பக்கங்கள்

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

பெண்பாவம் பொல்லாதது



ولهن مثل الذِي عليهن بالمعروفِ

அப்பெண்களுக்கு கடமைகஇருப்பதைப் போன்றே அவர்களுக்கு உரிமைகளும் இருக்கின்றன. ஆண்களுக்கு அவர்களை விடச் சற்று அதிகச் சிறப்பு உள்ளது அல்குர் ஆன் : (2: 228)

(சமப காலமாக விவாக விலக்குகள் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, "அரபு நாட்டின் வாசல்கள் திறந்ததும் தலாக்கின் வாசல்களும் திறந்து கொண்டனவோ" வென சிலர் அஞ்சுகின்றனர் இறைவனால் அனுமதிக்கப்பட்டவற்றில் அவனுக்கு மிகவும் கோபத்தைத் தருவது இந்த தலாக்" என எண்ணிப் பயந்து கொண்டிருந்தவர்கள், மார்க்கம் தோன்றிய நாட்டின் சூழ்நிலைகளைக் கண்டு துணிச்சல் மிகப் பெற்றுவிட்டனர் என்றே தோன்றுகிறது. ஆனால், அங்கே தலாக் விடப்பட்ட பெண்ணை மணக்க பலர் தயாராகி விடுகின்றனர். அந்தோபரிதாபம்! தமிழகத்தில் அந்த நிலை இல்லையே .

தலாக் விடுவதற்கு பெண்ணின் ஒழுக்கக் கேடு காரணமாக இருந்தால் வருத்தப்பட வேண்டியதில்லை. அஃதின்றி பெண் மாமியார் வீட்டில் வாழ மறுக்கிறாள். மாமா, மாமி, மைத்துனிகளுக்கு வேலை செய்ய மறுக்கிறாள் என்பது காரணமாக இருந்தால் அது பற்றிய சட்டப் பிரச்சனையை தெரிய வைப்பதற்கே இந்தக் கட்டுரை. ஊரை நிர்வாகம் செய்யும் ஜமா அத் பெரியவர்கள் இக்கருத்துக்களை கவனத்தில் கொண்டு தங்கள் முன் வரும் பிரச்சினைகளை அணுக வேண்டும்)

பெண்ணுரிமை பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு பலவித உரிமைகளை வழங்கியிருக்கிறது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அரபகத்தில் அறிமுகம் செய்த போது பெரும் எதிர்ப்புக் கிளம்பியதை அனைவரும் அறிவோம்! ஆனால் அந்த எதிர்ப்பு லா இலாஹ இல்லல்லாஹு" (அல்லஹ்வையன்றி இறைவன் இல்லை) என்று குரல் கொடுத்ததற்காக மட்டுமல்ல. ஏனெனில் அன்றைய அரபகம் அல்லாஹ்வை அறிந்திருந்தது. அவன் தான் படைத்தாளும் இறைவன் என்பதையும் அறிந்திருந்தது தெளிவுபடுத்துகிறது


وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ ۖ فَأَنَّىٰ يُؤْفَكُونَ

உலகம் பேசத் துவங்கியதற்கு திருக்குர்ஆன் அவர்கள் நிலைபற்றி
வானங்கள், பூமியைப் படைத்தவன்; சூரியனையும், சந்திரனையும்
வயப்படுத்தியவன் யாரென நீங்கள் அவர்களிடம் கேட்டால் அல்லாஹ் தான் என அவர்கள் பதிலளிப்பார்கள் அல் குர்ஆன் : (29 : 61)

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ ۚ قُلِ الْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ

வானிலிருந்து நீரை இறக்கி, அதைக் கொண்டு வறண்டு கிடந்த பூமியை வளப்படுத்தியது யாரென நீங்கள் அவர்களிடம் கேட்டால் அல்லாஹ்தான் என அவர்கள் பதிலளிப்பார்கள் அல் குர்ஆன் : (29 : 63)

அப்படியானால் அவர்கள் ஏனைய தெய்வங்களை ஏன் வழிபட்டார்கள் என்ற வினாத் தோன்றுகிறது, அந்த வினாவிற்கு அவர்களே விடையளிப்பதை திருக்குர்ஆன் எடுத்தோதுகிறது.

 وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَىٰ

அவைகள் எங்களை அல்லாஹ்வின் பால் மிக அண்மிக்கச் செய்யும்
என்ற நோக்கிலே தவிர நாங்கள் அவைகளை வழிபடவில்லை
அல்குர்ஆன் : (39 : 3)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பெல்லாம் அவர்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கிறார்கள் என்பதாலேயே அத்தகைய எதிர்ப்பு ஆண்டான் இல்லை, அடிமை இல்லை. எல்லோரும் மனித உரிமைகளில்mசமமானவர்களே! கருப்பர், வெள்ளையர் என்ற நிற வேறுபாடு கிடையாது உயர்ஜாதி, கீழ்ஜாதி என்ற பேதமை கூடாது.
பெண் என்பவள் வெறுமனே இச்சைப் பொருள் அல்ல. வேண்டும் போது உபயோகித்து விட்டு, வேண்டாத போது எச்சில் இலையைப் போன்று தூக்கி எறிவதற்கு! தான் பெற்ற கடனுக்காக, மற்றும் நட்புக்காகப் பெண்ணை அடமானம் வைப்பது கொடுமையான செயலாகும். நாம் உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்ய வேண்டும். நாம் உடுத்துவதைப் போன்று அவளும் உடுத்தக் கொடுக்க வேண்டும். அவளுக்கும் சொத்துரிமை உண்டு, பேச்சுரிமைஉண்டு இவ்வாறெல்லாம் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் சமூக மாற்றத்துக்குக் குரல் கொடுத்ததுதான் மக்காவினெரை அவர்கள் மீது கோபம் கொள்ளச் செய்தது

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமை வழங்கிய
இஸ்லாத்தை தனது உயிரினும் மேலாக மதிக்கும் மக்களில் சிலர், அந்த பெண்ணுரிமையை அளிக்க மறுப்பது வேதனையான ஒன்றல்லவா? ஆண் மகன் தனக்கு தலாக்விடும் உரிமை இருக்கிறது என்பதற்காக அதைப் பிரயோகித்து பெண்ணுரிமையை சாகடிக்க நினைப்பது கொடுமையான செயலல்லவா?


சிலர் தலாக்கை துஷ்பிரயோகம் செய்வதால், தலாக்கின் புனிதத்தை
ஏளனமாகப் பேசப்படுகிறது அதை மையமாக வைத்து இஸ்லாத்தில்
பெண்ணுரிமை இல்லையென குறைத்துப் பேசப்படுகிறது

எவ்வளவுக்குப் பிறகு தலாக்கை பிரயோகிக்க வேண்டும் என்பதை
திருக்குர்ஆள் விளக்குவதைப்பாருங்கள்

அந்தப் பெண்கள் வாழ்க்கையில் ஒத்துப் போக மாட்டார்கள் என நீங்கள் பயந்தால்
1. அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள்.
2. படுக்கையில் விலக்கி வையுங்கள்
3. அவர்களை லேசாக அடியுங்கள். அவர்கள் மீது வரம்பு மீறாதீர்கள்
நிச்சயமாக அல்லாஹ் எல்லாரையும் விட உயர்ந்தவனாக வல்லமை
மிக்கவனாக இருக்கிறான்.

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ وَبِمَا أَنْفَقُوا مِنْ أَمْوَالِهِمْ ۚ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ ۚ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ ۖ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

அப்படியும் அவர்களுக்கிடையே சண்டை நிலவுமென்று நீங்கள்
பயந்தால் நடுவர்களாக அவள் குடும்பத்தில் ஒரு நீதியான மனிதரையும், அவன் குடும்பத்தில் நீதியான மனிதரையும் அனுப்பிவையுங்கள். அவர்களை ஒற்றுமைப்படுத்த நாடிச் செயல்படுவார்களானால் அல்லாஹ் நல்லுதவி செய்வான் நிச்சயமாக அல்லாஹ் அறிந்தவனும், அனைத்தையும் புரிந்தவனுமாவான் அல்குர் ஆன் : (4 : 34)

மேற்கண்ட நான்கு முயற்சிகளும் பலனளிக்காவிட்டால், ஒரு தலாக்கை பிரயோகித்து பயமுறுத்த வேண்டும் அதுவும் பலனளிக்காவிட்டால் இரண்டாவது தலாக்கை பிரயோகிக்க வேண்டும். இரண்டுக்குப் பிறகும் திருந்தி சேர்ந்து வாழ வாய்ப்புள்ளது. அதற்குப் பிறகும் ஒத்து வராவிட்டால் தான் நிரந்தரப் பிரிவைத் தரும் மூன்றாம் தலாக்கை பிரயோகிக்க வேண்டும்

மாமியார், மருமகள்

இளம் பெண்ணொருத்தியை ஒருவன் மணமுடித்துச் செல்கிறான். அவள் அவனின் மனமறிந்து நடக்கக் கடமைப்பட்டிருக்கிறாள். ஆனால் அதே நேரத்தில் அவனின் தந்தை, தாய், சகோதரி, சகோதரன் போன்ற உறவினர்களின் மனம் கோணாமல் பணி விடை செய்ய அவள் கட்டாயப்படுத்தப்படுகிறாள்

மாமியார் என்பது அடக்குமுறைச் சின்னம், மைத்துனி எனப்படுபவள்
சில்லறைப் பிரச்சினையை இமாலயத் தவறாக சித்தரிப்பவள் என்று புது அகராதி தோன்றிவிட்ட இக்காலத்தில், கணவனின் கூட்டுக் குடும்பதில் காலடி வைத்து விட்ட இளம் பெண் அனைவரையும் திருப்திபடுத்த முடியாமல் திக்கு முக்காடுகிறாள். அவள் மாமா, மாமியாரை மதிக்கவில்லை எனக்குற்றம் சாட்டப்பட்டு "தலாக் விடப்படுகிறாள்.

இஸ்லாமிய சட்டவிதிகளின் படி கணவனுக்கு, பிள்ளைகளுக்கு
சமைத்துப் போடுவது மனைவி மீது கடமை இல்லை. அப்படியிருக்கையில் கணவரின் தாய் தந்தையர்களுக்கு ஆக்கிப் போடாதது, தலாக் விடுவதற்குள்ள காரணமாக எப்படி அமைய முடியும்? சட்ட நூற்கள் கூறும் விதிகளைப் பாருங்கள்.

மனைவியின் உணவுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக
கொடுப்பது கணவன் மீது கடமையாகும். அவள் சமைக்கத் தெரியாதவளாக இருந்தால் ஒவ்வொரு வேளையும் தயார் செய்த உணவை அவளுக்கு கணவன் கொடுத்து வரவேண்டும்
ரத்துல் முஹ்தார் பாகம் : 3, பக்கம் 579

மனைவிக்கு, கணவனின் உறவினர்கள் எவரும் இல்லாத தனியான வீடு கொடுப்பது கணவன் மீது கடமையாகும் 
ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 600

மனைவியின் வேலையைக் கவனிக்க தனியாக ஒரு வேலைக்காரிக்கு கணவன் ஏற்பாடு செய்ய வேண்டும், அவள் சற்று வசதியான குடும்பத்தைக் சார்ந்தவளாக இருந்தால் இரண்டு வேலைக்காரிகள் அமர்த்தப்படவேண்டும். ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 589

மேற்கண்ட வாசகங்கள் தனிக்குடித்தனம் வைக்க முடியாதவனுக்கு
மனைவி ஒரு கேடா? என்று கேட்பதைப் போன்றிருக்கிறது அல்லவா?

மஹர்

மஹர் என்பது ஒரு உயிரின் தியாகத்துக்காகக் கொடுக்கப்படும்
கண்ணியமான சன்மானமாகும். அரேபிய நாடுகளில் மஹர் கொடுக்க வழியில்லாததால், அநேக ஆண்கள் திருமண வயதைக் கடந்து ஒண்டிக்கட்டையாக வாழுகிறார்கள் என்பது, மஹர் தொகையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த சான்றாகும்

ஹளரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில், மஹர் தொகைக்கு வசதியில்லாததால் பல ஆண்கள் திருமணம் முடிக்காமல் இருப்பதாக அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த நிலையை நீக்குவதற்காக அவர்கள் ஆற்றிய குத்பாப் பேருரையின் போது மஹர் தொகைக்கு உச்ச வரம்பை ஏற்படுத்தினார்கள். அதுபோது ஒரு மூதாட்டி இடைமறித்து
وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا
"அப் பெண்களுக்கு நீங்கள் ஒரு புதையலையே மஹராகக்
கொடுத்தாலும்” (அல்குர் ஆன் 4:20) என்ற திருவசனத்தை மேற்கோளாகக் காட்டி மஹர் தொகைக்கு உச்ச வரம்பு விதிப்பது தவறு என சுட்டிக் காட்டினார்

அதைச் செவியுற்ற ஹளரத் உமர் (ரலி) அவர்கள் அந்தப் பெண் உண்மையோ உரைக்கிறார். இந்த உமர் தவறு செய்து விட்டான் என்று கூறினார்கள்

நிலமை இவ்வாறிருக்க நமது நாட்டு நடப்பில் மஹர் என்பது ஒப்புக்கு நிர்ணயிக்கப்படும் தொகையாகக் கருதப்படுகிறது. சில ஊர்களில் பெரிய மனசு பண்ணி ஆயிரம் ரூபாய் மஹர் என்று குறிக்கப்படுகிறது அதுவும் கொடுக்கப்படாத ஒரு கடன். அதை உடன் கொடுப்பது பாவமான காரியம் அபசகுணம் என்பது தான் பலர்களின் கணிப்பு. கணவன் மரணப் படுக்கையில் இருக்கும்போது,  மனைவியாகப் பட்டவள் அந்தக் கடனை வஜா செய்ய வேண்டும் என்பதே அந்த பலர்களின் தீர்ப்பு.

ஆனால் இஸ்லாமிய சட்ட விதி என்ன சொல்கிறது தெரியுமா..?

மஹர் பணத்தைத் தரும் வரை என்னைத் தொடக்கூடாதுஎன்று
சொல்ல ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு ரத்துல் முஹ்தார் பாகம் : 3 பக்கம் : 143

மஹர் தொகைக்கு மாற்றமாக, வரதட்சணை என்பதை புனிதப்பணமாக நாட்டு நடப்பில் கருதப்படுகிறது. அது ஒரு ஹராமான பணம். அது பாவத்தின் சின்னம் என்பது மறந்து போய் அதைப் புனிதமாக போற்றப்படுகிறது. அந்தப் பணத்தை ஒரு தட்டில் வைத்து, அத்துடன் தேங்காய் மஞ்சளும் வைத்து, புனிதம் சேர்த்து ஊர்ப் பெரியவர்களெல்லாம் ஒன்று கூடி பவ்யமாக அந்தத்தட்டை கைமாற்றிக் கொள்ளும் காட்சி கண்கொள்ளக் காட்சியாகும்.

ஒரு கவிஞர் கூறினார். "இஸ்லாம் மட்டும் தற்கொலையை
அனுமதித்திருந்தால் ஊர்க்கிணறுகளெல்லாம், வரதட்சணை கொடுக்க
முடியாத பெண்களின் சடலங்களால் நிரம்பி வழியும்

மணவாளன் அனுபவிப்பது வரதட்சணை பணத்தை மட்டுமா? ஒரு பெண் தாய்வீட்டிலிருந்து கொண்டு வரும் சீர் சாமான்களையும் அவள் பயன்படுத்துகிறான். தான் படுத்துறங்குவது மனைவி கொண்டுவந்த கட்டிலிலே! தான் உட்கார ஒரு சோபா செட்டு கூட வாங்கிப்போட வக்கில்லாதவன் மனைவியின் சோபாவிலே சுகம் காணுகிறான். பீரோ என்ன...? பிரிஜ் என்ன? உழைக்கத் துப்புக் கெட்ட அவன் பயணம் செய்வது கூட மனைவி வீட்டாரின் பணத்திலே

ஆனால் சட்டம் என்ன சொல்கிறது

தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்களை கணவன்
பயன்படுத்துவதைத் தடைசெய்ய ஒரு பெண்ணுக்கு அதிகாரம் உண்டு ரத்துல் முஹ்தார் பாகம் பக்கம் : 584

அது போன்றே தனக்குச் சொந்தமான சல்லிக்காசைக் கூட அவள்
கணவனுக்குத் தரவேண்டியதில்லை. அவள் அத்தொகையை தனியாக வைத்து சிறு தொழில்கள் மூலம் அந்த முதலீட்டைப் பெருக்கலாம். அவள் அதை தனது பிற்காலப் பாதுகாப்புக்காக சேமித்து வைக்க கடமைப்பட்டிருக்கிறாள்

சீர் சாமான்களை மட்டுமல்ல பெண் பெயரில் ஏதாவது வருவாய
இருந்தால் அதையும் ஆண்மகன் உண்டு கொழுக்கிறான். பெண்ணுக்கு வாரிசாகக் கிடைக்கும் சொத்துக்களையும் குடும்பத்துள்ளே போடுகிறான் பெண் ஏமாந்தவளாக இருந்தால், அவள் நகைகளையும் வாங்கி ஏப்பம் விடுகிறான்

பெண்ணை அனுபவிக்கிறான், பெண் கொண்டுவந்த பொருட்களையும்
அனுபவிக்கிறான். அவள் உதவிக்கரம் நீட்டியதால் உழைப்புக்கும் வழி பெற்றான். இதற்குப் பின்னரும் பெண்ணிடம் ஏதாவது ஒன்று என்றால், ஒரே வார்த்தையை உபயோகித்து மண விலக்குச் செய்து விடுகிறான்

நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: "ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம் அவளிடத்தில் உள்ள ஒரு குணம் அவனுக்கு வெறுப்பளித்தால், அவளிடம் உள்ள மற்றொரு நற் குணத்தைக் கொண்டு அவன் திருப்திப்பட்டு வாழவும் அறிவிப்பவர் : ஹளரத் அபூஹுரைரா (7லி) நூல் : முஸ்லிம்

பெருமானாரின் இந்தப் பொன்மொழி வாழ்வின் மிகப் பெரும் தத்துவத்தை உணர்த்துகிறது. உலகில் மனிதனாகப் பிறந்த அனைவரிடமும் ஏதாவது சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அது போன்றே அனைவரிடமும் ஏதாவது சில சிறப்புகளும் இருக்கும். குறைகளே இல்லாதவர்கள் கிடையாது, அதுபோன்று சிறப்புக்களே இல்லாதவர்களும் கிடையாது. பெண்கள் இந்த நியதிக்கு மாற்றமானவர்கள் அல்ல.

கண் அழகாக இருந்தால் மூக்கு அழகாயிருக்காது. மூக்கு அழகாக
இருந்தால், முடி அழகாக இருக்காது. அழகிருந்தால் அடங்கி நடக்க மாட்டாள், இரண்டும் இருந்தால் குழந்தைப் பேறு இருக்காது. அதுவும் இருந்தால் அண்டை அயலாரோடு ஒத்துப் போகின்றவளாக இருக்கமாட்டாள், குறையே அற்ற பெண் வேண்டுமென்றால் சுவனத்துக்குத்தான் செல்லவேண்டும்

ஒரு தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து
யாரஸுலல்லாஹ்! எனது மனைவியின் நாவு சற்று நீளமாக இருக்கிறது (அண்டை அயலாரிடம் சண்டை வளர்ப்பவளாக இருக்கிறார்) என்று கூறினார் அது கேட்ட நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் அவரை சோதிப்பதற்காக, அப்படியானால் அவளை தலாக் விட்டு விடுங்களேன் என்றார்கள். இல்லை யாரஸுலல்லாஹ் அவள் நிறைய குழந்தைகளைப் பெற்றுத் தந்திருக்கிறாள் என்மீதும், என் குழந்தைகளின் மீதும் அதிகப் பரிவுகாட்டுகிறாள் என அந்த தோழர் கூறினார். அப்படியானால் அவளுக்கு உபதேசம் செய்யுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்
அறிவிப்பவர் : ஹளரத் லகீத் பின் ஸமூரா (ரலி) நூல் :அபூதாவுது

வீட்டுக்கு வீடு வாசல்படிஎன்றொரு பழமொழி வழக்கில் உண்டு. அது போன்றுதான் எல்லாக் குடும்பத்து நிலையும். அதைப் புரிந்து கொள்ளாத சிலர் சில சில்லரைக் காரணங்களுக்காக வெல்லாம் பெண்ணை மண விலக்குச் செய்து விடுகிறார்கள்

மனைவியின் தயவினால் சம்பாதிக்க ஆரம்பித்த சிலருக்கு நாலுகாசு
சேர்ந்தவுடன் வறுமையின் நேரத்தில் கரம் பிடித்த பெண் தற்போது
பொறுத்தமானவளாகத் தோன்றவில்லை. தற்போதைய தன் நிலைக்கு பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைக்கும் எனக் கற்பனை செய்து கொண்டு சிலர் தனது மனைவியைத் தலாக் விட்டு விடுகின்றனர்

அதுவும் அவளிடமிருந்த பணத்தையெல்லாம் உறிந்து குடித்துவிட்டு
அவளை வெறுங்கையுடன் விட்டு விடுகிறான். ஊர் பஞ்சாயத்து கூடி
அவனிடமிருந்து எதையாவது மீட்டு பெண்ணிடம் ஒப்படைக்கலாமென முயன்றால், உபயோகித்து உடைந்து போன சீர் சாமான்களைத்தான் திரும்பப் பெற முடிகிறது. வரதட்சணையாக கொடுத்த வைத்த பணம் வராத தட்சணையாக மாறிவிடுகிறது. சட்டப்படியும் அதைத் திரும்பப் பெற உரிமையில்லை, அதனால் தலாக் விடப்பட்ட பெண் தனது ஜீவனாம்சத்துக்கும் வழியில்லாமல் ஆதரவின்றி விடப்படுகிறாள். இந்த நிலையைக் காணும் சகோதர சமயத்தவர் இஸ்லாத்தின் சட்ட நியதிகளைக் குறையுடன் நோக்குகிறார்கள்

இந்த நிலையைப் போக்குவதற்கு ஜமா அத்தார்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவன் ஒரு லட்ச ரூபாயை வரதட்சணையாகப் பெற்றால் ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயை மஹராக ஊர் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். அவன் பெண்ணை தலாக் விட்டு விட்டால் அந்த ஒருலட்சத்து ஆயிரத்தையும் சட்டப்படி அவனிடமிருந்து வசூல் செய்து விடலாம். கார் பங்களா மொபெட் போன்ற பொருட்களை வரதட்சனைணயாகக் கொடுக்கப்பட்டால், அந்தப் பொருபுகளின் விலைமதிப்புடன் 1000 ரூபாய் சேர்த்து கடிதப் புத்தகத்தில் மஹராகப் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய ஏற்பாடு செய்தால் பெண்ணின் கண்ணீரைத் துடைக்கமுடியும்

தலாக்! தலாக்

இஸ்லாத்தில் தலாக் என்பது ஆண்களுக்கு மட்டும் சொந்தமான
உரிமையாகும் பாதிக்கப்படும்போது, இஸ்லாத்தில் பெண்ணுக்கு ஏன் அந்த உரிமை மறுக்கப்படுகிறது? என மற்றவர்கள் குறைப்படுகிறார்கள்

சில ஆண்களின் அடாவடித் தனத்தால் பெண் ஆனால் சட்டத்தில் அதற்கும் இடம் உள்ளது. அதாவது ஒரு மணமகன் மீது நம்பிக்கை இல்லையாயின் மணமுடிக்கும் போதே தலாக் விடும் உரிமையை
அவனிடமிருந்து பெண் பெற்றுக் கொள்ளலாம். அதாவது தலாக் விடும் உரிமையை, நீ பெண்ணுக்கு அளிப்பதாக இருந்தால் உனக்கு அவளை மணமுடித்துத் தருகிறோம் என்று நிபந்தனையிட வேண்டும். அவன் அதற்கு சம்மதித்து விட்டால் தலாக் விடும் உரிமை பெண்ணுக்கு வந்து விடுகிறது
ஆதாரம்: ரத்துல் முஹதார் பாகம் 3- பக்கம்: 329

தலாக் விடும் உரிமையை இந்த மணமகன் பெண்ணுக்கு அளித்துள்ளார் இந்த நிபந்தனையின் பேரில் இந்த திருமணம் முடித்து வைக்கப்பட்டது என ஊர்ப் புத்தகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்

கணவன் பிடிக்காமல் போகும் பட்சத்தில் பெண் தலாக் விடும் உரிமையைப் பெறுகிறாள். அப்போது ஆண் தலாக் விடும் உரிமையை இழக்கிறான்

சோரம்போன பெண்

தலாக் நிகழ்வதற்கு சில பெண்கள் சோரம் போய்விடுவது காரணமாக அமையலாம். ஆனால் சில பெண்கள் சோரம் போவதற்கு ஆண்மகனே காரணம் என்பதை மறந்து விடுகிறார்கள்

பெரும்பாலான பெற்றோர் தனது பெண் மக்களை மிகவும்
பாதுகாப்பாகவே வளர்க்கிறார்கள். ஜன்னலில் நிற்காதே! ஆடவர்களுடன் பேசாதே! என்று அடிக்கடி எச்சரிக்கை செய்து பாதுகாத்து பத்தினித்தனமாகவே ஒரு ஆண்மகன் கையில் ஒப்படைக்கிறார்கள்


ஆனால், அவன் மணமுடித்த புதிதில் அவள் மிகவும் நாகரீகம்
தெரியாதவளாக இருக்கிறாள் என்று கூறி கடிந்து கொள்கிறான். அவள் நாணப்படுவதைத் தடுக்கிறான். தனது நண்பர்களிடம் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டுமென உபதேசிக்கிறான். தன்னுடன் வெளியில் வரும்போது வெளி உலகிற்கு அவள் அழகாகத் காட்சி தரவேண்டுமென வற்புறுத்துகிறான்

இதனால் அவள் சோரம் போய்விடுகிறாள். அவள் சோரம் போனதற்கு அவன் காரணமாக இருந்தால், அவன் தலாக் விடும் முன் சற்று யோசிக்க வேண்டும். அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இறைவனால் அனுமதிக்கப்பட்டவற்றில் இறைவனுக்கு கோபத்தைத் தரக்கூடியது தலாக் என்பதையெல்லாம் அவன் சிந்தனை செய்ய வேண்டும்

ஆம்! பெண்பாவம் பொல்லாதது.



இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு  எல்லா வளமும் நலமும் அல்லாஹ் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக