பக்கங்கள்

புதன், 23 செப்டம்பர், 2015

இப்ராஹிம் நபியின் இறைக்காதல்





 
பொதுவாக அல்லாஹ் ஒர் இஸ்லாமியனுக்கு செல்வத்தை வாரி வழங்கிவிட்டால் இயற்கையாக இறைவன் மீது அவன் அதிக நம்பிக்கை கொள்வதைக் காணலாம்.


அல்லாஹ் மீது இப்ராஹிம் நபி கொண்டிருந்த அளப்பரிய காதல் மீது மலக்குகள் கூறினார்கள்

யா அல்லாஹ் நீ இப்ராஹிம் மீது செல்வத்தை பொழிவதாலேயே அவர் உன் மீது அபரிமிதமான முஹப்பத் கொண்டிருக்கிறார் என்றனர்.

மலக்குகள் அறிய வேண்டி ......அல்லாஹ் இப்ராஹிம் நபியிடத்தில் இரு மலக்குகளை அனுப்பினான்

கணக்கற்ற தன்னுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இப்ராஹிம் நபி  அவர்களின் அருகாமையில் மனித உருவெடுத்து ஒரு கல்லின் மீது அமர்ந்த அவர்கள் சுப்பூஹீன்  குத்தூசுன் ரப்பனா வ ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ் என்றனர்

இப்ராஹிம் நபி அவர்கள் இதை செவியுற்று என்ன சொன்னீர்கள் நான் கேட்காத தஸ்பீஹ் ஆக இருக்கிறதே........ மீண்டும் சொல்லுங்களேன் என்றார்

அப்படியா மீண்டும் சொல்வதற்கு ஏதாவது ஈடாக வேண்டுமே என்ற போது இப்ராஹிம் நபி அவர்கள் என்னுடைய கணக்கற்ற ஆடுகளில் பாதியைத் தருகிறேன் என்றார்


மலக்குகள் மீண்டும் மேற்கண்ட தஸ்பீஹ் சொன்னவுடன் இப்ராஹிம் நபி தன்னுடைய ஆடுகளில் பாதியைத் தந்து விட்டார்

இன்னொரு முறை சொல்லுங்களேன் என்றார் இப்ராஹிம் நபி


மலக்குகள் மீண்டும் மேற்கண்ட தஸ்பீஹ் சொன்னவுடன் அதற்கு ஈடாக மீதமுள்ள அனைத்து ஆடுகளையும் தந்து விட்டார்


இன்னொரு முறை சொல்லுங்களேன் என்றாராம் இப்ராஹிம் நபி


மனித உருவெடுத்த மலக்குகள் சொன்னார்கள்  தற்போது எங்களுக்கு தருவதற்கு உங்களிடம் எதுவும் இல்லையே எப்படி சொல்வது என்று

நான் என் மொத்த ஆடுகளைத் தானே தந்தேன் அதை மேய்க்க ஒர் இடையனைத் தரவில்லையே

அந்த இடையனாக உங்களின் ஆடுகளை மேய்க்க நான் பகரமாகிறேன்  மீண்டும் ஒரு முறை அந்த தஸ்பீஹ் ஹை சொல்லுங்களேன் என்றாராம்

இப்ராஹிம் நபி இறைவன் மீது கொண்டிருந்து அளவிட இயலா அன்பை உணர்ந்து அவர் உண்மையிலே அல்லாஹ்வின் கலீல் ( நண்பர்) என்பதை அந்த மலக்குகள் உணர்ந்தனர்.

                           
இப்றாஹீம் அலை அவர்கள் மனைவி மகனை பள்ளத்தக்கிலே விட்டுவிட்டு சென்று பல வருடங்களுக்குப் பிறகு பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு ஜுர்ஹூம் கிளையார், தங்களிலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை.

ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவியிடம் இஸ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.

உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் கூறி அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். எவரேனும் உங்களிடம் வந்தார்களா? என்று கேட்டார்கள். அவருடைய மனைவி, ‘ஆம்இன்னின்ன (அடையாளங்கள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார். எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன்.

என்னிடம் உங்கள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம், நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க, அதற்கு அவர் ஆம்உங்களுக்கு தன் சார்பாக ஸலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்.

ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்து கொள் என்று சொல்லிவிட்டு, உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களை (ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார்.

இப்ராஹீம் (அலை) அவர்கள், நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா?) என்று கேட்டார்கள். மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அழ்ழாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், உங்கள் உணவு எது? என்று கேட்க அவர், இறைச்சி என்று பதிலளித்தார். அவர்கள், உங்கள் பானம் எது? என்று கேட்க தண்ணீர் என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும், தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

இதை கூறிக்கொண்டே வந்த நபி (ஸல்) அவர்கள், ''அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள் வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்திருப்பார்கள். ஆகவே தான் மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாக பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதே இல்லை என்று சொன்னார்கள்

''இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் உரை. அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்த போது, உங்களிடம் எவரேனும் வந்தார்களா? என்று கேட்க, அவருடைய மனைவி, ‘ஆம்எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று (சொல்லிவிட்டு) அவரை புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா? என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம்உஙகளுக்கு ஸலாம் உரைக்கிறார். உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி உங்களுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை. நீ தான் அந்த நிலைப்படி உன்னை (விவாகரத்து செய்யாமல்) அப்படியே மனைவியாக வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்; என்று சொன்னார்கள்.  ( புகாரீ)


ஒரு இல்லத்தின் நிலைப் படி சரியாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல இல்லத்தரசி சரியாக இருப்பது குடும்பத்திற்கு முக்கியம். இதை அருமையாக உணர்த்தியவர்கள் இப்றாகீம் அலை.
நமக்கு பல லட்சம் கிடைத்தால் போதும் என்று பணக்கார வீட்டில் பார்த்து மகனுக்கு சம்பந்தம் பேசி அவனைப் பாலுங்கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு அவன் அங்கே அனுபவிக்கும் அவஸ்தையை எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் பார்த்து ரசிக்கும் எத்தனையோ பெற்றோர்களுக்கு மத்தியில் இப்றாஹீம் அலை ஒரு முன்மாதிரி. தன் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் எப்படி உள்ளது என்பதில் அக்கறை காட்டி அவர்கள் வளமாக நலமாக வாழ்வதற்கும் வழிகாட்டிய இப்றாஹீம் அலை அவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.


ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கு வேண்டிய அத்தனை அம்சங்களுக்கும் அருமையான வழிகாட்டியாக அமைந்திருப்பதால்தான் அல்லாஹ் அவர்களை ஒரு தனிமனிதரல்ல.. அவர் ஒரு சமுதாயம் என்கிறான் 


(إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتاً لِلّهِ حَنِيفاً وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِينَ (النحل : 120)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக