பக்கங்கள்

புதன், 6 மே, 2020

நற்குணத்தின் பத்து பண்புகள்


மெளலானா S. லியாகத் அலி மன்பஈ

இஸ்லாம் என்றால் "சாந்தி சமாதானத்தைப் பிறருக்கு வழங்குதல்" என்பொருள். ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய கடமைகளை முறையாகச் செய்தால் மட்டும் போதாது, பிற மனிதர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் மிக முக்கியம் ஆகும்



وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ
(நபியே) நிச்சயமாக நீங்கள் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர்கள் (அல்குர்ஆன் 68:4) என்று வான்மறை நபி ஸல் அவர்களைப் பாராட்டுகிறது.


கடமைகள் இருவகைப்படும்.

1 அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் மட்டுமே தொடர்புடையவை. உதாரணமாக தொழுகை, நோன்பு போன்றவை.

2. ஓர் அடியானுக்கு மற்ற அடியார்களுடன் தொடர்புடையவை, உதாரணமாக பெற்றோருடன் - உற்றாருடன்-துணைவியருடன் - பிள்ளைகளுடன் - நம்முடன் கொடுக்கல் வாங்கல் செய்பவர்களுடன் இப்படிப் பிறமனிதர்களுடன் தொடர்புடைய கடமைகளும் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன

முதல் கடமைகளில் தவறிழைத்திருந்தால் அது தனக்கு மட்டுமே தொடர்புடையது என்பதால் அல்லாஹ் விரும்பினால் முற்றிலும் மன்னித்துவிடக்கூடும் ஆனால் இரண்டாவது வகையான கடமைகளில் தவறிழைத்தால் அது சம்பந்தப்பட்டவர்கள் மனமுவந்து மன்னிக்காத வரையில் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். (பைஹகி) என்பதே இஸ்லாமியக் கொள்கை

ஏழை என்பவன் யார்

ஏழை என்பவன் யார்? இந்தக் கேள்வியை ஒரு முறை உத்தம நபி அவர்கள் தோழர்களிடம் கேட்டார்கள். யாரிடம் தங்கமோ, வெள்ளியோ, பிற சொத்துக்களோ இல்லையோ அவர் தான் ஏழை என்று தோழர்கள் பதில் சொல்ல

என் உம்மத்தார்களில் உண்மையான ஏழை யார் தெரியுமா நாளை மறுமையில் ஒருவர் வருவார். அவரிடம் நன்மைகள் மலைபோல் குவிந்திருக்கும் தொழுகை, நோன்பு, ஐகாத், ஹஜ் என்று ஏராளமாகச் செய்திருப்பார். நேரடியாக சுவர்க்கம் செல்ல வேண்டியது தான் எனை அவரைப்) பார்த்து எல்லோரும் நினைப்பார்கள். இந்நிலையில் அவரைப் பற்றிப் பலரும் அல்லாஹ்விடம் முறையிடுவார்கள்

இறைவா! இவர் என்னைத் திட்டினார் ) என ஒருவரும் இறைவா.. என் மீது அபாண்டம் சுமத்தினார் என மற்றவரும் இறைவா இவர் என் சொத்தை அபகரித்தார் என மூன்றாமவரும் இவர் என்னை அடித்தார் என நான்காமவரும் என் இரத்தத்தை ஓட்டினார்காயப்படுத்தினார் என ஐந்தாமவரும் இப்படி ஏகப்பட்டவர் முறையிடஒவ்வொருவருக்கும் இவருடைய நன்மைகளைக் கொடுக்கப்படும்  (ஏனில் அங்கே நன்மைகளைக் கொடுத்துதான் கணக்கு முடிக்கப்படும்) 

இவ்வாறு எல்லோருக்கும் கொடுப்பதற்குள் இவரது நன்மைகள் தீர்ந்து போக பிறருடைய பாவங்களை இவரது தலையில் சுமத்தி நரகில் வீசப்படுவார். இவர்தான் உண்மையில் ஒன்றுமில்லாத ஏழை என்று நபியவர்கள் நவின்றார்கள் (புஹாரி-கருத்து)



எனவே பிறரிடம் நடந்து கொள்ளவேண்டிய நடைமுறைகளுக்கு அடிப்படையான முதல் விஷயம் நற்குணமாகும்

மிகப்பெரும் அருட்கொடை

மனிதன் வழங்கப்பட்டுள்ள -அருட்கொடைகளில் மிக மேலானது எது என தோழர்கள் வினவியதற்கு நற்குணம் தான் என நபி ஸல் அவர்கள் பதில் அளித்தார்கள் பைஹகி.

ஆம்! மனிதன் என்ற வகையில் எத்தனையோ அருட்கொடைகளை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான். அவற்றிலெல்லாம் மிகச்சிறந்த அருட்கொடை நற்குணம்தான். ஏனென்றால் அதன் மூலம், தான் அடையும் ஈருலக பாக்கியங்களுடன் மற்ற மனிதர்களும் பெரும் பயனை அடைவார்கள் அல்லவ..?

நன்மைத் தட்டை கனமாக்கும்

இங்கு அது பெரும் அருட்கொடையாக இருப்பது போலவே நாளை மறுமையிலும் பெரும் உபகாரமாக மாறிவிடும். இதோ பாருங்கள் அது பற்றிய நபிமொழி

நிச்சயமாக நாளை மறுமையில் மனிதனின் நன்மைத் தட்டை அதிகம் கனமாக்கக் கூடியது நற்குணம்தான். அது வைக்கப்பட்டவுடன் நன்மைத் தட்டு எடை கூடிவிடும்  (நூல் : திர்மிதி

யாருடைய நன்மைத் தட்டு கனமாகி விட்டதோ அவன் திருப்திகாமான சுவர்க்க வாழ்வுக்குச் சொந்தக்காரராகிவிடுவார் அல்குர்ஆன்-1016,7

எனவே நற்குணத்தைக் கடைபிடித்து நன்மைத் தட்டை கனமாக்கிடுவோமாக

யாஅல்லாஹ்' என் புறத்தோற்றத்தை அழகாக்கி இருப்பது போல என் அகத்தோற்றத்தை குணத்தை அழகாக்குவாயாக" என்பது நபியவர்களின் பிரார்த்தனையாகும். அதாவது வெளியே பார்ப்பதற்கு அழகாயிருந்தால் மட்டும் போதாது. நற்குணத்தின் மூலமாக நம் அகத்தோற்றமும் அழகாக இருக்க வேண்டும். அதற்கு சிறு விளக்கமே இந்தக் கட்டுரை

இனி குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நற்குணம் என்றால் என்ன என்பதை
பார்க்கலாமா...?

1. அனைவரிடமும் அன்பு கொள்ளுதல்

நற்குணத்தில் முதலாவது அனைவரிடமும் அன்பு பாசத்துடன் பழகுவதாகும்

உங்களில் எவரும் தனக்காக விரும்புவதையே பிறருக்காகவும் விரும்பாத வரை உண்மை விசுவாசியாக முடியாதுஎன்று நபி ஸல் அவர்கள் நவின்றார்கள் (புஹாரி, முஸ்லிம்)

இதன் மூலம் ஒரு முஸ்லிம் எல்லோரிடமும் அன்பாகப் பழக வேண்டும். நட்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது புரிகின்றதல்லவா? "இவ்வுலகில் எல்லோரும் அல்லாஹ்வின் படைப்புக்கள், அனைவரும் அல்லாஹ்வின் குடும்பத்தினர் ஆவார்கள். எனவே படைப்புக்களில் அல்லாஹ்வக்கு மிகப் பிரியமானவர் யாரென்றால் அல்லாஹ்வுடைய குடும்பத்தாராகிய பிற மக்களிடம் எவர் அதிக அன்பாகவும் உபகாரியாகவும் இருக்கின்றாரோ அவர் தான்

ஒருவர் தன் நண்பரைச் சந்திப்பதற்காக இன்னோர் ஊரை நோக்கிப்
பயணமானார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் நிற்கச் செய்தான். இவரைப் பார்த்த அவ்வானவர் நீ எங்கு செல்கின்றாய் என்று கேட்டார். அவர் இந்த ஊரில் என் நண்பர் இருக்கின்றார் அவரைப் பார்ப்பதற்காக அங்கு செல்கின்றேன் என்றார்

அவருக்கும் உனக்கும் என்ன தொடர்பு? அவரிடம் ஏதேனும் கொடுக்க, வாங்கச் செல்கின்றாயா? உலக ஆதாயம் ஏதாவது இதன் மூலம் கிடைக்குமா? என்று வானவர் வினவ, அதெல்லாம் ஏதும் இல்லை அல்லாஹ்வுக்காக மட்டுமே! - வேறு எந்தத் தேவையும் இன்றி நான் அவரை நேசிக்கின்றேன் என்று இவர் கூறினார். அப்படியானால் கேட்டுக் கொள் சகோதரா! எந்த அல்லாஹ்வுக்காக அவரை சுயநலமின்றி நீ நேசிக்கின்றாயோ அந்த அல்லாஹ் உன்னை நேசிக்கின்றான் என்பதை உனக்குச் சொல்வதற்காக என்னை அனுப்பினான் என்று அவர் கூறிச் சென்றார் என்று நபி ஸல்  அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்

எனவே எல்லோரையும் நாம் நேசிக்க வேண்டும். ஷைத்தான் ஒருவனைத் தவிர. அவன் மட்டுமே நம் எதிரி, இந்த உணர்வு தான் நற்குணத்தின் முதல் இலக்கணம்

2. மென்மையே மேன்மை தரும்

பிறரிடம் பழகுவதிலும் பேசுவதிலும் மென்மையைக் கடைபிடிப்பது நற்குணத்தின் இரண்டாவது அம்சமாகும். முரட்டுக் குணம், கடுகடுத்த முகம், எரிந்து விழும் தன்மை இவை மூன்றும் நற்குணத்தின் எதிர் பண்புகளாகும். இது பற்றிக் கருணை நபி ஸல் அவர்கள்

நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே விரும்புவான் கடுகடுப்புக்குத் தராத பரிசுகளை மென்மைக்கு அவன் தருகின்றான்என்று கூறினார்கள் (நூல் : முஸ்லிம்

யார் மென்மையை இழந்து விடுகின்றாரோ அவர் நன்மைகளையே இழந்து விடுவார் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள். (முஸ்லிம்) எனவே எல்லா நிலை களிலும் மென்மையைக் கடைபிடிக்க வேண்டும். இதற்கு உதாரணமாக பின் வரும் நிகழ்ச்சியைக் காணலாம்.

நபியவர்களின் இல்லத்திற்கு ஒருமுறை யூதர்களின் ஒரு குழு வந்தது. அஸ்ஸாமு அலைக்கும்என்று ஒரே குரலில் அவர்கள் சொன்னார்கள். (அஸ்ஸலாமு என்றால் சாந்தி என்று பொருள், அஸ்ஸாமு என்றால் சாவு என்று பொருள்) அஸ்ஸலாமு என்பதை இப்படி அவர்கள் விஷமத்தனமாக மாற்றி மொழிந்ததையறிந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் உடனே கடும் ஆத்திரம் கொண்டவர்களாக யாரைப் பார்த்து அஸ்ஸாமு என்கிறீர்கள்? உங்களுக்குத் தான் சாவும் இறை சாபமும் கோபமும் ஏற்படும் என்று பொரிந்து தள்ளினார்கள்.

இதைக் கேட்டதும் அந்த யூதர்கள் தங்களின் குட்டு வெளிப்பட்டு விட்டதை அறிந்தவர்களாக உடனே இடத்தைக் காலி செய்து விட்டார்கள், அப்போ பெருமானார் அவர்கள் ஆயிஷா! வேண்டாம் கடுகடுப்பு. மென்மையாகம் பேச வேண்டும். இது போன்று படபடைக்கக் கூடாது என அன்பாக உரைத்தார்கள் 

நாயகமே என்ன சொன்னார்கள் என்பதை தாங்கள் கேட்கவில்லையா..? என்அன்னையர் திலகம் ஆயிஷா (ரலி) கேட்க

கேட்கத்தான் செய்தேன். அவர்களுக்கு நான் என்ன பதில் சொன்னேன் தெரியுமா? அலைக்கும் என்று மட்டும் கூறினேன். அதாவது உங்களின் மீதே அந்த (ஸாம்) சாவும் முனிவும் ஏற்படட்டுமாக என்று சொன்னேன். அவர்கள் எனக்கு அஸ்ஸாமு எனக் கூறியது ஏற்கப்படாது. ஆனால் நான் பதில் கூறியது அவர்கள் விஷயத்தில் ஏற்கப்பட்டுவிடும் என அமைதியாக பதில் அளித்தார்கள்,  (நூல்: புஹாரி, முஸ்லிம்)

இது தான் மென்மை. எதிரிகள் கடுமையான வார்த்தைகளைக் கூறிய போதிலும் நாம் மென்மையைக் கடைபிடிக்க வேண்டும். நாமும் கோபம் கொண்டு பதிலுக்கு பதில் பேசினால் சண்டையில் தானே முடியும்? எனவே எந்த விஷயத்திலும் மென்மை.. மென்மை.. மென்மையோ மேன்மை தரும்

3. பணிவு

நற்குணத்தின் நற்பண்டபுகளில் அடுத்தது பிறரிடம் எதிலும் எப்பொழுதும் பணிவாக நடந்து கொள்வதாகும்

பிறரிடம் அணுவளவேனும் பெருமையாக கர்வமாக நடந்து கொள்பவன் சொர்க்கத்தில் நுழையவே முடியாதுமுஸ்லிம்) என்று சொன்ன செம்மல் நபி ஸல் அவர்கள்

யார் அல்லாஹ்வுக்காகப் பணிவை மேற்கொள்கின்றாரோ அவரை அல்லாஹ் உயர்த்துகின்றான். அவன் தனைக்குள் தான் சிறியவன் மக்கள் மத்தியிலோ உயர்ந்தவன். எவன் தான் தான்என்று பெருமையடிக்கின்றானோ அவனை அல்லாஹ் இழிவுபடுத்திவிடுவான். அவன் தனக்கு மட்டும்தான் பெரியவன் இருப்பான். மக்கள் மத்தியிலோ நாய், பன்றியைவிட மிகவும் இழிந்தவனாக கருதப்படுவான் என்று விளக்கினார்கள். (மிஷ்காத்)

சுவர்க்க வாசிகளைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? பணிவுமிக்க பண்புள்ள ஒவ்வொருவருமே சுவனவாசிகள் தாம். இவர்கள் எதைப் பற்றியாவது அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறிவிட்டால் அந்த சத்தியத்தை அல்லாஹ் தானே நிறைவேற்றி வைப்பான். இதற்கு மாற்றமான பண்புள்ள பெருமையும், கர்வமும் கொண்ட ஒவ்வொருவரும் நரகவாசிகள் தாம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள், (புஹாரி, முஸ்லிம்) எனவே எல்லோரிடமும் பணிவாகவும் அன்பாகவும் மென்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

4. இரக்கக் குணம்

எல்லோரிடமும் இரக்கத்துடன் நடந்து கொள்வது நற்குணத்தின் நான்காவது பண்பாகும்

யார் மக்களுக்கு இரக்கம் காட்டவில்லையோ அவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். (புஹாரி, முஸ்லிம்) என்று கூறிய (விசுவாசிகள் மீது மிகுந்த இரக்கக் குணம் கொண்ட இறைத்தூதர் ஸல்  அவர்கள் பாவிகளுக்குக் கூட இரக்கம் காட்டி உதவி செய்ய சொன்னார்கள்.

உன் சகோதரன் அநியாயம் செய்தாலும் சரி, அநியாயம் செய்யப்பட்டாலும் சரி அவனுக்கு இரக்கம் காட்டி உதவி செய் என்று நபியவர்கள் கூறியதைக் கேட்டு வியப்புற்றுப் போன தோழர்கள் நாயகமே! அநியாயம் செய்யப்படும் பொழுது இரக்கம் காட்ட வேண்டும் என்பது மிகச் சரியானது தான். ஆனால் அநியாயம் செய்யும் போதும் இரக்கம் காட்டி உதவி செய்வது என்பது புரியாத விஷயமாக இருக்கிறதே என வினவ

நம் சகோதரன் ஒருவன் அநியாயம் செய்பவனாக மாறினால் அவன் நரகம் சென்று விடுவானே என்ற கவலையுடன் அவனை அந்த அநியாயத்தில் இருந்து தடுத்து நிறுத்தவேண்டும். அதுவே அப்போது அவனுக்குச் செய்யும் உதவியாகும் என விளக்கினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். எனவே அவருக்குத் தானும் அறியாயம் இழைக்கக்கூடாது. பிறரால் அவர் அநீதி இழைக்கப்படும் போது அவனைக் கைவிட்டு விடக் கூடாது. அவரைக் காப்பாற்ற வேண்டும். மற்றவரின் தேவைக்காக உழைக்கும் நபரின் தேவையை நிறைவேற்ற அல்லாஹ்வே ஈடுபடுகின்றான். பிற சகோதரரின் ஒரு கஷ்டத்தை நிவர்த்திக்க ஒருவர் ஈடுபட்டால் அவரது மறுமையின் மிக முக்கியமான கஷ்டத்தை அல்லாஹ் நிக்கிவிடுவான். ஒரு முஸ்லிமின் மானத்தை இன்னொரு முஸ்லிம் மறைத்தால் மறுமையில் அவரது மானத்தை அல்லாஹ் பாதுகாப்பான். (புஹாரி முஸ்லிம்) எனவே பிறரின் கஷ்டத்தை நீக்க பாடுபடுவது, மானத்தை மறைப்பது போன்ற இரக்க குணங்களை நாம் யார் மக்களோடு கலந்துறவாடி, அவர்களிடம்ருந்து வருகின்ற துன்பங்களை பொறுமையாக ஏற்றுக் கொள்கிறாரோ அவர் மக்களுடன் கலந்துறவாடாமலும் அவர்களின் துன்பங்களை சகிக்காமலும் ஒதுங்கி வாழ்பவனை விட மிகச் சிறந்தவராவார் என்று நபி அவர்கள் கூறினார்கள்

பின்பற்றுவது நற்குணத்தின் பண்புகளாகும்

5. பொறுமை -

நற்குணம் என்கின்ற போது அங்கே பொறுமை மிக முக்கியமான குணமாகும். பொறுமை இல்லாவிட்டால் யாரிடத்திலும் அன்பு காட்டுவது முடியாது. அன்பைப் பெறவும் முடியாது. எனவே எந்நிலையிலும் பொறுமை மிகமிக முக்கியமானதாகும்

யார் மக்களோடு கலந்துறவாடி, அவர்களிடமிருந்து வருகின்ற துன்பங்களை பொறுமையாக ஏற்றுக் கொள்கிறாரோ அவர் மக்களுடன் கலந்துறவாடாமலும் அவர்களின் துன்பங்களை சகிக்காமலும் ஒதுங்கி வாழ்பவன விட மிகச் சிறந்தவராவார்" என்று நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா

வீரன் என்பவன் யார்? என வள்ளல் நடபி அவர்கள் வினவினார்கள். மல்யுத்தத்தில் பிறரை வீழ்த்துபவனே வீரன் என தோழர்கள் பதில் அளித்தார்கள். உண்மையான வீரன் பிறரை வீழ்த்துபவன் அல்ல. தனக்குக் கோபம் வருகின்ற பொழுது எவன் தன் மனதைக் கட்டுப்படுத்துகின்றானேனா அவன் தான் உண்மையான வீரன் என்று விளக்கம் தந்த வள்ளல் நபி அவர்கள் ஒருவர் தனக்குப் பிறரால் ஆத்திரம் ஊட்டப்பட்ட பொழுது அதற்கு பதிலுக்கு பதில் செய்வதற்கு சக்தி இருந்தும் அதை செய்யாமல் அந்தக் கோபத்தை மென்று விழுங்கினால் இந்த ஒரு செயலுக்காக நாளை மறுமையில் படைப்பினங்கள் அனைவருக்கும் முன்னிலையில் பகிரங்கமாக அவனை அழைத்து அவன் விரும்புகின்ற ஹுருல் ஈன் என்கின்ற சுவனக் கன்னிகையை அவனுக்கு திருமணம் செய்து வைப்பான் என்றும் கூறினார்கள் (அபூதாவூத் திர்மிதி

பிறர் தனக்கு அநீதி செய்யும் பொழுது அதற்குப் பழி வாங்காமல் அதை மன்னித்து கோபத்தை அடக்கிக் கொண்டால் அதற்காக அவனுக்குத் தன் உதவியையும் வெற்றியையும் கொண்டு அல்லாஹ் அவனை கண்ணியப்படுத்தாமல் விடுவதில்லை. (அஹ்மது)

எனவே எந்த நிலையிலும் கோபத்தை அடக்கி பொறுமையுடன் நடந்து கொள்ளவேண்டும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் தொடரும்

MANARUL HUDA
RAMALAN - 1431 SEP -2010


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக