பக்கங்கள்

வியாழன், 25 டிசம்பர், 2014

சமுதாய காவலர் சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்



لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم




இறை நம்பிக்கையாளர்களே... நிச்சயமாக உஙகளிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கிறது. அன்றி உங் (கள் நன்மைக) ளையே பெரிதும் விரும்புகிறார். இன்னும் இறை நம்பிக்கையாளார்கள் மீது மிக்க அன்பும், இரக்கமும் உடையோராகவும் இருக்கிறார்.
                                         ( திருக்குர்ஆன். 9-128.)


தாயைவிட மேலான பாசம் கொண்ட பேரருளாளன் அல்லாஹ்.  நரகத்தின் ஏழாகவும், சுவனத்தின் எண்ணிக்கையை எட்டாகவும் அமைத்து தனது அருள் விசாலத்தை காட்டியுள்ளான். அல்லாஹ்வின் அருள்கொடைகளை  சொல்லி முடிக்க நாவுகளில்லை. எழுதி முடிக்க வார்த்தைகளில்லை.


இறைவனின் பேரருள் மற்ற படைப்புகளை விட மனிதர்கள் மீது குறிப்பாக மனித புனிதரான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் சமுதாயமான நம் மீதும் சூழ்ந்திருக்கிறது.


பிற சமுதாயத்தினரை விட நம்முடைய சமுதாயத்தினர் இறைவனிடம் மிக சிறப்பு பெற்றதற்கு முழு காரணம் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த சமுதாயம் உயர்வடைய வேண்டுமென்பதற்காக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்துள்ளார்கள் என்பது வரலாறு கூறும் உண்மை செய்தியாகும்.


ஹஜ்ரத் அப்துல்லாஹ் ப்னு அம்ர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு முறை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தியவாறு இறைவா......! என் சமுதாயம்... என் சமுதாயம் இவர்களை காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தித்தார்கள். அழுதார்கள். அதற்கு அல்லாஹ் ஜிப்ரிலே முஹம்மதிடம் சென்று நாம் உம் சமுதாயத்தினர் தொடர்பாக உம்மை திருப்தியடையச் செய்வோம். உம்மை கவலையடைய செய்ய மாட்டோம் என்று கூறுங்கள். என்றான்.
                                               நூல் முஸ்லிம்-346.

சலுகை வழங்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வானவத்தூதர் ஜிப்ரயீல் அலை அவ்ரகள் ஒருநாள் வருகை தந்தபோது கூறினார்கள்.  நாயகமே உங்களுடைய சமுதாயத்தில் எவர் தான் மரணிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு பாவமன்னிப்பு கோருகிறாரோ அவரின் அனைத்து பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விடுவதாக தங்களிடம் அறிவிக்கும்படி எனக்கு கட்டளையிட்டுள்ளான் என்றார்கள்.
இதை செவியுற்ற அண்ணலார் ஜிப்ரயீலே எனது சமுதாயத்தினர் மறதியில் மிகைத்தவர்கள். மேலெண்ணத்தில் மாறி திளைப்பவர்கள். ஆதலால் ஒரு ஆண்டு என்பது அவர்களது விசயத்தில் மிக பாரதூரமான கால கட்டமாகும், என்றார்கள்.


இறைவன் மீண்டும் ஜிப்ரயீல் அலை அவர்களின் மூலமாக மரணமடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு எவர் பாவமன்னிப்பு கோருகிறாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும். என்று அறிவித்தான். இதிலும் அண்ணலார் திருப்தியடையவில்லை. இறைவன் மீண்டும் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களின் மூலமாக மரணமடைவதற்கு ஒரு தினத்திற்கு முன்பு எவர் பாவ மன்னிப்பு கோருகின்றாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அறிவித்தான் இதிலும் அண்ணலார் திருப்தியடையவில்லை.


இறைவன் மீண்டும் ஜிப்ரயீல் அலை அவர்களின் மூலமாக மரணமடைவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு எவர் பாவமன்னிப்பு கோருகின்றாரோ அவரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று அறிவித்தான் இதிலும் அண்ணலார் திருப்தியடையவில்லை.


இறைவன் மீண்டும் ஜிப்ரயீல் அலை அவர்களின் மூலமாக நாயகமே உங்களது சமுதாயத்தினர் வாழ்நாள் முழுவதும் பாவமிழைத்து அதற்காக பாவமன்னிப்பு கோராமல் இருந்து விட்டு இறுதி மூச்சி தொண்டையை அடைவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக தான் செய்த அனைத்து பாவங்களையும் நினைத்து அதற்காக மனம் வருந்தி பேசுவதற்கு சக்தியற்ற அந்த நேரத்தில் ஜாடையால் மனவேதனையால் மன்னிப்பு கோரினால் அதனையும் ஏற்று கொண்டு  அத்தகையவர்களை மன்னித்து விடுவேன் என்று அறிவித்தான். அப்போது தான் அண்ணலார் திருப்தியடைந்தார்கள்.
                                  நூல். ஜுப்ததுல் வாயிலீன்.

கருணை உள்ளம் கொண்ட அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் சமுதாயத்தினர்களான நம்மவர்கள் மீது எந்தளவுக்கு கரிசனம் காட்டியுள்ளார்கள் என்பதற்கு இந்த சம்பவம் தெளிவான சான்றாகும்.


கடமையாக்கப்பட்ட ஐம்பது நேர தொழுகையை ஐந்தாக குறைத்து தந்தது போல் ஏக இறைவனாகிய அல்லாஹ்விடம் அண்ணலார் ஒரு சக்தியாக கிரகணத்தையே நிகழ்த்தி காட்டி அந்த வல்லோனிடம் பாவமன்னிப்பின் காலத்தை படிபடியாக குறைத்து இந்தளவுக்கு லேசுபடுத்தி தந்துள்ளார்கள் என்பதை நினைக்கும் போது அண்ணலாருக்கு நாம் என்ன கைமாற செய்திட முடியும் என்பதை நினைத்து நெஞ்சம உருகுகிறது.


விசேச பிரார்த்தனை.

ஒரு சமயம் கண்மணி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் பேரக்குழந்தைகளோடு விளையாடி கொண்டிருந்தார்கள். அப்போது பேரர் ஹஸன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு உதட்டிலும் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு கழுத்திலும் முத்தமிட்டார்கள். பிறகு ஹஸன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இந்த விசயத்தை தனது தாயார் பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம் வந்து தெரிவித்தார்கள். உடனே பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தனது தந்தையான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நாயகமே பேரர்கள் மத்தியில் முத்த விசயத்தில் ஏன் பாகுபாடு செய்தீர்கள் என்று கேட்டார்.


அருமை மகளே..... இவர்கள் பெரியவர்களான பின்பு ஹஸன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நஞ்சு ஊட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் உதட்டில் முத்தமிட்டேன். இளையவர் ஹுஸைன் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கழுத்து வெட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் கழுத்தில் முத்தம்மிட்டேன் என்று விளக்கமளித்தார்கள்.


இச்செய்தியை கேட்ட பாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அழுதார்கள். பின்னர் நாயகமே ஒவ்வொரு இறைதூதருக்கும் ஒரு விசேசமான ஒரு பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளான். உங்களுக்கும் அந்த விசேச பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளானே அதை பயன்படுத்தி உங்கள் பேரக்குழந்தைகளை இக்கொடிய ஆபத்திலிருந்து காப்பாற்றக்கூடாதா...? என்று கெஞ்சினார்கள். அப்போது அண்ணலார் அதை மறுமையில் என் சமுதாயத்தினரின் நலனுக்காக பயன்படுத்துவேன். அதை எனது பேரக்குழந்தைக்காக இங்கு பயன்படுத்த முடியாது என்று கூறினார்கள்.


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு இறைத்தூதருக்கும் தன் சமுதாயத்தினர் தொடர்பாக ஒரு சிறப்பு பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு. நான் எனது பிரார்த்தனையை மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காக பரிந்துரை செய்ய பத்திரப்படுத்தி விட்டேன்

( அறிவிப்பாளர் ஜாபிர் ப்னு அப்தில்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு நூல் முஸ்லிம். 345.)


தன் குடும்பத்தினர் ஏதேனும் துன்பத்தில் சிக்கிகொண்டால்   உடனே தன்னிடமுள்ள பணபலம், படைபலம், ஆட்சி அதிகாரபலம் போன்றவற்றை பயன்படுத்தி அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு வழி தேடுவோரை தான் இவ்வுலகம் கண்டிருக்கிறது. ஆனால் தமக்கு கொடுக்கப்பட்ட விசேச உரிமையை தனது சமுதாயத்தினரின் நலனுக்காக மட்டும்தான் பயன்படுத்துவேன். தனது குடும்பத்தினரின் நலனுக்காக கூட இம்மையில் பயன்படுத்த மாட்டேன் என்றுரைத்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை போன்று சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட தலைவரை இவ்வுலகம் இதுவரை கண்டதில்லை. இன்மேல் காணப்போவதுமில்லை. சிறந்த தலைவருக்கு இதுவே முன் மாதிரியாகும்,


ஒவ்வொரு இறைத்தூதருக்கும் கொடுக்கப்பட்ட அந்த சிறப்பு பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என உறுதிளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மற்ற இறைத்தூதர்கள்அனைவரும் இந்த உலகிலேயேபிரார்த்தனை செய்து அது அங்கீகரிக்கப்படவும் செய்தது.


ஆனால் நம்முடைய இறைதூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் இந்த வாய்ப்பை இவ்வுலகில் பயன்படுத்துவதை விட மறுமையில் பயன்படுத்துவதே சிறப்பு என விளங்கி கொண்டு தம் சமுதாயத்தினரை நரகத்திலிருந்து விடுவிப்பதற்காக பரிந்துரை செய்வதின் மூலம் பயன்படுத்த உள்ளார்கள்.
இதன் வாயிலாக தன் சமுதாயத்தினரின் நெருக்கடியான ஒரே நேரத்தில் அண்ணலார் உதவ முன் வருகிறார்கள் என்பது தெளிவாகிறது.


இரவு பகலாக கவலை 


ஹஸ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நாயகமே தாங்கள் இணைவைப்பாளர்களுக்கு எதிராக சாபமிட்டு பிரார்த்தியுங்கள் என கூறப்பட்டது. அதற்கு அண்ணலார் நான் சாபமிடுபவராக அனுப்பபடவில்லை. நான் அருளாகவே அனுப்பபட்டுள்ளேன் என்று கூறினார்கள்.
                                             
                                                நூல் முஸ்லிம்.


இணைவைப்பாளர்கள் அதிகமதிகம் தீமை செய்து வந்ததின் காரணமாக இவ்விதம் வேண்டப்பட்டது. ஆனால் முன்சென்ற இறைதூதர்களில் சிலர் அவ்விதம் சபித்ததின் காரணமாக அவர்களின் கூட்டத்தினர்கள் அழிக்கப்பட்டனர் . ஆனால் அண்ணலார் அவ்விதம் சபிக்கவ எண்ணவில்லை. மாறாக அவர்கள் எல்லோரும் இறைநம்பிக்கையளர்களாக ஆக வேண்டும் என்ற கவலையில் பல நாட்கள் இரவு பகலாக அழுது தொழுது அவர்களுக்காக பிரார்த்தித்துள்ளார்கள்..


 

நபியே.. குர்ஆனாகிய இந்த வார்த்தையை அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் துக்கத்தால் அவர்களுடைய புறக்கணிப்புக்கு பின்னால் உம்மையே நீர் அழித்து கொள்வீர் போலும். 18-16


வினாவிற்கு விளக்கம்.


கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் உங்களுக்கு நன்மைதான். நான் உங்களை விட்டு மறைந்து விட்டாலும் உங்களுக்கு நன்மையாகத்தான் இருப்பேன். இதை செவியுற்ற நபித்தோழர்கள் வியப்புற்று வினவினார்கள். தாங்கள் எங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பது நன்மையிலும் நன்மைதான் என்பதை என்பதை ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து கொண்டிருக்கிறோம். தாங்கள் எங்களை விட்டு மறைந்த பின்னர் நன்மையாக இருப்பேன் என்று கூறினீர்களே அதன் விளக்கமென்ன என்று கேட்டார்கள்.


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் மறைந்த பின்பு உங்களின் செயல்கள் சொல் செயல் உறுதியான எண்ணங்கள் எல்லாம் எனக்கு எடுத்து காட்டப்படும் உங்களின் அந்த செயல் நன்மையாக இருந்தால் அல்லாஹ்வுக்கு நான் நன்றி பாராட்டி கொள்வேன்.. தீமையாக இருந்தால் உங்களுக்காக எனது சமுதாயத்தினர் என்பதற்காக அல்லாஹ்விடம் பிழை பொறுத்து  மன்னித்தருளும்படி மன்றாடுவேன். என்று கூறினார்கள்.
                                                   நூல் மிஸ்காத்.


அண்ணலார் நம்மோடு வாழ்ந்தாலும் மறைந்தாலும் நன்மையாகவே இருக்கிறார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரில் சந்தித்து இறைநம்பிக்கை கொண்டு அவர்களோடு சோர்ந்து வாழ முடியவில்லையே என்ற நம்முடைய இந்த ஆதங்கத்தை அமைதிபடுத்தி அண்ணலாரின் சமுகத்தில் நாமும் ஒருவராக அங்கம் வகிக்கிறோமே அதுவே பெரும் பாக்கியம் என்று எண்ணி நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு என்றென்றும் நன்றி செலுத்தி மனமகிழ்ச்சி அடையவேண்டும்.


சிறப்பு பெற காரணம்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் உங்களுக்கு முன்பே அல்கவ்ஸர் தடாகத்திற்கு சென்று உங்களுக்கு நீர்புகட்ட காத்திருப்பேன். எவர் என்னிடம் வருகிறாரோ அவர் அத்தடாகத்தின் நீரை அருந்துவார். எவர் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது.

(அறிவிப்பாளர் சஹ்ல் ப்னு சஅத் ரலியல்லாஹு தஆலா அன்ஹு. நூல் முஸ்லிம். 4598.)

மறுமை நாளில் தன் சமுதாயத்தினரின் கடுமையான தாகத்தை போக்குபவராகவும் அவர்களில் பாவிகள் சொர்க்கம் செல்வதற்காக அல்லது சொர்கத்தில் அவர்களின் தகுதி உயர்வதற்காக பரிந்துரை செய்வோரிலேயே முதல் மனிதராகவும் நம் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருப்பார்கள். இம்மையிலும் நமக்காக பாடுபட்டார்கள். மறுமையிலும் நமக்காக பாடுபட உள்ளார்கள். இதுவெல்லாம் அண்ணலார் சமுதாயத்தினரின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாட்டை காட்டுகிறது.


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உலகமக்களில் நீங்கள் எழுபதாவது சமுதாயமாக நீங்கள் நிறைவடைகிறீர்கள். அந்த எழுபது சமுதாயங்களில் நீங்கள் தான் சிறந்த சமுதாயம் ஆவீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹுதஆலாவிடம் மதிப்பு மிக்க சமுதாயம் ஆவீர்கள்,

 அறிவிப்பாளர் முஆவியா பின் ஹைதா ரலியல்லாஹு தஆலா அன்ஹு நூல் திர்மிதி.




இறைவிசுவாசிகளே,,, நீங்கள்தான் மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். 3-100.


இத்தகைய சிறப்புகளை இச்சமுதாயம் பெற்று வெற்றிவாகை சூடியதற்கு காரணம் இவர்களுடைய தலைவர் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தான். ஏனெனில் அண்ணலார் படைப்புகளிலேயே சிறந்தவர்கள். இறைவனிடம் மதிப்புமிக்க இறைதூதர். இறைவன் மதிப்புமிக்க நிறைவான மார்க்கத்துடன் அண்ணலாரை அனுப்பி வைத்தான். அண்ணலாருக்கு முன்னர் எந்த ஒரு இறைதூதருக்கும் அத்தகைய முழுமையான மார்க்கம் வழங்கப்பெறவில்லை. எனவே அண்ணலார் காட்டிய வழிமுறயின்படி சிறிதளவு செயல்பட்டாலும் அது மற்ற சமுதாயத்தினர் அதிகமாக செயல்பட்டதை விடச் சிறந்ததாகவே அமையும்.


நன்றி தெரிவிக்க வழி.


அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். தொழுகை அறிவிப்பாளரின் பாங்கு அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர்கூறுவதை போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என் மீது ஸலவாத் கூறுங்கள். ஏனெனில் எவர் ஒருமுறை ஸலவாத் கூறுகிறாரோ அதன் காரணதால் அவருக்கு பத்துமுறை அல்லாஹ் அருள் புரிகிறான் பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவை கேளுங்கள். வஸீலா என்பது சொர்கத்திலுல்ல உயர் பதவியாகும். அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கு தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்கவிரும்புகிறேன். எனவே எனக்காக அந்த பதவியை அல்லாஹ்விடம் கேட்ப்பவருக்கு மறுமை நாளில் எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் ப்னு அம்ரு ப்னு அல்ஆஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு நூல் முஸ்லிம் 628.


அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பாங்கு சொல்வதை செவியுற்றபின்பு பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹவே நிலையான தொழுகைக்குரியவனே. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும், சிறப்பையும் வழங்குவாயாக. நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக. என்ற இந்த பிரார்த்தனையை எவர் ஒதுகிறாரோ அவருக்கு மறுமை நாளில் என்னுடைய சபாஅத் பரிந்துரை கிடைத்துவிடுகிறது.

அறிவிப்பாளர். ஜாபிர் ப்னு அப்தில்லாஹ். நூல் புஹாரி. 614 திர்மிதி. 195.


நம் அனைவரின் மீது இரக்கம் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு பாடுபட்டார்கள் என்பதை நமக்காக பாடுபட்ட அண்ணலார் நம்மிடமிருந்து சிலதை எதிர்பார்க்கிறார்கள். அதாவது மகாமே மஹ்மூத் என்ற புகழுக்குரிய இடத்திலிருந்து அவர்கள் எழுப்ப்படுவதற்கும், சொர்கத்தில் அவர்களுக்கு உயர்பதவி கிடைப்பதற்கும், பாங்கு கூறிய பின் இறைவனிடம் நாம் துஆ செய்யவேண்டும். என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காக நாம் இப்படி பிரார்த்திக்காவிட்டாலும் அல்லாஹ் அண்ணலாருக்கு அந்த சிறப்புகள் வழங்குவது உறுதியாகும்.

 

உம்முடைய இறைவன் உண்ணை மகாமே மஹ்மூத் எனும் உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம்.
                                         திருக்குர்ஆன், 7-79.

அந்த துஆ எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை தெரிந்து நாம் தொடர்ந்து பிரார்த்தித்தால் அதுவும் நமக்கு பலனாக அமையும் என்பதை நபியவர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.   

அப்படிப்பட்ட இந்த துஆவை முறையாக கற்று கொண்டு செயல்படுத்தி இதன் மூலம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம். 

மறுமையில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிபாரிசுக்கு உரியவர்களாக ஆகுவோமாக.  ஆமீன்.


 மௌலானா மௌலவி மு. முஹம்மது ஹைதர் அலி இம்தாதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக