பக்கங்கள்

செவ்வாய், 31 மார்ச், 2020

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.






அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.



அன்றைய தினம் நாம் அவர்களின் வாய்களுக்கு
சீல் வைப்போம். அவர்கள் செய்தது பற்றி அவர்களின் கரங்கள் நம்மிடம்பேசும், அவர்களின் கால்கள் சாட்சியம் கூறும்
(ஸுரத்து யாசீன் : 65)

இந்த உலகத்தில் வாழும் மனிதன் நல்லதையும் செய்கிறான்
அல்லாததையும் செய்கிறான், அவன் செய்யும் நன்மைகளுக்கு முழுமையான நற்பலன்களும், அவன் செய்யும் தீமைகளுக்கு முழுமையான தண்டனைகளும் இவ்வுலகில் கிடைக்கப்பெறுவதில்லை

கூலியும், தண்டனையும் உண்டா? இல்லையா? உண்டென்றால் எப்போதுகிடைக்கும்? எங்கே கிடைக்கும்? எப்படி கிடைக்கும்

இந்த வினாவிற்கு வேதங்களும், புராணங்களும், ஞானிகளும்
மேதைகளும் பலதரப்பட்ட பதிலைத் தருகிறார்கள். ஆனால் திருக்குர்ஆனைத் தவிர மற்றவைகளால் ஒரு தெளிவான பதிலைத் தர முடியவில்லை. தெளிவற்ற கொள்கைகளாகவே அவை அமைந்திருக்கின்றன

இறக்கும் ஒவ்வொரு மனிதனும், மறுபிறவி எடுத்து முந்திய வாழ்க்கையின் நிறை குறைகளை அனுபவிக்கிறான் என்று சிலர் கூறுகின்றனர். மனிதனாக வாழ்ந்தவர்களில் பலர் தங்கள் செயலின் தண்டனையாக மாடாக, நாயாக, ஈயாக எறும்பாக மாற்றப்பட்டு விட்டார்களென்றால், அடுத்த கால கட்டத்தில்முன்பிருந்ததை விட மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டல்லவா வரவேண்டும்? ஆனால் நிகழ்வு அப்படியல்லவே

இந்த தத்துவத்திலுள்ள குறைபாட்டை ஒரு கதையின் மூலம்
கண்டுகொள்ள முடியும்

ஒரு பயணி மாட்டு வண்டியில் செல்கிறான். வண்டியோட்டி மாட்டை கடுமையாக அடிப்பதைப் பார்த்த பயணி “ஏம்பா! மாட்டை அடிக்காதே! அடுத்த பிறவியில் நீ மாடாகப் பிறப்பாய் அந்த மாடு மனிதனாகப் பிறந்து உனக்கு தண்டனை தரும்" என்று கூறி வண்டியோட்டியை எச்சரித்தான்

அதைச் செவியுற்ற வண்டியோட்டி சிரித்துக்கொண்டே“இல்லை
எஜமான்! முந்திய ஜென்மத்தில் அந்த மாடு ஒரு முதலாளியாக இருந்தது. நான் இருந்தேன் அப்போது அந்த மாடு என்னைக்
கொடுமைப்படுத்தியதால்தான் நான் இப்போது அதை அடிக்கிறேன்!" என்று கூறினான்

இந்த உருவகம் நம்மை சிந்திக்க வைக்கிறது. நாம் வாழும் வாழ்க்கை முந்திய ஜென்மத்தின் வினைப்பயனா? அல்லது இதுதான் முதல் ஜென்மமா என்ற கேள்விக்கு விடை அறியாமல் தடுமாற வைக்கிறது

இந்தப் பிரச்சனையில் திருக்குர் ஆனின் அறிவிப்புத்தான்
உண்மையானதாகும். மனிதன் செய்யும் நன்மை தீமைகள் ஒவ்வொன்றும் விலாவாரியாக பதிவு செய்யப்படுகிறது. இந்த உலகம் அழிந்த பின்னர் ஒவ்வொரு மனிதனுக்கும் திரும்ப உயிர்கொடுத்து எழுப்பப்படும். அப்போது அவனது நடவடிக்கைகள் குறித்து நீதி விசாரணை செய்யப்பட்டு நற்கூலி அல்லது தண்டனை தரப்படும்

திருக்குர் ஆன் இந்த உண்மையை ஒளிவு, மறைவு இல்லாமல், தெளிவாக சந்தேகத்துக்கு இடமில்லாமல் எடுத்துரைக்கிறது. அப்போது நிகழ்வுகள் எப்படி இருக்கும் என்பதை முன்னறிவிப்பாக வெளியிடுகிறது

அத்தகைய முன்னறிவிப்பின் ஒரு பகுதியையே மேற்காணும் திருவசனம் கோடிட்டுக் காட்டுகிறது இவ்வுலக வாழ்க்கையில் பொய்யுரைத்தே பிறரை ஏமாற்றி வந்த மனிதன் மறுமையில் நீதி விசாரணையின் போதும், அதே பழக்கத்தைக் கையாண்டு
இறைவனை ஏமாற்றப் பார்ப்பான். அப்போது இறைவன் அவனது நாவை பேசவிடாமல் ஆக்கி அவன து கை, கால்களை பேச்சச் செய்து அவனை உண்மையை ஒத்துக்கொள்ளச் செய்வான்

இதே கருத்தை மற்றொரு திருவசனம் சற்று விரிவாக எடுத்துரைக்கிறது

அவர்கள் அங்கே வரும் போது அவர்கள் செய்தது பற்றி அவர்களின்
காதுகளும், அவர்களின் கண்களும், அவர்களின் தோல்களும் சாட்சியம் கூறும் அவர்கள் தங்களின் தோல்களைப் பார்த்து எங்களுக்கு எதிராக ஏன் சாட்சியம் கூறுகிறீர்கள் என்று கேட்பார்கள். அனைத்து பொருள்களையும் பேச வைத்த
அல்லாஹ் எங்களை பேச வைத்திருக்கிறான் என்று அவைகள் பதிலுரைக்கும்."
(அல்குர்ஆன் 41 : 21)


கண், காது, பேசுமா? கை கால்கள் சாட்சியம் கூறுமா? வென்பது நமக்கு விளங்காத புதிராகத் தோன்றலாம். மறு உலகத்தில் எல்லா அவயவங்களுக்கும் அசாத்திய திறமைகள் அளிக்கப்படுகின்றன என்பது வேறு விஷயம். ஆனால் இவ்வுலகத்திலேயே அவயவங்கள் பேசுகின்றன. அறிவியலார் அதை நமக்கு விளக்குகிறார்கள்

கண்களும் கவிபாடுமே” “அவனுடைய பார்வையே சரியாக இல்லை
'அவன் கண்களாலேயே பேசினான்” என்றெல்லாம் பிறர் சொல்லக்
கேள்விப்படுகிறோம். இவைகள் கண்களுக்கு பேசும் ஆற்றல் இருப்பதை உணர்த்துகின்றன

மற்றவர்கள் நம்மோடு பேசும் பொழுது அவர்களை உற்று நோக்குங்கள் அல்லது நீங்கள் மற்றவர்களுடன் பேசும் பொழுது அவர்கள் கண்களை உற்று நோக்கிப் பேசுங்கள். உங்களுக்கு ஒரு புது அர்த்தம் தென்படும். அவர்கள் பொய் பேசுகிறார்கள் என்றால் கண்டிப்பாக உங்களை அவர்கள் உற்று நோக்கமுடியாது. அதேபோன்று மற்றவர்களுடன் நீங்கள் பொய் பேசும் பொழுது
அவர்களை நீங்கள் நேராகப் பார்க்க உங்கள் கண்கள் கூதும்

உங்களுடைய குழந்தைகள் தப்பு செய்யும் பொழுது அவர்களுடைய
கண்களை உற்று நோக்கி இருக்கிறீர்களா? அவர்களுடைய கண்களேஅவர்களுடைய தப்பை உங்களுக்குச் சொல்லிவிடும். சில பெற்றோர்கள் தங்கள்குழந்தைகளை கண்களாலேயே கண்டிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஏன் மாமியார் எதிரில் மருமகள்கள் தங்களுடைய கணவன்மார்களை மெளனமாக
கண்களாலேயே கண்டிப்பதில்லையா

தெண்டம் வருகிறது என்று கண்ணடித்தே அதோ உணர்த்துவதில்லையா? வாருங்கள்! அமருங்கள்! என்ற உபசார வாசகத்தை கண்ணசைவே கூறுவதில்லையா? அவன் பெரிய ஆள்! என்ற எச்சரிக்கையை கண் சமிக்கையே காட்டுவதில்லையா

கண் கள் மட்டுமல்ல நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும்
அவற்றுக்கே உண்டான மொழியில் போசும் தன்மை கொண்டவை. மனோதத்துவரீதியில் இதை பாடி லாங்குவேஜ் என்று சொலுவார்கள்

ஒருவர் நம் முன் நின்று கொண்டு அப்பட்டமான பொய் ஒன்றைச்
சொல்லும்போது அவர் நெளிவதைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த நௌெளிவு ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமில்லையா

ஒருவர் நம் முன் உட்காரும் பொழுது அவர் எப்படி உட்காருகிறார்
நாற்காலியில் எங்கு உட்காருகிறார், விளிம்பிலாஅல்லது முழு இருக்கையிலா? அப்படி உட்காரும் போது அவருடைய அங்க அசைவுகள் எப்படி
இருக்கின்றன? விரல்களைக் கொண்டு மேஜையில் தாளம் போட்டுக் கொண்டு சங்கடமாக நம்மைப் பார்க்கிறாரா? அப்படி என்றால் அவர் மனதில் ஏதோ ஒரு போராட்டம் என்று நாம் உணர்ந்து கொள்ளுவதில்லையா

குடித்து விட்டு நேரம் கழித்து கணவன் வீடு வந்து சேரும் போது, மனைவி அவனைப் பரிதாபமாகப் பார்க்கும் பொழுது, அதன் உண்மையான மெளன வார்த்தைகளை மட்டும் கேட்க கணவன் மனப்பகுவம் பெற்றிருந்தால் மீண்டும் அவன் குடிக்க மாட்டான்

குழந்தைகள் நம்மை நோக்கி ஆசையோடு ஓடிவரும் போது அவர்களைச்சீ என்று உதாசீனப்படுத்தி எரிந்து விழும்போது, அந்தப் பிஞ்சுக்குழந்தைகள் மெளனமான, பரிதாபமான பார்வையை நம்மீது படரச் செய்யும். அந்தப் பார்வை எத்தனை வார்த்தைக்குச் சமானம் தெரியுமா

பலர் முன்னிலையில் மேலாளர் தன்னனைத் தரக்குறைவாகப் பேசும் போது பரிதாபமாக மாறும் ஊழியரின் முகம் எத்தனை அர்த்தங்களை வெளியிடுகிறது

என்ன உடம்பு சரியில்லையா? உடம்பு தேறியிருக்கிறதே! என்றெல்லாம் நண்பர்கள் நம்மைப் பார்த்துக் குசலம் விசாரிக்கிற போது அவர்கள் நமதுதோற்றத்தைப் பார்த்து நமது உடல் நலத்தை மதிப்பிடுகிறார்கள்

பளபளப்பான தோல் உள்ளவரைக் கண்டால் அவர் செழிப்பாக வாழ்கிறார்என்று நாம் அறிகிறோம்! அவரின் தோல்தானே அந்தச் செய்தியை நமக்குக்கூறியது

முகத்தோலில் மின்னல் வெட்டி மறைவதைப் போன்று தோன்றும்
மாற்றங்கள், நமக்கு நிகழ்வுகளை அறிவித்துத் தருவதால்தான் "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழியே உருவானது. பயத்தின் போது கருமையாகவும், கவலையின் போது மஞ்சளாகவும், வெட்கத்தின் போது இளஞ்சிவப்பாகவும் மாறி தோல் நம்மிடம் கதை பேசுகிறது

இவ்வுலகத்திலேயே இத்தனை கதை பேசும் இந்த உறுப்புக்களுக்கு
மறுமையில் பேசவா சக்தி ஏற்படாது.


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுளள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக