பக்கங்கள்

திங்கள், 27 ஜூலை, 2015

மகளுக்குத் தாயின் அறிவுரை !





  அறியாமைக் காலத்தில் ஒரு தாய் தன் மகளுக்கு அவளுடைய மணநாளன்று செய்த அறிவுரை இங்கே தரப்படுகிறது. இது மிக ஆழ்ந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. ஒரு பெண் தன் கணவனை மகிழ்விப்பதற்கு அவள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செயல்பாடுகள் பற்றி மிகச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
  

 உம்மு அயாஸ் பின்த் அவ்ஃப் இப்னு முஸ்லிம் அஷ்ஷைபானீ என்பவள் கிந்தாவின் அரசன் அம்ர் இப்னு ஹிஜ்ர் என்பவருக்கு மணமுடிக்கப்பட்டாள். திருமணம் முடிந்து வழியனுப்பி வைப்பதற்கு முன் அவளுடைய தாய் உமாமா பின்த் அல்ஹாரிஸ் தன் மகளைத் தனியாக அழைத்து அவளுக்கு அறிவுரை கூறினாள்.


  என் அன்பு மகளே ! நற்குணம் கொண்ட இறைநம்பிக்கை கொண்டவளுக்கு அறிவுரை தேவையில்லை. இருப்பினும் அறிவுரையானது மறதியாளருக்கு ஞாபகமூட்டுகிறது; அறிவாளிக்கு வழிகாட்டுகிறது. ஒரு பெண் தன் பெற்றோரின் செல்வச் செழிப்பின் காரணத்தாலோ அவர்கள் அவள்மீது காட்டுகின்ற அன்பின் காரணத்தாலோ திருமணத்தைப் புறக்கணிக்கலாம். நீயும்கூடத் திருமணம் தேவையற்றவளாகவே இருந்தாய். இருப்பினும், பெண்கள் ஆண்களுக்காகவே படைக்கப்பட்டுள்ளார்கள். பெண்களுக்காகவே ஆண்கள் படைக்கப்பட்டுள்ளார்கள்.


  என் அன்பு மகளே ! நீ வாழ்ந்த சூழ்நிலையைவிட்டும் நீ வளர்ந்த வீட்டை விட்டும் நீ பிரிந்து செல்கிறாய். பழக்கமில்லாத வாழுமிடத்தில் புதியதொரு தோழனுடன் வாழச் செல்கிறாய். நீ உன் கணவனின் பொறுப்பின்கீழ் வந்துவிட்டதால் அவனே இப்போது உன்னைக் கண்காணிப்பவன். அவனே உன்னுடைய தலைவன். எனவே, நீ அவனுக்கு ஓர் அடிமையாய் இரு. அப்படியிருந்தால் நிச்சயமாக அவன் உன்னுடைய பணியாளனாக ஆகிவிடுவான். பணிவதில் நீ அவனுக்குப் பூமியாக இரு. பாதுகாப்பதில் அவன் உனக்கு வானமாக ஆகிவிடுவான். அவனைக் காப்பதற்காகப் பத்து விசயங்களைக் கடைப்பிடி. அவை உனக்கு ஒரு புதையலைப் போல இருக்கும்.


1.அவன் எதைக் கொடுக்கின்றானோ அதை வைத்துத் திருப்திகொள்.


2.அவன் சொல்வதைக் கேள். சிறந்த முறையில் அவனுக்குப் பணிந்து நட.


3. உன்னில் தீய எண்ணம் ஏற்படாமலிருக்க அவனின் பார்வை எங்கு படுகிறதோ அவ்விடத்தை நீ கவனித்துக்கொள்.


4. அவன் எதை நுகர்கின்றானோ அதைக் கவனித்துக்கொள். ஏனென்றால் அவன் உன்னில் நறுமணத்தைத்தான் நுகர வேண்டும்.


5. அவனுடைய உணவு நேரத்திற்கு மதிப்புக் கொடு. ஏனென்றால், பசியின் தாக்கமே கோபத்திற்குக் காரணமாகும்.


6. அவனுடைய தூக்க நேரத்திற்கு மதிப்புக்கொடு. ஏனென்றால், தூக்கத்திற்கு இடையூறளிப்பது தான் பிரச்சனைக்குக் காரணமாகும்.


7. நல்ல முறையில் நிர்வகிப்பதன் மூலம் அவனுடைய செல்வத்திற்குப் பாதுகாப்பாய் இரு.


8. நல்ல முறையில் திட்டமிடுவதன் மூலம் அவனுடைய குழந்தைகளையும் பணியாளர்களையும் கவனித்துக்கொள்.


9. அவனுடைய கட்டளைகளை மறுக்காதே. நீ மறுத்தால் அவன் சினம் கொள்வான்.


10. அவனுடைய இரகசியங்களைப் பரப்பாதே. ஏனென்றால், நீ அவனுடைய இரகசியங்களைப் பரப்பினால் அவன் உன்னைப் பழிவாங்கத் துடிப்பான். அதிலிருந்து நீ தப்பிக்க முடியாது.


  மேலும், அவன் கவலையாக இருக்கின்றபோது நீ மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. அவன் மகிழ்ச்சியாக இருக்கின்றபோது நீ கவலையாக இருக்காதே. ஏனென்றால், நீ அவ்வாறு செய்தால் அவன் மனத்தில் உன்னைப் பற்றிய வெறுப்புணர்வு தோன்றும். 


 மேலும், என் அன்பு மகளே ! நீ அவனை மிகவும் அதிகமாக மகிழ்ச்சிப்படுத்தினால் அவன் உன்னை மிகவும் கண்ணியமாக நடத்துவான் என்பதை நினைவில் வைத்துக்கொள். நீ உன் விருப்பங்களைவிட அவனுடைய விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்காத வரை நீ விரும்புவதை அவனிடம் பெறமுடியாது என்பதையும் நினைவில் கொள்.              (நூல் : அல்அஃகானீ)


(”இஸ்லாமிய இல்லறம்நூலிலிருந்து…) ( இனிய திசைகள் மார்ச் 2015 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக