பக்கங்கள்

புதன், 6 மே, 2020

நற்குணத்தின் பத்து பண்புகள். 2


 மெளலானா S. லியாகத் அலி மன்பஈ

6. நிதானம் -

நற்குணங்களில் முக்கியமான ஒன்று எந்த காரியத்திலும் நிதானத்தைக் கடை பிடிப்பது, அவசரம் காட்டமாலும் படபடப்புக் கொள்ளாமலும் இருப்பது. இதன் மூலம் நாம் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகின்ற காரியங்களை நன்றாகவும் முறையாகவும் நிறைவேற்ற முடியும் என்பது உண்மையாகும்.


நிதானம் அல்லாஹ்விடமிருந்து வரக்கூடியது, அவசரம் ஷைத்தானில் நின்றும் உருவாகக் கூடியது" என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (திர்மிதி)

நாயகமே! எனக்கு உபதேசியுங்கள் என நான் வேண்டிக் கொண்ட பொழுது எந்த விஷயத்தையும் நிதானத்துடன் முன்பின் ஆலோசித்து முடிவெடு. அதன் முடிவு நன்மையாக இருக்கும் என நீ முடிவுக்கு வந்தால் அதை செயல்படுத்து அது பற்றிய அச்சம் உனக்கு வருமானால் அதை உடனே விட்டுவிடு என்று கூறினார்கள்   (நூல் : மிஷ்காத்)

எனவே நிதானம் மிக முக்கியமானதாகும்

நன்மையில் விரைவு வேண்டும்

ஆனால் மறுமைக்காக செயல்படுவதில் மட்டும் விரைவு காட்ட வேண்டும் தொழுகைக்கு பாங்கு சொல்லிவிட்டார்கள் மெதுவாகப் போகலாம் என நிதானமாக உட்கார்ந்திருந்தால் ஜமாஅத் தொழுகை தவறிப் போய்விடும். அதே போல் தர்மம் செய்ய மனதில் எண்ணம் வந்தால் உடனே வழங்க வேண்டும். நிதானம் செய்தால் மனம் மாறிப் போய்விடும் எனவே பிறரிடம் பழகும் பொழுது பேச்சிலும் செயல்களிலும் நிதானமாக நடந்து கொள்வது நற்குணத்தின் பண்பாக அமைந்துள்ளது

செலவினங்களில் நடுநிலையைக் கடைிடிப்பது வாழ்க்கையின் பாதியாகும் மக்களுடன் பாசமாகப் பழகுவது அறிவின் பாதியாகும். நல்ல கேள்வியை கேட்பது கல்வியின் பாதியாகும்" என்ற நபி மொழியையும் கவனத்தில் கொண்டு செயல்படுவோம்

7. கள்ளமில்லா உள்ளம்

இதுவும் நற்குணத்தின் முக்கியப் பண்பாகும். பொதுவாக எல்லோரிடமும் வெள்ளை உள்ளத்துடன் பழகுவதும் நல்லெண்ணத்துடன் நடந்துகொள்வதும் முஸ்லிம்களுக்கே உரிய உயர் பண்பாகும்

உண்மையான விசுவாசி, கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்டவனாகவும் வாரி வழங்கும் வள்ளலாகவும் இருப்பான். பாவியானவனே கபட உள்ளம் கொண்டவனாகவும் கஞ்சத்தனம் மிக்கவனாகவும் இருப்பான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் (மிஷ்காத்

பிறரைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது நல்ல வணக்கத்தில் சேர்ந்ததாகும்(அஹ்மது, அபூதாவூத்)

இது பற்றிய நபிமெழிகள் ஏராளம் உள்ளன. அவற்றின் அடிப்படையில் பிற மக்கள் அனைவரையும் நல்ல கண் கொண்டு - நல்லெண்ணத்துடன் பார்க்க வேண்டும். பிறரின் குறைகளைத் தேடித் தேடிப் பார்ப்பதும் சந்தேகக் கண் கொண்டு நோக்குவதும் துற்குணத்தின் குறிகளாகவே கணக்கிடப்படும்


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ

விசுவாசிகளே! சந்தேகங்களில் பெரும்பாலானவற்றைத் தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாகும். பிறரின் குறைகளைத் துருவிப் பார்க்காதீர்கள். உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம், உங்களில் எவராவது தன் மரணித்துவிட்ட சகோதரனின் உடம்பின் சதையைத் தின்பதற்கு விரும்புவானா என்ன? அதை நீங்கள் வெறுப்பீர்கள் தானே! அது போன்றது தான் புறம் பேசுவது என்பதும்) என திருக்குர்ஆன் (49:12) எச்சரிக்கின்றது எனவே எல்லோரிடத்திலும் நல்லெண்ணம் கொள்வதும் வெள்ளை உள்ளத்துடன் பழகுவதும் நற்குணத்தின் நற்பண்புகளாகும்

8. நாணம்

உனக்கு வெட்கமில்லையென்றால் நீ நாடியதை எல்லாம் செய்து கொள் என்பது நபிமார்களின் வழி வந்த நல்ல மொழி என பெருமானார் ஸல் அவர்கள் அருளினார்கள்” (புஹாரி) ஏனெனில் தன்னை இந்தச் செயலில் யாரும் பார்த்து விடக் கூடாது என்பது தான் நாணமாகும். யார் பார்த்தால் எனக்கென்ன என்று ஒருவன் எண்ணிக் கொண்டால் அவன் யாருக்கும் எதற்குமே அஞ்சமாட்டான் அல்லவா? எனவே வெட்க குணம் என்பது பொதுவாக மனிதர்களுக்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் மிகவும் முக்கியமானதாகும்

உங்கள் இறைவன் தாராளமானவன் நாணமுள்ளவன், தன்னிடம் ஓர் அடியான் பிரார்த்திக்க கரத்தை உயர்த்திவிட்டால் அந்தக் கரங்களை வெறுங்கையாகத் திருப்பி அனுப்ப வெட்கப்படுகிறான் என நபி அவர்கள் நவின்றார்கள்.(திர்மிதி, அபூதாவூத்

பிறரிடம் பழகும் பொழுது பேச்சிலும் செயல்களிலும் நாணத்துடன் நடந்து கொள்வது நற்குணத்தின் பிரதிபலிப்பாகும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு தோழர் தன் சகோதரர் எதற்கெடுத்தாலும் வெட்கப்படும் இயல்புள்ளவராக கூச்ச கபாவம் இருப்பவராக இருப்பதைக் கண்டு அவரிடம் அவ்வாறு இருக்கக்கூடாது என்று புத்திமதி சொல்லிக் கொண்டிருந்தார்

அப்போது அவ்வழியாகச் சென்ற அண்ணல் நபி ஸல் அவர்கள் அவரை நோக்கி தோழரே உன் சகோதரனை விட்டு விடும் அவர் கூச்சமுள்ளவராக இருப்பதைப்பற்றி நீர் கண்டிக்க வேண்டாம். ஏனென்றால் வெட்கம் அது எங்கு இருந்தாலும் நன்மையைத் தான் கொண்டுவரும் (குறிப்பாக தீமை செய்யவிடாது) வெட்கம் நிச்சயமாக ஈமானைச் சேர்ந்தது தான் என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

எனவே நற்குணத்தின் ஓர் அம்சம் தான் நாணம். இதைக் குறிப்பாகப் பெண்கள் அதிகம் பின்பற்றவேண்டும்

9. எல்லோரிடமும் உறவு.

நற்குணத்தின் முக்கியமான மற்றோர் அம்சம் யாரிடமும் சண்டையிடாமலும் பகையாகாமலும் இருப்பது. இது மிக மிக முக்கியமான விஷயமாகும். ஏனெனில் பெரும்பாலான உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஏதாவது சின்னச் சின்னப் பிரச்சனைகள் எழுந்தாலும் உடனே உறவை முறித்து விடுகிறார்கள்

செத்தாலும் அவன் முகத்தில் முழிக்கமாட்டேன் என்றும் அவனுடன் பேசமாட்டேன் என்றும் நான் செத்தால் அவன் என் முகத்தைப் பார்க்கவோ தண்ணீர் ஊற்றவோ வரக்கூடாது என்றும் கூறுவோரை சர்வ சாதாரணமாகப் பார்க்கின்றோம் இது மிகவும் பயங்கரமான பெரும்பாவம் என்பதைப் பின்வரும் நபிமொழி எச்சரிக்கிறது

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுடன் மூன்று நாட்களுக்கு மேலாக பேசாமல் இருக்கக்கூடாது. அப்படிப் பேசாமல் மூன்று நாட்கள் கழிந்து விட்டால் நேரில் சந்திக்கும் பொழுது இருவரும் முகத்தைத் திருப்பிக் கொள்வது பெரும் குற்றமாகும்

இருவரில் முந்தி ஸலாம் சொல்பவரே சிறந்தவராவார். அவரைக் கண்டவுடன் ஸலாம் சொல்ல வேண்டும். பதில் சொன்னால் சரி. இல்லையென்றால் மீண்டும் மீண்டும் மூன்று முறை ஸலாம் சொல்லவவேண்டும். அவர் பதில் சொல்லிவிட்டால் இருவருக்குமே நன்மை கிடைக்கும். அவர் மூன்று முறையும் பதில் சொல்லவில்லை என்றால் இவன் தப்பித்துக் கொள்வார். அவர் குற்றத்தை சுமந்து கொள்வார்  (புஹாரி, முஸ்லிம், அபூதாவூது)

ஒரு முஸ்லிம் தன் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேலாகப் பேசாமலிருந்து அதே நிலையில் மரணித்து விட்டால் நரகம் தான் செல்வான். (அபூதாவூது, அஹ்மது

ஒருவர் தன் முஸ்லிமான சகோதரரிடம் ஒரு வருடம் பேசாமலிருப்பது அவரைக் கொலை செய்வதற்கு சமம் (அபூதாவூத்.)


ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும். அப்போது அல்லாஹ்வுக்கு இணை வைக்காமலிருக்கும் ஒவ்வோர் அடியானுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். (ஆனால் மூன்று நாட்களுக்கு மேலாக) பேசாமலிருக்கும் இருவருக்கும் மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. இவ்விருவரும் சமாதானம் ஆகும் வரை மன்னிப்புக் கிடையாது என்று சொல்லப்படும் (முஸ்லிம்)

உறவை முறித்து வாழ்வது எவ்வளவு மோசமான - பெரிய பாவம் என்பதை இந்த நபிமொழிகளைப் பார்த்த உடன் உள்ளம் விளங்கி இருக்கும். எனவே உறவினராக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் உறவைத் துண்டித்து வாழ்வது கூடாது

குறைந்த பட்சம் சந்திக்கும் பொழுது ஸலாமாவது சொல்லிக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் பெரும் குற்றம் தான் இருவருக்குமே ஏற்படும் என்பதை எச்சரிக்கையாகக் கொண்டு நற்குணத்துடன் சமாதானத்துடன் வாழ்வோம்

10. மன்னித்து வாழும் மாண்பு

நற்குணத்தின் தலை சிறந்த - முத்தாய்ப்பு வாய்ந்த பண்பு இதுதான். எந்த வகை மனிதர்களாயினும் நம்மீது உயிரையே வைத்திருக்கக் கூடியவர்களாயினும் சில நேரங்களில் சில செயல்களைச் செய்து விடக்கூடும். அது நமது கடும் கோபத்தைக் கிளற விடவும் செய்யும். அப்போது தான் நமது நற்குணத்துக்குப் பரீட்சை வைக்கப்படுகின்றது.

நாம் அந்நேரத்தில் அவர்களை மன்னித்து அவர்களுடன் முன்பைப் போலவே அன்பாக நடந்து கொண்டால் நற்குணத்தில் நாம் வெற்றி பெற்றவர்களாகி விடுவோம். இன்றேல் நமக்கு அந்த போட்டியில் தோல்விதான் இதற்கு தலைசிறந்த உதாரணம் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்கள். 

அல்லாஹ்வே பாராட்டுகிறான்


அவர்களை இறைவன் எப்படிப் புகழ்கின்றான் பாருங்கள்,

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ

"நபியே நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர். (அல்குர்ஆன் 85:4)

 فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ ۖ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையின் காரணமாக அவர்களுடன்
மென்மையாக நடந்து கொண்டீர்கள். நீங்கள் முகம் கடுகடுத்தவராகவோ கல் நெஞ்சக்காரராகவோ இருந்திருந்தால் உம்மைச் சுற்றிலுமிருந்து அவர்கள் எப்போதோ பிரிந்து சென்று இருப்பார்கள். எனவே அவர்களை நீங்களும் மன்னியுங்கள். அவர்களுக்காக இறைவனிடமும் மன்னிப்புக் கோருங்கள். முக்கியமான எல்லாக் காரியங்களிலும் அவர்களுடன் ஆலோசனை செய்யுங்கள். நீங்கள் முடிவுக்கு வந்துவிட்டால் அல்லாஹ்வின் மீதே முழு பொறுப்பையும் சாட்டுங்கள், நிச்சயமாக அல்லாஹ் தன் மீது முழுப் பொறுப்பையும் சாட்டுகின்றவர்களை நேசிக்கின்றான் அல்குர்ஆன் 3:59) என்று பாராட்டுகின்றான்

خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ

நபியே மன்னிப்பைக் கைகொள்ளுங்கள். நன்மையைக் கொண்டு ஏவுங்கள் அறிவீனர்களைப் புறக்கணித்து விடுங்கள். (அல்குர்ஆன்7:199)

பிறரை மன்னித்து வாழுபவர் மட்டுமே இவ்வுலகில் எல்லோராலும் விரும்பப்படுவதுடன் இறைவனின் தனிப்பட்ட பிரியத்துக்கும் உள்ளாகிவிடுவார். இதற்கு ஒரேயோரு உதாரணம் திருக்குர் ஆனின் பின்வரும் வசனம் மட்டுமே போதும்

وَلَا يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَىٰ وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ ۖ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا ۗ أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

உங்களில் வசதியும் மேன்மையும் மிக்கவர்கள் தங்களின் உறவினர்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் பொதுவான ஏழைகளுக்கும் இனி வழங்கமாட்டோம் என சத்தியம் செய்ய வேண்டாம் உங்களுக்கு அவர்கள் தீங்கு செய்திருந்தால் அதை மன்னித்து விடுங்கள் உங்களை அல்லாஹ் மன்னிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா.. அல்லாஹ் மிக மன்னிப்பவன் மகாக் கருணையாளன். (அல்குர்ஆன் 24:22)

இந்த வசனம் ஏன் இறங்கியது தெரியுமா? அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு சொன்னவர்களில் ஹஸ்ரத் அபூபகர் (ரலி) அவர்களின் நெருங்கிய உறவினரும் ஒருவர். காலமெல்லாம் தன் உதவியைக் கொண்டே வாழ்ந்து வரும் இவர் தன் அருமை மகள் மீது அவதூறு சொல்லிவிட்டாரே என்ற கோபத்தில் இனி அவருக்கு சத்தியமாக ஏதும் கொடுக்கமாட்டேன் என்று கூறிய போது தான் இவ் வசனம் இறங்கியது

இவ்வசனம் இறங்கியது தான் தாமதம். ஆம்! நான் இறைவனின் மன்னிப்பை விரும்புகின்றேன். எனவே அவரை மன்னிக்கிறேன். ஏற்கனவே வழங்கி வந்த உதவித் தொகையை தொடர்ந்தும் அவருக்குக் கொடுப்பேன் என்று அபூபக்ர் (ரலி) கூறுகிறார்கள் என்றால் நற்குணத்துக்கு அதைவிடச் சான்று வேறென்ன வேண்டும்

எனவே நற்குணம் என்ற மாபெரும் நற்செயலுக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்ள இதுவரை நாம் கூறியபடி முத்தான பத்துப் பண்புகளையும் சத்தான போதனைகளையும் கவனத்துடன் கடைபிடிக்க வேண்டுகிறோம்

நிச்சயமாக ஒரு விசுவாசி, தனது நற்குணத்தின் மூலமாக இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு வைக்கின்ற நல்லடியார்களின் அந்தஸ்தை அடைய முடியும்" என்ற நபி ஸல் அவர்களின் நற்போதனையை (அபூதாவூதி

முன்னிறுத்தி "நீ எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். ஒரு தீமை நிகழ்ந்து விட்டால் உடனே ஒரு நன்மைச் செய்துவிடு. அந்தத் தீமையை அது அழித்துவிடும். மக்களுடன் நற்குணத்துடன் பழகு. உறவாடு” (அஹ்மது. திர்மிதி நஸாயி என்ற அன்பான கட்டளையை ஏற்று செயல்படுவோம்.

இறைவன் நற்குணமிக்க நல்லடியார்களின் கூட்டத்தில் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக ஆமீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக