பக்கங்கள்

புதன், 15 ஏப்ரல், 2020

பொய் வேண்டாம்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக. நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் ................................................

நான் இங்கு பொய் பேசுவதின் தீமையைப் பற்றி பேச வந்துள்ளேன்.


அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

ஒரு மனிதன் பேசும் பொய் அல்லாஹ்வின் கோபத்தையும் அனைத்துத் துன்பத்தையும் இழுத்துக்கொண்டு வருகிறது. இன்றைய காலத்தில் பொய் பேசுவது என்பது சர்வ  சாதாரணமாக கருதப்படுகிறது யாரிடம் பொய் பேசும் பழக்கம் இருக்கிறதோ அவர் தன் ஈமானைக் கறைபடிந்து கொள்ளச் செய்தவர் மக்களில் உண்மை மட்டுமே பேசும் பழக்கம் குறைந்து கொண்டே போகிறது

நபி (ஸல் அவர்கள் கூறியுள்ளதை ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி அவர்கள் கூறுகிறார்கள்

பொய் சொல்வது எந்த நிலையிலும் அனுமதிக்கப்பட்டதல்ல
வேண்டுமென்றே சொல்வதோ அல்லது விளையாட்டாகச் சொல்வதோ இரண்டுமே கூடாது. உங்களில் எவரேனும் தன் குழந்தைக்கு ஏதேனும் ஒரு பொருள் கொடுப்பதாக வாக்களித்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் விடுவதும் அனுமதிக்கப்பட்டதல்ல

ஒரு மனிதன் காலையில் விழித்தெழும் போதே யாரிடம் என்ன சொல்லி காரியம் சாதிக்கலாம் யாரிடம் எதைச் சொல்லி தப்பிக்கலாம் என அன்றைய நாளின் அலுவல்களை பொய்யைக் கொண்டு ஆரம்பித்து பிறகு இரவு படுக்கச் செல்லும்போது நாளைய பொழுதின் பொய்களை யோசித்தே தூங்கச்செல்கிறான்

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

பொய் பேசுபவனின் உள்ளத்திலிருந்து ஈமான் வெளியேறுகிறது. பொய் பேசுபவனின் வாய் மலக்குகளுக்கு துர் நாற்றமாக ஆகிவிடும். அல்லாஹ்வின் அருளை (ரஹ்மத்) சுமந்து கொண்டுவரும் மலக்குகள் பொய் பேசுபவனின் அருகே வரமாட்டார்கள் அல்லாஹ்வின் அருளை அடையாத உள்ளம் சதாவும் கவலையிலும், விரக்தியிலும் நிம்மதி இழந்து தவிக்கும்

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ஒருவர் மற்றவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி அதை அவர் உண்மையென்று நினைத்துக் கொண்டிருக்க சொல்லப்பட்ட விஷயம் பொய்யாய் இருந்தால் அது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்    அபூதாவூத் -

ஒரு பொருளை கடையில் விசாரிக்கிறோம் கடைக்காரர் ஒரு விலையை சொல்கிறார். அந்த விலைக்கு வாங்க விருப்பம் இல்லாவிட்டால் அப்படியே விட்டுவிட்டு வந்துவிட வேண்டும். அடுத்த தடவைவந்து வாங்கிக் கொள்கிறேன் என சும்மாவாவது ஒரு பொய்யையும், வாக்குறுதியையும் கூறிவிட்டு வருவது பாவமாகி விடும்.

ஒரு கடையில் ஒரு பொருளை விலைக்கு வாங்கச் செல்லும் ஒருவர், கடைக்காரிடம் பொருளை விலையை கேட்கிறார் விலைலையக் குறைத்து வாங்கும் எண்ணத்தில் இன்னொரு இடத்தைக் கூறி அங்கே குறைவான விலையில் கிடைக்கிறதே எனப் பொய் சொல்லி பேரம் பேசினால் அல்லாஹ்வின் சமூகத்தில் அது ஒரு பொய்யாக பதிவு செய்யப்படுகிறது

உண்மையில் இன்னொரு இடத்தில் குறைவாக இருக்கிறது என்றால் அது பொய்யல்ல இல்லாததைக் கூறி பொருளை விற்றாலும், வாங்கினாலும் அது ஹராமாகிவிடுகிறது

ஒருவரை மனதில் சாப்பிட வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலேயே சாப்பிட அழைப்பது பொய்யும், நம்பிக்கை துரோகமுமாகும்.

ஒருவரிடம் ஒரு செய்தியைக் கூறும்போது அதில் பொய்யை கலந்து மிகைப்படுத்திச் சொல்லுதல் பாவமாகும் எக்காரணத்தைக் கொண்டும் பொய் சொல்லமாட்டேன் என நிய்யத் செய்து வாழவேண்டும்.

பொய் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் மெளனத்தை பதிலாக்கி பொய்யைவிட்டு பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும்

பொய் பேசுவது மரணநேரத்தில் கலிமாச் சொல்ல தடையாக ஆகிவிடும். ஒரு பக்கம் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்று நாவால் ஓதுவதும், தெழுகையை கடைபிடித்துக் கொண்டே அதே நாவால் பொய் சொல்வதும், ஈமானுக்கு மிகவும் முரண்பட்ட விஷயமாகும்.

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஆமிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், எங்கள் வீட்டிற்கு வருகை தந்தபோது, என் தாயார் என்னை அழைத்து இங்கே வா உனக்கு பொருள் தருகிறேன் என்று கூறினார்கள் அதற்கு நபிஸல்) அவர்கள், நீர் அவனுக்கு எதனைத்தர விரும்புகிறீர் எனக் கேட்டார்கள்

அற்கு என் தாயார், நான் அவனுக்கு பேரீத்தம்பழம் தர விரும்புகிறேன். என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் தாயாரிடம், நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து பின்பு கொடுக்கவில்லையென்றால் பொய்யாக உங்கள் செயலேட்டில் அது பொய்யாக எழுதப்பட்டுவிடும் என்று கூறினார்கள்     (அபூதாவூத்)

விளையாட்டிற்குக்கூட பொய் சொல்வதற்கு அனுமதி இல்லை. அதுபோல் மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகும், அவனுக்கு அழிவு காத்திருக்கிறது என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்

ஒருவர் பொய் சொல்லிவிட்டார் என தெரிந்துவிட்டால், பிறகு அவர் தவ்பா செய்து மீளும்வரை நபி(ஸல்) அவர்களுக்கு அவரின் மீது வெறுப்பு இருந்தது'  என ஹழ்ரத் ஆயிஷா (ரலி அவர்கள் கூறுகிறார்கள்அதிகம் மெளனத்தை கடைபிடிப்பது பொய், புறம், கோள் எத்தனையோ பாவங்களை விட்டும் பாதுகாத்துவிடும்.

எனவே அல்லாஹ்வும் ரசூலும் எவ்வழியில் வாழச்சொன்னார்களே.. அவ்வழியில் வாழ்ந்து அவனது அன்பையும் அருளையும் பெறவோமாக.

எனக்கு இங்கு பேச வாய்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரகாத்துஹு.

தொகுத்தவர்.

மெளலவி S.S. அலி ஹஸன் ஜமாலி


மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக