பக்கங்கள்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

இமாமும்.. இமாமத்தும்.

எழுதியவர். மர்ஹும். மெளலானா K.A. நிஜாமுத்தீன் மன்பயி. ஹழ்ரத் அவர்கள்.

இமாம்! அவர் மகத்துவத்திற்குரியவர்
இமாமத்! - அது ஒரு மகத்தான பணி!

அதற்கு நிகராக உலகில் வேறு எந்தப் பணியும் கிடையாது. மிகத் தூய எண்ணத்துடன்- அல்லாஹ்வுக்காக இமாமத் செய்கிற இமாம் கண்ணியத்திற்குரியவர்; புண்ணியத்திற்குரியவர் 


ஏனெனில் இமாமத், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வகித்து வந்த புனிதப்பணி. வாழ்வின் இறுதி நேரத்தில், நடந்துவர முடியாத தருணத்தில் ஓரிரு நாள்கள் மட்டுமே அபூபக்கர் (ரலி) அவர்களைத் தெழ வைக்கச் சொன்னார்கள்.

அத்தகைய புனிதப் பணியைப் பெற்றிருக்கும் இமாம் ஒருவர் எவ்வாறிருக்க வேண்டுமென்பதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே விளக்கமாவார்கள். அன்னாரின் தொழுகை சம்பந்தமான சொற்களும் செயல்களுமே மற்ற இமாம்களுக்குச் சிறந்த பாடமாகும் இருப்பினும் சிந்தனைக்குச் சில கருத்துகள் இங்கு எழுதப்படுகின்றன.

இமாம் என்றால் தலைவர், இமாமத்: தலைமைத்துவம். இமாமத் சிறக்க இமாம் எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கு சில அனுபவ ஆலோசனைகள்

இமாம் மார்க்க அறிவு நிரம்பப்பெற்ற ஆலிமாகவும் நன்நெறியாளராகவும் நற்பண்புகள் நிறைந்தவராகவும் இருந்திட வேண்டும். அல்லாஹ் உடைய திருப்பொருத்தத்தைப் பெறுகின்ற நோக்கத்திலும் அவனிடமே உரிய பிரதிபலனைப் பெற வேண்டுமென்ற எண்ணத்திலும் பணியாற்றிட வேண்டும்.

அல்லாஹ்வுடைய அச்சமும் (தக்வாவும்) பேணுதலான நற்செயல்கள் உள்ளவராகவும் இருந்திட வேண்டும். குர்ஆனை தர்தீல், தஜ்வீத் முறைப்படி பிழையற ஓதத் தெரிந்தவராகவும், சுன்னத்தான, நஃபிலான தொழுகைகளையும் மனவிருப்பத்துடன் நிரந்தரமாகத் தொழுது வருபவராக இருந்திட வேண்டும்.

தொழுகையின் ஃபர்ளுகள், வாஜிபுகள், சுன்னத்துகள், முஸ்தஹப்புகள்
ஆகியவற்றை கவனத்துடன் பேணிச் செய்பவராக இருந்திட வேண்டும். இவை அனைத்தையும் அல்லாஹ்வுக்காகச் செய்திட வேண்டும். இதனால் அல்லாஹ்விடம் உயரிய வெகுமதிகள் கிடைக்கப் பெறுவதுடன், மக்கள் மனதிலும் மதிப்பான இடத்தினைப் பெறும் பேற்றினையும் பெற்றிடுவார், மேலும் அவரை முன்மாதிரியாகக் கொண்டுஅமல் செய்கிறவர்களின் நன்மைகளும் அவருக்குக் கிடைத்திடும்.

இமாமாகப் பணி செய்பவர் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
பொதுமக்கள் அவரை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். எனவே அவர் சொன்னதைச் செய்ய வேண்டும். செய்வதைச் சொல்ல வேண்டும்.

மக்களிடையே இருந்தாலும் தனிமையிலிருந்தாலும் இந்த நிலையைக் கடைபிடித்திட வேண்டும். அல்லாஹ்வை பயந்து, அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலே மேற்கூறப்பட்ட தன்மைகள் வந்துவிடும். வீண் பேச்சுக்கள், வீணான சச்சரவுகள், தேவையின்றி வெளியே
சுற்றித்திரிதல் ஆகியவற்றை விட்டும் தன்னைத் தற்காத்துக் கொள்பவராக இருக்க வேண்டும்.

இமாமாகப் பணி செய்பவர் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அவரை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள்

தன்னை மறக்கலாகாது

அல்லாஹுதஆலா கூறுகிறான்

 أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابَ ۚ أَفَلَا تَعْقِلُونَ
அல்லாஹுதஆலா கூறுகிறான்"நீங்கள் உங்களை மறந்து விட்டு
(மற்ற) மனிதர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா
(அல்குர் ஆன் 2:44)

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ
ஈமான் கொண்டவர்களே, நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்லுகிறீர்கள்" (அல்குர் ஆன் 61: 2)

இவ்விரு வசனங்களும், தன்னை மறந்துவிட்டுப் பிறருக்கு மட்டும்
உபதேசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எச்சரிக்கையாகும். இமாமாக
இருப்பவர் என்றும் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும் இமாமாக இருப்பவரின் மீது அல்லாஹ் திருப்தி கொள்வதுடன் மக்களும் திருப்தி கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: "மக்கள் திருப்தி கொண்டிருக்கும் நிலையில் ஒரு கூட்டத்தினருக்கு இமாமத் செய்கிறவர் கியாமத்து நாளில் கஸ்தூரி மேடையின் மீது வீற்றிருப்பார் " (திர்மிதி)

மற்றொரு ஹதிஸில்

இமாம் பொறுப்பேற்கிறவர்; முஅத்தின் நம்பிக்கைக் குரியவர். யா
அல்லாஹ், இமாம்களுக்கு நேர்வழி காட்டுவாயாக! மு.அத்தின்களை
மன்னிப்பாயாக" என்று து ஆச் செய்து கூறியுள்ளார்கள் இமாம்
பொறுப்பேற்கிறவர் என்றால், அவருக்குப் பின்னால் தொழுபவர்களின்
தொழுகைகளுக்குப் பொறுப்பேற்றிருப்பவர். அவர் தொழ வைப்பது, அவருடைய கிராஅத், அவருடைய கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள், அவருடைய நடை உடை, பாவனைகள் ஆகியவற்றில் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உரியவராக அவர் இருந்திட வேண்டும். அதாவது : இமாமத் பொறுப்பு ஓர் அமானிதம். அதனை அவர் இறைபக்தியுடனும் நிறை கவனத்துடனும் நிறைவேற்றிட வேண்டும்.

அடுத்து, இமாம் அவரிருக்கும் மஹல்லாவில் பொதுவானவர். அங்கு
பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள். ஏற்றத்தாழ்வான பல்வேறு விதமான தொழில்கள், வேலைகள் செய்பவர்களும், ஹலால், ஹராம் என்பதைப் பேணிப் பொருளீட்டுபவர்களும் அதற்கு மாறானவர்களும் இருக்கலாம். இமாமானவர் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக அன்புடன் பேசிப் பழகிட வேண்டும் எவரேனும், ஹராமாகப் பொருளிட்டுபவராகவோ ஷரீ அத் சட்டங்களுக்கு மாறுபட்டு நடப்பவராகவோ பாவங்களை பகிரங்கமாகச் செய்பவராகவோ இருந்தால் அவரிடத்தில் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது அவரை மனதால் வெறுத்திட வேண்டும்.

ஏனெனில், அல்லாஹு தஆலா கூறுகிறான்.


"அநியாயம் செய்பவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்துவிட வேண்டாம்
அப்பொழுது நரக நெருப்பு உங்களைத் தீண்டிவிடும்."
(அல்குர்ஆன் 1113)

இத்தகையோரைச் சந்திக்கும் பொழுது ஸலாம் கூறி இன்முகத்துடன் பேசவேண்டும். வெறுப்பை மனதுக்குள் வைக்க வேண்டும். எனினும், சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அவர்களின் தவறுகளைப் பெயர் குறிப்பிடாமல் பொதுவாகத் தெரியப்படுத்துவதில் தயக்கம் காட்டக் கூடாது
ஏவல், விலக்கல் வேண்டும்.

ஷரீஅத்தின் சட்டங்களை மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். ஹராம், ஹலால் பற்றி துணிவுடனும் பணிவுடனும் சொல்ல வேண்டும். நல்லதைச் சொல்லி, தீமையைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்திட வேண்டும். இவற்றில் வேண்டியவர், வேண்டாதவர் வலியவர் எளியவர் என்ற பாரபட்சம் இருக்கக் கூடாது. விருப்பு, வெறுப்பு என்றில்லாமல் அல்லாஹ்வுக்காகச் செயல்படுதல் இருக்க வேண்டும். இதனால் சில நேரங்களில் சிலரின் எதிர்ப்பும் வெறுப்பும் ஏற்படலாம் அவற்றை அல்லாஹ்வுக்காகச் சகித்துப் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். காலம் கனியும் பொழுது கண்ணியமும் மதிப்பும் அவரைச் தேடிவந்து சேரும்.

இமாமானவர் எல்லோரிடமும் கண்ணியத்துடனும் இன்முகத்துடனும் பழகிட வேண்டும். பெருமை இருந்திடக் கூடாது. துணிவு இருக்க வேண்டும். அது முரட்டுத்தனமாக ஆகிடக் கூடாது. பணிவு இருந்திட வேண்டும். அது கோழைத்தனமாக ஆகிடக்கூடாது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிஸ் வஸல்லம் அவர்கள் சொல்லித் தந்த நற்பண்புகள் அனைத்தும் நிறைவாக இருந்திட முயலவேண்டும். நல்லவர் எவருடைய வெறுப்புக்கும் இலக்காகி விடக் கூடாது பின்வரும் து.ஆவைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

"
யா அல்லாஹ், என்னை என் கண்ணுக்குச் சிறியவனாகவும் பிற மனிதர்களின் கண்களுக்குப் பெரியவனாகவும் ஆக்கிடுவாயாக

கடன் வாங்காதீர்

நிர்பந்தமான தேவை ஏற்பட்டால் தவிர எவரிடத்திலும் கடன் வாங்கக்கூடாது. அது இழிவை உண்டாக்கிவிடும். பொதுவாக, பொதுமக்களிடம் அதிகத் தொடர்பில்லாமல் இருப்பது, அவர்களின் மனங்களில் மதிப்பை ஏற்படுத்தும். கடன் வாங்குவது சம்பந்தமான ஹதீஸ்களை கவனத்துடன் படித்து அமல் செய்திட வேண்டும்

நேரமும் தூக்கமும்

ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் பாங்கு சொன்னவுடன் மஸ்ஜிதுக்குச் சென்று முன்வரிசையிலிருந்து அமல்கள் செய்து கொண்டிருக்க வேண்டும் பர்லுக்குப்பின் மக்கள் அனைவரும் சென்றபின் வெளியே வரவேண்டும் கிடைத்திடும் நேரங்களைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் நேரங்களைத் தூங்கியே கழித்துவிடக் கூடாது. குறிப்பாக சுபுஹுக்குப்பின் தூங்கவே கூடாது. அது மிக அற்புதமான நேரம். அந்தக குறுகிய சிலமணி
நேரங்களில் ஏராளமான பலன்மிக்க வேலைகளைச் செய்து முடித்திடலாம்.

மேலும், சுபுஹுடைய நேரம் இரணம் வழங்கப்படும் நேரம். அதனைத் தூங்கிக் கெடுத்துக் கொள்ளக்கூடாது

என்னருமை மகளே, எழுந்திருப்பாயாக! உன்னுடைய இரட்சகனி்
இரணத்திற்கு நீ ஆஜராகுவாயாக என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்கள் அருமை மகளார் ஃபாத்திமா (ரலி) களுக்குச் சொன்ன செய்தி "அத்தர்ஙீப் வத்தர்ஹீப்
நூலில் உள்ளது.

காலைத் தூக்கம் இரணத்தைத் தடுக்கும் (அமது, பைஹகி)

காலைத் தூக்கம் பலவீனம், உடற்பருமன், சோம்பல், உடல் வீக்கம்
கோழைத்தனம், தேவைவை மறக்குதல் ஆகியவற்றை ஏற்படுத்தும்" என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
நூல்: தன்பீஹீல் ஙாஃபிலீன்

பயனுள்ள பயான்

நேரம் என்பது அல்லாஹ் வழங்கியுள்ள மிகப்பெரிய நிஃமத், அதனை ஒரு நிமிடமும் வீணாக்கி விடக் கூடாது.தொழுகை நேரங்கள் தவிர மீதி நேரங்களில் கிதாபுகளைப் பார்த்து, ஆய்வு செய்து அவற்றிலுள்ள விஷயங்களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 400/500 பக்கங்களுள்ள ஒரு நோட்டுப் புத்தகத்தைத் தயாரித்து, ஒவ்வொரு தலைப்புக்கும் சில பக்கங்களை ஒதுக்கி, ஒவ்வொரு தலைப்பின் கீழும் அது சம்பந்தமான ஆயத்துகள்ஹதீஸ்கள், அறிவுரைகள், சம்பவங்கள் ஆகியவற்றை எழுதிவைத்திட வேண்டும்.

தலைப்புகள் குறிக்கப்பட்டிருந்தால், எந்தத் தலைப்பிலுள்ள விஷயத்தைப் பார்க்கிறாரோ உடனே அதனை அந்தத் தலைப்பின் கீழ் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் ஏராளமான செய்திகளும் அறிவும் கிடைத்து விடும். அது ஜும்ஆவுடைய பயானுக்கும் மற்ற பயான்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இதில் சோம்பல், சடைவு என்பது ஏற்பட்டு விடக்கூடாது.

மேலும் ஜும்ஆவுடைய பயானை மக்களுக்கு நல்ல பலன் தரத்தக்கதாக ஆக்குவதற்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். "இமாம்கள் வெள்ளிமேடையை வீணாக்குகிறார்கள்" என்று குறை கூறுவோர்க்கு பதிலடிதரும் முறையில் சத்துள்ளதாக ஜும்ஆ பயான் அமைந்திட வேண்டும்
ஆயத்துகளின் விளக்கம், ஹதீஸ்களின் கருத்துரைகள், ஃபிக்ஹ் சட்டங்கள் வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றை அன்றைய உலக நடப்புடன் சேர்த்து விளக்கும் வகையில் ஜும்ஆ பயானை அமைத்துக் கொள்ள வேண்டும். எந்தத் செய்தியையும் கிதாப் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். அது நல்ல பலனைத்தரும். இமாமானவர் தொழுகைக்குரிய அனைத்துச் சட்டங்களையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தொழுகை சம்பந்தமாக எந்தச் சட்டத்தைக் கேட்டாலும் உடனடியாக ஆதாரத்துடன் சொல்லக்கூடிய திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சொல்கின்ற சட்டப்படி தானும் அமல் செய்பவராகஇருக்க வேண்டும்.

உடை, தாடி, முடி, தொப்பி

மேலும், சுன்னத்தான முறைப்படி உடைகளும் தலை முடியும் தாடியும் தலைப்பாகையும் அமைந்திருக்க வேண்டும்; எவ்வாறு மழிப்பது ஹராமோ அதுபோன்று ஒரு பிடிக்குக் குறைவாக உள்ள தாடியைக் கத்தரிப்பதும் ஹராமாகும்! இவ்விஷயத்தில் இமாம்களில் சிலர் பேணுதலில்லாமல் இருப்பதைக் காண்கிறோம்.

இவ்வாறோ சிலர் இடுப்பு வரையுள்ள சட்டையை அணிந்துகொண்டு இமாமத் செய்வதையும் பார்க்கிறோம். இவையெல்லாம் சுன்னத்திற்கு மாற்றமான செயல்களாகும். இவை தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும்
இன்னும் ஏராளமான ஒழுக்கங்கள் உள்ளன. அவற்றை ஆலிமான இமாம் நிச்சயம் தெரிந்திருப்பார். அவற்றைப் பேணி நடந்துகொள்ள வேண்டும்
பத்துக் கட்டளைகள்

ஃபகீஹ் அபுல்லைஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஓர் இமாமுடைய தொழுகையும் அவருக்குப் பின்னால் தொழுபவர்களின் தொழுகைகளும் நிரப்பமாக ஆவதற்கு அந்த இமாமிடத்தில் பத்துப் பண்புகள் அமைந்திருக்க வேண்டும்.

1. அவர் அல்லாஹ்வின் வேதத்தை அழகிய முறையில் தஜ்வீதுடன் ஓதுபவராக இருந்திட வேண்டும். இராகம் போடுபவராக இருக்கக் கூடாது.

2. தொழுகையில் அவர் கூறும் தக்பீர்கள் சரியான உச்சரிப்புடன் இருந்திட வேண்டும் முக்ததீகள் தொழுகையில் இமாமுக்கு முந்திச் செயல் படக்கூடாது. அதற்கு இமாமுடைய தக்பீர்கள் கவனிக்கப்பட வேண்டியவையாகும். இமாம் நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்லும் பொழுது தக்பீரை நீ முழக்கிச் சொன்னால், முக்ததீகள் அந்தச் செயலில் இமாமுக்கு முன்னதாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். இமாம் அதனை கவனத்தில் கொண்டு தக்பீர்களைச் சொல்ல வேண்டும்.

3.அவர் தன்னுடைய ருகூவையும் ஸஜ்தாவையும் நிரப்பமாகச் செய்திட வேண்டும்.
(ருகூவிலும் ஸுஜூ திலும் சிறு நிலையிலும் சிறு இருப்பிலும் மூன்று தஹ்பீஹ் உடைய நேரம் தாமதித்திருந்து அவற்றைப் பரிபூரணமாக நிறைவேற்ற வேண்டும்.

4. ஹராமான மற்றும் சந்தேகத்திற்குரிய உணவு, செயல்கள் ஆகியவற்றை விட்டும் காத்திட வேண்டும்

5. சுன்னத்தான முறைப்படி உடைகளையும் உடலையும் வைத்துக் கொள்ளவேண்டும்

6. முக்ததீகளின் திருப்தியில்லாமல் தொழுகையில் கிராஅத்தை மிக
நீளமாக ஒதிக் கொண்டிருக்கக் கூடாது

7. தற்பெருமை கொள்ளக்கூடாது

8. ஒவ்வொரு தொழுகையின் போதும் பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) தேடிய பின்னர்தான் தொழவைக்கத் தொடங்க வேண்டும். ஏனெனில், இமாம் தனக்குப் பின்னால் இருப்பவர்களுக்குப் பரிந்துரை செய்பவராவார்.

9. மக்கள் அனைவருக்கும் சேர்த்து பன்மையாக துஆக் கேட்க வேண்டும் தனக்கு மட்டும் கேட்டுக் கொள்ளக்கூடாது

10. அவர் இருக்கும் மஸ்ஜிதுக்கு வருகிற வெளியூர்க்காரர்களை
விசாரித்து அவருடைய நியாயமான தேவைகளை நிறைவேற்றிட முயல வேண்டும். (இது முந்திய காலத்தின் நிலை. இப்பொழுது தினந்தோறும் ஒவ்வொரு நேரத்திலும் வெளியூர்க்காரர்கள் வந்து செல்வதால் அதனை கவனித்துச் செயல்பட வேண்டும்
(
நூல்: தன்பீஹுல் நாஃபிலீன்)

இவைபோன்று இன்னும் பல ஒழுக்கங்கள் உள்ளன. ஒரு மஸ்ஜிதிலுள்ள இமாம் அங்குள்ள சூழ்நிலைகளை கவனித்து தன்னை அமைத்துக் கொள்வதும் அது ஷரீஅத்துடைய சட்டங்களுக்கு உட்பட்டதாக அமைந்திருப்பதும் தன்னுடைய கண்ணியத்தைக் காத்துக் கடமையைக் செய்வதும் அவசியமாகும்

யா அல்லாஹ், இமாம்களுக்கு நேர்வழி காட்டுவாயாக....!
உம்மத்தினரை மன்னிப்பாயாக...!

2008 ஜுலை மாத மனாருல் ஹுதா மாத இதழிலிருந்து

மேலும் விபரங்களுக்கு

A.காதிர் மீரான் மஸ்லஹி.
ஜாமிஆ மஸ்ஜித்.
அசநெல்லிக் குப்பம்.
அரக்கோணம்.
9952129706

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக