பக்கங்கள்

திங்கள், 27 ஏப்ரல், 2020

கேள்வி பதில்கள்.


கேள்வி : என் வயது 45. பதினைந்து வருடங்கள் முன்பு கணவர் இறந்து விட்டார். தற்போது நான் என் மகனுடன் தான் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது தனியாக ஹஜ் கமிட்டி மூலமாக நிறைவேற்றலாமா?

பதில் : ஒரு பெண் 48 மைல்கள் தூரம் உள்ள ஊர்களுக்கு பயணிப்பதாக இருந்தால் அவளுடன் மஹ்ரமான நபர்கள் இருத்தல் அவசியமாகும். ஏனெனில் மஹ்ரமான நபர் துணையில்லாமல் ஒரு பெண் பயணிப்பதை நபி ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.


ஒரு பெண் மஹ்ரமானவர்கள் துணையின்றி ஒரு பகல் ஒரு இரவு தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் என பெருமானார் ஸல்  அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர் - அபூஹுரைரா (ரலி, நூல்: புகாரி, முஸ்லிம், மிஷ்காத்-221

ஒரு பெண்ணிடத்தில் ஹஜ்ஜிற்கு சென்று வர பொருள் வசதியிருந்து கணவன் அல்லது மகன் போன்ற மஹ்ரமானவர்கள் இல்லையெனில் அப்பெண்ணிற்கு ஹஜ் கடமையாகாது. எனினும் அப்பெண் "பத்லீ ஹஜ்" செய்ய வஸிய்யத் செய்வது அவசியம். அந்த பத்லீ ஹஜ்ஜை அப்பெண்ணின் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியில் இருந்து நிறைவேற்றப்படும்.

பெண் வயது முதிர்ந்தவராக, வாலிபப் பெண்ணாக எப்படியிருப்பினும் பயணக் குழுவில் பிற பெண்கள் இருப்பினும் இல்லாவிடினும் அனைத்து நிலையிலும் இதே சட்டம் தான். இது தான் அபூஹனீஃபா (ரஹ் அவர்களின் மத்ஹப் ஆகும். எனவே தாங்கள் தங்கள் மகனுடனயே ஹஜ் செய்வது கடமை, ஹஜ் கமிட்டியின் மூலம் தனியாக செல்வது கூடாது.
(ஹிதாயா : 1213)

கேள்வி : தொழுகையில் தக்பீர் சொல்லி கை எங்கு கட்ட வேண்டும்

பதில் : தொழுகையில் நிலையில் இடக்கையின் மீது வலக்கையை வைத்து கை கட்ட வேண்டும் என்று ஹதீஸ்களில் வந்துள்ளது. புகாரி, பாகம்-1 பக்-102

அதுபோல் சஹாபி வாயில் இப்னு ஹுஜ்ர் (ரலி) அவர்கள் பெருமானார் அவர்கள் தொப்புளின் கீழ் இடக்கையின் மீது வலக்கை வைத்து தக்பீர் கட்டியதை பார்த்ததாக அறிவிக்கிறார்கள். (இஃலாவுஸ்ஸுனன் 2/148)

எனவே ஹனஃபி மத்ஹப் பிரகாரம் தொழுகையில் தக்பீர் கட்டும் முறை கொப்புளின் கீழ் இடக்கையின் மீது வலக்கையை வைத்து தக்பீர் கட்டுவதாகும்.(ஹிதாயா 186)

கேள்வி : ஸப்பில் எப்படி நிற்க வேண்டும்? ஸப்பில் இடைவெளி விட்டு நின்றால் தொழுகை கூடாதா? அதை திரும்ப நிறைவேற்ற வேண்டுமா...? ஆட்டுக்குட்டி அளவு என்கிறார்களே? அதன் அளவு என்ன...?

பதில் : ஹதீஸ்களில் ஸப்புகளை சீராக வைத்திருக்கும் படி வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. ஸப்புகளை சீராக வைப்பதற்கு நான்கு விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.

1. சிலர் மேடான பகுதியிலும் சிலர் தாழ்வான பகுதியிலும்
நிற்காமல் நிற்கும் தளம் சமமாக இருத்தல்

2.ஸப்பில் நிற்பவர்கள் முன் பின்னாக இல்லாமல் அனைவரின் பின்னங்காலும் சமமாக இருக்கும்படி நிற்றல்.

3. ஸப்பில் நிற்பவர்கள் தமக்கிடையே இடைவெளிவிடாமல் தோளோடு தோள் சேர்த்து சேர்ந்து நிற்றல்.

4. முன் ஸஃப்பில் இடம் இருக்க பின் ஸைப்பில் நிற்காமல் முன் ஸப்பை பூர்த்தி செய்த பின்னர் பின் ஸப்பில் நிற்றல்.

ஹதீஸில் சொல்லப்பட்ட ஸப்பை சீரக வைத்தல் என்பது இந்த நான்கு விஷயங்களையும் உள்ளடக்கியதாகும்.

எனவே ஸப்பில் நேராகவும் சேர்ந்தும் நிற்பதை கவனமாக கடைபிடிக்க வேண்டும், எனினும் ஸப்பில் காலியிடம் இருந்து விட்டால் தொழுகை முறிந்துவிடாது அதனை மீட்டுத் தொழவும் அவசியமில்லை. அபதாவூது 797 ஃபதாவா மஹ்மூதிய்யா 6/480)

ஆட்டுக்குட்டி அளவு இடைவெளி ஸப்புகளில் அல்ல. ஸஜ்தாவின் போது ஆகும்.

கேள்வி : பள்ளிக் கூடங்களில் மென அஞ்சலி செலுத்தும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? அவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தலாமா..?

பதில் : யாரேனும் ஒருவரின் மரணத்தின் போது இரங்கல் தெரிவிப்பதும் மரணித்தவரின் உற்றார் உறவினர்களுக்கு பொறுமையை மேற்கொள்ளும் படி எடுத்துச் சொல்வதும் ஆகுமானதாகும். இவ்வாறு இரங்கலின் போது "அஃளமல்லாஹு அஜ்ரக வஅஹ்ஸன அஸாஅக வஃகஃபர லிமய்யிதிக" (அல்லாஹ் உங்களுக்கு (பொறுமையை கையாண்டதற்காக) பெரும் கூலியை தருவானாக! உங்கள் கவலை (நீக்கி) மகிழ்வாக்குவானாக! உங்களின் மரணித்தவருக்கு மன்னிப்பளிப்பானாக) என்று ஓதுவதும் ஹதீஸ்களில் வந்துள்ளது. (ரத்துல் முஹ்தார் 2/239).

ஒருவர் இறந்து அதனால் அதிகமான மக்களுக்கு கவலை ஏற்ப்பட்டிருக்கும் பட்சத்தில் இரங்கற் கூட்டம் வைப்பதும் கூடும்

முஸ்லிமல்லாதவர் இறந்திருப்பின் அவரின் உறவினருக்கு இரங்கல் தெரிவிக்கும் போது "அக்லஃபல்லாஹு அலைக கைரன் மின்ஹு வஅஸ்லஹக" அல்லாஹுதஆலா உமக்கு அவரை விட சிறந்தவரை பகரமாக கொடுப்பானாக உம்மை சீர்படுத்துவானாக) என்று ஒத வேண்டும். 16ஃபதாவா மஹ்மூதிப்யா 9:253)

மேற்சொன்னவையே இரங்கற் தெரிவிப்பதின் சுன்னத்தான முறை எனினும் பள்ளிக் கூடங்கள் மற்றும் சில இடங்களில் சிறிது நேரம் மௌனமாக நிற்பதை இரங்கற் தெரிவிப்பதாக கருதப்படுகிறது. இதில் நாம் கலந்து கொள்ளாத பட்சத்தில் நமக்கு ஏதேனும் இடையூறுகள், கஷ்டங்கள் ஏற்படும் என்றிருந்தால் அந்த இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்காக கலந்து கொள்ளலாம். மனதில் மேற்சொன்ன து.ஆக்களை ஒதிக் கொள்ள வேண்டும்.

கேள்வி : பாட புத்தகத்தில் சாமி படம், கோயில் போன்றவை உள்ளன இவற்றை மார்க்க முறைப்படி நாம் எப்படி அணுக வேண்டும்...?

பதில் : இஸ்லாத்தில் கடுமையான அவசியம் இல்லாமல் உருவப்படம் வரைவதற்கும், அழகிற்காக தம்மிடம் வைத்துக் கொள்வதற்கும் அனுமதி இல்லை ஹதீஸில் "உருவப்படமும், நாயும் இருக்கும் வீட்டிற்குள் (ரஹ்மத்துடைய) மலக்குகள் நுழைய மாட்டார்கள், (புகாரி முஸ்லிம், மிஷ்காத் 385) என்று வந்துள்ளது

எனினும் பாட புத்தகங்களில் அதில் உள்ள பாடங்கள் தான் அஸலானவை, படங்கள் இரண்டாம் பட்சமானவைதான். எனவே அவற்றை வாங்குவதும் தம்மிடம் வைத்துக் கொள்வதும் கூடும். ஆனால் முடிந்த மட்டும் அதன் மீது கலர் அடித்து அல்லது காகிதங்கள் ஒட்டி அவற்றை அழித்துவிட வேண்டும். (ஃபதாவா மஹ்மூதிய்யா 19/482)

கேள்வி : தேர்தலின் போது கொடுக்கப்படும் பணத்தை நாம் பெறலாமா...?

பதில்: தேர்தலின் போது ஓட்டுப் போடுவது நமது கடமை. அக்கடமையை நிறைவேற்றுவதற்காக எந்த கட்சியிடமிருந்தும் பணம் பெறுவது இலஞ்சமாகும். இலஞ்சம் ஹராமாகும். எனவே அதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் இந்த இலஞ்சத்தை பெறுவதினால் மனிதன் உபகாரத்தின் அடிமையாகி இலஞ்சம் கொடுத்த கட்சி அட்டூழியம் புரியும் கட்சியாக இருப்பினும் அதற்கு ஓட்டளித்துவிட நிர்பந்திக்கப்பட்டுப் போய்விடுகிறான். எனவே அதனை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும் துர்ருல் முக்தார் 4/450) 

இதுவரை தெரியாமல் பணம் பெற்றிருப்பின் நன்மை எதிர்பார்க்காமல் அதை ஏழைகளுக்கு தர்மம் செய்திட வேண்டும்.


கேள்வி : என் நண்பனின் பெற்றோர் ஒரு பெண்ணை குறிப்பிட்டு அவளைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். மேலும் பெற்றோர் சொல்லை கேட்பது தான் இஸ்லாம் என்கிறார்கள். ஆனால் அவனுக்கோ அந்த வரன் பிடிக்கவில்லை. பிடிக்காத பெண்ணுடன் வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதா? என அவன் தர்ம சங்கடத்தில் உள்ளான்? விளக்கம் தேவை.

பதில் : ஷரீஅத் ஒரு புறம் பிள்ளைகளுக்கு "பெற்றோருக்கு வழிபடுங்கள் அவர்களின் சந்தோஷங்களை தம் சந்தோஷங்களை விட முற்படுத்துங்கள். இதுவே மக்களின் நற்பாக்கியத்திற்கும் அவர்களின் பரக்கத்திற்கும் மகிழ்வான வாழ்விற்கும் காரணமாகும்" என வழிகாட்டியுள்ளது

மறுபுறம் பெற்றோருக்கும் "பிள்ளைகள் பருவ வயதை எத்திவிட்டால் ஆகுமான காரியங்களில் அவர்களின் மனவிருப்பத்திற்கு மாறாக எதையும் நிர்பந்திக்காதீர்கள்" என உபதேசித்துள்ளது. மேலும் ஒருக் கால் நிர்பந்தித்து திருமணம் செய்து வைக்க மகன் மருமகளின் பால் ஆசையே இல்லாது போய்விட்டால் அந்த சிக்கலை சமாளிப்பது எவ்வளவு சிரமம் என்பதையும் யோசிக்க வேண்டும். எனவே இரு சாராரும் தமக்குரிய இஸ்லாமிய போதனைகளை கடைபிடித்து வாழ்ந்தால் பிரச்சனை எதுவும் இருக்காது.

மகன், பொருந்தாத இடத்தில் திருமணம் செய்ய நாடினால் அதை பெற்றோர் நளினமான முறையில் எடுத்துச் சொல்லி உணர்த்த வேண்டும். அது போல் பெற்றோரும் மகனிற்கு மார்க்கப் பற்றில்லாத இடத்தில் வரன் பார்த்தால் மகன் இது தன் இயல்பிற்கு ஒவ்வாத இடம்; எனவே நான் மனைவியின் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடும் என்று கருதி திருமணம் செய்ய மறுத்தால் அவர் பெற்றோருக்கு மாறு செய்தவராக ஆகமாட்டார். எனினும் நளினமான முறையில் பெற்றோரின் கண்ணியத்துடன் முழு விஷியங்களையும் முன் வைத்து வேறு இடம் சிறந்த இடம் என்று சுட்டிக்காட்டி பெற்றோரின் ஆலோசனையின் படி அமைத்துக் கொண்டால் மிக மகிழ்ச்சியானதாக ஆகும்.
(பதாவா மஹ்முதிய்யா பாகம்-171, பக்-520)


2010 ஜனவரி மனாருல் ஹுதா மாத இதழிலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக