பக்கங்கள்

திங்கள், 20 ஜூன், 2016

கூடி இருந்தால் கோடி நன்மை.










ஜமாத் - எனும் கூட்டமைப்புடன் செயல்படுவதை இஸ்லாம் மிகவும் விரும்புகிறது, வலியுறுத்துகிறது. கூட்டுத் தொழுகை, கூட்டு சஹர், கூட்டு இப்தார், கூட்டுத் தராவீஹ், கூட்டுக் குர்பானி, ஜகாத் கூட்டு, கூட்டு ஹஜ், கூட்டுத் துஆ... என எங்கு திரும்பினாலும் அங்கு கூட்டமைப்பு இருப்பது நம்மை மெய்சிலிக்க வைக்கிறது.


நபிகளார் நவின்றார்கள் : அல்லாஹ்வன் உதவிக்கரம் கூட்டாக செயல்படுவதில் தான் இருக்கிறது.  நூல் பைஹகி.
கூட்டாக தொழுவது தனியாக தொழுவதை விட 27 மடங்கு அந்தஸ்து கிடைப்பதற்குரியது. நூல் புகாரி, முஸ்லிம்

இருவரின் உணவு மூவருக்கு போதுமானதாகும், மூவரின் உணவு நால்வருக்கு போதுமானதாகும்.  நூல் புகாரி.
மேற்கண்ட நபிமொழிகளின் மூலம் எப்படியெல்லாம் கூடுதலாக நன்மை பெற முடியும் என்பதை நாம் அறிய முடியும்.

புனித மிகு இந்த ரமலான் மாதத்தில் கூட்டாக செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஜமாத்தாக தொழுவது, சஹர் செய்வது, இப்தார் செய்வது, தராவீஹ் தொழுவது, திக்ர் செய்வது, துஆ செய்வது என கூட்டாக அமல் செய்வதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் ரமலானில் நிறைந்திருக்கின்றன.

நாம் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட்டுகிற போது எந்த ஒரு கடின காரியமும் மிக இலகுவாக ஆகிவிடுகிறது.

அருளாளன் அல்லாஹ் கூறுகிறான் :
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا ۚ
நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் (வேதநூலாகிய குர்ஆன் எனும்) கயிற்றைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (3: 103)

திருகுர்ஆன் காட்டும் வழியில் நடப்பது என்பது, இஸ்லாமிய நெறிகளை சரியான முறைப்படி, ஒற்றுமையாக, ஒன்றிணைந்து, வறட்டு பிடிவாதங்களை நீக்கி கூட்டுணர்வை பற்றி பிடித்து நடப்பது என்பது தான். கூடவே "பிரிந்து விடாதீர்கள்" என்ற எச்சரிக்கை சொல்லும் இத்துடன் இணைத்துப் பார்க்க தக்கதே.

இதனால்தான் "எவர் சாண் அளவு ஒற்றுமையை விட்டும் சற்று விலகிச் சென்று விடுகிறாரோ அவர் தனது கழுத்திலிருந்து இஸ்லாமிய வளையத்தை கழட்டி விட்டவர் ஆவார்." என நபிகளார் சொன்னார்கள். நூல் அபூதாவூத்.

எனவே ரமலான் மாத நோன்பு நமக்கு பல வழிகளிலும் ஒற்றுமை வாசல்களை தாராளமாக திறந்து வைத்திருக்கிறது. நாம் தான் உள்ளே நுழைவதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இது யோசிக்கும் நேரமல்ல. உடைந்து போன உள்ளங்களின் ஒற்றுமைகளை ஒன்றிணைத்து சுவாசிக்கும் நேரம் இது.

எனவே இந்த ரமலானில் கூட்டுணர்வை போற்றுவோம். வேற்றுமை உணர்வுகளை மாற்றுவோம்.

ஆக்கம்.
மௌலவி எஸ்.என்.ஆர்  ஷவ்கத் அலி மஸ்லஹி. ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக