பக்கங்கள்

வியாழன், 16 ஏப்ரல், 2020

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வருகையும் - பரக்கத்தும்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம் அம்மா பஃத். பகத் காலல்லாஹு தஆலா ஃபில்குர்ஆனில் அழீம். வல்ஃபுர்கானில் மஜீத். அவூதுபில்லாஹி மினஷ் ஷெய்தானிர் ரஜீம். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவன் மீதே நிலவட்டுமாக. நபிகள் நாயகம் நற்குணத்தின் தாயகம் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் நாதாக்கள் நல்லோர்கள் மீதும் குறிப்பாக இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் நம் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் அன்பும் அருளும் என்றும் நின்று நிலவட்டுமாக. ஆமீன்.

எனது பெயர் ................................................

நான் இங்கு நபி ஸல் அவர்களின் வருகையும் பரக்கத்தும் என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் பெயர் முஹம்மது என்பதாகும். அதாவது புகழப்பட்டவர் என்று அதன்பொருள், அகிலத்தின் அருட்கொடை, இறைத் தூதர்களின் தலைவர் ஹழ்ரத் முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கி.பி.571 ரபீவுல் அவ்வல், பிறை 12-ம் நாள் திங்கட்கிழமை அன்று மக்காவில் பிறந்தார்கள், நபி (ஸல்) அவர்கள் தங்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அண்ணலாரின் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் மரணித்து விட்டார்கள், நபி (ஸல்) அவர்கள் பிறக்கும் போதே தந்தையை இழந்திருந்தார்கள். அண்ணலாரின் தாயார் ஆமினா அம்மா அவர்கள் ஆவார்கள்

நபி (ஸல்) அவர்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வம்சாவழியில் உயர்குடியான குரைஷி பாரம்பரியத்தில் அவதரித்தவர்கள், ஹழ்ரத் உஸ்மான் (ரலி அவர்களின் தாயார் ஃபாத்திமா (ரலி அவர்கள், அண்ணலாருடைய பிறப்பின் போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் பிறக்கும் போது. நான் ஹழ்ரத் ஆமினா அவர்களின் அருகிலேயே இருந்தேன் அப்போது, நாங்கள் இருந்த வீடு ஒரே ஒளிமயமாகப் பிரகாசித்தது. வானிலிருந்து நட்சத்திரங்கள் ஒரே கூட்டமாக கீழ்நோக்கி பாய்ந்தோடி வந்தது. அவை எங்கள் மீது விழுந்து விடுமோ? என்று நான் அஞ்சினேன் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளர்கள். இச்செய்தி (ஃபத்ஹுல் பாரி) கிதாபில் எழுதப்பட்டு இருக்கிறது.

அன்பிற்கினிய அல்லாஹ்வின் நல்லடியார்களே....

அல்லாஹுதஆலா நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் புகழ்ந்து குர்ஆனில்

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ

நபியே நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவே, அனுப்பியுள்ளோம். - 21:107 என்று கூறுகிறான்.

அண்ணலாரின் பாட்டனார் அப்துல் முத்தலிப் தங்கள் மகன் அப்துல்லாஹ் அவர்களின் மகனாகப் பிறந்த தன் பேரக் குழந்தையை சந்தோஷமாக ஆமீனா அம்மா அலர்களிடமிருந்து பெற்று தங்களின் கனவில் அறிவுறுத்தப்பட்டபடி முஹம்மத் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள் அக்காலத்தில் அரபுப் பகுதியில் செவிலித்தாயைக் கொண்டே குழந்தைகளுக்கு பாலூட்டப்படும் வழக்கம் இருந்தது. அந்த வருடம் வழக்கம் போல் பனீஸஅத் என்ற கிராமத்துப் பெண்கள் மக்கா நகருக்கு வந்து வசதியுள்ள குடும்பத்துக் குழந்தைகளை பாலூட்டுவதற்காக தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்,

தாயார் ஆமீனா அம்மா அவர்களிடம் பாலூட்டும் பெண்ணிற்கு கூலி எதுவுமில்லாத காரணத்தால், ஏழ்மையின் காரணமாக நபிஸல்) அவர்களை எந்தப் பெண்மணியும் தேர்ந்தெடுக்க முன்வரவில்லை

அப்போது அக்கூட்டத்தில் ஹலீமா என்ற பெண்மணியும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு குழந்தை ஏதும் கிடைக்காத நிலையில் ஏழைக்குழந்தையான நபிஸல்) அவர்களை (பாலூட்ட தங்களோடு அழைத்துச் செல்ல தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்

அன்னை ஹலீமா அவர்கள் மிகவும் ஏழை மேலும், அவர்களின் உடல்நிலை பலஹீனத்தின் காரணமாக பாலூட்ட இயலா நிலையில் இருந்தர்கள், அன்னை ஹலீமா அவர்கள் அண்ணலாரை பெற்றுக் கொண்ட உடனேயே தங்களில் பல அற்புதங்கள் நிகழ்வதைக் கண்டார்கள்.

அது குறித்து, அன்னை ஹலீமா அவர்கள் இப்படி கூறுகிறார்கள்.

அக்குழந்தையை எனது மடியில் வைத்தவுடன், எனது மார்புகளில் பால் சுரந்தது. அக்குழந்தை வயிறு நிரம்ப பால் அருந்தியது. எனது கணவர் எங்களது கிழட்டு ஒட்டகத்தை நோக்கிச் சென்றார். அதன் மடி பாலால் நிரம்பியிருந்தது அதைக் கறந்து நானும், எனது கணவரும் பசி தீர குடித்தோம், அன்றிரவை நிம்மதியாக கழித்தோம்

காலையில் எனது கணவர் என்னிடம், ஹலீமாவே அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீ மிகவும் பரக்கத் (வளம்) பொருந்திய ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்றார். அதற்கு நான் அப்படித்தான் நானும் நம்புகிறேன் என்றேன். பிறகு நாங்கள் எங்களது ஊரை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தோம், மக்காவை நோக்கி வரும்போது எங்கள் ஓட்டகம் பலஹீனத்தின் காரணமாக அனைவரைவிடவும் மெதுவாக வந்தது

இப்போது திரும்பிச் செல்கையில் மற்றவர்களின் ஒட்டகங்களை விட வேகமாக முன்னேறிச் சென்றது. இவ்வாறு அக்குழந்தைக்குப் பால்குடி மறக்கடிக்கும் வரையில், அல்லாஹ்விடமிருந்து பல வளங்களையும், நலங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தோம். தவணை முடிந்து அவரது தாயாரிடம் அழைத்துச் சென்று. அக்குழந்தையின் (நபிஸல்) மீது ஏற்பட்ட பிரியத்தால், மீண்டும் அனுமதி பெற்று எங்களுடனேயே மேலும் சில ஆண்டுகள் வைத்திருந்தோம்.

இவ்வாறாக, நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் பிறந்த உடனேயே அண்ணலாரிடமிருந்து பரக்கத்துகள் வெளிப்பட ஆரம்பித்தன.

இதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்தன. அல்லாஹு தஆலா நபிஸல்) அவர்களைக் கண்ணியப் படுத்தும் விதத்தில், குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.


يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا

நபியே! நாம் நிச்சயமாக உம்மை சாட்சியாகவும், நன்மாராயம் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம்
சூரா அல் அஹ்ஜாப் : 45

 لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ

மேலும், (அவர்) முஃமின்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவராக இருக்கின்றார் சூரா அத தவபா்: 128:69

وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا

இன்னும் அல்லாஹ்வின் பக்கம், அவன் அனுமதிப்படி அழைப்பவராகவும். பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம் சூரா அல் அஹ்ஜாப் : 46

அல்லாஹுத்தஆலாவின் அருளாக விளங்கும் நபி(ஸல்) அவர்கள் அவதரித்த தினம் ரபீஉல் அவ்வல் பிறை 12 ஆகும், அண்ணலாரின் மீதுள்ள நம் பேரன்பை வெளிப்படுத்தும் விதமாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இன்னும் ஏழைகளுக்கும் அன்றைய தினம் விருந்தளிக்க வேண்டும்.

இம்மாதத்தில் நபிஸல்) அவர்களின் மீது அதிகமாக ஸலவாத் ஒதுவதும், பள்ளிவாசல்களின் நடைபெறும் மவ்லிது மஜ்லிஸ்களில் கலந்து கொள்வதும், நம் இல்லங்களில் மவ்லிது ஷரீப் ஓதுவதும் விரும்பத்தக்க செயலாகும். இன்னும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து பல பரக்கத்துகளை நாம் அடைய இவை காரணமாகும்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் 63-வது வயதில் ஹிஜ்ரி 10-ம் ஆண்டு, ரபீஉல் உவ்வல் பிறை திங்கட்கிழ2மை முற்பகலில் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள், நபிஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் பிறை 12-ல் திங்கட்கிழமை பிறந்து, அதே போல் ரபீஉல் அவ்வல் பிறை 12-திங்கட்கிழமையன்று இவ்வுலகைவிட்டுப் பிரிந்தது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகும்.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமை அன்று பிறந்தார்கள் திங்கட்கிழமை அன்றுதான் நபியாக அனுப்பப்பட்டார்கள்ز

அதேபோல் திங்கட்கிழமை மக்காவிலிருந்து, மதீனாவிற்கு ஹிஜ்ரத் புறப்பட்டார்கள். திங்கட்கிழமை அன்றே (ஹிஜ்ரத் பயணத்தை நிறைவு செய்து) மதீனாவில் நுழைந்தார்கள். ஹஜருல் அஸ்வத் கல்லை கஃபாவில் பொருத்தியதும் திங்கட்கிழமை அன்றுதான் 

எனவே நமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருட்கொடையாக வந்த அண்ணலம் பெருமானார் ஸல் அவர்கள் நமது உயிருக்கும் மேலாக நேசித்து அவர்கள் எவ்வழியில் வாழ்ந்தார்களோ அவ்வழியில் வாழந்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக் கொண்ட நல்லோர்களில் ஒருவராக நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக. ஆமீன்

எனக்கு இங்கு பேச வாய்பளித்த ஹஸ்ரத் அவர்களுக்கும் ஜமாத்தார்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரகாத்துஹு.

மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக