே

கவனம் செலுத்தும் நீ

வீட்டுக்குள்ளே கிடக்கும்

குப்பையைப் பற்றிக்

கவலைப்படாமல் இருக்கிறாய்


தாடி வளர்பதில்

நீகாட்டும் அக்கரையில்

கோடியில் ஒரு பங்கு

‘தக்வா’ வை வளர்ப்பதில்

காட்டியிருந்தால்

நீ வளர்ந்திருப்பாய்


தலைக்கு மேலே வைப்பதற்கு

நீ காட்டும் சிரத்தையில்

ஆயிரத்தில் ஒரு பங்கு தலைக்கு

உள்ளே வைப்பதில்

நீ காட்டியிருந்தால்

பகைவருக்கு முன்னால்

உன்தலை

குனியும் நிலை

ஏற்பட்டிருக்காது


லுங்கியைக்

கணுக்காலுக்குக மேலே

உயர்த்துவதில்

நீ காட்டும் கவனத்தில்

நூற்றில் ஒரு பங்கு 

உன் உள்ளத்தில்

‘நஜீஸ்’ ஒட்டாமல் இருக்கிறதா

என்று பார்ப்பதில் இருந்திருந்தால்

நீ இறைவனை 

நெருங்கியிருப்பாய்


உன் பகைவர்கள்

உன் கண்ணில்

விரலை விட்டு

ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்

நீயோ

அத்தஹிய்யாத்தில்

விரலை ஆட்டுவதா

நீட்டுவதா என்று

சர்ச்சையிட்டுச்

சண்டைபோட்டுக்

கொண்டிருக்கிறாய்


அந்த விரல் உணர்த்தும்

ஏகத்துவத்திற்கு

முக்கியத்துவம் தருவதை விட்டு

விரலுக்கு முக்கியத்துவம்

தருபவனே!

அந்த விரல் இல்லாதவன்

தொழுதால் கூடுமா?

இல்லையா?


சமூகத்தில் தொழுவதே

கொஞ்சம் பேர்கள் தாம்

அவர்களையும் நீ

குழப்பிக் கொண்டிருக்கிறாய்


பெண்கள்

முழுக்க மறைக்கும்

முக்காடு போடவேண்டும்

என்பவனே!

அவர்களில் பலருக்கும்

மாற்றாடை இல்லை என்பதை

நீ அறிவாயா?

அவர்கள் ஆடையின் கிழிசலில்

உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது

என்பதை உணர்வாயா...?


- கவிக்கோ அப்துல்ரஹ்மான்


#ஜூன்_2 #நினைவுதினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக