பக்கங்கள்

புதன், 22 ஜூன், 2016

ஏற்றம் தரும் ஏழை வரி...









وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ ۖ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ
30:39. (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.



இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஜகாத் என்பதும் ஒன்றாகும். இந்த ஜகாத் பொருளாதாரம் சீராக அமைந்து, அது வளமிக்கதாக ஆகவும், பொருட்கள் ஓரிடத்திலேயே குவியாமல் இருக்கவும், வறுமை நீக்குவதற்கு இறைவனால் வழி வகுக்கப்பட்ட மிக அருமையான திட்டமாகும்.
தனக்கு அல்லாஹ்வின் மீது பிரியமுண்டு என்று சொல்லாத இறை விசுவாசி ஒருவரும் இருக்கமாட்டார்கள். இதன் அடிப்படையில் ஒவ்வொரு இறை விசுவாசியும் தனக்கு எல்லா பொருட்களின் மீதுள்ள பிரியத்தை விட அல்லாஹ்வின் மீதுள்ள பிரியம் அதிகம் என்று கூறுகிறான். அவன் கூறிய வார்த்தை உண்மை தானா...? என்பதை கண்டறிவதற்கு ஒரு அத்தாட்சி தேவைப்படுகிறது. அதனால் இம்மனிதனை சோதிக்க நாடி செல்வத்தைக் கொடுத்து எல்லா பொருட்களின் மீதுள்ள பிரியத்தைக் காண உனக்கு அல்லாஹ்வன் மீது அதிக பிரியமிருப்பது உண்மையானால் நீ நேசிக்கின்ற பொருட்களை அல்லாஹ்வுக்காக கொடு. அவ்வாறு கொடுத்தால் தான் அல்லாஹ்வின் மீது அதிக பிரியமுள்ளவன் என்று இஸ்லாம் இயம்புகிறது.

ஜகாத் நம் மீது கடமையாக ஆக்கப்பட்டிருப்பது, நம்முடைய செல்வம் அழிக்கப்படாமலும், மென்மேலும் அதிகப்படுத்துவதற்கு தானே தவிர வேறொன்றுக்கும் இல்லை. இதனைத் தான் தலைப்பில் கண்ட திருவசனம் தெளிவுபடுத்துகிறது. ஜகாத் என்ற சொல்லிற்கு சுத்தமாக்குதல், அதிகமாக்குதல், வளர்த்தல் என்ற பொறுள்கள் அகராதியில் காணப்படுகிறது.

செல்வம் காணப்படுகிறது.

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
"யார் முறையான சம்பாத்தியத்திலிருந்து ஒரு பேரிச்சம் பழத்தை தர்மம் செய்தாரோ அதை அல்லாஹ் தனது கரத்தால் வாங்கி உங்களில் ஒருவர், தமது குதிரைக் குட்டியை அல்லது ஒட்டகக் குட்டியை வளர்ப்பது போன்று வளர்ச்சியடையச் செய்கிறான். இறுதியில் அது மலையைப் போன்று அல்லது அதை விட மிகப் பெரியதாக மாறிவிடுகிறது."
அறிவிப்பாளர். அபூஹுரைரா ரலி நூல் முஸ்லிம். 1843.

ஹஸ்ரத் ஹுஸைன் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல் நபி ஸல் அவர்கள், "ஜகாத் கொடுக்கப்பட்ட பொருள்"  இறைவனால் பாதுகாக்கப்படும் என்ற விசயத்தைப் பற்றி உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ஒரு கிருஸ்தவர் கவனத்தோடு கேட்டு இவ்விசயம் உண்மையானதாக இருந்தால் நாம் இஸ்லாத்தை தழுவ வேண்டும். இல்லையேல் இந்த மனிதரையும், இவரின் தோழரையும் ஏளனம் செய்து வெறுக்க வேண்டும் என்று எண்ணி தன்னுடைய செல்வம் அனைத்திற்கும் கணக்குப்படி கொஞ்சமும் குறைவில்லாமல் ஜகாத் கொடுத்தார்.

இந்நிகழ்விற்கு முன் அவருடைய பங்காளி மிஸ்ரு தேசத்திற்கு சரக்குகள் கொண்டு விற்பனைக்காக போயிருந்தார். அங்கு போன வியாபாரிகளில் ஒருவர் தம் முதலாளிக்கு எழுதிய கடிதத்தில் "ஒரு கொள்ளை கூட்டத்தினர் வந்து வழி மறித்து தங்களிடமிருந்த பொருட்களை அப்படியே கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டனர்" என்று குறிப்பிடிருந்தார்.

இந்த செய்தி அந்த கிருஸ்துவர் கேள்விப்பட்டு "நம்ம பங்காளியும் அவரின் பொருட்களும் என்ன கதி ஆனதோ தெரியவில்லையே" என்று துக்கித்து கதறிக் கொண்டிருக்கும் போது, அவரது பங்காளியிடமிருந்து வந்த கடிதத்தில் திருடர்கள் மற்ற வியாபாரிகளின் பொருட்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு போய் விட்டனர் என்பதாகவும், நான் வியாபாரக் கூட்டத்திற்க்கு பிந்தி வந்ததால் நம்முடைய பொருட்களெல்லாம் கொள்ளை போகாமல் பத்திரமாக உள்ளது என்றும் எழுதிய வாசகத்தைப் பார்த்ததும், உள்ளம் குளிர்ந்து, அந்த முஹம்மது நபியின் வாக்கியமும், அவரின் மார்க்கமும் உண்மை என்று வியந்து கொண்டே தம் குடும்பத்தினருடன் அருமை நபி ஸல் அவர்களிடம் வந்து, தமக்கு நேர்ந்த விசயத்தைக் கூறி, புன்த மார்க்கமான இஸ்லாத்தில் இணைந்தார்.
                                       நூல் : ரவலத்துல் உலமா.

நபி பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள். "ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளிலிருந்து ஜகாத்தை பிரித்து எடுக்காவிடில், அது அசல் பொருளையே அழித்து விடும்."
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா ரலி நூல் : மிஷ்காத்.

"அழிந்து விடும்" எனும் வாசகத்துக்கு ஒருவன் தனது பொருளுக்கு உரிய ஜகாத்தை வழங்காமல், தான் அதனை அனுபவித்துக் கொண்டிருந்தானாகில் கண்டிப்பாய் அவனுடைய முழு உடமையும் அழிந்து போகும் என்பதல்ல பொருள். மாறாக எதிலிருந்த பயனடைய அவனுக்கு உரிமையில்லையோ, எது ஏழைக்கு உரிய பங்கோ அதனை உண்டு, அவன் தன்னுடைய மார்க்கத்தையும், இறை நம்பிக்கையையும் அழித்துக் கொண்டான் என்பதே பொருளாகும். என்று இமாம் அஹ்மத் ப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். ஆயினும் சில சமயம் ஜகாத் கொடுக்காமல் உண்டு வாழ்பவனின் சொத்து முழுவதும் கணப் பொழுதில் அழிந்து போகின்றது என்பதையும் பார்க்கின்றோம்.

கண்மணி பெருமானார் ஸல் அவர்கள் கூறுகிறார்கள். "எப்பொருள்களுக்கு ஜகாத் வழங்கப்படவில்லையோ, அப்பொருட்கள் 1.அரசாங்கம், 2.நெருப்பு, 3.தண்ணீர், 4.திருடன், 5.நோய்வாய்ப்படுதல் ஆகியவற்றின் மூலமாக அழிக்கப்படும்."

அபிவிருத்தி நிறைந்த பிரார்த்தனை.

நபித்தோழர்களில் ஒருவரான ஸஃலபா என்பவர் பரம ஏழை. எப்போதுமே பள்ளிவாசலில் இருப்பார்.  இதனால் மற்ற தோழர்கள் இவரை "ஹமாமுல் மஸ்ஜித் - பள்ளிவாசல் புறா" என்று செல்லமாக அழைப்பதுண்டு. ஒரு சமயம் திரு நபி பெருமானார் ஸல் அவர்கள், அந்த ஸஃலபா என்ற தோழரை அழைத்து "ஏன்...? நீர் அனுதினமும் தொழுகை முடிந்த்தும் (பிரார்த்தனையில் கலந்து கொள்ளாமல்) விரைவாக செல்கிறீர்கள்" என்று வினவினார்கள்.

அதற்கு அவர் நாயகமே...! "எனக்கும் என் மனைவிக்கும் இருப்பதோ ஒரு ஒரு ஆடை தான். இதை வைத்து தான் நாங்கள் இருவரும் தொழுகிறோம். அதாவது நான் தொழுது முடித்து விடு போய் என் வீட்டில் மறைவான இடத்தில் நின்று கொண்டு ஆடையை கழற்றி என் மனைவிக்கு கொடுப்பேன். அதை அவள் உடுத்திக் கொண்டு தொழுவாள், இப்படித்தான் எங்களின் காலம் செல்கிறது. எனவே எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று அண்ணலாரிடம் கேட்க, உடனே அண்ணலார் "நீர் இப்படியே இருப்பது தான் உனக்கு நல்லது" என்று கூறியும் கேளாமல் பிரார்த்திக்க வற்புறுத்தினார். பின்பு அண்ணலார் அவருக்காக பிரார்தித்தார்கள்.

அண்ணலாரின் பிரார்த்தனையின் அபிவிருத்தியால் அவர் முதன் முதலாக ஒரு ஆட்டை விலைக்கு வாங்கினார். அதன் மூலம் ஆடுகள் பெருகி மந்தைகளாக மாறி மிகப்பெரும் செல்வந்தராக மாறிவிட்டார். பிறகு சிறிது நாட்கள் கழித்து தொழுகைக்கு பின் தங்கி வரக்கூடியவராகவும், ஒருநேரத்தொழுகையை மற்றொரு தொழுகையுடன் (களாச் செய்பவராக) சேர்த்து தொழக்கூடியவராகவும் ஆகிவிட்டார்.

இதற்குண்டான காரணத்தை ஸஃலபாவிடம் அண்ணலார் வினவிய பொழுது, அதற்கு அவர் நாயகமே... எனக்கு ஆடுகளும், ஒட்டகங்களும் நிறைய இருப்பதால் அதை கவனிப்பதிலேயே நேரமாகி விடுகிறது. என்று கூறினார்.

பிறகு சிறிது நாட்கள் கழித்து அருமை நாயகம் ஸல் அவர்கள், ஹஸ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களையும், ஹஸ்ரத் அபூஹுரைரா ரலி அவர்களையும் அழைத்து, நீங்கள் இருவரும் ஸஃலபாவிடம் சென்று ஜகாத் உடைய பொருளை வாங்கி வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். அதுபோலவே இரு நபித்தோழர்களும் ஸஃலபாவிடம் சென்று ஜகாத் உடைய பொருளைக் கேட்ட போது, "இவை அனைத்தும் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தது இதை எப்படி தர முடியும்...?" பிறகு வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார். உடனே இருவரும் திரும்பி வந்து அண்ணலாரிடம் எல்லா விசயத்தையும் கூறினார்கள்.

அப்போது அண்ணலார் சரி, இனிமேல் யாரும் அவரிடம் சென்று ஏதும் கேட்க வேண்டாம் என்று கூறி விட்டார்கள். பிறகு ஸஃலபா ஆஹா...! நாம் இப்படியல்லவா செய்து விட்டோம்..! என்று எண்ணி மனம் வருந்தி, டனே பொருட்களைக் கொண்டு வந்து அண்ணலாரிடம் கொடுத்த போது, அண்ணலார் வாங்க மறுத்து விட்டார்கள். பிறகு அண்ணலாரின் மறைவுக்கு பின்பு ஹஸ்ரத் அபூபக்கர் ரலி அவர்களின் ஆட்சி காலத்தில் 
ஸஃலபா பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்த போது, அண்ணலாரே வாங்கவில்லை. எனவே நானும் வாங்க மாட்டேன் என்று கூறினார்கள். இப்படியே ஒவ்வொரு கலீபாக்களும் தங்களின் ஆட்சி காலத்தில் ஸஃலபா கொண்டு வந்த பொருட்களை வாங்க மறுத்து விட்டார்கள்.
                                 நூல் : தப்சீர் தபரீ.

ஸஃலபாவிடம் கேட்கப்பட்ட நேரத்தில் ஜகாத் கொடுக்க மறுத்ததால் இறுதி வரை அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படவே இல்லை. இஸ்லாமிய கடமைகளில் எந்த ஒன்றையும் அதற்குண்டான நேரத்தில் நிறைவேற்றாமல் காலதாமதப்படுத்துவது பெரும் குற்றமே ஆகும்.

செய்வதை திருந்தச் செய்.

ஜகாத் பொருட்களை நம் விருப்பபடி யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க முடியாது. திருமறையின் மூலமாக அல்லாஹ் எவருக்கெல்லாம் கொடுக்க வேண்டுமென கூறியுள்ளானோ, அவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.

திருமறை கூறும் ஜகாத் வாங்கும் தகுதியுடைய எட்டு பிரிவினர்கள்.
1. ஏழைகள்.
2. தரித்திர நிலையில் உள்ள ஏழைகள்.
3. ஜகாத் பொருட்களை வசூலிப்பவர்கள்.
4. புதிதாக இஸ்லாத்தை தழுவியோர்.
5. உரிய தொகை இல்லாததால் விடுதலை பெறாமல் இருக்கும் அடிமைகள்.
6. கடனில் மூழ்கி கிடப்பவர்கள்.
7. அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்பணித்தவர்கள்.
8. வழிப்போக்கர்கள்.

இதற்கு மாற்றமாக செயல்பட்டால் ஜகாத் என்ற கடமையை நிறைவேற்றியவர்களாக ஆக முடியாது. ஆனால் சிலர் அறியாதவர்களாக பள்ளிவாசல் கட்டுவதற்கும், மதரஸா கட்டுவதற்கும், அனாதை இல்லம் கட்டுவதற்கும், இவைகளை மராமத்து பணிகள் செய்வதற்கும், நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்கும் ஜகாத்துடைய பொருட்களை கொடுக்கிறார்கள். ஆனால் இப்படி கொடுப்பவர்களுடைய ஜகாத் கடமை நீங்காது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.

பள்ளிவாசல், மதரஸா, அநாதை இல்லம் இவைகளில் பணிபுரியும் இமாம், மோதினார், இதர பணியாளர்களுக்கு ஜகாத் பொருட்களை சம்பளமாக கொடுக்க கூடாது.

ஏழைகள் நலனைக் கருதி...
ஜகாத் தடமையாகும் உச்ச வரம்பு (நிஸாப்) தங்கம் பவுன் 87 1/2  கிராம். வெள்ளி 612 1/2   கிராம் ஆகும்.
அந்த கால கட்டத்தில் 612 1/2 கிராம் வெள்ளியின் விலை அளவுக்கு ஒருவரிடம் ரொக்கப் பணம் அல்லது வியாபாரச் சரக்குகள் இருந்தால் அவர் மீது ஜகாத் கடமையாகும்.

ஹஸ்ரத் அஸ்மா பின்த் யஜீத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். "நானும் எனது சிறிய தாயாரும் கையில் தங்க வளையல்கள் அணிந்தவர்களாக அருமை நாயகம் ஸல் அவர்களிடம் சென்றோம். இதனுடைய "ஜகாத்தை நிறைவேற்றி விட்டீர்களா..?" என்று அண்ணலார் எங்களிடம் வினவினார்கள். "நிறைவேற்றவில்லை." என பதிலளித்தோம். இதை செவியுற்ற அண்ணலார் "உங்கள் இருவருக்கும் மறுமையில் அல்லாஹ் நெருப்பு கங்குகளை அணிவிப்பதைப் பற்றி பயமில்லையா...? என எச்சரித்து அதற்குரிய ஜகாத்தை நிறைவேற்றி விடுங்கள் என்று கட்டளையிட்டார்கள்."
                              நூல் : திர்மிதி - 576

இறையச்சம் உள்ளவர்களுக்கு இந்த ஒரு நபிமொழியே போதுமானது. இதை உணர்ந்து பெண்கள் செயல்பட வேண்டும்.
கடமையாக்கப்பட்டதின் இலட்சியம்.
ஜகாத் கடமையானவர்கள் தனது ஜகாத் ரூபாய்களை சில்லரையாக மாற்றிக் கொண்டு ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று கொடுப்பது, சிலருக்கு ஆடைகள் வாங்கி கொடுப்பதும் இப்படி ஜகாத்தின் ரூபாய்களை செலவிடுவதால் ஜகாத் வேண்டுமானால் நிறைவேற்றி விடும். அல்லாஹு தஆலா ஜகாத்தை கடமையாக்கியதின் இலட்சியம் நிறைவேறாது.
ஜகாத் கடமையான ஒருவர் தனது ஜகாத் பொருட்களின் மூலம் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒரு ஏழைக்கு ஒரு தொழில் துவங்க முழு ஒத்துழைப்பு தரலாம். இப்படி ஒத்துழைப்பு தந்தால் தனது ஜகாத் பொருட்களின் மூலம் தொழில் துவங்கியவர், அவர் தனது தொழிலின் மூலமாக செல்வத்தைப் பெருக்கி நன்றி மறக்காமல், அவரும் பலருக்கு தொழில் துவங்க ஒத்துழைப்பு கொடுப்பதற்கு சாத்தியம் உணடல்லவா...?
ஜகாத் கடமையானவர்கள் ஒவ்வொருவரும் இது போலவே செயல்பட்டால், நாட்டில் வேலை வாய்ப்பு பெருகும், பசி, பட்டினி, வறுமை போன்றவைகள் விரண்டோடும்.
அல்லாஹ் ஜகாத்தை கடமையாக்கிதெல்லாம் ஏழ்மையை விரட்டியடிக்க உருவாக்கப்பட்ட சிறந்த திட்டம் என்பதை நினைவில் நிறுத்தி ஜகாத்தை முறையாக செயல்படுத்துவோம். அல்லாஹ் அதற்கு அருள்பாலிப்பானாக.. ஆமீன்.

                            ஆக்கம்.
          மௌலவி மு.முஹம்மது ஹைதர் அலி இம்தாதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக