பக்கங்கள்

ஞாயிறு, 29 மார்ச், 2020

இலக்கியச் சோலை



                                                                 
அல்லாஹ் அழகிய உரையாடலை ஒரே சீரான திரும்ப திரும்ப ஒலிக்கும் வேகமாக அருளியிருக்கிறான்.
(அல் குர்ஆன் - 39 : 23)

உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் 
இலக்கியத்துக்கு
முக்கியத்துவமளிக்கின்றன. மொழிகள் வேறுபட்டாலும் இலக்கியம் என்பது ஒரே
அமைப்பிலுள்ளதே! இலக்கிய அடிப்படைகளை மூன்று வகைப்படுத்தலாம். 1)
சொல்லத் தக்க இடத்தில் சொல்லத் தக்கதைச் சொல்லுதல் இதற்கு அரபியில்
முக்தலல் ஹால்” என்பர். 2) சொல்லும் கருத்தை நயம்பட உரைத்தல் இதற்கு
பயான் என்பர். 3) சொல்லுக்கு அழகு சேர்த்தல் இதற்கு “பதீஃ” என்பர்


பொதுவாக கவி நடைகளில்தான் இம்மூன்று அம்சங்களும் திறம்பட
உரைக்கப்படுவது வழக்கில் இருந்து வருகிறது. ஆனால் திருக்குர்ஆன்
உரைநடையாக இருந்தும், இம்மூன்று வகை இலக்கியத்திலும் உவமை கூற
இயலாத உயரிடத்தை வகிக்கிறது. அதன் இலக்கியச் சுவையை இன்னும் உலகம்
முழுமையாக அனுபவிக்கவில்லை. எனவே அதன் சுவையை உலக அரங்கிற்கு
உணர்த்தும் கடப்பாடு இஸ்லாமிய அறிஞர்களுக்குண்டு

திருக்குர் ஆனின் இலக்கிய நயம் பற்றி கூறும் “முக்தஸருல்மஆனி” என்ற
நூலில் காணப்படும் எடுத்துக்காட்டுகளில் சில:-

உவமை நயம்.

வட்டியை நியாயப்படுத்தும் ஒருவனுக்கு திருக்குர் ஆன் உருவகம்
தருகிறது. “வியாபாரமும் வட்டி போன்றது தானே என்று அவர்கள்
கூறுகிறார்கள்
(அல்குர்.ஆன்2:275)

வட்டியைத் தொழிலாகக் கொண்ட ஒருவன் வியாபாரத்தில் லாபம்
கிடைப்பதைப் போன்று வட்டியிலும் லாபம் தானே கிடைக்கிறது. எனவே வட்டியும்
வியாபாரம் போன்றது தானே! என்று கூறி தனது தொழிலை நியாயப்படுத்துவதைக் கண்டிருக்கிறோம். ஆனால் வட்டி அவன் உள்ளத்தில் அழுத்தமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை சித்தரிப்பதற்கு அது போதுமானதாகாது. அங்கே திருக்குர் ஆன் தனது இலக்கிய வலையை வீசுகிறது

அவன் வட்டியை நியாயப்படுத்துவதில் அளவு கடந்து விட்டான்; அவன்
கண்களுக்கு முறையான லாபமீட்டுதல் வட்டியின் மூலமாகத்தான்
நடைபெறுவதாகத் தோன்றுகிறது. வியாபாரம் மூலம் லாபம் பெறுவது
முறையற்றதாகத் தோன்றுகிறது

பின்னர் அவனுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. வியாபாரமும் வட்டி
போன்று லாபம் தரக் கூடிய ஒரு தொழில் தானே! பின்னர் ஏன் வட்டியை மட்டும்
அனுமதிக்க வேண்டும். வியாபாரத்தையும் அனுமதிக்கலாமே! என்ற
பெருந்தன்மையான எண்ணம் அவனுக்குத் தோன்றவே வியாபாரமும் வட்டி
போன்றதுதானே! என்று அவன் வியந்துரைக்கிறான். அவனிடத்தில் இரண்டு
குற்றம் வெளிப்படுகிறது. ஒன்று வட்டி வாங்குவது. மற்றொன்று வட்டியை
நியாயப்படுத்துவது

அவன் வட்டி லேவா தேவியில் அமுங்கிப் போய்க் கிடக்கிறான் என்பதை
இதைவிட சிறப்பாக எந்த இலக்கியமும் எடுத்துரைக்க இயலாது


முரண் தொடை.

ஏச்சு வார்த்தைகளால் ஒருவனை புகழ்வதற்கும், புகழ் வார்த்தைகளால்
ஒருவனை ஏசுவதற்கும் "முரண் தொடை” என்று கூறுவர் "நாசமாகப் போக
இம்ரான்கான் என்ன அருமையாக விளையாடுகிறான்” என்று மக்கள்
விமரிசனம் செய்வதை நாம் அடிக்கடி செவியுற்றிருக்கிறோம்

அந்த வகையில் நியாயத் தீர்ப்பு நாளின் போது நரகவாசிகளின்
நிலைபற்றி திருக்குர்ஆன் குறிப்பிடுவதைப் பாருங்கள்

அவர்களுக்குகொடூரமானவேதனைகொண்டுநற்செய்தி கூறுங்கள்"
(அல்குர் ஆன் 9:34)


அவர்களுக்கு கொடூரமான வேதனை கிடைக்க இருப்பதைப் பற்றி
அறிவிக்கும் செய்தி நற் செய்தியாகவா இருக்க முடியும்

திருக்குர் ஆன் இந்த வாக்கியத்தில் "முரண் தொடை” என்ற இலக்கியச் சுவையை மட்டும் அளிக்கவில்லை உள்ளடக்கியுள்ளது. நரகவாசிகளின் நிலை அன்று ஒரு இழுபறி நிலையாக
இருக்கும். என்ன கேள்வியெல்லாம் கேட்கப் படுமோ? நாம் என்ன பதில் சொல்லப் போகிறோமோ? என்ன தீர்ப்புச் சொல்லப்படுமோ? என்று அவர்கள் குழம்பிக் கொண்டிருப்பார்கள். அவர்களின் மன வியாகூலத்தை அங்கு லட்சியம்
செய்யப்படாது, அவர்களின் விசாரண தள்ளிப் போடப்படும். அவ்வாறு தள்ளிப்
போடுவது அவர்களின் மனக் கலக்கத்தை அதிகப்படுத்தும். முடிவு தெரியாமல்
அவர்கள் இழுத்தடிக்கப்படுவதே அவர்களுக்கு பெரும் வேதனையாக இருக்கும்
மற்றொரு தத்துவத்தையும்

அவர்கள் அந்த நிலையைத் தாங்க இயலாமல் வாய் திறந்து “அரிஹ்னா
வலவ்-இலன்-நாரி” நரகத்துக்கு செல்லுங்கள் என்றாவது தீர்ப்பளித்து
தொலைக்கக் கூடாதா? என்று கூற ஆரம்பித்து விடுவார்கள்

அவர்களின் மனோ நிலை இந்த எல்லையை அடைந்த போது "நீங்கள்
நரகத்துக்குச் செல்லுங்கள்” என்று தீர்ப்பளிக்கப்படுவது அவர்களுக்கு
நற்செய்தியாகவே அமைந்துவிடுகிறது. மாபெரும் இலக்கிய நயமாகச் சொன்ன
ஒரு வாக்கியத்திலும், தத்துவத்தை உள்ளடக்கிய திருக்குர் ஆனுக்கு
நிகருண்டோ


வாயடைக்கச் செய்வது

ஒருவரிடத்தில் ஒரு உத்தரவை நேரடியாகப் பிறப்பிக்காமல், அவரைவிட
சிறப்பானவருக்கே உத்தரவிட தமக்கு வல்லமை உள்ளது என்று நிரூபித்துக்
காட்டுவதற்கு, வாயடைக்கச் செய்வது, என்று கூறுவர். சிறப்பிடத்தை
வகிப்பவருக்கே ஆணைபிறப்பிக்கும் போது கீழ் நிலையிலுள்ளவர் அடங்கிப்
போய்விடுவார் என்பது அனைவரும் அறிந்ததே

டேய்! நான் யார் தெரியுமா? கலெக்டரே என்னை ஏசினாலும் அவர்
மண்டையை நான் தட்டி விடுவேன் . என்ற கூற்றுக்கு, நீ ஒரு சுண்டைக்காய்! நீ
என்னை ஏசினால் உன்னை சும்மா விட்டுத் தேடமாட்டேன்! என்று பொருள்
கொள்வதை “வாயடைக்கச் செய்வதற்கு உதாரணமாகக் கூடறலாம்
மேற்கண்டவாறு கூறுபவனுக்கு கலெக்டரை தாழ்வுபடுத்தும் எண்ணம்
இருப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததே


இத்தகைய வாயடைக்கச் செய்யும் வகையை திருக்குர் ஆன் பல
இடங்களில் கையாளுகிறது. “நீர் இணை வைத்தால் உமது நற்செயல்களை
பலனளிக்காது செய்து விடுவேன்! நீரும் நஷ்டவாளியாகிவிடுவீர் (அல்குர் ஆன்
39: 65 என்று கூறுவது அந்த வகையைச் சார்ந்ததே

இதன் உட்பொருள் முஹம்மதையே நான் சும்மா விடமாட்டேன் உங்களைச் சும்மாவிடுவேனா? என்பதாகும். இது பெருமானாரை குறைத்து மதிப்பிடுவதற்காகக் கூறப்பட்ட வாக்கியமல்ல. என்றாலும் சமுதாயத்தை கடுமையான முறையில் எச்சரிக்கை செய்வதற்காகவே இத்தகைய சொற்றொடரைப் பயன்படுத்தப்பட்டுள்ளது

இலக்கிய நயம் புரியாதவர்கள் இத்திருவசனத் தொடர் பெருமானாரை
சாதாரணமாக்கிக் காட்டுவதற்காக கூறப்பட்டதாகக் கொள்கின்றனர்


என்னையா? உன்னையா

என்னைப் படைத்த இறைவனை நான் வணங்காமலிருக்க எனக்கு
என்ன கேடு! (அல்குர்ஆன் 36:22) என்ற திருவசனமும் வாயடைக்கச் செய்யும்
வகையைச் சார்ந்தேதே

இதன் பொருள் “உங்களைப் படைத்த இறைவனை நீங்கள் வணங்கமருக்கிறீர்களே? உங்களுக்கு என்ன கேடு” என்பதாகும். இந்த பொருள் காணும் போதுதான் மேற்காணும் வசனத்தைத் தொடர்ந்து "நீங்கள் அவன்பாலே மீட்டப்படுவீர்கள்” என்று குர்ஆன் கூறும் வாக்கியம் பொருத்தமாக அமையும் 


நயமிகு சொல்லை நேர்த்தியுடன் கையாளுவது

அல்லாஹ் அவர்களின் உள்ளங்களின்மீதும், அவர்களின் செவியின்
மீதும் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் விழிகளின் மீது திரையிருக்கிறது'
(அல்குர்ஆன்2:7)

நேர்வழியை எதிர்பார்க்க முடியாது, சீர் கெட்டுப் போனவர்களின்
நிலையை சித்தரிப்பதற்காக திருக்குர்ஆன் மேற்காணும் வசனத்தைக் கூறுகிறது
அவர்கள் தங்கள் கண்களால் நோர்வழியைக் காணமாட்டார்கள். காதுகளால்
நல்ல வார்த்தைகளை செவியேற்க மாட்டார்கள். உள்ளத்தால் உண்மையை
உணரமாட்டார்கள் என்பது கருத்தாகும்

இத் திருவசனத்தில் உள்ளம் செவி ஆகிய இரண்டிற்கும்
முத்திரையிட்டதாகக் கூறும் அல்லாஹ், விழிகளை தனிமைப்படுத்தி திரை
கொண்டு மறைக்கிறான். காரணம் கண்ணை மறைப்பதற்கு திரையிட்டால்
பொதுமானது, ஆனால் காதுகளை கேட்பதை விட்டும் திரையிட்டு தடுத்துவிட
முடியாது. அதுபோன்றே எத்தனை ஆடைகள் அணிந்தாலும், உள்ளத்தை
விளங்குவதிலிருந்து தடுத்திட இயலாது

எனவே உள்ளத்தையும் செவியையும் தடுப்பதற்கு செயலறச் செய்யும்
முத்திரையே பொறுத்தமுடையதாகும்


ஒருமை, பன்மை

மேலும் அத்திருவசனத்தில் உள்ளங்கள் என்பதையும், விழிகள்
என்பதையும், பன்மைச் சொல்லால் குறிப்பிடும் அல்குர் ஆன் செவியை மட்டும்
ஒருமைச் சொல்லாகக் குறிக்கிறது. காரணம், கண்விழி நிறத்தையும்
பார்க்கிறது, வடிவத்தையும் பார்க்கிறது, இவ்வாறு கண்களின் மூலம் பல
அறிவுகள் கிடைக்கின்றன. அவ்வாறே உள்ளத்தின் மூலமும் பல ரகப்பட்ட
அறிவுகள் ஏற்படுகின்றன. உருளும் திருகை ஒரு சுற்று சுற்றும் முன்னே உலகைச்
சுற்றிடும் உள்ளம் பலவற்றை உணருகிறது

ஆனால் காதால் ஒலியை மட்டும்தான் கேட்க முடியுமேயல்லாது, வேறு
ஒன்றும் சாத்தியமில்லை. எனவே ஒரு உணர்வை மட்டும் கொண்ட காதை
ஒருமை கொண்டு குறிக்கும் அல்லாஹ், பல உணர்வுகளை விளங்கும்
உள்ளத்தையும், கண்ணையும் பன்மைப்படுத்தி இருக்கிறான்


எதார்த்தம், பாவனை 

ஒரு சொல்லுக்கு அதற்குரிய பொருளைத் கொடுத்தால் அதற்கு
எதார்த்தம் என்றும், ஒரு சொல்லுக்கு சம்மந்தப்பட்ட மாற்று பொருளைக்
கொடுத்தால் அதற்கு பாவனை என்றும் கூறப்படும் எல்லா மொழி
இலக்கியங்களிலும் இந்த பிரயோகத்தைக் காணலாம். ஒரு சிங்கம் வந்தது
என்று உரைத்து உண்மையான சிங்கம் வந்ததாகக் தெரிவித்தால் அதற்கு
எதார்த்தம் என்றும், ஆண்பிள்ளைச் சிங்கம் ஒருவன் வந்தான் என்று
தெரிவித்தால் அதற்கு பாவனை என்றும் கொள்ளலாம்

திருக்குர் ஆனில் இத்தகைய பிரயோகங்கள் அதிகம் காணப்படுகின்றன

அவர்கள் செவிடர்கள், ஊமையர்கள் குருடர்கள்" (2:18) என்பன போன்ற
திரு வசனங்களுக்கு உண்மையை செவியேற்காதவர்கள், பேசாசதவர்கள்
பார்க்காதவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்

அது போன்றே “நிச்சயமாக நீர் மரணமடைந்துவிட்டவர் களைச்
செவியேற்கச் செய்ய இயலாது" (அல்குர்ஆன் 30:52) என்ற திருவசனத்துக்கு
உள்ளத்தால் மரணமடைந்து விட்டவர்களுக்கு நீங்கள் உண்மையை உரைக்கச்
செய்ய இயலாது என்று பொருள் கொள்ளல் வேண்டும்

இலக்கிய நயம் சொட்டும் திருவசனங்களுக்கு இலக்கிய 
கண்ணோட்டத்துடன் பொருள் கொள்ளும் போதுதான் உண்மையான
விளக்கத்தைப் பெற இயலும். இறைவன் அவனது திருவாக்கின் எதார்த்தங்களை
புரிய நமக்கு நல்லுதவி செய்வானாக.


இது மதிப்பிற்குரிய அல்ஹாஜ் அல்ஹாபிழ் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் அவர்கள் எழுதிய தேன் துளிகள் புத்தகத்தில் இடம் பெற்றுளள கட்டுரை. பல ஆலிம் பெருமக்களுக்கு பயனளித்த பயனுள்ள புத்தகம்.

ஜும்ஆ உரையாற்றுவதற்கு குறிப்பு தேடும் ஆலிம்கள் இதை பயன்படுத்திக் கொள்ளவார்கள் என்ற நன்நோக்கில் இங்கே பதியப்பட்டுள்ளது.

ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கு அல்லாஹ் எல்லா வளமும் நலமும் நிறைவாக தந்தருள்வானாக. 

BY.   A.காதிர் மீரான் மஸ்லஹி. 
ஜாமிஆ பள்ளிவாசல்.
அசநெல்லி குப்பம்.
அரக்கோணம்.
9952129706.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக