பக்கங்கள்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

ஹலால் ஹராம்.


அல்லாஹு தஆலா மனிதனை உயர்வான ஒரு நோக்கத்திற்காக படைத்துள்ளான். அந்த நோக்கம் நிறைவேற உயர்வான பண்புகள் அவனிடம் தேவை, ஏனெனில், பண்பற்ற மனிதன் தன்னை 'மனிதன்' என்று சொல்வதற்கே தகுதியற்றவன். எனவே, மனிதனை பண்பற்றவனாக மாற்றும் அனைத்து செயல்களைவிட்டும் அவன் தவிர்ந்திருப்பது மிக அவசியம்.


குறிப்பாக, ஹராமான உணவுகளை விட்டும் அவன் தவிர்ந்திருக்க
வேண்டும். ஆகையால்தான் குர்ஆனின் பல இடங்களில் ஹலாலான
உணவை சாப்பிடும்படி வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது.
 يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள் மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க பகவன் ஆவான் (திருக்குர்ஆன், 2:168)

 فَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاشْكُرُوا نِعْمَتَ اللَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
ஆகவே, அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையான அனுமதிக்கப்பட்டவற்றையே நீங்கள் உண்ணுங்கள். அவனையே நீங்கள் வணங்குபவர்களாக இருப்பின், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திவாருங்கள். (16:114)

ஹலாலான சாப்பாட்டின் காரணமாக பத்துவிதமான பலன்கள் ஏற்படுகின்றன.

1. நற்குணம் ஏற்பட்டு, தீய குணங்கள்மீது வெறுப்பு ஏற்படும். உதாரணமாக: ஆப்கானிஸ்தானில் அமீர் முஹம்மத் எனும் மார்க்கப் பற்றுள்ள ஓர் அரசர் வாழ்ந்தார். ஒரு நாள் அவர் அரசு அலுவல்களை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, மிகவும் கவலையாக காணப்பட்டார். இதைக் கண்ட அவருடைய துணைவியார், கவலையின் காரணத்தை வினவியபோது அவர் கூறினார்: மிகப்பெரும் ஒரு படை ஆப்கானிஸ்தானை தாக்குவதற்காக
வந்துகொண்டிருக்கிறது என்ற செய்தியை அறிந்து அதைத் தடுப்பதற்கு நமது மகனுடன் ஒரு படையை அனுப்பிவைத்தேன். அவர் கொண்டு சென்ற படை தோற்கடிக்கப்பட்டு விரோதிகளின் படை முன்னேறி வருகிறது. மேலும் எனது மகன் படைத் தளபதி புறமுதுகு காட்டி ஓடிவிட்டார் என்ற செய்தியே என்னை துக்கத்தில் ஆழ்த்தியது என்றார்.

இதைக் கேட்ட மனைவி, நிச்சயமாக அவ்வாறிருக்க முடியாது என்று
மறுத்தார், இந்தச் செய்தி பொய்யானது, தவறானது என்றார். விரோதிகளோடு யுத்தம் செய்து வெற்றியடைவார் அல்லது போரிட்டு ஷஹீதாவார் என்றார்.

மனைவியின் பதிலைக் கேட்ட அரசர், அரசாங்கத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்ட ஒரு செய்தியை வீட்டில் அமர்ந்துகொண்டு மறுக்கும் உன்னை என்ன செய்வது? என்றார்.

ஓரிரு தினங்களுக்கு பின்னர் அரசாங்கத்தின் செய்தி பொய்யானது
மனைவின் சொல்லே உண்மையனது. தனது மகன் வெற்றி வாகையுடன் திரும்பிவருகிறார் என்பதே உண்மை எனும் செய்தியை அறிந்தவுடன் அரசர் ஆச்சரியப்பட்டு, மனைவியிடம் விளக்கம் கேட்டார்.

அதற்கு மனைவி கூறினார்கள்: நான் என் மகனை கர்ப்பமுற்ற
காலத்திலிருந்து அரசாங்கத்தின் எந்தப் பொருளையும் சாப்பிடவில்லை எனது சொந்தப் பணத்திலிருந்து சிறிதும் சந்தேகமில்லாத ஹலாலான உணவையே சாப்பிட்டேன், மேலும், குழந்தை பால் குடிக்கும் இரண்டு ஆண்டுகள் வரை சந்தேகத்திற்கு இடம்பாடான எந்த உணவையும் சாப்பிடவில்லை.

மேலும், இந்தக் குழந்தைக்கு பாலூட்டுவதற்குமுன் இரண்டு ரக்அத் தொழுது, துஆச் செய்து பிஸ்மில்லாஹ்வுடன் அந்தக் குழந்தைக்கு பாலூட்டினேன். எனவே, இவ்வாறு வளர்க்கப்பட்ட பிள்ளை ஒரு போதும் புறமுதுகு காட்டி ஓடிவரமாட்டான் என்ற உறுதியில்தான் அவ்வாறு கூறினேன் என்றார்கள்.

நாம் நமது பிள்ளைகளை இவ்வாறு வளர்த்தால் நமது பிள்ளைகளும்
இதைப் போன்ற நற்பண்பு உள்ளவர்களாக மாறுவார்கள். மாறாக தலைத் துணியில்லாமல், பிஸ்மில்லாஹ் சொல்லாமல், அல்லாஹ்வாலும், அல்லாஹ்வின் தூதராலும் சபிக்கப்பட்ட இன்னிசைகளையும், சினிமாவையும் பார்த்துக்கொண்டே பாலூட்டினால், அக்குழந்தையின் கதி என்னவாகும் என்பதை சிந்திப்போமாக.

மெளலானா, எம்.எம். முஹம்மது இப்ராஹீம் பாக்கவீ ஹள்ரத்
பேராசிரியர், காஷிபுல் ஹுதா, சென்னை.

2007 ஏப்ரல் மாத மனாருல் ஹுதா மாத இதழிலிருந்து..
மேலும் விபரங்களுக்கு.

A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக